Wednesday, June 6, 2018

*பொதுக்காலம் ஆண்டின் 10- ஆம் ஞாயிறு 10.6.18*

*பொதுக்காலம் ஆண்டின் 10- ஆம் ஞாயிறு 10.6.18*







*இன்றைய வாசகங்கள்*

தொடக்க நூல். 3:9-15
2 கொரிந்தியர். 4:13-5:1
மாற்கு 3:20 - 35


*திருப்பலி முன்னுரை*:

இன்று பொதுக்காலம் ஆண்டின் பத்தாம் ஞாயிறு. நம் ஆலயத்தில் கூடியுள்ள இறைமக்களே பொய்மையிலிருந்து விடுபட்டு உண்மைக்காக, உண்மையில் வாழ இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

கடவுள் இவ்வுலகை நல்ல நிலையில்தான் படைத்தார். அவர் படைத்த அனைத்தும் நன்றாக, மிகவும் நன்றாக இருக்கக் கண்டார் என்று தொடக்கதால் கூறுகிறது. அப்படியானால் பாவம் எப்படி இவ்வுலகில் நுழைந்தது? இக்கேள்விக்கு இன்றைய முதல் வாசகத்தில் மனித குலத்தின் முதல் பெண் வாயிலிருந்து வரும் பதில்: "பாம்பு என்னை ஏமாற்றியது." எனவே அலகையின் வெஞ்சகத்தால்தான் பாவமும் அதன் வழியாகச் சாவும், மற்ற எல்லாத் துன்பங்களும் வந்தன.


கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தது "அலகையின் செயல்களைத் தொலைக்கவே' என்று கூறுகிறார் புனித யோவான். கிறிஸ்து அலகையை 'இவ்வுலகின் தலைவன்' என்றழைக்கிறார். ஆனால் அதே நேரத்தில் கிறிஸ்துவின்மேல் அலகைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதையும் ஆணித்தரமாகக் கூறுகின்றார். மேலும் "இவ்வுலகத் தலைவன் வெளியே துரத்தப்படுவான்" என்றும் ஐயத்திற்கு இடமின்றி அறிவிக்கிறார்.

ஒரு மனிதன் தவறு செய்துவிட்டு தனது தவற்றை ஏற்றுக் கொள்ளும்போது அவன் பொய்மையிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். ஆம், உண்மையான வாழ்வு வாழ நாம் முன் வந்தால், துன்பங்கள் நமக்கு வரலாம்! ஆனால் அந்தத் துன்பங்களுக்குப் பிறகு மறைந்து நிற்கும் மனநிம்மதி என்னும் முழுமதி நமது இதய வானிலே எழுந்து இதம் தருவது உறுதி.

இந்த இதமான ஆசீரை அனுபவிக்க வீடு ஒன்று விண்ணகத்தில் உள்ளது என்ற ஆழமான நம்பிக்கையில் இன்றைய திருப்பலியில் நிறைவாய் பங்கேற்போம்.


*முதல் வாசக முன்னுரை*

முதல் மனிதன் ஆதாம் தனது குற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து தன் மனைவி மீது குற்றத்தைச் சுமத்தியபோது அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படாத பாவங்களாக மாறின! அவர்கள் மனம் மன்னிக்கப்படாத சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டது! சூழ்நிலை மாறியதால் இறைவனால் வகுக்கப்பட்ட சூழ்நிலைக்குள் அந்த முதல் மனிதர்களால் வாழ முடியவில்லை ! இன்ப வனத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர்கள் பட்ட பாடுகள் என்னவென்று நமக்குத் தெரியும்! இந்நிகழ்வை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*

நம்பிக்கை மனப்பான்மைக் கொண்டுள்ள திருத்தூதர் பவுலடியார் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே நம் எல்லோரையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார் என்று நம்பிக்கையுடன்  பேசுகிறார். நாம் அடையும் துன்பங்கள்  மிக எளிதில் தாங்கக் கூடியவை. நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்துபோனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு.  அது என்றும் நிலையானது என்று தெரிந்த நாம் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் மனதில் பதிவுச் செய்வோம்.


*பதிலுரைப்பாடல்*
திருப்பாடல் 130: 1-2, 3-4, 5-6, 7-8
*பல்லவி*:  பேரன்பும் மீட்பும்  ஆண்டவரிடமே உள்ளன.

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். - *பல்லவி*

ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். - *பல்லவி*

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம்;, விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. - *பல்லவி*

இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! - *பல்லவி*

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! *இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்" என்றார் ஆண்டவர்.அல்லேலூயா, அல்லேலூயா!*


*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*:

இரக்கம் காட்டுவதில் வல்லவரான எம் தந்தையே இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் மறுமையில் ஒரு வீடு எங்களுக்கு நிலையாக உள்ளது என்று நம்பிக்கையின் மூலம் பொய்மையிலிருந்து விடுபட்டு உண்மைக்குச் சான்றுப் பகரும் நல்வாழ்வை வாழ்ந்திடத் தேவையான நேரிய மனமும், உள்ள உறுதியும் பெற்றிட அருள் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

படைப்புகளின் ஆண்டவரே எம் இறைவா! இருளில் வாழ்வோரைக் கண்ணேக்கியருளும். உம்மை ஒரே உண்மைக் கடவுளாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி அவர்களின் உள்ளங்களில் உமது அன்பின் ஒளிப் பரவிடவும், உமது போதனைகளுக்கு உண்மையாக இருக்க உமது ஆவியை எங்கள் மேல் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நாடுகள் அனைத்திற்கும் ஒளியான எம் தந்தையே இறைவா! உலகின் எல்லா நாடுகளுக்காகவும், பதவியில் உள்ளவர்கள் மக்களிடையே அமைதிக்காகவும் நல்ல உறவுக்காகவும் உழைக்கவும், மனிதநேயம் காக்கப்படவும், மக்களின் வாழ்வு ஏற்றம் பெறவும் தேவையான நல்ல உள்ளங்களும்,நேர்மையும் கொண்டவர்களாகப் பணிபுரிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

வெற்றியின் நாயகனே எம் இறைவா! எம் வாழ்வில்  நாங்கள் சந்தித்த அனைத்து போராட்டங்களும், படும் வேதனைகளும் எதிர்காலத்தில் எமக்கு கிடைக்கும் வெற்றிவாகை என்பதனை உணர்ந்து குடும்பவாழ்வில் தனிமை, வருத்தம், நெருக்கடி, தோல்வி, வேதனை இவைகளிலிருந்து மீண்டும் எழுந்திட, குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் தழைத்து ஓங்க  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கமும் பேரன்புமிக்க எம் இறைவா! இன்றைய சமூகத்தில் நிலவும், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகளிலிருந்தும் வறுமையிலிருந்தும் விலகி வெளிவந்திடவும், மக்கள் தங்கள் சுயத்தையும், சமூக மதிப்பீடுகளையும், உறவுகளையும் இழந்து நிற்கும் நிலைமாறி, உறவை போற்றிப் பேணிப் பாதுகாக்கக் கூடியவர்களாக மாற்றி நல் வாழ்வு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

No comments:

Post a Comment