Thursday, September 14, 2017

பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறு 17.09.2017

பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறு 17.09.2017





*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

சீராக்   27:30-28:7
உரோமையர் 14:7-9
மத்தேயு 18: 21-35



 *முன்னுரை*


அன்புடையீர்,
இயேசுவின் அன்பிற்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துநான்காம் ஞாயிறுத் திருப்பலியில் மன்னிப்பின் மேன்மையை உணர்ந்திட உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவையான மன்னிப்பைப் பற்றிச் சிந்திக்க இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. மன்னிப்பு பெறுவதும் வழங்குவதும் நாம் வாழ்வில் அடிக்கடி உணர்ந்துள்ள ஓர் அனுபவம். இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். அவற்றைத் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. நாம் எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம்... மன்னிப்புடன் வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறுகிறோம். இதைத்தான் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அமைதிக்கான தன் செபத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்: "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்." என்று.

இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார். இயேசு பேதுருவுக்குப் போதித்ததைத் தன் வாழ்வில் கடைபிடித்தார். அவரைப் பொறுத்தவரை மூச்சு விடுவதும், மன்னிப்பதும் அவரது இயல்பாகவே மாறிவிட்டன. இயேசு தன் இறுதி மூச்சுக்காகச் சிலுவையில் போராடியபோதும் 'தந்தையே, இவர்களை மன்னியும்' என்று சொன்னக் கல்வாரி நிகழ்வுகள் நமக்கு நினைவிருக்கும், இல்லையா?
மன்னிப்பின் மேன்மையை உணர்ந்து வாழ நல்மனம் நம்மில் அமைந்திட இத்திருப்பலியில் இறைவனிடம் மன்றாடுவோம்.


*வாசகமுன்னுரை*

*முதல் வாசக முன்னுரை*


மக்கள் தங்களது வேதனை, கசப்பு, வெறுப்பு இவைகளிலேயே வாழ்ந்து வந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்து விடும். ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது எப்படி அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தப் பாத்திரம் முழுவதையும் கரைத்து, அழித்து விடுகிறதோ, அதே போல் இவர்களது இந்தக் கசப்பான எண்ணங்கள், நினைவுகள் இவர்களை முற்றிலும் அழித்து விடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்ற முடியும்."எனக் கூறுகின்ற சீராக்கின் ஞான நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

.

*இரண்டாம் வாசக முன்னுரை*

இன்றைய இரண்டாவது வாசகத்தில் உரோமையர் மத்தியில் உருவான உறவின் விரிசல்களை, குறிப்பாக விருந்துண்டதில், ஒருவரின் தீர்ப்பை உறவு பிரிக்கிறது. குறைநிறைகளோடு ஏற்றுக் கொள்வதிலும், தம்மையே பிறருக்குத் தருவதிலும் தான் உறவு பலப்படுத்தப்படுகிறது என்று எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுலின் அழைப்பை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.          

*பதிலுரைப்பாடல்*

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
திருப்பாடல் 103: 1-2, 3-4, 9-10, 11-12

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது. மேற்கினின்று கிழக்கு எத்துணைத்; தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். பல்லவி 


*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன..அல்லேலூயா.


*மன்றாட்டுகள்*


1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவை உள்ள அனைத்துதரப்பினரும் இயேசு தன் இறுதி மூச்சு வரை மன்னிப்பைத் தன் சுவாசமாக்கியது போல, தங்கள் வாழ்வில் எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்கவும். ஒருவர் ஒருவரை நட்புப் பாராட்டவும், உள்ளதை உள்ளதுபோல் ஏற்றுக்கொண்டு "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்." என்பதை உணர்ந்த செயல்படத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்புத் தந்தையே எம் இறைவா! எம் குடும்பங்களில் பிறருடைய குற்றங்கள், குறைகளை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கோபம், பழிவாங்குதல் போன்ற எதிர்மறைச் சிந்தனைகளுக்கு அடிமைகளாகித் தங்கள் உள்ளத்தையும் உடலையும் பாழ்படுத்திக் கொள்ளமால் அனைவரும் , மன்னிப்பின் மேன்மையை உணர்ந்து அதையே சுவாசக்காற்றை மாற்றி இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி நிறைந்திடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. மன்னிக்கும் மகத்துவமிக்க எம் இறைவா! எமது நாட்டு அரசியல் தலைவர்களுக்காக வேண்டுகிறோம். அவர்கள் மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி, அனைவரும் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தைக் கண்டடையச் செய்திடவும், சமுக உறவில் ஒன்றுபட்டு வாழ வழிவகைச் செய்திடவும் , நாட்டிற்கும் உலகிற்கும் பயன்உள்ளவர்களாக வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.

4. சமூக மாற்றித்தின் நாயகனே எம் இறைவா! உலகெங்கும் கோபத்தாலும் வெறுப்புணர்வாலும் பிளவுப்பட்டுச் சிதறியடிக்கப்பட்ட உம் மக்களே கண்ணேக்கியருளும். பகைமையை மறந்து எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம்..என்பதை அனைவரும் உணர்ந்து மன்னிப்புடன் வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறு வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்


www.anbinmadal.org

No comments:

Post a Comment