Thursday, September 28, 2017

பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு 01.10.2017



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

எசேக்கியேல் 18: 25-28
பிலிப்பியர் 2 :1-11
மத்தேயு 21: 28-32

 *முன்னுரை*


அன்புடையீர்,
இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலத்தின் 26ஆம் ஞாயிறுத் திருப்பலியில் செயல்வீரராய் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
வாய்ச்சொல் வீரராக நாம் வாழாமல் நம் சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடின்றி வாழ வேண்டும். இதுதான் கடவுளுக்குப் பிடித்த வாழ்க்கை நெறிமுறை என நம் ஒவ்வொருவரின் வாழ்வையும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்க இன்றைய அருள்வாக்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இறைவனின் இரக்கத்தின் மீத நம்பிக்கை வைக்கம் எந்தப் பாவியையும் இறைவன் புறக்கணிப்பதில்லை. இறைவன் ஒருபோதும் பாவி சாக வேண்டும் என்று விரும்புவதுமில்லை.
இயேசுவின் சீடர்களாக வாழ்வோம் என்ற முடிவு எடுத்துவிட்டோமென்றால் என்ன நிலை வந்தாலும் இறுதிவரை இயேசுவின் சீடராக வாழ்வதில் நிலைத்து நிற்க வேண்டும். சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இருக்க வேண்டுமேயொழிய வேற்றுமை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி கடவுள் இரக்கத்தின் கடவுளாகவே வெளிப்படுத்தப்படுகிறார். இந்த உண்மை நாம் மனம் திரும்பத் தூண்டுகோலாக அமைய வேண்டும்
தீய வாழ்வை விலக்கி, மனம் மாறி நல்வாழ்வு வாழ வந்த சக்கேயு, விபச்சாரப்பெண், ஊதாரி மகனைப் போல நாமும் மனம்மாறி இறையரசின் பிள்ளைகளாக வாழ இத்திருப்பலியில் இறைவனை மன்றடுவோம்.

வாசகமுன்னுரை*

*முதல் வாசக முன்னுரை*


இன்றைய முதல் வாசகம் மனமாற்றத்தை எடுத்துரைக்கின்றது. இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு உண்மையாக இல்லாததால் அடிமைத்தனத்திற்கு ஆளாக்கப்பட்டனர். தம் தூதுவர்களாகப் பல இறைவாக்கினர்களை அவர்களிடம் அனுப்பினார். யாவேயின் கட்டளைப்படி எசேக்கியேல் இறைவாக்கினர். இஸ்ரயேல் மக்களிடம் சென்று, அவர்கள் தங்கள் தவறான வழிகளை விட்டுவிட்டு இறைவனிடம் மனம் திரும்பி வரவேண்டும் என அறிவுறுத்துகிறார். இருப்பினும் இஸ்ரயேல் மக்கள் கடவுளுடைய வார்த்தைக் கேட்டு அவருடைய வழியில் செல்ல வில்லை. தமது வார்த்தைக் கேட்காத இஸ்ரயேல் மக்களைக் கடவுள் அழிக்கவில்லை; மாறாக, அவர்களிடம் மிகுந்த பொறுமையைக் காட்டினார் என்று மனமாற்றத்திற்கு அழைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


.

*இரண்டாம் வாசக முன்னுரை*

விண்ணிலிருந்து இம்மண்ணுக்கு வந்த மாபரன் இயேசு நம்மை மீட்க வந்தார். கடவுள் நிலையில் இருந்த அவர் மனுவுரு கொண்டு இம்மண்ணுக்கு வந்து மானிட பாவம் போக்க சிலுவை மரத்தில் உயிர் துறந்தார். இவையனைத்தையும் இயேசு பிரதிபலன் எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை. அவர் தொடக்கத்திலேயே கடவுள் தன்மையில் விளங்கியவர். எனவே தான் நாமும் நமது வாழ்வை, நமது பணியை எதையும் எதிர்பார்த்துச் செய்யக்கூடாது. நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும், மன மகிழ்ச்சியுடன் நான் கடவுளின் பிள்ளை, அவரால் ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளை. எனவே, நான் என் பணியை எந்தவிதப் பலனையும் எதிர்பாராமல் செய்வேன் என்ற மனநிலை நம்மில் உருவாக வேண்டும் என இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு அறிவுறுத்துகிறது. கவனமுடன் கேட்போம்.

*பதிலுரைப்பாடல்*


பல்லவி: ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்
பதிலுரைப்பாடல். திபா. 25:4-5, 6-7, 8-9
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்; பல்லவி
ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1. இரக்கத்தையும், பேரன்பையும் தன்னகத்தே கொண்ட எம் இறைவா! உம் திருஅவை உள்ள அனைத்துதரப்பினரும் எதையும் எதிர்பார்க்காத இயேசுகிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டு தங்கள் வாழ்விலும், ஏற்றப் பணிகளிலும் சிறந்த விளங்க தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம் குற்றங்களையும், குறைகளையும் நினையாத எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள அனைவரும் தத்தம் பணிகளை செவ்வனே செய்யவும், அதன்மூலம் தம் வாழ்வின் நிறைவை மகிழ்வாய் பெற்று உமது சாட்சிகளால் அனைவரையும் அன்புடனும் பாசத்துடனும் வாழ நடத்த தேவையான இரக்கத்தையும் பொறுமையையும் பெற்றிட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. எங்களை நேரிய வழியில் நடத்திடும் எம் இறைவா! செய்ய முடியாதவைகளைச் செய்வேன் எனக் கூறிவிட்டுப் பின்பு கடைப்பிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்ற எம் அரசியல் தலைவர்கள் தங்கள் நிலையை உணர்ந்துச் சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமை இல்லாத செயல்பாடுகளின் வழியாய் மக்களுக்கு நல் வாழ்வு வழங்கிடத் தேவையான ஞானத்தை அவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! அனைத்துப் பணியாளர்களும் தங்களுக்குரிய மதிப்பையும், உரிமைகள் பாதுகாப்பையும் பெறும்படியாகவும், பணிவாய்ப்பு தேடுவோர் பொது நன்மைக்குத் தங்களது பங்களிப்பை வழங்கும் வாய்ப்புப் பெறும்படியாகவும் வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



www.anbinmadal.org

Wednesday, September 20, 2017

பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு 24.09.2017

பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு  24.09.2017





*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

 

எசாயா 55 6-9
பிலிப்பியர் 1 20-24,27
மத்தேயு 20 1-6

 *முன்னுரை*


அன்புடையீர்,   
இயேசுவின் அன்பிற்குரியவர்களே, பொதுக்காலத்தின் 24ம் ஞாயிறுத் திருப்பலியில் இறைவனின் நீதியையும், அன்பையும், தாராளக் குணத்தையும் அறிந்திட உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
இயேசுவின் எல்லா உவமைகளிலும் புரட்சியான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. பாரம்பரியம் என்ற பெயரில் சமுதாயம் கொண்டிருந்த தவறான எண்ணங்களைப் புரட்டிப் போடும் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உவமையிலும் ‘புரட்டிப் போடுதல்’ நடந்துள்ளது. நமது எண்ணப்படி, அந்த முதலாளி யாருக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும்? காலையிலிருந்து வேலைச் செய்தவர்களுக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர் இறுதியாக வந்தவர்களுக்கு முதலில் கூலி கொடுக்கிறார். இந்த உவமையின் புரட்சி இங்கு ஆரம்பமாகிறது.
அவர்களுக்குப் பேசப்பட்ட ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் மட்டுமே கொடுக்கப்பட்டது. அத்தொழிலாளிகளின் கண்ணோட்டத்தில் இது அநியாயம், அக்கிரமம், அநீதி. ஆனால், முதலாளியின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், உழைத்த எந்தத் தொழிலாளியையும் அந்த முதலாளி ஏமாற்றவில்லை. அனைவருக்கும் நியாயமான, பேசப்பட்ட கூலியையே கொடுத்தார். இறுதியில் வந்தவர்களுக்கு நீதி, நியாயம் என்ற கணக்கையெல்லாம் தாண்டி, தாராளமாகக் கொடுத்தார். முதலாளி காட்டிய தாராளக் குணம், நீதி இரண்டையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை பணியாளர்களால்.
கடவுள் தனக்கே உரிய அழகுடன், தன் நீதியையும், அன்பையும், தாராளக் குணத்தையும் இணைத்து முடிவுகள் எடுக்கும்போது... இறுதியில் வந்தவர்களுக்கும் நமக்கு இணையான, அல்லது நம்மைவிட உயர்ந்த நன்மைகளைச் செய்யும்போது... நாம் ஏமாற்றம் அடைகிறோம். முணுமுணுக்கிறோம். கடவுள் நம் பக்கம் திரும்பி, "நான் கடவுளாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?" என்று கேட்கிறார். நம் பதில் என்ன?
இறைவனின் நிபந்தனையற்ற அன்பு, குறைவின்றி வழங்கும் அவரது தாராளக் குணம், அதே நேரம், இறைவனின் நீதி இவைகளைப் பற்றி நாம் எண்ணிப் பார்த்து இத்திருப்பலியில் இறைவனிடம் அவரது அன்பையும் ,இரக்கத்தையும் மன்றாடுவோம்.


 

*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*


இன்றைய முதல் வாசகம் இறைவார்த்தையின் வல்லமையை எடுத்துரைக்கின்றது. புற இனத்து அரசனின் ஆணையின்படி மக்கள் எருசலேமிற்குப் போவார்கள். எனவே, மக்கள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தப்பட்ட இறைவார்த்தைக்குச் செவிமடுக்க வேண்டும். கடவுளுடைய ஞானத்தையும், நோக்கத்தையும், மனிதப் புத்தியைக் கொண்டு வரையறுக்க முடியாது. எனவே, நாடு கடத்தப்பட்ட மக்கள் இறைவனின் தாராள மனப்பான்மையைக் குறித்துக் கேள்வி கேட்கக்கூடாது. கடவுள் யாருக்கு என்ன ஆசீர்வாதம் கொடுக்க வேண்டுமோ அதை அவர்தான் முடிவு எடுப்பார். எனவே, கடவளின் வழிகள் மனிதப் புத்தியால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. எசாயாவின் ஆறுதலின் நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.



.

*இரண்டாம் வாசக முன்னுரை*


தூய பவுல் பிலிப்பியர் சமூகத்திற்கு எழுதிய கடிதத்தில், கிறிஸ்துவில் மகிழ்ச்சியுற வலியுறுத்துகின்றார். தான் எவ்வாறு கிறிஸ்துவைப் பின்பற்றினாரோ, அதேபோல் ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்ப முன் வர வேண்டும். கிறிஸ்துவோடு ஒன்றித்திருப்பதே நமது வாழ்வின் சட்டமாகக் கொள்ள வேண்டும். தனது நற்செய்திப் பரப்புதலின் வழியாக ஒருவன் கிறிஸ்துவோடு ஒன்றித்து வாழ முடியும். எந்த ஒரு செயலும் இந்தக் கிறிஸ்துவுடன் கூடிய ஒன்றிப்பைப் பாதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறார். எனவே, தான் பவுலடியார், வாழ்வு என்பது கிறிஸ்துவே எனக் கோடிட்டுக் காட்டும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.  


*பதிலுரைப்பாடல்*
பல்லவி: தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்
திபா 145: 2-3. 8-9. 17-18
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. பல்லவி
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். ..அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1. பெரிதும் போற்றுதலுக்கு உரிய அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவை உள்ள அனைத்துதரப்பினரும் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே! என்பதனைத் தங்கள் மனங்களில் நிலைநிறுத்தி, இயேசுவின் நற்செய்திக்கு ஏற்பப் பணிகள் செய்து தம் வாழ்வை உமக்காக அர்பணிக்கத் தேவையான அன்பு, நீதி, தாராளக் குணம் ஆகியவற்றை நிறைவாய் பெற்ற தேவையான ஞானத்தைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இரக்கமும் கனிவும் நிறைந்த அன்புத் தந்தையே எம் இறைவா! எம் குடும்பங்களில் அனைவரும் “உமது எண்ணங்கள் வேறு! எங்கள் எண்ணங்கள் வேறு” என்பதைத் தெளிவாய் உணர்ந்து, உமது எதிராய் முணுமுணுக்காமல் உமது உயரிய அன்பையும், நீதியையும் உணர்ந்து வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. எங்கள் வானகத்தந்தையே, எம் இறைவா! உலகெங்கும் இயற்கைச் சீற்றங்களாலும், பூமி அதிர்ச்சியலும் மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அரசர்கெல்லாம் அரசரான எம் இறைவா எம் நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதாரச் சீர்கேடுகள் ஆட்சியாளர்களின் தவறான வழி நடத்துதல் இவற்றிலிருந்து வேறுபட்டுப் புதிய சிந்தனைகளும் தூய ஆவியின் வழி நடத்துதால், நல்ல வழியில் அழைத்துச் செல்லும் தன்னலமற்ற தலைவர்களை உருவாக்கித் தந்திட வரம் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org



Thursday, September 14, 2017

பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறு 17.09.2017

பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறு 17.09.2017





*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

சீராக்   27:30-28:7
உரோமையர் 14:7-9
மத்தேயு 18: 21-35



 *முன்னுரை*


அன்புடையீர்,
இயேசுவின் அன்பிற்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துநான்காம் ஞாயிறுத் திருப்பலியில் மன்னிப்பின் மேன்மையை உணர்ந்திட உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவையான மன்னிப்பைப் பற்றிச் சிந்திக்க இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. மன்னிப்பு பெறுவதும் வழங்குவதும் நாம் வாழ்வில் அடிக்கடி உணர்ந்துள்ள ஓர் அனுபவம். இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். அவற்றைத் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. நாம் எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம்... மன்னிப்புடன் வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறுகிறோம். இதைத்தான் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அமைதிக்கான தன் செபத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்: "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்." என்று.

இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார். இயேசு பேதுருவுக்குப் போதித்ததைத் தன் வாழ்வில் கடைபிடித்தார். அவரைப் பொறுத்தவரை மூச்சு விடுவதும், மன்னிப்பதும் அவரது இயல்பாகவே மாறிவிட்டன. இயேசு தன் இறுதி மூச்சுக்காகச் சிலுவையில் போராடியபோதும் 'தந்தையே, இவர்களை மன்னியும்' என்று சொன்னக் கல்வாரி நிகழ்வுகள் நமக்கு நினைவிருக்கும், இல்லையா?
மன்னிப்பின் மேன்மையை உணர்ந்து வாழ நல்மனம் நம்மில் அமைந்திட இத்திருப்பலியில் இறைவனிடம் மன்றாடுவோம்.


*வாசகமுன்னுரை*

*முதல் வாசக முன்னுரை*


மக்கள் தங்களது வேதனை, கசப்பு, வெறுப்பு இவைகளிலேயே வாழ்ந்து வந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்து விடும். ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது எப்படி அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தப் பாத்திரம் முழுவதையும் கரைத்து, அழித்து விடுகிறதோ, அதே போல் இவர்களது இந்தக் கசப்பான எண்ணங்கள், நினைவுகள் இவர்களை முற்றிலும் அழித்து விடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்ற முடியும்."எனக் கூறுகின்ற சீராக்கின் ஞான நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

.

*இரண்டாம் வாசக முன்னுரை*

இன்றைய இரண்டாவது வாசகத்தில் உரோமையர் மத்தியில் உருவான உறவின் விரிசல்களை, குறிப்பாக விருந்துண்டதில், ஒருவரின் தீர்ப்பை உறவு பிரிக்கிறது. குறைநிறைகளோடு ஏற்றுக் கொள்வதிலும், தம்மையே பிறருக்குத் தருவதிலும் தான் உறவு பலப்படுத்தப்படுகிறது என்று எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுலின் அழைப்பை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.          

*பதிலுரைப்பாடல்*

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
திருப்பாடல் 103: 1-2, 3-4, 9-10, 11-12

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது. மேற்கினின்று கிழக்கு எத்துணைத்; தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். பல்லவி 


*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன..அல்லேலூயா.


*மன்றாட்டுகள்*


1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவை உள்ள அனைத்துதரப்பினரும் இயேசு தன் இறுதி மூச்சு வரை மன்னிப்பைத் தன் சுவாசமாக்கியது போல, தங்கள் வாழ்வில் எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்கவும். ஒருவர் ஒருவரை நட்புப் பாராட்டவும், உள்ளதை உள்ளதுபோல் ஏற்றுக்கொண்டு "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்." என்பதை உணர்ந்த செயல்படத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்புத் தந்தையே எம் இறைவா! எம் குடும்பங்களில் பிறருடைய குற்றங்கள், குறைகளை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கோபம், பழிவாங்குதல் போன்ற எதிர்மறைச் சிந்தனைகளுக்கு அடிமைகளாகித் தங்கள் உள்ளத்தையும் உடலையும் பாழ்படுத்திக் கொள்ளமால் அனைவரும் , மன்னிப்பின் மேன்மையை உணர்ந்து அதையே சுவாசக்காற்றை மாற்றி இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி நிறைந்திடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. மன்னிக்கும் மகத்துவமிக்க எம் இறைவா! எமது நாட்டு அரசியல் தலைவர்களுக்காக வேண்டுகிறோம். அவர்கள் மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி, அனைவரும் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தைக் கண்டடையச் செய்திடவும், சமுக உறவில் ஒன்றுபட்டு வாழ வழிவகைச் செய்திடவும் , நாட்டிற்கும் உலகிற்கும் பயன்உள்ளவர்களாக வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.

4. சமூக மாற்றித்தின் நாயகனே எம் இறைவா! உலகெங்கும் கோபத்தாலும் வெறுப்புணர்வாலும் பிளவுப்பட்டுச் சிதறியடிக்கப்பட்ட உம் மக்களே கண்ணேக்கியருளும். பகைமையை மறந்து எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம்..என்பதை அனைவரும் உணர்ந்து மன்னிப்புடன் வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறு வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்


www.anbinmadal.org

Friday, September 8, 2017

பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு 10.09.2017



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*







எசேக்கியல் 33: 7-9 
உரோமையர் 13:8-10
மத்தேயு 18: 15-20

 *முன்னுரை*


அன்புடையீர்,
இயேசுவின் அன்பிற்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறுத் திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
வாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள் கண்ணாடி பந்துகள்... தவறினால் சிதறிவிடும். குடும்ப உறவுகளைப் பற்றிய சில எளிய, தெளிவான பாடங்களை நாம் புரிந்து கொள்ளத் தவறுகிறோம், அல்லது, புரிந்துக் கொண்டாலும் பின்பற்றத் தவறுகிறோம் என்பதை ஆழமாக அலசிப்பார்க்க இன்றைய ஞாயிறு நற்செய்தி நம்மை அழைக்கிறது.
அதிலும் சிறப்பாக நற்செய்தி வாசகம் சகோதரனைத் திருத்தும் முறையை நமக்குத் தெளிவுப்படுத்துகின்றது. தனியாக இருக்கும் போது அவன் குற்றத்தை எடுத்துக் கூறுங்கள். இப்படிச் செய்தால் நாம் பலருடைய வாழ்க்கையில் ஒளியேற்றுகிறோம் என்பது பொருள். தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லவே இல்லை. காரணம் இறுதிவரைப் போராடிய இயேசு அன்பின் உச்சகட்டமாகத் தனது உயிரையே நமக்காகக் கொடுத்தார். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவது ஆண்டவனின் பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமையாகும்.
தயவுசெய்து,  நன்றி,  மன்னிக்கவும்... மிக எளிதாகத் தோன்றும் இந்த மூன்று வார்த்தைகளையும், ஒப்புக்காக, செயற்கையாகச் சொல்லாமல், அவ்வார்த்தைகளுக்குத் தேவையான உண்மையான மனநிலையோடு சொன்னால், நம் குடும்பங்கள் நலமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. குடும்பங்களில் நல்ல சூழல் உருவாக, முன்னதாகச் சொல்லப்பட்ட எளிதான வழிகளையும் பின்பற்ற முயல்வோமே! இந்த முயற்சிகளால் நாம் இழக்கப் போவது எதுவுமில்லை, ஒருவேளை அடையக்கூடிய பலன்கள் அதிகம் இருக்கலாம்! விட்டுகொடுத்து வாழ நல்மனம் நம்மில் அமைந்திட இத்திருப்பலியில் இறைவனிடம் மன்றாடுவோம்.

*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*


இவ்வுலகம் தீயவர்களால் கெடுவதில்லை; மாறாகத் தீயவர்களின் தீச்செயல்களைக் கண்டு , கண்டனக் குரல் எழுப்பாமல் மெளனமாக இருப்பவர்களால்தான் கெடுகிறது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இறைவாக்கினர் எசேக்கியல் வழியாகக் கூறுகிறார். தீயவர்களை நாம் எச்சரித்தும், அவர்கள் தீமையில் செத்தால், அவர்கள் அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல; மாறாக, தீயவர்களை நாம் எச்சரிக்காமல் அவர்கள் தீமையில் இறந்தால் அவர்களுடைய அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் எனக் கூறுகின்ற இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.            
.

*இரண்டாம் வாசக முன்னுரை*


இன்றைய இரண்டாவது வாசகத்தில் கடவுளின் அன்பைப் பற்றியும், அதற்குப் பதிலாக நாமும் அயலாரை அன்பு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். கடவுளை நாம் அன்பு செய்யும் போது, நாம் கடவுளோடும், கடவுள் அன்பு செய்யும் மக்களோடும் ஒன்றிப்போகிறோம். மக்கள் அனைவரையும் அன்பு செய்யக் கடமைப்பட்டிருக்கின்றோம். இக்கடமையை நிறைவேற்றுவதன் மூலம் கடவுளது அன்புக் கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றோம் என்று எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுலின் அழைப்பை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.  
         

*பதிலுரைப்பாடல்*


உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
திபா 95: 1-2. 6-7. 8-9

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.  பல்லவி

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!  பல்லவி

அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.  பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் உலகினரைக் கிறிஸ்துவின் வாயிலாகத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார்.அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1.  அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவை கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வு மலர்ந்திட இறைமனித உறவு ஒன்றுப்பட்ட வாழத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்புத் தந்தையே எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள அனைவரும் தயவுசெய்து,  நன்றி,  மன்னிக்கவும்... மிக எளிதாகத் தோன்றும் இந்த மூன்று வார்த்தைகளையும், ஒப்புக்காக, செயற்கையாகச் சொல்லாமல், அவ்வார்த்தைகளுக்குத் தேவையான உண்மையான அர்த்ததோடும், அன்பான மனநிலையோடு கூறி எங்கள் குடும்ப உறவுகளை மேன்மை படுத்தி தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. அனைவருக்கும் ஒரே நீதியை வழங்கிடும் எம் இறைவா! இன்று எம் நாட்டில் நிலவும், சுயநலம், மற்றவர்களை அடிமைப்படுத்துக்கூடிய ஆணவம் இவைகளை மறந்து எல்லா மாநிலமக்களிடம் பிரிவு மனப்பான்மைக்கு இடந்தராமல், சமத்துவச் சகோதரத்துவ வாழ்வு சிறந்து விளங்கிடவும், மனித நேயமும், சரியான சமுக நீதியும் வழங்கப்பட்டவும், அனைவருக்கும் எல்லா உரிமைகள் கிடைத்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

4. சமூக மாற்றத்தின் நாயகனே எம் இறைவா! நீதியினிமித்தம் துன்புறுத்துப்படுவோர் பேறுபெற்றோர் என்னும் கூற்றுக்கு இணங்க இன்று சமூகத்தில் நிலவும் அவலங்கள், கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, தீவிரவாத செயல்கள் இவற்றிலிருந்து மக்கள் அனைவரைப் பாதுகாத்துப் பெண்கள் சமூகத்தில் மாண்புடன் நடத்தப்பட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.



                                                           www.anbinmadal.org