Tuesday, April 4, 2017

குருத்து ஞாயிறு 09.04.2017



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


எசாயா 50:4-7
பிலிப்பியர் 2:6-11
மத்தேயு 26:14-27:66


*முன்னுரை*


அன்புடையீா,
தவக்காலத்தின் கடைசி ஞாயிறும் குருத்து ஞாயிறுமான இன்று குருத்தோலைகள் ஏந்தி பவனியாக ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் எருசலேம் நகரவீதிகளில் மகத்தான தலைவனாகத் தாவீதின் மைந்தனாய் வலம் வந்த இறைமகன் இயேசுவின் இனிய நாமத்தில் அன்புடன் வரவேற்கிறோம்.
முதல் குருத்து ஞாயிறு அன்று நடந்த போது சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. காற்று வடிவில் வந்த சூறாவளி அல்ல, கடவுள் வடிவில் , கடவுளின் திருமகன் வடிவில் வந்த சூறாவளி. இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்களால் எதேச்சையாக, மானசீகமாக ஊர்வலம் தானாகவே ஏற்பட்டது. இயேசு தன் பணிவாழ்வைத் தொடங்கியது முதல் யூதமத் தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம் கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் உச்சக்கட்டம்.. எருசலேம் நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தது. அந்த மதக் குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அமைப்பையும் தலைகீழாக்கினார். எனவே இந்தக் குருத்து ஞாயிறு, அதிகார அமைப்புகளைப் பல வழிகளிலும் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளி தானே!
தந்தையாம் கடவுளின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை தான் சிலுவைப் பாதையில் பயணிக்க இயேசுவிற்கு எழுச்சியைத் தந்தது. நாமும் இயேசுவின் மீது நம்பிக்கைகொண்டும் நம் அன்றாடச் சிலுவைகளைத் தாங்கி இயேசுவைப் பின்தொடர்வோம். பாடுகளின் வழியாக உயிர்ப்பின் ஒளியைப் பெற இப்புனித வாரத்தில் உருக்கமாக வேண்டுவோம்.

*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*


எசாயா நூலிலிருந்து வரும் துன்புறும் ஊழியனின் பாடல் தான் இன்றைய முதல் வாசகம். இதில் துன்புறும் ஊழியன், துன்பங்களின் வழியாக உறுதிப்படுத்தப்படுகின்றார். தன்னைத் துன்புறுத்துவோரைக் கண்டு மறைந்துக் கொள்ளவில்லை. மாறாகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கின்றார். தந்தை தன்னைக் கைவிடாமாட்டார் என்று ஆழ்ந்த நம்பிக்கையே இதற்குக் காரணம். இயேசுவைப் போல் நாமும் அவரில் நம்பிக்கைக் கொண்டு மனம் மாறிட இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


இன்றைய இரண்டாம் வாசகம் பிலிப்பிய மக்களுக்கு எழுதப்பட்ட ஒன்றாகும். இதில் அவர்களிடையே காணப்பட்ட போட்டிகளும், ஆணவபோக்கிற்கும் மாற்றுச் செய்தியாக இறைமகனின் மகிழ்ச்சியை முன்வைக்கப்படுகிறது. இயேசு கடவுளாயிருந்தாலும், எவ்வாறு தன்னையே ஒரு அடிமையின் நிலைக்குத் தாழ்த்தினாரோ, அதைப்போல் கிறிஸ்தவர்களும் தாழ்ச்சியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நமக்கு அழைப்பு விடுக்கின்றார் திருத்தூதர் பவுலடியார். இவ்வாசகத்தைக் கவனமுடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.



பதிலுரைப்பாடல்

பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
திபா 22:7-8, 16-17, 18-19, 22-23


என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,`ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர். பல்லவி
தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம் பல்லவி

என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி

உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்துப் பாடுவேன். ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

*மன்றாட்டுகள்*


1. அருட்பெருக்கின் நாயகனே! எம் இறைவா! திருத்தந்தை, அவரோடு இணைந்து உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் உயிர்ப்பின் மகிமையால் பலன் அளிக்கக் கூடியவர்களாகத் தொடர்ந்து பணி செய்திட, இயேசுவே ஆண்டவர் என்று முழுக்கமிட தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நன்மைகளின் நாயகனே எம் இறைவா! வரவிருக்கும் இப்புனித வார நாட்களில் நாங்கள் எங்கள் பாவங்களையும், பலவீனத்தையும், குற்றங்குறைகளைக் களைந்து வழக்கமாக மேற்கொள்ளும் நிகழ்வாக உம் பாஸ்கா விழாவைக் கொண்டாடாமல், உள்ளத்தில் மாற்றம் நிறைந்தவர்களாகத் தூய மனதுடன் உம்மை அணுகி வர இறைவா உமை மன்றாடுகிறோம்.

3. ஏழைகளின் திருவுருவே எம் இறைவா! இந்த அருளிரக்க நாட்களில் தவமுயற்சிகளில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்தாமல் உள்ளத்தில் மனமாற்றமும், அதன் வெளிப்பாடாக, ஏழைகள் மட்டில் கவனம் செலுத்தி, அவர்களின் வாழ்வு சிறந்து விளங்கிட, அந்த மீட்புச் செயலின் வழியாக உம் சீடத்துவ வாழ்வில் அவர்களும் பங்கேற்கத் தேவையான மீட்பின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்புத் தந்தையே எம் இறைவா! இன்று உலகலாவிய நவீன வளர்ச்சி என்ற பாதையில் வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத் தாக்கத்தில் சிக்கித் தவிக்கும், ஏழை நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம், பொருளதார நெருக்கடிகள் , ஊழல், இலஞ்சம், தீவிரவாத அச்சுறுத்தல்கள் இவைகளினால் வாழ்வை இழந்து தவிக்கும் ஏழை மக்களின் மீது உமது அளவு கடந்த இரக்கத்தினால், இத்தவக்கால அருள்வரங்களைப் பெறத் தேவையான உமது வல்லமையைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. மக்களின் நலன்களில் என்றும் அக்கறையுள்ள எம் இறைவா! விவசாயிகளின் தேவை இந்தத் தேசத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அவர்களின் எல்லா முயற்சிகளிலும் அரசு முன்னுரிமை கொடுத்து, எதிர்காலத் தலைமுறைகளுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், விவசாயம் சிறப்புடன் நடைப்பெற நல்ல மழையைப் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




www.anbinmadal.org

No comments:

Post a Comment