Friday, November 6, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 08/11/2015


ஆண்டின் 32வது ஞாயிறு     
                     
           

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


1அரசர் 17:10-19 
எபிரேயர் 9:24-28
மாற்கு 12:38-44

முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு.  இந்த ஞாயிறு  இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் கிறிஸ்துவின்
பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். எப்பொழுதெல்லாம் நாம் நம்மை முழுமையாகக் கொடுக்கிறோமோ, அப்பொழுதெல்லாம் நாம் கொடுத்ததற்கு மேலாகவே பெறுகிறோம் என்பதை இன்றைய அருள்வாக்கு நமக்கு எடுத்துரைக்கிறது. சாரிபாத்து நகரில் எலியா இறைவாக்கினர் ஏழைக்கைம்பெண் ஒருவரால் பசியாறப்பெறுகின்றார். இதுதான் ஒற்றைவரியில் முதல் வாசகம். பலி செலுத்துதல் என்ற அடிப்படையில் யூதர்களின் தலைமைக்குருவைவிட இயேசு எப்படி மேம்பட்டு நிற்கிறார் என்று அவர் சொல்வதே இன்றைய :  இரண்டாம்  வாசகம் 'மற்ற தலைமைக்குருக்கள் விலங்குகளைப் பலியாக ஒப்புக்கொடுப்பர். ஆனால் இயேசு தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.'

என்னிடம் உள்ளதில் எஞ்சியதைக் கொடுத்தல் (நற்செய்தி வாசகம்), என்னிடம் உள்ளதனைத்தையும் கொடுத்தல் (முதல் வாசகம், நற்செய்தி வாசகம்), என்னையே கொடுத்தல் (இரண்டாம் வாசகம்). இதில் என் கொடுத்தல் எவ்வகை? முதல் ஏற்பாட்டு யோசேப்பு தான்  பெறுவதைவிட அதிகம் கொடுக்கிறார். மேன்மை பெறுகின்றார். ஆனால் சாலமோன் தான் பெறுவதைவிட குறைவாக கொடுக்கிறார்.  தாழ்வுற்று மடிகின்றார். ஒவ்வொரு நாளும் நான் கடவுளிடமிருந்து, மற்றவரிடமிருந்து பெறுபவை எண்ணற்றவை. ஆனால் நான் கொடுப்பது எவ்வளவு? இவற்றையெல்லாம் சிந்தித்து சீர்தூக்கி பார்க்க இன்றைய திருப்பலி வழிபாட்டில்  மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:



முதல் வாசகம்

காகங்கள் வழியாக எலியாவுக்கு உணவளித்து வந்த இறைவன் இப்போது சாரிபாத்து நகர் ஏழைக்கைம்பெண்ணிடம் அனுப்புகின்றார். அப்படி சாரிபாத்துக்கு வந்த எலியா, ஏழைக்கைம்பெண்ணைச் சந்திக்கும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம்.  'மாவு தீரவில்லை. எண்ணெய்  குறையவில்லை.' கடைசிக் கை மாவும், கடைசித்துளி எண்ணெயும் குறையவேயில்லை.  என்னவொரு ஆச்சர்யம். 'என்னிடம் உள்ளது  இதுதான்' என்று இறைவனிடம் கொடுப்பவர்களுக்கு, அவர் இன்னும் அள்ளி அள்ளிக் கொடுக்கின்றார் என்பதே அவர் நிகழ்த்தும் அற்புதம். நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம்  வாசகம்

இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குரு என்று அறிக்கையிட்ட எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் தொடர்ந்து அவரின்  குருத்துவத்தின் மேன்மையை முன்வைக்கின்றார். பலி செலுத்துதல் என்ற அடிப்படையில் யூதர்களின் தலைமைக்குருவைவிட இயேசு எப்படி மேம்பட்டு நிற்கிறார் என்று அவர் சொல்வதே இன்றைய இரண்டாம் வாசகம்: 'மற்ற தலைமைக்குருக்கள் விலங்குகளைப் பலியாக ஒப்புக்கொடுப்பர். ஆனால் இயேசு தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.' உயிரியில் பகுப்பாய்வில் மனிதரின் உயிரைவிட மேலான உயிர் இயேசுவின் உயிர். இவ்வாறாக, 'பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே ஒருமுறை இயேசு தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்.' எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின்  இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 146: 7. 8-9. 9-10

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு .

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலை நாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி 

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி 

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

மன்றாட்டுகள்:


1.அன்பு இறைவா! திருஅவையில் மரித்த அனைத்து திருத்தந்தையர்கள், ஆயர்கள், துறவியர் பொதுநிலையினார் நற்செய்தியாளர்கள்,பிறசபை 
போதகர்கள், நாட்டு தலைவர்கள் திருச்சபையில் அவர்கள் ஆற்றிய பணிகள், நாட்டுக்காக அவர்களின் அர்ப்பண வாழ்வை உம் பாதம்  வைக்கிறோம். இறந்த இவர்கள் அனைவருடைய ஆன்மா நித்தய இளைப்பாற்றி அடைய  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.படைப்பின் நாயகனே! எம் இறைவா எம் நாட்டில் சிறப்பாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழையின்மையின் காரணமாக விவசாய வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, வெப்பமயமாதல் போன்ற காரணிகளை நீக்கி உம் இரக்கத்தினால் நல்ல மழையை பெய்வித்து நிலங்களையும், இயற்கை வளங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.இளமை வாழ்வதற்காக என்று மொழிந்த எம் இறைவா! இளையோர் திருச்சபைக்காக திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு
இணங்க இளைமையில் இறைமையைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாக பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின்  அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்ற இறைவா! நாங்கள் நீர் கொடுத்த  பரிசுத்தம் என்றும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப்  புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.


பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப் பாடி கொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

No comments:

Post a Comment