Thursday, December 20, 2018

திருவருகையின் நான்காம் ஞாயிறு

 திருவருகையின் நான்காம் ஞாயிறு






இன்றைய நற்செய்தி வாசகங்கள்.



மீக்கா  5:1-4
எபிரேயர் 10:5-10
லூக்கா 1:39-45

திருப்பலி முன்னுரை:



இன்று  திருவருகையின் நான்காம் ஞாயிறு. இந்த ஞாயிறை அன்பின் ஞாயிறு என்ற அழைக்கின்றோம்.

இறைவனைத் தேடியவர்கள் மரியாவும், எலிசபெத்தும்... அவர்களுக்கு இறைவன் வெகுவாகத் தேவைப்பட்டார். குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த எலிசபெத்து, தன் சொந்த வாழ்வின் குறையைத் தீர்க்க இறைவனை இரவும் பகலும் தேடினார். இறைவனிடம் வேண்டினார். மரியா என்ற இளம்பெண்ணும் இறைவனைத் தேடினார். தன் சொந்தத் தேவைகளைக் காட்டிலும், சமுதாயத்தின் தேவைகளுக்காக அவர் இறைவனிடம் வேண்டினார். இறைவன் நம் வாழ்வில் செயலாற்றும் அழகை, இவ்விரு பெண்களின் வாழ்க்கை மூலமாக நமக்குக் கூறுகிறதே இன்றைய நற்செய்தி வாசகம்.

இவ்விருவருக்கும் இடையே நிகழ்ந்த அச்சந்திப்பு ஒருவரை ஒருவர் வாழ்த்துவதிலும், ஆசீர்வதிப்பதிலும், இறைவனைப் புகழ்வதிலுமே நிறைந்தது. எலிசபெத்து மரியாவைப் புகழ்ந்த மொழிகள் மனிதர் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய, சொல்லவேண்டிய அழகான ஆசி மொழிகள்... "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" நாம் ஒவ்வொருவரும் தினமும் மற்றவர்களை உள்ளார்ந்த அன்பில் வாழ்த்தினால், ஆசீர்வதித்தால் இந்த பூமியில் எவ்வளவு நலம் வளரும்! பிறரை வாழ்த்தும்போது, ஆசீர்வதிக்கும்போது நாமும் வாழ்த்தப்பெறுகிறோம், ஆசீர் பெறுகிறோம்.

எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி நமது முழு நம்பிக்கையை நாம் கடவுள் மீது வைப்போமானால், நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு அதிகமான மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தந்து கடவுள் நம்மை வியப்பில் ஆழ்த்திடுவார் என்பது திண்ணம். அரும்பெரும் செயல்களை நமக்கு செய்வதற்காகவே கடவுள் வருகிறார். இதனை உணர்ந்தவர்களாக இத்திருப்பலியில் இறையருள் வேண்டிடுவோம்.

வாசக முன்னுரை:



முதல் வாசக முன்னுரை:



இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மீக்கா இஸ்ரயேல் மக்களைப் புதிய நம்பிக்கைக்கு அழைக்கின்றார். அரண்களின் நகரமாகவும் மக்களின் வழிபாட்டு மையமாகவும் இருந்த எருசலேமை இறைவன் ஒதுக்கிவிட்டு, ஒரங்கட்டப்பட்ட, சிறியதாய் இருந்த  பெத்லகேம்மைத் தேர்ந்தெடுத்துள்ளார் மெசியா தோன்றுவதற்கு!  இவ்வாறு மக்கள் அச்சமின்றி வாழ்வர் என்று அறிக்கையிடும் இவ்வாசகத்தை கேட்டு நம் இதயகுடிலில் இறைஇயேசுவை வரவேற்கத் தயார் ஆவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:



கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மரியா நம்பினார். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை தான் தன்னில் இறைமகனைத் தாங்கிக் கொள்ள வைத்தது. மரியாவைப் போலவே இயேசுவும் இறைதந்தையின் திட்டத்திற்கு ஆகட்டும் என்று சொன்னதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் நினைவு கூறுகிறார். இவ்வாசகத்தை கேட்டு நம் இதயகுடிலில் இறைஇயேசுவை வரவேற்கத் தயார் ஆவோம்.

பதிலுரைப் பாடல்


திபா 80: 1-2. 14-15. 17-18

பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.
இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! -பல்லவி

படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! -பல்லவி

உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.


எல்லாம் வல்லஇறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உலக மீட்பரின் வருகையை எல்லோருக்கும் அறிவிக்கவும், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களை அதற்காக ஆயத்தப்படுத்தவும் தேவையான அருளைத் தரமாறு உம்மை மன்றாடுகிறோம்.

வல்லக் கடவுளாகிய ஆண்டவரே! வியாதி, வறுமை, வருத்தம் ஆகியவகையால் வாடுவோர் அனைவரும் கிறிஸ்துவின் வருகையால் உடல் நலமும், மன நலமும் பெறவும், எளியோர் நற்செய்தி கேட்டிடவும், உள்ளம் உடைந்தோர் மன ஆறுதல் பெற்றிடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுவோம்.

அனைவரையும் தேற்றுபவரை எம் இறைவா! எம் இளைஞர், இளம் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் கிறிஸ்துமஸ் விழாவை தூய உள்ளத்துடன், கிறிஸ்துவ, மனமகிழ்ச்சியோடும் கொண்டாட அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எம்மை தேடிவந்த தெய்வமே! என் இறைவா! உமது முதல் வருகையை நினைவுகூர்கின்ற நாங்கள் அனைவரும், உமது விண்ணக வருகைக்காக எம்மைத் தகுந்த விதமாகத் தயாரிக்க அருள்புரியும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் இறைவா! மரியாளைப் போல நாங்களும் அடுத்தவர் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு எல்லாவித உதவிகளையும் எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் உள்ளார்ந்த அன்போடு செய்திட நல்ல மனதைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

No comments:

Post a Comment