Thursday, December 24, 2015

திருக்குடும்பப் பெருவிழா வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். -27/12/2015

திருக்குடும்பப் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.



1 சாமுவேல் 1:20-22,24-28
யோவான் 3:1-2,21-24
லூக்கா 2:41-52


முன்னுரை:

குடும்பம் ஒரு கோவில். அதில் கணவனும் மனைவியும் தீபங்கள். அந்தத் தீபத்தின் ஒளிதான் குழந்தைகள். இவ்வாறு அனைவரும் ஒன்றுபட்டு ஒளிமயமான  வாழ்வை உருவாக்க நமக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகத் திருக்குடும்பம் அமைந்திருக்கிறது. குழந்தை என்னும் பயிர் வளமாக வளர வேண்டுமென்றால் அதன் விளைநிலமான குடும்பம் உருப்படியாக இருக்க வேண்டும். எனவே நமது குடும்ப வாழ்வை இன்றைய இறைவார்த்தையின் ஒளியில் சிந்திப்போம்.

கணவன் மனைவி பிள்ளைகள் என்ற மூன்று சக்திகளும் அன்பில் சங்கமிக்கும் ஆலயம். அந்தச் சக்தியை உற்பத்தி செய்கிறவர் இயேசுகிறிஸ்துவே. வசதிகளையும் செல்வங்களையும் சோப்பது அல்ல. மாறாக பாசங்களையும், உறவுகளையும் சேர்ப்பதுதான் குடும்பம். இதற்கு அடிப்படை தேவை ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, இரங்கும் உள்ளம் இத்தகைய உயரிய பண்புகளை நம் உள்ளத்தில் கொண்டு நம் குடும்ப வாழ்வைத் தொடர இத் திருக்குடும்பப் பெருவிழா திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:



இன்றைய முதல் வாசகம் ஒன்று சாமுவேல் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அன்னா ஆண்டவரிடம் கேட்டு பெற்றுக் கொண்ட தன்  மகன் சாமுவேலை இறைவனுக்கு மீண்டும் அவரிடமே ஒப்படைக்கின்றார்.  தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன் மகனுடன் காணிக்கைகளுடன் இறைசன்னதிக்கு வந்து நன்றியோடு சாமுவேலை ஆண்டவருக்கே அர்ப்பணித்தார் என்ற இந்த இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை எடுத்துரைக்கும் திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் இவ்வாசகத்தைக் கவனமுடன்  செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 128: 1-2,3,4-5

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்.

1.ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!  உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். -பல்லவி

2.உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். -பல்லவி

3.ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! –பல்லவி

மன்றாட்டுகள்:


1.உம் திருக்குடும்பம் வழியாக எமக்கு வழிகாட்டிய  இறைவா! திருபேரவையாம் இத்திருச்சசபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை,
ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரின் உள்ளத்தில் உமது அன்பையும், பரிவிரக்கத்தையும் நிறைவாய் பொழிந்து ஒற்றுமையுடனும், அமைதியுடனும் இறையரசை அறிவிக்கும் கருவிகளாய் வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 

2.கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா!  எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து,  எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3.ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க ஏழைப்போல் பிறந்த இயேசுவே, உமது பிறப்பின் மகிழ்ச்சியை எங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களோடும் குழந்தைகளோடும் பகிர்ந்து கொள்ளவும், மழையினாய் அவதியுறும் மக்களுடன் பணிபுரியவும், அவர்களின் வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திட  உதவிடவும் வரமருளு வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.


4. அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா! இந்த நல்ல நாளில் கணவன் மனைவி பிள்ளைகள் என்று மகிழ்வுடன் வாழ, இவ்வலகில் எதிர்நீச்சல் போட்டு அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த வரம் அருள் தரம் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Tuesday, December 22, 2015

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். -25/12/2015

                                         கிறிஸ்து பிறப்புப் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
விடியற்காலைத் திருப்பலி

முன்னுரை:

கடவுள் மனிதனைத் தேடிவந்த திருநாள் தான் கிறிஸ்துமஸ் பெருவிழா. எனவே பாலன் இயேசுவின் வருகையால் பூவுலகம் களிகூர்கின்றது. பாவத் தளையில் சிக்குண்ட மனிதனை மீட்டு அவனுக்குப் புதுவாழ்வை வழங்க பாலன் இயேசு இப்பாரினில்  பிறந்த நாள்! நமது கிறிஸ்மஸ் விழாக் கொண்டாட்டத்தில் கிறிஸ்து மையமாக இருக்கிறாரா? கிறிஸ்து தான் கிறிஸ்மஸ் விழாவின் மையம். "கடவுள் நம்மோடு" இது தான் கிறிஸ்மஸ் விழாவின் மையக் கருத்து. ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்தக் கிறிஸதுவைக் கண்டுகொள்கிறோம் என்பது கேள்விக்குறியே?


அன்பர்களே! இன்று கிறிஸ்து பிறப்பின் விழாவை அகிலமே கொண்டாடி மகிழ்கின்றது. இந்த மகிழ்ச்சி யாருக்காக? ஏன்? எதற்காக? சற்று  சிந்திப்போம். நமக்கு வாழ்வைக் கொடுக்க வந்த தெய்வம் இயேசு. நம்மை வாழ வைக்கும் தெய்வம் இயேசு. எனவே அத்தகைய  இயேசுவிக்கு நம் வாழ்வில் முதலிடம் கொடுக்கின்றோமா? அல்லது அவரை நாம் வாழ்விலிருந்து ஒதுக்கி விடுகின்றோமா? என்பதை  சிந்தித்துப் பார்த்து  நம்மையே முழுமையாகத் தயாரிக்க இன்றைய அருள்வாக்குகள் நம்க்கு துணைபுரிகின்றன. இதனை மனதில் பதிவுச் செய்து கிறிஸ்து பிறப்புப் பெருவிழா திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டு மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் சீயோனிலிருந்து மீட்பு வருகிறது. அதன் மக்கள் ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று கூறும் இறைவாக்கினர் எசாயாவின் மீட்பைப் பற்றி நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளின் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூயஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். இதற்காகவே கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டன என்று திருத்தூதர் பவுல் நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வைப் பற்றி கூறும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல் 
திபா 97: 1,6,11-12
பல்லவி: பேரோளி இன்று நம்மேல் ஒளிரும் ஏனெனில் நமக்காக ஆண்டுவர் பிறந்துள்ளார்.

1.ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவுநாடுகள் களிகூர்வனவாக! வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. -பல்லவி

2.நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். -பல்லவி

மன்றாட்டுகள்:

1.மாபெரும் மகிழ்ச்சியை உம் மகனின் பிறப்பு வழியாக எமக்கு தந்த இறைவா! கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் மகிழ்ச்சி எம் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் என்று உலகமக்கள் அனைவரின் உள்ளத்தில் உண்மையான மகிழ்ச்சியையும், அமைதியையும் நிறைவாய் நிலைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.இடையர்களுக்கு உம் முதல் தரிசனத்தை காணும் பாக்கியத்தை கொடுத்த இறைவா!  நாங்களும் அவர்களைப் போல் எங்கள் வாழ்க்கையில் உமது வார்த்தைகளில் நம்பிக்கைக் கொண்டு அன்பு, இரக்கம், மனிதநேயம் கொண்டவர்களாக வாழவும்,  அவர்களைப்  போல் உமது அரசை பறைச்சாற்றவும் வேண்டிய  ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.மாட்டுதொழுவத்தில் பிறந்து உமது எளிமையை எமக்கு எடுத்துரைத்த இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ளவர்கள் இறைஅன்பும்,  இறைஅச்சமும் நிறைந்தவர்களாகவும், நேர்மையும், கட்டுப்பாட்டும் கொண்டவர்களாக உம் கரம் பற்றி வாழ வரந்தர வேண்டுமென்று  ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம். 

4. அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா! இந்த நல்ல நாளில் எமக்கு அடுத்திருப்போர்களின் தேவைகளை  உணர்ந்து அவர்களுக்கு தேவையான அன்பும், ஆதரவும், அடைக்கலமும், பொருளாதர வசதிகளை செய்து தர வேண்டிய நல்ல மனதை  தந்து இந்த கிறிஸ்மஸ் பெருவிழாவை அர்த்தமுள்ளதாய் கொண்டாட வேண்டிய வரம் அருள் தரம் வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.

அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்

Thursday, December 10, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். -13/12/2015

திருவருகைக் காலம் 3 ஆம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

செப்பனியா 3:14-17
பிலிப்பியர். 4:4 -7
லூக்கா 3:10-18


முன்னுரை:


இன்று திருவழிபாட்டு ஆண்டின் மூன்றாம் ஞாயிறு.  இந்த ஞாயிறை மகிழ்ச்சியின் ஞாயிறு என்ற அழைக்கின்றோம். ஏனென்றால் இயேசுவின் பிறப்பு விழா நெருங்குவதால் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. அந்த மகிழ்ச்சியை நிபந்தளைகளோடு இறைவன் தருவதில்லை. மாறாக, அவருடைய வருகை நம்மிலே நிபந்தனைகளற்ற நிலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதைத்தான் இன்றைய அருள்வாக்குகளும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

பேரிடராய் வந்த பெரும் மழை ஒரே இரவில் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. மக்களின் மனதில் ஏற்பட்ட மாற்றம் திருமுழுக்கு யோவான் சொன்னது போல இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு பகிர்ந்ததையும், முடியாதவர்களுக்கு முடிந்தவர்கள் ஓடி வந்து உதவியதை பார்க்கும்போதும் சோகத்திலும் ஓர் உண்மையான மகிழ்ச்சியைக் காணமுடிகிறது.
பகிர்வின் மகிமை வெளிப்பட்டது. இந்த பகிர்வுகளின் மகிழ்ச்சியும், ஈடுபாடும்  நம் வாழ்வில் துன்பதுயர நேரங்களில் மட்டும் இல்லாமல் எப்போதும் தக்க வைத்துக் கொள்ள நம் சுயநலங்களை மறந்து திருப்பலிக் கொண்டாட்டங்களில் மன்றாடுவோம்.


வாசகமுன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் “மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி இஸ்ரயேலே! ஆரவாரம் செய் இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கன்றார். அவர்கள் எதற்கும் ஆஞ்சவேண்டாம்” என்று இறைவனின் உடனிருப்பை எடுத்துரைக்கும்  இறைவாக்கினர் செப்பனியாவின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் “ஆண்டவரோடு இணைந்த என்றும் மகிழ்ங்கள். மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள் நன்றியோடு கூடிய  இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள்  விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். ஆண்டவர் அண்மையில் உள்ளார். கிறிஸ்தவர்கள்  கவலைகளை விட்டுவிட்டு அகமகிழ வேண்டும். அறிவையெல்லாம் கடந்து அமைதி  நம்மை ஆட்கொள்ளும் என்பதனை பிலிப்பியருக்கு எழுதியதைக் கவனமுடன்
செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்


எசா 12: 2-3, 4, 5-6


பல்லவி: ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; ஆண்டவர் சிறந்து விளங்குகின்றார்.

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். -பல்லவி

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். -பல்லவி

ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர்  மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக. சீயோனில்  குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். –பல்லவி


மன்றாட்டுகள்:


1.அன்பின் இறைவா திருவருகைக்காலத்தில் 3ஆம் ஞாயிறாகிய இன்று திருஅவையில் இருக்கும் மகிழ்ச்சி திருஅவையில் மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் அனைத்து மாந்தருக்கும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியின் நிறைவில் என்றும் நிலைத்து நிற்க பிறக்கும் பாலன் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.தந்தையே எல்லோரும் ஓன்றாய் இருப்பர்களாக என்னும் இறைவார்த்தையின் அடிப்படையில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் உலகளவில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும், அவர்களின் வேலைகள் சந்திக்கவும் உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.காலத்தில் அறிகுறிகளை அறிந்த எம் இறைவா மனிதனை இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்தையும் நீ ஆண்டு கொள்வாயாக என்ற கூறி படைப்பின் மேன்மையை உணர்த்தினீர். ஆனால் இன்று நாங்கள் இயற்கைக்கு எதிராக செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து இயற்கையை நாங்கள் நேசிக்கவும், பாதுகாக்கவும் இன்றைய தலைமுறையினருக்கு நல்ல தேசத்தை கொடுக்கவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா, மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. தோழமையின் நாயகனே எம் இறைவா! வரப்போகும் கிறிஸ்து பெருவிழாவை நாங்கள் வெறும் வெளி அடையாளங்களைத் தவிர்த்து, ஆடம்பரங்களை குறைத்து, ஆன்மீகத் தயாரிப்பில் எங்கள் கவனத்தைச் செலுத்தி சாதி மத பேதமின்றி உமது பிறப்பின் செய்தியை நற்செய்தியாக சான்ற பகிர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

visit www.anbinmadal.org