Wednesday, October 23, 2019

பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சீராக் : 35: 12-14, 16-18
2 திமொத்தேயு 4: 6-8, 16-18
லூக்கா 18:9-14


திருப்பலி முன்னுரை


திருவழிபாட்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைகுலமே! உங்கள் அனைவரையும் இறை இயேசுவின் நாமத்தில் அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய வார்த்தை வழிபாடு இறைவனுக்கு ஏற்புடையோரின் மன்றாட்டைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்கின்றது.
ஆண்டவர் நடுவராய் உள்ளார். அவரிடம் ஒரு தலைச்சார்பு இல்லை. அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறுப் பணிபுரிவரின் மன்றாட்டு முகில்களை எட்டும் என்பதைச் சீராக் ஞான நூல் எடுத்துரைக்கின்றது. திருத்தூதர் பவுலடியார் தனது பணியை முடித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் ஆண்டவரின் ஆற்றல் தன்னை எவ்வாறு வழிநடத்தியது என்பதை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார்.
இறைமகன் இயேசு பரிசேயர் – வரிதண்டுபவர் உவமை மூலம் இறைவன் முன்னிலையில் எப்படி நம் செபங்களை அவருக்கு ஏற்புடையவையாக அமைப்பது என்று நல் ஆசானாகப் போதிக்கின்றார். தன்னையே உயர்த்தித் தம்பட்டம் அடித்துப் பெருமையுடன் செபிப்பதைக் காட்டிலும் தாழ்ச்சியுடன் தன்னைப் பாவி என்று தாழ்த்திச் செபித்த செபமே இறைவனுக்கு ஏற்புடையது. அதுவே முகில்களை ஊடுருவி செல்லும். இக்கருத்துகளை மனதில் பதிவு செய்து இன்றைய வழிபாட்டில் தாழ்ச்சியுடன் நம்மையே இறைவனிடம் ஒப்புக் கொடுத்து அவரின் ஆற்றலை வேண்டி நம்பிக்கையுடன் பங்கு கொள்வோம்.


வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


முதல் ஏற்பாட்டில் முதல் சகோதரர்கள் காயினும், ஆபேலும் கடவுள்முன் காணிக்கைகள் கொண்டுவருகின்றனர். ஆபேல் ஏற்புடையவராகிறார். காயின் ஆகவில்லை. ஒருவரை ஏற்புடையவராக்குவது கடவுளே அன்றி, தனிநபரின் செயல்கள் அல்ல. இன்றைய முதல் வாசகத்தில் சீராக்கும், 'ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறுப் பணிசெய்வோர் ஏற்றுக் கொள்ளப்படுவர். அவர்களின் மன்றாட்டு முகில்களை எட்டும்' என்று சொல்கின்றார். ஆண்டவரின் விருப்பத்தைப் புரிந்தவர்களாய் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை


தூய பவுலடியார் தன் நண்பர் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில் தனக்கு அளிக்கப்பட்ட பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொள்கிறார். திமொத்தேயுவுக்கான தன் அறிவுரையை நிறைவுச் செய்யும் பவுலடியார், 'மற்றவர்கள் தன்னைவிட்டு அகன்றாலும், இறைவனின் அருட்கரம் தன்னை வழிநடத்தியதற்காக நன்றி நவில்கின்றார். விண்ணரசில் சேர்வதற்கான மீட்பைப் பெற்றுவிட்டதை நம்பிக்கையுடன் இங்குப் பதிவுச் செய்கிறார். இந்த வெற்றி வாகையைப் பகிர்ந்து கொள்ளும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


பதிலுரைப்பாடல்


பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
திருப்பாடல் 34: 1-2. 16-17. 18,22

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

ஆண்டவரின் முகமோ தீமை செய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி

உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. செம்மையான வழியை எமக்குக் காட்டும் எம் இறைவா! எம் திருஅவையை நடத்திவரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் திருதூதர் பவுலடியார் போல் தம் பணியைச் சிறப்பாக முடித்து வெற்றிவாகைப் பெற்றவும், அவரைபோல் இறைபணியில் தாங்களையே பலியாக அர்ப்பணிக்கவும் தேவையான ஞானத்தை, ஆற்றலையையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைவருக்கும் நீதி வழங்கும் எம் இறைவா! ஒருவர் நேர்மையாளர் என்பது அவரின் நற்செயல்களில் அல்ல. மாறாக, அவர் கடவுளுக்கு ஏற்புடையவரா என்பதில்தான் அடங்கியிருக்கிறது என்பதை எங்களில் குடும்பத்தில் அனைவரும் உணர்ந்து அதன்படி தாங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவும், நேர்மையாளராக இருக்கவும் நல்மனதினைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அருளும் இரக்கமும் கொண்ட எம் இறைவா! தாழ்ச்சியுள்ள இதயத்தோடு செபிக்கும் எங்கள் அனைவரின் செபத்தை ஏற்று எங்கள் வாழ்வு நலமும் வளமும் அடையவும், எம் தலைவர்கள் தம் மக்களின் மீது தொண்டுள்ளம் கொண்டு தன்னலமற்றுப் பணியாற்றிடத் தேவையான ஆற்றலையும், உமது இரக்கம் எம் மீது பொழிந்தட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. என் வேண்டுதலை உற்றுக் கேட்பவரே! எம் இறைவா! தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், கைம்பெண்கள், புலம்பெயர்ந்து வாழ்வோர், அநாதைகள் ஆகியோருக்காக உம்மை மன்றாடுகிறோம். இவர்களின் வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்திடவும், உடல் நலத்திலும் பொருள் வளத்திலும் ஏற்றம் பெற்று வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இறையரசை அறிவிக்க அழைத்த எம் இறைவா! உமது பணிக்காகத் தங்கள் தாய்நாட்டை விட்டு உலகமெங்கும் சென்று உழைக்கும் பணியாளர்களைக் கண்நோக்கும். தனிமையில், உடல்நலத்தில், பொருளாதாரத்தில் வெறுப்பரசியலாலும் அவதிப்படும் அவர்கள் உற்சாகத்துடனும், முழுபலத்தோடு இறையரசை அறிவிக்கும் பணியில் என்றும் சிறப்புடன் நிறைவேற்றத் தேவையான வரங்களைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

                                                          www.anbinmadal.org

No comments:

Post a Comment