Wednesday, February 28, 2024

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு - 03-03-2024

 தவக்காலம் மூன்றாம் ஞாயிறு - 03-03-2024

 இன்றைய வாசகங்கள் :

விடுதலைப் பயண நூல் 20:1-17
1கொரிந்தியர் 1:22-25
யோவான் 2:13-25

திருப்பலி முன்னுரை :

அன்பார்ந்த இறைமக்களே!
சென்ற வாரம் இயேசுவை நாம் மலைமீது சந்தித்தோம். உருமாறி, ஒளிவெள்ளத்தில் தோன்றிய இயேசு அவர். தவக்காலத்தின் மூன்றாவது ஞாயிறான இன்று இயேசுவைக் கோவிலில் சந்திக்கிறோம். கோபக்கனல் தெறிக்கத் தோன்றும் இந்த இயேசு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்.

"யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்(யோவான் 2: 13) என்று இன்றைய நற்செய்தி துவங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பாஸ்கா விழாவையொட்டி எருசலேமுக்குச் செல்ல வேண்டும், அந்த ஆண்டுக்கான காணிக்கையைக் கோவிலில் செலுத்த வேண்டும். இயேசுவும் யூதருக்குரிய தன் கடமைகளை நிறைவேற்றக் கோவிலுக்குச் சென்றார். அங்குச் சென்றவர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். ஒவ்வோர் ஆண்டும் அவர் அங்குச் சென்று திரும்பியபோதெல்லாம் அவர் உள்ளத்தை வேதனையும், கேள்விகளும் நிறைத்திருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் அந்த வேதனைகளுக்கும், கேள்விகளுக்கும் விடைதேடி வந்த இயேசு, இன்று தானே விடையாக மாறத் துணிந்தார்.

இறைமக்களாகிய நாம் அனைவரும் இறைவனின் ஆலயங்களே! கடவுளின் ஆலயம் தூயது. நீங்களே அந்த ஆலயம். நீங்கள் கடவுளின் கோயிலென்று உங்களுக்குத் தெரியாதா? என்கிறார் புனித பவுல். நம் உடலாகிய கோயில் பாவ நாட்டங்களால் தீட்டுப்படும்போது கடவுள் வெளியேறி விடுகிறார். நாம் மற்றவருக்குத் தீங்கிழைக்கும்போது கடவுளுக்கே தீங்கிழைக்கிறோம் என்பதை உணர்ந்து தூயவாழ்வு நடத்தி நமது உடலாகிய ஆலயத்தைப் பேணுவோம், வாழ்வையே வழிபாடாக மாற்றுவோம். வாரீர்.

 முதல் வாசக முன்னுரை :

மக்களைப் பாவத்தில் இருந்தும் அழிவில் இருந்தும் பாதுகாக்க இறைவன் பத்துக் கட்டளைகளைக் கொடுத்ததை இன்றைய முதல் வாசகம் நினைவு படுத்துகிறது. இக்கட்டளைகள் உறவு வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை. முதல் மூன்று கட்டளைகள் இறை - மனித உறவைப் பற்றியும் அடுத்த ஏழு கட்டளைகள் மனிதருக்கும் - மனிதருக்குமான உறவைப் பற்றியதாகவும் அமைந்துள்ளன. சீனா மலையின் உடன்படிக்கையின் வெளிப்பாடே பத்துக் கட்டளைகள். அவற்றை மீறுவது இறைவனின் உடன்படிக்கையையே மீறுவதாகும். இதனைச் சிந்திக்க அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 19: 7. 8. 9. 10
பல்லவி : ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.
1. ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிரளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி
2. ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி
3. ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை.-  பல்லவி
4. அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.-  பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல்  ஞானத்தை பெரிதும் மதித்துத் தேடும் யூதர்கள், கிரேக்கர்கள் இறைஞானத்தை உணரவில்லை என்பதை உணர்த்துகிறார். மெசியாவாகிய இயேசு கொண்டு வரும் புதுவாழ்வு உலகிற்கு உரியவற்றைச் சிலுவையில் அறைந்து விட்டு, சிலுவையைப் பின்பற்றி  நடப்பதாகும். அதாவது உள்ளத்தில் எழுதப்பட்டுள்ள கடவுளின் கட்டளைகளின்படி நடப்பதாகும். பழைய உடன்படிக்கை கற்களில் எழுதப்பட்டது. புதிய உடன்படிக்கை மனித இதயத்தில் எழுதப்பட்டது என்று உரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் :

1. இரக்கம் நிறைந்த எம் இறைவா! திருஅவை உள்ள அனைவரும் ஓப்புறவு அருட்சாதனத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கின்ற தவறான கண்ணோட்டங்களைக் களைந்து, நல்ல ஒப்புறவு அருட்சாதனத்தில் பங்குகொண்டு இத்தவக்கால பலன்களை முழுமையாக அனுபவிக்கவும், இயேசுவின் உயிர்ப்பில் இணைந்திட வேண்டிய உறுதியான மனநிலையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா! கல்வித் தேர்வு காலமான இந்நாள்களில் எம்பிள்ளைகள் நன்றக படித்து, படித்தவற்றை தேர்வு நேரங்களில் மறக்காமல், தடுமாற்றம் இல்லாமல் சிறப்பாகத் தேர்வு எழுதவும், பெற்றோர்கள் அவர்களை அன்போடு ஊக்குவிக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நல் ஆயனே! எம் இறைவா! இன்றைய உலகில் நிலவும் இளையோர்க்கு எதிராக எழுப்பப்படும் கலாசார சீர்கேடுகள், மாயகவர்ச்சிகள், பாலியல் வன்முறைகள் இவை அனைத்திலிருந்து எம் இளையோரை பாதுகாத்து, அவர்கள் உம் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றின் மறைபொருளை அறிந்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கருணையின் தெய்வமே! எம் இறைவா! சமூகத்தில் தனக்கு யாருமே இல்லை என்று தனித்து விடப்பட்ட விதவைகள் அனாதைகள், கைவிடப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் அனைவரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட உம் பாடுகளின் வழியாக அவர்கள் தங்களை புதுப்பித்த உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எம் இளையோர், இயேசுவின் சிலுவை நண்பர்களாக வாழ்ந்து, துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், மலை அனுபவத்தில் 'இவருக்குச் செவி கொடுங்கள்!' என்ற உமது கட்டளையை மனதில் பதிவு செய்து, இத்தவக்காலத்தைப் பயன்படுத்தவும், அதன் மூலம் புதுவாழ்வு அடைய வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




www.anbinmadal.org


Print Friendly and PDF

5 comments:

  1. மில்டன் PMarch 2, 2024 at 7:32 AM

    இயேசு கிறிஸ்துவில் அன்பான சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய ஞாயிறு திருப்பலி முன்னுரை மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் சிந்திக்கவும் தியானிக்கவும் தூண்டுகிறது. கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம், உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    நாளைய தேதியை தவறுதலாக 3.3.24 என்பதற்கு பதிலாக 4.3.24 என்று பதவிட்டுள்ளீர்கள் என்பதை உங்களின் மேலான கவனத்திற்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். வேறொன்றும் பெரிய விஷயம் இல்லை. மீண்டும் உங்களின் இந்த தன்னலமற்ற இறைப்பணியை இயேசு கிறிஸ்து நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். நன்றி, வணக்கம் வணக்கங்கள்.

    ReplyDelete
  2. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. திருப்பலி முன்னுரை எப்போது வரும்

    ReplyDelete
  4. Kindly post the mass introduction and prayers of the faithful immediately for the coming Sunday 14th April.since it has to be distributed to the Sunday class students for practise

    ReplyDelete
  5. Please make it on Wednesdays every week

    ReplyDelete