Tuesday, April 26, 2016

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு 01/05/2016



பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு 01/05/2016


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 15: 1-2,22-29
திருவெளிப்பாடு
21: 10-14,22,23
யோவான் 14 :23-29


திருப்பலி முன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு கொண்டாடங்களில் கலந்து இயேசுவின் அமைதியையும் அவரது துணையாளரையும் பெற்றுக் கொண்டு புது வாழ்வு பெற உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
  வெறும் சட்டத்திட்டங்களை மட்டும் மையமாக கொண்டதல்ல நம் கிறிஸ்தவ வாழ்வு. மாறாக அன்பே அடித்தளமாக  இருக்க வேண்டும். மனிதருக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதன் மூலம் இறைவனின் மாட்சியையும் ஒளியையும் பெற்றுக்கொள்ள முதல் இரு வாசகங்களும் எடுத்துரைக்கின்றது.
  நமது உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். இயேசுவின் அமைதியை பெற்றுக்கொள்வோம். அவர் அனுப்பும் அவரது துணையாளரை ஏற்றுக் கொண்டு இவ்வுலகில் அமைதியின் தூதுவராக, ஒருங்கிணைந்து சாட்சிய வாழ்வு வாழ இறையருளைப் பெற வேண்டி இன்றையத் திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:



முதல் வாசக முன்னுரை:

பழைய ஏற்பாட்டின் யாவே கடவுள் மோசே வழியாக கொடுத்த மரபு சட்டங்களையும், முறைமைகளையும் புதிய ஆதாமாகிய கிறிஸ்துவை  நம்பிக்கைக் கொண்டு ஏற்றுக் கொள்ளும்போது விருத்தசேதனம் பிற இனத்தவர்கள் செய்து கொள்ள வேண்டுமென்று கட்டாயமல்ல. எனவே பவுல், பர்னபா இவர்கள் வழியாக தூய ஆவியார் உணர்த்துதலால் தாங்கள் பெற்றக் கொண்ட அழைப்புக்கு ஏற்ப திருத்தூதர்களிடமும், மூப்பர்களிடமும் இச்சிக்கலைக் குறித்து கலந்து பேசிக் குழப்பமும், கலக்கமும் உள்ள மக்களுக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளால் உறுதிப்படுத்துகின்றார்கள். இதன் மூலம் மீட்படைய தேவையானது எது? என்பதை உணர்த்தும் இந்த முதல் வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

  எருசலேம் கடவுள் வாழும் உறைவிடம். எனவே அத்திருநகருக்கு தூயஆவியார் அழைத்துச் சென்று கடவுளின் மாட்சியையும், ஒளியையும் இஸ்ரயேல் மக்களின் 12 குலங்களின் பெயர்கள் அதன் வாயில்களில் பொறிக்கப்பட்டிருப்பதையும் திருத்தூதர் யோவானுக்கு காட்டினார். எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர் அதன் ஆட்டுக்குட்டியே என்று எடுத்துரைக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7

பல்லவி
: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக! அல்லது: அல்லேலூயா.

கடவுளே
! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். -பல்லவி

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக
! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி

கடவுளே
! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி

மன்றாட்டுகள்:


1.இறைஇரக்கத்தின் தந்தையே எம் இறைவா!  திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் இருபால் துறவியார், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இவ்வாண்டில் உலகலாவிய புதிய மாற்றங்கள், புதிய சிந்தனைகள், ஏழை எளிய மக்களுக்கு தேவையான திருச்சபையின் போதனைகள், அனைவருக்கும் பாகுபாடின்றி வித்தியாசமின்றி நிறைவாக பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.ஏழைகளின் நாயகனே எம் இறைவா! தொழிலாளர்கள் தின விழாவை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாங்கள், தொழிலாளர்களின் குடும்பங்கள், அவர்களின் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு சிறந்து விளங்கிட, முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடின்றி, சமத்துவ, சகோதரத்தும் தழைத்தோங்கி, நாட்டின் வளர்ச்சிக்கும் குடும்பவளர்ச்சிக்கும் அனைவரும் பாடுபட்டு உழைத்து புனித யோசேப்பு போல் தங்கள் குடும்பங்களை இறைவளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பு தந்தையே எம் இறைவா! எம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநில அவைக்கான தேர்தல் சுயநலமின்றி, நீதியோடும், நேர்மையோடும், உண்மையோடும், கண்ணயமாக நடக்கவும், குறிப்பாக தூயஆவியார் துணைக்கொண்டு படித்த இளையோர், அரசியலில் முதிர்ச்சி பெற்ற சுயநலமற்ற தலைவர்கள் நாட்டு மக்களை நல்ல வழியில் நடத்திட சிறந்த தலைவர்களை உருவாக்கி தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கம் நிறைந்த எம் இறைவா! கோடைவெயிலினால் ஏற்படும் வறட்சி, தொற்றுநோய்கள், குழந்தைகள், முதியோர்கள் இவர்களுக்கு ஏற்படும் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறவும், கடுமையான வெப்பத்தால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையிலிருந்தும் விடுபடவும் உமது இரக்கத்தின் ஊற்றிலிருந்து நாங்கள் வாழ்வு தரும் நீரைப்பருக உமது ஆவியை மழையாகப் பொழியவேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, April 20, 2016

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு 24/04/2016



பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு





இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

முன்னுரை:
அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு கொண்டாடங்களில் கலந்து இயேசுவின் புதிய கட்டளையை அறிந்துக் கொள்ள ஆவலுடன் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

நம் வாழ்க்கையே ஒரு பயணம் தான். இந்தப்பயணத்தில் நாம் மகிழ்வோடு பயணிக்க வேண்டுமென்றால் தியாக அன்பு நம் அனைவரிலும் இருக்க வேண்டும்.
நான் உங்களை அன்பு செய்தது போல நீங்களும் ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள் என்ற இயேசுவின் அன்பு கட்டளையை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கின்றது.

பர்னபா, பவுல் இவர்களின் வெற்றியின் காரணம் பர்னபா பவுலடியார் மீது கொண்டுள்ள தன்னலமற்ற அன்பையும், தியாக அன்பையும் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் அழைப்பை ஏற்ற அவரது அடிச்சுவட்டில் வாழ நம்மையே இறைவனுக்கு அர்ப்பணிப்போம். அதற்கான இறையருளைப் பெற வேண்டி இன்றையத் திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:
 பவுலும் பர்னபாவும்  மனம் தளர்ந்தவர்களுக்கு  'துன்பங்கள் வழியே தாம் இறையரசுக்குள் நுழைய முடியும்' எனக் கற்பிக்கின்றனர்.  'செபித்து, நோன்பிருந்து, இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து' தலைவர்களை நியமிக்கின்றனர். இதில் இவர்கள் தங்கள் மக்கள்மேல் கொண்டிருந்த அக்கறையும், பொறுப்புணர்வும் தெரிகிறது. 'இதுதான் நான்!' 'இவ்வளவுதான் நான் செய்தது!' என தங்களின் வெற்றிகளையும், தோல்விகளையும் ஏற்றுக்கொள்வதும் அவர்களது அன்பின் வெளிப்பாடே.
இப்படியாக, இயேசுவின் புதிய கட்டளையை வாழ்ந்து காட்டி, அன்பின் வழியாக தாங்கள் இயேசுவின் சீடர்கள் என்பதற்குச் சான்று பகர்கின்ற முதல்வாசகமாகிய திருத்தூதர் பணிகள் வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.

 இந்த அன்புக் கட்டளையை நாம் எப்படி வாழ்வது? என்ற கேள்விக்குப் பதில் தருகிறது இன்றைய இரண்டாம் வாசகம் (திவெ 21:1-5அ). இன்றைய இரண்டாம் வாசகத்தில், 'புதிய வானகமும், புதிய வையகமும் இறங்கி வருவதைக்' காட்சியில் காண்கின்றார் யோவான். அவர் கூறும் ஐந்து கருத்துக்கள். 1. அன்பின் முதற்படி தீமை களைவது. 2. 'இதோ நான் அனைத்தையும் புதியனவாக்குகிறேன்' இது இறைவனின் இரண்டாம் படைப்புச் செயலைக் குறிக்கிறது. 3. 'இனி கடவுளின் கூடாரம் மனிதர்கள் நடுவே!' அன்பு செய்யும் இருவர் கடவுளின் இயல்பையே பிரதிபலிக்கின்றனர். 4. 'இறைவன் அவர்களோடு!' இந்த சொல் இறைவனின் உடனிருப்பு குறிக்கிறது. 5. . 'அவர்கள் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.' அன்பின் கரம் கண்ணீர் துடைக்க வேண்டும். இந்த வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப்பாடல்

பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்!
திருப்பாடல்: 145: 8-13. 

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர். தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி 

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும். உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள். உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி 

மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு. உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

 

மன்றாட்டுகள்:

1.அன்பின் இறைவா!  உம் அன்பு குழந்தைகளாகிய  திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக் கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்று பிறரை அன்பு செய்து வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.எம்மோடு என்றும் பயணிக்கும் எம் இறைவா, எங்கள் வாழ்க்கையில் எல்லாநிலைகளிலும் கலப்படங்களையே பார்த்து பழகிய நாங்கள் களங்மில்லாத, கலப்படமற்ற அன்பை எங்கள் குடும்பங்களிலும், நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்தில்  விதைத்த புதியதொரு விண்ணகத்தை  இன்றே இவ்வையகத்தில் கண்டு மகிழ தேவையான அருள் வரங்களை அன்புடன் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. 'அன்பு தீவினையில் மகிழ்வுறாது' என்ற பவுலடியார் வார்த்தைகளுக்கு இணங்க உலகில் உள்ள தீவிரவாதிகள் இயேசுவின் அன்பான ஆழமும், அகலமும், நிபந்தனையும், எல்லையும் இல்லா அன்பை உய்த்து உணர்ந்து தீவிரவாதத்தை கைவிட்டு அனைவரும் அமைதியில் வாழ தேவையான மனமாற்றத்தை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்மை அன்பு செய்வதும், நாம் செய்யும் வேலையை அன்பு செய்வதும், நம் படிப்பை அன்பு செய்வதும், நம் பயணங்களை அன்பு செய்வதும், நம் இலக்கை அன்பு செய்வதும், நம் வெற்றியை அன்பு செய்வதும் போன்ற இவற்றின் மூலம் அடுத்தவர்களை அன்பு செய்து 'நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்து கொள்வர்' என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை வாழ்வாக்க உமது அன்பு மழையை பொழியவேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, April 13, 2016

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு 17/04/2016



பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு




 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


 



முன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு கொண்டாடங்களில் கலந்து வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இயேசுவின் குரலுக்குச் செவிசாய்க்கும் அனைவரும் இயேசுவின் உண்மைச் சீடர்கள் என்ற கருத்தை இன்றைய நற்செய்தி வாசகம் டுத்துரைக்கின்றது. நல்லாயனாம் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதோடு மட்டுமல்ல, அதைச் செயலில் வாழ்ந்து காட்டுகின்ற மக்களாக இருக்க வேண்டும். வெறும் வாய்ச்சொல் வீரர்களாக மட்டும் இருந்தால் அது ஒன்றுக்கும் உதவாது என்ற கருத்தை இன்றைய இரண்டாம் வாசகம் நம் முன்வைக்கிறது.

நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் உலகில் சென்று பலன் தரும்படியாக நான் தான் உங்களைத் தேர்ந்துக்கொண்டேன் என்ற இயேசுவின் வார்த்தையைச் சிந்தித்துப் பார்த்தால் இறையழைத்தலின் மகிமையை நன்கு உணரலாம். இயேசுவின் அழைப்பை ஏற்ற அவரது அடிச்சுவட்டில் வாழ நம்மையே இறைவனுக்கு அர்ப்பணிப்போம். அதற்கான இறையருளைப் பெற வேண்டி இன்றையத் திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

தாங்கள் அறிவித்த நற்செய்திக்கு யூதர்கள் 'செவிமடுக்காததால்', தங்கள் நற்செய்தியை புறவினத்தாரிடம் கொண்டு செல்கின்றனர் பவுலும் பர்னபாவும். புறவினத்தார் இந்தப் புதிய நற்செய்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். புறவினத்தாரின் மகிழ்ச்சி, யூதர்களின் பொறாமையாக உருவெடுக்கிறது. ஆண்டவரை அறிதல் மனிதர்கள் நடுவில் பிளவை ஏற்படுத்துகிறது  தை கூறும் இன்றைய முதல் வாசகமான திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்க கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் யோவான் தன் ஆடுகளை அறிந்த இயேசு தானே ஆட்டுக்குட்டியாகத் தன்னை பலியாக்குகின்றார். இவரின் குரலுக்குச் செவிமடுத்து இவரைப் பின்பற்றியவர்களின் ஆடைகளை இவர் தன் இரத்தத்தால் தூய்மையாக்குகின்றார். பலியான ஆட்டுக்குட்டியே அவர்களை மேய்க்கின்றார். 'வாழ்வளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்கின்றார். அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுகிறார்' என்று நமக்கு தெளிவுப்படுத்தும் வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5



பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி

3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள்,
அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி

5
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி

 



மன்றாட்டுகள்:


1. எம் நல்ல மேய்ப்பனாம் எம் இறைவா! திருஅவை இறையழைத்தல் ஞாயிறைக் கொண்டாடும் இவ்வேளையில் உம் திருஅவையின் பணியாளர்களாகிய திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் குரலுக்கு செவிசாய்த்து அவர் காட்டிய பாதையில் இனிதே பயணிக்க தேவையான அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.என்றுமே மாறாத அன்பு கொண்ட எம் இறைவா, இன்றையச் சூழலில் நாங்கள் எங்கள் குடும்பத்தில் நல்ல தலைவர்களாகவும், சமுதாயத்தில் நல்ல வழிகாட்டிகளாகவும், தடுமாறுகிறவர்களுக்குப் புதிய பாதையாகவும், வாழ்வை இழந்தவர்களுக்கு வாழ்வாகவும் எம் ஆயனாம் இயேசுவின் பாதையில் தடம் மாறாது பயணம் செல்ல தேவையான அருள் வரங்களை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இன்று உலகில் நடைபெறும் மாற்றங்களால் நலிவடையும் என் விவசாய பெருமக்களை உம் முன் வைக்கிறோம். அரசாங்கத்தாலும், மற்றவர்களாலும் அவர்கள் உழைப்பு சுரண்டப்படாமல், உழைப்புக்கேற்ற பலனையும் மதிப்பையும் அடையவும், பொருளாதர வளர்ச்சி கண்டு இன்புறவும்,அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அறுவடையே அதிகம் ஆட்களோ குறைவு என்று உம் பணிக்கு எம்மை அழைத்த இறைவா! தேவ அழைத்தல் எந்த நிலையிலும் உண்டு என்பதை உணர்ந்து, உமது பணி செவ்வனே செய்யவும், எம் தாய்நாட்டிலிருந்து உம் சேவைக்காய் வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஆயனின் பணிகளைச் சிறப்புடன் செய்திட நல்ல மனதையும், உடல்நலத்தையும், உம்மேல் உறுதியாக நம்பிக்கையுடன் அருட்பணிகள் செய்திட வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.