Monday, November 20, 2023

பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு 26/11/2023

  பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு 26/11/2023

 திருவழிப்பாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு
கிறிஸ்து அரசர் பெருவிழா

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசேக்கியேல் 34: 11-12,15-17
1 தெசலோனிக்கர் 15: 20-26,28
மத்தேயு 25: 31-46

 திருப்பலி  முன்னுரை

அன்புடையீர்,
மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அதன் விளைவாக, அம்மக்களின் மனம் எனும் அரியணையில் அமரும் இயேசு என்ற மன்னரைக் கொண்டாடவே இந்தக் கிறிஸ்து அரசர் திருநாள். இத்திருப்பலிப் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறோம்.
இயேசுவும் ஓர் அரசர். அவர் நிறுவிய அரசுக்கு நிலபரப்புக் கிடையாது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, இதைப் பாதுகாக்கக் கோட்டை, கொத்தளங்கள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை, உயிர்பலி தேவையில்லை...எதுவுமே தேவையில்லை. ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு எதுவுமே தேவையில்லை.
இறைவன் ஒருவரே தேவை, வேறெதுவுமே தேவையில்லை, என்று சொல்லக்கூடிய மனங்கள் மட்டுமே இந்த அரசுக்குச் சொந்தமான நிலம். அத்தகைய மனங்களில் தந்தையை அரியணை ஏற்றுவதுதான் இயேசுவின் முக்கியப் பணி.
இந்த அரசருக்கு முன் நிற்க, முக்கியமாக அவரது வலது ப் பக்கம் நிற்க நாம் தகுதியுள்ளவர்களாய் இருக்கிறோமா? இந்த அரசனால் ஆசீர்பெறப் போகிறோமா? அல்லது விரட்டி அடிக்கப்படுவோமா?
தேவைகளுள்ள மக்களில் இந்த அரசனின் உருவைக் கண்டு, உதவிக்கரம் நீட்டியிருந்தால், வலது பக்கம் நிற்கும் வாய்ப்பு பெறுவோம். கிறிஸ்து அரசர் வழங்கும் ஆசீரைப் பெற்றுக்கொள்ள இப்பெருவிழாவில் இறைவனை மனதுருக மன்றாடுவோம். .

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய வாசகத்தில் இறைவன் தன்னே ஓர் ஆயனாக உருவகப்படுத்திக் கொண்டு, அந்த ஆயன் எவ்வாறு தன் மந்தையைப் பாதுகாத்துப் பேணிவளர்ப்பார்?, அவற்றை எவ்வாறு இளைப்பாறுவார்?ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக்கிடாய்க்கும், வெள்ளாட்டுக்கிடாய்களுக்கும் இடையேயும் எவ்வாறு நீதியை வழங்குவார்? என்பதை எசேக்கியேல் மூலம் எடுத்துரைக்கும் இன்றைய வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி : ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
திருப்பாடல் 23: 1-2. 3. 5. 6
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.  பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். பல்லவி
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். பல்லவி
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசு உயிருடன் எழுப்பப்பட்டது போல நாமும் எழுப்படுவோம் என்றும், ஆதாமினால் வந்த சாவு கிறிஸ்துவின் மூலம் அழிக்கப்பட்டது என்றும், இயேசு அனைத்துப் பகைவரையும் அடிபணிய வைத்து விட்டுக் கடவுளுக்கு அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார் என்பதை எடுத்துக்கூறும் பவுல் அடியாரின் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! . அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. உலகைப் படைத்தாளும் இறைவா! உம் திருஅவையில் உள்ள அனைவரும் இயேசு கிறிஸ்துவை தம் இதய அரசராக ஏற்று அவரின் இறையரசு இவ்வுலகின் எத்திசையிலும் பறைசாற்றவும், உலகமக்கள் அனைவரையும் அவரின் அரசில் இணைத்திட ஒரு மனதினராய் உழைக்கத் தேவையான வரங்களைப் பொழிந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2 அனைவருக்கும் வாழ்வளிக்கும் இறைவா! இன்று உலகில் நிகழும் சுயநலம், ஆணவம், அகந்தை, செருக்கு, வன்முறை இவைகள் ஒழிந்து, உம் இறையரசின் மதிப்பீடுகளை, தம் சொல்லாலும், செயல்களாலும், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் போதிப்பவர்களாக மட்டும் இருந்துவிடாமல் செயல்படுத்தும் கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று கிறிஸ்து அரசர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் இறைவா! புனிதர்கள் மற்றும் மரித்த ஆன்மாக்களை நினைவுகூறும் இந்நாள்களில் எம் இளைய தலைமுறையினர் இறையரசின் விழுமியங்களைத் தங்களுக்குள் பெற்று இச்சமுதாயத்திற்குப் புனிதர்களைப் போல் முன்மாதிரியான நல்வாழ்வு வாழ்ந்திடவும், தன்னலமற்ற சேவையால் உமது இரக்கத்தைக் காட்டும் நல் உள்ளங்கள் உடையவராக மாறிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நல்ஆயனே எம் இறைவா! எம்சிறுவர்கள்,  இளையோர் இவ்வுலக வாழ்வின் நவீன அறிவியல் வளர்ச்சியின் மாயைகளில் சிக்கி சிதறுண்டு தவிக்கும் இவ்வேளையில், உம் இறைவார்த்தை அவர்களுக்கு உறுதுணை என்பதை அறியும் வரத்தையும் இறைஅச்சத்தையும் அருள வேண்டுமென்று கிறிஸ்து அரசர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.                 

5. அன்பே உருவான எம் இறைவா! இயற்கைப் பேரிடராலும், பொருளாதார மாற்றங்களால் அவதிபடும் மக்களுக்கு நலமும் வளமும் நிறைவான வாழ்வும் கிடைத்திடவும், ஆள்வோரின் கரிசனையும், பாதுகாப்பும் பெற்றடவும், சிரம்மின்றிப் பொருளாதார ஏற்றம் பெற்றட, விவசாயிகள் தங்களின் உழைப்பின் பலன்களை முழுமையாகப் பெற்றிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF



No comments:

Post a Comment