Monday, October 23, 2023

பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு 29.10.2023

   பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு 29.10.2023


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்

விடுதலைப் பயண நூல் 22: 21-27
1 தெசலோனிக்கர் 1:  5–10
மத்தேயு 22: 34-40

  திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
பொதுக்காலத்தின் 30ஆம் ஞாயிறுத் திருப்பலி பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்போடு வரவேற்கிறோம்.
நமக்குத் தெரியாததைத் தெரிந்து கொள்ள கேட்கப்படும் கேள்விகள் நம் அறிவை வளர்க்கும். இதற்கு மாறாக, பதில்களைத் தெரிந்துகொண்டு, அடுத்தவருக்கு நம்மைவிட குறைவாகத் தெரிகிறதென்பதை இடித்துச் சொல்வதற்காகக் கேள்விகள் கேட்கும்போது, நமது பெருமை கலந்த அறியாமை அங்குப் பறைசாற்றப்படும். தனக்குத் தெரியும் என்ற இறுமாப்பில் இயேசுவை அணுகி கேள்வி கேட்ட ஓர் அறிஞரைப் பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்
தவறான, குதர்க்கமான எண்ணங்களுடன் திருச்சட்டநூல் அறிஞரிடமிருந்து கேள்வி கேட்கப்பட்டாலும், அந்தக் கேள்வி மிக அழகான, ஆழமான ஒரு கேள்வி என்பதை இயேசு உணர்ந்து, அதற்குப் பதில் சொல்கிறார். என்ன ஒரு பதில் அது! இயேசு தந்த பதில், காலத்தால் அழியாத ஒரு பதில். திருச்சட்டங்களின் அடிப்படை நியதிகளைப் பற்றிக் கேள்விகள் கேட்டு, அறிவுப்பூர்வமான பதில்களை அறிந்து கொள்வது முக்கியமல்ல அவைகளில் சொல்லப்பட்டிருக்கும் இறையன்பு, பிறரன்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதே முக்கியம் என்பதை இயேசுவின் இந்தக் கூற்று தெளிவுபடுத்துகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் நமது கடமைகளைப் பற்றி, நாம் ஆற்றவேண்டிய பணிகளைப் பற்றி இறைவன் இதற்கு மேலும் தெளிவாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இரக்கம் நிறைந்த அந்த இறைவனின் வார்த்தைகள் நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்குமா? இயேசு சொன்னதுபோல், இறையன்பையும், பிறரன்பையும் நாம் வாழ்வில் செயல்படுத்த முடியுமா? முயன்றால் முடியும். அதற்குத் தேவையான அருளை வேண்டி இன்றைய திருப்பலியில் உளமாற மன்றாடுவோம்.வாரீர்!

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

அனைவரும் அன்னியராக மாறிவருவதால், ஒருவரை ஒருவர் வெல்வதும், கொல்வதும் நாளுக்கு நாள் கூடிவருகின்றன. இந்தக் கொலைவெறியால், அனாதைகளின் எண்ணிக்கையும், கைம்பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இச்சூழலில், அன்னியர், அநாதை, கைம்பெண் இவர்களைப் பற்றிச் சிந்திப்பதற்கு இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கிறது. அதுவும், இங்குக் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் யாவும் இறைவனே நம்மிடம் கூறும் வார்த்தைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. கடவுள் தரும் அழைப்பு, ஓர் எச்சரிக்கையாக, கட்டளையாக ஒலிக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: எனது ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்
பதிலுரைப்பாடல். திபா. 18: 1-2,2-3,46.50
என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர். பல்லவி
என் இறைவன்: நான் புகலிடம் தேடும் மலை அவரே: என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன. என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப் பட்டேன். பல்லவி
ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவராக! தாம் ஏற் படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர், தாம் திருப் பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கர்களை தன் மனதார பாராட்டி வாழ்த்துகிறார். எனெனில் அவர்கள் திருத்தூதரை இனிதே வரவேற்று, மகிழ்வோடு இறைவார்த்தைகளை ஏற்று கொண்டு, புனித வாழ்க்கை வாழ்வதையும், மற்ற மக்களுக்கு முன்மாதிரியாக இருப்பதைப் பற்றியும், இயேசுவின் வருகைக்காய் காத்திருப்பதைப் பற்றியும் மகிழ்ந்து பாராட்டியதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்”  என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. என் ஆற்றலாகிய தந்தையே இறைவா! உமது திருச்சபையில் உள்ள திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரையுள்ள நாங்கள் அனைவரும், எம்முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் எம் ஆண்டவராகிய உம்மையும், எம் அயலாரையும் அன்புச் செய்யவும், அன்பு, இரக்கம், நற்பண்புகள் ஆகியவற்றோடு வாழவும், வளரவும் வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2 போற்றுதலுகுரிய ஆண்டவரே எம் இறைவா! பல்வேறு கருவிகள்மூலம் தொடர்புகளை வலுப்படுத்தும் வர்த்தக உலகம், தொடர்புச் சாதன உலகம், எம்மைச் சுயநலச் சிறைகளுக்குள் தள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இவ்வேளையில் நாங்கள் எமக்கடுத்திருக்கும் ஏழை, எளியவர், கைவிடப்பட்டோர், அனாதைகள், விதவைகள் ஆகியோர் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு உதவிடும் நல்மனதினைத் தர வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. ஒரே கடவுளும் எங்கள் அன்புத் தந்தையுமாகிய எம் இறைவா! உமது அன்புக்கட்டளையைக் கடைப்பிடிப்பதே எங்கள் வாழ்வுக்கு வழி என்பதை உணர்ந்து உமது கட்டளைகளைக் கடைபிடித்து வாழும் தாராளமான மனத்தை எங்கள் இளையோர்களுக்குத் தந்து அதன் மூலம் அவர்கள் வாழ்வுச் சிறப்புற, உமது அன்பின் சாட்சிகளாய் திகழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வானகக் கொடைகளை வழங்கிவரும் எம் இறைவா! எம்நாட்டில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலில் எம்மை ஆளும் தலைவர்கள் உமது அன்பின் கட்டளைகளை ஏற்று, எங்களின் அடிப்படை உரிமைகள், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் நாட்டையும், எங்கள் மக்களையும் வழி நடத்த தூயஆவியின் வழியாக ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்பினால் எம்மை ஆளும் அமைதியின் இறைவா! மத்தியகிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை மாறிடவும், அப்பகுதி மக்கள் போரின் கொடுமைகளிலிருந்து விடுபடவும், பிரிந்த குடும்பங்கள் மீண்டும் இணைந்திடவும், அந்நாடுகளின் தலைவர்கள் மக்களின் அவதியான நிலையை உணர்ந்து போரினை நிறுத்தத் தேவையான நல்ல மனநிலையை அவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF


Tuesday, October 17, 2023

பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு 22.10.2023

பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு 22.10.2023

அகில உலக மறைபரப்புப் பணி (நற்செய்தி அறிவிப்புப் பணி) ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

 எசாயா 45:1,4-6
தெசலோனிக்கர் 1: 1-5அ
மத்தேயு 22:15-21

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலத்தின் 29ஆம் ஞாயிறுத் திருப்பலி விருந்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. ஆனால், அவரவருக்கு உரியது அவரவருக்குக் கிடைக்காமல் இருப்பதால்தான் உலகம் சிறிது சிறிதாக நரகமாக மாறி வருகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
“சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்ற புகழ் பெற்ற வரிகளை இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார் இயேசு. விவிலியத்தைத் தாண்டி, கிறிஸ்தவ மறையைத் தாண்டி, பொருளாதாரம், அரசியல் என்ற பலச் சூழல்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வாக்கியம் இது. இயேசு கூறிய அந்தப் புகழ் மிக்கக் கூற்றையும், அவர் அப்படிச் சொன்ன சம்பவத்தின் பின்னணியையும், இன்றைய ஞாயிறு சிந்திக்க அழைக்கின்றது.
மதமும் அரசியலும் கலந்த அன்றைய வரலாறு இன்றும் தொடர்கிறது. இந்தச் சூழலில், நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன. சீசருக்குரியதை, இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித் தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை. சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார், அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் இன்று கேட்கிறார். நம் பதில் என்ன? அதற்கான பதிலை இன்றைய திருப்பலியில் தேடுவோம்.வாரீர்!

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

தன் ஊழியன் யாக்கோபை முன்னிட்டு  சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார். பெயர் சொல்லி அமைத்துள்ளார். என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்குவேன். நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை என்று கடவுள் தம் இதயத்திற்கு இனிய இஸ்ரயேல் மக்களுக்குத் தன் அன்பையும், அவரின் உடனிருப்பையும் அறிவித்ததை பற்றி இறைவாக்கினர் எசாயா விவரிக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
பதிலுரைப்பாடல். திபா. 96: 1, 3-5, 7-10
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள். அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி
ஏனெனில், ஆண்டவர் மாட்சி மிக்கவர். பெரிதும் போற்றத் தக்கவர். தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே. மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே. ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். பல்லவி
மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். பல்லவி
தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். வேற்றினத்தாரிடையே கூறுங்கள். ஆண்டவரே ஆட்சி செய்கின்றார். அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளோடு மானிடன் கொண்டுள்ள உறவில் தான், நமது குறிக்கோளாகிய விண்ணரசில் நுழைய முடியும். இதைத் தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் தூயஆவியின் துணையிருந்தால் ஒளியின் மக்களாக வாழ முடியும். அதற்கு  இறைவனின் உடனிருப்பு தேவை என்கிறார். இறைஅன்பில் மலரும் செபவாழ்வு, பிறர் அன்புப் பணிக்கு உறுதி தருகின்றது. பிறரன்பு இல்லாமல் இறையன்பு வாழ்வில் நிறைவு இருக்காது என்று கூறும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1.உமது பேரன்பால் உலகை நிறைத்துள்ள எம் இறைவா! எம் திருஅவையில் உள்ள அனைவரும் இறையச்சம், அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல் ஆகிய பண்புகளைத் தங்கள் பணிவாழ்வில் உள்ளடக்கி இறையன்பிலும், பிறரன்பிலும் சிறந்து விளங்கிட தூய ஆவியாரின் கொடைகளைப் பொழிந்திடவும், இயேசுவின் உடனிருப்பை மனதில் கொண்டு இறைபணிகளைச் செய்திட உமதருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. எங்கள் வாழ்நாளை எல்லாம் நலன்களால் நிறைவு செய்கின்ற எம் இறைவா! எம்குடும்பங்களில் இறையன்பும், பிறரன்பும் நிறைந்திடவும், அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுப்பதால் இல்லங்களிலும், மனங்களிலும் அன்பும் அமைதியையும் நிறைவாய் பெற்றிடவும் உமதருள் வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.


3. எங்கள் கற்பாறையும், மீட்பருமான ஆண்டவரே! எம் இறைவா! எம்மை ஆளும் தலைவர்கள் செலுத்தும் அன்பானது நீதி கலந்த அன்பாக, நீதியை நிலைநாட்டும் அன்பாக அமைந்திடவும், சமயம், சாதி, இனம் கடந்து அனைவருக்கும் அரசின் நீதியும், உதவியும் கிடைத்திடவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமாகிய எம் இறைவா! அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. இதனை உணர்ந்து எம் இளையோர்கள் இனிவரும் காலங்களில் தங்களின் வாழும் வாழ்க்கை முறையினைச் சிறப்புடன் மாறி அமைத்திட தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அமைதியின் அரசரே எம் இறைவா! உம் புண்ணிய பூமியில் நடைபெறும் போர் கலவரங்கள் நிறுத்தப்பட்டு அங்குச் சமாதானமும், அன்பும், சகோதரத்துவும் நிலைத்திட, போரில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளிலிருந்து மீண்டு வரவும், மீண்டும் தங்கள் இல்லங்களைக் கடடி எழுப்பவும் வேண்டி வரங்களை நிறைவாய் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, October 9, 2023

பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு 15.10.2023

 பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு 15.10.2023


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 25: 6-10
பிலிப்பியர் 4: 12-14, 19-20
மத்தேயு 22: 1-14

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலத்தின் 28ஆம் ஞாயிறுத் திருப்பலி விருந்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
வாழ்வில் நமக்கு வந்துள்ள அழைப்புக்கள், அந்த அழைப்புக்களுடன் நமக்குக் கிடைத்த வாய்ப்புக்கள் எத்தனை, எத்தனை... இந்த  அழைப்புக்களையும் வாய்ப்புக்களையும் ஏற்க மறுத்து, நாம் கூறிய சாக்கு போக்குகள் எத்தனை, எத்தனை... இவைகளைச் சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. இந்த அழைப்பை ஏற்போமா?
விருந்துண்ண அழைக்கும் இறைவன்/ அழைப்பை ஏற்க மறுக்கும் நாம் / ஆகியவை இன்றைய வாசகங்கள் வழியே நமக்குத் தரப்பட்டுள்ள மையக் கருத்துக்கள். “வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசம்” என்று எசாயா குறிப்பிடும் இந்த ஒரு பானத்தை உருவாக்க நேரமும், கவனமும் தேவை. நல்ல சுவையான திராட்சை இரசத்தை விருந்து நேரத்தில் பரிமாறுவதே ஒரு பெருமை. இந்தப் பெருமை பறிபோய்விடுமோ என்ற கவலையில் அன்னை மரியா கானாவூர் திருமணத்தின்போது இயேசுவை அணுகிய அந்தச் சம்பவம் நமக்கு நினைவிற்கு வருகிறது அல்லவா!
இறைவன் தரும் இந்த அழைப்பைவிட நம் தனிப்பட்ட, தினசரி வாழ்வே பெரிது என்று எத்தனை முறை நாம் வாழ்ந்திருக்கிறோம்? அந்த அழைப்பின் வழி வந்த நல்ல எண்ணங்களை எத்தனை முறை கொன்று குழிதோண்டி புதைத்திருக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு இன்றும், இனி வரும் நாட்களிலும் பதில்கள் தேடுவது நமக்கு மீட்பைத் தரும். அதற்காகச் சிறப்பாக இத்திருப்பலியில் இறைவனிடம் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர் எசாயா இறைவன் தரும் இந்த விருந்தை விவரிக்கும்போது, முதலில் அங்குப் பரிமாறப்படும் உணவு வகைகளைப் பட்டியலிடுகிறார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்து வந்த அடிமை வாழ்வை நினைத்துப் பார்த்தால், இந்தப் பட்டியல் அவர்கள் ஏங்கித் தவித்த ஒரு விடுதலை வாழ்வின் அடையாளங்கள் என்பது புரியும். ஒவ்வொரு நாளும் ஒரு துண்டு ரொட்டிக்காகப் போராட வேண்டியிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு  இறைவன் தரும் ஒரு விருந்தைப் பற்றி விவரிக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 23: 1-3. 3b-4. 5. 6
பல்லவி: நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.  பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். -பல்லவி
2. தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;  மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி
3 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி
4 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் பிலிப்பியர்க்கு எழுதிய கடைசி மடலை எழுதி முடிக்கும் முன் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரைக் கூறுகிறார்.  வறுமையிலும் வளமையிலும் வாழப் பழகிக் கொள்ள அழைக்கின்றார். இறைஆசீர் கூறி அவர் முடிக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு நாம் வாழ்க்கை முறைகளை மாற்றிடுவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! . அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. எங்கள் திருஅவையின் நாயகனே! எம் இறைவா! எம் திருஅவையில் உள்ள அனைவரும் நீர் தரும் விருந்திற்குத் தகுதியானவர்களாகத் தங்களேயே தயாரித்துக் கொள்ளவும், எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் நிலைமாறாது உமது சாட்சிகளாய் வாழ தூயஆவியின் கொடைகளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் குடும்பங்களின் நாயகனே! எம் இறைவா! எம்குடும்பங்களில் உள்ள அனைவரும் வறுமையிலும், வளமையிலும், இன்பத்திலும், துன்பத்திலும் நேரிய வழியில் நடந்திவும், தன்னலம் துறந்துப் பிறர் நலம் காணும் நல்மனம் படைத்தவராய் வாழவும், என்றும் உமது உன்னதச் சீடர்களாய் உலகெங்கும் வலம் வரவும் உமதருள் வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. எங்கள் வளமையின் நாயகனே! எம் இறைவா! தமிழகம் எங்கும் மக்கள் டெங்கு காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்சுகத்தையும், போதிய மருத்துவ வசதிகள் பெறவும், நாங்கள் அனைவரும் நல்ல சமுதாய உணர்வுடன் சுற்றுசூழலைப் பேணிக்காக்கவும் எங்கள் ஆண்டவரும், மருத்துவருமானக் கிறிஸ்துவின் அருளால் நலமடைய அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பின் நாயகனே! எம் இறைவா! மன்னிப்பதால் மன்னிப்பைப் பெறுகிறோம், அன்புச் செய்வதால் அன்பு செய்யப்படுகிறோம் என்பதனை உணர்ந்து எம் அடுத்திருபவர்களை மன்னிப்பதிலும், நட்புப் பாராட்டுவதிலும் அசிசியாரைப் போல் அன்பின் சாட்சிகளாய் இவ்வுலகில் வாழ்ந்து நிலைவாழ்வைப் பெற்று கொள்ள வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.அமைதியின் இறைவா! இன்றைய காலகட்டத்தில் உலகெங்கும் நிலவும் போர்காலப் பதட்டை தவிர்த்திடும். மக்கள் ஒரே குடும்பமாக இவ்வுலகில் வாழ்ந்திட, அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த வாழ்வு வாழ, உலகநாட்டு தலைவர்களை வழிநடத்தி தேவையான அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.   


www.anbinmadal.org


Print Friendly and PDF

Wednesday, October 4, 2023

பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு 08.10.2023


  பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு 08.10.2023


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 5: 1-7
பிலிப்பியர் 4: 6-9
மத்தேயு 21: 33-43

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலத்தின் 27ஆம் ஞாயிறுத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
"இறையாட்சிக்கு யார் அதிக கனிகளைக் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே இறையாட்சிக் கிடைக்கும்" என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் தன் தோட்டத்தை முழுமையாக நம்பிப் பணியாட்களிடம் ஒப்படைப்பது போல இறைவனும் நம்மீது முழுநம்பிக்கை வைத்து இறையரசுப் பணியை ஒப்படைத்துள்ளார். அவர்கள் வேலைச் செய்ய வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அதுபோல இறையரசுப் பணியில் நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தி நம் திறமைகளையும் படைப்புத் தன்மைகளையும் வெளிக்கொணர இறைவன் வாய்ப்புக் கொடுக்கிறார். அதை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா? எனச் சிந்திக்க இயேசு இன்று நம்மை அழைக்கின்றார்.
கடவுள் தன் படைத்த அனைத்தையும் நல்லதெனக் கண்டார். மனிதனோ தனது சுயநலத்தால் பூமியைப் பாழ்படுத்தினான். உறவுகளில் பிளவு ஏற்படுத்தினான். மனிதத்தைச் சிதைத்தான். ஆனாலும் வாழ்வதற்குப் பல வாய்ப்புகள் கொடுத்தார். கொடுத்துக்கொண்டேயிருக்கிறார். எனவே கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி உறவில் நிலைத்து நன்று வாழவும் நற்கனித் தரும் மனிதர்களாய் வாழ வரமருள வேண்டி இத்திருப்பலியில் இறைவனை மன்றடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களைத் திராட்சைத் தோட்டத்திற்கு ஒப்பிடுகிறார் இறைவாக்கினர் எசாயா. எதிர்பார்த்துப் பலனைத் தராமல் கடவுளின் திட்டத்திற்கு எதிராக அநீதியும், இரத்தப்பழியும் விளைந்தது. இஸ்ரயேல் மக்களின் திட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டாலும் கடவுள் அவர்களைக் கைவிடவில்லை. அவர்களை மீட்க மெசியாவை அனுப்பினார். கடவுளின் பேரிரக்கத்தை எண்ணி இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே.
பதிலுரைப்பாடல். திபா. 25:4-5, 6-7, 8-9
எகிப்தினின்று திராட்சைக்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர்அதன் கொடிகள் கடல்வரையும் அதன் தளிர்கள் பேராறுவரையும் பரவின.; பல்லவி

பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச்செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே! காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன; வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன.பல்லவி

படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி

இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கூறுவது போல் பயனுள்ளவர்களாய் மாற, உண்மை எதுவோ, நீதி எதுவோ, இனியது எதுவோ எதுவெல்லாம் நற்பண்புடையதோ, எதெல்லாம் புகழ்ச்சிக்குரியதோ அவற்றை மனதில் கொண்டு நன்றியோடு கூடிய இறைவேண்டல் செய்ய நமக்கு அறிவுத்துகின்ற இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். . அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்  மன்றாட்டுகள்

1. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! எம் திருஅவையை இந்நாள் வரை எல்லாவித இக்கட்டுகள், இடையூறுகள், பிரச்சினைகள், கட்சி மனப்பான்மை இவற்றிலிருந்து விடுபட்டு உம் விண்ணக வாழ்வைச் சொந்தமாக்கிக் கொள்ளத் திருஅவையின் அனைத்து நல்மேய்ப்பர்களுக்கும் தூயஆவியின் கொடைகளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! எம்குடும்பங்களில் உள்ள அனைவரும் வார்த்தையால் மட்டுமல்ல, செயலாலும் உமது திருவுளத்தை நிறைவேற்றி வாழவும், சிறப்பாக, ஏழைகள்மீது அக்கறை கொண்டு, அவர்களது நல்வாழ்வுக்காக உழைக்கவும் இவ்வாறு எங்கள் வாழ்வு பிறர்க்கு எடுத்துக்காட்டாக அமையவும் உமதருள் வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் ஊற்றாகிய எம் இறைவா! கிறிஸ்துவின் வார்த்தைகளைச் செவிக்கு உணவாக உட்கொண்ட நாங்கள் மேன்மேலும் அவராகவே மாறச் செய்தருளும். எங்கள் வாழ்வில் எல்லாச் சூழ்நிலைகளிலும், சிறப்பாக எங்களது குடும்ப வாழ்க்கையிலும், கிறிஸ்துவின் மனநிலையை நாங்கள் எமதாக்கிக் கொண்டு ஒருவரையொருவர் ஏற்று, ஒன்றிணைந்து உமதருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பின் ஊற்றாகிய எம் இறைவா! ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்த இயேசுவைப் போன்று எம்நாட்டுத் தலைவர்களும் எம் இளையோர்களும் ஏழை, எளியவர்கள், நோயாளிகள், கைவிடப்பட்டோருக்குத் தாராள உதவி செய்ய முன்வரவும் அவர்களின் வாழ்வாதாரங்கள் உணர்ந்திவும், நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்பின் ஊற்றாகிய எம் இறைவா! வடகிழக்கு இந்திய மாநிலத்தில் நடைப்பெறுவரும் வன்முறை தாக்குதலிலிருந்து உம் மக்களைப் பாதுகாத்தருளும். அவர்கள் முழுசுதந்திரம் அனுபவிக்க தேவையான அரசு உதவிகளை எந்தப் பகுபாடுகளின்றி பெற்றிட தேவையான அனைத்தும் அருட்கொடைகளை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



www.anbinmadal.org


Print Friendly and PDF