Tuesday, January 3, 2017

ஆண்டவரின் திருக்காட்சி - பெருவிழா -08/01/2017



*ஆண்டவரின்  திருக்காட்சி - பெருவிழா*



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

1.ஏசாயா 60: 1-6.
எபேசியர் 3: 2-3, 5-6.
மத்தேயு 2:1-12

*திருப்பலி முன்னுரை *


இறைமகன் இயேசு கிறிஸ்துவிற்குப் பிரியமானவர்களே!
நமக்காகக் குடிலில் பிறந்த கோமகனின் திருக்காட்சியைக் காண நெஞ்சமெல்லாம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இன்றைய திருப்பலிக்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
திருச்சபையின் பழம்பெரும் பெருவிழாகளில் ஒன்றான ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா மூலம் இறைமகன் இயேசுவின் பிறப்பு உலகமக்கள் அனைவருக்கும் உரித்தான ஒன்று என்பதை ஆழமாகப் பதிவு செய்கிறது நம் திருச்சபை. தன்னைத் தேடி வருபவர்களை அற்புதமாக வழிநடத்தித் தன்னை வெளிப்படுத்துகின்றார். நல்மனம் படைத்த அனைவருக்கும் அவர் சொந்தமானவர்.
பிறந்தபோது மகிழ்ச்சித் தந்தவர், இறக்கும்போது மன்னிப்பை வழங்கியவர், தேடிவருபவர்களுக்குத் தூயஆவியின் அருட்கொடைகளை அள்ளித் தருகிறார். எனவே தான் திருத்தூதர் பவுலடியார் “ஆண்டவர் அனைவரையும் அன்புச் செய்யும் ஆண்டவராக விளங்குவதால் நாம் எ
ந்த வேற்றுமையும் பாராட்டாது அனைவருக்கும் அன்பு நண்பர்களாக இருக்கவேண்டும்” என்கிறார்.
அன்று ஒளியாகப் பிறந்துத் தம் ஞானஒளியை வீசி அனைத்து மக்களையும் ஈர்த்தவரைத் தொழ வந்துள்ள நம் அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளித்து நாமும் அவரைப்போல் மற்றவர்களை நம்பால் ஈர்க்க வாழ்வளிக்கும் தியாகச்சுடராய்த் திகழ்ந்திட அன்புடன் அழைக்கின்றார். தியாகச்சீடராய் மாறிட இத்திருப்பலியில் மனமுறுக வேண்டிடுவோம். வாரீர் நம்பிக்கையுடன்...

*வாசக முன்னுரை*



*முதல் வாசகம்*

இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் மெசியா வருகையின் போது எருசலேம் நகரில் நடைபெறும் நிகழ்வுகளை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். கடவுளின் மாட்சிமை ஒளியைக் கண்டு பிற இனத்தவர்கள் அந்த ஒளியைத் தேடிவருவார்கள். செல்வங்கள் தேடிவரும். மக்கள் பொன், நறுமணப் பொருள் ஏந்தி வருவதைக் கண்டு எருசலேம் நகர் அகமகிழ்ந்திடும். அவர்கள் கடவுளைப் புகழ் பாடுவார்கள் என்று முன்னுரைத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

*இரண்டாம் வாசகம்*

 திருத்தூதர் பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட மறைபொருளைப் பற்றி எடுத்துரைக்கின்றார். நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தாரும் இயேசுகிறிஸ்துவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்று இயம்பும் இக்கருத்தினைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

*பதிலுரைப்பாடல்*


பல்லவி: ஆணடவரே! எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல் 72: 1-2,7-8,10-11,12-13.


கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.  அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!  பல்லவி.

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.  ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.  பல்லவி

தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.  எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.  பல்லவி

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.  வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.  பல்லவி

*மன்றாட்டுகள்*


1.எழுந்து ஒளிவீசு என்று எம்மைப் பணித்த எம் இறைவா! உலகின் ஒளியாம் இயேசு கிறிஸ்துவின் சீடராய் இவ்வுலகில் வலம் வரத் தேவையான விசுவாசத்தையும், உறுதியான உள்ளத்தையும், எதிர்வரும் இடர்களையும், சவால்களையும் ஏற்றுக் கடைசிவரை உமது அன்பில் நிலைத்திருந்து உமக்குச் சாட்சிப் பகர உம் திருஅவையினர் அனைவரையும் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார் என்று அமைத்த எம் இறைவா! நாங்கள் ஒரு சிறுவட்டத்துக்குள் அடங்கிவிடாமல் நீர் படைத்த இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களையும் உம்மைப்போல் அன்புச் செய்யவும், ஏழை எளியோர்களையும் குடும்பத்திலுள்ள முதியோர்களையும், ஆதரவற்றவர்கைளையும் நேசிக்கவும், அரவணைத்து அவர்களின் வாழ்வாதரங்களை உயரவும் நாங்கள்  உழைத்திட நல்மனதினைப் பெற்றிட வேண்டிய வரங்களைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.எமைப் படைத்து ஆளும் எம் தலைவா! நாட்டில் எங்கு நோக்கினும் பொருளாதார மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் உம் மக்களைச் சிதறடிக்கும் நிலையை நீவீர் நன்கு அறிவீர். இந்தப் போராட்டங்களுக்கு முற்றுபுள்ளி வைத்துப் பொதுநலம் காத்திடவும், வறட்சியால் நாள்தோறும் அவதிக்குள்ளாகிய விவசாயப் பெருமக்களுக்கு வேண்டிய உதவிகள் விரைவில் அவர்களுக்கு முழுமையாகச் சென்று அடையவும், அவர்களின் அகால மரணங்கள் தடுக்கப்படவும், மீண்டும் அவர்கள் பழைய வாழ்க்கை நிலைக்குத் திரும்பிட உம் வரங்களை  அருள்மாரிப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.எமைப் படைத்து ஆளும்
எம்  இறைவா! வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


No comments:

Post a Comment