Monday, July 30, 2018

ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் வாரம்


ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் வாரம்




இன்றைய வாசகங்கள்


விடுதலைப் பயண நூல் 16: 2-4,12-15
எபேசியர் 4: 17, 20-24
யோவான் 6: 24-35




திருப்பலி முன்னுரை:

 

இறைமகன் இயேசுவிடம் ஆன்மீக பசிப்போக்கிட வந்துள்ள அன்பர்களே! அவரின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறான இன்று தொடுக்கும் கேள்வி,

'உங்களுக்கு அப்பா கொடுக்கிற அப்பம் வேண்டுமா? அல்லது அப்பம் கொடுக்கிற அப்பா வேண்டுமா?' உங்களின் தேடல் அப்பமா? அல்லது அப்பாவா? என கேட்கிறார் இயேசு. நம் பதில் என்னவாக இருக்கும்?


அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அன்று வனாந்தரத்தில் இஸ்ரயேல் மக்கள் மன்னாவை உண்டார்கள். ஆனால் மடிந்தார்கள். நான் தரும் உணவை உண்பவனோ என்றுமே வாழ்வான் என்றாரே இயேசு!


நமது ஆசைகளையும், பேராசை வெறிகளையும் நீக்கிவிட்டு, நமது தேவைகளையும், அடுத்தவர் தேவைகளையும் நிறைவேற்றும் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளவேண்டும் என்று கனவு காண்பதில் தவறில்லையே... இந்தக் கனவை நமக்குள் விதைப்பவைகளே இன்றைய வாசகங்கள்.


ஆம் இறைமகன் இயேசுவின் இவ்வார்த்தைகளை மனதின் ஆழத்தில் பதிவு செய்து, பேராசை வெறிகளைக் களைந்து, நம்முடைய, பிறருடைய தேவைகளை நிறைவேற்றும் மனதை வளர்த்துக்கொள்ளவும், தேவைகளைத் தேவன் தீர்ப்பார் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் இந்த ஞாயிறு வழிபாட்டில் உருக்கமாக மன்றாடுவோம்.



வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:

விடுதலைப்பயணநூலிருந்து வரும் முதல் வாசகத்தில் பாலைநிலத்தில் பசியின் கொடுமையால் வருந்தி இஸ்ரயேல் மக்கள் யோவே கடவுளுக்கு எதிராக முறுமுறுத்தனர். அழைத்து வந்தவர் கருணையோடு அவர்களுக்கு உணவாக மன்னாவை அளித்தார். பேராசைக் கொள்ளாமல் தேவையை மட்டும் பூர்த்தி செய்துகொள்ளுங்கள் என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் புவுலடியார் எபேசிய மக்களிடம் புறவினத்தாரைப் போல் தங்கள் எண்ணங்களுக்கேற்ப வாழாமல், கடவுள் சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை நாம் அணிந்து கொள்ள அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 78: 3,4. 23-24. 25,54

பல்லவி: ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்.

நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை - இவற்றை உரைப்போம். வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும்
அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம். -பல்லவி

ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு அவர் கட்டளையிட்டார்; விண்ணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார். அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்; அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார். -பல்லவி

வானதூதரின் உணவை மானிடர் உண்டனர்; அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்பினார். அவர் தமது திருநாட்டுக்கு, தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு, அவர்களை அழைத்துச் சென்றார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.

 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

 

1.அனைத்தையும் படைத்தவரே எம் இறைவா! பேராசை வெறிகளைக் களைந்து, தேவைகளை நிறைவேற்றும் மனதை வளர்த்துக்கொள்ளவும், அத்தகைய மனநிலையால், 'வாழத் தகுந்த பூமிளை' நாங்கள் உருவாக்கி, நமது அடுத்தத் தலைமுறைக்கு அதனை, அழகான ஓர் உறைவிடமாக விட்டுச் செல்லவும், இறைவன் நமக்கு நல்வழிக் காட்டவேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எம் பாதைக்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்த எம் இறைவா! ஏழை எளியறோர், வறுமையில் வாடுவோர், தனிமையில் தவிப்போர், ஆதரவற்றோர், வாழ்வு இழந்தோர் ஆகிய அனைவருக்கும், உம் ஒளியின் நிழலில் இளைப்பாறுதல் அடைந்திடவும், உம் அன்பின் ஒளியில் அகில உலகம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.என்றும் வழிநடத்தும் தந்தையே! இறைவா!எம் திருஅவையின் அனைத்தும் வெறும் நிறுவனங்களாக அல்லாமல் உம் அன்புப் பணியினை அகில உலகின் எல்லா மாந்தர்க்கும், வேறுபாடின்றிப் பணியாற்றிடவும், துணைபுரியும் உதவிக்கரமாக நின்று செயல்படத் தேவையான எளிய மனதினைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.எம்மை அரவணைக்கும் எம் இறைவா! இளையோர்கள் தாங்கள் விரும்பிய வாழ்வைத் தங்கள் எண்ணங்கள் போல் வாழாமல் கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதர்களாக உண்மையான நீதியிலும், தூய்மையிலும் சிறப்புடன் வாழ்ந்திடத் தேவையான தூய ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.நம்பிக்கைக் கொள்வோரைச் சூழ்ந்து நிற்கும் பேரன்பு தெய்வமே! எம் நாட்டுத் தலைவர்கள் தீயசக்திகளின் வெளிபாடான பேராசையையும் பொறாமையையும் முற்றிலும் அவர்கள் உள்ளத்திலிருந்து நீக்கி, எம் மக்கள் நலம் வாழ அவர்கள் உழைத்திட வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

www.anbinmadal.org

Wednesday, July 25, 2018

பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு

*பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு - 29-07-2018*


*இன்றைய வாசகங்கள்*:

2அரசர்கள் 4: 42-44
எபேசியர் 4: 1-6
யோவான் 6: 1-15


*திருப்பலி முன்னுரை*:

அன்பார்ந்த இறைமக்களே!
பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறுத் திருப்பலியில் அன்பின் பகிர்வைப் பெற்றிட தெய்வத்தின் திருவடிகள் நாடி வந்துள்ள அனைவருக்கும் இறைஇயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள்.

இன்று பகிர்தல் என்னும் அழகிய பண்பை இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு கற்றுத் தருகிறார். பாலை நிலத்தில் தன்னைத் தேடிவந்த மக்களைக் கண்டதும், அவர்களுக்கு விருந்துப் பரிமாறச் சொல்கிறார் இயேசு. இயேசுவின் அந்த ஆர்வத்திற்கு எதிராக, கேள்விகள் எழுகின்றன, ஒரு சிறுவனிடம் உணவு உள்ளதென்று சொல்லப்படுகிறது. அந்தச் சிறுவன் தந்த உணவு அங்கு நிகழ்ந்த அற்புதத்தைத் துவக்கிவைத்தது.

தனியொருவராய் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்தார் என்பது, புதுமைதான். ஆனால், அதைவிட, இயேசு, மக்களைப் பகிரச் செய்தார் என்பதை, நாம் இங்கு மாபெரும் ஒரு புதுமையாகப் பார்க்கலாம். பயன்படுத்தியது போக, மீதியைப் பாதுகாப்பதும் நமது கடமை என்று இயேசு ஆற்றிய புதுமையின் இறுதிப் பாகத்தில் சொல்லித் தருகிறார்.

நாம் வாழும் இன்றைய உலகில் இந்தப் பகிர்வுப் புதுமை அதிகம் தேவைப்படுகிறது. வளங்கள் பலவும் நிறைந்த இன்றைய உலகில் இன்றும் கோடான கோடி மக்கள் பசியிலும் பட்டினியிலும் மடிகின்றார்கள். இந்தத் தேவையற்ற மரணங்கள் நிறுத்தப்பட வேண்டுமானால், இயேசு அன்று ஆற்றிய பகிர்வுப் புதுமை மீண்டும் உலகமெல்லாம் நடக்கவேண்டும்.

சிறுவன் வழியாக, இயேசு சொல்லித்தரும் பகிர்வு என்னும் அற்புதக் குணத்தைக் கற்றுக்கொள்ள நமக்கு இறைவன் பணிவான மனதைத் தரவேண்டுமென்று இத்திருப்பலியில் மன்றாடுவோம்.


*வாசக முன்னுரைகள்*

*முதல் வாசக முன்னுரை*:
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகத்தில் எலிசா இறைமகன் இயேசு நிகழ்த்தவிருந்த அற்புதச் செயலுக்கு முன்னோடி இருந்தார். இருபது வாற்கோதுமை அப்பங்களைக் கொண்டு நூறு பேருக்கு உணவு அளித்தார். அதன் பின்பு ஆண்டவர் வாக்களித்தபடி மீதி உணவு இருப்பதைக் கண்டார்கள். இந்த வாக்குமாறத் தெய்வத்தின் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம். அவரில் நம்பிக்கைக் கொள்வோம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*:
இறைமகன் இயேசு கிறிஸ்துவுக்காகக் கைதியாக இருக்கும் திருத்தூதர் பவுல் நம்மை நாம் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப வாழும்படி வேண்டுகோள் விடுக்கின்றார். அனைத்துக் கிறிஸ்தவ நற்பண்புகளையும் கடைப்பிடித்துத் தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டை நாம் காத்துக் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுல் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.


*பதிலுரைப் பாடல்*

பதிலுரைப்பாடல்: திபா. 145: 10-11, 15-16, 17-18
பல்லவி: *ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.*

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். *பல்லவி*

பல்லவி எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர் *பல்லவி*

ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர் தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். *பல்லவி*


*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! *நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்.*  அல்லேலூயா.

*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*

1. எம் தாகம் தீர்க்கும் அன்பின் இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் பகிர்ந்துச் செயல்பட ஆரம்பிக்கும்போது இறைவனும் நம்மோடு இணைந்து செயல்படத் தொடங்குகிறார் என்பதை உணர்ந்து எமது உழைப்பையும், பகிரும் மனநிலையாலும் எம் வழியாய் நற்செய்தியைப் பரப்பிட அருள்வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அரவணைக்கும் அன்பின் இறைவா,எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் தனிப்பட்ட துறையில் "எனக்கோ எவ்வளவோ வாய்ப்பு இருந்தும், மற்றவரோடு பகிராமல் சுயநலமாக உள்ளேனா?" என்று தங்களைப் பற்றி ஆய்வு செய்து எமக்கு அடுத்திருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தாராள மனதை இறைவன் நமக்குத் தரவேண்டும் இறைவா உம்மை என்று மன்றாடுவோம்.

3. இன்றைய நற்செய்தியிலே வரும் சிறுவனைப் போல, எலிசாவிற்குக் கீழ்ப்படிந்தப் பணியாளனைப் போல உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு மேல் உள்ளதை ஏழை எளியோருடன் பகிர்ந்தளித்து வறுமை இல்லாத எதிர்காலத்தைச் சிறப்பாக அமைய வேண்டிய தாராள மனதினைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பண்பாளரே எம் இறைவா! நான் மட்டும் பகிர்வதால் என்ன செய்ய முடியும் என்ற எதிர்மறை எண்ணங்களிலிருந்து எம்மை விடுவித்துப் பகிர்வு மனப்பான்மை வளரவும், உம் திருமகன் இயேசுவைப்போல் பகிர்ந்துண்டு வாழும் அவரின் சிறந்த சீடர்களாக எம் அயலாருடன் இணைந்து வாழ்ந்திட வரம் வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் அன்பு தந்தையே இறைவா! உமது பிள்ளைகள் இளையோராகிய நாங்கள் "எமது தேவைகளில் முதன்மையான தேவை நீரே" என்று உணர்ந்து நாங்கள் முழுமையாக உம் கரம் பற்றிக் கொள்ளவும், நிலைவாழ்வுப் பெற்று உம்மை அடையவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

*www.anbinmadal.org*

Tuesday, July 17, 2018

பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு


*பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு - 22-07-2018*



 

*இன்றைய வாசகங்கள்*:


ஏரேமியா 23:1
எபேசியர் 2:13-18
மாற்கு 6: 30-34


*திருப்பலி முன்னுரை*:


அன்பார்ந்த இறைமக்களே!
பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு  திருப்பலியில் பங்கேற்க ஆலயத்தில் குடும்பமாக இணைந்து வந்துள்ள அனைவருக்கு இறைஇயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள்.

இன்றைய உலகில் பொய்க்கு இருக்கிற வரவேற்பு உண்மைக்கு இல்லை. இன்றைய மக்கள் உண்மையான தலைவர்களைத் தேடுகிறார்கள். ஆனால், அவர்கள் சந்திக்கும் தலைவர்கள் உண்மையும் நேர்மையும் பரிவும் பாசமும் இல்லாத பாசாங்குகாரர்களாக இருக்கிறார்கள்! இன்றைய எதார்த்தம் மட்டுமல்ல; அன்றைய நிலையும் இதுதான் என்பதைக் காட்டுகிறது இன்றைய வாசகங்கள்.

இறைவாக்கினர் எரேமியாஸ் ஆயனில்லா ஆடுகளைப் போல் தவிக்கும் மக்களுக்குக் கடவுளால் வரவிருக்கும் பொற்காலத்தை முன்னறிவிக்கிறார். இறைவாக்கினர் முன்னறிவித்ததைப்போல ஆயனில்லா ஆடுகளாக அலைந்த மக்களைக் கண்ட இயேசு அவர்கள் மீது மனமிரங்குகிறார். அவர்களுக்கு நெடுநேரம் போதிக்கிறார். சிதறிப்போன ஆடுகளிடமே செல்லுங்கள் என்று தம் சீடர்களுக்குக் கட்டளை தருகிறார்.

இயேசுவின் வாழ்வுக்கும் வார்த்தைக்கும்  அடித்தளமாக அமைந்தது அவரது செபவாழ்வு. செபத்தின் மூலமே தந்தையோடு ஒன்றித்தார். வல்லமையோடு  போதித்தார் ! வல்ல செயல்களை நிகழ்த்தி மக்கள்  பணியாற்றினார். எனவே தான் தன் சீடர்களையும்  இன்றைய நற்செய்தியில் தனிமையான இடத்திற்கு சென்று ஓய்வெடுக்கப் பணிக்கிறார். இயேசு குறிப்பிடும் ஓய்வு இறைவனோடு செபத்தில் ஒன்றித்திருப்பதாகும்.  அந்த ஒன்றிப்பு இன்றைய இறமக்கள் அனைவருக்கும் மிகவும் இன்றியமையாததாகும். வாருங்கள் இயேசுவின் பாதையில் பயணிப்போம். புதியதோர் உலகம் படைப்போம்....


*வாசக முன்னுரைகள்*


*முதல் வாசக முன்னுரை*:


முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியாஸ் மக்களை நன்னெறியில் வழிநடத்தும் ஆயர் பணியைச் சரிவர நிறைவேற்றாத அரசர்களுக்கு எதிராக இறை வாக்குரைக்கிறார். ஆடுகளைச் சிதறடித்துப் பாழாக்கும் உண்மையற்ற அக்கறையற்ற ஆயர்களை இடித்துரைத்துச் சாபமிடுகிறார். ஆயனில்லா ஆடுகளைப் போல் தவிக்கும் மக்களுக்குக் கடவுளால் வரவிருக்கும் பொற்காலத்தை முன்னறிவிக்கிறார். போலி ஆயர்களை நீக்கிவிட்டுப் புதிய ஆயர்களை ஏற்படுத்துவோம் என்று கடவுள் பெயரால் அறிக்கையிட்டு வரவிருக்கும் மெசியாவை முன் குறிக்கிறார். அவர் வார்த்தைகளின் உள்ளார்ந்த இறைஅன்பைச் சுவைத்திடுவோம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*:


தொலையில் இருந்தவர்கள் இயேசு கிறிஸ்துவோடு இணைந்து அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டுள்ளோம். பிரித்து நின்றப் பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து அனைவரையும் ஒன்றுபடுத்தினார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஒருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க அவர் செய்த அருங்கொடைகளால் நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம் என்பதை எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுல் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.


*பதிலுரைப் பாடல்*

திபா 23: 1-3a. 3b-4. 5. 6

பல்லவி: *ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை*.

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். -*பல்லவி*

தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்; சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -*பல்லவி*

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -*பல்லவி*
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -*பல்லவி*

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! *என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன*. அல்லேலூயா.

*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*


1. அன்பின் இறைவா! உம் அன்புக் குழந்தைகளாகிய திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக் கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்றுப் பிறரை அன்பு செய்து வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இயந்திரமாக இயங்கும் இந்தச் சமுதாயவாழ்க்கை முறையில் வேலைகளில் மூழ்கித் தத்தளிக்கும் நாம், ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனுக்கும், நம்முடைய நலனுக்கும் தகுந்த இடத்தை வழங்கவும், அடுத்தவர் தேவை அதிகம் என்பதை உணர்ந்து, நமது தேவைகளை ஒதுக்கிவிட்டு, அடுத்தவருக்கு உதவிக்கரம் நீட்டும் தாராள மனதை இறைவன் நமக்குத் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

3. இன்று உலகில் நடைபெறும் மாற்றங்களால் நலிவடையும் என் விவசாயப் பெருமக்களை உம் முன் வைக்கிறோம். அரசாங்கத்தாலும், மற்றவர்களாலும் அவர்கள் உழைப்புச் சுரண்டப்படாமல், உழைப்புக்கேற்றப் பலனையும் மதிப்பையும் அடையவும், பொருளாதர வளர்ச்சிக் கண்டு இன்புறவும்,அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உம் பணிக்கு எம்மை அழைத்த இறைவா! தேவ அழைத்தல் எந்த நிலையிலும் உண்டு என்பதை உணர்ந்து, உமது பணிச் செவ்வனே செய்யவும், எம் தாய்நாட்டிலிருந்து உம் சேவைக்காய் வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஆயனின் பணிகளைச் சிறப்புடன் செய்திட நல்ல மனதையும், உடல்நலத்தையும், உம்மேல் உறுதியாக நம்பிக்கையுடன் அருட்பணிகள் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. நாங்கள் தூயவராக வாழவே அழைக்கப்பட்டிருக்கிறோம். இதுவே எங்களுக்கு உமது திருவுளம் என்பதைத் திருத்தூதர் பவுல் வழியாக எங்களுக்கு எடுத்துரைத்தீரே நாங்கள் தூயவராக வாழ்ந்து உமது திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்குத் தூயதோர் உள்ளத்தைப் பெற ஆவியாரின் கொடைகளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org

Wednesday, July 11, 2018

ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு

                                    *ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு *

 



*இன்றைய வாசகங்கள் *


ஆமோஸ் 7: 12-15
எபேசியர் 1:3-14
மாற்கு 6: 7-13

திருப்பலி முன்னுரை


இறைஇயேசுவில் அன்பார்ந்தவர்களே! ஆண்டின் பொதுக்காலம் 15 ஆம் ஞாயிறு ஆன இன்று நாம் அனைவருமே இறைவாக்கினர்களாக, இறைப்பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளவர்கள் தாம் என்று உணர்த்துகின்ற இன்றைய வாசகங்கள், நம் அனைவருக்குமே தேவையான பாடங்களைச் சொல்லித்தருகின்றன. கவனமாகப் பயில முயல்வோம்.

போலி இறைவாக்கினர்கள் மத்தியில் ஆமோஸ் போன்ற உண்மை இறைவாக்கினர்கள் அன்று வாழ்ந்தனர், இன்றும் வாழ்கின்றனர். பிழைப்பைத் தேடிக்கொள்வது வேறு, வாழ்வைத் தேடுவது வேறு என்பதைத் தெளிவுபடுத்தி, அந்த வாழ்க்கைப்பாதையைப் பிறருக்கும் காட்டிவரும் இறைவாக்கினர்கள் இன்றும் நம் மத்தியில் இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இருவராய் இப்பணிகளில் ஈடுபடும்போது, ஒருவர் தன்னையே வானளாவ உயர்த்திக் கொண்டால், அடுத்தவர் அவரைப் பத்திரமாக மீண்டும் தரைக்குக் கொண்டுவர முடியும். சுயநலத்தில் சிக்குண்டுச் சின்னாபின்னமாகியுள்ள நம் உலகிற்கு, இணைந்துச் செயல்படுவதாலேயே சாதிக்க முடியும் என்று இயேசு சொல்லித்தரும் இந்தப் பாடம் மிகவும் தேவை. 


காலில் படிந்த தூசியைத் தட்டுவது போல், உங்கள் உள்ளத்திலிருந்து கசப்பான எண்ணங்களைத் தட்டிவிட்டுப் புறப்படுங்கள் என்று இயேசு நம்மை இறைவாக்கினர்களாய், இறைவனின் பணியாளராய் வாழ அழைப்பு விடுக்கின்றார். இந்த அழைப்பை ஏற்று இறைவனின் பணியாளராய் வாழ உறுதி கொண்ட நெஞ்சமும், அன்பு நிறை உள்ளமும் வேண்டி இத்திருப்பலியில் இறைவனை இறைஞ்சிடுவோம் வாரீர் உறுதியுடன்....


வாசக முன்னுரை



முதலாம் வாசக முன்னுரை

 
 ஆடு மாடுகளை மேய்த்து வந்த அப்பாவியாகிய ஆமோஸை இறைவன் அழைத்து பெத்தேலில் இறைவாக்கு உரைக்க அனுப்புகிறார். அங்குள்ள குரு அமட்சியா தன் பிழைப்புக்கு ஆபத்து வந்து விட்டதாக  உணர்ந்து ஆமோஸை நாட்டைவிட்டே விரட்ட முற்படுகிறார். ஆனால் இறைவனால் அவர் பணிக்கு முன்குறித்த ஆமோஸ் அங்கே தன் பணியைத் தொடங்குகிறார். ஆமாஸின் இறைவாக்குப்பணிக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தை கேட்டு நமது இறைஅழைப்பை நாமும் உணர்ந்து செயல்படுவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை

 
 கடவுள் நம்மை முன்குறித்துள்ளது நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் அவர்திருமுன் விளங்கும்படி கிறிஸ்துவின் வழியாக நம்மை தேர்ந்தெடுத்துள்ளார். கிறிஸ்துவின் இரத்ததால் நமக்கு மீட்பு தந்துள்ளார். நாமும் நமக்கு  மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, நம்பிக்கையின் மூலம் தூயஆவியால் முத்திரையிடப்பட்டுள்ளோம். அந்த தூயஆவியால் மீட்படைவோம் என்பதை அறிவுறுத்தும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமெடுப்போம்.



பதிலுரைப் பாடல்


திபா 85: 8-9. 10-11. 12-13

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். -பல்லவி

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். -பல்லவி

நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக!  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

 
1.வாழ்க்கையில் வீழ்ந்த மக்களைத் தூக்கிவிடும் கிறிஸ்துவின் கரங்களாக, காணாமல்போன ஆடுகளைத் தேடி அலையும் கிறிஸ்துவின் கால்களாக, ஏழைகள் ஆதரவற்றோர் அழுவோரின் குரலைக்கேட்டு ஆறுதல் தர கிறிஸ்துவின் குரலாக, நீதிக்காகச் சமத்துவத்திற்காக சமுதாயத்தில் குரல் கொடுக்க எம் திருஅவையிலுள்ள அனைவரும் ஒருமனதோராய் பணியாற்றிட தேவையான அருள்வரங்களை தர வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.

2.  காலங்களைக் கடந்த எம் இறைவா! எம் நாட்டில் உள்ள இளையோர் தங்கள் இளமைக் காலங்களில் உம் தூய ஆவியின் துணையை நாடி ஞானத்தைப் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவின் சாட்சிகளாகத் திகழத் தேவையான அருள் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.ஒப்பற்ற நாயகனே எம் இறைவா! இன்றைய நவீன உலகில் பணம், பொருள், ஆடம்பரம் என்ற உலகக் காரியங்களில் நாங்கள் எங்களையே அடிமையாக்கிக் கொள்ளாதவாறு, “கிறிஸ்துவே எனக்கு ஒப்பற்றச் செல்வம். அதுவே எனது ஆதாயம்” என்னும் திருதூதர் பவுலின் வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

 4. எங்கள் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்கும் எம் இறைவா! எங்கள் பங்கிலும், எம் குடும்பங்களிலும் உள்ள. எங்கள் அனைவரின் உள்ளத்திலும் ஆவியானவரின் அருளும், இயேசுவின் சீடராய் மாறிட அடிப்படைத் தேவையான அர்ப்பணிப்பு வாழ்வும், அதன் மூலம் உம் அன்பின் ஒளியாய் சுடர் விட்டுப் பணியாளராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
.
5.ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் இறைவா! இன்று நாட்டில் ஏழைகளுக்கான அனைத்து வழிகளும் செல்வந்தர்களாலும், அரசியல்வாதிகளாலும் அடைக்கப்பட்டு வாழ வழியின்றித் தவிக்கும் எம் அன்புச் சகோதர சகோதரிகளுக்கு உம் இரக்கத்தைப் பொழிந்து அவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 



www.anbinmadal.org

Tuesday, July 3, 2018

*ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு *

*ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு *


*இன்றைய வாசகங்கள் *

 


திருப்பலி முன்னுரை


ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாடத்தில் பங்கேற்க வந்ள்ள இறைகுலமே நாம் அனைவரும் வாழ்வில் சந்தித்திருக்கும், அல்லது, சந்திக்கவிருக்கும் அந்த வருத்தமான அனுபவத்தை இன்றைய ஞாயிறு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன. அந்த அனுபவம்... நிராகரிப்பு, புறக்கணிப்பு!

மனித அனுபவங்களிலேயே மிக ஆழமான காயங்களை உருவாக்குவது நிராகரிப்பு, புறக்கணிப்பு. அதிலும், காரணங்கள் எதுவும் இல்லாமல், அல்லது, நமக்குப் புரியாத காரணங்களுக்காக நாம் புறக்கணிக்கப்படும்போது, அந்த வேதனை மிகக் கொடுமையாக இருக்கும். தன் சொந்த ஊரிலேயே இறைமகன் இயேசு பிறக்கணிக்கப்படுகின்றார்.

அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் இயேசுவால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.

அற்புதங்களை ஆற்ற வல்ல இறைவனையே கட்டிபோட்டுவிடும் நமது முற்சார்பு எண்ணங்களை அகற்றி, முற்றிலும் மூடிய கல்லறைகளாக மாறியிருக்கும் நமது உள்ளங்களை இறைவன் திறந்து, நமக்கு உயிர் தர வேண்டும் என்று உருக்கமாக இன்றையத் திருப்பலியில்மன்றாடுவோம்.

வாசக முன்னுரை


முதலாம் வாசக முன்னுரை


ஆண்டவருக்கு எதிராய் கலகத்தில் ஈடுபட்ட வன்கண்ணும், கடின இதயமும் கொண்ட இஸ்ரயேல் மக்களிடையே எசேக்கியேல் இறைவாக்கினராக யாவே கடவுள் அனுப்பி வைக்கிறார். அவர்கள் இறைவாக்கினரின் குரல் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இறைவாக்கினர் அனுப்பிவைக்கப்படுவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை


புறக்கணிப்புகள், துன்பங்கள், துரோகங்கள், காயங்கள், வலுவற்றநிலை இவற்றின் மூலமாகவே நாம் கடவுளின் பலமுள்ள ஆயுதங்கள் ஆகிறோம் என்ற உண்மையை உணர்ந்து நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் இறைப்பணியாற்ற அழைக்கும் புனித பவுலின் குரலுக்கு இரண்டாம் வாசகத்தின் வழியாகச் செவிசாய்போம்.

பதிலுரைப் பாடல்

 

திபா 123: 1. 2. 3-4
பல்லவி: ஆண்டவரே! எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். -பல்லவி

பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப் பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பது போல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும். -பல்லவி

எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே! எங்களுக்கு இரங்கும்; அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம். இன்பத்தில் திளைத்திருப்போரின் வசைமொழி போதும். இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும். -பல்லவி
 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உன்ளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டு:


1.வாழ்வின் ஊற்றே இறைவா! நிலையான குணமடைவதற்கென நாங்கள் மகிழ்வுடன் குடும்பமான இணைந்து வந்துள்ளோம். எங்களின் முன்மாதிரியான சாட்சியவாழ்வால் உலகிற்கெல்லாம் நலம் தரும் மருந்தாக மாறிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.கருணைக் கடலே இறைவா! நிராகரிப்பு, புறக்கணிப்பு போன்ற காரணங்களால் இச்சமுகத்திலிருந்து விலகி வாழும் ஏழை எளியோர்கள், கைவிடப்பட்ட பெற்றோர்கள், அனாதைகள் மீண்டும் அன்பின் உறவில் இணைந்திடவும், புது வாழ்வுப் பெறவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. என்றென்றும் இரக்கம் காட்டும் இறைவா! இத்திருஅவையிலுள்ள அனைவரும் புனித தோமாவைப் போல் ஐயம் நீங்கித் தெளிவுப் பெற்று நம்பிக்கைப் பெற்றவும், துணிவுடன் இறையரசை அறிவிக்கவும் தேவையான வலிமைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு

4. நாங்கள் நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து எம் இளையோர் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நற்செயல்கள் புரிவதில் நாளுக்கு நாள் வளர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும், மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.