Wednesday, October 18, 2017

பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு 22.10.2017



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

 

எசாயா 45:1,4-6
தெசலோனிக்கர் 1: 1-5அ
மத்தேயு 22:15-21



 *முன்னுரை*


அன்புடையீர்,
இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலத்தின் 29ஆம் ஞாயிறுத் திருப்பலி விருந்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. ஆனால், அவரவருக்கு உரியது அவரவருக்குக் கிடைக்காமல் இருப்பதால்தான் உலகம் சிறிது சிறிதாக நரகமாக மாறி வருகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

“சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்ற புகழ் பெற்ற வரிகளை இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார் இயேசு. விவிலியத்தைத் தாண்டி, கிறிஸ்தவ மறையைத் தாண்டி, பொருளாதாரம், அரசியல் என்ற பலச் சூழல்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வாக்கியம் இது. இயேசு கூறிய அந்தப் புகழ் மிக்கக் கூற்றையும், அவர் அப்படிச் சொன்ன சம்பவத்தின் பின்னணியையும், இன்றைய ஞாயிறு சிந்திக்க அழைக்கின்றது.

மதமும் அரசியலும் கலந்த அன்றைய வரலாறு இன்றும் தொடர்கிறது. இந்தச் சூழலில், நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன. சீசருக்குரியதை, இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித் தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை. சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார், அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் இன்று கேட்கிறார். நம் பதில் என்ன? அதற்கான பதிலை இன்றைய திருப்பலியில் தேடுவோம்.வாரீர்!



வாசகமுன்னுரை*

*முதல் வாசக முன்னுரை*


தன் ஊழியன் யாக்கோபை முன்னிட்டு  சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்.   பெயர் சொல்லி அமைத்துள்ளார். என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்குவேன். நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை என்று கடவுள் தம் இதயத்திற்கு இனிய இஸ்ரயேல் மக்களுக்கு தன் அன்பையும், அவரின் உடனிருப்பையும் அறிவித்ததை பற்றி இறைவாக்கினர் எசாயா விவரிக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*

கடவுளோடு மானிடன் கொண்டுள்ள உறவில் தான், நமது குறிக்கோளாகிய விண்ணரசில் நுழைய முடியும். இதைத் தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் தூயஆவியின் துணையிருந்தால் ஒளியின் மக்களாக வாழ முடியும். அதற்கு  இறைவனின் உடனிருப்பு தேவை என்கிறார். இறைஅன்பில் மலரும் செபவாழ்வு, பிறர் அன்புப் பணிக்கு உறுதி தருகின்றது. பிறரன்பு இல்லாமல் இறையன்பு வாழ்வில் நிறைவு இருக்காது என்று கூறும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

 *பதிலுரைப்பாடல்*

பல்லவி: மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
பதிலுரைப்பாடல். திபா. 96: 1, 3-5, 7-10
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள். அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி
ஏனெனில், ஆண்டவர் மாட்சி மிக்கவர். பெரிதும் போற்றத் தக்கவர். தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே. மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே. ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். பல்லவி
மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். பல்லவி
தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். வேற்றினத்தாரிடையே கூறுங்கள். ஆண்டவரே ஆட்சி செய்கின்றார். அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி 



*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்  அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1.உமது பேரன்பால் உலகை நிறைத்துள்ள எம் இறைவா! எம் திருஅவையிலுள்ள அனைவரும் இறையச்சம், அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல் ஆகிய பண்புகளை தங்கள் பணிவாழ்வில் உள்ளடக்கி இறையன்பிலும், பிறரன்பிலும் சிறந்து விளங்கிட தூய ஆவியாரின் கொடைகளைப் பொழிந்திடவும், இயேசுவின் உடனிருப்பை மனதில் கொண்டு இறைபணிகளைச் செய்திட உமதருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. எங்கள் வாழ்நாளை எல்லாம் நலன்களால் நிறைவு செய்கின்ற எம் இறைவா! எம் குடும்பங்களில் இறையன்பும், பிறரன்பும் நிறைந்திடவும், அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுப்பதால் இல்லங்களிலும், மனங்களிலும் அன்பும் அமைதியையும் நிறைவாய் பெற்றிடவும் உமதருள் வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. எங்கள் கற்பாறையும், மீட்பருமான ஆண்டவரே! எம் இறைவா! எம்மை ஆளும் தலைவர்கள் செலுத்தும் அன்பானது நீதி கலந்த அன்பாக , நீதியை நிலைநாட்டும் அன்பாக அமைந்திடவும், சமயம், சாதி, இனம் கடந்து அனைவருக்கும் அரசின் நீதியும், உதவியும் கிடைத்திடவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமாகிய எம் இறைவா! அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. இதனை உணர்ந்து எம் இளையோர்கள் இனிவரும் காலங்களில் தங்களின் வாழும் வாழ்க்கை முறையினைச் சிறப்புடன் மாறி அமைத்திட தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.







No comments:

Post a Comment