Thursday, May 31, 2018

கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழா

கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழா 



*இன்றைய வாசகங்கள்*

 

விடுதலைப்பயணம் 24:3-8;
எபிரேயர் 9:11-15;
மாற்கு 14:12-16, 22-26



திருப்பலி முன்னுரை:


 இன்று திருச்சபைக் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாட அன்புடன் அழைத்து வந்துள்ளது.  நமக்கு இயேசு கிறிஸ்து வழங்கியுள்ள அன்புக்கொடை தான் அவரது திருவுடலும், இரத்தமும் என்பதை உணர்ந்து இத்திருப்பலியில் பங்கேற்போம்.

அன்பைப் பல ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது, நாம் அன்புக் கொண்டவருடன் தங்கி இருப்பது. பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே அன்பு. இந்த முழுமையான பிரசன்னம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் உச்சம்.

எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது நம் உடலோடு கலந்து ஒன்றாகிவிடும். நம் இரத்தமாக, தசையாக, எலும்பாக,  நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படைக் குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை உணர்ந்திடுவோம். இந்த எளிய உணவில், நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவில் இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை.

உறவுகளின் உச்சக்கட்ட, இறுதிக்கட்ட வெளிப்பாடே இயேசு தனது உடலையும் , இரத்தத்தையும் நமக்கும் கொடுத்தது. வாழ்வின் உணவை, ஒன்றிப்பின் உணவை உண்டு  கிறிஸ்துவின் வாழ்வோடு ஒன்றித்திருப்போம். இதற்காக இன்றைய இப்பெருவிழாத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.



 

வாசக முன்னுரை:



முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் தம் ஊழியன் மோசே வழியாக  மிருகங்களின் இரத்தத்தைக் கொண்டு செய்த உடன்படிக்கையை விவரிக்கிறது. ஆனால் காலப்போக்கில் அவர்கள் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்து பிறஇனத் தெய்வங்களை வழிபட்டு உடன்படிக்கையின் அன்பை முறித்தனர். எனினும் இறைவன் இறைவாக்கினர்  எரேமியா வழியாக புதியதோர் உடன்படிக்கையை முன் அறிவித்தார்.  இந்த புதிய உடன்படிக்கையின் இணைப்பாளர்  இயேசுவிறிஸ்துவே என்பதை உணர்ந்து விடுதலைநூலிலிருந்து வாசிக்கப்படுவதைக் கேட்போம்.



இரண்டாம் வாசக முன்னுரை:


இரண்டாம் வாசகத்தில் மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நடக்கும் இறைவழிபாட்டிற்கு கிறிஸ்துவே தலைமைக் குரு. அவர் திருப்பலி செய்யும் கூடாரம் பெரியது. நிறைவு மிக்கது. அவர் பலியாகப் படைத்த இரத்தம் அவரது சொந்த இரத்தமே. அவரது தூய இரத்தத்தையே ஒரே ஒரு முறை சிந்தி மானிடரை மீட்டார் கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றபப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது என்று உரைக்கும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 116: 12-13. 15-16. 17-18

பல்லவி: மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவர் பெயரைத் தொழுதிடுவேன்.

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். -பல்லவி

ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். -பல்லவி

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்



1. அன்புத் தந்தையே எம் இறைவா,  உம் இறைஇரக்கத்தின் உடனிருப்பு முன்பு, உம் சீடர்களோடு இருந்ததுபோல இன்று எம் திருஅவையில் உமது ஆற்றலினால் உத்வேகத்தோடு தங்கள் வாழ்வால் திருத்தந்தை முதல் கடைநிலை பொதுநிலையினர் வரை அனைவரும் நற்செய்தியின் தூதுவர்களாக திருஅவையை வழி நடத்த வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமை படைத்துப் பராமரித்து ஆளும் எம் இறைவா! எமது நாட்டு அரசியல் பல நிலைகளில் பிளவுபட்டும், ஒருவர் மற்றவரைக் குறை கூறியும் வாழும் போக்கினை நன்கு அறிவீர். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற உமது தாக்கம் எம் நாட்டு தலைவர்களிடையே மேலோங்கி நீவீர் விரும்பும் இறையரசு மலர்ந்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3. இன்றைய உலகலாவிய புவியின் வெப்பமையமாதல் பல்வேறு இயற்கை மாற்றங்களால் மனித வாழ்வில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் என அனைத்து நிலையினருக்கு ஏற்படும் நோய்களிலிருந்து நாங்கள் முற்றிலுமாக விடுபட நாங்கள் இயற்கைக்கு எதிராக செய்த தவற்றை நினையாது, இரக்கத்தின் ஆற்றலை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உலகின் ஒளியே இறைவா! உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கின்றவர் நீரே. எங்கள் இதயங்களையும் ஒளிர்வித்தருளும். உமது வார்த்தையாலும் உணவாலும் ஊட்டம் பெற்ற நாங்கள் எப்பொழுதும் உமக்கு உகந்தவற்றையே நாடவும், பிறரை நேர்மையான உள்ளத்தோடு அன்பு செய்து வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. கொடைகளின் ஊற்றான இறைவா! இப்புதிய கல்வியாண்டில் முதல் முறையாகப் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் சிறார் முதல் தங்கள் இறுதிப் படிப்பை முடிக்க உள்ள எம் இளையோர் வரையுள்ள அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்களுக்கு நல்ல ஞானத்தையும், ஞாபக சக்தியையும், இறையச்சத்தையும் அளித்து, சிறந்த படைப்பாக இவ்வுலகில் வலம் வர உம் அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


                                          www.anbinmadal.org

Wednesday, May 23, 2018

மூவொரு இறைவன் திருவிழா

மூவொரு இறைவன் திருவிழா


இன்றைய வாசகங்கள் :


இணைச்சட்டம் 4: 32-34, 39-40
உரோமையர் 8: 14-17
மத்தேயு 28: 16-20

திருப்பலி முன்னுரை:


இன்று மனித அறிவுக்கு எட்டாத மறை உண்மையாம் மூவொரு கடவுள் என்ற பேருண்மையை ஊய்த்துணர நம் திருஅவை மூவொரு கடவுள் பெருவிழாவைக் கொண்டாட நம்மை அழைத்துள்ளது.

மூவொரு இறைவன் என்ற பெருங்கடலில், ஒரு குழந்தையின் குதூகலத்துடன் குளித்து மகிழ்வதற்குப் பதில், அக்கடலைத் தன் சிந்தனைக் குழிக்குள் சிறைப்படுத்த முயன்ற புனித அகுஸ்தின் பற்றிய கதை நமக்கு நினைவிருக்கலாம்.

நம் இறைவன், தனிமையில், தானாய் உறைந்திருக்கும் ஒருவராக அல்ல, மாறாக, மூவராக உறவுகொண்டிருப்பவர் என்ற பாடத்தை நமக்குச் சொல்லித் தந்தவர், இயேசு. அவர் இவ்விதம் இறைவனை அறிமுகம் செய்தது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரைக் கோபத்தில் ஆழ்த்தியது. தனித்திருக்கும் கடவுளை ஒரு கூட்டு உறவாய், குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு.

இயேசு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவனின் இலக்கணமே உறவு தான். நம் இறைவன் உறவுகளின் ஊற்று. அப்படி இருக்க உறவுகளுக்கு நம் வாழ்வில் முதன்மையான இடத்தைத் தந்திருக்கிறோமா என்பதை ஆராய்ந்துப் பார்க்க இன்று நாம் கொண்டாடும் மூவொரு இறைவன் பெருவிழா நல்லதொரு தருணம்.

உறவுகளை வளர்ப்பதைவிட, மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை, உறவுகளின் ஊற்றாய் விளங்கும் மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்று இன்றைய திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:



முதல் வாசக முன்னுரை:


உலகில் மானிடனைப் படைத்த நாள்முதல் தேனும் பாலும் ஓடிய கானான் நாட்டிற்கு இஸ்ரயேல் மக்கள் வரும் வரை அவர்களை வழி நடத்திய ஆண்டவரே கடவுள். அவரைத் தவிர வேறு எவரும் இலர் என மனதில் இருத்தி நாமும் நமது தலைமுறைகளும் இறைவன் காட்டும் வழியில் நடக்கும்போது, அவரது ஆசீரால் நிறைவோம் என்பதை மோசே இன்றைய முதல் வாசகமான இணையச்சட்ட நூலில் கூறுகிறார். மோசே தரும் ஆசி மொழிகளுடன் வரும் இவ்வாசகத்தை நம் சிந்தனைகளில் பதிவுச் செய்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். கடவுளை அப்பா, தந்தை என்று அழைக்கும்போது நம்முடன் இணைந்து நாம் கடவுளின் பிள்ளைகள் என்று சாட்சி பகர்கிறார். இவ்வாறு இயேசுவின் பங்காளிகளான நாம் அவரோடு துன்பத்தில் பங்கு பெறும்போது அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம் என்பதை எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுலடியாரின் வார்த்தைகளை கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்:

திபா 33: 4-5. 6,9. 18-19. 20,22
பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி

ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான் கோள்கள் எல்லாம் உருவாயின. அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது. -பல்லவி

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி

நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா. 


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா! திருஅவையின் திருத்தந்தை முதல் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் மூவொரு கடவுளைப் போன்று ஒற்றுமையின் அடையாளமாகவும், சமத்துவத்தின் சங்கம்மாகவும் ஒருங்கிணைந்த செயல்பாட வேண்டிய ஞானத்தையும் புரிதலையும் பெற்றுத் திருஅவைச் சிறப்புடன் திகழத் தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2.அருளிலும், அன்பிலும், நட்புறவிலும் ஒன்றிணைந்திருக்கும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இறையருளின் துணையோடு இறையனுபவத்தைப் பெற்றிட, உம்மைப் போல் ஒன்றாய் ஒற்றுமையுடன் வாழவும், உண்மையான கிறிஸ்தவராக எப்போதும் கடவுளோடும், பிறரோடும், உறவோடு வாழ எமக்குத் தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.கருணைக் கடலே எம் இறைவா! நாட்டை ஆளும் தலைவர்கள் அவரவர் இடத்தைப் பற்றிக் கொள்ள சுயநலத்தை நிலை நாட்டிக் கொள்ளாமல் உம் மக்களின் தேவைகளை உணர்ந்துப் பணிச் செய்யும் உத்வேகத்தை எம் நாட்டுத் தலைவர்களுக்கு வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

4.மனிதன் பாங்குடன் வாழ இயற்தையைப் படைத்து ஆளும் எம் இறைவா! எங்கு நோக்கினும் இயற்கையை அழித்து மனிதனுக்குத் தேவையான காற்று நீர், நிலம், ஆகாயம், பூமி ஆகியவற்றை வீணடிக்கும் வீணர்களிடமிருந்து காத்திடவும், மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதரங்கள் காக்கப்படவும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

5.உறவுகளின் ஊற்றான இறைவன்! இப்புதிய கல்வியாண்டில் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் எம் இளையோர் அனைவரையும் புதுப்படைப்பாய் மாற்றி, தங்கள் பெற்றோர்களின் துயரங்களை உணர்ந்துப் படிப்பிலும், நல்லெழுக்கத்திலும் சிறந்து விளங்க ஞானத்தையும் புத்தியையும் அன்பையும் அவர்களுக்கு வழங்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



www.anbinmadal.org

Tuesday, May 15, 2018

தூய ஆவியார் பெருவிழா

*தூய ஆவியார் பெருவிழா  - 20-05-2018*

 

 *இன்றைய வாசகங்கள்*:


திருத்தூதர் பணிகள் 2: 1-11


*திருப்பலி முன்னுரை*:


இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே!
உயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று தூய ஆவியாரின் பெருவிழா. இப்பெருவிழாவை, ‘பெந்தக்கோஸ்து’ என்று அழைக்கிறோம். ‘பெந்தக்கோஸ்து’ என்ற சொல்லுக்கு, ‘ஐம்பதாம் நாள்’ என்று பொருள்.

இன்றைய வழிபாடு நமக்கு உணர்த்தும் செய்தி கிறிஸ்துவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு சோர்வுற்றிருந்த சீடர்களுக்கு "அஞ்சாதீர்கள். உங்களுக்குத் துணையாளரை அனுப்புகிறேன். அவர் உங்களை உண்மையின் வழியில் வழி நடத்துவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது" என்பதே ! தூய ஆவியாரை நம்மில் பொழிந்து, அருளடையாளங்கள் நிறைவு செய்யப்பட்டு, இயங்குகின்றோம்.

தூய ஆவியார் துணையால் துணிவுடன் ஏழுச்சிப் பெற்றனர் சோர்ந்திருந்த திருத்தூதர்கள். தூய ஆவியார் ஒருவரே! செயல்பாடுகள் பல வகையுண்டு!
கடவுள் ஒருவரே! இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை ஆழப்படுத்தி மானிடரை அன்புறவில் வாழ்ந்து வளர்ந்து ஒருவரை ஒருவர் அன்பு
செய்து இறையனுபவத்தில் ஊன்றிட இன்றைய தூய ஆவியாரின் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

தூய ஆவியாரின் பெருவிழா வெறும் ஒருநாள் கொண்டாட்டமாக இல்லாமல், நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் ஓர் ஆழ்ந்த அனுபவமாக மாறுவதற்கு அந்த ஆவியாரின் கொடைகளை, கனிகளை நாம் பெற இன்றைய திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.


*வாசக முன்னுரை*

 

*முதல் வாசக முன்னுரை*:


நம் இதயங்கள் இணைந்து பேசுவது இறைவனின் அருஞ்செயல்கள் என்றால், அங்கு மொழியே தேவையில்லை! இதனை உணர்த்தும் இன்றைய முதல் வாசகத்தில்  தூயஆவியாரின் வருகை சீடர்கள் மீதும், அன்னை மரியாள் மீது பொழியப்பட்டு அனைவரையும் அக்னி நாக்குவடிவில் ஆவியர் இறங்கி பலரும் பல மொழிகளில் பேசியதையும் வந்தவர்கள் அவரவர்கள் மொழியில் கேட்டுப் பரவசம் அடைந்ததையும் தங்கள் சொந்த மொழியில் பேசியதை கேட்டு வியந்ததைக் குறித்துத் திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசிக்கக் கேட்போம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*:

தூய ஆவியாரால் மனித குலம் ஆட்கொள்ளப்பட்டால், அங்கு உருவாகும் அழகிய வாழ்வைத் திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் விவரிக்கிறார். தூய ஆவியாரின் பெருவிழா வெறும் ஒருநாள் கொண்டாட்டமாக இல்லாமல், நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் ஓர் ஆழ்ந்த அனுபவமாக மாறுவதற்கு அந்த ஆவியாரின் கொடைகளை, கனிகளை நாம் பெற வேண்டும். இந்த எண்ணங்களைக் கூறும் பவுல் அடியாரின் சொற்களோடு நம் சிந்தனைகளை இன்றைய இரண்டாம் வாசகத்தை நம் உள்ளங்களில் பதிவு செய்வோம்.

*பதிலுரைப் பாடல்*

திபா 104: 1,24 29-30. 31,34
*பல்லவி*: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. -*பல்லவி*

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -*பல்லவி*

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். -*பல்லவி*



****தொடர் பாடல்* பாடல் இசையுடன்********

 

தொடர் பாடல்

தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், இதய ஒளியே, வந்தருள்வீர்.
உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே.
உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை, நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர், காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர், குளிரானதைக் குளிர் போக்கிடுவீர், தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர், இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், அழிவிலா இன்பம் அருள்வீரே.


*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! *தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும்.* அல்லேலூயா.

*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*


1.திருஅவைக்காக…
துணையாளரை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று மொழிந்த எம் இயேசுவே உமது இறையரசை கட்டி எழுப்பும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள, குருக்கள், இருப்பதால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் தாம் பெற்றுக் கொண்ட தூஆவியாரின் ஆற்றலுக்கேற்ப ஒரே சமத்துவ சமுதாயம் படைத்திட போதுமான தூயஆவியாரின் அருள்வரங்களை பொழிந்து வழிநடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

2. நாட்டிற்காக…
எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக என்று மொழிந்த இயேசுவே எமது நாட்டுத் தலைவர்கள் சாதி - சமயம் - இனம் - மொழி கடந்து செயலாற்றவும், இறையரசை மண்ணக மாந்தர்கள் சுவைக்கும் வாய்ப்பை தலைவர்கள் வாயிலாக வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3.அமைதிக்காக…
கருணை கடலே எம் இறைவா! எங்கு நோக்கினும் ஒரே குண்டு வெடிப்புகளும் - போரட்டங்களும், நிலநடுக்கங்களும் - வன்கொடுமைகள் - பாலியல் போன்ற கொடுமைகளால் பாதிக்கப்படும் உம் மக்களை உமது பாதம் அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்கு துணையாளரின் வழி நடத்துதல் தொடர்ந்து கிடைத்திட, வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

4.மாணவ செல்வங்களுக்காக…
வெற்றி வேந்தனே எம்இறைவா! தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களை கிடைக்கப் பெற்று அதில் சாதனைப் படைத்திட துணையாரின் துணை வேண்டியும், அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டியும் இறைவா உமை மன்றாடுகின்றோம்.

5.முதியோருக்காக…
விண்ணும் மண்ணும் அழிந்து போகும் என் வார்த்தைகள் ஒருபோதும் அழியாது என்று இயம்பிய எம் இறைவா! முதியோர்களை உமது வார்த்தையால் வளமை படுத்தி சோர்ந்துபோகும் தருவாயில் உமது வாக்கு அவர்களுக்கு பாதுகாப்பாய் அமைந்திடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

Thursday, May 10, 2018

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 13/05/2018 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 1: 1-11
எபிரேயர் 4: 1-13
மாற்கு 16 :15-20


திருப்பலி முன்னுரை:


குருவாகிய கிறிஸ்துவும், அவரது சீடர்களும் இணைந்து உருவாக்கிய 'நற்செய்தி' என்ற அற்புதப் படைப்பைச் சிந்திக்க இஞ்ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று, இயேசுவின் விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். அதே வேளையில், இயேசுவின் பணியை இவ்வுலகில் தொடர்ந்து நிறைவேற்றிய சீடர்களின் அர்ப்பணத்தையும், அயரா உழைப்பையும், துணிவையும் இந்நாளில் கொண்டாடுகிறோம்.

விண்ணகம் எழுந்து செல்வதற்கு முன் இயேசு கிறிஸ்து அவரது சீடர்களுக்கும், உலக மக்களுக்கும் ஓர் அருமையான இரகசியத்தை வெளிப்படுத்திச் சென்றார். அது என்ன இரகசியம்? நம்பிக்கைக்கொள்வோர் மீட்பு பெறுவர் என்பது தான் அது. ஆம். உலகத்தை எல்லாத் துன்பத் துயரங்களிலிருந்தும் விடுவித்து அதற்கு மீட்பளிக்கும் ஆற்றல் நம்பிக்கைக்கு உண்டு!

'நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்று இயேசு கூறியபோது, அந்தக் குழுவில் இருந்தவர்கள் யாரும் அருள்பணியாளரோ, துறவியோ அல்ல. அவர்கள் அனைவரும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரணத் தொழிலாளிகள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், நாம் அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம்.

வார்த்தைகளை அதிகம் கூறாமல், நற்செய்தியை வாழ்ந்து காட்டிய அசிசி நகர் புனித பிரான்சிஸ், மருத்துவர் ஆல்பெர்ட் ஆல்பர்ட் ஸ்க்வேட்ஸர், புனித அன்னை தெரேசா என்று பல்லாயிரம் உன்னதப் பணியாளர்களின் வாழ்வால் நற்செய்தி இன்றும் நம்மிடையே வாழ்கிறது என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

தூய ஆவியாரின் துணையோடு நம்பிக்கையை, அதாவது கடவுளின் வல்லமையால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற எண்ணத்தை நமது இல்லத்திற்குள்ளும். உள்ளத்திற்குள்ளும், ஆழ்மனத்திற்குள்ளும் ஊற்றிக்கொள்வோம்!

வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:

இயேசு துன்புற்று இறந்தபின் நாற்பது நாட்களாக சீடர்களுக்குத் தோன்றி இறையாட்சியைப் பற்றி கற்பித்தார். சான்றுகள் மூலம் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சியாக இருங்கள் என்று பணித்தார். அவர்கள் கண் முன்னே விண்ணகம் சென்றார். அண்ணாந்து வானத்தைப் பார்த்தவர்களை துணிந்து உலகத்தைப் பாருங்கள்! இறையாட்சியை அறிவியுங்கள் என்று அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் இயேசுவின் விண்ணேற்பில் அடங்கியள்ள மறைபொருளை வெளிப்படுத்துகிறார். மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம் என்ற ஒரே எதிர்நோக்குடன் வாழ அழைக்கும் புனித பவுலடியாரின் வார்த்தைக்குச் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 47: 1-2, 5-6, 7-8

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார். ஆண்டவர்.

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே! - பல்லவி

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி


*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி *


அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா


மன்றாட்டுகள்:


1.மாட்சிமைமிக்க எம் இறைவா! திரிவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் இருபால் துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் ஆண்டவர் இயேசுவின் ஆற்றலைப் பெறு இவ்வுலகில் அவரின் விழுமியங்களை உலகமெங்கும் சான்று பகர, அவர் சொல்லிக் கொடுத்தபடி வாழ்ந்து கட்டிட தேவையான ஆற்றலை நிறைவாக பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2அன்பே உருவான எம் இறைவா! எங்கள் குடும்பங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். நீர் அனுப்பும் துணையாளரைக் கொண்டு எங்கள் குடும்பங்களில் அன்பும், நட்புறவும் தழைத்திடவும், எமக்கு அடுத்திருப்பவரைக் கண்டு கொள்ளவும், அதன் மூலம் உமது இரக்கத்தின் இறையாட்சி பறைசாற்ற எமக்கு ஆற்றலைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கமுள்ள எம் இறைவா! உலகமெங்கும் துன்புறும் திரிவையைக் கண்ணோக்கும். உமது பணியின் நிமித்தம் துன்பப்படும் உமது ஊழியர்களையும் மற்றும் உம்மை ஏற்றுக் கொண்ட மக்களையும் பாதுகாத்து, அவர்களை இறைநம்பிக்கையில் வேரின்றி வளர்ந்திடவும், அவர்களைத் துன்புறுத்துவர் மனமாறி நல்ல வழியில் நடத்திடவும் உமது அருளை பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அனைவருக்கும் மீட்பராகிய எம் இறைவா! எங்கள் பங்கிலுள்ள இளையோர் அனைவரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களின் வாழ்வு ஒளிமயமானதாய் இருக்கவும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பிலும், ஒழுக்கத்திலும் தலைசிறந்து விளங்கவும், உமது உயிருள்ள சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வர இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.எங்கள் ஆண்டவராகிய தந்தையே! எம் இறைவா! இவ்வேளையில் உலகெங்கும் அன்னையர் தினம் கொண்டாடும் நாங்கள் அன்னை மரியாளைப் போல் குடும்பங்களை ஒன்றிணைக்கும் சக்தியாகவும், பிறரன்பில் சிறந்து விளங்கவும், கலங்கரை விளக்காகவும் இருந்து எங்களை வழிநடத்திட, எங்களின் அன்னையர்களுக்குத் தேவையான இறையருளையும், உள்ளசுகமும், உடல்சுகமும் தர வேண்டுமென்று அன்னை மரியாவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
  
www.anbinmadal.org

Tuesday, May 1, 2018

பாஸ்கா காலம் 6-ஆம் ஞாயிறு

பாஸ்கா காலம் 6-ஆம் ஞாயிறு

 

 இன்றைய வாசகங்கள்

திப 10:25-26, 34-35, 44-48
1யோவா 4:7-10
யோவா 15:9-17

திருப்பலி முன்னுரை:




வாசக முன்னுரை:

அன்பார்ந்த இறைமக்களே!

இன்று பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு. மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டும் உரித்தான தனி உடமை அல்ல; அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொது உடமை என்பது இன்றைய முதல் வாசகத்தில் தெளிவாக உணர்த்தப்படுகிறது. பேதுரு அறிந்து, அறிவித்த உண்மை : "கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்"

நாம் திருமுழுக்குப் பெற்றிருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் மீட்படைய முடியாது. திருச்சபையில் இருந்தால் மட்டும் போதாது, அன்பில் நிலைத்திருக்க வேண்டும். சென்ற ஞாயிற்றுக்கிழமை நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியின் தொடர்ச்சியான இன்றைய நற்செய்தியில் தம் ஆண்டவர் அன்பை வலியுறுத்துகின்றார்,

இயேசு நம்மை அன்பு செய்தது போன்று ஒருவர் மற்றவரை அன்புசெய்கின்றபோது இறைவன் நமக்கு எத்தகைய கைம்மாறு தருவார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டிக்கட்டத் தவறவில்லை

இந்த இடத்தில் தூய அகுஸ்தினார் உண்மையான அன்பு என்பதற்கு கூறுகின்ற விளக்கத்தினை நம்முடைய சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்போம். “அன்புக்குக் கைகள் உண்டு, அவை அழுவோரின் கண்ணீர் துடைப்பதாக இருக்கும்; அன்புக்குக் கால்கள் அவை அவலநிலையில் இருப்போருக்கு உதவிட விரைவதாக இருக்கும். அன்புக்குக் கண்கள் உண்டு; அவை அல்லல்படுவோர்மீது பரிவு கொள்வதாய் இருக்கும்; அன்புக்கு காதுகள் உண்டு. அவை அண்டிவருவோரின் குறைகள் கேட்பதாய் இருக்கும். அன்பிற்கு இதயம் உண்டு. அது அயலானுக்காகவும், அடுத்திருப்பவருக்காக துடிப்பதாக இருக்கும்” என்று அவர் கூறுவார். ஆம், உண்மையான அன்பு என்பது வெறும் சொல்லல்ல, அது செயல்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று ஒருவர் மற்றவரை அன்பு செய்வோம், எல்லாருக்கும் இரங்குவோம், அதன்வழியாக இறைவனின் அன்பு மக்களாக வாழ்வோம்.

 

முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதையும், ஆள் பார்த்துச் செயல்படாத கடவுளைப் போல் வாழ முற்படுவதே கடவுளின் குழந்தைகளுக்கு அழகு என்பதை உணர்த்தியவாறு, கடவுளுக்கு அஞ்சி நேர்மையாக நடப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் என்று கூறி நம்மையும் நேர்மையாக நடந்திட அழைக்கும் திருத்தூதர்பணிகளிலிருந்து வரும் இவ்வாசகத்திற்குச் செவிமேடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை:


திருத்தூதர் யோவான் எழுதியுள்ள இன்றைய இரண்டாம் வாசகத்தில் அன்பே கடவுள். அது கடவுளிடமிருந்த வருகிறது. அன்பே வடிவான கடவுள் தன் அன்பின் வெளிப்பாடாக தன் மகனை நம் பாவங்களுக்கு பரிகாரமாக நமக்களித்துள்ளார். நமது பகைவர்களையும் அன்பு செய்வது இயேசுவின் அன்பு; அது நம்மை இயேசுவுக்குள் வாழவைக்கும்  என்பதை தெளிவுர எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமேடுப்போம்.


பதிலுரைப்பாடல்


பல்லவி: பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
பதிலுரைப்பாடல் திபா. 98:1-4

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.  பல்லவி
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்: பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.  உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!  மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.  பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1 .எங்களுக்கு முடிவில்லா வாழ்வளிக்கு இறைவா! எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள், பொதுநிலையினர் அனைவரும் உம் அன்பின் இறையரசைப் பரப்பத் தங்கள் வார்த்தையாலும் வாழ்க்கையாலும் சாட்சியம் பகர அருள்வரங்ளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்புடன் எங்களை ஆதரிக்கும் இறைவா! வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ள நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் சகோதர சகோதரிகளின் வறுமையைப் போக்கி அவர்கள் குடும்பங்கள் வளமான புது வாழ்வுப் பெற்றிட அருள்வரங்ளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வானகத்தந்தையே எம் இறைவா! நோயினாலும், பொருளாதாரத்தினாலும் ஒதுக்கப்பட்டுள்ள வயோதியர்கள், அனாதைக் குழந்தைகள், அகதிகள் அனைவரும் உம் பரிவிரக்கத்தால் நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழத் தேவையான வரங்களை அளித்தட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உறவை வளர்க்கும் இறைவா! நீர் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை உணர்ந்து எங்கள் குடும்பங்களிலும், உறவுகளிடமும் அன்புப் பாராட்டவும். ஒற்றுமையாய் அன்பு உள்ளங்களைப் பகிர்ந்து கொண்டு எம் இல்லங்களில் மகிழ்ச்சிப் பொங்க வரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இறைஞ்சுவோருக்கு இரங்கிடும் இறைவா! தங்கள் இறுதிக் கட்டப்படிப்புகளை முடித்த விட்டு, மேற்படிப்பிற்காகத் தங்களைத் தயாரித்து வரும் எம் பிள்ளைகள் பெற்றோர்களின் கவலைகளை உணர்ந்து, படித்துச் சிறப்புடன் தேர்வுப் பெற்றிட ஞானத்தையும், அறிவையும் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. நிலை வாழ்வு அளித்திடும் எம் இறைவா! உம் குடும்பங்களில் கிறிஸ்துவில் மரித்த விசுவாசிகள் அனைவரும் நித்திய இளைப்பாற்றி அடையவும், உம் புனிதர்களில் திருக்கூட்டத்தில் அவர்களை இணைத்திடவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்