Thursday, July 30, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 02-08-2015


ஆண்டின்  18ஆம் ஞாயிறு




திருப்பலி முன்னுரை:

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். இன்று நாம் ஆண்டின் 18ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம். நிலையான இன்பம் பற்றி இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. நிலையற்ற உலகில் மனிதன் அடையும் இன்பமும் நிலையற்றவை தானே! மின்விளக்குகளின் பிரகாசம் சூரியன் முன்னால் காணாமல் போய்விடுமே! பாலைநிலத்தில் இஸ்ரயேல்மக்களின் முணுமுணுப்பை அறிந்த கடவுள் ஒரு நாள் மட்டும் நிலைத்திருக்கும் மன்னாவை கொடுத்தார். இயேசுவோ தன்னையே தந்தார் என்றும் அழியாத உணவாக...

நம் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட நாம் புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ள வேண்டும். இதற்காக இயேசுவின் மீது நம்பிக்கைக் கொண்டு அவர் தரும்  மதிப்பீடுகளின்படி வாழும்போது சந்திக்கும் தடைகளை உடைத்தெறிந்து வெற்றி நடைப்போட  இன்றைய திருப்பலி அழைக்கின்றது. இயேசுவின் உன்னதமான உணவைத் தேடி நாளும் செல்வோம். அருளாளர் இயேசுவின் உறவில் நிலைத்து வாழ்வோம்.
 

வாசக முன்னுரை:

 முதல் வாசகத்தில்  இஸ்ரயேல் மக்களின் விடுதலைப் பயணத்தில் மக்கள் உணவின்றி தவித்தப்போது கடவுள் அவர்கள் உண்பதற்காக மன்னாவை வானத்திலிருந்து மழையெனப் பொழியச் செய்து,  எகிப்திலிருந்து அவர்களை மீட்டு வந்த கடவுள் அவரே என்று தமது  மாட்சிமையை  அறியச்செய்தார் என்ற நிகழ்வை விடுதலை பயணநூலிருந்து வாசிக்க கேட்போம்.

இரண்டாம் வாசகத்தில் மனிதர்கள் கடவுளை மறந்து மனசாட்சி இன்றி குறுக்கு வழியில் சென்று பெரும் செல்வங்கள் சேர்க்க பார்க்கிறார்கள். தேவைகளைப் பெருக்குவதால் மன அமைதியை இழந்தவர்களாக தவிக்கிறார்கள். ஆனால் அனைத்தையும் தரக்கூடியவர் அன்பர் ஒருவர் உண்டு. அவர் தான் இறைமகன் இயேசு என்பதை விளக்கும் புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தை வாசிக்க கேட்போம்.



பதிலுரைப்பாடல்: ஒலிவடிவில்



விசுவாசிகள் மன்றாட்டு:

திருச்சபைக்காக:

மன்னாவை அளித்த வள்ளலே, இறைவா! உம் திருச்சபையிலுள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் உம்மைத் தேடவும், நிலைவாழ்வு தரும் உணவான இயேசுவின் உடலையும் இரத்ததையும் பெற்று அவரின் விண்ணக நிலைவாழ்வைப் பெற வேண்டிய வரத்திற்காக இறைவா உமை மன்றாடுகிறோம்.

நாட்டிற்காக:

மன்னிக்கும் மகத்துவமிக்க எம் இறைவா!  எமது நாட்டு அரசியல் தலைவர்களுக்காக வேண்டுகிறோம். அவர்கள் மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி, அனைவரும் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை கண்டடைய செய்திடவும், சமுக உறவில் ஒன்றுபட்டு  வாழ வழிவகை செய்திடவும் , நாட்டிற்கும் உலகிற்கும் பயன்உள்ளவர்களாக வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.

எங்கள் குடும்பங்களுக்காக:

உம் ஒரே மகனை எமக்கு உணவாக அளித்த இறைவா! எங்கள் குடும்பங்களில் நிலைவாழ்வு தரும் இயேசுவின் அன்பு உறவில் நிலைத்து வாழ்ந்திடவும்,  உலகக்காரியங்களிலிருந்து விடுபட்டு  புதுவாழ்வு பெறவும், எங்கள் மனங்கள்  புதிப்பிக்கப்படவும்,  உண்மையான நீதியிலும், தூய்மையிலும் வாழ வேண்டிய வரம் கேட்டு உமை மன்றாடுகிறோம்.

இளைய சமுதாயத்திற்காக :

எங்கள் அன்பு தந்தையே இறைவா! எமது பிள்ளைகள் தங்களின் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழாமல் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்து புதிய மனிதருக்குரிய இயல்புகளை அணிந்து தூய்மையான புதியப் படைப்பாய் மாறிட  இறைவா உமை மன்றாடுகின்றோம்.

---oo0oo--

பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப்பாடிகொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன் அவர்களுக்கு நன்றி

Thursday, July 23, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 26-07-2015

 

ஆண்டின்  17ஆம் ஞாயிறு

 


திருப்பலி முன்னுரை:

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். இன்று நாம் ஆண்டின் 17ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம். பகிர்ந்து வாழும் பண்பை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இல்லாதவர்களோடு இருப்பவர் பகிர்ந்துகொண்டால் இருப்பவர், இல்லாதவர் என்ற நிலைமாறும். இதைத்தான் ஆதிகிறிஸ்தவர்கள் செய்து, இல்லாதவர் இருப்பவர் என்ற நிலையை மாற்றினார்கள். பகிர்ந்து வாழும் பண்பை மக்கள் மனத்தில் உருவாகி ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்திய சாதனை நம் ஆண்டவர் இயேசு ஒருவருக்கு மட்டும் தான் உண்டு.

அப்பம் பலுகுதல் நிகழ்வைத் திருப்பலியோடு ஒப்பிடுகின்றார்கள் மறைநூல் ஆராய்ச்சியாளர்கள். இயேசுவைப் போல நாமும் நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ வேண்டும் என்ற பண்பை ஒவ்வொரு திருப்பலியும் நமக்கு தருகிறது. ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் பகிர்வு மனப்பான்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே இயேசுவின் திருவிருந்தில் பங்கு கொள்ளும் நாம் பகிர்வு வாழ அதற்குத் தடையானவற்றை நம்மிடமிருந்து அகற்றி நம்மைப் புனிதர்களாக மாற்ற வேண்டுமென்று இறைவனை வேண்டுவோம். இந்த பகிர்வில்புத்துணர்வு பெற்றவர்களாக மாறிடுவோம்.

வாசக முன்னுரை:

 முதல் வாசகத்தில்  பழைய ஏற்பாட்டு காலத்தில் பகிர்வால் எதுவும் குறையா. மாறாக அவை பலுகிப்பெறுகும் என்ற உறுதியினை பகிர்ந்தளிக்க தயங்கி மனிதருக்கு எலியா மூலம் எடுத்துரைக்கிறார் நம் கடவுள். அந்த மனிதர் பகிர்ந்தளித்த பின் மீதியிருப்பதையும் கண்டார். இதனை அரசர்கள் இரண்டாம் நூலிருந்து வாசிக்க கேட்போம்.
இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்தவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்பை ஏற்று வாழ அன்பை மையமாகக் கொண்டு பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் தங்களை அணி செய்யவேண்டும் என்று புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தை வாசிக்க கேட்போம்.

விசுவாசிகள் மன்றாட்டு:

திருச்சபைக்காக:

பகிர்ந்தளிக்க எம்மை அழைக்கும்; இறைவா! திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் ஓரே உடல்: ஓரே தூயஆவியானவர்: ஓரே கடவுள்: ஓரே நம்பிக்கை என்ற உயரிய பண்பில் தங்களின் அழைப்பை
உணர்ந்து வாழ்ந்திடவும், பணியாற்றிடவும் வேண்டிய வரத்திற்காக இறைவா உமை மன்றாடுகிறோம்.

நாட்டிற்காக:

உம் படைப்புகளைப் பலுகிப் பெருகச் செய்யும் எம் இறைவா! எமது நாட்டு அரசியல் அவலங்களால் பசி, பட்டினி, நோய்கள், குடிபோதை என்று பாதிக்கப்பட்டு அவதியுறும் எம் ஏழைஏளிய மக்களை பாரும். அவர்கள் வாழ்க்கை நிலை மேலோங்கி எல்லாரும் நலம் வாழ பகிர்ந்தளிக்கு நல்ல மனதினை தரவேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.

மனித நேயம் மண்ணில் மலர்ந்திட:

பண்பாளரே எம் இறைவா! நான் மட்டும் பகிர்வதால் என்ன செய்ய முடியும் என்ற எதிர்மறை எண்ணங்களிலிருந்து எம்மை விடுவித்து பகிர்வு மனப்பான்மை வளரவும், உம் திருமகன் இயேசுவைப்போல் பகிர்ந்துண்டு வாழும் அவரின் சிறந்த சீடர்களாக எம் அயலாருடன் இணைந்து வாழ்ந்திட வரம் வேண்டி உமை மன்றாடுகிறோம்.

இளைய சமுதாயத்திற்காக :

எங்கள் அன்பு தந்தையே இறைவா! உமது பிள்ளைகள் இளையோராகிய நாங்கள் எமது தேவைகளில் முதன்மையான தேவை நீரே என்று உணர்ந்து நாங்கள் முழுமையாக உம் கரம் பற்றிக் கொள்ளவும், நிலைவாழ்வுப் பெற்று உம்மை அடையவும் இறைவா உமை மன்றாடுகின்றோம்.

Tuesday, July 14, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 19-07-2015

ஆண்டின்  16ஆம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
1.  எரேமியா  4:42-442.   
2.  எபேசியர் 2:13-143.
3.  மாற்கு 6:30-34

முன்னுரை:
இறைஇயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! நாம் இன்று ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கிறோம். பரிவுள்ள இறைவனை அறிந்துக் கொள்வோம். இயேசு தன்னை பின் தொடரும் மக்களை கண்டு ஆயரில்லா ஆடுகளை போல அலைமோதும் அவர்கள் மீது பரிவுக் கொண்டார். இரக்கம் என்பது பரிதாபத்தை காட்டும். ஆனால் பரிவு என்பது அந்த பரிதாபத்தை செயல்பாட்டில் காட்ட நம்மை இட்டுச்செல்லும்.....
ஆம் அன்பர்களே! இறைமகன் மண்ணகத்திற்கு வந்தபோது ஏற்றத்தாழ்வுகளும், பிளவுகளும் மேலேங்கி மனித குலத்தை பிளவுபடுத்தியிருந்ததால் அவர் நம்மீது பரிவு கொண்டு மனிதகுலத்தை ஒன்றுபடுத்தி தம் சீடர்கள்களாக வாழ அழைக்கின்றார். பணம் இருந்தால் மனமில்லை. மனமிருந்தால் பணமில்லை. எனவே சுயநலப் போக்கிலிருந்து விடுபட்டுப் பரிவும் பாசமும் நிறைந்த இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ திருச்சபை நம் எல்லோரையும் அழைக்கிறது. இதனை ஏற்று இயேசுவின் சீடர்களாய் மாற இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாருங்கள் இறைமக்களே!
வாசகமுன்னுரை:
முதல் வாசகத்தில் இறைவனின் ஆட்டுமந்தைகள் தீய ஆயர்களால் சிதறடிக்கப்பட்டன. எனவே வருத்தமுற்ற யாவேகடவுள் தாமே முன்னின்று தம் மந்தைகளிலுள்ள எஞ்சிய ஆடுகளை ஒன்று கூட்டி அவற்றைப் பலுகிப்பெறுகி, அவைகளுக்கு ஒரு ஞானமுள்ள ஆயனை நியமிக்கப் போவதாகவும், அவைகள் பாதுகாப்புடன் வாழும் என்று உறுதிமொழி அளிப்பதை எரேமியா நூலிருந்து வாசிக்கக் கேட்போம்.
இரண்டாம் வாசகத்தில் தொலைவிலிருந்து அவரை கண்டு உணர்ந்த மக்கள் எல்லாம் இப்போது அவரின் இரத்ததால் ஒருங்கிணப் பட்டுள்ளார்கள். பல்வேறு இனங்களாக இருந்தவர்கள் ஒரினமாய் மாற்றிவிட்டார்கள். பிரிவினைகள் களையப்பட்டு சிலுவை வழியாக அனைவரும் ஒருடலாக்கினார் இறைமகன் இயேசு. அவர் வழியாக தூயஆவி மூலமாக தந்தையிடன் அணுக எபேசியர் திருமுகத்தின் வழியாக பவுலடிகளார் அழைக்கிறார். கவனமுடன் கேட்போம்.

மன்றாட்டுகள்:
1. உம் அன்பு பாராமரிப்பு ஏங்கும் மந்தைக்காக:
பரிவுள்ளம் கொண்ட எம் இறைவா!ஆயரில்லாத மந்தையாக பரிதவிக்கும் உம் மக்களைப் பாரும். அவைகள் சிதறடிக்கப்பட்டு பராமரிப்பு இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படாமல் உமது அரவணைப்பில் பேணிக்காக்கும் ஞானமுள்ள ஆயர்களை நீதியுள்ள தளிர்களாய் எமக்கு அளிக்குமாறு உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் இறைவா..
2. பிளவுப்பட்டு துன்பப்படும் உம் இனத்திற்காக:
சிலுவையில் உம் இரத்ததால் தூரத்தலிருந்து உணர்ந்திருந்த மக்களை ஒன்றிணைத்த இறைமகனே! பிளவுப்பட்டு சிதறியடிக்கப்பட்ட உம் மக்களே கண்ணேக்கியருளும். பகைமையை மறந்து அனைவரும் உம்மால் இணைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து பிறர்நலம் காணும் மனித குலமாய் மாறி தூயஆவியின் வழியாக தந்தையாம் இறைவனை அடைய உம்மை மன்றாடுகிறோம் எம் அன்பு தலைவா..
3. எம் நாட்டிற்காக:
ஒன்றிணைக்கும் எம் உன்னத இறைவா, எம் நாட்டிற்காகவும், எங்கள் தலைவர்களுக்காகவும் இந்நேரத்தில் நினைவுகூர்ந்து உம்மிடம் வருகிறோம். அவர்களும் பரிவிரக்கம் கொண்ட உம் முன்மாதிரியை கண்டு உணர்ந்து எம் நாட்டு மக்களுக்கும் உலகமக்களுக்கும் சுயநலமற்ற சேவைகளை செய்ய நல்ல இதயத்தையும் எண்ணங்களையும் அருளுமாறு மன்றாடிக் கேட்கிறோம் எம் இதய அரசரே.
4. எம் திருச்சபை வழிநடத்தும் அனைவருக்காக:
கரிசனை அன்புடன் எம்மை பேணிக்காக்கும் எங்கள் நல்லாயனே! நீர் தேர்ந்து கொண்ட இத்திருக்கூட்டத்தை வழிநடத்த எமக்கு தந்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். அவர்கள் அனைவரும் நீர் விரும்பும் இறையரசை இவ்வுலகில் அறிவிக்க, அவர்களை தூயஆவியாரின் மூலம் வழி நடத்த உம்மை மன்றாடுகிறோம்.
  

Visit www.anbinmadal.org to read more


Friday, July 10, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 12-07-2015

ஆண்டின் 15 ஞாயிறு



 இன்றைய நற்செய்தி:


திருப்பலி முன்னுரை:

இயேசுகிறிஸ்துவில் நாமத்தில் அனைவருக்கும் ஆன்பு வாழ்த்துக்கள்!
இன்று நாம் ஆண்டின் 15ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம். . இங்கே கிறிஸ்துவின் மறையுடலில் சங்கமான நம்அனைவரையும் இறைவன் தம் அன்புத்திட்டத்திற்கு அழைப்புவிடுக்கிறார். எவ்வாறு இயேசு தம் சீடர்களை மறைபணிக்குஅனுப்பினாரோ அவ்வாறே நம்மையும் பணிக்கிறார்.

புனித சவேரியரும், குழந்தை தெரசம்மாளும் மறைபரப்பு நாடாகிய  இந்தியாவின் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். ஒருவர் நடைபயணமாகச் சென்று இறையரசைப் பரப்பினார். மற்றவரோ அறைக்குள் இருந்தவாறே தன் செபத்தின் மூலம் அதே பணியைச் செய்தார். இன்றைய வாசகங்கள் அனைத்தும் இவற்றையே நமக்கு உணர்த்துகின்றன.  அனைவருக்கும் இறைபணி உண்டு. அதை நிறைவேற்ற வேண்டிய ஞானத்தை இறைவனிடம் பெற்றிட இன்றைய திருப்பலிக்கு குருவுடன் இணைந்து பங்கேற்போம். வாரீர்
இறைகுலமே!


வாசக முன்னுரை:



முதல் வாசகத்தில்  தகுதியற்றவர் இறைஅழைப்பை
ஏற்றக்கொண்டபின்  அவருக்கு கிடைக்கும் ஞானத்தையும்
ஆற்றலையும் துணிவையும் இறைவன் அவர்களுக்கு அளித்து 
பணிவாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும், ஆடுமேய்ப்பவனையும் 
இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினராக மாற்றிய அற்புதத்தையும்
ஆமாஸ் இறைவாக்கினர் நூலிலிருந்து வாசிக்க கேட்போம்.

இரண்டாம் வாசகத்தில் இயேசு தம் சீடர்களை தேர்ந்தெடுக்கும்
போது பாமரமக்களையே அழைத்தார். அவர்கள் கிறிஸ்துவுடன்
இணைந்தபின் ஆற்றலும் திறைமையும் உடையவர்களாக
மாறினார்கள். நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன்
விளங்கும்படி உலகம் தோன்றும் முன்னே கடவுள் நம்மைக் கிறிஸ்து
வழியாகத் தேர்ந்தெடுத்தார். இவ்வார்த்தைகளே மனதில் இருத்திபடி 
புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தை வாசிக்க கேட்போம்.



விசுவாசிகள் மன்றாட்டு:

 

திருச்சபைக்காக:

பரம்பொருளே! எம் இறைவா! திருச்சபையை ஆளும் தலைவர்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தென்அமெரிக்கா நாடுகளின்
பயணம் வெற்றி பெறவும், கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள்,
இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும்
மறைபரப்பு பணியில் ஈடுபட்டு ஆற்றலும், திறமைகளும்
நிறைந்தவர்களாக மாற போதுமான வல்லமை இவர்களுக்கு
பொழிந்து இயேசுவின் இறையரசு மண்ணகம் கண்டிட வரம் வேண்டி
இறைவா உமை மன்றாடுகிறோம்.


நாட்டிற்காக:

உலக நாடுகளின் இராஜாதி ராஜனே! எமது நாட்டு அரசியல்
தலைவர்கள் ஊழலை ஓழிப்பபதாகக் கூறி வந்தவர்கள் அனைவரும்
ஊழலில் மூழ்கி மக்களை மறந்து தங்களைப் பற்றியே  நினைக்கும்
நிலை மாறி புதிய சமுதாயத்தை எம் நாட்டில் உருவாக்கிடவும்,
அண்டை நாடுகளுடன் அமைதி நிலையினை ஏற்ப்படுத்தவும்,
மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்திடவும் அவர்களுக்கு நல் மனம்
தந்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.



மனித நேயம் மண்ணில் மலர்ந்திட:



எமக்கு புத்துயிர் அளிக்கும் எம் அன்பு நேசரே! இறைவா! உமது
நற்செய்தியின்படி இறையாட்சியை இம்மண்ணில் பரப்ப
மனமாற்றத்தை ஏற்ப்படுத்த எங்களை உம் அன்பு சீடர்களாய்
இவ்வுலகில் அனுப்பும். அதையே உம் அன்பு கட்டளையபாக ஏற்று
அதன்படி இன்றைய  சூழலில் வாழ்ந்திட வரம் வேண்டி உமை
மன்றாடுகிறோம்.

 

இளைய சமுதாயத்திற்காக :

 

கரிசனை அன்பு கொண்ட  எம் இறைவா! உமது பிள்ளைகள் எழுந்து
ஒளிவிசிட மது என்னும் தடை தமிழகம் எங்கும் நிறைந்து
சிறுகுழந்தைகள் தொடங்கி சமுதாயத்தின் அனைத்து மக்களை
ஆட்டிப்படைக்கும் வேளையில் தங்கள் வாழ்க்கையில்  நிலை
தடுமாறும் நிலை உள்ள இன்றைய இளைய சமுதாயம்
காப்பாற்றப்படவும், அவர்கள் உமது நேரிய இறையரசு பாதையில்
பயணித்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

Friday, July 3, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 05-07-2015

 

ஆண்டின் 14 ஞாயிறு

 

இன்றைய நற்செய்தி:

முதலாம் வாசகம் 1 எசேக்கியேல் 2:2-5
இரண்டாம் வாசகம் 2 கொரி 12:7-10
நற்செய்தி மாற்கு 6:1-6


திருப்பலி முன்னுரை:

 

இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்று நாம் ஆண்டின் 14ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம். இறைவிருப்பத்திற்கு எதிராக மனிதன் மாறும் போது அழிந்துவிடுகிறான். மாறக ஏற்றுக்கொள்ளும்போது புதுவாழ்வு
அடைகிறான். இதனையே பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் காணலாம். இன்றும் அதே அழைப்பையே தருகிறார் இறைவன்.

நம்மில் இருக்கும் இறுமாப்பு களையப்படவேண்டும். இது சாத்தன் அனுப்பிய ஒரு குறையாகவே இருக்கிறது. இந்த இறுமாப்பு தான் இயேசுவை ஏற்க மறுக்கவைக்கிறது. நமது மனதிலுள்ள இறுமாப்பு களைப்பட்டு இறை அருள் மட்டுமே போதும் என்ற மனநிறைழய ஏற்றுக்க்கொள்ள முழு மனதுடன் இப்பலியில் பங்கேற்ப்போம்.





வாசக முன்னுரை:


முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் யாவே கடவுளை மறந்து மறுத்த போதொல்லாம் இறைவாக்கினாகளால்  எச்சரிக்கப்படுகிறார்கள். அதையும் மீறும் போது அழிக்கப்படுகிறார்கள். எல்லாம் இழந்து அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள். உள்ளத்தில் உறைந்துபோய்க்கிடக்கும் ஒரு மக்களினத்திற்கு உயிர்கொடுக்க இறைவாக்கினரை எசேக்கியேலை 
அழைக்கின்றார் இறைவன். இறைவனின் அழைப்பிற்கு இவ்வாசத்தின் மூலம் செவிமேடுப்போம்.



இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதிய திருமடலில் நன்றாக தன் மனம் திறந்து பேசுகிறார். ஏறக்குறைய திருமடல் நிறைவுறும் நேரத்தில் தன்னிடமிருக்கும் வலுவின்மைபற்றி அவர் பெருமை பேசுவதே அதன் சிறப்பு.  முள் ஒன்று தைத்து வலி ஏற்பட்டுள்ளது. கடவுளின் அருள் மட்டுமே தனக்குப் போதும். வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன் என்று சான்றுபகரும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் கேட்டு மனதில் இருத்திக்கொள்வோம்.

 

விசுவாசிகள் மன்றாட்டு:



திருச்சபைக்காக:


ஆளும் வல்லவரே! எம் இறைவா! திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ்,  ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் ஒன்றிணைந்து உம் பணியாற்றவும், ஒருவர் ஒருவரை மதித்து  ஏற்றுக்கொண்டு உம் சாட்சிகளாக இவ்வுலகில் வாழ்ந்திட  வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.


நாட்டிற்காக:

எமை ஆளும் எல்லாம் வல்ல இறைவா! எமது நாட்டு அரசியலில் ஏற்றப்பட்டுள்ள பிரிவுகள் எல்லாம் நீங்கி எல்லாத்  தலைவர்களும் மக்களின் நலனில் கவனம் செலுத்தவும், நாட்டின் எல்லா வளங்களும் பேணிக்காக்கப் படவும்   எம் நாட்டு தலைவர்கள் மக்களுக்காக தன்னலமற்று உழைத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

குடும்பங்களுக்காக:


திருக்குடும்பத்தின் வழியாக அதன் பெருமைகளை எடுத்துக்காட்டிய இறைவா, எங்கள் குடும்பங்களும் சிறு வட்டத்தில் நின்று விடாமல் பெற்றோர்கள் பிள்ளைகள் அனைவரும் உம் அருள் ஒன்றே போதும் என்பதற்கு சாட்சியாக இச்சமுதாயத்தில் வலம் வரவும், தங்கள் வலுவின்மைகளை புரிந்து கொண்டு அதுவே தம் பலம் உணர்ந்து வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உலகிற்காக:


உம்மை தங்கள் சொந்த மீட்பராக ஏற்று வாழ்வோருக்கு ஏற்படும் இன்னல்களை நீர் அறிவீர். அவர்கள் வாழ்விடம் இழந்து சொந்தகளையும் இழந்து தவிக்கும் போது அவர்களின் ஆறுதலாகவும் அவற்றை வெற்றிக்கொள்ள துணையாகவும் இருந்திட  வேண்டி, இறைவா உமை மன்றாடுகின்றோம்.




எழுதியவர்: திருமதி அருள்சீலி அந்தோனி