Tuesday, June 28, 2022

பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு - ஆண்டு 3

 பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு - ஆண்டு 3
03/07/2022


இன்றைய வாசகங்கள் :

எசாயா 52: 7-10
எபேசியர் 2: 19-22
யோவான் 20: 24-29

திருப்பலி முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு. நம் இந்திய திருநாட்டின் பாதுகாவலர் திருதூதர்  தோமையாரின் பெருவிழா. இவ்விழாவைச் சிறப்பிக்க  ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!
மிகவும்‌ அன்பு செலுத்திய தம்‌ தலைவரை, நண்பராகப்‌ பாவித்த இறைமகனை இழந்த சோகத்திலிருந்த சீடர்கள்‌ இயேசுவை உயிருடன்‌ கண்டதால்‌ பேருவகை கொண்டு இருந்திருக்க வேண்டும்‌. அந்நேரத்தில்‌ அங்கில்லாத தோமையார் வந்ததும்‌ “ஆண்டவரைக்‌ காணோம்‌” என்ற வார்த்தை தோமையாரின் உள்ளத்தில்‌ ஆவலை தாகத்தை ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்‌.  
“தழும்பைப்‌ பார்த்து, அதில்‌ விரலை இட்டு, விலாவில்‌ என் கைகளை இட்டாலன்றி” என்ற வார்த்தைகள்‌ இயேசுவைப்‌ பார்க்க வேண்டும்‌ அவரைத்‌ தொட வேண்டும்‌ என்ற தோமையாரின்‌ ஏக்கத்தையும்‌ தாக்கத்தையும்‌ வெளிப்படுத்துகின்றது. ஆனால் தோமையார் தான் கேள்வியின் மூலம் முக்காலத்திற்கும் விடை தேடுகின்றார். இதனை உணர்த்தியவரும் தந்தையே ஆவார்.
தாகமுள்ளவர்களைத்‌ தேடி வருகின்ற நம்‌ இயேசு மீண்டும்‌ சீடர்களுக்குத்‌ தோன்றி தோமையாரின்‌ விருப்பத்தை நிறைவேற்றுகின்றார்‌. அப்போது தோமையார் கூறிய “நீரே என்‌ ஆண்டவர்‌! நீரே என்‌ கடவுள்‌” என்ற வார்த்தை நம்பிக்கையின்‌ உறுதியை பறைசாற்றுகிறது. தோமையார் நம்பிக்கையின்‌ அடையாளமாகிறார்‌. ஆம் சகோதரர்களே! இன்று நாம் கண்ணுக்கு புலபடாத இறைவனை கண்டோம், கேட்டோம், அவரில் மகிந்தோம் என்பவை நமது உள்ளங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மகிழ்ச்சியான நிறைவோடு இத்திருப்பலியில் நம் நம்பிக்கையை உறுதிபடுத்துவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா ஆண்டவரின் வாக்களித்த மீட்பு - மெசியா இவற்றைப் பற்றி பெரும் மகிழ்ச்சியுடன் செய்த பதிவுகளை காணலாம். ஆண்டவரின் செய்தியை அறிவிக்க வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்தணை ஆழகாய் இருக்கின்றன என்று வருணிக்கும் எசாயா இடையர்களை எண்ணிதான் இப்படி சொல்லிருப்பரோ!  ”ஆண்டவர் வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். பிறஇனத்தரும் இதை காண்பர்.” எசாயாவின் மசிழ்ச்சியை நாமும் நாம் உள்ளத்தில் பகிர்ந்துகொள்வோம்.

பதிலுரைப் பாடல்

திபா 117: 1,2 (பல்லவி: மாற் 16: 15)
பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

1.பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! - பல்லவி

2.ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை
இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் அன்னியர் அல்ல. கடவுளால் கட்டப்பட்ட மாபெரும் குடும்பம். இயேசுவே இதன் மூலைக்கல்லாகக் திகழ்கிறார். இயேசுவுடன் இணைந்து தூயஆவியாரின் வழியாக நம் கட்டப்படுகிறோம் என்பதனை எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுலடிகளாரின் வார்த்தைக்கு கவனமுடன் செவிமெடுப்போம். அதனையே நம் வாழ்வாக்குவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. மகத்துவமிக்க இறைவன்! இன்றைய உலகில் உமது திருஅவை எதிர்க்கொள்ளும் எல்லா எதிர்ப்புகளையும் சவால்களையும் சந்திக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இயேசுவின் விழுமியங்களையும், இறைசார்பு தன்மைகளையும் பின்பற்றி வாழ்ந்திடத் தேவையான மனவலிமையும், துன்பங்களை வெல்லும் உறுதியும் பெற்று வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா! திகிலான இவ்வுலகில் தினமும் அஞ்சாதீர்கள் என்று எங்களைத் திடப்படுத்தி, எங்கள் குடும்பங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் அருள்கொடைகளில் நிலைத்து நின்றுச் சவால்களை வென்று வெற்றிவீரர்களாய், இயேசுவின் அன்புச் சீடர்களாய் இவ்வுலகில் வலம் எமக்கு உம் ஆற்றலைத் தர வேண்டும்மென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. மகத்துவமிக்க இறைவன்! இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா! இளையோர் திருச்சபைக்காகத் திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின் அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.எல்லாம் வல்ல இறைவா! புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைத்துள்ள எம் பிள்ளைகளை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்களுக்குச் சாலமோன் ஞானத்தையும், தாவீதின் தைரியத்தையும், தூயஆவியாரின் கொடைகளையும் கொடுத்துத் தாங்கள் எதிர்நோக்கும் எல்லாவற்றையும் வென்றிடத் தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, June 21, 2022

பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு 26/06/2022


பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

I. 1 அரசர் 19:16,19-21
II. கலாத்தியர் 5:1,13-18
III. லூக்கா 9 : 51-62

திருப்பலி முன்னுரை:

பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறை பொதுநிலையினரின் ஞாயிறாக் கொண்டாட திருஅவை அழைக்கும் இவ்வேளையில் நம் ஆலயத்தில் ஒருமனதோராய் குழுமியிருக்கும் இறைமக்களாகிய உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

கலப்பை, நுகம் என்ற வார்த்தைகள் இன்றைய வாசகங்களை அலங்கரிக்கும் சொற்கள். இன்றைய முதல் வாசகத்தில், கலப்பை பிடித்து உழுது கொண்டிருந்த எலிசாவைத் தேடி வந்து தன் சீடராக எடுத்துக் கொள்கின்றார் இறைவாக்கினர் எலியா. நற்செய்தி வாசகத்தில் 'கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல' என இறையாட்சிக்கான சீடத்துவத்தின் பண்பு பற்றிச் சொல்கின்றார் இயேசு.

கிறிஸ்துவில் உயிர்பெற்றெழுந்த கலாத்திய திருஅவை மக்கள் மீண்டும் அடிமைத்தனம் என்னும் 'நுகத்தை' ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று இரண்டாம் வாசகத்தில் அறிவுறுத்துகின்றார் பவுல். கலப்பை களத்தில் இறங்கினால்தான் கலப்பையின் நோக்கமும், உழுபவரின் நோக்கமும், விவசாய நிலத்தின் நோக்கமும் நிறைவேறுகிறது. இவைகளின்  நோக்கம் நிறைவேறவில்லை என்றால் விதை விதைப்பதும், விதை விளைச்சல் தருவதும் சாத்தியமல்ல. நம் சிந்தனையில் இறைவார்த்தைகளால் நம் உள்ளத்தை உழுது நிலைவாழ்வு என்னும் விளச்சலை அடைய ஈடுபாடு உள்ள கிறிஸ்துவ வாழ்வை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள இத்திருப்பலிக் கொண்டாடங்களில் உளமாறப் பங்குக்கொண்டு செபிப்போம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

கலப்பை பிடித்து உழுது கொண்டிருந்த எலிசாவைத் தேடி வந்து தன் சீடராக எடுத்துக் கொள்கின்றார் இறைவாக்கினர் எலியா. எலிசா, 'நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும் என்று கேட்க  'சென்று வா!' என அனுமதிக்கின்றார் எலியா. எலிசா தான் செய்த விவசாயப் பணியை அடியோடு ஒழித்து தன் இறந்தகாலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றார். இறைஅழைத்தலை ஏற்ற நம்மை அழைக்கும் இந்த முதல் வாசிகத்திற்குக்  கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 16: 1-2, 5. 7-8. 9-10. 11
பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.

1.இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.  நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்' என்று சொன்னேன்.  ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி
2.எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.  ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி
3.என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். பல்லவி
4.வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர் பெற்றுள்ள உரிமை வாழ்வில் இணைந்த ஒருவர் தான் கொண்டிருந்த இறந்த காலத்தை முற்றிலும் தூக்கி எறிய வேண்டும் என அறிவுறுத்துகின்றார். இறந்த காலத்தையும், ஊனியல்பையும் கழுத்தை அமுக்கும் நுகம் என்று உருவகிக்கும் பவுல், 'மீண்டும் அடிமைத் தளை என்னும் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்'  எனக் கட்டளையிடுகின்றார். கிறிஸ்துவில் உயிர்பெற்றெழுந்த திருஅவை மக்கள் மீண்டும் அடிமைத்தனம் என்னும் 'நுகத்தை' ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கருத்துடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன். நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1.  அன்புத் தந்தையே! எம் இறைவா!  அருட்பணியாளர்களும், பொதுநிலையினரும் இணைந்து செயல்பட்டால் அங்குத்  திருச்சபை நிறுவப்படுகின்றது என்ற மொழிக்கேற்ப எம் திருஅவையில் அருள் வாழ்வில் பொதுநிலையினர், குருநிலையினர் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் கிறிஸ்துவின் மாண்பிலும், மகத்துவத்திலும் இறையாட்சி பணியினை தமது சொல்லாலும், செயலாலும் சான்று பகிர்ந்திட வரமருள வேணடுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஏழைகளைத் தேடிவந்த எம் அன்பு தெய்வமே! இன்றைய உலகில் பாவத்தைக் குறித்த பயமோ கவலையோ அச்ச உணர்வற்ற இக்ககாலத்தில் அறிவியல் முன்னேற்றங்கள் போன்ற சில மாயைகளை மனத்தில் கொண்டு உம்மோடு ஒப்புறவாக தூய மனச்சான்றுடன் எங்கள் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்திட எங்களை நல்வழி கொணர வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நல்ஆயனே எம் இறைவா இக்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் தொழில் முன்னேற்றங்கள் இவைகளால் ஏற்படும் அறிவு சார்ந்த செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இறைஅச்சம் குறைந்தவர்களாய் உலகம் போக்கிலான வழிகாட்டுதலில் தங்கள் வாழ்வை இழந்த  எம் இளையோர் சிறுவர், சிறுமிகள் ஆகிய அனைவரும் உண்மையை உணர்ந்தவர்களாக இறைஅச்சமே ஞானத்தின் தொடக்கம் என்பதை உணர்ந்து வாழ தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. காலங்களைக் கடந்த எம் இறைவா! எம் நாட்டில் உள்ள அனைத்து இளைஞர், இளம் பெண்கள் தங்கள் இளமைக் காலங்களில் உம் தூய ஆவியின் துணையை நாடி ஞானத்தைப் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் விசுவாச வாழ்வில் சாட்சிகளாகத் திகழத் தேவையான அருள் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம் இறைவா! எம் வாழ்வில்  நாங்கள் சந்தித்த அனைத்து போராட்டங்களும், படும் வேதனைகளும் எதிர்காலத்தில் எமக்கு கிடைக்கும் வெற்றிவாகை என்பதைனை உணர்ந்து குடும்பவாழ்வில் தனிமை, வருத்தம், நெருக்கடி, தோல்வி, வேதனை இவைகளிலிருந்து மீண்டும் எழுந்திட குடும்பத்த்தில் அன்பும் ஒற்றுமையும் தழைத்து ஓங்க  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, June 13, 2022

ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா 19-06-2022

ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா 19-06-2022

 
 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

தொடக்க நூல் 14:18-20  
1 கொரிந்தியர் 11:23-26
லூக்கா 9:11-17

 திருப்பலி முன்னுரை:


இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்று நாம் ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இன்றைய நாளில் கிறிஸ்து கூறிய வார்த்தைகளான "எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்." என்பதை நினைவு கூர்ந்திடுவோம். உலகில் உள்ள கத்தோலிக்கர் ஒவ்வொருவரும் தகுந்த ஆயத்தமுடன் திருவிருந்தில் பங்குபெறும்போது நம்மில் கிறிஸ்து வாழ்கின்றார் என்ற உண்மையின் உச்சக்கட்டமே இந்த திருவிருந்து ஆகும்.

இது என் உடல், இது என் இரத்தம் என்று அப்பரச வடிவில் நான் உம்மில் கலந்து விடுகின்றேன். நான் உம்மிலும், நீர் என்னிலும் இணைந்து உடன்பயணிக்கும் எங்களின் இவ்வுலக வாழ்வை ஒளிரச் செய்யும் உன்னதமான விருந்தே இன்றைய விழாவின் மையப்பொருள். அதனை உணர்ந்து இன்றைய வழிபாட்டில் கலந்து கொள்ள இப்பெருவிழாவில் நம்மை அழைக்கின்றது. வாரீர் இறைகுலமே!

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் தொடக்கநூலின் பதிவாகிய  ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்தவர்களையும் வென்று வந்ததிற்கு நன்றி பலியாக உன்னத குருவும், இயேசுவின் முன்னோடியுமான மெல்கிசெதேக் அப்பத்தையும் இரசத்தையும் இறைவனுக்கு காணிக்கையாக அர்ப்பணித்த நன்றிப்பலியைப் பற்றி வாசிக்க, அதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 110: 1. 2. 3. 4
பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.

1 ஆண்டவர் என் தலைவரிடம், `நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். பல்லவி...
2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி..
3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப் போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்! பல்லவி..
4 "மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார்.  பல்லவி..

இரண்டாம் வாசக முன்னுரை:

 நற்கருணை நம்மைக் கிறிஸ்துவோடு மட்டுமல்ல, உறவின் அடிப்படையில் நம் அனைவரையும் இணைக்கிறது. அப்பம் ஒன்றே ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கின்றோம். எனென்றால் நாம் அனைவரும் ஒரே அப்பத்தில் தான் பங்கு பெறுகிறோம். இயேசுவின் திருவுடலும் திருஇரத்தமும் நம்மை இயேசுவோடு ஒன்றிணைக்கிறது. இக்கருத்துகளை ஏடுத்துரைக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு  அன்புடன் செவிமெடுப்போம்.
 

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. அன்புத் தந்தையே எம் இறைவா, உம் இறைஇரக்கத்தின் உடனிருப்பு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உம் சீடர்களோடு இருந்தது போல இன்று எம் திருஅவையில் உமது ஆற்றலினால் உத்வேகத்தோடு தங்கள் வாழ்வால் திருத்தந்தை முதல் கடைநிலை பொதுநிலையினர் வரை அனைவரும் நற்செய்தியின் தூதுவர்களாக திருஅவையை வழி நடத்த வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. கொடைகளின் ஊற்றான இறைவா! இப்புதிய கல்வியாண்டில் முதல் முறையாகப் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் சிறார் முதல் தங்கள் இறுதிப் படிப்பை முடிக்க உள்ள எம் இளையோர் வரையுள்ள அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்களுக்கு நல்ல ஞானத்தையும், ஞாபக சக்தியையும், இறையச்சத்தையும் அளித்து, சிறந்த படைப்பாக இவ்வுலகில் வலம் வர உம் அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மைச் செயல்வீரராய் மாற்றும் அன்புத் தந்தையே! எம் இறைவா! இன்றைய உலகில் குழப்பங்களும் போராட்டங்களும், அமைதியின்மையும், சுயநலப் போக்குகளும் மலிந்தக் கிடக்கின்ற சூழலில் அமைதியின் தூதுவராய் எம் உலக அரசியல் தலைவர்கள் சமாதானப் போக்கைக் கையாண்டு மக்களுக்கு நன்மைகள் செய்து வளமான வாழ்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.எம் இறைவா! எம் வாழ்வில்  நாங்கள் சந்தித்த அனைத்து போராட்டங்களும், படும் வேதனைகளும் எதிர்காலத்தில் எமக்கு கிடைக்கும் வெற்றிவாகையினை உணர்ந்து குடும்பவாழ்வில் தனிமை, வருத்தம், நெருக்கடி, தோல்வி, வேதனை இவற்றிலிருந்து மீண்டும் எழுந்திட குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் தழைத்து ஓங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உறவுகளின் ஊற்றான இறைவா! தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருநாளன்று, எங்கள் குடும்பங்களின் உள்ள அனைவரும் மக்களின் நல்வாழ்வுக்கு ஏதோ ஒரு வகையில் தம்மையே வழங்கும் வழிகளையும் தன்னலமற்ற தொண்டுள்ளமும் எமக்குத் தர வேண்டும்மென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Sunday, June 5, 2022

மூவொரு இறைவன் பெருவிழா

 மூவொரு இறைவன் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

நீதிமொழிகள் 8:22-31
உரோமையர் 5: 1-5
யோவான் 16:12-15

திருப்பலி முன்னுரை:

இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்று நமது தாய்திருச்சபை மூவொரு இறைவன் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. மூவொரு இறைவன் என்றால் தந்தை படைப்பாளராகவும், மகன் மீட்பராகவும், தூய ஆவி எந்நாளும் நம்மை பராமரிப்பவராகவும் நாம் விவிலியத்தின் அடிப்படையில் இம்மறைபொருளை உணர்கிறோம். அதன்படி வாழ்கின்றோம். மூவொரு கடவுளும் மூன்று கடவுளா? என்று சிலர் கேட்கலாம். ஆனால் படைத்தவர் தந்தை. அகரமும் னகரமும் நானே என்றவர் மகன். நீரில் அசைவாடிக் கொண்டிருந்தவர் தூயஆவி.

மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே இறையியல்பு இருப்பதால் ஒன்றிப்பு நிலவுகிறது. தந்தை படைப்பவராகவும், மகன் மீட்பவராகவும், தூய ஆவி அர்ச்சிப்பவராகவும், சாதாரண முறையில் நாம் புரிந்துக் கொண்டாலும் எந்த ஒரு பணியையும் எந்த ஓர் ஆளும் தனித்துச் செய்வதில்லை. மூன்று ஆட்களும் எல்லாவற்றிலும் இணைந்துச் செயல்படுகின்றனர்.

தந்தை மகன் தூயஆவி என்னும் கூட்டுக் தத்துவம் நம்மில் இருக்கும் பகைமை எண்ணங்களை நீக்கிச் சுயநலத்தைப் போக்கி நட்புறவில் வாழத் தேவையாக வரங்களை இன்றைய தமதிருத்துவப் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாடங்களில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

உலகம் தோன்றுவதற்கு முன்பே ஞானம் இவ்வுலகில் கடவுளோடு செயலாற்றியது என்பதையும் அந்த ஞானம் தனக்குத் தானே பேசிக்கொள்வதை இங்கே பதிவு செய்கின்றார். நீதிமொழி 1:7ல் இறை அச்சமே ஞானத்தின் தொடக்கம் எனக் கூறுவதை நாம் காணமுடிகின்றது. விவிலியத்தில் பல பெண்கள் குறிப்பாக எஸ்தர், யூதித், தெபோரா, அன்னை மரியாள் போன்றோர் போற்றப்படுவதற்கு இவர்கள் தேர்ந்து கொண்ட ஞானமே அவர்களுக்கு அடையாளமாக இருக்கின்றது. எனவே நாமும் ஞானத்தைக் கண்டடைய, பெற்றுக்கொள்ள இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 8: 3-4. 5-6. 7-8
பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!

 
உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? -பல்லவி

ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

நம்பிக்கை என்பது நாம் காணக்கூடிய அல்ல. மாறாக நம்பிக்கையின் அடிப்படையில் நாம் எதிர்நோக்கி இருப்பது. இந்த நம்பிக்கை “நமது இறுதி நியத்தீர்ப்பின் போது எல்லோரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்றும், நமக்கு ஒரு துணையாளரை அனுப்பப் போகின்றேன், அவர் உங்களை நிறைவாழ்விற்கு அழைத்துச் செல்வார்” என்ற கிறிஸ்துவின் வெளிப்பாடுகளைத் தூய பவுல் இத்திருமுகத்தில் விவரிக்கின்றார், எனவே இம்மூவொரு இறைவனின் இறைவெளிப்ப்பாட்டை நாம் தூய ஆவியின் வழியாகப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. இறைஅச்சமே ஞானத்தின் தொடக்கம் என்றுரைத்த எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை முதல் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் மூவொரு கடவுளைப் போன்று ஒற்றுமையின் அடையாளமாகவும், சமத்துவத்தின் சங்கம்மாகவும் ஒருங்கிணைந்த செயல்பட வேண்டிய ஞானத்தையும் புரிதலையும் பெற்றுத் திருஅவைச் சிறப்புடன் திகழத் தேவையான ஆற்றலை நிறைவாக பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. அருளிலும், அன்பிலும், நட்புறவிலும் ஒன்றிணைந்திருக்கும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இறையருளின் துணையோடு இறையனுபவத்தைப் பெற்றிட, உம்மைப் போல் ஒன்றாய் ஒற்றுமையுடன் வாழவும், உண்மையான கிறிஸ்தவராக எப்போதும் கடவுளோடும், பிறரோடும், உறவோடு வாழ எமக்குத் தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் அரசே! எம் இறைவா! 'உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள். பிறர் உங்களைவிட மதிப்பிற்கு உரியவர் என எண்ணுங்கள்' என்ற பவுலடிகளாரின் வார்த்தைகளுக்கேற்ப அடுத்திருப்பவருடன் அன்பும், சுயநலமில்லாத சேவை மனப்பான்மை மனம் கொண்டவர்களாகவும், உலகமெங்கும் உம் அன்பின் சாட்சிகள் வலம் வர உமது அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.உலகின் ஒளியே இறைவா! உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கின்றவர் நீரே. எங்கள் இதயங்களையும் ஒளிர்வித்தருளும். உமது வார்த்தையாலும் உணவாலும் ஊட்டம் பெற்ற நாங்கள் எப்பொழுதும் உமக்கு உகந்தவற்றையே நாடவும், பிறரை நேர்மையான உள்ளத்தோடு அன்பு செய்து வாழ இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எல்லாம் வல்ல இறைவா! நாங்கள் சந்திக்கும் ஏழைகள், இன்னலுறுவோர், அனாதைகள், கைவிடப்பட்டோர், ஆதரவுற்றோருக்குத் தாராளமான மனமுவந்து உதவிகரம் நீட்டவும், நாங்கள் சிறந்த முறையில் பருவமழையைப் பெற்று வளமுடன் வாழ உமது அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF