Monday, March 18, 2024

குருத்து ஞாயிறு 24.03.2024

குருத்து ஞாயிறு 24.03.2024 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 50:4-7
பிலிப்பியர் 2:6-11
மாற்கு 14:1-15:47

திருப்பலி முன்னுரை

அன்புடையீா,
இன்று குருத்து ஞாயிறைக்‌ கொண்டாடுகிறோம்‌. புனித வாரத்தின்‌ தொடக்கமாகவும்‌, நுழைவு வாயிலாகவும்‌ குருத்து ஞாயிறு அமைகின்றது. தாவீதின்‌ மகனுக்கு ஓசான்னா முழக்கங்களோடும்‌, ஒலிவக்‌ கிளைகளைக் கைகளிலே ஏந்திய வண்ணமாய்‌ எபிரேயர்‌ எருசலேமிற்குள்‌ வீரப்பயணம்‌ மேற்கொள்கிறார்கள்‌. இந்தப்‌ பயணம்தான்‌ இயேசு இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும்‌, மீட்பின்‌ முதல்‌ படியாகவும்‌ அமைகிறது. ஈராயிரம்‌ ஆண்டுகளாய்‌ விடுதலைக்காய்‌, வாழ்வின்‌ விடியலுக்காய்‌ ஏழை எளிய மக்களுக்கு நம்பிக்கையையும்‌, புத்துயிரையும்‌ கொடுப்பதாகவும்‌ அமைகிறது. எனவே இப்புனிதமான நாளில்‌ நாம்‌ நமது கரங்களில்‌ ஏந்தும்‌ குருத்து மடல்களும்‌ நாம்‌ இசைக்கும்‌ ஓசான்னா கீதமும்‌ இந்தச்‌ சமுதாயத்தில்‌ இருக்கும்‌ சுயநலம்‌, அழிவுக்‌ கலாச்சாரம்‌, நுகர்வுக்‌ கலாச்சாரம்‌, அநீதிகள்‌ போன்றவற்றிற்குச்‌ சாவுமணி அடிக்கும்‌ உரிமைக்‌ குரல்களாக ஒலிக்கட்டும்‌. இத்திருப்பவனியின்‌ வழியாக இயேசுவோடு கல்வாரிக்குப்‌ பயணமாவோம்‌.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

அநீதிகளும்‌, அராஜகங்களும்‌, சுயநலமும்‌ நிறைந்த உலகத்தினை எதிர்த்துப்‌ போராடுகிறபோது, பல துன்பங்களும்‌ அவமானங்களும்‌ ஏற்படும்‌. பலர்‌ இகழ்வார்கள்‌. ஆனால்‌ தாழ்ச்சியோடும்‌, துணிவோடும்‌ அவைகளை எதிர்த்துப்‌ போராட ஆண்டவர்‌ இயேசு நமக்குத்‌ துணையாயிருக்கிறார்‌. அவரை நாடுங்கள்‌ அவர்‌ நம்மை எல்லாச்‌ சூழ்நிலையிலும்‌ வழிநடத்துவார்‌ என்று எசாயாவின்‌ நம்பிக்கையூட்டும்‌ வார்த்தைகளுக்குச்‌ செவிமடுப்போம்‌.

பதிலுரைப்பாடல்

பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
திபா 22:7-8, 16-17, 18-19, 22-23
என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,`ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர். பல்லவி

தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். பல்லவி

என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி

உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்துப் பாடுவேன். ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு இறைமகன்‌. அவருக்கு எல்லாவற்றின்‌ மேலும்‌ அதிகாரமும்‌, வல்லமையும்‌ இருந்தாலும்‌ அன்புகருதி, அமைதிகருதி, சமாதானம்கருதி அவர்‌ தன்னையே வெறுமையாக்கினார்‌. தாழ்த்திக்கொண்டார்‌. தாழ்ச்சி என்பது வீழ்ச்சி அல்ல. ஆனால்‌ அவரை அனைத்திற்கும்‌ மேலாகத் தந்தை உயர்த்தினார்‌. நாமும்‌ நமக்கு அறிவுத்‌ திறமை, ஆள்திறமை, பணம்‌, பதவி ஆகியவை இருந்தாலும்‌ பணிவோடு பிறர்‌ வாழ்வு முன்னேற முயற்சி செய்யும்போது கடவுள்‌ நம்மையே மேன்மைப்படுத்துகிறார்‌ என்று கூறும்‌ இவ்வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நம்பிக்கையாளரின்‌ மன்றாட்டுகள்‌

1. அருட்பெருக்கின் நாயகனே! எம் இறைவா! திருத்தந்தை, அவரோடு இணைந்து உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் உயிர்ப்பின் மகிமையால் பலன் அளிக்கக் கூடியவர்களாகத் தொடர்ந்து பணி செய்திட, இயேசுவே ஆண்டவர் என்று முழுக்கமிட தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நன்மைகளின் நாயகனே எம் இறைவா! வரவிருக்கும் இப்புனித வார நாட்களில் நாங்கள் எங்கள் பாவங்களையும், பலவீனத்தையும், குற்றங்குறைகளைக் களைந்து வழக்கமாக மேற்கொள்ளும் நிகழ்வாக உம் பாஸ்கா விழாவைக் கொண்டாடாமல், உள்ளத்தில் மாற்றம் நிறைந்தவர்களாகத் தூய மனதுடன் உம்மை அணுகி வர இறைவா உமை மன்றாடுகிறோம்.

3. ஏழைகளின் திருவுருவே எம் இறைவா! இந்த அருளிரக்க நாட்களில் தவமுயற்சிகளில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்தாமல் உள்ளத்தில் மனமாற்றமும், அதன் வெளிப்பாடாக, ஏழைகள் மட்டில் கவனம் செலுத்தி, அவர்களின் வாழ்வு சிறந்து விளங்கிட, அந்த மீட்புச் செயலின் வழியாக உம் சீடத்துவ வாழ்வில் அவர்களும் பங்கேற்கத் தேவையான மீட்பின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பாராளும்‌ பரமனே எம்‌ இறைவா ! நாட்டிற்காகவும்‌ நாட்டை ஆளுகின்ற தலைவர்களுக்காகவும்‌ மன்றாடுகின்றோம்‌. அவர்களுக்கு உமது ஆசிகளை நிறைவாய்‌ வழங்கியருளும்‌. அவர்கள்‌ தன்னலத்தோடு வாழாமல்‌, தங்களைத்‌ தேர்ந்தெடுத்த மக்களின்‌ தேவைகளை நிறைவேற்றவும்‌, நாடு வளமும்‌, நலமும்‌ பெற அவர்கள்‌ உழைக்கவும்‌, அவர்களுக்கு நல்மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்‌.

5. துன்பம் இல்லாமல் இன்பம்‌ இல்லை. சிலுவை இல்லாமல் சிம்மாசனம்‌ இல்லை என்பதை உணர்த்திய எம்‌ இயேசுவே! எங்களுக்கு வரும்‌ துன்பத்‌ துயரங்களைத் தாங்கிக்கொள்ளவும், பிறர்‌ வாழ்வில்‌ உள்ள சுமைகளைப்‌ பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்யும்‌ நல்‌மனதைத்‌ தந்தருள உம்மை வேண்டுகிறோம்‌.

6.எம்மை அரவணைக்கும் இறைவா! எம்பங்கில் அனைவரும் இத்தவக்காலத்தில் பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு,  ஒருவரை ஒருவர் மன்னித்துப் புதுமனிதர்களாக, புது வாழ்வை நோக்கிப் புத்துயிர் பெற்றுச் செயலற்ற, உம் அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF


No comments:

Post a Comment