Thursday, February 25, 2016

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு 28/02/2016



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


முன்னுரை:


இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே
! தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். நம் கடவுள் இரக்கத்தின் கடவுள். தண்டனையின் இறைவன் அல்ல. மாறாக மன்னிப்பின் இறைவன். எனவே பிறர் வழியாக இறைவன் நம் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அலட்சியம் செய்யாமல் அக்கறையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் பாவிகள் மனம் திரும்புவதை விரும்புகிறார். அதற்காகக் காத்திருக்கிறார். 

இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட அதே வாய்ப்பு இன்று நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை நாம் விட்டுவிடக்கூடாது. அத்திமரத்திற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் போன்று, இன்றும் நம் ஆண்டவர் நமக்கு தருவதை நன்கு பயன்படுத்திக்கொள்வோம். ஆண்டவரின் இரக்கத்தை உணர்ந்தவர்களாக அவர் கொடுக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அவர் எதிர்பார்க்கிற பலனைத் தருபவர்களாக வாழ உறுதி எடுப்போம். அப்போது தான் இந்தத் தவக்காலம் நமக்கு இரக்கத்தின் காலமாக, மன்னிப்பின் காலமாக அமையும். அதற்காக இன்றைய திருப்பலி வழிப்பாட்டில் வரம் வேண்டி பங்கேற்போம்.

வாசகமுன்னுரை:


இன்றைய முதல்வாசகத்தில் இந்த நிகழ்வில் கடவுளின் வெளிப்பாடு நிகழ்கிறது என்பது மறுக்க முடியாத ஒன்று. கடவுள் தன்னை காட்சி வடிவிலும், ஒலி வடிவிலும் வெளிப்படுத்துகின்றார். மோசே கடவுளின் வெளிப்பாட்டைக் காண்கிறார். அவரின் வார்த்தைகளைக் கேட்கிறார். இனி மோசேயின் வேலை ஆடு மேய்ப்பது அல்ல. இறைவனின் குறுக்கீட்டால் அவரின் பணி மாற்றம் அடைகிறது. மேலும் அவர் இனி தனக்கென வாழப்போவதில்லை. அவரின் குடும்பம் இனி இத்திரோவின் குடும்பம் அல்ல. ஒட்டுமொத்த இஸ்ரயேலரின் குடும்பம்.கடவுளுக்கும், மோசேக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள்  இறைவனின் வெளிப்பாடும், அழைத்தலும் என்ற அமைந்துள்ள முதல்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

'கிறிஸ்துவே அப்பாறை!' என கிறிஸ்துவின் மேன்மையை முன்வைத்து, அதிலிருந்து அப்படியே அறிவுரைப் பகுதியை எழுதத் தொடங்கும் திருத்தூதர் பவுல் அடிகளார் கொரிந்தியர்களுக்கு எமுதிய நூலிலிருந்து எடுக்கப்பட்ட  இரண்டாம் வாசகத்தில் நம் சிந்தனையைத் தூண்டும் மிக முக்கியமானது 12ஆம் வசனத்தில் உள்ளது: 'எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக்கொள்ளட்டும்!' அதாவது, 'எங்கள் கப்பலை யாராலும் மூழ்கடிக்க முடியாது!' என்ற சொன்ன டைட்டானிக் கப்பல்காரர்கள்போல, இஸ்ரயேல் மக்களும், 'எங்களோடு இறைவன் இருக்கிறார்! எங்களுக்கு ஒரு தீங்கும் நடக்காது!' என்கின்றனர். ஆனால், பலர் பாம்பினாலும், கடவுளின் தூதராலும் அழிக்கப்படுகின்றனர். இந்த பவுலடிகளாரின் அறிவுரைக்கு கவனமுடன் செவிய்மெடுப்போம்


பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 6-7. 8,11

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்;
உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்;
அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி

ஆண்டவரின் செயல்கள் நீதியானவை;
ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார்.
அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்;
அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். -பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்;
நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு
மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. -பல்லவி

மன்றாட்டுகள்:


அன்புத் தந்தையே! எம் இறைவா! திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இறை இரக்கத்தின் ஆண்டின் மையமான இறை இரக்கம் அனைத்து மாந்தருக்கும் முழுமையாக சென்றடைய அவர்கள் அனைவரும் தங்கள் சொல்லாலும், செயலாலும் சான்று பகர வேண்டுகென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல்ஆலோசனை கர்த்தரே! எம் நாட்டில் நிலவும் அரசியல், பண்பாடு, மொழி, இனவேறுபாடுகள் வேரறுக்கப்பட்டு உம் மதிப்பீடுகளான நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் சேர்ந்த நல்ல ஆட்சி அமைக்க தேவையான நல்ல தலைவர்களை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா! இன்றைய உலகில் நிலவும் இளையோர்க்கு எதிராக எழுப்பப்படும் கலாசார சீர்கேடுகள், மாயகவர்ச்சிகள், பாலியல் வன்முறைகள் இவை அனைத்திலிருந்து எம் இளைனோரை பாதுகாத்து உம் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றின் மறைபொருளை அறிந்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணையின் தெய்வமே! எம் இறைவா! சமூகத்தில் தனக்கு யாருமே இல்லை என்று தனித்து விடப்பட்ட விதவைகள் அனாதைகள், கைவிடப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் அனைவரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட உம் பாடுகளின் வழியாக அவர்கள் தங்களை புதுப்பித்த உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..