Thursday, May 31, 2018

கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழா

கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழா 



*இன்றைய வாசகங்கள்*

 

விடுதலைப்பயணம் 24:3-8;
எபிரேயர் 9:11-15;
மாற்கு 14:12-16, 22-26



திருப்பலி முன்னுரை:


 இன்று திருச்சபைக் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாட அன்புடன் அழைத்து வந்துள்ளது.  நமக்கு இயேசு கிறிஸ்து வழங்கியுள்ள அன்புக்கொடை தான் அவரது திருவுடலும், இரத்தமும் என்பதை உணர்ந்து இத்திருப்பலியில் பங்கேற்போம்.

அன்பைப் பல ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது, நாம் அன்புக் கொண்டவருடன் தங்கி இருப்பது. பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே அன்பு. இந்த முழுமையான பிரசன்னம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் உச்சம்.

எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது நம் உடலோடு கலந்து ஒன்றாகிவிடும். நம் இரத்தமாக, தசையாக, எலும்பாக,  நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படைக் குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை உணர்ந்திடுவோம். இந்த எளிய உணவில், நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவில் இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை.

உறவுகளின் உச்சக்கட்ட, இறுதிக்கட்ட வெளிப்பாடே இயேசு தனது உடலையும் , இரத்தத்தையும் நமக்கும் கொடுத்தது. வாழ்வின் உணவை, ஒன்றிப்பின் உணவை உண்டு  கிறிஸ்துவின் வாழ்வோடு ஒன்றித்திருப்போம். இதற்காக இன்றைய இப்பெருவிழாத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.



 

வாசக முன்னுரை:



முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் தம் ஊழியன் மோசே வழியாக  மிருகங்களின் இரத்தத்தைக் கொண்டு செய்த உடன்படிக்கையை விவரிக்கிறது. ஆனால் காலப்போக்கில் அவர்கள் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்து பிறஇனத் தெய்வங்களை வழிபட்டு உடன்படிக்கையின் அன்பை முறித்தனர். எனினும் இறைவன் இறைவாக்கினர்  எரேமியா வழியாக புதியதோர் உடன்படிக்கையை முன் அறிவித்தார்.  இந்த புதிய உடன்படிக்கையின் இணைப்பாளர்  இயேசுவிறிஸ்துவே என்பதை உணர்ந்து விடுதலைநூலிலிருந்து வாசிக்கப்படுவதைக் கேட்போம்.



இரண்டாம் வாசக முன்னுரை:


இரண்டாம் வாசகத்தில் மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நடக்கும் இறைவழிபாட்டிற்கு கிறிஸ்துவே தலைமைக் குரு. அவர் திருப்பலி செய்யும் கூடாரம் பெரியது. நிறைவு மிக்கது. அவர் பலியாகப் படைத்த இரத்தம் அவரது சொந்த இரத்தமே. அவரது தூய இரத்தத்தையே ஒரே ஒரு முறை சிந்தி மானிடரை மீட்டார் கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றபப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது என்று உரைக்கும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 116: 12-13. 15-16. 17-18

பல்லவி: மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவர் பெயரைத் தொழுதிடுவேன்.

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். -பல்லவி

ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். -பல்லவி

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்



1. அன்புத் தந்தையே எம் இறைவா,  உம் இறைஇரக்கத்தின் உடனிருப்பு முன்பு, உம் சீடர்களோடு இருந்ததுபோல இன்று எம் திருஅவையில் உமது ஆற்றலினால் உத்வேகத்தோடு தங்கள் வாழ்வால் திருத்தந்தை முதல் கடைநிலை பொதுநிலையினர் வரை அனைவரும் நற்செய்தியின் தூதுவர்களாக திருஅவையை வழி நடத்த வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமை படைத்துப் பராமரித்து ஆளும் எம் இறைவா! எமது நாட்டு அரசியல் பல நிலைகளில் பிளவுபட்டும், ஒருவர் மற்றவரைக் குறை கூறியும் வாழும் போக்கினை நன்கு அறிவீர். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற உமது தாக்கம் எம் நாட்டு தலைவர்களிடையே மேலோங்கி நீவீர் விரும்பும் இறையரசு மலர்ந்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3. இன்றைய உலகலாவிய புவியின் வெப்பமையமாதல் பல்வேறு இயற்கை மாற்றங்களால் மனித வாழ்வில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் என அனைத்து நிலையினருக்கு ஏற்படும் நோய்களிலிருந்து நாங்கள் முற்றிலுமாக விடுபட நாங்கள் இயற்கைக்கு எதிராக செய்த தவற்றை நினையாது, இரக்கத்தின் ஆற்றலை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உலகின் ஒளியே இறைவா! உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கின்றவர் நீரே. எங்கள் இதயங்களையும் ஒளிர்வித்தருளும். உமது வார்த்தையாலும் உணவாலும் ஊட்டம் பெற்ற நாங்கள் எப்பொழுதும் உமக்கு உகந்தவற்றையே நாடவும், பிறரை நேர்மையான உள்ளத்தோடு அன்பு செய்து வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. கொடைகளின் ஊற்றான இறைவா! இப்புதிய கல்வியாண்டில் முதல் முறையாகப் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் சிறார் முதல் தங்கள் இறுதிப் படிப்பை முடிக்க உள்ள எம் இளையோர் வரையுள்ள அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்களுக்கு நல்ல ஞானத்தையும், ஞாபக சக்தியையும், இறையச்சத்தையும் அளித்து, சிறந்த படைப்பாக இவ்வுலகில் வலம் வர உம் அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


                                          www.anbinmadal.org

No comments:

Post a Comment