Wednesday, March 27, 2024

உயிர்ப்புப்‌ பெருவிழா - 31.03.2024

உயிர்ப்புப்‌ பெருவிழா - 31.03.2024  

இன்றைய வாசகங்கள்

திருத்தூதர் பணி 10:84-49
கொலோசையர் 8:1-4
யோவான் 20:1-9

திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவின்‌ உயிர்ப்பு, வரலாற்று ஏடுகளில்‌ புதைந்துபோன அல்லது அழிந்துபோன நிகழ்வல்ல. மாறாக நமக்கும்‌ கடவுளுக்கும்‌ இடையில்‌ உள்ள தடைகளை உடைத்து நம்மை இறைவனோடு இணைக்கும்‌ உன்னத நிகழ்வாகும்‌. உயிர்ப்பு இல்லையெனில்‌ நற்செய்தியில்லை, உயிர்ப்பு இல்லையெனில்‌ கிறிஸ்தவ சமூகம்‌ இல்லை. உயிர்ப்பு நம்மைப் பிரிக்கும் சக்திகளை உடைத்தெரியும்‌ மக்களாக வாழ அழைப்பு விடுக்கிறது. தோற்றுவிட்டோம்‌. எல்லாம்‌ முடிந்துவிட்டது என்று கலங்கிக்‌ கொண்டிருந்த சீடர்களுக்கு, கிறிஸ்துவின்‌ உயிர்ப்பு வளமையையும்‌ வாழ்வையும்‌ தந்தது.

நாமும்‌ உயிர்த்த இயேசுவின்‌ நற்செய்தியைப்‌ பிறருக்கு கொண்டு செல்ல வேண்டும்‌. உயிர்ப்பின்‌ மக்களாக வாழ வேண்டும்‌ என அழைப்பு விடுக்கிறது. எனவே உயிர்த்த கிறிஸ்துவின்‌ அன்பையும்‌, ஆசிகளையும்‌ அனைவருடனும்‌ பகிர்ந்து கொள்வோம்‌ என்ற உறுதிப்பாட்டோடு இந்தத்‌ திருப்பலியில்‌ பங்கெடுப்போம்‌.

முதல்‌ வாசக முன்னுரை :

கிறிஸ்து காட்டும்‌ பாதையில்‌ அன்பு உண்டு. அமைதி உண்டு. வெற்றி உண்டு. நாமும்‌ கிறிஸ்துவோடு இணைந்து அவரது பாதையில்‌ செல்லப் புனித பேதுரு இவ்வாசகம்‌ மூலம்‌ நமக்கு அழைப்பு விடுக்கிறார்‌. நம்மை முழு மனிதராக்கும்‌ கிறிஸ்துவின்‌ பாதையில்‌ நாமும்‌ பயணம்‌ செய்ய இறைவனுக்கு ஏற்புடைய செயல்களை நாம்‌ செய்ய வேண்டும்‌ எனக்‌ கூறும்‌ இவ்வாசகத்திற்குச்‌ செவிகொடுப்போம்‌

பதிலுரைப் பாடல்

திபா 118: 1-2. 16-17. 22-23 (பல்லவி: 24)

பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! - பல்லவி
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். - பல்லவி
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை :   

கிறிஸ்துவின்‌ உயிர்ப்பு என்பது புதிய தொடக்கமாகும்‌. உலகம்‌ சொல்லும்‌ அனைத்து விதமான கருத்துகளுக்கும்‌ முற்றுப்புள்ளி வைத்த இந்த நிகழ்வு விண்ணக வாழ்விற்குப்‌ புதிய தொடக்கமாகிறது. அவரது உயிர்ப்பினால்‌ அவரோடு புனித படைப்பான நாமும்‌ விண்ணக வாழ்வைப்‌ பற்றி எண்ணி கிறிஸ்துவோடு இணைந்து துன்பங்களை மறந்து வாழ்வோம்‌ என அழைக்கும்‌. வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌.

தொடர்பாடல்

இன்று இதைச் சொல்ல வேண்டும் அல்லது பாட வேண்டும். எண்கிழமை நாள்களில், விரும்பினால், சொல்லலாம்.

பாஸ்காப் பலியின் புகழ்தனையே
பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே.

மாசில் இளமறி மந்தையினை
மாண்பாய் மீட்டுக்கொணர்ந்தாரே;
மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன்
மாசுறு நம்மை இணைத்தாரே.

சாவும் உயிரும் தம்மிடையே
புரிந்த வியத்தகு போரினிலே
உயிரின் தலைவர் இறந்தாலும்
உண்மையில் உயிரோடாளுகின்றார்.

வழியில் என்ன கண்டாய் நீ?
மரியே, எமக்கு உரைப்பாயே.

உயிரோடுள்ள கிறிஸ்து பிரான்
கல்லறைதன்னைக் கண்டேனே;
உயிர்த்து எழுந்த ஆண்டவரின்
ஒப்பரும் மாட்சியும் கண்டேனே.

சான்று பகர்ந்த தூதரையும்
போர்த்திய பரிவட்டத்தினையும்
அவர்தம் தூய துகிலினையும்
நேராய்க் கண்ணால் கண்டேனே.

கிறிஸ்து என்றன் நம்பிக்கை,
கல்லறை நின்று உயிர்த்தாரே,
இதோ, உமக்கு முன்னாலே
செல்வர் கலிலேயாவிற்கே.

மரித்தோர் நின்று உண்மையிலே
கிறிஸ்து உயிர்த்தது யாமறிவோம்.
வெற்றிகொள் வேந்தே, எம்மீது
நீரே இரக்கங் கொள்வீரே.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்‌ மன்றாட்டுகள்‌

1. எம்தாய்த் திருஅவையை வழிநடத்தும்‌ திருத்தந்தை, ஆயர்கள்‌, குருக்கள்‌ அனைவருக்கும்‌ உமது ஆசியை அளித்தருளும்‌. அவர்கள்‌ உமது உயிர்ப்பின்‌ செய்தியைத் தங்கள் வாழ்வாலும்‌, போதனையாலும்‌ மக்களுக்கு அறிவிக்க வேண்டிய அருளைத்‌ தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.

2. அன்பு இறைவா ! உமது உயிர்ப்பில்தான்‌ எங்களது விசுவாசம்‌ பொருளுள்ளதாய்‌, உயிருள்ளதாய்‌ இருக்கிறது என்பதை நாங்கள்‌ உணர்கிறோம்‌. எங்களது அன்றாட வாழ்க்கையில்‌ வரும்‌ துன்ப துயரங்கள்‌, வேதனைகள்‌, சுமைகளை நிறைவாக ஏற்றுக்கொண்டு உம்மில்‌ நம்பிக்கை கொண்டு, இலட்சியத்தோடு போராட உமது உயிர்ப்பில்‌ நாங்களும்‌ பங்குபெற வரம்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்‌. 

3. எங்களது துன்பத்தில்‌ பங்கெடுக்கும்‌ இறைவா ! துயருறுவோர்‌ யாவருக்காகவும்‌ செபிக்கிறோம்‌. துன்பத்தின்‌ மூலமே ஒருவர்‌ இன்பத்தை அடைய முடியும்‌ என்பதை உமது உயிர்ப்பின்‌ மூலம்‌ நாங்கள்‌ உணர்ந்து வாழவும்‌, பிறரது துன்பங்களில்‌ பங்கெடுத்து அவர்களில்‌ இரண்டறக்‌ கலந்து, உமது உண்மை அன்பை செயலில்‌ காட்டும்‌ மாமனிதர்களாக வாழ்ந்திட வரம்தர உம்மை மன்றாடுகிறோம்‌.

4. வெற்றியின்‌ நாயகனே இறைவா ! உம்‌ மகன்‌ இயேசுவின்‌ உயிர்ப்பினால்‌ எம்பங்கு மக்கள்‌ யாவரும்‌ ஒளிபெற்று, ஒருவரை ஒருவர்‌ அன்பு செய்து, விட்டுக்‌ கொடுத்து ஏற்றுக்‌ கொண்டு, உமது மதிப்பீடுகளின்படி வாழ வரம்‌ தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்‌. 

நன்றி: இனிய தோழன்

No comments:

Post a Comment