Monday, November 5, 2018

பொதுக்காலம் ஆண்டின் 32-ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 32-ஆம் ஞாயிறுஇன்றைய வாசகங்கள்


1அரசர்கள் 17:10-16; 

எபிரேயர் 9:24-28 
மாற்கு 12:38-44

திருப்பலி முன்னுரை:


இன்று ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களைக் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.

 இன்றைய நற்செய்தியிலே வருகின்ற ஏழைக் கைம்பெண் அவரிடம் உள்ளதையெல்லாம் கடவுளுக்குக் கொடுத்து இயேசுவின் புகழ்ச்சிக்கு உரியவராகின்றார். நம்மில் யார் யார் தங்களிடம் உள்ளதிலிருந்து அல்லது உள்ளதையெல்லாம் தர்மம் செய்கின்றார்களோ அவர்களெல்லாம் கடவுளால் தவறாமல் உயர்த்தப்படுவார்கள்.

இந்த உண்மையைச் சுட்டிக்காட்ட விவிலியத்திலிருந்து இதோ இரு உதாரணங்கள். பழைய ஏற்பாட்டுக் காலத்திலே கடவுள் சாரிபாத்திலிருந்த ஒரு கைம்பெண்ணின் வாழ்க்கையை மட்டும்தான் உயர்த்திப் பிடித்தார். காரணம் அவர் உள்ளதிலிருந்து கொடுத்தார். புதிய ஏற்பாட்டில் எத்தனையோ பெண்கள் வாழ்ந்திருந்தாலும் ஒரே ஒரு பெண்ணை மட்டும் கடவுள் பெண்களுக்குள் ஆசிப் பெற்றவராக (லூக் 1:42), எல்லாத் தலைமுறையினரின் போற்றுதலுக்கும் உரியவராக உயர்த்தினார். 


 இறைவார்த்தையில் நம்பிக்கைக் கொண்டு அன்பால் உள்ளத்திலிருந்து, உள்ளதையெல்லாம் கொடுத்தால் இரு ஏழைக் கைம்பெண்களும், அன்னை மரியாளும் இறைவனால் உயர்த்தப்பட்டது போல் நாமும் உயர்த்தப்பட வேண்டும். எனவே இறைவார்த்தையில் நம்பிக்கையுடன் நாம்  வாழ இன்றைய திருப்பலி வழிபாட்டில் சிறப்பாக மன்றாடுவோம்.


வாசகமுன்னுரை:முதல் வாசக முன்னுரை


பழைய ஏற்பாட்டுக் காலத்திலே பாதிக்கப்பட்டஇஸ்ரயேல் மக்கள் சாரிபாத்து நகரில் வாழ்ந்தார்கள். ஆனால் கடவுள்  கைம்பெண்ணின் வாழ்க்கையை மட்டும்தான் உயர்த்திப் பிடித்தார். காரணம் அவர் உள்ளதிலிருந்து கொடுத்தார்.  தன்னைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல் கடவுளின் வார்த்தைகளை நம்பினாள். உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும்" (எரே 49:11) என்று கடவுள் எரேமியா வாயிலாகக் கூறியது சாரிபாத் கைம்பெண் வாழ்வில் நிறைவேறுகிறது. இறைவார்த்தை நம்மில் நிறைவேற இவ்வாசகத்தை நம்பிக்கையுடன் நம் மனங்களில் பதிவுச் செய்திடுவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை


அன்று மோசே இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து ஈசோப்புச் செடியால் உடன்படிக்கை ஏட்டின்மீதும் மக்கள் அனைவர்மீதும் தெளித்தார்; . இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறைத் தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார் என்று எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் கேட்டு அவரின் வருகைக்காகக் காத்திருப்போம்.பதிலுரைப் பாடல்

திபா 146: 7. 8-9. 9-10

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். -பல்லவி

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:


அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.எம் அன்புத் தந்தையாம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப, திருஅவையை வழிநடத்தவும், பணி வாழ்வே திருஅவையின் மையம் என்னும் மனநிலை திருஅவையில் மலரவும் உம் ஆவியாரின் கொடைகளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்களை நீதியுடன் வழிநடத்தும் வெற்றி வேந்தனே! இன்றைய சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகள் நீங்கி, கடின உழைப்பின் மூலம் எங்கள் குடும்பங்களின் வாழ்வு மலரவும், எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நல்லவராய் வாழ்ந்து உமக்குரியவர்களாகத் தேர்ந்துக் கொள்ளப்படவும், உம் பணியாளராக வாழவும் வேண்டிய வரங்களைத் தர ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3.இளமை வாழ்வதற்காக என்று மொழிந்த எம் இறைவா! இளையோர் திருஅவைக்காக, திருஅவை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேடி, ஞானத்தை நிறைவாகப் பெற்று, தங்கள் ஆன்மீக வாழ்விலும், சமுதாயத்தில் பண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த
விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்ற இறைவா! நாங்கள் நீர் கொடுத்த தூய்மை என்னும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி,  உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப் புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.பேரின்ப வீட்டில் எங்களுக்கு இடம் தரும் எம் அன்பு இறைவா! மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org

Wednesday, October 31, 2018

பொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறு

 

இன்றைய வாசகங்கள்

திருப்பலி முன்னுரை:


இன்று ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களைக் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.

கிறிஸ்தவ மறையின் ஆணிவேர் அன்பு. உலகின் உண்மையான மதங்கள் அனைத்துக்கும் ஆணிவேர் அன்புதான். இந்த அன்பு முப்பரிமாணம் கொண்டது. இந்த முப்பரிமாண அன்பைப்பற்றி இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லித் தருகிறார். "இஸ்ரயேலே கேள்" என்ற சிறப்பான அறைகூவலுடன் இயேசு இம்மூன்றுக் கட்டளைகளைக் கூறுகிறார்.

இறைவனை அன்புச் செய்! தன்னையும் அன்புச் செய்! பிறரையும் செய்!

மூன்று கட்டளைகளா என்று நாம் ஆச்சரியப்படலாம். இறையன்பு, பிறரன்பு என்ற இரு கட்டளைகளைத்தானே இயேசு அளித்துள்ளார் என்ற கேள்வியையும் எழுப்பலாம். இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், ஈர் அன்புகளைப் பற்றி இயேசு பேசுவதை உணரலாம். 'ஒருவர் அடுத்திருப்பவர் மீது அன்பு கொள்ள வேண்டும்' என்று மட்டும் இயேசு சொல்லவில்லை. மாறாக, ‘ஒருவர் தன் மீது அன்புக் கூர்வதுபோல் அடுத்தவர் மீது அன்பு கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

எனவே இன்றைய வாசகங்களைக் கவனமுடன் கேட்டு இறைவனை அன்புச் செய்யவும், தன்னே அன்புச் செய்யவும், பிறரையும் அன்புச் செய்யவும் இன்றைய திருப்பலி வழிபாட்டில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் அன்புக் கட்டளையை யூதர்கள் தங்களது கதவு நிலைகளில் மட்டுமல்ல தங்கள் இதயத்திலும் இல்லத்திலும் தாங்கி வாழ்ந்தனர். இக்கட்டளைகளில் கடவுளை மனிதர்கள் முழு இதயத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்ய வேண்டும் என்று அழைக்கின்றது. கலைமான் நீரோடைக்காக ஏங்கித் தவிப்பதுபோல உயிருள்ள இறைவன் மீது தாகம் கொண்டு அவரைத் தேடி அன்பு செய்ய மோசேயின் வார்த்தைகள் வழியாகக் கடவுள் நம்மை அழைப்பதைக் கவனமுடன் நம் மனங்களில் பதிவுச் செய்திடுவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை


மனிதர்கள் சாவுக்கு ஆளாவதால் தங்கள் குருத்துவப் பணியில் நிலையாய் இருக்கமுடியவில்லை. ஆனால் இயேசுவோ என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார். முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார்; நம் தலைமைக் குருவும் அவரே! தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி நம்மை மீட்டுள்ளார். என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார். என்று இயேசுவின் குருத்துவ மேன்மையை எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 18:1-2, 2-3. 46,50

பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.


என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். -பல்லவி

என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண், போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். -பல்லவி

ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப்பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.அன்பின் இருப்பிடமான எம் இறைவா, உம் அன்புத் திருஅவையைக் காத்து வழிநடத்தி இறந்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், அனைவரும் உம் இரக்கமும் அருளையும் பொழிந்து உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.விண்ணகவீட்டில் நிறைவாழ்வுத் தரும் எம் இறைவா, எம் நாட்டை ஆண்டு இறந்த தலைவர்கள், பொதுமக்கள், தியாகிகள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். உயிர்தெழுதலும், வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கைக் கொள்வோர் இறப்பிலும் வாழ்வார் என்ற உம்வார்த்தையில் நம்பிக்கைகொண்டு இறந்த அனைவரின் பாவங்களைப் போக்கி அவர்களை உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவுச் செய்யும் தந்தையே! எம் பங்கை வழிநடத்தி இறந்த பங்குக் குருக்களுக்காவும், பங்குமக்களுக்காகவும் மன்றாடுகிறோம். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைக் கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.அனைவரையும் உயிர்த்தெழச் செய்யும் அன்புத் தந்தையே இறைவா! யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகச் சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்தப் பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனைக் குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.எல்லாருக்கும் எல்லாம் ஆன எம் அன்பு இறைவா! மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org

Monday, October 29, 2018

அக்டோபர் 31 2018 செபமாலை மாத நிறைவு நாள் திருப்பலி

அக்டோபர் 31 2018 செபமாலை மாத நிறைவு நாள் திருப்பலி.


திருப்பலி முன்னுரை


இன்று செபமாலை மாதம் முடியும் தறுவாயில் அன்னை மரியாளுக்கு மரியதையும், வணக்கமும் செலுத்த வந்துள்ள இறைமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள். வானத்தூதரின் மங்களச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மரியாவின் அச்சமும் அதற்கு வானத்தூதரின் பதிலும், மரியாவை உம் வார்த்தையின்படியே என்று ஏற்றுக் கொள்ளவைத்தது. வானத்தூதரின் வார்த்தையை ஏற்றுக் கொண்ட மாத்திரத்தில் 'வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிக்கொண்டார்”. இந்த மகத்தானச் செயலுக்கு மரியாவின் தாழ்ச்சித் தான், இவ்வுலகின் பெரும் மாற்றத்தை உருவாக்கி, ஒட்டு மொத்த மனித இனத்திற்கு விடுதலைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து நமக்கும் இவ்வார்த்தை அளிக்கப்படுகின்றது. நாமும் அடுத்தவருக்காக நம்மையே அளிக்க முன்வருவோம். செபமாலையைத் தொடர்ந்திடவும். அன்னையின் சீடர்களாய், அவரது மகன் இறைஇயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்திட இன்றைய திருப்பலியில் செபிப்போம்.


முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் ஆகாசு அடையாளம் கேட்க மறுத்தபோதிலும் ஆண்டவராகிய கடவுள் நமக்கு மீட்புக்கு ஓர் ஆண்மகவைத் தருவதாக வாக்களிக்கின்றார். கடவுளகிய நான் எள்றும் உங்களோடு இருப்பேன் மரியாளை முன்குறித்துக் கூறியதைக் கவனமுடன் கேட்போம்.


முதல் வாசகம்
எசாயா 7: 10-15,8:10இஅந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார். அதற்கு ஆகாசு, “நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்றார். அதற்கு எசாயா: “தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்.


*பதிலுரைப்பாடல்*யூதி 13: 18அஆ  19-20அ  (பல்லவி 15:9ஈ)

*பல்லவி:  நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே!*


1.“மகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும்விட நீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி!  பல்லவி

2.கடவுளின் ஆற்றலை நினைவுகூரும் மாந்தரின் உள்ளத்திலிருந்து உனது நம்பிக்கை ஒருபோதும் நீங்காது. இதனால் இறவாப் புகழ் பெறக் கடவுள் உனக்கு அருள்வாராக;  பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை:


திருத்தூதர் பவுல் இறைமகன் இயேசு பெண்ணிடம் பிறந்தவராகவும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் இருப்பார். இதன் மூலம் நாம் கடவுளின் உரிமைப்பேறு உடையவர்களாக இருப்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகம்:
கலாத்தியர் 4:4-7


சகோதரர் சகோதரிகளே, காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி “அப்பா, தந்தையே எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.


*நற்செய்திக்கு முன் வாழ்த்துரை*


அல்லேலுயா, அல்லேலுயா அருள்மிகப் பெற்றவரே* வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்.பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்! அல்லேலுயா, அல்லேலுயா

நற்செய்தி 
லூக்கா 1:39-47


அக்காலத்தில் அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார். அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது”.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1.உம் திருக்குடும்பம் வழியாக எமக்கு வழிகாட்டிய இறைவா! திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரின் உள்ளத்தில் அன்னை மரியாளின் கருசணை அன்பையும், பரிவிரக்கத்தையும் நிறைவாய் பொழிந்து இறையரசை அறிவிக்கும் கருவிகளாய் வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.அன்னை மரியாளை முன்மாதிரியாகத் தந்த இறைவா!, செபமாலை மாதம் முழுவதும் பெற்ற மகிழ்ச்சியை எங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களோடும் பகிர்ந்துக் கொள்ளவும், அவர்களின் வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திட உதவிடவும் வரமருளு வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பைப் பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா! இந்த நல்ல நாளில் கணவன் மனைவி பிள்ளைகள் என்று மகிழ்வுடன் வாழ, இவ்வலகில் எதிர்நீச்சல் போட்டு அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த அன்னை மரியாளின் பண்புகளை ஏற்று வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்ற அன்னை வழியாக அழைத்த இறைவா! நாங்கள் நீர் கொடுத்த பரிசுத்தம் என்றும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப் புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

*குறிப்பு : இன்றைய வாசகங்கள் திருப்பலிப் புத்தகத்திலிருந்து அன்னை மரியாளுக்கான திருப்பலிகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.*


Tuesday, October 23, 2018

ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு

                            ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு 
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எரேமியா 31:7-9
எபிரேயர் 5:1-6
மாற்கு 10:46-52திருப்பலி முன்னுரை:


இன்று ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களைக் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெறும் இஸ்ரயேல் மக்களை இறைவன் எப்படி வழிநடத்திச் செல்வார் என்று எரேமியா இறைவாக்குரைக்கிறார். அழுகையோடு அவர்கள் வந்தாலும், ஆறுதலோடு அணைத்துக் கொள்வார் இறைவன் என இறைவனின் புதிய வாக்குறுதியை முன்வைக்கின்றார் எரேமியா.

இயேசுவைத் தலைமைக்குரு என்று முன்வைக்கும் இத்திருமடலின் ஆசிரியர் அவர் எப்படித் தலைமைக்குருவானார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகப்பகுதியில் எழுதுகின்றார். இயேசுவுக்கு இந்த அழைப்புக் கடவுளிடமிருந்துதான் வருகிறது. 'நீர் என் மைந்தர்.' என்று கடவுள் அவரைத் தேர்ந்துக் கொள்கிறார். தான் தெரிந்து கொள்ளப்பட்ட பணியை இயேசுவும் இனிதே செய்து முடிக்கின்றார்.

'தாவீதின் மகன்' - இதுவரை இயேசுவுக்குப் பயன்படுத்தாத ஒரு தலைப்பை இங்குப் பயன்படுத்துகிறார் மாற்கு. . 'என்மேல் இரங்கும்' - நாம் திருப்பலியில் பயன்படுத்தும் 'ஆண்டவரே இரக்கமாயிரும்' என்ற மன்னிப்பு வழிபாடு உருவானது இன்றைய நற்செய்திப்பகுதியிலிருந்துதான். 'மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளிக் குதிக்கின்றார்' - பார்வைப் பெறுவதற்குமுன்னே தன் பிச்சையெடுக்கும் தொழிலுக்கு ஆதாரமான மேலுடையைத் தூக்கி எறிகின்றார்.

ஆக, மேலானதொன்றுக் கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும். இன்று கடவுள் என்னிடம் 'உனக்கு நான் என்ன செய்யணும்?' என்று கேட்டால், பர்த்திமேயு போல என்னால் உடனடியாகப் பதில் சொல்ல முடியுமா? பர்த்திமேயுக்கு இருந்த இலக்குத் தெளிவு என்னிடம் இருக்கிறதா? இவற்றையெல்லாம் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்க இன்றைய திருப்பலி வழிபாட்டில் மன்றாடுவோம்.


வாசகமுன்னுரை:


இன்றைய முதல் வாசகம்


இன்றைய முதல் வாசகத்தில் பாரவோன் அடிமைத்ததனத்தில் அல்லலுற்றத் தன் மக்களை இறைவன், மோசேயின் தலைமையில் ஒன்றிணைத்துப் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்து வந்தார். அழைத்தவர் விடுத்த கட்டளைகளை மறந்தார்கள். அவர்களுக்குப் புது வாழ்வுத் தர இறைவாக்கினர் எரேமியாவை அழைத்தார். அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள். ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவோன் என்று கூறும் நம் கடவுள் நம்மை ஆதரித்து வழிநடத்தும் உண்மைத் தந்தை இந்த நம்பிக்கைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.இரண்டாம் வாசகம்


இயேசுவைத் தலைமைக்குரு என்று முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் அவர் எப்படித் தலைமைக்குருவானார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகப்பகுதியில் எழுதுகின்றார். நம் வலுவிக்மையைப் போக்க இயேசுவுக்கு அழைப்பு வந்ததைப் போன்று நாமும் பிறருடைய துன்பங்களைப் போக்க இயேசு நமக்கும் அழைப்பு விடுக்கின்றார். நம்மில் எத்தனைபேர் இந்த அழைப்பை ஏற்று வாழ முன் வருகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற இரண்டாம் வாசகம் அழைக்கின்றது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்திபா 126: 1-2. 2-3. 4-5. 6

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.
சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; -பல்லவி

"ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்" என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி

ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி
விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது-வரும்போது-அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியி்ன் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.அனைத்தையும் படைத்தாளும் எம் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தாரும், பொதுநிலையினர் அனைவரும் மனம் திரும்புவதற்கு நற்செய்தி விடுக்கும் அழைப்பை ஏற்று, எளியோருள் எளியோராக மாறி, பணிபுரிய வேண்டும் என்ற இயேசுவின் அழைப்பைத் தங்கள் வாழ்வில் செயல்படுத்த வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்கள் நம்பிக்கையான எம் இறைவா! நம் குடும்பம், நண்பர்கள், ஏன் இந்த உலகமே நமக்கு எதிராக இருந்தாலும், நாம் கடவுளை இறுகப் பற்றிக்கொண்டால் அவர் எல்லாவற்றையும் நம் சார்பாக மாற்றிப்போடுவார் என்ற மேலான நம்பிக்கையும், மேலானதொன்றுக் கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும் என்ற உயரிய எண்ணங்களைப் பெற வேண்டிய வரங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.ஏழைகளின் நண்பனே எம் இறைவா! இன்று எம் பாரதநாட்டில் ஏழைகள் நசுக்கப்பட்டு அவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் இல்லாமல் விவசாயம் நலிந்து அவர்கள் நேரிடையாக விற்பனைச் செய்யமுடியாத நிலை, அரசால் கொடுக்கப்படும் மானியம் மறுக்கப்படுதல் மின்பற்றாக்குறை இவற்றால் அவதிப்படும் என் மக்களுக்கு நல்வாழ்வு ஏற்றம் பெற்று அவர்கள் சிறப்புடன் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.இன்றைய நவீனக் காலத்தில் உலகில் இவ்வுலக மகுடங்களைத் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், சிலுவையை மகுடமாகவும், தன் உயிரைப் பிறருக்கு வழங்குவதை வாழ்வின் நோக்கமாகவும் இயேசு முன்வைத்தார் என்பதை உணர்ந்து எம் இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைப் பின்பற்றி வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. நாம் சிறப்பிக்கும் 92வது மறைபரப்புப்பணி நாளான இன்று, "இளையோருடன் இணைந்து, நற்செய்தியை அனைவருக்கும் கொணர்வோமாக" என்ற தலைப்பில் இளையோரை மையப்படுத்தி, உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெற்றுவரும் வேளையில் இளையோருடன் இணைந்து, நற்செய்தியை உலகெங்கும் கொண்டு சேர்க்க, திருஅவை எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பெற்று இறைசாட்சிகளாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

Tuesday, October 16, 2018

ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எசாயா 53:10-11
எபிரேயர் 4:14-16
மாற்கு 10:35-45திருப்பலி முன்னுரை:


இன்று ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு. இறைவனின் திருவருள் நாடி ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை நம் அன்பு நாயகன் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம். இன்றைய நற்செய்திப் பதவி மோகத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது. எசாயா ஆண்டவரின் துன்புறும் ஊழியரைப் பற்றி எடுத்துரைக்கிறார். எசாயாவின் வார்த்தைகளைக் கொண்டே இயேசு தன் சீடர்களின் தவறான எண்ணங்களை மாற்றினார். இத்தகைய சவால் நிறைந்த கடுமையான வாழ்வை யாரால் வாழமுடியும்? இது சாத்தியமா? என்ற கேள்விக்குப் பதிலாக இரண்டாம் வாசகம் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

இயேசு தன் பாடுகளைப் பற்றி மூன்று முறை மாற்கு நற்செய்தியில் எடுத்துரைக்கின்றார். ஆனால் அவரின் சீடர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு அவருக்கு அருகில் யார் இருப்பது என்பதையே விவாதித்து வருகிறார்கள். ஆனால் மனுமகனோப் பணிவிடை ஏற்பதற்கு அன்று பணிவிடைப் புரியவே வந்தேன் என்றார்.

தன்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னைப் போல் பாடுகள் படவேண்டுமென்றும், உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர்கள் உங்கள் தொண்டராய் இருக்கட்டும் என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். பணிவிடைப் புரிவது என்பது மற்றவர்களின் சுமைகளைப் பகிர்ந்துகொள்வதிலும், தாழ்ச்சிளோடு ஆறுதலாகத் தன் தோள் கொடுப்பதிலும் தான் அடங்கியுள்ளது என்பதை நன்கு உணர்வோம். இதைச் செயல்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளை நம் ஆண்டவரிடம் ஒப்படைப்போம் . அவரே நம்மை நல்வழிப்படுத்துவார். எனவே இவற்றை உணர்த்தும் இன்றைய திருப்பலி வழிபாட்டில் மன்றாடுவோம்.


வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா இயேசுவைத் துன்புரும் ஊழியனாக நமக்கு முன்னறிவிக்கின்றார். எசாயா இறைவாக்கினர் துன்புறும் ஊழியனைப் பற்றி நான்கு இடங்களில் குறிப்பிடுகின்றார். அவர் சிறுமைப்படுத்தப்பட்டலும் வாயைத் திறவாதிருந்தார். அவர் தம் உயிரைக் குற்ற நீக்கப்பலியாகத் தந்தார். ஆண்டவர் திருவுளம் அவர் கையில் சிறப்புறும் என்ற இயேசுவின் பாடுகளைப்பற்றி முன்னுரைக்கின்றார். இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை


இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியில் நமது தலைமைக்குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல. நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவுக் கூடிய அருளைக் கண்டையவும் அருள் நிறைந்த இறைஅரியணைத் துணிவுடன் அணுகிச் செல்வோம். இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 33: 4-5. 18-19. 20,22

பல்லவி: உம்மையே நாங்கள் நம்புவதால், உம் பேரன்பு எம்மீது இருப்பதாக!
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி

நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:1. அருளும் இரக்கமும் கொண்ட எம் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள்,  அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள்  அனைவரும் பணிவிடை ஏற்பதற்கு அன்று, பணிவிடைப் புரிவதில் தான் தலைமைப் பண்பு அடங்கியிருக்கின்றது என்ற இயேசுவின் அழைப்பை உணர்ந்தவர்களாய் கிறிஸ்துவின் சீடர்களாய்  இவ்வுலகில் வாழ வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உம் பேரன்பால் பூவுலகை  நிறைந்துள்ள எம் இறைவா! சவால்கள் நிறைந்த எம் இல்லற வாழ்க்கையில்  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உம் மைந்தனைப்போல  பணிகளை செய்திடவும், சிலுவை இன்றி வெற்றி இல்லை என்ற இயேசுவின் மொழிகளை மனதில் பதிவு செய்து, ஆறுதல் தேடுவோருக்கு தோள் கொடுத்து தங்கிடவும் அருள் வரம் பொழிய வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

3. உம் பேரன்பால் உறவுகளை பேணிக்காக்கும்  உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் உமது விழுமியங்களை உணர்ந்து பணி செய்யவே என்ற உன்னத நோக்கத்தை வாழ்வில் கடைபிடித்து  மக்களின் நல்வாழ்வில் சுயநலமின்றி கவனம் செலுத்தவும், ஏழை எளியோர், ஒதுக்கப்பட்டோர் அனைவரின் நல்வாழ்விற்காக சேவைப் பரிந்திடவும் நல்மனம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உம் பேரன்பால் அனைவரையும் வழிநடத்தும் அன்புத்தந்தையே! மாறிவரும் இன்றைய நவீன உலகில் ஏற்படும் கருத்து மாற்றங்களாலும், சமூகத்திற்கு எதிரான தீய சிந்தனைகளாலும், இளமையில் இறைபிரசன்னத்தை உணராமல் எதிர்கால வாழ்வை இழந்த எம் இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளை பின்பற்றி வாழ வரமருள வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.நேர்மையின் நாயகனான எம் இறைவா! என் வேண்டுதலை உற்றுக் கேட்பவரே! எம் இறைவா! தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், கைம்பெண்கள், புலம்பெயர்ந்து வாழ்வோர், அநாதைகள் ஆகியோருக்காக உம்மை மன்றாடுகிறோம். இவர்களின் வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்திடவும், உடல் நலத்திலும் பொருள் வளத்திலும் ஏற்றம் பெற்று வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  


www.anbinmadal.org


Thursday, October 11, 2018

ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


சாலமோன் ஞானம் 7:7-11
எபிரேயர் 4:12-13
மாற்கு 10:17-30திருப்பலி முன்னுரை:


இன்று ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம். இன்றைய நற்செய்திச் செல்வந்தரின் மனநிலைப் பற்றி எடுத்துரைக்கிறது. சாலமோன் கடவுளிடம் தனக்கு ஞானத்தைக் கேட்டார். ஏனென்றால் ஞானம் கடவுள் தரும் கொடையாகும். ஞானம் கிடைத்துவிட்டால் அத்துடன் அனைத்துச் செல்வங்களும் சேர்ந்தே வந்துவிடும். இந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ள இறைவார்த்தையின் ஒளியில் நடப்பதே சாலச்சிறந்ததாகும்.

இன்று இயேசுவிடம் வந்த செல்வந்தன் கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய விரும்பினான். ஆனால் இயேசுவோ 'கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்துகின்றார். எனவே நிலைவாழ்வுக்குச் செல்லப் பற்றற்ற வாழ்வே தேவை என்பதை உணர்ந்துப் பரம்பொருளாம் இறைவனைப் பற்றிக் கொள்ளுவோம். பின்பு வந்து பாரும் என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து ஞானத்தைப் பெறுவோம். இலவசமாய் இறைவன் தரும் நிறை வாழ்வைப்
பரிசாகப் பெற்றுக்கொள்வோம். எனவே இவற்றை உணர்த்தும் இன்றைய திருப்பலியின் இறைவார்த்தைகளை மனதில் பதிவு செய்து இத்திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்போம்..
வாசகமுன்னுரை:முதல் வாசகம்:


பிறப்பிலும், வளர்ச்சியிலும் எல்லாரையும் போல ஒத்திருத்த சாலமோன், எல்லாரும் பெற்றிருக்கும் ஒன்றைவிடத் தான் சிறந்ததைப் பெற்றிருக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இறைவனிடம் ஞானத்தை வேண்டிப் பெறுகின்றார். தான் மன்றாடியதால் இறைவனின் ஞானத்தின் ஆவித் தன்னிடம் பொழியப்பட்டது என்று சொல்லும் அவர் ஞானத்தின் மேன்மையை இன்றைய முதல் வாசகப் பகுதியில் விவரிக்கின்றார். . அதிகாரத்தைவிட மேலானது செல்வத்தைவிட மேலானது உடல்நலத்தைவிட, அழகைவிட மேலானது ஞானம். அது வந்ததால் தன்னிடம் எல்லாம் வந்து சேர்ந்தன என ஞானத்திற்குப் புகழாரம் சூட்டுகின்றார் சாலமோன். இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகம்:


இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியில் இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு தந்த மீட்பை அந்த மீட்பிற்குக் கொடுக்கும் பதிலும் எப்படி இருக்க வேண்டும் என எழுதுகிறார். இதன் பின்னணியில் கடவுளுடைய வார்த்தையின் இயல்பு என்ன என்பதைப் பதிவு செய்கின்றார். நல்லது எது, தீயது என முடிவு செய்பவர் நானோ, எனக்கு அடுத்திருப்பவரோ, நான் சார்ந்திருக்கும் மதம் அல்ல. மாறாக, என்னைப் படைத்தவரே. அவரின் முடிவை நான் எப்படி அறிந்துகொள்வது? அவரின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள் வழியாகவே என்ற இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 90: 12-13. 14-15. 16-17
பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்.

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;
அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13 ஆண்டவரே, திரும்பி வாரும்;
எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;
அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
15 எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச்செய்யும். -பல்லவி

16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.
17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!
நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!
ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

 

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:1. ஞானமென்னும் அருட்கொடைகளை சாலமோனுக்கு கொடுத்த எம் இறைவா!  எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள்  அனைவரும் கடவுளின் ஆசீர் பெற்றவர் என்பதை நாங்கள் உணர அல்லது பிறர்முன் துலங்க, நாங்கள் எங்கள் முழு ஆற்றலையும், திறன்களையும் பயன்படுத்த வேண்டிய வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. என்றும் எங்களை நிறைவாய் ஆசீர்வதிக்கும் எம் இறைவா! இன்று நாங்கள் ஞானம் என்ற உம் கொடையைப் பெற்று இயேசுகிறிஸ்துவை எம் நிலைவாழ்வாகப் பெற்றவும்,  நீ ஆசீர்வதிக்கப்படுவாய்! என்று தினமும் நம் கண்முன் கொண்டிருக்கும் இறைவார்த்தை, நாங்களும் மற்றவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று எங்களைத் தூண்டவும், இறைவார்த்தையால்
ஆசீர்பெற்ற வாழ்வை வாழவும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

3. உறவுடன் வாழ ஒவ்வொருவரையும் அழைக்கும் உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தங்களை அழைத்து தங்களுக்குப் பணி நியமனம் செய்த அரசின் நோக்கத்துக்க விசுவாசமாய் இருக்கும் விதத்தில் சிறந்த திட்டமிடுதலுடன் பாகுபாடின்றி பணியாற்றி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து நற்பெயர் ஈட்ட முயலவேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அகமுவந்தழைக்கும் அன்புத்தந்தையே இறைவா! இயேசுகிறிஸ்துவிடம் புன்னகையோடு வந்தவர் அனைவரும் முகவாட்டத்தோடு செல்வதில்லை என்ற நிலையும், தன்னலமற்ற சேவையால் இம்மையிலும் மறுமையிலும் எல்லாச் செல்வங்களைப் பெற்றவர்களாய் வலம் வரும் வரம் வேண்டியும், இறையாட்சிப் பணிகளை ஏற்ற காலத்தில், ஏற்ற இடத்தில் ஏற்ற முறையில் ஆற்றவேண்டிய வரத்தையும் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 


www.anbinmadal.org


Thursday, October 4, 2018

ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

  ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

 

 

 

இன்றைய வாசகங்கள்திருப்பலி முன்னுரை:


இயேசுகிறிஸ்துவின் அருமையான சகோதர சகோதரிகளே! உங்கள்  அனைவரையும் ஆண்டின் 27ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ அன்புடன் அழைக்கின்றோம். திருமணம் என்னும் திருவருட்சாதனத்தைப்  பற்றி இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.  ஒரு ஆணும் பெண்ணும்  சேர்ந்த வாழ்வதைச் சமூகம் அங்கீகரிக்கும்போது திருமணம். அதே திருமணம்
திருச்சபை அங்கீகரிக்கும்போது அது திருவருட்சாதனம். குடும்பம் என்னும் குட்டித் திருச்சபை நலமாக இருந்தால் தான் உலகம் நன்றாக இருக்கும்.

கணவன் மனைவி இவர்களிடையே நிலவும் சமத்துவம் அன்பின் சின்னங்கள்.இறைமகன் இயேச அழகாக தெளிவாக வலியுறுத்துவதும் இதுவே. கடவுள் இணைத்தை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்ற வார்த்தை தான். எனவே நாம் திருமணத்தில்  நம் அழைப்பை ஏற்றுக்கொண்டு இறுதிவரை பிரமாணிக்கத்துடன்வாழவும், சம் குடும்பங்கள் 
திருக்குடும்பங்களாக திகழந்திட மாக அனைவரும் ஒருமனத்தவராய் திருப்பலியில் இணைந்திடுவோம். வாசக முன்னுரை:

 

முதல் வாசக முன்னுரை


முதல் வாசகத்தில்   கடவுள் முதல் படைப்பு நிகழ்வில் மனிதர்களை ஆணும், பெண்ணுமாக கடவுள் தன் சாயலில் படைக்கின்றார். இரண்டாம் நிகழ்வில் முதலில் ஆணும்(ஆதாமும்) இரண்டாவதாக பெண்ணும் (ஏவாளும்)
படைக்கப்படுகின்றனர். திருமண உறவு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடப்பது என்றும், இது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட உறவு என்றும், இந்த உறவில் இறைவனே சான்றாக இருக்கின்றார் என்றும், இந்த உறவினால் ஆண்-பெண்  உறவிலே பெரிய மாற்றம் இருக்கிறது என்றும் முன்வைக்கிறது தொடக்க நூல்.இதனை கவனமுடன் வாசிக்க கேட்போம்
 

இரண்டாம் வாசக முன்னுரை


இரண்டாம் வாசகத்தில் 'கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார்.' ஆக, படைப்பு அனைத்தும் கடவுளுக்காக அவரின் திருவுளம் நிறைவேற்றுவதற்காகப் படைக்கப்பட்டது.  படைப்புப் பொருளான மனிதர் மற்றவர்கள்மேல் ஆட்சி செலுத்த அல்லது அடிமைப்படுத்த அவர்களுக்கு உரிமை இல்லை. 'துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார்.' துன்பம் என்பது மனித குலத்தின் குறை அல்லது பலவீனம் அல்ல.  இந்த உணர்வைத்தான் கடவுளின் மகனும் தன்மேல் சுமந்து கொண்டார். இந்த துன்பம் என்ற உணர்வைத்தான் இயேசு மீட்பு கொண்டுவரும் வழியாகப் பயன்படுத்திக் கொண்டார். இக்கருத்துக்களை புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தை வாசிக்க கேட்போம்.
 

பதிலுரைப் பாடல்


திபா 128: 1-2. 3. 4-5. 6

பல்லவி: உம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!

1.ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!  உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி
 
2.உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி
 
3.ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.  ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி
 
4.நீர் உம் பிள்ளைகளின்  காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக! பல்லவி
 

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:


1.எம் அன்பு தந்தையாம் இறைவா!  எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும்  அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப, திருஅவையை வழிநடத்தவும், திருச்சபை நிறுவன திருச்சபையாக அல்லாமல் பணி வாழ்வே திருச்சபையின் மையம் என்னும் மனநிலை திருச்சபையில் மலர இறைவா உமை மன்றாடுகிறோம்.

2.இன்றைய சமூகத்தில் காணப்படும் சாதி, மதம், இனம், மொழி வேறுப்பாடு, சுயநலம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் திருச்சபையில் மறைந்து,  பரந்த உண்மையான கிறிஸ்து இயேசுவின் மனநிலை எல்லோரிலும் மலர, ஏழைகளின் வாழ்வு மலர, திருச்சபையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி பல முன்னேற்ற பாதையில் மக்களை வழி நடத்த வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3.அன்பு தந்தையே இறைவா!  இன்றைய நற்செய்தியின் மையமாய் அமைந்துள்ள குடும்ப வாழ்வும், வ்வாழ்விற்கு, மையமாய் விளங்கும் பெற்றோர்களை பேணி பாதுகாத்து,  மறந்தபோன இன்றைய மனிதவாழ்வு திருமணத்தின் புனிதத் தன்மையும் குடும்ப வாழ்வின் மையத்தையும் உணர்ந்தவர்களாக, தொடக்கக்கால கிறிஸ்தவர்களிடத்தில் இருந்த ஒன்றிப்பும் வார்த்தை வழிபாடும், இன்று நம் அனைவரிலும் புதுப்பிக்க தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று  உமை மன்றாடுகிறோம்.

4.எங்கள் அன்பு தந்தையே இறைவா! உலகில் நடைபெறும் பயங்கரவாதம் இனவாதம், பருவநிலைமாற்றங்கள், அதனால் ஏற்படும் இயற்கை அழிவுகள் இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் தவறுகள் இவை அனைத்தும் உமது  இறை இரக்கத்தினால் மாற்றம் பெற்று, படைப்பின் மேன்மையை மனிதன் உணர்ந்து மனித வாழ்வு மேம்பட  உமது அருளை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org

Tuesday, September 25, 2018

ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எண்ணிக்கை 11:25-29
யாக்கோபு 5:1-6
மாற்கு 9:38-48

முன்னுரை:

 
இன்று ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறை வழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம். இன்றைய நற்செய்தி மனிதனின் பொறமையைப் பற்றி எடுத்துரைக்கிறது. மோசேயின் கூட்டத்தில் இல்லாமல் கூடாரத்தில் இருந்த இருவர் இறைவாக்கு உரைக்கின்றார்கள். மோசே தடுக்கவில்லை. அஃது அவரின் தாராளக் குணத்தைக் காட்டுகிறது. திருத்தூதர் யாக்கோபு செல்வத்தின் நிலையாமையைப் பற்றித் தன் மடலில் விவரிக்கிறார். நாம் நலிந்தவர்களுக்கு எதிராகச் செயல்படும்போது இறைவனுக்கு எதிராய் நாம் செயல்படுகிறோம். அநீதியாகச் செல்வம் சேர்க்கும் முயற்சியை எதிர்க்கிறார்.

இன்று இயேசு மூன்று செய்திகளை முன்வைக்கிறார். பொறமையால் எழுந்த குற்றச்சாட்டு, மக்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு, இடறலாயிருந்தால் கிடைக்கும் தண்டனை. நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தால்கூட அதற்குக் கைம்மாறு உண்டு. தீமை செய்யத் தூண்டுவதும் மாபெரும் தண்டனைக்குரியது. இவற்றை உணர்த்தும் இன்றைய திருப்பலியின் இறைவார்த்தைகளின் பொருள் உணர்ந்து இத்திருப்பலிக் கொண்டாடத்தில் பரந்த மனப்பான்மையுடன் பங்கேற்போம்..

வாசகமுன்னுரை:

முதல்வாசக முன்னுரை

முதல் வாசகத்தில் எண்ணிக்கை நூலில் ஆண்டவரின் ஆவி எழுபது மூப்பர்கள் மேல் இறங்கி வந்த நேரத்தில், இவர்களின் கூடாராங்களில் தங்கியிருந்த வேறு இருவர் மேலும் - எல்தாது, மேதாது - தூய ஆவி இறங்கி வருகின்றது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத யோசுவா, மோசேயிடம் அதைப்பற்றிப் புகார் தருகின்றார். ஆனால், மோசே பொறாமையினால் யோசுவா கூறியதற்கு அவரைக் கடிந்து கொள்கின்றார். அனைவரும் இறைவாக்கினராகும்படி ஆண்டவர் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு என்னும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

யாக்கோபின் திருச்சபையில் எளியோர்-பணக்காரர் பிளவு அல்லது ஏற்றத்தாழ்வு அதிகமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவரின் திருமடல் இந்தப் பிரச்சினையை அதிகமாகப் பிரதிபலிக்கின்றது. கூடிவரும் சபைகளில் பணக்காரார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனவும், எளியோர் ஒதுக்கித் தள்ளப்படுகின்றனர் என்றும் சொல்லும் யாக்கோபு இன்றைய இரண்டாம் வாசகத்தில் செல்வத்தின் நிலையாமை பற்றிப் பேசுகின்றார். இவ்வாசகத்தின் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 19: 7,9. 11-12. 13
பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விக்கின்றன.

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;  எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;  அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி

அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன். அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு.  தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். -பல்லவி

ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். –பல்லவி


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


அருட்கொடைகளை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கும் இறைவா!  எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள்  அனைவரும் பரந்த மனப்பான்மையுடன் அடுத்தவர்கள் நம்மைச் சாராதவர் என்று பார்ப்பதை விடுத்து அவர் நம் சார்பாக இருக்கிறார் என்ற நிலையை உணர்ந்து  நல்லதைச் சொல்லவும், செய்யவும் வேண்டிய பரந்தமனப்பான்மை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


எங்கும் நீங்காமல் நிறைந்திருக்கும் இறைவா! இன்று நாங்கள் காணும் நிதி நெருக்கடி, பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணங்களைப் பார்த்தால், இன்று எமக்கு உடனடி தேவையாக இருப்பது எம் ஆற்றல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முன்வருவதுதான். அப்படிப் பகிர்ந்து கொள்வது எம் ஆற்றலை அதிகரிக்கின்றது என்பதை உணர்ந்து செயல்பட  தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..


ஆள் பார்த்துச் செயல்படாத அன்பு இறைவா!  இயேசுவைச் சார்ந்த சீடர்கள் ஒரு கிண்ணம் தண்ணீருக்குக் கூட மற்றவர்களைச் சார்ந்து நிற்க அழைக்கப்படுகின்றனர். தங்களின்  பசி மற்றும் தாகம் தீர்க்க மற்றவர்களின் உடனிருப்பு அவர்களுக்கு அதிகம் தேவை. இன்று நான் என்னை மட்டுமே சார்ந்து நிற்கும் முயற்சியில் இருக்கின்ற எம் தலைவர்கள் அடுத்திருப்பவரின்நலன்களில் கவனம் செலுத்த, அவர்கள் மனம் மாற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


நன்மைக்கு நாயகனே இறைவா! எம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருக்கும்போது, அந்தக் குறையைப் பெரிதாக்கி எம்மையே நாங்கள் தாழ்வாக மதிப்பிடும் பொறாமை என்னும் குணம் எம்மிடமிருந்து ஒழிந்து ஒரு நல்ல குணமாகிய சகிப்புத்தன்மை எம்மில் வளர, விட்டுக்கொடுப்பவர்கள் வீழ்ந்ததில்லை என்பதை உம் மூலம் அறிந்து வாழ  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Tuesday, September 18, 2018

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

 ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு
 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சாலமோனின் ஞானநூல் 2:12,17-20 


முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை இறைமகன் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.

இன்றைய நாளில் இறைமகன் இயேசு தனது பாடுகளைப்பற்றி இரண்டாம் முறையாக வெளிப்படையாகவே அறிவிக்கிறார். ஆனால் சீடர்களோ அவர் எண்ணங்களைப் புரிந்துக்கொள்ளாமல் தங்களில் யார் பெரியவர் என்று வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். முதன்மையான மேன்மையான இடத்தில் இருக்க விரும்புபவர் கடைசி இடத்தில் இருக்கவேண்டும் என்று அவர்களைக் கடிந்துக்கொண்டார். சிறுகுழந்தையின் உள்ளத்தைக் கொண்டிருக்கவும், அவர்களை ஏற்றுக் கொண்டால் என்னையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று அறிவுறுத்துகின்றார்.

என் கைகளோ சிறியது. ஆனால் அவர் கரங்களோ பெரியது. எனவே நாம் எடுத்தால் குறைவாக வரும். அவராகக் கொடுத்தால் நம் கைகளில் நிறைய விழும்! என்று எதிர்நோக்கோடு காத்திருப்பதில் குழந்தையுள்ளம் மட்டுமல்ல, நன்மைத் தேடும் உள்ளமும், சிற்றின்ப நாட்டங்களைத் தள்ளிப்போடும் உள்ளமும் இருக்கின்றது. இந்த உள்ளம் நம்மிலும் இருக்கிறது! இதை நாம் உணர்ந்து கொள்ள இறைவன் நம் அகக்கண்களுக்கு ஒளிதருவாராக! என்ற எதிர்பார்ப்புடன் இத்திருப்பலிக் கொண்டாடத்தில் திறந்த உள்ளத்துடன் பங்கேற்போம்..அன்பு மற்றும் மனத்தாழ்மையுடன் அவரைப் பின்தொடரும் வலிமையை இறைமகன் இயேசு நமக்கு தந்திடுவார்.


வாசகமுன்னுரை:முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல்வாசகத்தில் பிறரை அடக்கி ஆள்பவர்கள் தற்காலிக வெற்றி அடைந்தாலும், இறுதியில் தோல்வியைத் தழுவுவார். மாறாகப் பணிந்து போகிறவர்கள் தற்காலிகமாகத் தோல்வியடைந்தாலும் இறுதியில் வெற்றி அடைவர். நல்லவர்களின் பொறுமையை நீதிமான்களின் பணியை உலகம் ஏளனம் செய்தாலும் கடவுள் நிச்சயம் அவர்களை உயர்த்துவார் என்று எடுத்துரைக்கின்ற இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு விண்ணக ஞானத்தையும் மண்ணக ஞானத்தையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.பொறாமை, மனக்கசப்பு, கட்சி மனப்பான்மை, வெறுப்பு ஆகியவை கொண்ட மண்ணக ஞானம். விண்ணக ஞானமோ அமைதி, பொறுமை, விட்டுகொடுத்தல் இணக்கம் ஆகிய தெய்வீக பண்புகளில் மிளிர்கிறது எடுத்துரைக்கிறார். இவ்வாசகத்தின் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 54: 1-2. 3. 4,6 (பல்லவி: 4b)
பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்.

கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்;  என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். -பல்லவி

ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்;  அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. -பல்லவி

இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;  தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. –பல்லவி
  

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
                               

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்1. ஆசிகள் வழங்கும் ஆற்றலின் ஊற்றே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் பணிவிடைப் பெறுவதைவிடப் பணிப் புரிவதே மேல் என்பதனை உணர்ந்து தன்னலமற்றவர்களாய் உம் மக்களுக்காய் உழைத்திட , கடவுளின் பிள்ளைகளாக வாழ வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அல்லனவற்றை அழித்து நல்லனச் செய்யும் இறைவா! நேர்மையானவாழ்வு வாழவும், ஆணவபோக்கை விட்டு விட்டுக் குழந்தை உள்ளம் கொண்டவராய் வாழவும், அதனால் ஏற்படும் தற்காலிகமான தோல்வியை வென்று நிரந்திரமான வெற்றிப் பெற்றிட உழைப்பையும் உறுதியையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

3. முன்னேற்றப் பாதையில் வழிநடத்தும் மூவொரு இறைவா! பேராசையும் பொறாமையுமே சண்டைச் சச்சரவுக்கக் காரணம் என்பதை உணர்ந்து எம் நாட்டுத் தலைவர்கள் தீயசக்திகளின் வெளிபாடான பேராசையையும் பொறாமையையும் முற்றிலும் அவர்கள் உள்ளத்திலிருந்து நீக்கி எம் மக்கள் நலம் வாழ, அவர்கள் உழைத்திட வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

4. வாழ்வை வெற்றியாக்கும் விண்ணகத் தந்தையே! மனிதருடைய வழியோ சுயநலத்தின் வழி. ஆனால் கடவுளின் வழியோ பொறுமையின் வழி, தாழ்ச்சியின் வழி என்பதை அறிந்து அடுத்தவன் வாழ்ந்தால் தானும் வாழ முடியும் என்ற நல்லெண்ணத்தை எம் இளையோரின் உள்ளத்தில் பதிவுச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உமக்காகக் காத்திருப்போர்க்கு அமைதி அளிக்கும் இறைவா! உம் திருஅவை இன்று சந்திக்கும் சவால்களையும், கொடுமைகளையும், அதற்கு ஏற்படும் அவபெயர்களிலிருந்தும் காத்தருளும். பொறுமையும் அமைதியும் இறுதியில் வெற்றிப் பெறும் என்ற திடமான நம்பிக்கையை எங்கள் உள்ளங்களில் நிலைபெற, உமது ஞானத்தையும் ஆசீரையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..


www.anbinmadal.org

Wednesday, September 12, 2018

ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் வாரம்


ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் வாரம்இன்றைய வாசகங்கள்:


ஏசாயா 50:5-9
யாக்கோபு 2:14-18
மாற்கு 8: 27-35
திருப்பலி முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு இயேசு கிறிஸ்துவின் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு ஆலயம் வந்துள்ள இறைமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள்!

இயேசு கேட்கும் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்பது, வெறும் கேள்வி அல்ல. இஃது ஓர் அழைப்பு. அவரது பணி வாழ்விலும், பாடுகளிலும் பங்கேற்க, அவர் தரும் அழைப்பு. கேள்விப் பதில் என்ற வாய்மொழி வித்தைகளைத் தாண்டி, செயலில் இறங்க இயேசு இந்த அழைப்பை விடுக்கிறார். "இயேசுவை இறைவன் என்று, தலைவர் என்று, மீட்பர் என்று நம்புகிறேன்" என்று சொல்வது எளிது. ஆனால், அந்த நம்பிக்கையை வாழ்வில் நடைமுறையாக்குவது எளிதல்ல. செயல் வடிவம் பெறாத நம்பிக்கை வீணாகிவிடும்.

இயேசுவை அனுபவப்பூர்வமாகச் சந்திக்க, அவரை நம்பி, அவரோடு நடக்க, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க, வாழ்வுப்பாதையை மாற்றியமைக்க, அவர் தரும் ஓர் அழைப்பு.
இந்த அழைப்பிற்கு நாம் தரும் பதில்கள், வார்த்தைகளாக அல்லாமல், செயல் வடிவம் பெறட்டும். குறிப்பாக, வாழ்வில் அனைத்தையும் பறிகொடுத்ததால், நம்பிக்கை இழந்திருப்போருக்கு நம்பிக்கைத் தரும் வகையில், நம் செயல்கள் அமையட்டும்.


செயலாற்றும் நம்பிக்கைப் பெற்றிட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


முதல் வாசக இறைவார்த்தைகள் கடவுளுடைய மீட்புத் திட்டம் என்ன என்பதை வெளிப்படுத்துகிறது. மெசியா துன்புறும் ஊழியனாக இருப்பார். அவர் நிந்தனை செய்யப்படுவார். காறி உழிழ்ப்படுவார். இப்படி அவர் பாடுகள் பலபடுவார் என்கிறார் இறைவாக்கினர் ஏசாயா. இதன் மூலம் பாடுகளே மீட்பின் வழி என்பதை வெளிப்படுத்தும் மீட்பின் திட்டத்தைக் கவனமுடன் கேட்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை:


இல்லை என்று வந்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் வாழ்வதே பிறர்நலம். நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும். இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் யாக்கோபு செயல் வடிவம் பெறாத நம்பிக்கை வீண் என்றுகூறுகிறார். இன்றைய நற்செய்திக் கேள்விக்குப் பதிலாக அமைய இவ்வாசகத்தை நம் உள்ளத்தில் பதிவுப் செய்வோம்.

பதிலுரைப் பாடல்

திபா 116: 1-2, 3-4, 5-6, 8-9

பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார். அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். -பல்லவி

சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன. பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன; துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன. நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; `ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன். -பல்லவி
ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர். எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். -பல்லவி
என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.  உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


உண்மை உணர்வைத் தூண்டியெழுப்பும் ஒப்பற்ற இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் துன்பங்கள் வருவதைக் கொண்டு துவண்டு விடாமல் துணிந்து நிற்கவும், துன்பத்திற்குப் பின் இன்பமும், உயிர்ப்பும் உண்டு என்ற நம்பிக்கையில் செயல் பட வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இடர்பாடுகள் நீக்கும் இணையற்றத் தலைவா! சிலுவை வழியாக உலகை வென்ற இயேசுவின் சீடர்களாகிய நாம் நம் அன்றாட வாழ்க்கைச் சிலுவைகளை மனமுவந்து சுமக்கவும், தன்னலம் மறந்துப் பிறர் நலம் பேணவும், எல்லோருக்கும் நன்மைச் செய்த இன்புற்று வாழவும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..


ஆள் பார்த்துச் செயல்படாத அன்பிறைவா! எல்லாருக்கும் எல்லாம் பெற எம் நாட்டுத் தலைவர்கள் எந்த ஒருபாகுபாடு பார்க்காமல் மனித நேயம் கொண்டு அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்திடவும், நாட்டில் அமைதி நிலவிடவும், மக்களிடையே சமத்துவம் காணவும் வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..


வளங்களை வாரி வழங்கி உள்ளங்களை நெறிப்படுத்தும் இறைவா! இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக இருக்கும் இளையோரை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் இத்திருச்சபையின் வருங்காலத்தூண்களாக மாறவும், அருள் வாழ்விலும், உலகவாழ்விலும் செயலாற்றும் நம்பிக்கைக் கொண்டவராய் வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

Thursday, September 6, 2018

ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு

 

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

 

 எசாயா 35:4-72.    


முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை அன்புநேசர் இயேசுநாதரின் பெயரால் வாழ்துகிறோம். “முழு மனித வாழ்வே இறைவனின் மகிமை” என்பதை இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. கடவுளின் கட்டளைகளை மீறி அருள்வாழ்வை இழந்தபோது அறிவுரையோடு இரக்கம் காட்டிய யாவே கடவுள்., தன் மக்களாகிய இஸ்ரயேலரை “அஞ்சாதே. நான் உன்னோடு” என்று திடப்படுத்துகின்றார் எசாயா இறைவாக்கினர் மூலமாக.


ஊனங்களே நம் வாழ்வுக்குத் தடையாக இருப்பதையும், அவற்றைத் தனிக் கவனத்துடன் குணப்படுத்து இறைமகன் இயேசுவை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். ஊனமுற்றோரை ஒன்றுமில்லாதவராக, ஒன்றுக்கும் உதவாதவராக இந்தச் சமுதாயத்தால் ஒதிக்கி வைக்கப்பட்ட அவருக்கு இயேசு முக்கியத்துவம் தருகிறார். அவரைத் தொட்டுக் குணமளிக்கின்றார். .
.
மாற்றுத்திறனாளிகள் மட்டில் நாம் கொண்டிருக்க வேண்டிய பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இயேசுவின் செயல்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. எனவே நம் இதயங்களை ஆண்டவருக்குத் திறந்து வைப்போம். இரக்கத்தோடு உண்மையைப் பேசி நன்மையைச் செய்யும் பண்பை நமதாக்கிட இத்திருப்பலிக் கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்..

வாசகமுன்னுரை:

 

முதல் வாசக முன்னுரை:

முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் “அஞ்சாதே! நான் உன்னோடு” என்று ஆறுதல் கூறித் திடப்படுத்துகிறார். பாலைநிலத்தில் நீரூற்றுகள் பெருகச் செய்தும், வாய்பேசாதோர் பேசுதையும், காதுகேளாதோரின் காதுகள் திறக்கப்படுவதும், ஊனமுற்றோர் குணமடைவதையும் குறிப்பிட்டு மெசியாவின் வருகையை அம்மக்களுக்கு எடுத்துரைப்பதை விளங்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.இரண்டாம் வாசக முன்னுரை:


முழு மனித வாழ்வுக்குத் தடையாக விளங்கும் பண்பு என்னவென்றால் பிறரின் தோற்றத்தை வைத்து மதிப்பிடுவது, அவர்களிடமிருக்கும் பணத்தை வைத்துப் பிறரை நடத்துவது. இந்த அவலத்தைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கடிந்துக்கொள்வதை இவ்வாசகத்தின் மூலம் மனதில் பதிவு செய்வோம். மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கைக் கொண்டுள்ள நாம் எப்படிச் செயல்படவேண்டுமென்று கற்றுக்கொள்வோம்.


 

பதிலுரைப் பாடல்


திபா 146: 7. 8-9. 9-10
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்;  சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். –பல்லவி

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்;
தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.  ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.  சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலிஅல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. அன்புத்தந்தையே இறைவா, உம் இறைபணியில் தம்மையே இறைவாழ்வில் இணைத்துக் கொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் உம் விண்ணகக் கொடைகளை எல்லாச் சூழ்நிலைகளிலும் காத்து, ஒளியின் மக்களாக வாழத் தேவையான அருளை நிறைவாகப் பெற வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று தேவனே உம்மை மன்றாடுகிறோம்.


2. மண்ணுலகில் மனித நேயத்தை வளர்த்த எம் அன்புத் தந்தையே இறைவா, உம்மிடம் நல்லவற்றைப் பெற்றுக் கொண்டு வாழ விரும்பும் நாங்கள் மண்ணில் மனித நேயம் மலரவும், மனித மாண்புத் தழைத்தோங்க உமது தூய ஆவியின் கனிகளைப் பெற்ற மக்களாக வாழ வரம் அருள வேண்டுமென்ற இறைவா உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்..


3. காலத்தின் அறிகுறிகளை ஆய்ந்துணர வைக்கும் எம் இறைவா! எம் நாட்டில் அமைதி நிலவ, நிலையான நல்லாட்சித் தேசத்தில் மலர, தகுதியுள்ள நல்உள்ளம் படைத்த புதிய தலைவர்கள் உருவாகி, ஏழைகளின் வாழ்வு மலரவும், ஏழை விவசாயிகளின் நலனில் முழு அக்கறை செலுத்தும் நல் உள்ளம் படைத்த தலைவர்கள் தந்திட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..


4. எல்லாருக்கும் எல்லாம் ஆன எம் அன்பு இறைவா! இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக உள்ள எம் ஆசிரியர் பெருமக்களை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் அருள் வாழ்வில் சிறந்து விளங்கிடவும், சிறந்த நல்சான்றோர்களை இவ்வுலகிற்கு இன்னும் அதிகமாக வழங்கிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. உண்மையான சமயநெறி என்பது ஏழை எளியவர், அனாதைகள், புறக்கணிக்கப்பட்டோர், கைம்பெண்களை ஆதரிப்பது என்று உணர்த்திய இறைவா, இத்தகைய சின்னஞ்சிறிய மக்களுக்கு எங்களால் இயன்ற உதவி செய்யவும் உலகத்தால் எங்களைக் கறைபடாமல் காக்கவும் வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

Wednesday, August 29, 2018

ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு

 ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.இணைச்சட்டம் 4:1-2, 6-82.  
யாக்கோபு 1:17-18,21-22, 273.   
மாற்கு 7:1-8, 14-15, 21-23

திருப்பலி முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க ஆலயத்தில் கூடியிருக்கும் இறைமக்களே!  இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள். பெயரளவில் மட்டும் வாழாமல் உள்ளத்தில் தூய்மை பெற இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு வழி காட்டுகிறது.

கடவுள் தந்த சட்டங்களின் உள்ளார்ந்த அர்த்தங்களை மறந்துவிட்டு அவற்றை சடங்களாக மாற்றினர் இஸ்ரயேல் மக்கள். கடவுளின் பார்வையில் மாசற்றவர்களாகவும், தேவையிலிருப்போருக்கு உதவிடவும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்து கொள்ளவும் திருத்தூதர் யாக்கோபு நம்மை அழைக்கிறார்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா! என்ற தமிழ் புலவரின் வார்த்தைகளையே இறைமகன் இயேசுவும் வாழ்வுதரும் வார்த்தைகளாக நமக்கு இன்று தருகிறர். உள்ளத்திலுள்ள எண்ணங்களே வார்த்தைகளாக வெளியே வருகின்றன.  சட்டங்கள் மனிதனை புனிதனாக மாற்றத்தான். மனிதநேயம் வளர்வதற்க்கும், அர்த்தமுள்ள வாழ்வுக்கு அடித்தளம் உருவாக்குவதற்கும், உள்ளத்தில் தூய்மை பெற்று அதைச் செயலில் வெளிப்படுத்துகின்ற உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழ வரம் வேண்டி இத்திருப்பலி கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்..


வாசகமுன்னுரை:முதல் வாசக முன்னுரை:


முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் நெடும் பணயம் செய்து கானான் நாட்டிற்கு வந்த போது மோசே கடவுளின் சட்டங்களை தொகுத்து வழங்கிய பேருரைகளிருந்து தம் மக்களுக்கு கடவுளின் சட்டங்களை பின்பற்றுங்கள் என்று கட்டளையிட்டார். அதுவே  மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும் என்ற வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கடவுளிடம் இருந்தே நல்லவைகள் வருகின்றன. அவர் நல்லவர். சினமற்ற வாழ்வு மேலானது. பொதுநலம் கொண்டு அடுத்தவர்களின் வாழ்வு சிறக்க உழைப்பதே இறைவனுக்கு ஏற்புடையது என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப் பாடல்

திபா 15: 2-3. 3-4. 5

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; 3ய தம் நாவினால் புறங்கூறார். -பல்லவி

தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். -பல்லவி

தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். -பல்லவி

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! " தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார் " அல்லேலூயா. 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.


உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கும் அன்பு இறைவா! எம் திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் சுயநலமறந்து மனித நேயத்திலும், ஞானத்திலும், அறிவாற்றலில் சிறந்து விளங்க வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

நலம் காண நல்வழி நடத்தும் எம் இறைவா, உள்ளங்களில் மாற்றங்கள் இல்லாமல் சட்டங்களை கடமைக்காகக் கடைப்பிடிப்பதால் பயனில்லை என்பதை எங்கள் நாட்டுத்தலைவர்கள் உணர்ந்து சுயநலமற்ற சேவைகளில் ஈடுபட வேண்டிய வரத்தை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா! எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீகளை அறிந்து கடவுளின் பார்வையில் மாசற்றதுமான சமயவாழ்வு வாழவும், உலகத்தால் கறைபடாதபடி தம்மை காத்துக் கொள்ள வேண்டிய வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

எல்லாரும் எல்லாம் பெற விரும்பும் அன்பு இறைவா! இச்சமுதாயத்தால் கைவிடப்பட்டு வாடும் அநாதைகள், கைம்பெண்கள் அவர்களின் குடும்பங்கள் சமுதாயத்தில் ஏற்றம் பெற வேண்டியும் அவர்களுக்காய் தன்னலமற்ற சேவை செய்யும் நல் உள்ளகளுக்காகவும் அதற்கானப் பொருளாதர உதவிகள் பெற்றிடவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அனைவரையும் ஆதரிக்கும் எம் இறைவா! இயற்கைப் பேரிடர் காரணமாக அல்லப்படும் எம் மக்களை உம் கரங்களில் ஒப்படைக்கின்றோம். அவர்களுக்கு ஆறுதலும், தேற்றவும் தர, நாங்கள் எடுக்கும் முயற்சிகள் தகுந்த நேரத்தில் கிடைக்கப் பெற்று, புதுவாழ்வு தொடங்க, நிறைவாய் உமதருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..   www.anbinmadal.org

Tuesday, August 21, 2018

ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்

யோசுவா 24:1-2, 15-18
எபேசியர். 5:21-32
யோவான். 6:60-69திருப்பலிமுன்னுரை ஆண்டின் பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இயேசுவின் இனிய நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.

இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் வழியே நமக்கு உணர்த்தப்படும் ஒரு மனிதத் திறமை... அதுதான், முடிவெடுக்கும் திறமை. மனிதக் குலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்தத் திறமையை நமக்கு நினைவுறுத்துவது... இன்றைய வாசகங்களில், யோசுவா, மற்றும் புனித பேதுரு ஆகியோர் கூறும் இரு கூற்றுகள்:

"நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்று யோசுவா சொல்கிறார்.ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" என்ற புகழ்பெற்ற வார்த்தைகளைப் பதிலாகச் சொல்கிறார், சீமோன் பேதுரு. உறுதிகொண்ட நெஞ்சுடன் இருவர் எடுத்த முடிவைப் பறைசாற்றும் கூற்றுகள் இவை.

சீடர்கள் வாழ்ந்துவந்த அந்தப் பாதுகாப்பான வாழ்வை விட, இயேசுவுடன் வாழ்ந்தப் பாதுகாப்பற்ற வாழ்வு அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பைக் கொடுத்தது. இந்த உணர்வுகளைத்தான் பேதுருவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. பேதுருவும், ஏனைய சீடர்களும், இயேசுவுடன் தங்குவதற்கு எடுத்த அந்த முடிவு, சக்திமிகுந்த சாட்சிகளாக இன்றும் வாழ்கின்றனர்.

யோசுவாவைப் போல, பேதுருவைப் போல இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்து நம் வாழ்வின் முடிவுகள் அமைய இறையருளை இறைஞ்சுவோம்.


வாசக முன்னுரைமுதல் வாசக முன்னுரை


இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இனத்தெய்வங்களையும் வழிபட்டு, இருமனத்தோராய் திகழ்ந்தனர். இந்நிலையில் யோசுவா அம்மக்களிடம், "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்" என்று திட்டவட்டமாகக் கூறினார். இதைக் கேட்ட மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கேட்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை


திருத்தூதர் பவுலடியார் இன்றைய வாசகத்தில் எபேசிய மக்களிடம் கிறிஸ்துவையும், திருஅவையையும் கணவன் மனைவியுடன் ஒப்பிட்டு, எவ்வாறு நாம் அன்பு செய்ய வேண்டுமென்று கற்றுக் கொடுக்கின்றார்.
இயேசு கிறிஸ்துவும் திருஅவைப் போல இனிதே வாழ்ந்திடக் கணவன் மனைவியர்க்கு விடுக்கும் அழைப்பைக் கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 34: 1-2. 15-16. 17-18. 19-20. 21-22


பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். -பல்லவி

நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். -பல்லவி

நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. -பல்லவி

தீயோரைத் தீவினையே சாகடிக்கும்; நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; ஆண்டவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.


1.அன்பின் இறைவா! எம் திருஅவையிலுள்ள அனைவரும் முழுமனதுடனும், உறுதியுடனும் ஒருவரை ஒருவர் அன்புச் செய்யவும், அவர்கள் எடுக்கும் முடிவுகளைத் திறம்படச் செய்து இறை இயேசுவின் அன்புச் சீடர்களாகச் சான்றுப் பகரும் வாழ்க்கை வாழத் தேவையான அருள் வளங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.

2.அன்பின் இறைவா! மனிதக் குலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள முடிவெடுக்கும் இந்தத் திறமையை எமக்கு நினைவுறுத்திய யோசுவாவைப் போல, பேதுருவைப் போல எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்து அதனை வெற்றிகரமாகச் செயலாக்க வேண்டிய ஞானத்தையும், நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்

3.அன்பின் இறைவா! வாழ்வின் முக்கிய முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் இளையோர்களை இப்போது உம் திருபாதத்திற்குக் கொணர்ந்துள்ளோம். யோசுவாவைப் போல, பேதுருவைப் போல இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்துத் தம் வாழ்வின் முடிவுகள் நிலைவாழ்விற்கு வழி வகுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்

4.அன்பின் இறைவா! இச்சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டுத் தனிமையில் வாடும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பிள்ளைகளால் விரட்டப்பட்ட பெற்றோர்கள்! நல்ல உடல்நலனையும், உள்ள அமைதியையும், பாதுகாப்பையும், அன்பையும் பெற்று மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதிநாட்கள் வரை வாழ இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்

5.அன்பின் இறைவா! பெரும் மழையால் இன்னலுக்கு உள்ளாகி உடமைகளையும், உறவுகளையும் இழந்துத் தவிக்கும் கேரள மக்களைக் கண்நோக்கியரும். அவர்கள் விரைவில் தங்களின் வாழ்வை நலமுடனும் வளமுடனும் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.                                                          www.anbinmadal.org

Wednesday, August 15, 2018

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் வாரம்

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் வாரம்


இன்றைய வாசகங்கள்:


நீதிமொழிகள் 9: 1-6
எபேசியர் 5: 15-20
யோவான் 6: 51-58

திருப்பலி முன்னுரை:


ஒவ்வோர் ஆண்டும், இந்திய சுதந்திர தினத்திற்கு அடுத்துவரும் ஞாயிறை, இந்தியத் திருஅவை, ‘நீதி ஞாயிறு’ எனக் கடைபிடித்து வருகிறது. ஆகஸ்ட் 19, இஞ்ஞாயிறன்று, நீதி ஞாயிறைக் கடைபிடிக்கும் வேளையில், நீதிதேவன் இயேசுவின் பெயரால் நல்வாழ்த்துகள்!
நீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில், அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெளி மாற்றங்கள் நிகழ்ந்தால், அஃது எந்தப் பயனும் அளிக்காது.
வாழ்வின் பிரச்சனைகளுக்கு மேலோட்டமான, எளிதானத் தீர்வுகளைத் தேடிவந்த இஸ்ரயேல் மக்களிடம் "உலக மீட்புக்காக, சமுதாய மாற்றத்திற்காக நான் என்னையே உங்கள் உணவாக்குகிறேன். என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகி, என் தியாக வாழ்வில் நீங்களும் பங்கேற்றால், நீங்கள் எதிர்பார்க்கும் சமபந்தி ஒவ்வொரு நாளும் நடக்கும், ஒவ்வொருவருக்கும் வாழ்வு நிறைவாகும், ஒவ்வொருவரும் நிறைவுற்றதுபோக, மீதமும் இருக்கும்" என்ற உண்மையை இயேசு சென்ற வாரமும், இந்த வாரமும் சொல்கிறார்.
சமுதாய மாற்றங்களை, நீதி நிறைந்த சமுதாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்மிடமும் இந்த மாற்றங்களை உருவாக்க, உன் சதையை, இரத்தத்தை நீ இழக்க வேண்டியிருக்கலாம்... என்ற சவால்களை இயேசு இன்று நம்முன் வைக்கிறார். இயேசுவின் எதிர்பார்ப்புகள் நம்மில் நிகழ நீதி ஞாயிறு, நம் உள்ளங்களில் ஒளிவீசிட இறைவனை இறைஞ்சுவோம்.

வாசக முன்னுரை:முதல் வாசக முன்னுரை:


ஞானம் இறைவனின் கொடை. கடவுளை அன்பு செய்வோர் ஞானத்தைக் கொடையாகப் பெறுவர். அந்த இறை ஞானத்தைச் சுவைத்து மகிழ, பேதமை நீங்கிப் பேரின்ப வாழ்வு வாழ நம்மை அழைக்கும் நீதிமொழிகள் நூலிலிருந்து வரும் முதல் வாசகத்தை கவனமுடன் கேட்டு இறைஞானத்தைப் பெற்றிடுவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


இரண்டாம் வாசகத்திலும், தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு, ஆண்டவரின் திருவுளத்திற்கேற்ப நாம் வாழ்வும், இந்த பொல்லாத நாட்களில் ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்துடன் வாழவும், இசையுடன் ஆண்டவரைப் போற்றி நன்றி செலுத்தி வாழவும் நம்மை அழைக்கிறார் புனித பவுல். 


பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 9-10. 11-12. 13-14

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. -பல்லவி

வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? -பல்லவி

அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு! தீமையை விட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1.இன்று நீதியின் ஞாயறைக் கொண்டாடும் எம் திருஅவை நீதிக்குச் சாட்சியாகவும், இயேசுவின் வார்த்தையின்படி அக இருள் அகற்றி ஞான ஒளி எங்கும் ஏற்றிட தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.வாழ்நாள் முழுவதும் நிரந்தர மகிழ்ச்சியைத் தேடும் எங்களுக்கு இயேசுவின் உடலும் இரத்தமும் எங்கள் உள்ளத்திற்கும், உடலுக்கும் அரும்மருந்தாக மட்டுமல்லாமல், நிறை வாழ்வைத் தரும் என்பதனை உணர்ந்திட இறை ஞானத்தைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.சூழ்நிலையின் கைதிகளாகி துயரக் கடலில் வீழ்ந்து, நிலை வாழ்வைத் தேடும் நமக்குத் தேவையான நல்ல வழியை நற்கருணை ஆண்டவர் காட்டுகின்றார் என்பதனை உணர்ந்து, எம் இளைய சமுதாயம் உம்மை நாடிவர தேவையான இறைஅச்சத்தையும், ஞானத்தையும் வழங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.தம் வாழ்வில் வறுமை, நோய் நோக்காடு, உறவின் முறிவுகள், விரிசல்கள். பிசகுகள், மனஇறுக்கங்கள், பாவங்கள், பலவீனங்கள் போன்றவற்றால் வாழ்விழந்த  எளியோரை கரம் தூக்கிவிட எமக்கு நல்மனதினையும், அவர்தம் வாழ்வு ஏற்றம் பெறவும் உமது அருளைப் பொழிந்தட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.காலத்தை முற்றும் பயன்படுத்தி உமது நற்செய்திக்குச் சான்று பகரும் வகையில் நாங்கள் வாழவும், பிறரை அவ்வாறு வாழ நாங்கள் தூண்டும் நற்சாட்சிகளாய் வாழவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.