Tuesday, February 1, 2022

பொதுக்காலம் ஆண்டின் ஐந்தாம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் ஐந்தாம் ஞாயிறு




இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா: 6:1-8
1 கொரிந்தியர் 15:1-11
லூக்கா 5:1-11

திருப்பலி முன்னுரை:

இறைமகன் இயேசுவில் பிரியமானவர்களே! ஆண்டின் ஐந்தாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு அன்புடன் வாழ்த்துகிறோம். இன்றைய வாசகங்கள் இறைவன் நம்மை அழைக்கின்றார் என்ற செய்திகளை நமக்கு எடுத்துரைக்கின்றன. நாம் எத்தகையராக இருந்தாலும் நம்மைப் புடமிட்டுத் தூய்மைப்படுத்தி இறைவார்த்தைகளை அறிவிக்கப் பயன்படுத்துவார். அவரின் அழைப்பை ஏற்று நம்மை அவருக்கு முழுவதுமாக அர்ப்பணிக்கும்போது நாம் அவரில் வளர்கிறோம்.

இன்று அழைக்கப்பட்டவர்கள் மூவரும் சாதாரணமானவர்ளே! இந்த மூவரும் அழைக்கப்பட்டபோது தங்கள் இயலாமையை உணர்ந்திருந்தார்கள். அந்த இயலாமையில் இறைஆற்றலைக் கண்டுணர்ந்தார்கள். ஏசாயா அருகதையற்ற நான் எப்படி அருள்வாக்கை உரைக்க முடியும் என்று அஞ்சியபோது, இறைவன் அவரது உதடுகளைத் தூய்மைப்படுத்தி "நான் என்றும் உன்னோடு" என்று அனுப்பிவைக்கிறார். மீனவரான பேதுரு திருச்சபையின் தலைவராக நியமனம் பெறுகிறார்.  தடுத்து ஆட்கொள்ளப்பட்ட பவுலடியார் புறவினத்தாரின் திருத்தூதராக மாறுகிறார். இப்படி நம்மையும் தன் பணிக்காக அழைக்கும் இறைவனின் குரலுக்கு “இதோ உமது அடிமை நானிருக்கிறேன்” என்று உறுதியளித்து நமது இயலாமையை இறைவனின் ஆற்றலாக மாற்ற இறையருளை வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.
 

வாசகமுன்னுரை:

முதல் வாசகமுன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் எசாயாவை இறைவாக்கு அளிக்க அழைத்த போது தன் அசுத்த உதடுகள் கொண்டவன். அருகதையற்ற நான் எப்படி அருள்வாக்கு உரைக்க முடியும் எனத் திகைத்த நின்ற வேளையில், இறைவன் அவரின் உதடுகளைத் தூய்மைப்படுத்தித் "துணிந்துச் செல், தயக்கம் வேண்டாம். நான் உன்னோடு இருக்கிறேன்" என்று ஆறுதலும் தேற்றுதலும் தந்து அனுப்பி நிகழ்வுகளைக் கவனமுடன் கேட்டு நம் மனதின் ஆழத்தில் பதிவு செய்வோம்.

இரண்டாம் வாசகமுன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் தான் கிறிஸ்துவர்களைத் துன்புறுத்தியதையும், இயேசு அவரைத் தடுத்து ஆட்கொண்டதையும், திருத்தூதர்களில் கடைசியானவராக இருந்தாலும் அவரை ஆட்கொண்ட இறையருளே அவரை இறைவாக்கு உரைக்கத் துணிச்சலையும் ஆற்றலையும் அளித்தது என்று தம்மையே தாழ்த்திக்கூறும் இந்த உண்மைகளை மனதின் ஆழத்தில் பதிவு செய்து இறைவனின்அழைத்தலை ஏற்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 138: 1-2. 2-3. 4-5. 7-8
பல்லவி: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்;என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி

ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! -பல்லவி

உமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி
 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. துணிந்துச் செல். நான் உன்னோடு இருக்கிறேன் என்றுரைத்த எம் இறைவா! திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை அனைவரும் உமது அழைப்பை ஏற்றுத் துணிவுடன் இவ்வுலக மக்கள் அனைவருக்கும் உமது அருள்வாக்கை எடுத்துரைக்கவும், வாழ்ந்துக் காட்டிடவும் வேண்டிய வரங்களை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இரக்கத்தின் உறைவிடமாகிய இறைவா, இன்றைய நற்செய்தி வாசகங்களில் நீர் அழைத்துபோல் நாங்களும் அழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்துத் தூய்மையற்ற எங்களைத் தூய்மைப்படுத்தவும், எங்கள் இயலாமைகளை இறைஆற்றலாக மாற்றவும், உமது தூதர்களாக இவ்வுலகில் வலம் வரவும் வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நாங்கள் பேச வேண்டியவற்றைக் குறிப்பிட்ட நேரத்தில் எங்களுக்குக் கற்றுத்தரும் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ளவர்கள் எசாயாவைப்போல் உமது அழைப்பை ஏற்று எங்கள் அருகில் உள்ள ஏழைகள், அநாதைகள், கைவிடப்பட்டோருக்கு எங்களால் இயன்ற உதவி செய்து உமது அன்பைப் பகிர்ந்து வாழவேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. மாந்தர் அனைவரையும் ஆண்டு வருகின்ற இறைவா! எம் அரசியல் தலைவர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்தவர்களாக இலஞ்சம் தவிர்த்து மக்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரத்தையும், பொருளாதார வளமும் பெற உழைத்திட வேண்டிய நல்ல மனதினைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. இரக்கமே உருவான எம் இறைவா! இன்று உலகில் உம் திருஅவைக்கும், அதன் மக்களுக்கும் எதிராக இழைக்கப்படும் அநீதிகள், குற்றசாட்டுகள், இறையச்சம் இன்மையால் நேர்ந்திடும் ஆபத்துகள் போன்ற எல்லா இன்னல்களிலிருந்து எம்மைக் காத்து உலகமாந்தர்கள்  எங்களை இயேசுவின் சீடர்களாய் எம்மைக் கண்டு கொள்ளவும், இறையரசை அறிவிக்கத் தேவையான ஞானத்தையும் மனஉறுதியையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment