Wednesday, January 31, 2018

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு – 04-02-2018


*பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு – 04-02-2018*


*இன்றைய வாசகங்கள்*:


*திருப்பலி முன்னுரை*:


பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இறைகுலமே, இறைஇயேசுவில் நலம் பெற உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
ஒருவர் குணம் அடைவது, அவர் உள்மனதில் எழும் நம்பிக்கையில் ஆரம்பமாகிறது என்ற உண்மை இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையே இன்றைய ஞாயிறு வாசகங்களும் நமக்குச் சொல்லித் தருகின்றன. துன்பத்தின் சுமைத் தாங்க முடியாமல் தனிமையில் புலம்பிய யோபு இறுதியில் இறைவனிடம் சரணடைந்தார். அவர் வேதனைகளும், சோதனைகளும் சுகமாய் மாறின. நற்செய்தி அறிவிப்பது இறைவன் எனக்களித்த பொறுப்பு என்று பனித பவுல் உரைத்ததைத் தன் வாழ்வாக மாற்றி இம்மண்ணில் மறைச்சாட்சியாக மரித்த புனித அருளானந்தரை இன்று நினைவுகூறுவோம்.
கடந்த நான்கு வாரங்களாகக் குணமளித்த இயேசுவைப்பற்றி நற்செய்தியில் கேட்டு வந்த நாம் இன்றும் அவரை குணமளிக்கும் வல்லவராகக் காண்கிறோம். ஆம் இயேசு வெறும் வார்த்தைகளால் மட்டும் நற்செய்தியைப் பறைச்சாற்றவில்லை. மாறாகத் தம் செயல்களால், வாழ்வால் அதை அறிவித்தார். அவரின் குணமளிக்கும் வல்லமையால் உடல் நோயிலிருந்து புறவிடுதலையோடு பாவத்திலிருந்து அகவிடுதலையும் தந்தார்.
இவ்வாறு தனது இறையரசுப் பணியில் இம்மை வாழ்வையும், மறுமை வாழ்வையும் ஒன்றிணைத்து வாழ்வாலும் வார்த்தையாலும் போதித்துத் தானே நடமாடும் நற்செய்தியானார். நாமும் இயேசுவைப் பின்பற்றி நடமாடும் நற்செய்திகளாக மாற இன்றைய திருப்பலியில் மனதார வேண்டிடுவோம்.

*முதல் வாசக முன்னுரை*:


வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத துன்பத்தில் எல்லோருமே சிக்கித் தவிக்கிறோம். இவ்வாறே இன்றைய வாசகத்தில் துன்பத்திக் சுமை தாங்க முடியாமல் தனிமையில் புலம்பி அழும் யோபு இறுதியில் இறைவன் என்னைக் கொன்றாலும் அவரிடத்திலே நம்பிக்கை வைப்பேன் என்று தஞ்சமடைகிறார். எல்லாம் மறைந்துச் சுகமான சுமைகளாகவே மாறின. இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம். இறைவனில் நாமும் நம்பிக்கைக் கொள்வோம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*:


நற்செய்தி அறிவிப்பது இறைவன் எனக்களித்த பொறுப்பு. எத்தனை இடர்கள் வந்தாலும் அதிலிருந்து நான் பின்வாங்கமாட்டேன். அப்பணியில் என்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயல்பட்டு நான் எல்லாருக்கும் எல்லாமும் ஆனேன் என்று கூறும் புனித பவுலடியார், இறைச்செய்தியை வார்த்தைகளால் போதிக்காமல் தன் வாழ்வால் போதித்தது போல அவரின் ஆழ்ந்த அர்த்தமுள்ள அறிவுரையைக் கவனத்துடன் கேட்டு நாமும் நற்செய்தியாவோம்.

*பதிலுரைப்பாடல்*


திபா 147: 1-2, 3-4, 5-6
பல்லவி: உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்.

நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். -பல்லவி

உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார். விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். -பல்லவி

நம் தலைவர் மாண்பு மிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது. ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். -பல்லவி
 

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்.  அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*:


1. நலன்களுக்கெல்லாம் தொடக்கமும் நிறைவுமாகிய இறைவா! எம் திருஅவையில் உள்ள அனைவரும் எத்தகைய துன்பங்கள் சோதனைகள் வந்தாலும் இறை நம்பிக்கைக் குறையாமல் உமது அன்பின் சாட்சிகளாக நற்செய்திகளின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வாக மாற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியாக வாழ்ந்திடத் தேவையான வரங்களை அருள் மாறிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உண்மையான பக்தியும் அமைதியும் அளிக்கும் இறைவா! எம் பங்கில் அன்பியங்கள் வழியாக உமது இறைநம்பிக்கை வளரத் தலைவர்களும், உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுப்பதிலும், மன்னிப்பதிலும், சமுக, பொருளாதர உதவிகள் செய்வதிலும், வேதனைகளிலும், சோதனைகளிலும் ஆறுதலாகவும் இருந்து எங்களுக்கு அடுத்திருப்போருக்கு இயேசுவின் நற்செய்திகளாய் வாழ்ந்திட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் பேரின்பமாகிய இறைவா! எமது நாட்டு அரசியல் அவலங்களால் பசி, பட்டினி, நோய்கள், குடிபோதை, வேலையின்மை என்று பாதிக்கப்பட்டு அவதியுறும் எம் ஏழைஏளிய மக்களைப் பாரும். அவர்கள் வாழ்க்கை நிலை மேலோங்கி எல்லாரும் நலம் வாழப் பகிர்ந்தளிக்கு நல்ல மனதினை எங்களுக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. என்றென்றும் இரக்கமுள்ள இறைவா! உமது பிள்ளைகள் இளையோராகிய நாங்கள் எமது தேவைகளில் முதன்மையான தேவை நீரே என்று உணர்ந்து நாங்கள் முழுமையாக உம் கரம் பற்றிக் கொள்ளவும், நிலைவாழ்வுப் பெற்று உம்மை அடையவும், இறைநம்பிக்கையில் வளரவும்  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Monday, January 22, 2018

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு - 28-01-2018



*இன்றைய வாசகங்கள்*:


*திருப்பலி முன்னுரை*:


பொதுக்காலம் நான்காம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இறை மக்களே! உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

இன்றைய நற்செய்தி, இயேசுவின் அதிகாரத்தையும், அவர் யார் என்பதையும் காட்டுகிறது. அதிகாரம் என்பது நாம் தினமும் சந்திக்கும் ஒரு மனித அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும், தீர்க்க முடியும். நமது குடும்பங்களில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பேரவைகள் வரை அதிகாரம் பல வடிவங்களில் இருக்கின்றது.

போட்டியிட்டுப் பெறும் பதவிகளால் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகாரம் நிரந்தமானது அல்ல. மாறாக, உன்னதமான பண்பு, அல்லது உயர்ந்த அறிவு இவைகளைக் கொண்டு ஒருவர் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம் அவர் வாழ்நாள் முழுவதும் தொடரும். ஒருவர் சுயமாகத் தனக்குள் வளர்த்துக்கொள்ளும் இந்த அதிகாரம், உள்மனச் சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப் பேச வைக்கும். அது கேட்பவர்களையும் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி அவர்களை வழி நடத்தும். இயேசுவின் அதிகாரம் இந்த வகையைச் சார்ந்தது.

குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம் சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாரம் என்பதைச் சரியான கண்ணோட்டத்தில் அறிந்து கொள்வோம். நமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளும் உன்னதப் பண்புகளால் நாம் மற்றவர்களின் மதிப்பைப் பெற வேண்டும் என்று இயேசு வாழ்ந்துக் காட்டிய அந்த வழியில் வாழ இன்றைய திருப்பலியில் உளமாற இறையருளை மன்றாடுவோம்.

*வாசக முன்னுரை*:


*முதல் வாசக முன்னுரை*:


இன்றைய அருள்வாக்கு வழிபாடு கடவுளுடைய வார்த்தைகளுக்குச் செவிமெடுத்து அதன்படி வாழ நம்மை அழைக்கிறது. இன்றைய முதல் வாசகத்தில் உன்னைப் போன்ற இறைவாக்கினர்களை இஸ்ரயேல் மக்களிடமிருந்தே தேர்ந்தெடுத்து நான் அனுப்புவேன். அவர்களுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன் என்று இறைவன் மோயீசனுக்குக் கூறுவதாக இணையச்சட்டத்திலிருந்து வரும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம். இறைவாக்கினர் இறைவனின் குரலாக ஒலித்து மக்களுக்கு நம்பிக்கையூட்டி நல்வழிப்படுத்துவதாக!

*இரண்டாம் வாசக முன்னுரை*:


இறைவனின் குரலைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டிய மனிதாகள் பிளவுபட்டவர்களாக இருப்பதை இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டுகிறது. ஒருபுறம் கடவுளின் குரல் மறுபுறம் உலக ஈர்ப்பு. உருவர் கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய முடியாது. எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன் என்று புனித பவுலடியாரின் தனது திருமுகத்தில் விடுக்கும் அவரின் ஆழ்ந்த அர்த்தமுள்ள அறிவுரையைக் கவனத்துடன் கேட்போம்.

*பதிலுரைப்பாடல்*


திபா 95: 1-2. 6-7. 8-9
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர். 

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி

 
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! -பல்லவி

 
அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.


*மன்றாட்டுகள்*:


1. ஞானத்தின் ஊற்றான அன்பு இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது குரலுக்குச் செவிசாய்த்துச் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி உம் மந்தையாம் இத்திருஅவையைத் திறம்பட நடத்திடத் தேவையான வரங்களை அருள் மாறிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஐயங்கள் அகற்றி எம்மை அன்புணர்வில் ஒன்றுசேர்க்கும் இறைவா! நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நம்பிக்கையின் புகலிடமே! எம் இறைவா! குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம், சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாரம் என்பதைச் சரியான கண்ணோட்டத்தில் அறிந்து அதன்படி பிறருடன் உன்னதப் பண்புடன் நடந்திட தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா! நாங்கள் வாழும் இந்த நவீன உலகில் இளைஞர்கள் சந்திக்கும் எண்ணற்றத் துன்பங்கள், சோதனைகள் அனைத்தையும் முறியடித்து, தமது வெற்றி இலக்கான இயேசுவைத் தேடிவரவும், தங்கள் பெற்றோர்களுக்கும் நற்பெயர் பெற்றுத் தரவும், தூயவாழ்வு வாழ்ந்திட அருள்வளங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
   
www.anbinmadal.org

Wednesday, January 17, 2018

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு - 21-01-2018

*பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு - 21-01-2018*


*இன்றைய வாசகங்கள்*:


யோனா  3:1-5 10
1 கொரிந்தியர் 7:29-31
மாற்கு 1:14-20
 

*திருப்பலி முன்னுரை*:


பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இறை மக்களே, உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
இன்றைய ஞாயிறு நற்செய்தி, நாம் கடவுளிடம் முழுமையாகச் சரணடையவேண்டும் என நம்மை அழைக்கிறது. "காலம் நிறைவேறிவிட்டது" - 2000 வருடங்களுக்கு முன்பு அல்ல. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது அல்ல, இப்பொழுதே உங்கள் வாழ்வில் இயேசு தேவையாக இருக்கிறார்.
"இறையாட்சி நம் கைகளில்" - கடவுளிடமிருந்து நமக்கு என்ன தேவையோ, அஃது இங்கே நம் கைகளில் தயாராக இருக்கிறது.
"மனம் மாறி , கடவுளின் நற்செய்தியை நம்புங்கள்" என்பதற்கு அர்த்தம், "என் பின்னால் வாருங்கள், என்னிடமிருந்து கற்றுக் கொண்டு, என்னைப் போல் மாறுங்கள்" என்பதாகும். முதல் சீடர்களுக்கு , உங்களிடம் உள்ளது அனைத்தையும் துறந்து விட்டு, எல்லா நேரத்திலும், இயேசுவோடு, முழு வாழ்வும் அவரோடு இணைந்து செயல்படவேண்டும்" என்று சொல்லப்பட்டது. அதையே தான் நமக்கும் இன்று நற்செய்திக் கூறுகிறது: இயேசுவின் பின் நாமும் செல்ல வேண்டும்.
இன்றைய நாகரீக உலகில், இயேசுவை விட , நவீன எலக்ட்ரானிக் கருவிகளோடு தான் நாம் அதிக நேரம் செலவிடுகிறோம், மேலும் அதையே நம்பியிருக்கிறோம். நம்மில் பலர், திருப்பலியில் கூட ஒன்றிணையாமல் தங்கள் செல்போனிலேயே கவனமாக இருக்கின்றார்கள். இன்று போல் நாளை இராது. எனவே இன்று நாம் ஞாயிறன்று, இயேசுவோடு நேரம் செலவழித்து, நம்மையே நாம் புதுப்பித்துக் கொள்ளவோம்.
இவ்வுலகிலேயே இறையரசின் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள, நாம் மனமாற்றம் அடைந்து இயேசுவைப் பின் செல்ல இத்திருப்பலியில் இறைவனிடம் ஒன்றிணைந்து மன்றாடுவோம்.


*வாசக முன்னுரை*:


*முதல் வாசக முன்னுரை*:

இன்றைய முதல் வாசகத்தில் தன் ஊழியன் யோனா மூலம் நினிவே நகரத்து மாந்தார்களுக்கு மனமாற அழைப்பு விடுக்கின்றார் கடவுள். நினிவே மக்கள் இறைவாக்கினரின் எச்சரிக்கையை ஏற்று நினிவே நகர மக்கள் சாக்கு உடையணிந்து நோன்பு இருந்ததால் கடவுள் அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார். அவர்கள் மனமாறமடைய வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். இந்த இரக்கத்தின் ஆண்டவருடைய அழைப்பைத் தரும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*:

புனித பவுலடியாரின் தனது திருமுகத்தில் பொருந்து நகரமக்களுக்கு உலகச் செல்வங்களைப் பயன்படுத்துவோர், உலகக் காரியங்களில் ஈடுபடுவோர் அவற்றில் மூழ்கிவிடாமல் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில், இப்போது இருப்பதுபோல் அது நெடுநாள் இராது என்று அறிவுறுத்துகின்றார்.  இந்த வாசகத்தின் கருத்து அன்று மட்டுமல்ல இன்று உண்மையாகவே உள்ளது. எனவே கவனத்துடன் கேட்போம் என்றும் மாறாத இறைவனின் அழைப்பை..


*பதிலுரைப்பாடல்*

திபா 25: 4-9, 6-7, 8-9
பல்லவி: ஆண்டவரே உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்; -பல்லவி

ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். -பல்லவி

ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*:

1. எம் அன்புத் தந்தையே ! எம் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது மனமாற்ற நற்செய்தியினை உணர்ந்து தங்களின் வாழ்வால் மற்றவர்களுக்கு அழைப்பின் மேன்மையை உணரச் செய்யும் இயேசுவின் சீடர்களாய் ஒளிர்ந்திடத் தேவையான வரங்களை அருள் மாறிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அரவணைக்கும் தந்தையே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் நினிவே மக்களைப் போல் மனமாறி இவ்வுலக நாட்டங்களிலிருந்தும், அழிவுகளிலிருந்தும் தங்களைக் காத்துக் கொண்டு புதுவாழ்வுப் பெற்றிட உம்மில் என்றும் ஒன்றிணைந்து வாழ்க்கை நடத்திட உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

3. கரிசனை அன்பு மிகுந்த தந்தையே! எம் இறைவா! உலகெங்கும் துன்புறும் திருஅவைக்காகவும், உம் பணியாளர்கள் படும் வேதனைகளிலும், அவர்களின் நோயிலும், அச்சுறுத்தலிலும் உடனிருந்து அவர்களைக் காத்து நலமுடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! திருஅவையின் அச்சாணிகளாய் இளைஞர்களை உருவாக்க அவர்களின் பெற்றோர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிப் பெறவும், தம் தூயவாழ்வால் இவ்வுலகம் அவர்களைத் திரும்பிப் பார்க்கின்ற இயேசுவின் சீடர்களாய் மாறிடத் தேவையான ஞானத்தையும், திறமைகளையும், மன உறுதியையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Wednesday, January 10, 2018

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு - 14-01-2018

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு  - 14-01-2018


பொங்கல் பெருவிழா

இன்றைய வாசகங்கள்:


1 சாமுவேல் 3: 3b-10, 19   ++  1 கொரிந்தியர் 6: 13-15,17-20 ++  யோவான் 1: 35-42

திருப்பலி முன்னுரை:


இன்று தமிழகத்திலும், உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர் சமுதாயங்களிலும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இயற்கை வளமும், மனித உழைப்பும் இணைந்து இறைவனின் கருணையால் நமக்குக் கிடைத்த கொடைகளுக்கு நன்றி சொல்லும் அழகானத் திருநாள் இது.

பொங்கிவரும் மகிழ்வில் நீர் தெளித்து அடக்கிவிடும் கடந்த கால நெருடல்களையும் உள்வாங்கி, நம் மனங்களில் நன்றி உணர்வும், பகிரும் உணர்வும் பொங்குவதற்கு இப்பொங்கல் திருநாளன்று இறைவன் நமக்குத் துணை செய்யவேண்டும்.

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் இயேசுவைத் தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சொல்லப்பட்டுள்ளது. சாமுவேலுக்கு இறைவன் கோவிலில் அறிமுகமாகிறார். இங்கோ, வழியோரம் இந்த அறிமுகம் நடைபெறுகிறது. கோவில்களிலும், புனிதத் தலங்களிலும் இறைவன் அறிமுகம் ஆவதை விட, சாதாரண, எளியச் சூழல்களில் அவர் அறிமுகம் ஆன நிகழ்வுகளே மனித வரலாற்றிலும், விவிலியத்திலும் அதிகம் உள்ளன என்பதை உணரலாம். வழியோரம் அறிமுகமான இயேசுவை வழியோரமாகவே விட்டுவிட்டு அந்தச் சீடர்கள் தங்கள் வழியில் செல்லவில்லை. மாறாக அவர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

நம்மிடையே உன்னதமான எண்ணங்கள், உறவுகள் வளர்ந்தால் உலகத்தை மாற்றும்  வரலாறுகள் தொடரும். உடன்பிறந்தோரும், உறவுகளும் கூடிவரும் இந்தப் பொங்கல் திருநாளில் நாம் ஒருவரை ஒருவர் இறைவனுக்கு அறிமுகம் செய்வதற்கு இறைவன் நமக்கு வழிகாட்ட வேண்டும் என்று மன்றாடுவோம். உடன்பிறந்தோரும், உறவுகளும், ஏன் இந்த உலகம் முழுவதுமே உன்னதமான வரலாறு படைக்க வேண்டும் என்றும் இந்தப் பொங்கல் திருநாள் திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


மனுக்குலத்தை மீட்க விழைந்த இறைவன் சாதாரண மனிதர்கள் வாயிலாகவே அதனை நிறைவேற்ற விழைகிறார். இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேலை இறைவன் பெயர் சொல்லி அழைக்கிறார். இறைவனின் அழைத்தலுக்குத் திறந்த மனத்துடன் தான் கீழ்படியத் தயார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக சாமுவேல் ஆண்டவரே! பேசும் உம் அடியான் கேட்கிறேன் என்று குரு ஏலியின் தூண்டுதலோடு பதில் கூறுவதைப் போலவே நாமும்  இந்த அழைப்பினை ஏற்றுக்கொள்ளும் மனதினைப் பெற்றிட இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


பாவ வாழ்வை விட்டு இறைவனை முழுமையாகப் பற்றிக் கொண்டு வாழ வேண்டும். உங்கள் உடல் தூய ஆவியின் ஆலயம் என்கிறார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல். கடவுள் நம்மை கிறிஸ்து என்னும் விலையைக் கொடுத்து மீட்டுள்ளார். நம் உடல் கிறிஸ்துவின் உறுப்பு. எனவே கிறிஸ்துவை நம் உடலின் மகிமைப்படுத்த வேண்டும் என்ற இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.

*பதிலுரைப்பாடல்*

திபா 40: 2,3. 6-7. 7b-8. 9
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.

அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக் கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கி எடுத்தார்; கற்பாறையின் மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.  புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். -பல்லவி

பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். எனவே, `இதோ வருகின்றேன்.' -பல்லவி

என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். -பல்லவி

என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! மெசியாவை, அதாவது அருள்பொழிவு பெற்றவரைக் கண்டோம். அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. அல்லேலூயா.


மன்றாட்டுகள்:


1. விண்ணையும் மண்ணையும் ஆண்டு நடத்துகிறவரே! எம் இறைவா! எம் திருஅவையில் துறவு வாழ்வுக்கும் குருத்துவ வாழ்வுக்கும் அழைக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் இடத்தில் இருந்து இறைமக்களுக்குப் போதிக்கவும், புனிதப்படுத்தவும் ஆயர்களாக இருந்து வழிநடத்தவும் அவர்களது வாழ்வாலும், வார்த்தையாலும் இறையனுபவம் பெற்று வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எல்லாம் வல்ல இறைவனே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் உமது அழைப்பின் மேன்மையை உணர்ந்துத் தங்களின் வாழ்வில் உமது குரலைக்கேட்டு உமக்குச் சாட்சிகளாக, அதன் மூலமாக மற்றவர்கள் உம்மை அறிந்து கொள்ள நேரிய வாழ்க்கை நடத்திட உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

3. எம்மை அரவணைத்து வழியில் நடத்திடும் எம் இறைவா! எம் நாட்டில் சிறுபான்மையினாகக் கருதப்படும் மக்கள் தம் விசுவாசத்தைக் கடைப்பிடிப்பதில் உள்ள பல்வேறு அச்சுறுத்தல்களையும், இடையூறுகளையும் கடந்து மதசுதந்திரத்துடனும், ஒருவரை ஒருவர் அன்பினால் பிணைத்துக் கொள்ளவும், சிறப்புடன் வாழ்ந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! திருச்சபையின் வலுவான தூண்களாக இளைஞர்களை உருவாக்கத் திருத்தந்தை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றிபெறவும், நடக்கவிருக்கும் இளைஞர்கள் அகிலஉலகப் பேரவைச் சிறப்புடன் நடைபெறவும், இளைஞர்கள் இறைஅழைப்பை ஏற்றுக் கொள்ள ஞானத்தையும், தூய ஆவியின் வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




பொங்கல் சிறப்பு திருப்பலிக்கு கீழ்கண்ட பக்கங்களையும் பார்வையிடவும்



Thursday, January 4, 2018

*ஆண்டவருடைய திருக்காட்சி - 07-01-2018*


*இன்றைய வாசகங்கள்* 


எசாயா 60: 1-6
எபே 3: 2-3அ, 5-6
மத்தேயு 2: 1-12  


*திருப்பலி முன்னுரை*


ஆண்டவரின் திருக்காட்சியைக் கண்குளிரக் கண்டு ஆராதிக்க ஆலயம் திரண்ட வந்துள்ள இறைமக்களே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
மத்தேயு நற்செய்தி மட்டும் வரும் இந்த மூவரும் கடந்த 20 நூற்றாண்டுகளாகப் பல கோடி மக்களின் மனங்களில் பல்வேறு தாக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள், முக்கியமாக, இறைவனைத் தேடும் தாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஒரு காரணம் போதும் இவர்களுக்கு விழா எடுப்பதற்கு...
இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். யாருக்கும் தனிப்பட்ட வகையில் அவர் சொத்தாக முடியாது. உண்மையில் பார்க்கப்போனால், இந்த உலகமே அவரது சொத்து. இப்படியிருக்க, இந்த இறைவனைப் பங்குப் போட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா இந்தத் திருக்காட்சித் திருநாள்.
உண்மையான தாகத்துடன் தன்னைத் தேடும் அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்தும் அழகுள்ளவர் நம் இறைவன். அவர் எப்போதும் எங்கும் நம்மைச் சூழ்ந்தே இருக்கிறார். அவரைக் காண நாம் மறுத்து, அகக் கண்களை மூடிக் கொள்வதாலேயே, அவர் தூரமாய் இருப்பதைப் போல் உணர்கிறோம்.
இதயத்தின் கண்களைத் திறந்துப் பார்த்தால், இந்த உலகில் பல அதிசயங்களைப் பார்க்கலாம். அந்த அதிசயங்களின் ஊற்றான இறைவனையும் பார்க்கலாம்.
தடைகள் பல எழுந்தாலும், தளராமல் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண்பதற்கு இப்புத்தாண்டின் துவக்கத்தில் நமக்கும் மனறுதியைத் தந்து, இறைவன் வழி நடத்த இன்றைய திருப்பலியில் வேண்டுவோம்..


*வாசக முன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*


மீட்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்குக் கடவுள் தமது எளிமைக் கோலத்தை மறைத்து மாட்சிமையை வெளிப்படுத்துகிறார். வானில் தோன்றிய விண்மீனும், மூன்று ஞானிகளும், அவர்கள் கொண்டு வந்த காணிக்கைகளும் இறைமாட்சிமையின் அடையாளங்கள் தான். ஆண்டவரின் மாட்சிமை உன் மேல் உதித்துள்ளது என்ற எசாயாவின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*


மீட்பு என்பது யூத இனத்தார்க்கு மட்டும் உரியத் தனியுரிமை அல்ல. அது எல்லா இனத்தார்க்கும் உரியது என்பதைத் திருக்காட்சிப் பெருவிழா உணர்ர்கிறது. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், புற இனத்தவரும் இறைமக்களோடு சேர்ந்து ஒரே உரிமைப்பேற்றுக்கு உரியவர்கள் என்கிறார் புனித பவுல். பிற இனத்தார் உன் ஒளியை நோக்கி வருவார்கள், மக்களினத்தார் அனைவரும் அவரை வணங்குவர் என்ற கருத்துகளை எதிர் ஒலிக்கும் பவுலடிகளாரின் இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.


*பதிலுரைப்பாடல்*


பல்லவி:
ஆணடவரே! எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல் 72: 1-2,7-8,10-11,12-13.


கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.  அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!  *பல்லவி*
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.  ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.  *பல்லவி*

தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.  எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.  *பல்லவி*

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.  வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். * பல்லவி*




*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா! *ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம்.* அல்லேலூயா


*மன்றாட்டுகள்*

 

1.எம் மாட்சிமையை எம்மேல் உதிக்கச் செய்த எம் இறைவா! எமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் துறவியர்கள் பொதுநிலையினர் அனைவரும் உமது மாட்சிமை மிக்கத் திருக்காட்சியின் அடையாளங்களைக் கண்டுணர்ந்துத் தங்களின் நற்செயல்களாலும், நன்னடத்தையாலும் பிறர் முன் இயேசுவின் சாட்சிகளாகத் திகழும் வீண்மீனாக வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.உம்மைத் தேடியவர்களுக்கு உம்மை வெளிப்படுத்திய எம் இறைவா! எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் உம்மைத் தேடிக் கண்டடையவும், எமது வாழ்வு நடத்தை, செயல்கள், பேச்சு, உடைநடை பாவனை எல்லாம் உலகமாந்தர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் மாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

3. எங்களை நேரிய வழியில் நடத்திடும் எம் இறைவா! செய்ய முடியாதவைகளைச் செய்வேன் எனக் கூறிவிட்டுப் பின்புக் கடைப்பிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்ற எம் அரசியல் தலைவர்கள் தங்கள் நிலையை உணர்ந்துச் சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமை இல்லாத செயல்பாடுகளின் வழியாய் மக்களுக்கு நல் வாழ்வு வழங்கிடத் தேவையான ஞானத்தை அவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.