Wednesday, July 31, 2019

பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு

  பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-


சபை உரையாளர் 1:2,2:21-23
கொலோசையர். 3:1-5, -9-11
லூக்கா 12:13-21

திருப்பலி முன்னுரை:


இறைஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறான இன்று இறையருள் வேண்டி இறைவனின் திருப்பாதம் தேடி வந்துள்ள இறைமக்களுக்கு இறைஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறான இன்று இறையருள் வேண்டி இறைவனின் திருப்பாதம் தேடி வந்துள்ள இறைமக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

இன்றைய சூழலில் மக்கள் ஓய்வின்றி உழைத்துத் தேடிவைக்கும் செல்வங்களின் நிலையையும், அவர்களின் மனநிலையையும் அழகாகப் படம் பிடித்துக்காட்டுகின்றது இன்று தரப்பட்டுள்ள வாசகங்கள். கடினமாய் உழைத்துச் சேர்த்தச் சொத்துகள் அதற்காக உழைக்காதவரிடம் செல்வது பெரிய அநீதி. எல்லாம் வீண் என்கின்றது முதல் வாசகம். நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகுச் சார்ந்தவற்றை நாடுங்கள். நீங்கள் புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். எனவே உங்களிடையே வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார் என்கின்றார் திருத்தூதர் பவுல்.

இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? " என்று கேட்கின்றார் இறைமகன் இயேசு. ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக்கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் பயன் என்ன? என்ற இறைவார்த்தையின் மகத்துவத்தை உணர்ந்த நாம், இன்றைய திருப்பலியில் இறைவனின் இல்லத்தில் நாம், செல்வங்களைச் சேர்த்து வைக்க, வேண்டிய ஞானத்தையும் அருளையும் பெற்றுக்கொள்ள இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம்.. வாரீர்.


வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


நாம் சேர்த்து வைக்கும் சொத்துக்களை, செல்வத்தை நாம் எடுத்துச் செல்ல முடியாது, அதை நாம் எடுத்துச் செல்ல முடியாதது மட்டுமல்ல, அதற்கு உரிமை இல்லாத ஒருவருக்கு அனைத்தையும் விட்டுச்செல்ல வேண்டும் என்பதே வாழ்வின் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை இன்றைய முதல் வாசகமும் பதிவு செய்கின்றது இந்த வாசகத்தின் இரண்டாம் பகுதியில், 'உழைப்பு வீண்' என வாதிடும் சபை உரையாளர், ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், அவருக்குத் துன்பமும், அமைதியின்மையும், தூக்கமின்மையும், மனச்சோர்வும் தான் மிஞ்சுகிறது என்று எடுத்துரைக்கும் சபை உரையாளரின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:


கிறிஸ்தவ வாழ்வின் பண்புகள் பற்றிக் கொலோசை நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுல், கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்து உயிர் பெற்றதன் அடையாளம் 'மேலுலகுச் சார்ந்தவற்றை நாடுவது' என்கிறார். நாம் இருப்பது கீழுலகம் என்றாலும், நம் எண்ணங்கள் மேலுலகுச் சார்ந்தவையாக இருக்க வேண்டும். 'இவ்வுலகப் போக்கிலான பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை' அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கின்றார். இந்த ஐந்து செயல்களுமே பல நேரங்களில் செல்வச் செழிப்பின் வெளிப்பாடாக இருக்கிறது என்பது கண்கூடு. இந்தச் செயல்கள் எல்லாம் பழைய இயல்பு என்று சொல்கின்ற பவுல், 'புதிய மனித இயல்பை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்!' என அவர்களுக்கு நினைவூட்டுகின்றார் திருத்தூதர் பவுல். அவரின் நினைவூட்டலைச் சிந்திக்க இன்றைய இரண்டாம் வாசகம் நம்மை அழைக்கின்றது.

பதிலுரைப் பாடல்


பல்லவி: என் தலைவரே தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்!
திபா. 90: 3-4,5-6,12-13,14,17

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; 'மானிடரே! மீண்டும் புளுதியாகுங்கள்' என்கின்றீர்.  ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி
வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும். - பல்லவி
எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.  ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி
காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!  ஆம் நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.அறுவடையின் ஏழையிரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் என்று மொழிந்த எம் இறைவா! திருஅவையின் நல்மேய்ப்பர்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும் இறைவார்த்தையின் ஒளியில் தன்னைப் புதுபித்துக் கொள்ள, திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் அனைவரும் உம்மைப் பின்பற்ற உலகபற்றுகளைத் துறந்தவர்களாக வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.ஒப்பற்ற நாயகனே எம் இறைவா! இன்றைய நவீன உலகில் ஒருவரை ஒருவர் அழிக்கும் அளவிற்குப் பணம், பொருள், ஆடம்பரம் என்ற உலகக் காரியங்களில் நாங்கள் எங்களையே அடிமையாக்கிக் கொள்ளாதவாறு, “கிறிஸ்துவே எனக்கு ஒப்பற்றச் செல்வம். அதுவே எனது ஆதாயம்” என்னும் திருதூதர் பவுலின் வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உலகில் நடைபெறும் தீவிரவாதம், இனவாதம், மொழிப் போன்றவற்றில் தங்களையே ஈடுபடுத்திக் கொள்ளும் நவீன உலகில், மனித மாண்புகள் நசுக்கப்படும் இச்சூழலில் “எகிப்தில் படும் வேதனைகளை நான் கண்டேன்” என்று நீர் இஸ்ரயேல் மக்களை மீட்டது போல வேதனையில் துன்புறும் மக்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டி அவர்களுக்கு நல்வாழ்வு வழங்கிடத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. காலங்களைக் கடந்த எம் இறைவா! எம் நாட்டில் உள்ள அனைத்து இளைஞர், இளம் பெண்கள் தங்கள் இளமைக் காலங்களில் உம் தூய ஆவியின் துணையை நாடி ஞானத்தைப் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் விசுவாச வாழ்வில் சாட்சிகளாகத் திகழத் தேவையான அருள் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5 அன்புத் தந்தையே எம் இறைவா! உலகில் ஏழைப் பணக்காரன் என்ற வேறுபாடுகளைக் களைந்துச் செல்வம் படைத்தவர்கள் தங்கள் செல்வத்தைக் கொண்டு ஏழைகளின் வாழ்வு வளம் பெற உதவிப் புரியவும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் அனைத்து மாந்தருக்கும் சாதி, மத வேறுபாடுகள் களைந்துத் தன்னலமற்றவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

Wednesday, July 24, 2019

பொதுக்காலம் ஆண்டின் 17வது ஞாயிறு:


பொதுக்காலம் ஆண்டின் 17வது ஞாயிறு:

The Lord's Prayer (Le Pater Noster) - James Tissot.jpg-wikimedia

இன்றைய வாசகங்கள்:


தொடக்க நூல் 18:20-32
கொலோசையர் 2:12-14
லூக்கா 11:1-13


திருப்பலி முன்னுரை:


 பொதுக்காலம் ஆண்டின் 17 ஆம் ஞாயிறுத் திருப்பலியில் பங்குக்கொள்ள ஆர்வமுடன் ஆலயம் வந்துள்ள இறைஇயேசுவின் அன்பர்களை அன்புடன் வரவேற்கிறோம். நல்ஆசானாக இருந்து செபிக்கக் கற்றுத்தருகிறார் நம் இயேசு. இறைவேண்டல் என்பது இறை-மனிதத் தொடர்பு சாதனமாகும். செபமே கிறிஸ்துவ வாழ்வின் அடிப்படையும் ஆணிவேருமாகும். இதனைச் சரியாகப் புரிந்துக் கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்கு உதவுகின்றன. ஆபிரகாமின் இறைவேண்டுதலைக் கேட்ட இறைவன் நல்லவர்களுக்காகத் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவைக்க முன்வருகிறார். நம்மைப்போலப் பழிவாங்கும் உணர்வு இறைவனிடம் இல்லை. தயாளமுள்ள இறைவனிடம் நம் செபங்களுக்கு எதிர்ப்பார்ப்பதைக் காட்டிலும் சிறப்பாக நம்மை நன்மைகளால் நிரப்புகிறார். கிறிஸ்துவின் வழியாக மாந்தர்க்கும் இறைவனுக்கும் இருந்த இடைவெளி நீங்கியது. தந்தை என்று அழைத்துச் செபிக்கக் கற்றுத் தந்த இயேசு நம் வாழ்வில் எது நடந்தாலும் மனநிறைவோடு வாழும் வரம் தான் சிறந்தது என்று உணர்த்துகின்றார். இதையே புனிதப் பவுலடிகளார் நாமனைவரையும் "இடைவிடாது செபியுங்கள். என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசுவில் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே!" என்று அழைக்கின்றார்.

செபிக்கக் கற்றுத்தாருங்கள் என்று தன்னை அணுகிய சீடருக்கு, செபத்தைப்பற்றிய நீண்டதொரு இறையியல் விளக்கத்தை இயேசு சொல்லித் தரவில்லை. மாறாக அவர் சொல்லித் தந்ததெல்லாம் ஒரு செபம், ஒரு கதை, ஒரு நம்பிக்கைக் கூற்று. இந்த செபத்தின் அரிச்சுவடிகளை  உணர்ந்தவர்களாக இணைந்துச் செபிப்போம் இத்திருப்பலிக் கொண்டாடத்தில், நிறைவாழ்வு நம் உள்ளத்தில் இல்லத்தில் நிறைந்திட....


வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாமைச் சந்தித்த இறைமனிதர்கள் நேராகச் சோதோம், கொமோரா நகரங்கள் நோக்கிச் செல்கின்றனர். அந்த இரண்டு நகரங்களிலும் பாவம்,குறிப்பாகப் பாலியல் பிறழ்வுப் பெருகியிருந்ததால், அதை அழிக்கப் புறப்பட்டுச் செல்கின்றனர் இந்த இறைமனிதர்கள். அவர்கள் அவ்விதம் போய்க் கொண்டிருக்க, சோதோம்-கொமோரா அழிவைப் பற்றிக் கடவுள் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துவதும், அந்நகரங்களின் நீதிமான்களுக்காக ஆபிரகாம் இறைவனிடம் பரிந்துப் பேசுவதுமே இன்றைய முதல் வாசகம். ஆபிரகாமின் இந்த உரையாடல் அல்லது செபம், அவருக்கும் இறைவனுக்கும் இருந்த உறவின் நெருக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்ற இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


ஆபிரகாம் கடவுளின் முன்னிலையில் நின்று இறைவனிடம் பரிந்துப் பேசினாலும், கடவுளுக்கும் அவருக்கும் இடையே ஒரு திரை இருக்கின்றது. இந்தத் திரை இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் வழியாக அகற்றப்பட்டு விட்டது என்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் . 'கிறிஸ்துவால் வரும் நிறைவாழ்வு' பற்றிக் கொலோசை நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுல், திருமுழுக்கின் வழியாகக் கிறிஸ்துவோடு இறந்தவர்கள், அவரோடு உயிர் பெற்று எழுந்துள்ளார்கள் எனவும் சொல்லிவிட்டு, 'இறப்பு', 'கடன் பத்திரம்' என்ற இரண்டு உருவகங்கள் வழியாக, இறைவனுக்கும் மனிதருக்கும் நடுவே இருக்கும் திரை அகற்றப்பட்டதை விளக்குகின்றார் திருத்தூதர் பவுலடியார். அவருடைய வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2. 2b-3. 6-7. 7-8
பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.  உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.  நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி

ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.  நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; -பல்லவி

உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.  நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-

1. மேன்மையானவராக இருக்கும் எம் வானகத் தந்தையே!இறைவா! உம் திருஅவையிலுள்ள அனைவரும் ஒருவர் ஒருவருக்காய் பரிந்துரைத்துச் செபிக்கவும், உம் திருப்பணியின் நிமித்தம் தீவிரவாதிகளிடம் துன்புறும் எண்ணற்ற எம் திருஅவையின் திருப்பணியாளர்களுக்கு உறுதியாக விசுவாத்தையும், பாதுகாப்பையும் நல்கிடவும், இறையாட்சி அனைவர் உள்ளத்திலும் நிறைந்திடத் தேவையான வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எமக்காய் எப்பொழுதும் கரம் விரித்துக் காத்திருக்கும் என் இறைவா! செபம் என்பது உமக்கும்  எமக்கும் உள்ள உன்னத உரையாடல். அதில் கேட்டும் கிடைக்காமல் போனதும் உண்டு. கேட்காமல் நீர் வாரிவழங்கியது பலவும் உண்டு என்பதனை உணர்ந்து என்ன நேர்த்தாலும் நன்றியோடு உம்மைப் போற்றிட, தன்னலம் பாராமல் அனைவருக்குமாய் செபித்திட நல்மனம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.நாம் இயேசுவைப் பின்பற்றி, தூய ஆவியாரின் துணையோடு, தந்தையைப் போல் இரக்கமுள்ளவராக மாறவும், ஏழைகள், தேவையில் இருப்போர் மற்றும் ஒதுக்கப்பட்டோருக்குத் தேவையான பிறரண்புப் பணிகளைப் புரியும் நல் மனதையும், எம் இளையோர் மனங்களில் விதைத்திடவும், தாம் பெற்றத்திறமைகளை நல்வழியில் பயன்படுத்தி நீர் விரும்புப் புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டிய வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்புத்தந்தையே இறைவா! உம்முடைய பிள்ளைகளாகும் அருளை எங்களுக்குத் தந்து கிறிஸ்துவின் ஒளியில் நடக்க எங்களை அழைத்துள்ளீர். பொய்மை என்னும் இருளில் நாங்கள் சிக்கிக் கொள்ளாமல், உண்மையின் பேரொளியில் நிலைத்து நின்றிட எங்களுக்கு அருள் புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. என்றும் வாழும் எம் தந்தையே! இறைவா! இன்றைய சமுதாயத்தில், அதிகாரம், பணம், ஆயுதங்கள், சுயவழிபாடு, போதைப்பொருள், மதுபானம், பரத்தமை போன்ற சிலைவழிபாடுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து, அவர்களின் ஒழுக்கநெறி மதிப்பீடுகள் குறித்த உள்ளுணர்வுகளை மழுங்கச் செய்கின்றன. இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றி, அவர்கள் இறைமகன் இயேசுவின் சீடர்களாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org

Wednesday, July 17, 2019

பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு

 Christ in the House of Martha and Mary / Johannes Vemeer

பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு



இன்றைய வாசகங்கள்:-

தொடக்கநூல் 18:1-10
கொலோசையர் 1:24-28
லூக்கா 10:38-42

திருப்பலி முன்னுரை:-


இயேசுவிற்கு பிரியமானவர்களே! பொதுக்காலம் 16ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்!

இன்றைய வழிப்பாட்டு வாசகங்கள் நமக்கு விருந்தோம்புதல் பற்றிக் கூறும் அதேவேளையில் நாம் முதலில் நிலைவாழ்வுக்குத் தேவையான நல்லதை நம்மில் பெற்றுக்கொள்வது என்பதையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

தன் கூடாரத்தின் வாயிலில் அமர்ந்திருக்கும் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்க 'மூன்று மனிதர்கள் நிற்கின்றார்கள்.' இந்த 'மூன்று மனிதர்கள்'தாம் 'மூவொரு இறைவனின்' முதல் அடையாளம் என்கிறது நம் கத்தோலிக்க இறையியல். தொடக்கக் காலச் சமூகத்தில், 'விருந்தோம்பல்' முதன்மையான மதிப்பீடாகக் கருதப்பட்டது. இங்கு விருந்தோம்புதலை ஆபிரகாமும் சாராளும் இணைந்துப் பகிர்ந்துக் கொண்டார்கள். இந்த உலகிற்கு விருந்தினராக வந்த இயேசு கிறிஸ்து இந்த உலகின் மக்களுக்காகத் தாமே விருந்தாகின்றார். விருந்தினராக வந்தவர் தன் உயிரையே கொடுக்கும் அளவிற்குத் துணிந்து நிற்கிறது இயேசுவின் விருந்தோம்பல்.

இன்றைய நற்செய்தி வாசகம் நல்ல சமாரியன் எடுத்துக்காட்டின் தொடர்ச்சியாக இருக்கிறது. பிறரன்புக் கட்டளையின் விளக்கமாக 'நல்ல சமாரியன் எடுத்துக்காட்டு' இருக்கிறது என்றால், 'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் ஆண்டவரை அன்புச் செய்வாயாக' என்ற இறையன்புக் கட்டளையின் விளக்கமாக இருக்கிறது 'மார்த்தா-மரியா எடுத்துக்காட்டு.' இந்த உலகிற்கு வெறுங்கையராய் வரும் நாம் அனைவருமே விருந்தினர்கள் தாம். நமக்கு விருந்துப் படைக்கும் இயேசுவிடம் இவ்வுலகில் நல்விருந்தினராய் வாழ்ந்திட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:-



முதல் வாசக முன்னுரை:-


'தேவதாரு மரங்களருகே ஆண்டவர் ஆபிரகாமுக்குத் தோன்றினார்' என்று தொடங்குகின்ற இன்றைய முதல் வாசகமான தொடக்கத்தில். “ஆபிரகாமின் காத்திருத்தல்“ பற்றி வாசிக்கின்ற நமக்கு இரண்டு விடயங்கள் புரிகின்றன: (1) ஆபிரகாம் வாழ்வில் ஏதோ முக்கிமான நிகழ்வு ஒன்று நடக்கப் போகிறது. (2) ஆபிரகாமின் காத்திருத்தல் அவரின் விருந்தோம்பல் பண்புக்குச் சான்றாக அமைகிறது. ஆபிரகாம் தன்னிடம் வந்த விருந்தினர்களுக்கு, காளையும், வெண்ணெயும், பாலும், தேனும், அப்பமும் விருந்தளித்தார். ஆனால், வந்திருந்த இறைவன் அவருக்கு ஒரு மகனை வாக்களித்து விருந்தோம்பலுக்குப் பதில் தருகின்றார். இறைவனின் இந்த வாக்குறுதி என்னும் விருந்தோம்பல் ஆபிராகமின் விருந்தோம்பலையும் மிஞ்சி விடுகிறது. ஆபிரகாம் வாழ்வில் நடைப்பெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:-


  இன்றைய இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்துவின் துன்பம் மற்றும் மாட்சி பற்றிய இறையியலைக் கொலோசை நகரத் திருஅவைக்கு எழுதும் பவுல், தான் இந்தநேரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் துன்பமும், திருஅவையினர் பட்டுக்கொண்டிருக்கும் துன்பமும் கிறிஸ்துவில் அவர்கள் இணைந்திருப்பதற்கான அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டி, துன்பத்தைப்போல மாட்சியும் பின்தொடரும் என வாக்குறுதியை தருகின்றார். இவ்வாறாக, கிறிஸ்துவின் விருந்தோம்பல் அவரின் தற்கையளிப்பிலும், அவர் தன் மக்களுக்குத் தரும் மாட்சிமையிலும் அடங்கியிருக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்தும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்:-

திபா 15: 2. 3-4. 5
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

மாசற்றவராய் நடப்போரே! இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமாற உண்மை பேசுவர். -பல்லவி

தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்;தம் அடுத்தவரைப் பழித்துரையார்.நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்;
ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்;தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். -பல்லவி

தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்;இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-


1. இறைத்தந்தையே எம் இறைவா! முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக நீர் செய்த அனைத்துவியத்தகுச் செயல்களை நினைவு கூர்ந்துத் திருஅவை, புதிய ஆற்றலோடு அனைத்து மாந்தருக்கும் உம் இறையரசை வழங்கிடத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.   விருந்தோம்பல் என்பது 'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் செய்யப்படும்' ஒரு செயல். இந்த நான்கில் ஒன்று தவறினாலும் விருந்தினர் முகம் சுளிக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்து எங்களை நாடி வரும் எங்கள் உறவினர்களையும், விருந்தினரையும் அன்புடனும், மகிழ்ச்சியுடன் நடத்திக் செல்லத் தேவையான பரந்த மனதினை அருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.  'நீ இன்று ஒருவருக்குக் கொடுக்கும் தண்ணீரை நாளை உனக்கு வேறொருவருக்குக் கொடுப்பார்' என்ற அனுபவமொழியினை மனதில் ஏற்று ஏழை,பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளைக் களைந்துத் தேவையில் இருப்பவர்களுக்குப் பரந்த உள்ளத்தோடு சேவைப் புரியவும், இதையே இயேசுவின் சவாலாக ஏற்று வெற்றிப் பெற உமது அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.  இக்காலத்தில் நாங்கள் படும் துன்பங்கள் , எதிர்காலத்தில் வரப்போகும் மாட்சிமைக்காக என்பதனை உணர்ந்து நாங்கள் உலகில் நிலவும் சாதி, இனம், மொழி, சமயம் இவற்றால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து மனுக்குலம் முழுவதும் சமத்துவம், சகோதரத்துவம் நிலவிட வேண்டி உம் ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அனைவருக்காகவும் மன்றாடுங்கள் ; இறைவனிடம் வேண்டுங்கள் ; பரிந்து பேசுங்கள் என்று எம்மை அழைத்த இறைவா, இயற்கையின் சீற்றத்தால் ஒரு பக்கம் மழை நீர் வெள்ளமாய்ப் பாய / மறுபக்கம் வறட்சியால் நீரின்றித் தவிக்கும் எங்களைக் கண்நோக்கும். எல்லாருக்கும் எல்லா நன்மைகளும் கிடைத்திட, சீற்றங்களின் ஆபத்துகளிலிருந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

Tuesday, July 9, 2019

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு

 


இன்றைய வாசகங்கள்


இணைச்சட்ட நூல் 30:10-14
கொலோசையர் 1:15-20
லூக்கா 10:25-37


திருப்பலி முன்னுரை:-


பிரியமானவர்களே! பொதுக்காலம் 15ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்! இன்றைய வழிப்பாட்டு வாசகங்கள் நமக்கு மிக அருகில் உள்ள இறைவன், அயலான் இவர்களை உணர்ந்துக்கொண்டு நிலைவாழ்வு எவ்வாறு நம்மில் பெற்றுக்கொள்வது என்பதைப் பற்றிய நமக்கு எடுத்துரைக்கின்றன.

இஸ்ரயேல் மக்களுக்கு 'ஆண்டவர் மீது அன்புகூர்வாயாக!' என்று முதல் கட்டளையை அவர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டும் மோசே, கட்டளை என்பது 'உனக்கு மிக அருகில்,' 'உன் வாயில்,' 'உன் இதயத்தில்' இருக்கிறது என்கிறார். புனித பவுலடியார் கூறுகிறார். ”விண்ணுக்கும், மண்ணுக்கும் இனி தூரமில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று 'மிக அருகில் உள்ளது.' கடவுள் தன்மையை நினைத்து நாம் பயந்து ஓடத் தேவையில்லை. மாறாக, 'மிக அருகில் உள்ள கடவுள்தன்மையைத் தொட்டுணர்ந்து நாம் அதை நமதாக்கிக் கொள்ள முடியும்.”

திருச்சட்ட அறிஞர் இயேசுவைச் சோதிக்கும் நோக்கில் 'நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டக் கேள்வியின் மூலம் நமக்கு வெகு அருகாமையிலுள்ள அயலானை அடையாளம் காட்டுகிறார். இதன் மூலம் மூன்று வித அன்பைப் பதிவுச் செய்கிறார். இந்த அன்பு நம்மில் நிறைவாய் இருந்தால் நிலைவாழ்வு நமக்கு வெகு அருகிலே! என்ற எண்ணங்களைத் தாங்கியவர்களாய் முழு 'இதயத்தோடும்,' 'ஆன்மாவோடும்,' 'வலிமையோடும்,' 'மனத்தோடும்' இத்திருப்பலியில் பங்குக்கொள்வோம் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள...


வாசக முன்னுரை:-


முதல் வாசக முன்னுரை:-


எகிப்து நாட்டின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்றபின், இஸ்ரயேல் மக்களோடு நாற்பது ஆண்டுகள் வழிநடந்த மோசே, மோவாபு பள்ளத்தாக்கில், புதிய தலைமுறை இஸ்ரயேலருக்கு, இதுவரை நடந்த அனைத்தையும், யாவே இறைவன் தந்தத் திருச்சட்டங்களையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார். 'ஆண்டவர் மீது அன்புகூர்வாயாக!' என்று முதல் கட்டளையை அவர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டும் மோசே, கட்டளையானது 'உனக்கு மிக அருகில்,' 'உன் வாயில்,' 'உன் இதயத்தில்' இருக்கிறது என்கிறார். ஒருவரின் உள்ளுறைந்துக் கிடப்பதே இறைவனின் கட்டளை. இணைச்சட்ட நூலிருந்து வரும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை:-


 'என்னைப் பொறுத்தவரையில் உலகமும், உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்' என்கிறார் பவுல். உலகையும், பவுலையும் இணைப்பது சிலுவையும், அந்தச் சிலுவையில் தொங்கும் இயேசுவும். சிலுவையில் அறையப்பட்டிருப்பது வேதனையை, வலியைத் தந்தாலும், அந்த வலிதான் பவுலை இயேசுவோடும்,  உலகத்தோடும் இணைக்கிறது என்று நம்பிக்கையில் நிலைத்திருக்க அறிவுறுத்தும் திருத்தூதர் பவுல் தன் கடிதத்தை நிறைவுச் செய்யும் பகுதியே இன்றைய இரண்டாம் வாசகம்...

பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக!
திபா. 69: 13,16,29-30,35,36

ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர்.  பல்லவி

ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி

எளியோன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி

கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-



1. மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டாற்றுவதற்கே என்று கூறிய எம் இறைவா, இன்றைய காலக்கட்டத்தில் திருஅவையின் தலைமைஆயர் முதல் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இறைவார்த்தையின் ஒளியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும், அதன் மூலம் தங்களை அயலானைக் கண்டுகொண்டு உணர்ந்து அவர்களுக்குத் தொண்டாற்றத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நான் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்ற எம் இறைவா இன்று உலகில் நிலவும், தீவிரவாதம், மனிதநேயமற்ற, செயல்கள், இனக்கலவரங்கள், சாதி, மதப் பேதமின்றி அனைத்து மாந்தர்க்கும் இப்புவிச் சொந்தம் என்ற பரந்த மனநிலையை அளித்து இவர்கள் அனைவரும் உண்மையான மனமாற்றமடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஏழைகளுக்கு இறங்குகிறவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான் என்று இறைவார்த்தைக்கு ஏற்ப, ஏழை, பணக்காரக் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளைக் களைந்துத் தேவையில் உழல்வோருக்குத் தேவையான உதவிகளைச் செய்திடவும், ஆதரவற்றோர்க்கு ஆதரவளித்திடவும் எல்லோரும், எல்லாம் நிறைவாகப் பெற்றிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உன்னைப் படைத்தவனை உன் வாலிபநாட்களில் நினை என்று கூறிய எம் இறைவா, எம் இளையோர் இளமையில் உம்மை அதிகமாகத் தேடவும் இறையரசின் மதிப்பீடுகளைத் தனதாக்கி, தங்கள் வாழ்வால், கிறிஸ்துவுக்கும் சமூகத்திற்கும் சான்றுப் பகர்ந்திடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. குடும்பங்களின் பாதுகாவலான எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள எம் பெற்றோர், பெரியோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் பிரிவினைகள் கருத்துவேறுபாடுகள் இல்லாமல் நல்ல சமாரியர் போல வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.





www.anbinmadal.org


Wednesday, July 3, 2019

பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு





இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எசாயா 66:10-14c
கலாத்தியர். 6:14-18
லூக்கா 10:1-12,17-20


முன்னுரை:



இறைஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! கடந்த இரண்டு வாரங்களாக இயேசு தரும் சீடத்துவத்தின் தத்துவத்தைச் சிந்தித்தோம். தன்னை மறுப்பதும், தன் சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவை நாள்தோறும் பின்பற்றுதலுமே சீடத்துவம் என்று கற்பித்த இயேசு இன்றும் நமக்கு எல்லாம் துறந்துச் சென்ற சீடர்களின் இழப்புகள் மகிழ்ச்சித் தரும் சிறப்பு நிகழ்வாகக் கூறுவது “உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன” என்பது பற்றியே மகிழுங்கள் என்பதே!

இன்றைய சூழலில் உலகப் பற்றுக்களைக் களைந்து எளிமையாக வாழமுடியுமா? என்ற கேள்வி நம்மில் எழுகிறது. காரணம் இறைவனைப் பற்றியும் பிறரைப் பற்றியும் மறந்துச் சுயசிந்தனையில் ஊறிப்போனதே ஆகும். எனவே தான் அறிவுப்புப் பணியை ஏற்போர் இறை நம்பிக்கை மிகுந்தவராகவும், விவேகமுடையவராகவும் செயல்பட வேண்டும் என்று இயேசு நினைவுட்டுகின்றார். பிறருடன் நலமாக உறவுடன் வாழும்போது இயேசுவின் சமாதானத்தில் வாழ்கின்றோம். இத்தகைய அமைதியைத் தான் இயேசு நமக்கு விட்டுச் செல்வதாகக் கூறினார். இதையே நாம் பிறருக்குத் தரவேண்டும் என்று நம்மையும் பணிக்கின்றார். எனவே திருப்பலியில் குருவும் ஆண்டவருடைய சமாதானம் உங்களோடு இருப்பதாக என்று வாழ்த்துகின்றார். கிறிஸ்துவின் சமாதானத்தூதுவராக வாழ ஒவ்வொரு திருப்பலியிலும் சிறப்பு அழைப்புத் தருகின்றார் இறைமகன் இயேசு. இதனை ஏற்று இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்படுவோம். வாரீர்.


 வாசகமுன்னுரை:

 

முதல் வாசக முன்னுரை:


'தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன். எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்' என்று கடவுளைத் தாயாக எசாயா உருவகிக்கின்றார். பேறுகால வேதனையுற்றுத் தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய், புதிய உயிர் இந்த உலகிற்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் தன் வேதனையை மறந்துவிடுகின்றாள். பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டதும், அங்கே யூதா நாட்டினர் அனுபவத்தத் துயரங்கள், இழப்புகளும் பேறுகால வேதனைப் போன்றவைதாம். ஆனால் இன்று அவை மறைந்துவிட்டன. இறைவன் தரும் மீட்பு மற்றும் விடுதலை என்ற புதிய மகிழ்ச்சி அவர்களின் பழைய இழப்புக்களை மறக்கச் செய்கிறது. இந்நிகழ்வை விவரிக்கும் முதல் வாசகமான எசாயாவின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:



'என்னைப் பொறுத்தவரையில் உலகமும், உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்' என்கிறார் பவுல். உலகையும், பவுலையும் இணைப்பது சிலுவையும், அந்தச் சிலுவையில் தொங்கும் இயேசுவும். சிலுவையில் அறையப்பட்டிருப்பது வேதனையை, வலியைத் தந்தாலும், அந்த வலிதான் பவுலை இயேசுவோடும், உலகத்தோடும் இணைக்கிறது. தான் அறிவித்த நற்செய்தி, அந்த நற்செய்தியைத் தான் பெற்ற விதம், தன் பணி, தன் பணியால் கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டவர்கள் பெற்ற உரிமை வாழ்வு, அந்த உரிமை வாழ்வால் உந்தப் பெறும் தூய ஆவியானவரின் கனிகள் என எழுதி, கலாத்திய திருஅவையை நம்பிக்கையில் நிலைத்திருக்க அறிவுறுத்தும் திருத்தூதர் பவுல் தன் கடிதத்தை நிறைவுச் செய்யும் பகுதியே இன்றைய இரண்டாம் வாசகம்.

பதிலுரைப் பாடல்


திபா. 66: 1-3,4-5,6-7,16,20.

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!



அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சி யைப் புகழ்ந்து பாடுங்கள். அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை. என்று சொல்லுங்கள். பல்லவி


அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர். அவர்கள் உம் புகழ் பாடிடுவர். உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர். என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை. பல்லவி


கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார். ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார் கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! பல்லவி


கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


கொலோ 3: 15அ,16அ

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:



1.அறுவடையின் நாயகனே! எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் இறை நம்பிக்கை மிகுந்தவராகவும், விவேகமுடையவராகவும் செயல்படவும், இழப்புகளே மகிழ்ச்சி என்று அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், அறுவடைக்காகச் சிறப்பாக உழைக்கத் தேவையான ஞானத்தையும் உடல் நலத்தையும் நிறைவாய் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



2.எங்களை வளமான உமது நிறைவாழ்வுக்கு இட்டுச் செல்லும் இறைவா! எங்கள் குடும்பங்கள் பவுலடியார் கூறிப்படித் இயேசுவின் சிலுவையிலன்றி வேறெதிலும் ஒரு காலும் பெருமை பாராட்டாமல் இயேசுவின் அடிமைகளாக வாழவும் இறையரசுப் பணிகளை ஆர்வமுடன் செய்யவும் வேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



3. எம்மைச் செயல்வீரராய் மாற்றும் அன்புத் தந்தையே! எம் இறைவா! இன்றைய உலகில் குழப்பங்களும் போராட்டங்களும், அமைதியின்மையும், சுயநலப் போக்குகளும் மலிந்தக் கிடக்கின்ற சூழலில் அமைதியின் தூதுவராய் எம் உலக அரசியல் தலைவர்கள் சமாதானப் போக்கைக் கையாண்டு மக்களுக்கு நன்மைகள் செய்து வளமான வாழ்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



4. எம்மைப் புதுபடைப்பாய் மாற்றும் எம் இறைவா! பணிவிடைப் பெறுவதற்கன்றுப் பணிவிடைப் புரியவே வந்தேன் என்ற இயேசுவின் வார்த்தைகளை மனதில் கொண்டு எம் இளையோர் சிறந்த பணியாளராக உம் திருத்தூதர் தோமாவைப் போல் தன்னலமற்ற சேவையால் உலகமாந்தர்களை உம் பக்கம் ஈர்க்க வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


5. என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா! எங்கள் பங்கிலுள்ள நோயாளிகள், கைவிடப்பட்டோர், முதியோர், வறுமையுற்றோர் ஆகியோர் நலம் பெறவும், வளமையோடு வாழவும் உமது கருணையைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.