Tuesday, December 22, 2015

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். -25/12/2015

                                         கிறிஸ்து பிறப்புப் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
விடியற்காலைத் திருப்பலி

முன்னுரை:

கடவுள் மனிதனைத் தேடிவந்த திருநாள் தான் கிறிஸ்துமஸ் பெருவிழா. எனவே பாலன் இயேசுவின் வருகையால் பூவுலகம் களிகூர்கின்றது. பாவத் தளையில் சிக்குண்ட மனிதனை மீட்டு அவனுக்குப் புதுவாழ்வை வழங்க பாலன் இயேசு இப்பாரினில்  பிறந்த நாள்! நமது கிறிஸ்மஸ் விழாக் கொண்டாட்டத்தில் கிறிஸ்து மையமாக இருக்கிறாரா? கிறிஸ்து தான் கிறிஸ்மஸ் விழாவின் மையம். "கடவுள் நம்மோடு" இது தான் கிறிஸ்மஸ் விழாவின் மையக் கருத்து. ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்தக் கிறிஸதுவைக் கண்டுகொள்கிறோம் என்பது கேள்விக்குறியே?


அன்பர்களே! இன்று கிறிஸ்து பிறப்பின் விழாவை அகிலமே கொண்டாடி மகிழ்கின்றது. இந்த மகிழ்ச்சி யாருக்காக? ஏன்? எதற்காக? சற்று  சிந்திப்போம். நமக்கு வாழ்வைக் கொடுக்க வந்த தெய்வம் இயேசு. நம்மை வாழ வைக்கும் தெய்வம் இயேசு. எனவே அத்தகைய  இயேசுவிக்கு நம் வாழ்வில் முதலிடம் கொடுக்கின்றோமா? அல்லது அவரை நாம் வாழ்விலிருந்து ஒதுக்கி விடுகின்றோமா? என்பதை  சிந்தித்துப் பார்த்து  நம்மையே முழுமையாகத் தயாரிக்க இன்றைய அருள்வாக்குகள் நம்க்கு துணைபுரிகின்றன. இதனை மனதில் பதிவுச் செய்து கிறிஸ்து பிறப்புப் பெருவிழா திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டு மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் சீயோனிலிருந்து மீட்பு வருகிறது. அதன் மக்கள் ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று கூறும் இறைவாக்கினர் எசாயாவின் மீட்பைப் பற்றி நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளின் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூயஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். இதற்காகவே கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டன என்று திருத்தூதர் பவுல் நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வைப் பற்றி கூறும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல் 
திபா 97: 1,6,11-12
பல்லவி: பேரோளி இன்று நம்மேல் ஒளிரும் ஏனெனில் நமக்காக ஆண்டுவர் பிறந்துள்ளார்.

1.ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவுநாடுகள் களிகூர்வனவாக! வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. -பல்லவி

2.நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். -பல்லவி

மன்றாட்டுகள்:

1.மாபெரும் மகிழ்ச்சியை உம் மகனின் பிறப்பு வழியாக எமக்கு தந்த இறைவா! கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் மகிழ்ச்சி எம் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் என்று உலகமக்கள் அனைவரின் உள்ளத்தில் உண்மையான மகிழ்ச்சியையும், அமைதியையும் நிறைவாய் நிலைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.இடையர்களுக்கு உம் முதல் தரிசனத்தை காணும் பாக்கியத்தை கொடுத்த இறைவா!  நாங்களும் அவர்களைப் போல் எங்கள் வாழ்க்கையில் உமது வார்த்தைகளில் நம்பிக்கைக் கொண்டு அன்பு, இரக்கம், மனிதநேயம் கொண்டவர்களாக வாழவும்,  அவர்களைப்  போல் உமது அரசை பறைச்சாற்றவும் வேண்டிய  ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.மாட்டுதொழுவத்தில் பிறந்து உமது எளிமையை எமக்கு எடுத்துரைத்த இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ளவர்கள் இறைஅன்பும்,  இறைஅச்சமும் நிறைந்தவர்களாகவும், நேர்மையும், கட்டுப்பாட்டும் கொண்டவர்களாக உம் கரம் பற்றி வாழ வரந்தர வேண்டுமென்று  ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம். 

4. அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா! இந்த நல்ல நாளில் எமக்கு அடுத்திருப்போர்களின் தேவைகளை  உணர்ந்து அவர்களுக்கு தேவையான அன்பும், ஆதரவும், அடைக்கலமும், பொருளாதர வசதிகளை செய்து தர வேண்டிய நல்ல மனதை  தந்து இந்த கிறிஸ்மஸ் பெருவிழாவை அர்த்தமுள்ளதாய் கொண்டாட வேண்டிய வரம் அருள் தரம் வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.

அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment