Sunday, October 29, 2017

மரித்த ஆன்மாக்களின் நினைவு நாள் 02.11.2017

மரித்த ஆன்மாக்களின் நினைவு நாள்


திருப்பலி முன்னுரை


    நவம்பர் இரண்டாம் தேதியாகிய இன்றைய நாளிலும், இம்மாதத்தில் இனி வர இருக்கும் நாட்களிலும் மரித்த ஆன்மாக்கள் நம்மால் நினைவு கூறப்படுகிறார்கள்.  “மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறை இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன” - இது நம்மைப் பிரிவுத்துயரில் ஆழ்த்திச் சென்றிருக்கும் அன்பு உள்ளங்களையும், மறக்கப்பட்ட ஆன்மாக்களையும் நினைவு கூர்ந்து நாம் ஏறெடுக்கும் மன்றாட்டு. ‘உயிர்ப்பும், உயிரும் நானே; என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்” - இது நமதாண்டவர் இயேசு, தமது மேலோங்கிய பேரன்பால் நமக்குக் கூறும் ஆறுதல்மொழி மட்டுமல்ல இது - மீட்பை நாமனைவரும் கண்டடைய அவர் காட்டுகின்ற அருளின் வழியும் கூட. அச்சுறுத்தும் ஒன்றாக நாம் மரணத்தை கருதுகின்றோமே - அது உண்மையிலேயே அச்சுறுத்தும் ஒன்றா? என்றால் - ‘இல்லை” என்பதே  அதற்குப் பதில். ‘எனக்கு வாழ்வு என்பது கிறிஸ்துவே; சாவு எனக்கு ஆதாயம்” - என்கிறார் திருத்தூதா; புனித பவுல். கிறிஸ்துவிற்குள் வாழும் ஒருவருக்கு மரணம் என்பது மறுவாழ்வு; பெருமகிழ்ச்சி; பேரமைதி; பேரின்பம்; இறை தரிசனம்; நிறைவாழ்வு மற்றும் நிலைவாழ்வு.

மனுக்குமாரன் இயேசுவின் இரண்டாம் வருகை சார்ந்த நிகழ்வுகள் இன்று நமக்கு நற்செய்தி வாசகமாகத் தரப்பட்டிருக்கிறது. நிலை வாழ்க்கையை நாம் கண்டடைய நீதிபரணாம் இறைவன் விதித்திருக்கும் நிபந்தனைகள் இரண்டு; ஒன்று - நமது நெறி பிறழா வாழ்க்கை மற்றது நலிவுற்ற அந்நியர்களிடத்தில் நாம் கொள்ள வேண்டிய பரிவு. விண்ணகத்தில் இறை திருமுன் இருந்து கொண்டிருக்கும் புனிதர்கள் மகிமை திருச்சபையினர் அல்லது வெற்றிவாகைத் திருச்சபையினர்என்று அழைக்கப்படுகிறார்கள். தீமைகளோடு நித்தம், நித்தம் உலகில் போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், போராடும் திருச்சபையினர் அல்லது திருப்பயணத்  திருச்சபையினர்என்று அழைக்கப்படுகிறோம். மரித்து, விண்ணகப் புனிதர்களின் திருக்கூட்டத்தில் ஒன்றிணையும் தகுதியைப் பெற தங்களை சுத்திகரித்துக் கொண்டிருக்கும் விசுவாசிகள் அல்லது ஆன்மாக்கள் துன்புறும் திருச்சபையினர் என்றே அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் விண்ணகத் திருக்கூட்டத்தோடு இணையவும், இறைவனை முகமுகமாய் தரிசித்து மகிழவும் நமது நற்செயல்களோடு கூடிய செப, தபங்கள், தான தர்மங்கள் துணைபுரிவனவாக.
அன்று மரித்த இலாசரை உயிர்தெழச் செய்த இயேசு ‘கட்டுக்களை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்” என்றார். துன்புறும் ஆன்மாக்களின் கட்டுக்கள் அவிழ்க்கப்படவும், மகிமை வாழ்வினில் திளைக்கும் மகத்தான பேற்றிற்கு இவர்கள் உரியவர்களாகவும் இன்றையத் திருப்பலியினை நாம் ஒப்புக்கொடுத்து வேண்டுவோம்.

முதல் வாசக முன்னுரை


சாலமோனின் ஞானம் 3:1-19
நாம் செவியேற்க இருக்கும் முதல் வாசகம் சாலமோனின் ஞானம் என்ற நூலிலிருந்து தரப்பட்டிருக்கிறது. மரணம் மனிதர்களின் கண்களுக்கு தண்டனையாகவும், அறிவிலிகளின் பார்வையில் பேரிழப்பாகவும் கருதப்படுகிறது. ஆனால் இறவாமையில் நம்பிக்கை கொள்ளுபவர்கள் இறைவனிடமிருந்து கைம்மாறு பெறாமல் போகார் என்பதை நமக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கும் வாசகத்தை ஆர்வமுடன் செவிமடுப்போம் - இப்போது.


இரண்டாம் வாசக முன்னுரை
உரோமையா; 6: 3-4,8,9
திருத்தூதர் புனித பவுல் உரோமையருக்கு எழுதும் திருமுகத்திலிருந்து நாம் இரண்டாம் வாசகம் கேட்க இருக்கின்றோம். திருமுழுக்கின் வழியாக கிறிஸ்து இயேசுவோடு இணைந்த நாம், சாவிலும் அவரோடு இணைந்தே இருப்பதை நமக்கு வாசகம் உணர்த்துகிறது.
கிறிஸ்து இயேசுவை உயிர்ப்பித்த பரமதந்தை நம்மையும் உயிர்த்தெழச் செய்வார் என்ற நம்பிக்கைக்கு மேலும் வலுவவூட்டுவதாக அமைந்திருக்கிறது வாசகம். குன்றா ஆர்வத்தோடும் - ஒன்றிணைந்த நம்பிக்கையோடும் வாசிக்க கேட்போம்.


விசுவாசிகளின் மன்றாட்டு -1

மறுமை வாழ்விற்கு அழைத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அனைத்து இறை ஊழியர்களுக்காகவும் மன்றாடுவோம். வல்ல பரம்பொருளே - வானகத் தந்தையே - எம் இறைவா! விசுவாசிகளின் மந்தையாகிய திருச்சபையில் மேய்ப்புப் பணிக்கு தங்களை அர்ப்பணித்ததோடு, வலுவிழந்தவற்றைத் தேற்றவும், வலிமை கொண்டவற்றைக் கண்காணிக்கவும் செய்து, ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை ஏற்றமுற நிறைவேற்றி, குறிக்கப்பட்ட காலத்தில் உம்மால் அழைத்துக் கொள்ளப்பட்டவர்களான எங்கள் திருத்தந்தையர்கள், ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள் மற்றுமுள்ள துறவறத்தார்கள் உம்மோடும்,  உடனுள்ள அனைத்துப் புனிதர்களோடும் வானகப் பந்தியில் இடம் பெறும் வரம் வேண்டி, இறைவா! இன்று உம்மை மன்றாடுகிறோம்.

விசுவாசிகளின் மன்றாட்டு -2

இறைநம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, எதிர்நோக்கா பொழுதுகளில் இறப்பினைச் சந்திக்க நேர்ந்திருக்கும் எண்ணற்ற விசுவாசிகளுக்காக மன்றாடுவோம். கருணைத் திருவுருவே - காத்து நிற்கும் பேரருளே - எம் இறைவா! நரை திரை பருவங்களில் நலிவுற்று மரித்தவர்கள் - பிணிகளின் தாக்கத்தால் நம்மைப் பிரிந்து சென்றிருப்பவர்கள் எதிர்பாரா விபத்திற்கு இலக்காகி இறந்தவர்கள் - இத்தகு விசுவாசிகள் இறை இரக்கத்திற்கு உள்ளாகவும், இவர்களை வான்வீடு வரவேற்றுக் கொள்ளவும் வரம் வேண்டி, இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

விசுவாசிகளின் மன்றாட்டு -3


மெய்யங்கடவுளை அறியாது வையகத்தில் வாழ்ந்து மாpத்திருக்கும் ஆன்மாக்களுக்காக மன்றாடுவோம். எல்லை காணா பேரன்பே - இரக்கத்தின் ஊற்றே - எம் இறைவா! மண்ணக மகவாக பிறப்பெடுத்து, பாவம் போக்கும் பலியாக இன்னுயிரை ஈந்து, மனுக்குலத்திற்கு மீட்பு எனும் பெருங்கொடையை வழங்கியிருக்கும் திருச்சுதன் இயேசுவை, உலகம் முழுமையாக அறிந்து போற்றவும், புகழ்ந்து ஏற்றவும் வேண்டுகிறோம். கிறிஸ்து இயேசுவை அறியாது வாழ்ந்து மரித்திருக்கும் ஆன்மாக்கள் மீது வானகக் கொடையாம் மீட்பு வழங்கப்படும் வரம் வேண்டி, இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

விசுவாசிகளின் மன்றாட்டு -4

ஏழ்மையில் வாடுவோருக்கு இரக்கம் காட்டப்படவும், இறை இரக்கத்தை நாம் பெற்றுக்கொள்ளவும் மன்றாடுவோம். எளியோரின் அருட்சுனையே - வறியோரின் பெருந்துணையே - எம் இறைவா! ‘ஏழைகளே! நீங்கள் பேறு பெற்றோர்” - என்கிறார் திருக்குமாரன் இயேசு. ‘எளியோரின் புலம்பலையும், வறியோரின் பெருமூச்சையும் கேட்டு இறைவன் எழுந்து வருகிறார்” என்கிறது திருப்பாடல். இல்லாதார்க்கு நாங்கள் இரக்கம் காட்டவும், உமது இரக்கத்தை அதன் கைம்மாறாக நாங்கள் பெற்று மகிழவும் வரம் வேண்டி, இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.




                          நன்றி திரு MM லூயஸ், சாலிக்கிராமம், சென்னை.

No comments:

Post a Comment