Wednesday, November 8, 2017

பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு 12/11/2017


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

சாலமோனின் ஞானம் 6: 12-16
1 தெசலோனிக்கர் 4: 13-18
மத்தேயு 25: 1-13

 *முன்னுரை*


அன்புடையீர்,
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பொதுக்காலத்தின் 32ஆம் ஞாயிறுத் திருப்பலி பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்
திருவழிபாட்டின் இறுதி வாரங்களில் இருக்கிறோம். திருவருகைக் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய உவமையில் சொல்லப்படும் பத்துத் தோழியரில் ஐந்து பேர் முன்மதி உடையவர்கள், மற்ற ஐந்து பேர் அறிவிலிகள். மணமகளின் தோழியாக இருப்பதற்கு அழைப்பு வந்ததும், இந்த ஐந்து அறிவிலிகள் எண்ணத்தில் ஓடியப் பட்டியலில் ஒரு முக்கியமான அம்சம் மறக்கப்பட்டது. எண்ணெய்... முன்மதியுடைய ஐந்து பெண்களும் திட்டமிட்டு, பட்டியல் ஒன்றை தயாரித்திருப்பார்கள். அவர்கள் பட்டியலில் 'விளக்கு எறிவதற்குத் தேவையான எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்பது முதலாவதாகக் குறிக்கப்பட்டிருக்கும். அவசியங்களா? ஆடம்பரங்களா? எதற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதைச் சிந்திக்க இந்த உவமை உதவுகிறது.
அவசியமற்றவைகளில் அதிகக் கவனம் செலுத்திவிட்டு, அவசியமானவைகளை மறந்து விட்டால் வாழ்வில் முக்கியமானவைகளை இழக்க வேண்டியிருக்கும். இயேசு இன்றைய நற்செய்தியில் கூறும் இறுதி வரிகள் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்: “விழிப்பாயிருங்கள்; ஏனெனில் இறைவன் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”
அவசியமானவைகள், அவசியமற்றவைகள், அலங்காரங்கள், ஆடம்பரங்கள் என்று நம் வாழ்வை நிறைத்துவிடும் பல அம்சங்களில் தேவைகளை, அவசியமானவைகளைப் பிரித்துப் பார்க்கும் பக்குவம், கண்ணோட்டம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று ஒருவர் ஒருவருக்காக வேண்டி இன்றைய திருப்பலியில் உளமாற வேண்டிக் கொள்வோம்.

வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*

ஞானம் நிறைந்த, விழிப்போடு செயல்பட வேண்டும் என இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. ஞானம் ஒளிமிக்கது. மங்காதது.. அதன் பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலைகளிலிருந்து விரைவில் விடுபடுபவர் என்று கூறுகிறது. மனிதவாழ்வை முழுமையாகவும், நிறைவாகவும் வாழ்வதற்கு ஞானம் அவசியம். இத்தகைய மேலான ஞானத்தை அடைவதே நமது வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் நமது வாழ்வின் முடிவைப் பற்றி, நமது சாவைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது என்று கூறுகிறார். ஏனெனில் நமக்கு எதிர்நோக்கு உண்டு. கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டுள்ள நாம் அனைவரும் கிறிஸ்துவை எதிர்கொண்டு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ள அழைக்கும் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்

 *பதிலுரைப்பாடல்*

திபா 63: 1. 2-3. 4-5. 6-7
பல்லவி: என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. -பல்லவி

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.   ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -பல்லவி

என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். -பல்லவி

நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன். ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். -பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1.எங்கள் வாழ்வின் நிறைவாகிய இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு விழிப்புடன் காத்திருந்து அவருடன் நிலைவாழ்விற்குச் செல்ல முன்மதி உடையவர்களாகத் தங்கள் வார்த்தைகளிலும், வாழ்விலும் ஒன்றிணைந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாய் வாழத் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2 என்றென்றும் இரக்கமுள்ள அன்பு தெய்வமே இறைவா! இன்றைய காலகட்டத்தில் இச்சமுகத்தில் எங்கள் குடும்பத்தினர்கள் எதிர் கொள்ளும் சோதனைகளிலும், வேதனைகளிலும் சோர்ந்து போகாமல் விழிப்புடனிருந்து வெற்றிக் கொள்ளவும், தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவும் தேவையான ஞானத்தையும் முன்மதியும் அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள் வாழ்வின் நிறைவாகிய இறைவா! எங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து வெளியிடங்களிலும், வெளிநாட்டிலும் வாழும் எம் சகோதரச் சகோதரிகளை உம் திருமுன் நினைவுகூர்கிறோம். அங்கு அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் உமது உடனிருப்பை உணர்ந்து நல்வாழ்வு வாழ்ந்திடவும், பாச உணர்வுகளுடன் தங்கள் குடும்பங்களோடு ஒன்றிணைந்திருக்கத் தேவையான வரங்களை அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. என்றென்றும் இரக்கமுள்ள அன்பு தெய்வமே இறைவா எம் நாட்டில் நிலவும் மதவாத பிரச்சனைகள் குறிப்பாக அனைத்து மதத்தினரும் மனித மாண்புடன் வாழ, பிரிவினை சக்திகளின் பிடியிலிருந்து விடுவித்து, உண்மை அன்பும், பிறர்சினேகமும் கொண்டு ஏற்றத்தாழ்வுகள் களைந்து ஒற்றுமையுடன் வாழத் தேவையான எம் ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


   


www.anbinmadal.org

No comments:

Post a Comment