Friday, December 21, 2018

கிறிஸ்து பிறப்பு பெருவிழா- மூன்று வேளை திருப்பலிகள்

                                     
கிறிஸ்து பிறப்பு பெருவிழா


 இன்றைய நாளில் நடைபெறும் மூன்று திருப்பலிகளுக்கான வாசகக்குறிப்புகள், முன்னுரைகள் மற்றும் மன்றாட்டுகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

கவனமாக தேவையான திருப்பலிக்கானவற்றைத் தேர்வு செய்துக்கொள்ளவும்.



நள்ளிரவுத் திருப்பலி வாசகங்கள்

 
I. எசாயா 9:2-7
II. தீத்து 2:11-14
III. லூக்கா 2:1-14


திருப்பலி முன்னுரை:

நமக்காக ஒரு பாலன் பிறந்துள்ளார்,
இருள் சூழ்ந்த பனிப் பெய்யும் இரவு உள்ளத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் உவகையும் பொங்கிடும் இவ்வேளையில் கிறிஸ்து பிறப்புக் கொண்டாடங்களில் கலந்து கொள்ள வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
திருவருகைக்காலத்தில் நான்கு வாரங்களாக இயேசுவின் பிறப்பு விழாவிற்கு நம்மையே நாம் தயாரித்து வந்துள்ள இந்நேரத்தில் இப்பிறப்பு நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கும் கருத்து அன்பின் பகிர்தலே! எளிமையான இடத்தில் மீட்பராம் கிறிஸ்து ஏன் பிறந்தார்? இயேசு கிறிஸ்து, தான் மீட்க வந்த மக்களுடன் நிரந்தரமாகத் தங்க வந்தக் காரணத்தினால் அவர் விடுதியில் பிறக்கவில்லை, தொழுவத்தில் பிறந்தார். தீவனத்தொட்டி என்பது கால்நடைகள் தீனிப் பெற இருக்கும் சிறு தொட்டி. ஆனால் அஃது தரும் சிந்தனையாவது, இயேசுகிறிஸ்து உலகின் உணவாக வந்தார் என்றும், உலக மக்கள் அனைவரும் உணவுப் பெற, குறிப்பாக ஆன்மீக ஊட்டம் பெற உலகில் பிறந்தவர் தீனத்தொட்டியில் கிடத்தப்பட்டார் போன்ற பல சீரிய ஆழ்ந்தக் கருத்துகளை லூக்கா இன்றைய நற்செய்தியில் விளக்குகிறார். ஆகத் தன்னையே இவ்வுலகமக்களுக்குப் பகிர்ந்தளித்த இறைமகனுக்கு நம் பகிர்வு என்ன?

துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில் கிடத்தியிருக்கும் குழந்தையின் அரசத்துவத் தன்மையையும், உலகின் உணவாக விளங்கும் மீட்பர் தன்மையையும் உணர்ந்து இன்று நமக்கு அடுத்திருப்பவர்களுடன் அன்பைப் பகிர்ந்து அனைவருடன் நல்லுறவை வளர்த்து இறைசாட்சியாக வாழ்வதுதான் பாலன் இயேசுவுக்கு நமது நன்றியாக அமையும். இன்றைய கொண்டாடங்களில் இயேசுவை மையமாக இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு நம்பிக்கை, அன்பு, அமைதி, மகிழ்ச்சி இவற்றால் இயேசுவின் வருகையில் நிறைவாழ்வடைய இத்திருப்பலியில் கலந்திடுவோம்.
நமக்கு ஒரு பாலன் பிறந்துள்ளார். வாரும் ஆராதிப்போம்!


வாசக முன்னுரை-



முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் காண இறைவன் தரும் எல்லா நலன்களையும் எடுத்துரைக்கின்றார். பேரொளியைக் காணச் செய்து மகிழ்ச்சியுறச் செய்தார். அவர்களின் சுமைகளை நீக்கினார். அவர்களை ஆட்சி செய்ய ”வியத்தகு ஆலோசகர், அமைதியின் அரசரைக் கொடுத்துத் தன் மக்களுக்கு நிலையான, நீதியோடும். நேர்மையோடும் கூடிய ஆட்சியை உறுதிப்படுத்தினார் என்று மகிழ்ந்து எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.



இரண்டாம் வாசகம் முன்னுரை


இன்றைய இரண்டாம் வாசகத்தில் நம்மை தேடிவந்த இயேசுவின் அருளால் நாம் இவ்வுலக வாழ்வின் நாட்டங்களிலிருந்து விடுபடவும், எல்லா நெறிகேடுகளிலிருந்து நம்மை தூய்மைப்படுத்தி நம் அனைவரையும் தமக்குறியவராய் மாற்ற தம்மையே ஒப்படைத்த்த் தியாகத்தை வியந்து கூறும் திருத்தூதா பவுலடியின் வார்த்தைகளை கேட்டு மனதில் பதிவு செய்வோம்


பதிலுரைப்பாடல்
திருப்பாடல் 96: 1-2,2-3,11-12,13

பதிலுரை: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா!

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; -பல்லவி
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.  பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -பல்லவி
ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி

மன்றாட்டுகள்.
1.எங்கள் வாழ்வின் மீட்பராக இயேசு கிறிஸதுவைக் கொடுத்த எம் இறைவா! உலகமாந்தர்கள் அனைவருக்கும் நலமும், அமைதியும், மகிழ்ச்சியையும் அளித்து ஒரே மந்தையாய் உம் திருஅவையின் வழிநடத்தும் அனைத்துத் தலைவர்களுக்கும் உமது அருட்பொழிவை நிறைவாய் பொழிந்துப் பாதுகாத்து, எம்மை வழி நடத்திச் செல்லத் தேவையான வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2 ஏழ்மையில் இனிமைக் காணும் நாயகனே எம் இறைவா! இவ்வருடத்தின் இறுதிநாள்களில் இருக்கும் எங்கள் பல்வேறு இயற்தைசீற்றங்களும், புயல், கடும் வெயில், வறட்சி, விவசாயச் சாகுபடிப் பற்றாக்குறை, மழையின்மை போன்ற  இவை அனைத்திலிருந்து எங்கள் அனைவரையும் காத்து, பராமரித்து, உம் அன்பில் நிலைத்து நிற்க, உம் பணியைத் தொடர்ந்து ஆற்றிடத் தேவையான அருளைப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. குணப்படுத்தும் வள்ளலே எம் இறைவர்! இன்று உருவாகும் அநேக புதிய நோய்கள், அந்த நோய்களின் நிமித்தம் பாதிக்கப்பட்ட எம் முதியோர்கள் , சிறுவர் சிறுமிகள், அநாதைகள் , கைவிடப்பட்டவர்கள் இவர்கள் அனைவரும், உம் அன்பின் கரம் கொண்டு ஆசீர்வதித்துப் பாதுகாத்து, உடல், உள்ள, ஆன்மீக நலம் பெற்று உம் சாட்சிகளாய் வாழ வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. விடுதலையும் வாழ்வும் கொடுக்க இறங்கி வந்த எம் இறைவா! இன்று எம் உலகில் உம் பிறப்பிற்காகவும், புதிய ஆண்டில் நல்வரவிற்காகவும் காத்திருக்கும் அனைத்து மாந்தருக்கும் பழமையைக் களைந்துப் புதிய சிந்தனைகள், ஒருவர்  மற்றவருக்கு உதவக்கூடிய பிறன்புச் சிந்தனைகளைப் பொழிந்து நல்லுலகம் காணவும், உமது பிறப்பின் வழியாக ஏழை எளியவர்கள் வாழ்வ வளம் பெறத் தேவையாக அருள் வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.திருக்குடும்ப நாயகனே என் இறைவா! இன்றைய உலகம் பல்வேறு அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்நாட்களில் குடும்பங்களில் ஏற்படும் உறவின் விரிசல்களிலிருந்து விடுபட்டு, மனிதர்கள், மனிதர்களோடு பேசக்கூடிய நிலைமாறிக் கைப்பேசி, தொலைதொடர்புச் சாதனங்கள்  தான் முக்கியமானவை என்ற சிந்னைகளோடு நில்லாமல், இவற்றைக் கடந்து இவையெல்லாம் நம்வாழ்வின் ஓர் அங்கம் தான் என்ற உண்மை நிலையை உய்துணர்ந்து வாழ உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




விடியற்காலத் திருப்பலி


இன்றைய வாசகங்கள்I.
I.எசாயா 62:11-12
II. தீத்து 3:4-7
III. லூக்கா 2:15-20


பகல் திருப்பலி

இன்றைய வாசகங்கள்
I.எசாயா 52:7-10
II. எபிரேயர் 1:1-6
III.லூக்கா 2:15-20


திருப்பலி முன்னுரை:



விடியற்காலையில் பனிகொட்டும் இவ்வேளையில் (வாடைக்காற்று வீசும் இளம்காலை பொழுதில்) இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!

இன்று நமக்கோர் பாலன் பிறந்துள்ளார். கடவுளின் இரக்கப்பெருக்கின் கொடையாக நமக்கு மீட்பு என்றும் வெற்றி பரிசுக் கிடைத்துள்ளது. மனிதர்களின் மீட்புக்காக, நலனுக்காக, தன்னையே வழங்கவந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்தில், நம்மையே அடுத்தவருக்கு வழங்கும் வழிகளை நாம் இயேசுவே கற்றுத்தந்துள்ளார். அவரின் செயல்களின் என்றும் மிஞ்சி நிற்பது கடவுளின் பேரிரக்கமும், நன்மைத்தனமும், மனிதநேயமும் ஆகும். ஆம் இந்நாள்களில் மனிதநேயத்தின் மற்றோரு பரிமாணமான அன்பின் பகிர்வை அடுத்திருக்கும் வறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரிடமும் உறவின் வாழ்த்துகள் மூலமும், உதவிகள் மூலமும் வெளிப்படுத்துவோம். உண்மையில் இன்று நம் உள்ளங்களில் வந்து பாலன் இயேசு பிறப்பதற்கு இந்நற்செய்ல்கள் வழிவகுக்கும்.!

இறைமகனின் அன்பின் பகிர்வாம் இத் திருப்பலிக் கொண்டாடத்தில் இடையர்கள் போல் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துப் பாடி உளமாறக் கலந்து கொண்டு இறைமகன் பாலன் இயேசுவின் அருளைப் பெற்றிடுவோம்.




(விடியற்காலத் திருப்பலி)



முதல் வாசக முன்னுரை:-
 
இன்றைய முதல் வாசகத்தில் எசாயா கடவுளின் அளவற்ற அன்பைப் பற்றிப் பெருமையுடன் மகிழ்ந்து அறிக்கையிடும் செய்திகளைக் காணலாம். ஆண்டவரின் வெற்றிப் பரிசாக மீட்பு வருகின்றது. நீயோ, தேடிக்கண்டுபிக்கப்பட்டவள் என்றும் இனி கைவிடப்படாத நகர் என்றுரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.



பகல் திருப்பலி:-

முதல் வாசக முன்னுரை:-

 இன்றைய முதல் வாசகத்தில் எசாயா ஆண்டவரின் வாக்களித்த மீட்பு - மெசியா இவற்றைப் பற்றி பெரும் மகிழ்ச்சியுடன் செய்த பதிவுகளை காணலாம். ஆண்டவரின் செய்தியை அறிவிக்கவருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்தணை ஆழகாய் இருக்கின்றன என்று வருணிக்கும் எசாயா இடையர்களை எண்ணிதான் இப்படி சொல்லிருப்பரோ!  ”ஆண்டவர் வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். பிறஇனத்தரும் இதை காண்பர்.” எசாயாவின் மசிழ்ச்சியை நாமும் நாம் உள்ளத்தில் பகிர்ந்துகொள்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:-

(விடியற்காலத் திருப்பலி)

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசு கொணர்ந்த புதுபிறப்பாலும் தூயஆவியாலும் நிறைவாய் அளிக்கவிருக்கும் நிலைவாழ்வை உரிமை பேறாகப் பெற்றுக் கொள்ளப்போவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


பகல் திருப்பலி:-

இரண்டாம் வாசக முன்னுரை:-

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசுவின் பெருமை அருமைகளை எடுத்துரைக்கின்றார். இறைவாக்கினர்கள் மூலம் பேசி வந்த கடவள்  தன் மகன் மூலம் நம்மிடம் பேசியுள்ளதையும், அவர் தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். வானத்தூதர்களை விட மேன்மையானவர். என்று அவரின் மாட்சிமையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


மன்றாட்டுகள் மூன்று திருப்பலிகளுக்கும் பொதுவானது.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துகள்! 


அன்பின் மடலின் கிறிஸ்த பிறப்பு பெருவிழா சிறப்பிதழைப் பார்வையிட அன்புடன் அழைக்கிறோம்.

1 comment:

  1. I wish you a merry Christmas and Prosperous New Year... Thank you very much for this wonderful service. every week i get mass introduction and we use it regularly.I assure you my prayer.

    ReplyDelete