Saturday, August 29, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 30-08-2015

ஆண்டின் 22ஆம் ஞாயிறு 

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

1.    இணைச்சட்டம் 4:1-2, 6-8
2.    யாக்கோபு 1:17-18,21-22, 27
3.    மாற்கு 7:1-8, 14-15, 21-23

முன்னுரை:

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை அருளாளர் இயேசுவின் பெயரால் வரவேற்கிறோம். பெயரளவில் மட்டும் வாழாமல் உள்ளத்தில் தூய்மை பெற இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு வழி காட்டுகிறது. கடவுள் தந்த சட்டங்களின் உள்ளார்ந்த அர்த்தங்களை மறந்துவிட்டு அவற்றை சடங்களாக மாற்றினர் இஸ்ரயேல் மக்கள். கடவுளின் பார்வையில் மாசற்றவர்களாகவும், தேவையிலிருப்போருக்கு உதவிடவும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்து கொள்ளவும் திருத்தூதர் யாக்கோபு நம்மை அழைக்கிறார்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா! என்ற தமிழ் புலவரின் வார்த்தைகளையே இறைமகன் இயேசுவும் வாழ்வுதரும் வார்த்தைகளாக நமக்கு இன்று தருகிறர். உள்ளத்திலுள்ள எண்ணங்களே வார்த்தைகளாக வெளியே வருகின்றன.  சட்டங்கள் மனிதனை புனிதனாக மாற்றத்தான். மனிதநேயம் வளர்வதற்க்கும், அர்த்தமுள்ள வாழ்வுக்கு அடித்தளம் உருவாக்குவதற்கும், உள்ளத்தில் தூய்மை பெற்று அதைச் செயலில் வெளிப்படுத்துகின்ற உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழ வரம் வேண்டி இத்திருப்பலி கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்..

வாசகமுன்னுரை:

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் நெடும் பணயம் செய்து கானான் நாட்டிற்கு வந்த போது மோசே கடவுளின் சட்டங்களை தொகுத்து வழங்கிய பேருரைகளிருந்து தம் மக்களுக்கு கடவுளின் சட்டங்களை பின்பற்றுங்கள் என்று கட்டளையிட்டார். அதுவே  மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும் என்ற வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கடவுளிடம் இருந்தே நல்லவைகள் வருகின்றன. அவர் நல்லவர். சினமற்ற வாழ்வு மேலானது. பொதுநலம் கொண்டு அடுத்தவர்களின் வாழ்வு சிறக்க உழைப்பதே இறைவனுக்கு ஏற்புடையது என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம். 




பதிலுரைப் பாடல்


திபா 15: 2-3. 3-4. 5

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

2 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்;
உளமார உண்மை பேசுவர்; 3ய தம் நாவினால் புறங்கூறார். -பல்லவி

3 தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். -பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;
மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்;
இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். -பல்லவி


மன்றாட்டுகள்

திருச்சபைக்காக:

உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கும் அன்பு இறைவா! எம் திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் சுயநலமறந்து மனித நேயத்திலும், ஞானத்திலும், அறிவாற்றலில் சிறந்து விளங்க வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நாட்டு தலைவர்களுக்காக:

நலம் காண நல்வழி நடத்தும் எம் இறைவா, உள்ளங்களில் மாற்றங்கள் இல்லாமல் சட்டங்களை கடமைக்காகக் கடைப்பிடிப்பதால் பயனில்லை என்பதை எங்கள் நாட்டுத்தலைவர்கள் உணர்ந்து சுயநலமற்ற சேவைகளில் ஈடுபட வேண்டிய வரத்தை தர உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்..

நம் குடும்பங்களுக்காக:

அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா! எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீகளை அறிந்து கடவுளின் பார்வையில் மாசற்றதுமான சமயவாழ்வு வாழவும், உலகத்தால் கறைபடாதபடி தம்மை காத்துக் கொள்ள வேண்டிய வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

சமுதாயத்தால் கைவிடபட்ட மக்களுக்காக :
எல்லாரும் எல்லாம் பெற விரும்பும் அன்பு இறைவா! இச்சமுதாயத்தால் கைவிடப்பட்டு வாடும் அநாதைகள், கைம்பெண்கள் அவர்களின் குடும்பங்கள் சமுதாயத்தில் ஏற்றம் பெற வேண்டியும் அவர்களுக்காய் தன்னலமற்ற சேவை செய்யும் நல் உள்ளகளுக்காகவும் அதற்கானப் பொருளாதர உதவிகள் பெற்றிடவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப்பாடிகொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

Thursday, August 20, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 23-08-2015


ஆண்டின்  21ஆம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

1.  யோசுவா 24:1-2,15-17,18.  
2.  எபேசியர் 5:21-32.    
3.யோவான் 6:60-69

முன்னுரை:

இறைமகன் இயேசுவில் அன்பு வாழ்த்துக்கள்! நாம் இன்று ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கிறோம். இயேசுவின் உண்மையான வார்த்தைகளின் மீது நம்பிக்கைக் கொள்ள இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு வழி காட்டுகிறது. தங்களை வழிநடத்தும் ஒரே கடவுளுக்கு மட்டும் ஊழியம் செய்ய யோசுவாவும் மக்களும் உறுதிமொழி கூறுகிறார்கள்.. கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்து அன்பு செய்து வாழ பவுலடிகளார் நம்மை அழைக்கிறார்.
ஆம் அன்பர்களே! இறைமகன் இயேசுவிடம்; மட்டுமே வாழ்வுதரும் வார்த்தைகள் உள்ளன. அவர் இன்றி எவராலும் நிறைவாழ்வு தரமுடியாது என்ற ஆழ்ந்த நம்பிக்கை பேதுருவிடம் இருந்தது போல நம்மிடையே இருத்தல் அவசியம். விட்டு விலகிப்போன சீடர்களைப் போல் அன்றி, நாம் அழியாத நிறைவாழ்வுக்கு இயேசு தரும் ஆவியை நாட்டிச் செல்வோம்.. வாழ்வு தரும் அவரது வார்த்தைகளுக்கு தடையாக இருப்பவைகளை களைந்து விட்டு புதியதேர் படைப்பாய் இத்திருப்பலி கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்.. வாருங்கள் இறைமக்களே!



வாசகமுன்னுரை:

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இன தெய்வங்களையும் வழிபட்டு இருமனத்தோராய் வாழ்ந்தனர். ஆனால் யோசுவா அவர்களிடம் தாம் உண்மையான இறைவனுக்கு மட்டுமே ஊழியம் செய்யப்போவதாகக் கூறி அவர்களை நல்வழி நடத்தியதை யோசுவா நூலிருந்து எடுக்கப்பட்ட வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்து திருச்சபையை எவ்வாறு அன்பு செய்தார் என்பதை எடுத்துரைத்த பவுலடிகளார் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பணிந்து அன்பு செய்து ஓரே உடலாய் ஒன்றித்து வாழ அறிவுரைகளை எபேசியர் திருமுகத்தின் வழியாக கிறிஸ்துவுடனும் திருச்சபையுடனும் நமது  கிறிஸ்தவ வாழ்வை ஒப்பிட்டு கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.




பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 15-16. 17-18. 19-20. 21-22

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;
அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன;
அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.
16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;
அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். -பல்லவி

17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;
அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.
18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்;
நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். -பல்லவி

19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;
அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.
20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்;
அவற்றுள் ஒன்றும் முறிபடாது. -பல்லவி

21 தீயோரைத் தீவினையே சாகடிக்கும்;
நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர்.
22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்;
ஆண்டவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். -பல்லவி



மன்றாட்டுகள்

திருச்சபைக்காக:
இனிய வார்த்தைகளயால் எம்மை வாழ்வை வளமாக்கும் அன்பு இறைவா! உம் திருச்சபையும் அதனை நடத்திச் செல்லும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் உம் வார்த்தைகளால் ஒன்றிணைந்து வாழவும், உமக்கு மட்டுமே ஊழியம் செய்து எம்மை நேசிக்கும் கடவுளாய் அறிக்கையிடவும் இறைவா உறுதியான மனதினைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நாட்டு தலைவர்களுக்காக:
முன்னேற்றப் பாதையில் வழி நடத்தும் எம் இறைவா, எமக்காய் நீர் தந்த அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் சகிப்புத்தன்மை இல்லாமையால் அமைதி இல்லா ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ள இவ்வேளை உம் அன்பின் போதனைகளால் அனைத்தையும் மறந்து மக்களுக்காக தொண்டாற்ற வேண்டிய வரத்தை தர உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்..
நம் குடும்பங்களுக்கா:
வார்த்தைகளால் நிறைவாழ்வு தரும் வள்ளயே! நற்கருணை நாதரே! நாங்கள் எங்கள் குடும்பங்களில் ஒருவர் ஒருவரை அன்பு செய்து, எமது குடும்பவாழ்வில் உண்மையான உறவு மலரவும், இறைப் பிரசன்னத்தின் அவசியத்தை நிலைநாட்டவும் போதுமான வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..
துயருறும்  முதியோர்கள் நலன்களுக்காக:
எம் பெயரை உள்ளங்கையில் பொறித்துள்ள இறைவா! இச்சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் வாடும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பிள்ளைகளால் விரட்டப்பட்ட பெற்றோர்கள்! நல்ல உடல்நலனையும், உள்ள அமைதியையும், பாதுகாப்பையும், அன்பையும் பெற்று மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதிநாட்கள் வரை வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப்பாடிகொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

Wednesday, August 12, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 16-08-2015

ஆண்டின்  20ஆம் ஞாயிறு


 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

1.    நீதிமொழிகள் 9:1-62. 
2.  எபேசியர் 5:15-203.
யோவான் 6:51-58

முன்னுரை:

இறைஇயேசுவில் அன்பு வாழ்த்துக்கள்! நாம் இன்று ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கிறோம். உண்மையான அழியாத உணவை தேர்ந்துக்கொள்ள இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு வழி காட்டுகிறது. அறிவிலியாக இல்லாமல் விவேகமுள்ளவர்களாக வாழ அழைக்கின்றது ஞானம்.  பகுத்து உணரும் பண்பை அணிந்து கொள்ளுங்கள். அதுதான் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற நமக்கு துணை நிற்கும் என்று பவுலடியார் சுட்டிக் காட்டுகிறார்.
ஆம் அன்பர்களே! இறைமகன் இயேசுவின் தன்னையே அழியாத உணவாக நமக்கு தருகிறார். இத்திருவுடலை உண்டு இரத்தத்தைக் குடிப்பது என்பது நற்கருணை உட்கொள்வது மட்டுமல்ல, இயேசுவின் உணர்வுகளையும், மதிப்பீடுகளையும் உள்வாங்கி அதற்கேற்ப வாழ்வை மாற்றிக் கொள்வதற்கு நம்மை அழைக்கிறார். கடவுளின் கொடைகளில் ஒப்பற்ற மிக மேலான கொடை ஒன்று உண்டு என்றால் அது நற்கருணை மட்டுமே. இத்தகைய கொடையின் அருமை பெருமைகளை உணர்ந்து இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாருங்கள் இறைமக்களே!

வாசகமுன்னுரை:

முதல் வாசகத்தில் இறைவனின் ஞானம் நம்மை அறிவிலிகளாய் இராமல் ஞானமுள்ளவர்களாக வாழ அழைக்கிறது. அதுபோல மதிகேடர்களையும் தான் கட்டிய வீட்டிற்கு வந்து விருந்துண்ண அழைக்கிறது. வாழ்வைச் சுவைக்க புத்தியுடன் ஞானமும் தேவை என வலியுறுத்தும் நீதிமொழிகள் நூலிருந்து எடுக்கப்பட்ட வாசகத்திற்கு செவிமெடுப்போம்.
இரண்டாம் வாசகத்தில் இந்த நாட்கள் பொல்லாதவை. காலத்தை முற்றும் பயன்படும் முறை அறியவும், தாறுமாறான வாழ்வுக்கு வழிவகுக்கமால் பார்த்து கொள்ளவும், ஆவியால் ஆட்க்கொள்ளப்பட்டு இயேசுவின் பெயரால் கடவுளுக்கு நன்றி கூறி ஞானத்துடன் வாழ அறிவுரைகளை எபேசியர் திருமுகத்தின் வழியாக பவுலடிகளார் இங்கே பதிவு செய்கிறார். கவனமுடன் கேட்போம்.





பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 9-10. 11-12. 13-14
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.  நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. -பல்லவி

 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.  வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? -பல்லவி

 அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு!  தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. -பல்லவி 

 

மன்றாட்டுகள்

உமது மந்தையாகிய திருச்சபைக்காக:

ஞானமுள்ளவர்களாக வாழ எங்களை அழைக்கும் அன்பு இறைவா! பொல்லாத காலத்தில் தவிக்கும் திருச்சபையை திறம்பட நடத்திச் செல்ல எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் ஞானத்தையும் விவேகத்தையும் கொடுத்து இயேசுவின் விழுமியங்களைக் கடைப்பிடித்து வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கலங்கி தவிக்கும் எம் நாட்டு மக்களுக்காக:

கரிசனை அன்பு கொண்ட எம் இறைவா, தெளிவில்லாத அரசியல் சூழல் காரணமாக பரிதவிக்கும் எம் மக்களுக்கு ஞானத்தையும், விவேகத்தையும் அளித்து, எதிர்வரும் பொல்லாத காலத்தை சமாளிக்கவும், என்றும் மறவாமல் உமக்கு நன்றி கூறும் நல்ல உள்ளத்தைத் தருமாறு உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் இறைவா..

தலத்திருச்சபைக்காக:

நற்கருணை வழியாக எங்கள் மத்தியில் வாழும் இறைமகன் இயேசுவே! நாங்கள் உமது அன்பின் கட்டளைகளை கடைபிடித்து நிறைவாழ்வு தரும் உணவாகிய உமது சதையையும், இரத்தத்தையும் நீர் எமக்கு அளித்த உன்னத கொடை என்பதை உணர்ந்து, அந்த அன்பை எமக்கு அடுத்திருப்பவருடன் பகிர்ந்து, இணைந்து வாழ வழிநடத்திமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

இயற்கை பாதுபாப்பிற்காக:  

உலகை மனிதனுக்காக படைத்த அன்பு இறைவா! நீர் படைத்த வளங்கள் நிறைந்த இவ்வுலகில் வாழ்வது கொஞ்கக்காலம் என்று, பேராசையால் தானே எல்லாவற்றையும் அனுபவிக்காமல் உலகின் இயற்கை செல்வங்களை வருங்கால தலைமுறையினருக்கும் விட்டுக்கொடுத்து வாழவும், இவற்றின் வளங்களைப் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள நல்ல ஞானத்தை தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Wednesday, August 5, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 09-08-2015

ஆண்டின்  19ஆம் ஞாயிறு

 



திருப்பலி முன்னுரை:

இயேசுகிறிஸ்துவின் அருமையான சகோதர சகோதரிகளே உங்கள் அனைவரையும் ஆண்டின் 19ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ அன்புடன் அழைக்கின்றோம். நிறைவாழ்வு தரும் உணவைப் பற்றி இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.  அன்று பாலை நிலத்தில் மன்னா உண்டவர்கள் எல்லோரும் மடிந்து விட்டனர்.  பிறந்த யாவரும் இறக்க வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. ஆனால் இயேசு தன்னையே மானிடருக்கு உணவாகி முடிவில்லா வாழ்வு அளிக்கிறார்.

எலியாவுக்கு சோர்வு ஏற்பட்டபோது உணவு தேவைப்பட்டது போல பயணிக்கும் இன்றைய திருச்சபையிலிருக்கும் நமக்கும் உணவு தேவைப்படுகிறது. வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் களைப்பு, ஏக்கம், மனச்சோர்வு ஆகியவை நீங்க வழங்கும் உணவு தான் அவரது அருள்வாக்கும் அவரது திருவுடலுமாகும். இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க இயலாது. அதுபோல இயேசுவும் நாமும்  இணைந்திட அனைவரும் ஒருமனத்தவராய் திருப்பலியில் இணைந்திடுவோம்.



வாசக முன்னுரை:

 முதல் வாசகத்தில்  எலியா சோர்ந்து போய் தன் உயிரை எடுத்துக்கொள்ள யாவே கடவுளை வேண்டினார். ஆனால் பாலைநிலத்தில் ஒரு கூரைச் செடியின் அடியில் அவரை உறங்கவைத்து அவருக்கு உணவு கொடுத்து உற்சாகப்படுத்தி அவரது இறைவாக்கினரின் பயணத்தை தொடரவைத்தார். இதுபோல நம் வாழ்விலும் நாம் இப்போது ஓடிக்கொண்டே இருப்பது போல தோன்றினாலும், பாலைநிலம் போல வாழ்வின் எதார்த்தங்கள் சுட்டெரித்தாலும் நம்மையும் எழுப்பி, உணவு பரிமாற கடவுள் ஒரு வானதூதரை அனுப்புவார் என்ற நல்நம்பிக்கையில் அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசிக்க கேட்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8


பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;
அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்;
அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;
அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;
எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;
அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6 இந்த ஏழை கூவியழைத்தான்;
ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;
அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.
8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்;
அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். -பல்லவி

இரண்டாம் வாசகத்தில் எனக்கும் எனக்கும் உள்ள உறவு,  எனக்கும் பிறருக்கும் உள்ள உறவு, எனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு என்று  மனிதர்களுக்குள்ள அன்புறவுகளை சீர் தூக்கிப் பார்த்து உறவுகளை மேன்படுத்தினால், அடுத்தவரை மன்னித்து ஏற்றுக்கொண்டால், நாம் கடவுளின் பிள்ளைகளாக, நற்மணம் வீசும் காணிக்கையாக மாறமுடியும்.  இவ்வாறு கிறிஸ்துவின் உடலில் துலங்கும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் விளக்கும் புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தை வாசிக்க கேட்போம்.

விசுவாசிகள் மன்றாட்டு:

திருச்சபைக்காக:

எம் நிலைவாழ்வுக்கு உணவாக உம் மகனையே தந்த இறைவா!  எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் தங்களிடையே உள்ள உறவுகளை மேன்படுத்தி, வாழ்வு தரும் உணவான இறைமகனின் வீழுமியங்களை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து உம் சாட்சிகளாக வாழ வேண்டிய வரத்திற்காக இறைவா உமை மன்றாடுகிறோம்.

மக்களுக்காக:

அன்பால் எமை ஆளும் எம் தேவாதிதேவனே!  நாங்கள் ஒருவருக்கொருவர் உண்மையான பரிவன்பு காட்டவும் குறிப்பாக ஏழைகள், அனாதைகள், முதியோர், கைவிடப்பட்டோருக்கு எங்களால் இயன்ற உதவி செய்யும் தாராள மனத்தைத் தந்தருள வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

 எங்கள் குடும்பங்களுக்காக:

அன்பு தந்தையே இறைவா!  எங்கள் குடும்பத்தினர் அனைவரும் உம் வார்த்தைகளில் ஊன்றி நிலைத்திடவும், அருமருந்தாம் உம் திருஉடலைப் பெற்ற நாங்கள் எமக்கு அடுத்திருப்பவர்களை ஏற்று வாழவும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக் கொள்ளும் வரம் வேண்டி உமை மன்றாடுகிறோம்.

கிறிஸ்துவுக்காக துன்பபடுவோருக்காக:

எங்கள் அன்பு தந்தையே இறைவா! உமது பிள்ளைகளாகிய இவர்கள் உம்மை தங்களின் மீட்பராக ஏற்று கிறிஸ்துவராக வாழ்வதற்காக படும் இன்னல்கள் எண்ணிலாடங்கா. இவர்கள்  தாங்கள் நாடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் வேளையில் இவர்களில் பாதுகாவலவும், தேற்றவாகவும் நீரே இருக்கவேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப்பாடிகொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...