Monday, March 26, 2018

புனித வார நிகழ்வுகள்




புனித வார நிகழ்வுகள்

  புனித வார நிகழ்வுகள்

புனித வியாழன் 










புனித சனி 

இரவு திருவிழிப்பு ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா


 

அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா  நல் வாழ்த்துக்கள்

இறை இயேசுவின் அமைதி உங்கள் இல்லத்திலும், உங்கள் உள்ளங்களிலும்  என்றும் இருப்பதாக!

அன்பின் மடல் -நவராஜன். 

 

Wednesday, March 21, 2018

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு


 குருத்து ஞாயிறு



அன்பு இறைமக்களே!

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறுக்கான
அனைத்தும்
கொடுக்கப்பட்டுள்ளது.



Wednesday, March 14, 2018

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு - 18-03-2018


*இன்றைய வாசகங்கள்*:


எரேமியா 31: 31-34
எபேசியர் 5: 7-9
யோவான் 12: 20-33


*திருப்பலி முன்னுரை*:


அன்பார்ந்த இறைமக்களே!

தவக்காலத்தின் இறுதி வாரத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். அடுத்த ஞாயிறு குருத்து ஞாயிறு. அதைத் தொடர்ந்து பாடுகளின் வாரம். தவக்காலத்தின் இந்த இறுதி ஞாயிறன்று வசந்த காலத்தை நமக்கு நினைவுறுத்தும் அழகான ஒரு கூற்றை இறைமகன் இயேசு நமக்கு முன் வைக்கிறார். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தாவர உலகம் மீண்டும் உயிர்பெற்று எழும் வசந்தக் காலத்தில் இயேசுவின் இந்தக் கூற்று பல எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கின்றது. விதைக்கப்பட்ட இந்த எண்ணங்கள் மிகுந்த விளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்பது நம் எண்ணம், நம் வேண்டுதல்.
இதுவரை தன் நேரம் இன்னும் வரவில்லை என்று உணர்ந்திருந்த இயேசு, இன்று தன் நேரம் வந்துவிட்டது என்று சொல்கிறார். எதற்கான நேரம் இது? மானிட மகன் மாட்சி பெறும் நேரம்... உணவாக மாறி மற்றவரை வாழ்விப்பதும், விதையாக மாறி தன் இனத்தைப் பெருக்குவதும் கோதுமை மணிக்கு மட்டுமல்ல, உலகில் படைக்கப்பட்ட அனைத்து தானிய மணிகளுக்கும் உள்ள இயல்பான இரண்டு காரணங்கள். இயேசுவும் தான் மரித்து மண்ணில் புதைக்கப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து இந்த மானிடம் மீட்பு பெற வேண்டும் என்று விரும்பியதால் தான் நேரம் வந்துவிட்டது என்று கூறுகிறார்.
ஆம் அன்பர்களே, நாமும் இயேசு என்னும் நிலத்தில் புதைக்கப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்று பலன் தரும் கோதுமை மணியாக மாறிட நேரம் விந்து விட்டது என்று இயேசு அழைப்பது நாம் காதுகளிலும் ஒலிக்கின்றது அல்லவா? கோதுமை மணி தன் சுய உருவை, உயிரை இழந்தது போல் நாமும் சுயநலம் இழந்து பிறருக்கு பலன் தரும் மானிடராக இவ்வுலகில் வலம் வர தந்தையாம் இறைவனிடம் இறைஞ்சுவோம். வாரீர்.

*முதல் வாசக முன்னுரை*:


இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் புதியதோர் உடன்படிக்கையைச் செய்யப் போவதாக இறைவாக்கினர் எரேமியா வாயிலாக வாக்களிக்கின்றார்.  அனைவரையும் ஈர்க்க ஓர் உடன்படிக்கை. மனிதனின் இதயப் பலகையில் எழுதப்படும். அதன் முக்கிய சிறப்பு இனி இறைவாக்கினர் வழியாக அல்ல இறைவனே முன் வந்து போதிப்பார். இன்னொரு சிறப்பு மக்கள் கடவுளை முழுமையாக அறிந்து கொள்வார்கள். ‘நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்’. இந்த நெருக்கமான நேரடி உறவை எடுத்துக்கூறும் இறைவாக்கினர் எரேமியாவின் வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம். 


*இரண்டாம் வாசக முன்னுரை*:


அனைவரையும் ஈர்க்க ஒரு சிலுவைப்பலி! மன்னுயிரை மீட்பதற்காகச் சிலுவைச் சாவை ஏற்க முன் வந்தவர் தான் கிறிஸ்து இயேசு. மண்ணக மாந்தர் வாழ்வு பெற கோதுமை மணியென மண்ணிலே புதைக்கப்பட்டுத் துன்பங்கள் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்று, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவருக்கும் முடிவில்லா மீட்பிற்கு காரணமானவர் கிறிஸ்து என்று இறையச்சத்தையும் கீழ்படிதலையும் எடுத்துரைக்கும் பவுலடிகளாரின் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்*

திபா 51: 1-2. 10-11. 12-13
பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.

கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்


`எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்,' என்கிறார் ஆண்டவர்.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. அன்பும் அருளும் உள்ளவரே! எம் இறைவா! திருஅவை உள்ள அனைவரும் ஓப்புறவு அருட்சாதனத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கின்ற தவறான கண்ணோட்டங்களைக் களைந்து, நல்ல ஒப்புறவு அருட்சாதனத்தில் பங்குகொண்டு இத்தவக்கால பலன்களை முழுமையாக அனுபவிக்கவும், இயேசுவின் உயிர்ப்பில் இணைந்திட வேண்டிய உறுதியான மனநிலையையும், உயிருள்ள ஆலயமாகிய உமது உடலை உட்கொள்ளும் நாங்கள் உம்மீது ஆழ்ந்த அன்பும், நம்பிக்கை கொள்ளவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! எமது நாட்டு அரசியல் தலைவர்களுக்காக வேண்டுகிறோம். அவர்கள் மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி, அனைவரும் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை கண்டடைய செய்திடவும், சமுக உறவில் ஒன்றுபட்டு வாழ வழிவகை செய்திடவும், நாட்டிற்கும் உலகிற்கும் பயன் உள்ளவர்களாக வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


3. அனைவருக்கும் நன்மை செய்யும் ஆண்டவரே! எம் இறைவா! நான் மட்டும் பகிர்வதால் என்ன செய்ய முடியும் என்ற எதிர்மறை எண்ணங்களிலிருந்து எம்மை விடுவித்து பகிர்வு மனப்பான்மை வளரவும், உம் திருமகன் இயேசுவைப்போல் பகிர்ந்துண்டு வாழும் அவரின் சிறந்த சீடர்களாக எம் அயலாருடன் இணைந்து வாழ்ந்திடவும்,ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோருக்கு உமது பரிவிரக்கத்தை பகிர்ந்தளிக்கும் அன்பு கருவியாக நாங்கள் வாழ வரம் வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.


4. எங்கள் அன்பு தந்தையே இறைவா! எமது பிள்ளைகள் தங்களின் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழாமல் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்து புதிய மனிதருக்குரிய இயல்புகளை அணிந்து தூய்மையான புதியப் படைப்பாய் மாறிடவும், கோதுமைமணிபோல் ஒன்றுக்கு நூறு மடங்காய் பலனளிக்கும் சீடராய் வாழ  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org

Thursday, March 8, 2018

தவக்காலம் நான்காம் ஞாயிறு - 11-03-2018


*இன்றைய வாசகங்கள்*:


*திருப்பலி முன்னுரை*: 

 


அன்பார்ந்த இறைமக்களே!
தவக்காலத்தின் உயிர் நாடியாக விளங்கும் கருத்து, மாற்றம்தானே! வெளிப்புற மாற்றம் அல்ல, உள்ளார்ந்த மாற்றம். மனமாற்றம், அதன் விளைவாக உருவாகும் வாழ்வு மாற்றம். இதனைப் பெற்றுக்கொள்ளவே நாம் இன்று ஆலயத்தில் கூடியுள்ளோம்.
இன்றைய நற்செய்தியில், இயேசு தன் வருகை "உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல" என்று நமக்கு நினைவுறுத்துகிறார். உண்மைக்கேற்ப வாழும் போது, நாம் ஒளியிடம் வருகிறோம். நமது பாவங்களால், நாம் குற்ற உணர்வுக் குறைந்து, சுயக் கெளரவம் அதிகமாகி , பாவசங்கீர்த்தனம் செய்வது செல்வதில்லை நாம். குற்ற உணர்வு, நாம் மனம் திரும்பி, மாற்றம் அடைவதற்குப் பெரிய தூண்டுதலாக இருக்கும். நாம் நமது பாவங்களை நினைத்து அவமானம் அடைகிறோம், அதனால், நமது பாவங்கள வெளியே தெரிந்துவிடும் என நாம் பயப்படுகிறோம்.
எனினும், இயேசு, நம் சுயகெளரவத்தையும், நமது பயத்தையும், போக்க நாம் அனுமதித்தால், இயேசு அதனையெல்லாம் போக்கி மகிழ்ச்சித் தருவார். குருவானவர் மூலமாக இயேசு நம்மிடையே பேசி, மன்னிப்பையும், இரக்கத்தையும், நிபந்தனையற்ற அன்பையும் நமக்கு வழங்குகிறார். இன்றைய நற்செய்தியில்,இயேசு "உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்."என்றும், அவர்மீது நம்பிக்கைக் கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை" என்றும் நினைவூட்டுகிறார்.
நாம் நமது குற்றங்களை ஒத்துக் கொள்ளும்போது, கிறிஸ்துவின் பணியாளிடம் (குருவிடம்) சொல்லும்போது, நாம் இயேசுவினால் காப்பாற்றப்படுகிறோம். குருவின் குரல் மூலம், இயேசு நம்மிடம் பேசுவதைக் கேட்கிறோம். மேலும் பாவங்களைச் செய்யாமல் இருக்க இயேசுவிடமிருந்து, ஆற்றலைப் பெறுகிறோம். இருளிலேயே ஏன் இன்னும் துன்புற்று இருக்க வேண்டும்? இயேசு நம்மை மீட்க வந்துள்ளார்! என்பதை உணர்ந்து முழுமனமாற்றத்தைப் பெற இறைவனை இறைஞ்சுவோம்.

வாசக முன்னுரை:


*முதல் வாசக முன்னுரை*:


கடவுள் தம் மக்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. கடவுளைக் கைவிட்ட இஸ்ரயேல் மக்கள் பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த இக்கட்டான காலத்திலும், கடவுள் பிற இன மன்னர் வழியாக அவர்களுக்கு விடுதலையை அளிக்கிறார். அவர்கள் திரும்பவும் தங்கள் தாயகமாகிய எருசலேம் செல்ல மன்னர் அனுமதிக்கிறார். கல்தேயரின் மன்னன் வழியாக கோயிலை எரித்த கடவுள், பாரசீக மன்னன் சைரசு வழியாக அதைக் கட்டியெழுப்ப ஏற்பாடு செய்தார். கடவுள் தன் மக்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்று உரைக்கும் முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம். 


*இரண்டாம் வாசக முன்னுரை*:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபேசியர்களுக்குப் புனித பவுல் எழுதிய கடிதத்தில் கடவுளுடைய அன்பும், தாராள மனப்பான்மையும், மிகுந்த இரக்கத்தையும் நமக்கு எடுத்துரைக்கிறது. மிகுந்த இரக்கமுடைய கடவுள் நம்மீது அன்புக் கொண்டதால் நாம் மீட்கப்பட்டோம். நாம் கடவுளின் கலைப்படைப்பு. நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம். முற்றிலும் கடவுளுடைய ஒப்புயர்வற்ற அன்பின் கொடைகள் இவைகள்! என்று உரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்*

திருப்பாடல் 137:1-2, 3, 4-5, 6.

பல்லவி: 'உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!"

பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். அங்கிருந்த அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். -பல்லவி

ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். ' சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்' என்றனர். -பல்லவி

ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம்; பாடுவோம்? எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! -பல்லவி

உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக! -பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்:


"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்".

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. நாங்கள் நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை இன்றைய வாசகங்கள் மூலம் உணர்த்திய அன்பும் அருளும் மிக்க எம் இறைவா! திருஅவை உள்ள அனைவரும் இத்தவக்காலத்திலும் அதன் பின்பும் நாளுக்கு நாள் நற்செயல்கள் புரிவதில் வளர அன்பையும் அருளையும் நிறைவாய் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உமது மகன் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வுப் பெறுவர் என்ற வாக்களித்த எம் இறைவா! எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம் வாழ்வு ஏற்றம் பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும், அடுத்திருக்கும் எம் மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பராமரித்தாளும் எங்கள் இறைவா! இன்றைய உலகில் துன்புறும் திருஅவைக்காக உமது இரக்கத்தையும் பாதுகாப்பையும் வேண்டுகிறோம். சிறப்பாகச் சிரியாவிலும், மற்ற நாடுகளிலும் ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டும், கொடுமைப்படுத்தப் பட்டுவரும் உம் எளிய மக்கள் விரைவில் விடுதலைப் பெற்று புதிய புனர்வாழ்வுப் பெற்றிடத் தேவையான மாற்றங்களை அவர்கள் பெற உமது அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம் முன்னோருக்கு வழிகாட்டி நடத்திய தெய்வமே! எம் இறைவா! கல்வியாண்டு இறுதிதேர்வை எழுதி வரும் எம் அன்பு பிள்ளைகளுக்காக உம்மிடம் வேண்டுகிறோம். படிப்பதற்கு நல்வழிகாட்டி, அவற்றை மறக்காமல் சரியான விடைகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, சமூகத்தில் உயர் நிலைக்கு வர தேவையான ஞானத்தையும், உம்மில் நம்பிக்கைப் பெற்றவும் உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..