Tuesday, April 26, 2016

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு 01/05/2016



பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு 01/05/2016


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 15: 1-2,22-29
திருவெளிப்பாடு
21: 10-14,22,23
யோவான் 14 :23-29


திருப்பலி முன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு கொண்டாடங்களில் கலந்து இயேசுவின் அமைதியையும் அவரது துணையாளரையும் பெற்றுக் கொண்டு புது வாழ்வு பெற உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
  வெறும் சட்டத்திட்டங்களை மட்டும் மையமாக கொண்டதல்ல நம் கிறிஸ்தவ வாழ்வு. மாறாக அன்பே அடித்தளமாக  இருக்க வேண்டும். மனிதருக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதன் மூலம் இறைவனின் மாட்சியையும் ஒளியையும் பெற்றுக்கொள்ள முதல் இரு வாசகங்களும் எடுத்துரைக்கின்றது.
  நமது உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். இயேசுவின் அமைதியை பெற்றுக்கொள்வோம். அவர் அனுப்பும் அவரது துணையாளரை ஏற்றுக் கொண்டு இவ்வுலகில் அமைதியின் தூதுவராக, ஒருங்கிணைந்து சாட்சிய வாழ்வு வாழ இறையருளைப் பெற வேண்டி இன்றையத் திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:



முதல் வாசக முன்னுரை:

பழைய ஏற்பாட்டின் யாவே கடவுள் மோசே வழியாக கொடுத்த மரபு சட்டங்களையும், முறைமைகளையும் புதிய ஆதாமாகிய கிறிஸ்துவை  நம்பிக்கைக் கொண்டு ஏற்றுக் கொள்ளும்போது விருத்தசேதனம் பிற இனத்தவர்கள் செய்து கொள்ள வேண்டுமென்று கட்டாயமல்ல. எனவே பவுல், பர்னபா இவர்கள் வழியாக தூய ஆவியார் உணர்த்துதலால் தாங்கள் பெற்றக் கொண்ட அழைப்புக்கு ஏற்ப திருத்தூதர்களிடமும், மூப்பர்களிடமும் இச்சிக்கலைக் குறித்து கலந்து பேசிக் குழப்பமும், கலக்கமும் உள்ள மக்களுக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளால் உறுதிப்படுத்துகின்றார்கள். இதன் மூலம் மீட்படைய தேவையானது எது? என்பதை உணர்த்தும் இந்த முதல் வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

  எருசலேம் கடவுள் வாழும் உறைவிடம். எனவே அத்திருநகருக்கு தூயஆவியார் அழைத்துச் சென்று கடவுளின் மாட்சியையும், ஒளியையும் இஸ்ரயேல் மக்களின் 12 குலங்களின் பெயர்கள் அதன் வாயில்களில் பொறிக்கப்பட்டிருப்பதையும் திருத்தூதர் யோவானுக்கு காட்டினார். எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர் அதன் ஆட்டுக்குட்டியே என்று எடுத்துரைக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7

பல்லவி
: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக! அல்லது: அல்லேலூயா.

கடவுளே
! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். -பல்லவி

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக
! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி

கடவுளே
! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி

மன்றாட்டுகள்:


1.இறைஇரக்கத்தின் தந்தையே எம் இறைவா!  திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் இருபால் துறவியார், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இவ்வாண்டில் உலகலாவிய புதிய மாற்றங்கள், புதிய சிந்தனைகள், ஏழை எளிய மக்களுக்கு தேவையான திருச்சபையின் போதனைகள், அனைவருக்கும் பாகுபாடின்றி வித்தியாசமின்றி நிறைவாக பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.ஏழைகளின் நாயகனே எம் இறைவா! தொழிலாளர்கள் தின விழாவை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாங்கள், தொழிலாளர்களின் குடும்பங்கள், அவர்களின் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு சிறந்து விளங்கிட, முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடின்றி, சமத்துவ, சகோதரத்தும் தழைத்தோங்கி, நாட்டின் வளர்ச்சிக்கும் குடும்பவளர்ச்சிக்கும் அனைவரும் பாடுபட்டு உழைத்து புனித யோசேப்பு போல் தங்கள் குடும்பங்களை இறைவளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பு தந்தையே எம் இறைவா! எம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநில அவைக்கான தேர்தல் சுயநலமின்றி, நீதியோடும், நேர்மையோடும், உண்மையோடும், கண்ணயமாக நடக்கவும், குறிப்பாக தூயஆவியார் துணைக்கொண்டு படித்த இளையோர், அரசியலில் முதிர்ச்சி பெற்ற சுயநலமற்ற தலைவர்கள் நாட்டு மக்களை நல்ல வழியில் நடத்திட சிறந்த தலைவர்களை உருவாக்கி தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கம் நிறைந்த எம் இறைவா! கோடைவெயிலினால் ஏற்படும் வறட்சி, தொற்றுநோய்கள், குழந்தைகள், முதியோர்கள் இவர்களுக்கு ஏற்படும் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறவும், கடுமையான வெப்பத்தால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையிலிருந்தும் விடுபடவும் உமது இரக்கத்தின் ஊற்றிலிருந்து நாங்கள் வாழ்வு தரும் நீரைப்பருக உமது ஆவியை மழையாகப் பொழியவேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment