Wednesday, March 27, 2024

உயிர்ப்புப்‌ பெருவிழா - 31.03.2024

உயிர்ப்புப்‌ பெருவிழா - 31.03.2024  

இன்றைய வாசகங்கள்

திருத்தூதர் பணி 10:84-49
கொலோசையர் 8:1-4
யோவான் 20:1-9

திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவின்‌ உயிர்ப்பு, வரலாற்று ஏடுகளில்‌ புதைந்துபோன அல்லது அழிந்துபோன நிகழ்வல்ல. மாறாக நமக்கும்‌ கடவுளுக்கும்‌ இடையில்‌ உள்ள தடைகளை உடைத்து நம்மை இறைவனோடு இணைக்கும்‌ உன்னத நிகழ்வாகும்‌. உயிர்ப்பு இல்லையெனில்‌ நற்செய்தியில்லை, உயிர்ப்பு இல்லையெனில்‌ கிறிஸ்தவ சமூகம்‌ இல்லை. உயிர்ப்பு நம்மைப் பிரிக்கும் சக்திகளை உடைத்தெரியும்‌ மக்களாக வாழ அழைப்பு விடுக்கிறது. தோற்றுவிட்டோம்‌. எல்லாம்‌ முடிந்துவிட்டது என்று கலங்கிக்‌ கொண்டிருந்த சீடர்களுக்கு, கிறிஸ்துவின்‌ உயிர்ப்பு வளமையையும்‌ வாழ்வையும்‌ தந்தது.

நாமும்‌ உயிர்த்த இயேசுவின்‌ நற்செய்தியைப்‌ பிறருக்கு கொண்டு செல்ல வேண்டும்‌. உயிர்ப்பின்‌ மக்களாக வாழ வேண்டும்‌ என அழைப்பு விடுக்கிறது. எனவே உயிர்த்த கிறிஸ்துவின்‌ அன்பையும்‌, ஆசிகளையும்‌ அனைவருடனும்‌ பகிர்ந்து கொள்வோம்‌ என்ற உறுதிப்பாட்டோடு இந்தத்‌ திருப்பலியில்‌ பங்கெடுப்போம்‌.

முதல்‌ வாசக முன்னுரை :

கிறிஸ்து காட்டும்‌ பாதையில்‌ அன்பு உண்டு. அமைதி உண்டு. வெற்றி உண்டு. நாமும்‌ கிறிஸ்துவோடு இணைந்து அவரது பாதையில்‌ செல்லப் புனித பேதுரு இவ்வாசகம்‌ மூலம்‌ நமக்கு அழைப்பு விடுக்கிறார்‌. நம்மை முழு மனிதராக்கும்‌ கிறிஸ்துவின்‌ பாதையில்‌ நாமும்‌ பயணம்‌ செய்ய இறைவனுக்கு ஏற்புடைய செயல்களை நாம்‌ செய்ய வேண்டும்‌ எனக்‌ கூறும்‌ இவ்வாசகத்திற்குச்‌ செவிகொடுப்போம்‌

பதிலுரைப் பாடல்

திபா 118: 1-2. 16-17. 22-23 (பல்லவி: 24)

பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! - பல்லவி
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். - பல்லவி
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை :   

கிறிஸ்துவின்‌ உயிர்ப்பு என்பது புதிய தொடக்கமாகும்‌. உலகம்‌ சொல்லும்‌ அனைத்து விதமான கருத்துகளுக்கும்‌ முற்றுப்புள்ளி வைத்த இந்த நிகழ்வு விண்ணக வாழ்விற்குப்‌ புதிய தொடக்கமாகிறது. அவரது உயிர்ப்பினால்‌ அவரோடு புனித படைப்பான நாமும்‌ விண்ணக வாழ்வைப்‌ பற்றி எண்ணி கிறிஸ்துவோடு இணைந்து துன்பங்களை மறந்து வாழ்வோம்‌ என அழைக்கும்‌. வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌.

தொடர்பாடல்

இன்று இதைச் சொல்ல வேண்டும் அல்லது பாட வேண்டும். எண்கிழமை நாள்களில், விரும்பினால், சொல்லலாம்.

பாஸ்காப் பலியின் புகழ்தனையே
பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே.

மாசில் இளமறி மந்தையினை
மாண்பாய் மீட்டுக்கொணர்ந்தாரே;
மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன்
மாசுறு நம்மை இணைத்தாரே.

சாவும் உயிரும் தம்மிடையே
புரிந்த வியத்தகு போரினிலே
உயிரின் தலைவர் இறந்தாலும்
உண்மையில் உயிரோடாளுகின்றார்.

வழியில் என்ன கண்டாய் நீ?
மரியே, எமக்கு உரைப்பாயே.

உயிரோடுள்ள கிறிஸ்து பிரான்
கல்லறைதன்னைக் கண்டேனே;
உயிர்த்து எழுந்த ஆண்டவரின்
ஒப்பரும் மாட்சியும் கண்டேனே.

சான்று பகர்ந்த தூதரையும்
போர்த்திய பரிவட்டத்தினையும்
அவர்தம் தூய துகிலினையும்
நேராய்க் கண்ணால் கண்டேனே.

கிறிஸ்து என்றன் நம்பிக்கை,
கல்லறை நின்று உயிர்த்தாரே,
இதோ, உமக்கு முன்னாலே
செல்வர் கலிலேயாவிற்கே.

மரித்தோர் நின்று உண்மையிலே
கிறிஸ்து உயிர்த்தது யாமறிவோம்.
வெற்றிகொள் வேந்தே, எம்மீது
நீரே இரக்கங் கொள்வீரே.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்‌ மன்றாட்டுகள்‌

1. எம்தாய்த் திருஅவையை வழிநடத்தும்‌ திருத்தந்தை, ஆயர்கள்‌, குருக்கள்‌ அனைவருக்கும்‌ உமது ஆசியை அளித்தருளும்‌. அவர்கள்‌ உமது உயிர்ப்பின்‌ செய்தியைத் தங்கள் வாழ்வாலும்‌, போதனையாலும்‌ மக்களுக்கு அறிவிக்க வேண்டிய அருளைத்‌ தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.

2. அன்பு இறைவா ! உமது உயிர்ப்பில்தான்‌ எங்களது விசுவாசம்‌ பொருளுள்ளதாய்‌, உயிருள்ளதாய்‌ இருக்கிறது என்பதை நாங்கள்‌ உணர்கிறோம்‌. எங்களது அன்றாட வாழ்க்கையில்‌ வரும்‌ துன்ப துயரங்கள்‌, வேதனைகள்‌, சுமைகளை நிறைவாக ஏற்றுக்கொண்டு உம்மில்‌ நம்பிக்கை கொண்டு, இலட்சியத்தோடு போராட உமது உயிர்ப்பில்‌ நாங்களும்‌ பங்குபெற வரம்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்‌. 

3. எங்களது துன்பத்தில்‌ பங்கெடுக்கும்‌ இறைவா ! துயருறுவோர்‌ யாவருக்காகவும்‌ செபிக்கிறோம்‌. துன்பத்தின்‌ மூலமே ஒருவர்‌ இன்பத்தை அடைய முடியும்‌ என்பதை உமது உயிர்ப்பின்‌ மூலம்‌ நாங்கள்‌ உணர்ந்து வாழவும்‌, பிறரது துன்பங்களில்‌ பங்கெடுத்து அவர்களில்‌ இரண்டறக்‌ கலந்து, உமது உண்மை அன்பை செயலில்‌ காட்டும்‌ மாமனிதர்களாக வாழ்ந்திட வரம்தர உம்மை மன்றாடுகிறோம்‌.

4. வெற்றியின்‌ நாயகனே இறைவா ! உம்‌ மகன்‌ இயேசுவின்‌ உயிர்ப்பினால்‌ எம்பங்கு மக்கள்‌ யாவரும்‌ ஒளிபெற்று, ஒருவரை ஒருவர்‌ அன்பு செய்து, விட்டுக்‌ கொடுத்து ஏற்றுக்‌ கொண்டு, உமது மதிப்பீடுகளின்படி வாழ வரம்‌ தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்‌. 

நன்றி: இனிய தோழன்

Tuesday, March 26, 2024

ஆண்டவருடைய திருப்பாடுகளின் வாரம் 24-30மார்ச் 2024

 ஆண்டவருடைய திருப்பாடுகளின் வாரம்
24-30மார்ச் 2024



 

 
இராவுணவு

 

 

திருப்பாடுகளின் வெள்ளி

 

 
பாஸ்கா திருவிழிப்பு

 


அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா  நல் வாழ்த்துக்கள்

இறை இயேசுவின் அமைதி உங்கள் இல்லத்திலும், உங்கள் உள்ளங்களிலும்  என்றும் இருப்பதாக!

அன்பின் மடல் -நவராஜன்

Monday, March 18, 2024

குருத்து ஞாயிறு 24.03.2024

குருத்து ஞாயிறு 24.03.2024 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 50:4-7
பிலிப்பியர் 2:6-11
மாற்கு 14:1-15:47

திருப்பலி முன்னுரை

அன்புடையீா,
இன்று குருத்து ஞாயிறைக்‌ கொண்டாடுகிறோம்‌. புனித வாரத்தின்‌ தொடக்கமாகவும்‌, நுழைவு வாயிலாகவும்‌ குருத்து ஞாயிறு அமைகின்றது. தாவீதின்‌ மகனுக்கு ஓசான்னா முழக்கங்களோடும்‌, ஒலிவக்‌ கிளைகளைக் கைகளிலே ஏந்திய வண்ணமாய்‌ எபிரேயர்‌ எருசலேமிற்குள்‌ வீரப்பயணம்‌ மேற்கொள்கிறார்கள்‌. இந்தப்‌ பயணம்தான்‌ இயேசு இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும்‌, மீட்பின்‌ முதல்‌ படியாகவும்‌ அமைகிறது. ஈராயிரம்‌ ஆண்டுகளாய்‌ விடுதலைக்காய்‌, வாழ்வின்‌ விடியலுக்காய்‌ ஏழை எளிய மக்களுக்கு நம்பிக்கையையும்‌, புத்துயிரையும்‌ கொடுப்பதாகவும்‌ அமைகிறது. எனவே இப்புனிதமான நாளில்‌ நாம்‌ நமது கரங்களில்‌ ஏந்தும்‌ குருத்து மடல்களும்‌ நாம்‌ இசைக்கும்‌ ஓசான்னா கீதமும்‌ இந்தச்‌ சமுதாயத்தில்‌ இருக்கும்‌ சுயநலம்‌, அழிவுக்‌ கலாச்சாரம்‌, நுகர்வுக்‌ கலாச்சாரம்‌, அநீதிகள்‌ போன்றவற்றிற்குச்‌ சாவுமணி அடிக்கும்‌ உரிமைக்‌ குரல்களாக ஒலிக்கட்டும்‌. இத்திருப்பவனியின்‌ வழியாக இயேசுவோடு கல்வாரிக்குப்‌ பயணமாவோம்‌.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

அநீதிகளும்‌, அராஜகங்களும்‌, சுயநலமும்‌ நிறைந்த உலகத்தினை எதிர்த்துப்‌ போராடுகிறபோது, பல துன்பங்களும்‌ அவமானங்களும்‌ ஏற்படும்‌. பலர்‌ இகழ்வார்கள்‌. ஆனால்‌ தாழ்ச்சியோடும்‌, துணிவோடும்‌ அவைகளை எதிர்த்துப்‌ போராட ஆண்டவர்‌ இயேசு நமக்குத்‌ துணையாயிருக்கிறார்‌. அவரை நாடுங்கள்‌ அவர்‌ நம்மை எல்லாச்‌ சூழ்நிலையிலும்‌ வழிநடத்துவார்‌ என்று எசாயாவின்‌ நம்பிக்கையூட்டும்‌ வார்த்தைகளுக்குச்‌ செவிமடுப்போம்‌.

பதிலுரைப்பாடல்

பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
திபா 22:7-8, 16-17, 18-19, 22-23
என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,`ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர். பல்லவி

தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். பல்லவி

என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி

உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்துப் பாடுவேன். ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு இறைமகன்‌. அவருக்கு எல்லாவற்றின்‌ மேலும்‌ அதிகாரமும்‌, வல்லமையும்‌ இருந்தாலும்‌ அன்புகருதி, அமைதிகருதி, சமாதானம்கருதி அவர்‌ தன்னையே வெறுமையாக்கினார்‌. தாழ்த்திக்கொண்டார்‌. தாழ்ச்சி என்பது வீழ்ச்சி அல்ல. ஆனால்‌ அவரை அனைத்திற்கும்‌ மேலாகத் தந்தை உயர்த்தினார்‌. நாமும்‌ நமக்கு அறிவுத்‌ திறமை, ஆள்திறமை, பணம்‌, பதவி ஆகியவை இருந்தாலும்‌ பணிவோடு பிறர்‌ வாழ்வு முன்னேற முயற்சி செய்யும்போது கடவுள்‌ நம்மையே மேன்மைப்படுத்துகிறார்‌ என்று கூறும்‌ இவ்வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நம்பிக்கையாளரின்‌ மன்றாட்டுகள்‌

1. அருட்பெருக்கின் நாயகனே! எம் இறைவா! திருத்தந்தை, அவரோடு இணைந்து உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் உயிர்ப்பின் மகிமையால் பலன் அளிக்கக் கூடியவர்களாகத் தொடர்ந்து பணி செய்திட, இயேசுவே ஆண்டவர் என்று முழுக்கமிட தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நன்மைகளின் நாயகனே எம் இறைவா! வரவிருக்கும் இப்புனித வார நாட்களில் நாங்கள் எங்கள் பாவங்களையும், பலவீனத்தையும், குற்றங்குறைகளைக் களைந்து வழக்கமாக மேற்கொள்ளும் நிகழ்வாக உம் பாஸ்கா விழாவைக் கொண்டாடாமல், உள்ளத்தில் மாற்றம் நிறைந்தவர்களாகத் தூய மனதுடன் உம்மை அணுகி வர இறைவா உமை மன்றாடுகிறோம்.

3. ஏழைகளின் திருவுருவே எம் இறைவா! இந்த அருளிரக்க நாட்களில் தவமுயற்சிகளில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்தாமல் உள்ளத்தில் மனமாற்றமும், அதன் வெளிப்பாடாக, ஏழைகள் மட்டில் கவனம் செலுத்தி, அவர்களின் வாழ்வு சிறந்து விளங்கிட, அந்த மீட்புச் செயலின் வழியாக உம் சீடத்துவ வாழ்வில் அவர்களும் பங்கேற்கத் தேவையான மீட்பின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பாராளும்‌ பரமனே எம்‌ இறைவா ! நாட்டிற்காகவும்‌ நாட்டை ஆளுகின்ற தலைவர்களுக்காகவும்‌ மன்றாடுகின்றோம்‌. அவர்களுக்கு உமது ஆசிகளை நிறைவாய்‌ வழங்கியருளும்‌. அவர்கள்‌ தன்னலத்தோடு வாழாமல்‌, தங்களைத்‌ தேர்ந்தெடுத்த மக்களின்‌ தேவைகளை நிறைவேற்றவும்‌, நாடு வளமும்‌, நலமும்‌ பெற அவர்கள்‌ உழைக்கவும்‌, அவர்களுக்கு நல்மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்‌.

5. துன்பம் இல்லாமல் இன்பம்‌ இல்லை. சிலுவை இல்லாமல் சிம்மாசனம்‌ இல்லை என்பதை உணர்த்திய எம்‌ இயேசுவே! எங்களுக்கு வரும்‌ துன்பத்‌ துயரங்களைத் தாங்கிக்கொள்ளவும், பிறர்‌ வாழ்வில்‌ உள்ள சுமைகளைப்‌ பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்யும்‌ நல்‌மனதைத்‌ தந்தருள உம்மை வேண்டுகிறோம்‌.

6.எம்மை அரவணைக்கும் இறைவா! எம்பங்கில் அனைவரும் இத்தவக்காலத்தில் பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு,  ஒருவரை ஒருவர் மன்னித்துப் புதுமனிதர்களாக, புது வாழ்வை நோக்கிப் புத்துயிர் பெற்றுச் செயலற்ற, உம் அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF


Wednesday, March 13, 2024

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு - 18-03-2024

 தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு - 18-03-2024


இன்றைய வாசகங்கள் :

எரேமியா 31: 31-34
எபேசியர் 5: 7-9
யோவான் 12: 20-33

திருப்பலி முன்னுரை :

அன்பார்ந்த இறைமக்களே!
தவக்காலத்தின் இறுதி வாரத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். அடுத்த ஞாயிறு குருத்து ஞாயிறு. அதைத் தொடர்ந்து பாடுகளின் வாரம். தவக்காலத்தின் இந்த இறுதி ஞாயிறன்று வசந்த காலத்தை நமக்கு நினைவுறுத்தும் அழகான ஒரு கூற்றை இறைமகன் இயேசு நமக்கு முன் வைக்கிறார். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அஃது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தாவர உலகம் மீண்டும் உயிர்பெற்று எழும் வசந்தக் காலத்தில் இயேசுவின் இந்தக் கூற்று பல எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கின்றது. விதைக்கப்பட்ட இந்த எண்ணங்கள் மிகுந்த விளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்பது நம் எண்ணம், நம் வேண்டுதல்.
இதுவரை தன் நேரம் இன்னும் வரவில்லை என்று உணர்ந்திருந்த இயேசு, இன்று தன் நேரம் வந்துவிட்டது என்று சொல்கிறார். எதற்கான நேரம் இது? மானிட மகன் மாட்சி பெறும் நேரம்... உணவாக மாறி மற்றவரை வாழ்விப்பதும், விதையாக மாறித் தன் இனத்தைப் பெருக்குவதும் கோதுமை மணிக்கு மட்டுமல்ல, உலகில் படைக்கப்பட்ட அனைத்து தானிய மணிகளுக்கும் உள்ள இயல்பான இரண்டு காரணங்கள். இயேசுவும் தான் மரித்து மண்ணில் புதைக்கப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து இந்த மானிடம் மீட்பு பெற வேண்டும் என்று விரும்பியதால் தான் நேரம் வந்துவிட்டது என்று கூறுகிறார்.
ஆம் அன்பர்களே, நாமும் இயேசு என்னும் நிலத்தில் புதைக்கப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்று பலன் தரும் கோதுமை மணியாக மாறிட நேரம் விந்து விட்டது என்று இயேசு அழைப்பது நாம் காதுகளிலும் ஒலிக்கின்றது அல்லவா? கோதுமை மணி தன் சுய உருவை, உயிரை இழந்தது போல் நாமும் சுயநலம் இழந்துப் பிறருக்கு பலன் தரும் மானிடராக இவ்வுலகில் வலம் வரத் தந்தையாம் இறைவனிடம் இறைஞ்சுவோம். வாரீர்.

முதல் வாசக முன்னுரை :

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் புதியதோர் உடன்படிக்கையைச் செய்யப் போவதாக இறைவாக்கினர் எரேமியா வாயிலாக வாக்களிக்கின்றார். அனைவரையும் ஈர்க்க ஓர் உடன்படிக்கை. மனிதனின் இதயப் பலகையில் எழுதப்படும். அதன் முக்கியச் சிறப்பு இனி இறைவாக்கினர் வழியாக அல்ல இறைவனே முன் வந்து போதிப்பார். இன்னொரு சிறப்பு மக்கள் கடவுளை முழுமையாக அறிந்து கொள்வார்கள். ‘நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்’. இந்த நெருக்கமான நேரடி உறவை எடுத்துக்கூறும் இறைவாக்கினர் எரேமியாவின் வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

திபா 51: 1-2. 10-11. 12-13
பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

அனைவரையும் ஈர்க்க ஒரு சிலுவைப்பலி! மன்னுயிரை மீட்பதற்காகச் சிலுவைச் சாவை ஏற்க முன் வந்தவர் தான் கிறிஸ்து இயேசு. மண்ணக மாந்தர் வாழ்வு பெற கோதுமை மணியென மண்ணிலே புதைக்கப்பட்டுத் துன்பங்கள் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்று, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவருக்கும் முடிவில்லா மீட்பிற்குக் காரணமானவர் கிறிஸ்து என்று இறையச்சத்தையும் கீழ்படிதலையும் எடுத்துரைக்கும் பவுலடிகளாரின் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வசனம்

`எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்,' என்கிறார் ஆண்டவர்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்பும் அருளும் உள்ளவரே! எம் இறைவா! திருஅவை உள்ள அனைவரும் ஓப்புறவு அருட்சாதனத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கின்ற தவறான கண்ணோட்டங்களைக் களைந்து, நல்ல ஒப்புறவு அருட்சாதனத்தில் பங்குகொண்டு இத்தவக்காலப் பலன்களை முழுமையாக அனுபவிக்கவும், இயேசுவின் உயிர்ப்பில் இணைந்திட வேண்டிய உறுதியான மனநிலையையும், உயிருள்ள ஆலயமாகிய உமது உடலை உட்கொள்ளும் நாங்கள் உம்மீது ஆழ்ந்த அன்பும், நம்பிக்கைக் கொள்ளவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! எமது நாட்டு அரசியல் தலைவர்களுக்காக வேண்டுகிறோம். அவர்கள் மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி, அனைவரும் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தைக் கண்டடையச் செய்திடவும், சமுக உறவில் ஒன்றுபட்டு வாழ வழிவகைச் செய்திடவும், நாட்டிற்கும் உலகிற்கும் பயன் உள்ளவர்களாக வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அனைவருக்கும் நன்மைச் செய்யும் ஆண்டவரே! எம் இறைவா! நான் மட்டும் பகிர்வதால் என்ன செய்ய முடியும் என்ற எதிர்மறை எண்ணங்களிலிருந்து எம்மை விடுவித்துப் பகிர்வு மனப்பான்மை வளரவும், உம் திருமகன் இயேசுவைப் போல் பகிர்ந்துண்டு வாழும் அவரின் சிறந்த சீடர்களாக எம் அயலாருடன் இணைந்து வாழ்ந்திடவும்,ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோருக்கு உமது பரிவிரக்கத்தைப் பகிர்ந்தளிக்கும் அன்பு கருவியாக நாங்கள் வாழ வரம் வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் அன்பு தந்தையே இறைவா! எமது பிள்ளைகள் தங்களின் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழாமல் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்து புதிய மனிதருக்குரிய இயல்புகளை அணிந்துத் தூய்மையான புதிய படைப்பாய் மாறிடவும், கோதுமைமணிபோல் ஒன்றுக்கு நூறு மடங்காய் பலனளிக்கும் சீடராய் வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



www.anbinmadal.org


Print Friendly and PDF


Tuesday, March 5, 2024

தவக்காலம் நான்காம் ஞாயிறு - 10-03-2024

 தவக்காலம் நான்காம் ஞாயிறு - 10-03-2024
 'அகமகிழ்தல்' ஞாயி
று


இன்றைய வாசகங்கள் :

குறிப்பேடு 36:14-16,19-23
எபேசியர் 2:4-10
யோவான் 3:14-21


திருப்பலி முன்னுரை :

அன்பார்ந்த இறைமக்களே!
தவக்காலத்தின் உயிர் நாடியாக விளங்கும் கருத்து, மாற்றம்தானே! வெளிப்புற மாற்றம் அல்ல, உள்ளார்ந்த மாற்றம். மனமாற்றம், அதன் விளைவாக உருவாகும் வாழ்வு மாற்றம். இதனைப் பெற்றுக்கொள்ளவே நாம் இன்று ஆலயத்தில் கூடியுள்ளோம்.
இன்றைய நற்செய்தியில், இயேசு தன் வருகை "உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல" என்று நமக்கு நினைவுறுத்துகிறார். உண்மைக்கேற்ப வாழும்போது, நாம் ஒளியிடம் வருகிறோம். நமது பாவங்களால், நாம் குற்ற உணர்வுக் குறைந்து, சுயக் கெளரவம் அதிகமாகி , பாவசங்கீர்த்தனம் செய்வது செல்வதில்லை நாம். குற்ற உணர்வு, நாம் மனம் திரும்பி, மாற்றம் அடைவதற்குப் பெரிய தூண்டுதலாக இருக்கும். நாம் நமது பாவங்களை நினைத்து அவமானம் அடைகிறோம், அதனால், நமது பாவங்கள வெளியே தெரிந்துவிடும் என நாம் பயப்படுகிறோம்.
எனினும், இயேசு, நம் சுயகெளரவத்தையும், நமது பயத்தையும், போக்க நாம் அனுமதித்தால், இயேசு அதனையெல்லாம் போக்கி மகிழ்ச்சித் தருவார். குருவானவர் மூலமாக இயேசு நம்மிடையே பேசி, மன்னிப்பையும், இரக்கத்தையும், நிபந்தனையற்ற அன்பையும் நமக்கு வழங்குகிறார். இன்றைய நற்செய்தியில்,இயேசு "உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்."என்றும், அவர்மீது நம்பிக்கைக் கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை" என்றும் நினைவூட்டுகிறார்.
நாம் நமது குற்றங்களை ஒத்துக் கொள்ளும்போது, கிறிஸ்துவின் பணியாளிடம் (குருவிடம்) சொல்லும்போது, நாம் இயேசுவினால் காப்பாற்றப்படுகிறோம். குருவின் குரல்மூலம், இயேசு நம்மிடம் பேசுவதைக் கேட்கிறோம். மேலும் பாவங்களைச் செய்யாமல் இருக்க இயேசுவிடமிருந்து, ஆற்றலைப் பெறுகிறோம். இருளிலேயே ஏன் இன்னும் துன்புற்று இருக்க வேண்டும்? இயேசு நம்மை மீட்க வந்துள்ளார்! என்பதை உணர்ந்து முழுமனமாற்றத்தைப் பெற இறைவனை இறைஞ்சுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை :

கடவுள் தம் மக்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. கடவுளைக் கைவிட்ட இஸ்ரயேல் மக்கள் பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த இக்கட்டான காலத்திலும், கடவுள் பிற இன மன்னர் வழியாக அவர்களுக்கு விடுதலையை அளிக்கிறார். அவர்கள் திரும்பவும் தங்கள் தாயகமாகிய எருசலேம் செல்ல மன்னர் அனுமதிக்கிறார். கல்தேயரின் மன்னன் வழியாகக் கோயிலை எரித்த கடவுள், பாரசீக மன்னன் சைரசு வழியாக அதைக் கட்டியெழுப்ப ஏற்பாடு செய்தார். கடவுள் தன் மக்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்று உரைக்கும் முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல் 137:1-2, 3, 4-5, 6.
பல்லவி: 'உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!"

பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். அங்கிருந்த அலரிச் செடிகள்மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். -பல்லவி

ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். ' சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்' என்றனர். -பல்லவி

ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம்; பாடுவோம்? எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! -பல்லவி

உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக! -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபேசியர்களுக்குப் புனித பவுல் எழுதிய கடிதத்தில் கடவுளுடைய அன்பும், தாராள மனப்பான்மையும், மிகுந்த இரக்கத்தையும் நமக்கு எடுத்துரைக்கிறது. மிகுந்த இரக்கமுடைய கடவுள் நம்மீது அன்புக் கொண்டதால் நாம் மீட்கப்பட்டோம். நாம் கடவுளின் கலைப்படைப்பு. நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம். முற்றிலும் கடவுளுடைய ஒப்புயர்வற்ற அன்பின் கொடைகள் இவைகள்! என்று உரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வசனம்:

"தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்".

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. நாங்கள் நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை இன்றைய வாசகங்கள்மூலம் உணர்த்திய அன்பும் அருளும் மிக்க எம் இறைவா! திருஅவை உள்ள அனைவரும் இத்தவக்காலத்திலும் அதன் பின்பும் நாளுக்கு நாள் நற்செயல்கள் புரிவதில் வளர அன்பையும் அருளையும் நிறைவாய் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உமது மகன் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வுப் பெறுவர் என்ற வாக்களித்த எம் இறைவா! எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம்வாழ்வு ஏற்றம் பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும், அடுத்திருக்கும் எம்மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பராமரித்தாளும் எங்கள் இறைவா! இன்றைய உலகில் துன்புறும் திருஅவைக்காக உமது இரக்கத்தையும் பாதுகாப்பையும் வேண்டுகிறோம். சிறப்பாகச் இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டும், கொடுமைப்படுத்தப் பட்டுவரும் உம் எளிய மக்கள் விரைவில் விடுதலைப் பெற்று புதிய புனர்வாழ்வுப் பெற்றிடத் தேவையான மாற்றங்களை அவர்கள் பெற உமது அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம்முன்னோருக்கு வழிகாட்டி நடத்திய தெய்வமே! எம் இறைவா! கல்வியாண்டு இறுதிதேர்வை எழுதி வரும் எம் அன்பு பிள்ளைகளுக்காக உம்மிடம் வேண்டுகிறோம். படிப்பதற்கு நல்வழிகாட்டி, அவற்றை மறக்காமல் சரியான விடைகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, சமூகத்தில் உயர் நிலைக்கு வரத் தேவையான ஞானத்தையும், உம்மில் நம்பிக்கைப் பெற்றவும் உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.மகிழ்ச்சியின் இறைவா! அகமகிழ்தல் ஞாயிறைக் கொண்டாடும் நாங்கள் “ஒளியாக மாறுவதே, இருளை வெல்வதற்கு ஒரே வழி.” என்பதை உணர்ந்து, கிறிஸ்து என்ற ஒளியை நெருங்கிச் செல்ல, அவரைப் போல் ஒளியாக மாறத் தேவையான ஞானத்தையும், மனத்திடனையும் அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF