Thursday, June 16, 2016

பொதுக்காலம் ஆண்டின் 12ஆம் ஞாயிறு 19/06/2016


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.



I. செக் 12:10-11
II. கலாத்தியர் 3:26-29
III. லூக் 9:18-24

திருப்பலி முன்னுரை:


நான் யார்? என்று இறைமகன் இயேசு கேட்ட கேள்விக்கு விடை அறிய ஆவலுடன் நம் ஆலயத்தில் குழுமியிருக்கும் இறைமக்களாகிய உங்களை பொதுக்காலம் ஆண்டின் 12ஆம் ஞாயிறைக் கொண்டாட அன்புடன் வரவேற்கின்றோம்.

நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படித்தான் மற்றவர்களையும், மற்றவைகளையும் பார்க்கின்றோம் அல்லது நாம் மற்றவர்களையும், மற்றவைகளையும் பார்க்கும் விதத்தை வைத்து நாம் எத்தகையவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம் அல்லவா! நாம் கடவுளைப் பார்க்கும் விதமும் அப்படியே. கடவுளை சிலர் பாசமிகு தந்தையாகவும், தம்மேல் கரிசனைக் கொண்ட  தாயாகவும், உற்ற நண்பனாகவும், உடனிருக்கும் சகோதரனாகவும், சோதனை நேரங்களிலும்,நாம் தோற்றுப்போகும் நேரங்களில்  அவரை ஓர் எதிரியாகவும் பார்க்கிறோம். ஆனால் இவற்றால் கடவுளின் அன்பும் பரிவும் ஒருபோதும் நமக்குக் குறையாது என்பதே நிதர்சனம். ஏனெனில் கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே விலைஉயர்ந்தவர்களாய் தான் காணப்படுகிறோம்.

பவுல் கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவுளைத் தந்தையாகவும், தங்களை அவரின் பிள்ளைகளாகவும் கண்டுணர அழைக்கின்றார். இன்றைய வாசகங்களைக் கேட்டு நாம் கடவுளை எப்படி காண வேண்டும் என்பதற்காக
ஞானத்தையும், துன்பத்திலும் இன்பத்திலும் ஏற்றுக்கொள்ளும் நல்இதயத்தை பெற்றிட வேண்டி இத்திருப்பலிக் கொண்டாடங்களில் உளமாறப் பங்குக்கொண்டு செபிப்போம். நாம் பார்க்கும் கடவுள் நம்மைப் பார்க்கிறார்... நாம் பார்க்கும் அனைத்திலும் நம் கடவுளைப் பார்க்கிறோம்!



வாசக முன்னுரை:



முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகம் புலம்பலும், அழுகையும் நிறைந்திருக்கிறது. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதா மக்களின் வருங்கால மீட்பும், வளமும் பற்றி இறைவாக்குரைக்கும் செக்கரியா, 'அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்று நோக்குவார்கள்' என்கிறார். செக்கரியாவின் இவ்வார்த்தைகளை இயேசுவுக்குக் குறிப்பிட்டு எழுதும் நற்செய்தியாளர் யோவான், 'தாங்கள் ஊடுருவக் குத்தியவர்களை உற்று நோக்குவார்கள்' (யோவா 19:37) என்று மாற்றி எழுதுகின்றார்.  செக்கரியாவின் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வாசிகத்திற்குக்  கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


 இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவுளைத் தந்தையாகவும், தங்களைத் தாங்களே அவர்களின் பிள்ளைகளாகவும் கண்டுணர அழைக்கின்றார். கடவுளைத் தந்தையாகப் பார்க்கும் ஒருவர், தனக்கு அருகில் இருக்கும் அனைவரையும் ஒன்றாய்ப் பார்க்கின்றார். அதாவது, இவர்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. கடவுளின் மகன் அல்லது மகள் நான் என்னும் நிலை இவர்களோடு என்னை இணைக்கிறது. ஏனெனில் இவர்களும் கடவுளின் மகன்கள் மற்றும் மகள்கள். இந்த இணைப்பைச் சாத்தியமாக்குபவர் இயேசு என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கருத்துடன் செவிமெடுப்போம்.


 



பதிலுரைப் பாடல்



திபா 63: 1. 2-3. 4-5. 7-8

பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்;
என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது;நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. -பல்லவி

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது;
என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -பல்லவி

என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்;
கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். -பல்லவி

ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்;
உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. -பல்லவி


 

 மன்றாட்டுகள்:


1.  அன்புத் தந்தையே! எம் இறைவா!  திருஅவையினை உம்பாதம் வைக்கிறோம். திருஅவை தன் இயல்பில் செயல்படவும் திருஅவையின்  திருத்தந்தை முதல் அனைத்து துறவரவாழ்வில் தன்னை இணைத்துக் கொண்டவர்கள், இறைசிந்தையிலும், இறைவார்த்தைக்கு கீழ்படிந்து தன்னைதாழ்த்திக் கொண்ட தூய மரியாளைப் போல் திருஅவையை நல்முறையில் வழிநடத்திட தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.


2. அகில உலகை ஆண்டு நடத்தி வரும் எம் இறைவா! உலகில் உள்ள அனைத்து தலைவர்கள் தம்நாடு,மொழி, இனம், மதம்  இவைகளினால் வன்முறை கலாச்சாரங்களையும்,  மனிதர்களை மனிதர்களே அழிக்க கூடிய அனைத்து கண்டு பிடிப்புகளையும் விடுத்து,  மனித மாண்பை உயர்த்த  தேவையான தூய்மையான சிந்தனைகளை கொடுத்து, அனைத்து மக்களும் சமாதானம் மகிழ்ச்சி இவைகளை மக்களுக்கு பெற்றுத்தர, தேவையான ஞானத்தை பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3இரக்கமும் பேரன்புமிக்க எம் இறைவா!  இன்றைய சமூகத்தில் நிலவும், குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமைகளிலிருந்தும் வறுமையிலிருந்தும் விலகி வெளிவந்திடவும், மக்கள் தங்கள் சுயத்தையும், சமூக மதிப்பீடுகளையும், உறவுகளையும்  இழந்து நிற்கும் நிலைமாறி, உறவைப் போற்றி பேணி பாதுகாக்க கூடியவர்களாக மாற்றி நல் வாழவு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. நல் ஆயனாம் எம்  இறைவா! நீர் இன்று நற்செய்தியின் வழியாக உம் சீடர்களிடம் உம்மை சுய ஆய்வு செய்தது போல, நாங்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் எங்கள் சொல்லாலும் எங்கள் செயலாலும் செய்த தவறுகளை ஒருபொருட்டாக எண்ணாமல் பாவத்தைக் குறித்து மனவருத்தமற்ற இன்றைய சூழலில் ஒவ்வொரு நாளும் சுயஆய்வு செய்ய தேவையான ஆலோசனைகளை எங்களுக்கு நிறைவாக பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. நற்கருணையின் நாயகனே எம் இறைவா! திருவழிபாட்டின் மையம் நற்கருணை. இக்கொண்டாட்டத்தில் திருஅவையின்  மறைஉண்மைகளை எல்லாக் காலத்திலும் நாங்கள் மதிக்கவும், உம் திருஉணவை உட்கொள்ள தகுதியான நிலையில்  திருஉணவின் மேன்மையை புரிந்து கொண்டு தூய உள்ளத்துடன் இருக்கவும் உம் தூயஆவியின் வழியாக புது படைப்பாக மாறிட வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:

Post a Comment