Wednesday, May 8, 2019

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு

 பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருத்தூதர் பணிகள் 13: 14,43-52
திருவெளிப்பாடு 7: 9,14b-17
யோவான் 10: 27-30

திருப்பலி முன்னுரை:


பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறுக் கொண்டாடங்களில் கலந்து வந்துள்ள உங்கள் அனைவருக்கும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! ரையும் அன்புடன் வரவேற்கிறோம். இயேசுவின் குரலுக்குச் செவிசாய்க்கும் அனைவரும் இயேசுவின் உண்மைச் சீடர்கள் என்ற கருத்தை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது. நல்லாயனாம் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதோடு மட்டுமல்ல, அதைச் செயலில் வாழ்ந்துக் காட்டுகின்ற மக்களாக இருக்க வேண்டும். வெறும் வாய்ச்சொல் வீரர்களாக மட்டும் இருந்தால் அஃது ஒன்றுக்கும் உதவாது என்ற கருத்தை இன்றைய இரண்டாம் வாசகம் நம் முன்வைக்கிறது.

நான் தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் உலகில் சென்று பலன் தரும்படியாக நான் தான் உங்களைத் தேர்ந்துக்கொண்டேன் என்ற இயேசுவின் வார்த்தையைச் சிந்தித்துப் பார்த்தால் இறையழைத்தலின் மகிமையை நன்கு உணரலாம். இயேசுவின் அழைப்பை ஏற்ற அவரது அடிச்சுவட்டில் வாழ நம்மையே இறைவனுக்கு அர்ப்பணிப்போம். அதற்கான இறையருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


தாங்கள் அறிவித்த நற்செய்திக்கு யூதர்கள் 'செவிமடுக்காததால்', தங்கள் நற்செய்தியை புறவினத்தாரிடம் கொண்டு செல்கின்றனர் பவுலும் பர்னபாவும். புறவினத்தார் இந்தப் புதிய நற்செய்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். புறவினத்தாரின் மகிழ்ச்சி, யூதர்களின் பொறாமையாக உருவெடுக்கிறது. ஆண்டவரை அறிதல் மனிதர்கள் நடுவில் பிளவை ஏற்படுத்துகிறது  இதை கூறும் இன்றைய முதல் வாசகமான திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்க கவனமுடன் கேட்போம்.




இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் யோவான் தன் ஆடுகளை அறிந்த இயேசு தானே ஆட்டுக்குட்டியாகத் தன்னை பலியாக்குகின்றார். இவரின் குரலுக்குச் செவிமடுத்து இவரைப் பின்பற்றியவர்களின் ஆடைகளை இவர் தன் இரத்தத்தால் தூய்மையாக்குகின்றார். பலியான ஆட்டுக்குட்டியே அவர்களை மேய்க்கின்றார். அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுகிறார்' என்று நமக்கு தெளிவுப்படுத்தும் வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5


பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள்,
அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


 1. எம் நல்ல மேய்ப்பனாம் எம் இறைவா! திருஅவை இறையழைத்தல் ஞாயிறைக் கொண்டாடும் இவ்வேளையில் உம் திருஅவையின் பணியாளர்களாகிய திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் குரலுக்குச் செவிசாய்த்து அவர் காட்டிய பாதையில் இனிதே பயணிக்கத் தேவையான அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. என்றுமே மாறாத அன்பு கொண்ட எம் இறைவா, இன்றைய சூழலில் நாங்கள் எங்கள் குடும்பத்தில் நல்ல தலைவர்களாகவும், சமுதாயத்தில் நல்ல வழிகாட்டிகளாகவும், தடுமாறுகிறவர்களுக்குப் புதிய பாதையாகவும், வாழ்வை இழந்தவர்களுக்கு வாழ்வாகவும் எம் ஆயனாம் இயேசுவின் பாதையில் தடம் மாறாதுப் பயணம் செல்லத் தேவையான அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இன்று உலகில் நடைபெறும் மாற்றங்களால் நலிவடையும் மற்றும் மழைப்பொழிவை இழந்து தவிக்கும் என் விவசாயப் பெருமக்களை உம் முன் வைக்கிறோம். நல்ல மழையை பொழியச் செய்து நீர் வளம் பெறுகவும், அரசாங்கத்தாலும், மற்றவர்களாலும் அவர்கள் உழைப்புச் சுரண்டப்படாமல், உழைப்புக்கேற்றப் பலனையும் மதிப்பையும் அடையவும், பொருளாதர வளர்ச்சிக் கண்டு இன்புறவும், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அறுவடையே அதிகம் ஆட்களோ குறைவு என்று உம் பணிக்கு எம்மை அழைத்த இறைவா! தேவ அழைத்தல் எந்த நிலையிலும் உண்டு என்பதை உணர்ந்து, உமது பணிச் செவ்வனே செய்யவும், எம் தாய்நாட்டிலிருந்து உம் சேவைக்காய் வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் ஆயனின் பணிகளைச் சிறப்புடன் செய்திட நல்ல மனதையும், உடல்நலத்தையும், உம்மேல் உறுதியான நம்பிக்கையுடன் அருட்பணிகள் செய்திட வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம் கலங்கரைவிளக்காம் தந்தையே எம் இறைவா! கல்வியாண்டுத் தேர்வுகளில் வெற்றிப் பெற்றுப் புதிய கல்விநிலையங்களுக்குச் செல்லும் எம் பிள்ளைகளை உம் கரம் ஒப்படைக்கின்றோம். ஒழுக்கத்திலும், படிப்பிலும் சிறந்து விளங்கித் தம் பெற்றோரின் நல்ல எதிர்பார்ப்புகளைப் புர்த்திச் செய்து ஒளிமயமான எதிர்காலத்தை அடையத் தேவையான உம் அருளைப் பொழிய வேன்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org

No comments:

Post a Comment