Thursday, December 27, 2018

ஆண்டின் இறுதிநாள் - டிசம்பர் 31 - நினைத்துப் பார் நன்றி சொல்


ஆண்டின் இறுதிநாள்

நினைத்துப் பார்! நன்றி சொல்!

 

அருள்பணி  இ.லூர்துராஜ்

( ஆண்டின் இறுதிநாள் நன்றி வழிப்பாட்டிற்கான சிந்தனைத்தொகுப்பு)

“நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர் தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர்” (தி.பா.50:23).

இதோ இந்தத் தென்னை மரத்தைப் பாருங்கள். நாம் இதன் வேரிலே தண்ணீரை ஊற்றுகிறோம். கழிவு நீரைக் கூடக் கொட்டுகிறோம். அப்படி நாம் எந்தத் தண்ணீரை விட்டாலும் இம்மரம் சுவை மிகுந்த இளநீரைத் தரும் நன்றியைப் பார்த்தீர்களா?

நாம் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் நமது செப் வழிபாட்டை இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி என்று நிறைவு செய்வோம். நமது பிரிந்த கிறிஸ்தவ சகோதரர்களோ தி.பா.103:2,3 வரிகளோடு முடிப்பர் - அவர்கள் தமிழில் “என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி" என்று. நமது மொழி பெயர்ப்பில் "என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு... அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே”.

எல்லாச் சூழ்நிலைகளிலும் என்ன நேர்ந்தாலும் “நினைத்துப் பார் நன்றி சொல்” (Count your blessings). நன்றி உணர்வு என்பது உப்புப்போல வாழ்க்கைக்குச் சுவையூட்டும். கெடுதல் செயல்பாட்டால் மட்டுமல்ல, செயலின்மையாலும் நேரும்.

போடப்படாத உப்பு உணவைக் கெடுக்கும்.
சொல்லப்படாத நன்றி வாழ்வைக் கெடுக்கும்.


இயேசு தனது மீட்புச் செயல் ஒவ்வொன்றிலும் தந்தையான கடவுளின் அன்புக்கு, வல்லமைக்கு, வாக்கு மாறாத் தன்மைக்கு சாட்சியாக நின்று நன்றி பகர்ந்தார். "இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார்” (யோ.6:11)


செக்கரியாவின் பாடலில் நமது நன்றியுணர்வு

வாசகம்: லூக்.1:67-79. 


திருமுழுக்கு யோவானின் பெயர் சூட்டும் விழா செக்கரியாவுக்கு நன்றியின் நாளாகும். காலம் பல கடந்தாலும் கடைசியில் அவரது மன்றாட்டுக் கேட்கப்பட்டது. ஒரு மகனுக்குத் தந்தையாகிறார். யோவான் என்ற பெயரைத் தெரிவு செய்வதில் கூட இறையாற்றல் எப்படிச் செயல்படுகிறது! “அப்பொழுதே அவரது வாய் திறந்தது. நா கட்டவிழ்ந்தது. அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்” (லூக்.1:64) தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்காய் பொங்கி வழிகிறது புகழ்ச்சிப் பாடல்: கடவுள் மனிதனுக்குத் தந்த மிகப் பெரிய கொடை மீட்பு. மீட்பு என்ற ஒரு சொல்லை வைத்து எத்தனை கோணங்களில் - அதையும் தன்னை முன்னிருத்தி ஒருமையில் அல்ல, நம்மையும் இணைத்துப் பன்மையில் - நன்றியை வெளிப்படுத்துகிறார்!

1. ஆண்டவர் தரும் மீட்பு கட்டுக்களினின்று நம்மை விடுவிக்கிறது.

எனவே ஆண்டவரை நன்றி கூறிப் போற்றுவோம். "ஏனெனில் அவர்தம் மக்களைத் தேடி வந்து விடுவித்தருளினார்" (லூக்.1:68) மீட்பு என்பது கடவுளின் செயல். இந்த விடுதலை பாவத்தின் கட்டுக்களிலிருந்தும், பேயின் பிடியிலிருந்தும் நாம் பெறும் ஆன்மீக விடுதலை. தன் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தடையாக நின்ற தன் பகைவர்களைக் கூட செக்கரியா நினைத்திருக்கலாம். “நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்” (லூக்.1:71) 
 

2. ஆண்டவர் தரும் மீட்பு நம் பாவங்களை மன்னிக்கிறது.

எனவே ஆண்டவரை நன்றி கூறிப் போற்றுவோம். தன் மகனைக் குறித்துச் சொல்வார்: "பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன் செல்வாய்" (லூக்.1:77), திருமுழுக்கு யோவான் மீட்பவர் அல்ல, மீட்பின் செய்தியைப் பறைசாற்றுபவர். “இதோ கடவுளின் செம்மறி. இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்" (யோ.1:29) என்று இயேசுவை அறிமுகம் செய்பவர்.

3. ஆண்டவர் தரும் மீட்பு நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.

எனவே ஆண்டவரை நன்றி கூறிப் போற்றுவோம். “இருளிலும் இறப்பின் நிழலிலும் இருப்போர்க்கு ஒளிதர... விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது" (லூக்.1:78). அவநம்பிக்கை என்னும் இருளில் உழல்வோருக்கு நம்பிக்கைத் தீபம் ஏற்றும் உலகின் ஒளியன்றோ இயேசு! 

4. ஆண்டவர் தரும் மீட்பு நமக்கு அமைதியைத் தருகிறது.

எனவே ஆண்டவரை நன்றி கூறிப் போற்றுவோம். "நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்ய” (லூக்.1:79) இதுவே விண்ணிலிருந்து வந்த விடியலின் நோக்கம் என்கிறார் செக்கரியா. "என் அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. உள்ளம் கலங்க வேண்டாம்" (யோ.14:27)

செக்கரியாவுக்குக் கடவுள் இறைவாக்கினராக ஒரு மகனை, நல்ல ஒரு மனைவியை, நீடிய வாழ்வை எல்லாம் கொடுத்திருக்கிறார். ஆனால் அனைத்தையும் விட மீட்பையே மிகப்பெரிய கொடையாகக் கருதினார். அந்த மீட்புத் தரும் பாவக் கட்டிலிருந்து விடுதலை, பகைவரின் பிடியினின்று விடுதலை, பாவ மன்னிப்பு, நம்பிக்கை, அமைதி... இப்படிப் பல்வேறு நலன்களைக் கடந்து செல்லும் இந்த ஆண்டில் எப்படியெல்லாம் அனுபவித்திருக்கிறோம்!.

நன்றி சொல்ல வேண்டும் என்ற மனம் மட்டும் இருந்தால் அதற்கான வாய்ப்புக்கள் வந்து கொண்டே இருக்கும். நல்லவற்றுக்கு மட்டுமல்ல, சோதனைகள், தோல்விகள், ஏமாற்றங்கள், இல்லாதவைகள், நோய்கள், பலவீனங்கள்... இவற்றுக்குக்கூட நன்றி செலுத்தலாம்.

திருத்தூதர் பவுல் 2கொரி.12:10ல் சொல்வதை நினைத்துப் பார்ப்போம். “ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்"

No comments:

Post a Comment