Thursday, August 27, 2020

பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு

 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

 

எரேமியா 20: 7-9 
உரோமையர் 2:1-2
மத்தேயு 16:21-27 முன்னுரை


அன்புடையீர்,
இன்று தத்தம் சிலுவைவைச் சுமந்து கொண்டு இயேசுவின் சீடர்களாய் பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறுத் திருப்பலியில் கலந்து கொண்டு, கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாகத் தங்களைப் படைக்க வந்துள்ள இயேசுவின் அன்பிற்குரியவர்களே! உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.


"நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று சொல்லிக் கிறிஸ்துவிடம் பாராட்டுப் பெற்ற திருத்தூதர் பேதுருவை என் கண்முன் நில்லாதே சாத்தானேஎன்று கடிந்து கொள்கின்றார் இறைமகன் இயேசு. தன்னைச் சிலுவையிலிருந்து பிரிக்க நினைத்த பேதுருவைக் கிறிஸ்து "சாத்தானே" என்று அழைத்தார். அன்று கிறிஸ்துவைக் கோபுரத்திலிருந்து குதிக்கச் சொன்னச் சாத்தான், அவரைக் கடைசியாகச் சிலுவையிலிருந்து இறங்கிவரச் சொன்னான். ஆனால் சிலுவையிலிருந்து கீழே இறங்கி வரவில்லை. மாறாகச் சிலுவையில் தொங்கி நம்மை மீட்டார். சிலுவையின் மூலம் விடுவிப்பார்.!.


கிறிஸ்து சிலுவையால் மாட்சிமை அடைந்தார். சிலுவையில் அவர் உயர்த்தப்பட்டார். சிலுவையிலிருந்து மாந்தர் அனைவரையும் தம்பால் ஈர்த்துக் கொண்டார். ஒவ்வொரு துன்பமும் நம்மைப் புடமிட்டுத் தூய்மைப்படுத்தி மாட்சிமை அடையச் செய்கிறது என்ற நம்பிக்கையில் பக்குவப்பட்டவர்களாய் இறைவார்த்தை நமக்கு உறுதியையும் ஊக்கத்தையும் தர இன்றைய திருப்பலியில் ஒருமனதோராய் மன்றாடுவோம்.


வாசகமுன்னுரை

 

முதல் வாசக முன்னுரை


விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல இறைவாக்கினர்கள் இறைவன் அளித்த இந்த ஆபத்தான பணியை ஏற்க மறுத்து ஓடி ஒளிந்தனர். ஆனாலும், அந்தப் பணியை நிறைவேற்றும்வரை இறைவன் அவர்களை விடவில்லை. இப்படி தன்னை இடைவிடாமல் துரத்தி வந்த இறைவனிடம், இறைவாக்கினர் எரேமியா ஆண்டவரே நீர் என்னை ஏமாற்றிவிட்டீர். நானும் ஏமாந்து போனோன் என்று பேசுவதை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
             

பதிலுரைப்பாடல்


திபா 63: 1. 2-3. 4-5. 7-8
பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. -பல்லவி

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
  ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -பல்லவி

என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
   அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். -பல்லவி


ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.  நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. -பல்லவி  

 

இரண்டாம் வாசக முன்னுரை


திருத்தூதர் பவுலடியார் இரண்டாம் வாசகத்திலே துன்பத்தைத் தாங்கிக் கொள்ள நமக்கோர் அற்புதமான வழியைக் காட்டுகிறார். கடவுளுக்கு உகந்த, துய, உயிருள்ள பலியாக உங்களை ஒப்புடையுங்கள் என்கிறார் பவுலாடியார். கிறிஸ்தவ வாழ்வுக்காக நம் உள்ளத்தை புதுப்பித்துக் கொள்ள அழைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.

மன்றாட்டுகள்

1. எங்களுக்கு விடுதலை அளிப்பவரே! எம் இறைவா! எம் திருத்தந்தை , ஆயர்கள், குருக்கள், துயவியர், பொதுநிலையினர் அனைவரும் உமக்குச் சாட்சியம் புரிய, உன்னத மக்களாகத் திகழ்ந்திட, திருஅவை எதிர்நோக்கும் சவால்களையும், துன்பங்களையும் ஏற்றுத் துணிவுடன் திருஅவையைப் பேணிக்காக்கத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. துன்பங்களை வென்ற நாயகனே, எம் இறைவா! துன்பங்களை நாம் கண்டு துவண்டுவிடாமல் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் உடல் உள்ள நலம் பெற்றவும், எம் பிள்ளைக்கு ஞானம், அறிவு, இறைநம்பிக்கை இவற்றை மேன்பட செய்து, அவர்கள் உமக்கு ஏற்புடைய நற்காரியங்களை மேற்கொள்ளத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3.அனைத்தையும் அமைத்தாளும் எம் இறைவா, இந்த தொற்றுநோய் காலத்தில் எங்கள் அருகிலிருக்கும் ஏழைகள், துன்புறுவோர், கைவிடப்பட்டோர், தனிமையில் வாழ்வோருக்கு நாங்கள் உதவிடவும்  அவர்களின் பொருளாதாரத் தேவைகளைச் சந்திக்கவும், இரக்கமுள்ள நல்ல இதயத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.அருங்கொடையின் நாயகனே எம் இறைவா! இக்காலத்தில் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் அறிவியலின் வளர்ச்சித் தான் மிகச் சிறந்தது என்று நினைக்காமல் இறைஞானமே எல்லாவற்றிலும் தலைசிறந்தது என்ற புரிந்துகொள்ளவும், உமக்கு சொல்லாலும் செயலாலும் சான்றுபகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.

5. சமூக மாற்றித்தின் நாயகனே எம் இறைவா! இந்த தொற்று நோய் காலத்தில் எங்கள் தலைவர்கள் சமுக அக்கறையுடன் நோய்க்கு எதிராய் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி பெறவும், அதற்கு துணிபுரியும் பணியாளர்கள் அனைவரையும் காத்து, எம் மக்களின் வாழ்வு மலர உழைத்திட வேண்டிய நல்வரங்களைப் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 


www.anbinmadal.org

 

 

 

Tuesday, August 18, 2020

பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்


எசாயா 22:19-25,
உரோமையர் 11:33-36,
மத்தேயு 16:13-20.

திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு. இன்றைய திருப்பலியில் இறைஞானத்தால் இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு அவரே இறைமகன் என்று அறிக்கையிட அழைக்கப்பட்டு தெய்வத்தின் திருவடியில் அமர வந்துள்ள இயேசுவின் அன்பிற்குரியவர்களே! உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
நமது விசுவாத்தின் தொடக்கமும் முடிவும் இறைவனே! அந்த இறைவனின் உதவியின்றி இயேசுவே ஆண்டவர் என்று நம்மால் அறிக்கையிட முடியாது. இன்றைய வாசகங்கள் இயேசுவைச் சரியாகக் கண்டுணர நம்மை அழைத்துச் செல்கின்றன. இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, "நான் யார்?" என்று கேட்டக் கேள்விக்கு அவருடைய சீடர்கள், மக்கள் நடுவில் அவரைப் பற்றி நிலவியக் கருத்துக்களைப் பிரதிபலித்த்தபோது, பேதுரு மட்டும், "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று சொன்னவுடன் கிறிஸ்து அவரிடம் விண்ணகத்தின் திறவுகோலை ஒப்படைக்கிறார் கட்டவும் கட்டவிழ்க்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கிறார்.
இறைவனின் இரக்கப்பெருக்கத்திற்கு எல்லையில்லை. கடவுள் மனித அறிவுக்கு எட்டாதவர். எனவே இறைகொடைகளைத் தடையின்றிப் பெற்றுவரும் நாம் அவற்றின் வழியாக இறைமாட்சியடைய நம் செயல்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு இறைபிரசன்னத்தை உணர்ந்து நம் வாழ்வைத் தொடர இன்றைய திருப்பலியில் ஒருமனதோராய் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


இறைவனது திட்டம்‌ மனிதருக்குப்‌ புதிராக இருக்கலாம்‌. ஆனால்‌, இறைத்திட்டத்திற்கு எதிராக யார்‌ செயல்பட்டாலும்‌ அவர்களும்‌ அவர்‌ தம்‌ திட்டங்களும்‌ தவிடுப்‌ பொடியாவது உறுதி. இவ்வாறே செபுனாவுக்கு  கண்டனம் தெரிவித்து விட்டு, எலியாக்கிமை அழைத்து அவர் கைகளில் தன் மக்களை ஒப்படைத்தார். இரக்கப் பெருக்குமிக்க இறைவனின் செயல்பாடுகளை எடுத்துரைக்கும் எசாயா நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.      

    

பதிலுரைப்பாடல்


திபா 138: 1-2அ. 2-3. 6,8
பல்லவி : ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு.

ஆண்டவரே! என் முழு மனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.  உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.  நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி

ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.  ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை


திருத்தூதர் பவுலடியார் இரண்டாம் வாசகத்தில் இறைவனின் இரக்கப்பெருக்கத்திற்கு எல்லையில்லை. கடவுள் மனித அறிவுக்கு எட்டாதவர். நமது குறுகிய அறிவால் அவரை அறிந்துகொள்ள முடியாத ஒரு புதிர் . அவருடைய அறிவும் ஞானமும் ஆழமானவை. நம் அறிவுக்கு எட்டாதவை என்று வியப்புடன் எடுத்துரைக்கும் இவ்வார்த்தைகளை வாக்களித்த அனைத்தையும் செய்து முடிப்பார். அவர் நம்மைக் கைவிடமாட்டர் என்ற விசுவாசத்தோடு மனதில் பதிவு செய்வோம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. இரக்கப்பெருக்கத்தின் ஊற்றாகிய எம் இறைவா! எம் திருஅவையில் பணியாற்றும் அனைவரும் திருச்சபையோடு உள்ள உறவு ஒன்றிப்பை எப்பொழுதும் பேணிக் காக்ககவும், திரு மேய்ப்பர்களிடம் பல குறைகள் இருந்தாலும் திருச்சபையை அன்புச் செய்யவும், கவர்ச்சியான போதகத்தில் மயங்கிக் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலகாதிருக்க விழிப்புடன் இருக்கவும் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. என்றும் எம்மை ஆட்சிச் செய்யும் எம் இறைவா! ‘நான் உங்கள் அடிமை’ என்றும், ‘நான் உங்கள் பணியாளன்’ என்றும் மேடையில் முழங்கிக் கொண்டு, அதற்கு எதிர் மாறாகச் செயலாற்றும் தலைவர்கள், ஒருவருக்குத் தரப்படும் அதிகாரம், அடுத்தவரை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மாறாக, அடுத்தவருக்குப் பணிச் செய்வதற்கே என்பதை உணர்ந்து அதிகாரத்தின் உண்மையான அர்த்தத்தைச் சிந்திக்க, அதன்படி மக்களுக்குப் பணியாற்றத் தேவையான ஞானத்தை அருள இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3.துன்பத்தில் நல்தேற்றுதல் தரும் எம் இறைவா, எம் நாட்டில் தொற்று நோயின் அதிகத் தாக்கத்தால் துன்புறும் உம் மக்களுக்குப் பாதுகாப்பு, உம்மில் ஆழமான விசுவாசம், எம் சுகாதாரப் பணியாளர்களுக்குச் சவாலை எதிர்க்கொள்ளும் உறுதியான மனநிலைத் தந்து, உமது வல்லமையான கரங்களால் பாதுகாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் தங்கள் உள்ளத்தில் இயேசுவே ஆண்டவர் என்று சான்றுப் பகிரவும், குடும்பம் என்ற கூடாரம் சுயநலத்தால் சிதறிபோகாமல் இருக்க உறுதியான பாசப்பிணைப்பை எங்களுக்குத் தந்து இவ்வுலகை வென்று நிலைவாழ்வுப் பெற்றுக் கொள்ளத் தேவையான வரங்கள் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.

5. ஆற்றலும் வலிமையும் மாட்சியும் நிறைந்த எம் இறைவா! இவ்வருடக் கல்வியாண்டு பல தடைகளைக் கடந்து தொடங்க முயற்சிக்கும் இவ்வேளையில் தொற்று நோயிலிருந்து எம் மாணவச்செல்வங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், இறையச்சமும், ஞானமும், நல்ல மனௌறுதியும் பெற்றுச் சிறப்புடன் வலம் வரத் தேவையான வரங்கள் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.


www.anbinmadal.org

Thursday, August 13, 2020

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு

 

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்


1 அரசர்கள் 19:9,11-13
உரோமையர் 9:1-5
மத்தேயு 14: 22-33


 திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு. இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு தடைகளையும், நோய்களையும் பல தாண்டி இன்றைய திருப்பலியில் கலந்து இறைவனின் அருளைப் பெற்றுச் செல்ல வந்துள்ள இறைகுலமே உங்களை அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
பாகுபாடுகளை மீறி, நன்மைகள் நடக்கும் என்பதை எடுத்துரைக்கும் இன்றைய திருப்பலி வாசகங்களில் நமக்குத் தரப்பட்டுள்ளது.. இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் சொல்வது கனவுலகே தவிர, நடைமுறை உலகல்ல. ஊரின் எல்லைப்பகுதியில், சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்து வந்த ஒரு கானானியப் பெண் நமக்கு நம்பிக்கைத் தருகிறார். நல்ல பல பாடங்களைச் சொல்லித் தருகிறார்.
கானானியப் பெண் என்று அடுக்கடுக்கான பல தடைகளைத் துணிவுடன் தாண்டி இந்தப் பெண் தன் மகளைக் குணமாக்க இயேசுவை அணுகி வருகிறார். இயேசுவின் கடினமான சொற்களையும் சரியான கண்ணோட்டத்துடன் புரிந்து கொண்டு அப்பெண் தன் விண்ணப்பத்தை மீண்டும் இயேசுவிடம் வைக்கிறார். தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண் நமக்கு முன் உயர்த்தப்படுகிறார். “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.
தடைகள் எல்லாம் தாண்டி, இறைவனின் கருணையும் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண்ணிடம் நாம் கண்ட மகத்தான அந்த நம்பிக்கை முழுமையாகப் பெற்றுக்கொள்ள, இன்றைய திருப்பலியில் இயேசுவைப்போல் நாமும் தந்தையாம் இறைவனிடம் ஒருமனப்பட்டுச் செபிக்கவும், அவருக்காய் நாம் செய்யும் பணிகள் வெற்றிப் பெற, தொற்று நோயிலிருந்து விடுபட இறையருள் வேண்டிடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய உலகையும், நாளைய உலகையும் குறித்து நம்பிக்கை இழந்திருக்கும் நமக்கு, பிரிவுகளாலும் பிளவுகளாலும் காயப்பட்டிருக்கும் இந்த உலகிற்கு இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறும் செய்தி இதுதான்: என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு என அழைக்கப்படும். நீதியில், நேர்மையில் உருவாகும் விடுதலையும், வெற்றியும் தன் மக்களுக்கு உண்டு என்று இறைவன் உறுதி அளிக்கிறார். பிற இன மக்களும் இஸ்ரயேல் மக்களுடன் இறைவனின் ஆலயத்தில் இணைய முடியும் என்று இறைவன் உறுதி அளிக்கிறார். தேனாக நம் காதுகளில் பாய்கின்றன இறைவனின் உறுதி மொழிகளைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 67: 1-2. 4. 5,7

பல்லவி : கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.


கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். -பல்லவி
 
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில்,
நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி
 

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை


திருத்தூதர் பவுலடியார் இரண்டாம் வாசகத்தில் ஒருவன் பிறமறையைச் சார்ந்தவன் என்பதற்காக இயேசு அவனைப் புறக்கணிப்பதில்லை என்பதைத் தெளிவாக்கப் பிறர் இனத்தாராகிய உங்களுக்குச் சொல்லுகிறேன் உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமைகொள்கிறேன் என்கிறார். இதனை மனத்தில் கொண்டு இயேசுவிடம் செல்லும்போது சாதி, மதம், குலம் போன்றவற்றை விலக்கிவிட்டு விசுவாசத்திற்கு முதலிடம் கொடுத்து இறைவனின் அருளுக்கும் ஆசிருக்கும் உரியவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா!


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. நன்மைத்தனத்தின் ஊற்றாகிய எம் இறைவா! எம் திருஅவையில் பணியாற்றும் அனைவரும் உம்மைப்போலத் தாராள மனதுடனும், திறந்த மனதுடனும் சாதி, சமய, இன வித்தியாசங்களை மறந்து இறையரசின் பணிகளை அன்புடன் அனைவருக்கும் நிறைவாய் செய்திடத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. இறைஞ்சுவோருக்கு இரங்கிடும் எம் இறைவா! பிளவுகள், பிரிவுகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றால் நிறைந்து வெறுப்பை உமிழ்ந்து வரும் இன்றைய உலகின் மேலும், நாளைய உலகின் மேலும் நம்பிக்கை இழந்துள்ள இளையோர் ”உங்கள் நம்பிக்கைப் பெரிது... நீங்கள் விரும்பியவாறே உங்களுக்கு நிகழட்டும்” என்று இயேசு இவர்களிடம் சொல்வதன் மூலம் வருங்கால உலகில் நம்பிக்கையை வளர்க்க, அன்பை வளர்க்க இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. மாசின்மையின் ஊற்றாகிய எம் இறைவா, எம் இல்லங்களில், குடும்பங்களில் வேற்றுமைகள் களையப்பட்டு, அனைவரும் இறைவனின் படைப்புகளே என்ற உயரிய எண்ணங்கள் வளர்ந்து, அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்லவும், மனித மாண்பு ஓங்கிடவும் எமக்குத் தேவையான ஞானத்தையும், நற்பண்புகளையும் அருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! கானானியப் பெண்ணின் மகளைப்போல் இன்று தங்கள் பிள்ளைகள் பலர் இவ்வுலகின் தீய சக்திகளிடம் மாட்டிக்கொண்டு இறைவனின் பாதையிலிருந்து விலகியிருப்பதைக் கண்டு தங்கள் பிள்ளைகளுக்கு விடுதலை வேண்டிக் கண்ணீர் விட்டுச் செபிக்கும் பெற்றோர்க்களின் செபத்தைக் கேட்டு அவர் தம் பிள்ளைகள் மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா! உம்மை மனம் உருகி வேண்டுகிறோம்.

5. எங்கள் அன்புத் தந்தையே இறைவா! தொற்றுநோயின் தாக்கம் விரைவில் விடுதலைப் பெற்று, மக்கள் தங்கள் வழக்கமான வாழ்விற்குத் திரும்பவும், மாணவர்கள் தங்கள் கல்விநிலையங்களுக்குச் சென்று கல்விப் பயிலவும், ஏழை எளியோர்களுக்கு அவர்களின் வேலைவாய்ப்பைப் பெற்றுப் புதுவாழ்வுத் தொடங்கவும் தேவையான ஞானத்தையும், மனமும் உடலும் வலுபெறவும் தேவையான வரத்தையும் பெற வேண்டி வரங்களைப் பொழியுமாறு இறைவா! உம்மை மனம் உருகி வேண்டுகிறோம்.

 

 


 

 www.anbinmadal,org

Wednesday, August 5, 2020

பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறுஇன்றைய நற்செய்தி வாசகங்கள்

 
1அரசர்கள் 19:9,11-13
உரோமையர் 9:1-5
மத்தேயு14: 22-33

 திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு. இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு அவர் தம் கரம்பிடித்து, நிலைவாழ்வை நோக்கி நம்பிக்கைக் கடலில் நடந்திட உற்சாகமாக வந்து குழுமியிருக்கும் இறைமக்களே உங்கள் வரவு நல்வரவாகுக.
இன்றைய நற்செய்தியில், இயேசு தந்தையாம் கடவுளோடு அமர்ந்துச் செபித்த பின்பு, இயேசு அதே அனுபவத்தோடு, அவர் தண்ணிரில் நடந்தார். இயேசு அடிக்கடித் தனிச் செபத்தில் நீண்டநேரம் செலவழிப்பவர். ஏன் மத்தேயு இங்கே இதனைக் குறிப்பிடுகிறார் ? இந்தச் செபத்திற்கு அப்படி என்ன முக்கியத்துவம்?
நமது ஆற்றலைப் புதுப்பிக்க, அடிக்கடிச் செபத்தில் நமது நேரத்தைச் செலவிட்டு, இறைவனைப் பற்றி இன்னும் அறிந்து, அவர் எப்படி நம்மை வழி நடத்துகிறார்? என அறிந்து, நம்மை நாமே மாற்றிகொள்வது நல்லது. நமக்கு என்ன நடந்தாலும், அதனை எதிர்கொள்ளச் செபம் நமக்குப் பெரிதும் உதவுகிறது. இது தொற்று நோய்காலத்தில் பலரது அனுபவமாக இருக்கும் என்று நம்பலாம்.
நாம் தனியாக இறைவனிடம் செபிக்கும் வேளையில், அவரிடமிருந்து நாம் பெறும் ஆசியும், அருளும், நமக்கான அன்பளிப்பாகும். அந்த அன்பளிப்பின் மூலம், பிறருக்கு நாம் உதவ முடியும். இது நமது விசுவாசத்தை இன்னும் உறுதியாக்கும். எப்படித் துன்பம் என்னும் கடலில் நடப்பது என நமக்குக் கற்றுக் கொடுக்கும்.
இன்றைய திருப்பலியில் இயேசுவைப்போல் நாமும் தந்தையாம் இறைவனிடம் ஒருமனப்பட்டுச் செபிக்கவும், அவருக்காய் நாம் செய்யும் பணிகள் வெற்றிப் பெறவும், தொற்றுநோயை வென்றிடவும் இறையருள் வேண்டிடுவோம்.

வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் தன் உயிருக்கு ஆபத்து வந்தபோது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எலியா ஓடுகின்றார். தான் அழைத்த குரலுக்குச் செவிமெடுத்த இறைவன், இத்துன்பத்திலிருந்து தன்னை விடுவிக்கமாட்டாரா? என்ற நம்பிக்கைகூட இறைவாக்கினரிடம், இல்லாமல்போய்விட்டது. ஆனாலும் இறைவன் ஒரேப் மலையில் மெல்லிய ஓசையாக, இனியதென்றலாகத் தம்மை எலியாவுக்கு வெளிப்படுத்தியதை இன்றைய முதல் வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்


பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பையும் மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
திருப்பாடல்: 85: 8-13
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன். தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி. நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். நீதியும் நிறைவாழ்வும் ஒன்றை யொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும். விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும். அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை


இறைவன் அன்று இஸ்ரயேல் மக்களை அவருடைய மக்களாக்கிக் கொண்டு, அவரின் மாட்சிமையை அவர்கள் நடுவே விளங்கச்செய்தார். ஆனால் இஸ்ரவேல் மக்கள் கடவுளின் அன்புக்கு உரியவர்கள் இல்லாதவர்களாக இருந்தாலும், அவர்களை மீட்கத் தன் மகனையே அனுப்பினார். இனத்தாலும், உறவுகளாலும் ஒன்றான இஸ்ரயேல் மக்களுக்காகப் பெரிதும் கவலைக் கொள்ளும் திருத்தூதர் பவுலடியார் கூறுவதை எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன் அல்லேலூயா!


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

 
1. அருளிரக்கத்தின் நாயகரே எம் இறைவா! எம் திருஅவையை இந்நாள் வரை எல்லாவித இக்கட்டுக்கள், இடையூறுகள், பிரச்சினைகள், கட்சி மனப்பான்மை இவற்றிலிருந்து விடுபட்டு உம் விண்ணக வாழ்வைச் சொந்தமாக்கிக் கொள்ளத் திரு அவையின் நல்மேய்ப்பர்களுக்கும், தூயஆவியின் துணையால் தொடர்ந்து உம் இறைபணி ஆற்றிடத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. கொடைவள்ளலே எம் இறைவா, எம் தமிழகத்தில் குறிப்பாக தொற்றுநோயின் தாக்கத்தால் அனைத்து மாவட்டங்களிலும் பயத்தில் தவிக்கும் உம் மக்களை உமது அருளால் நிரப்பி தாக்கத்தைப் போக்கி நலம், வளம் பெறுகவும், நோய்க்கு எதிரான போராட்டத்தில் வெற்றிப் பெறவும் மனமுருகி இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. ஆதரித்தாளும் எம் இறைவா, எம் இளையோர் அனைவரையும் பாகுபாடுயின்றித் திரு அவையில் பல்வேறு மேய்ப்புப் பணியில் ஈடுபடுத்தி, அதனால் அவர்களின் ஆன்மீக வாழ்வில் வளம் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் சான்றுப் பகரும் வாழ்வை வாழ்ந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா! எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீடுகளை அறிந்துக் கடவுளின் பார்வையில் மாசற்றதுமானச் சமயவாழ்வு வாழவும், உலகத்தால் கறைபடாதபடித் தம்மைக் காத்துக் கொள்ளவும், ஐயம் நீங்கி உம்மில் நம்பிக்கைக் கொண்டு நிலைவாழ்வைத் தேட வேண்டிய வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

5.அஞ்சாதீர்கள் என்று எம்மை அழைக்கும் இறைவா! இன்றைய நாட்களில் நாங்கள் சந்திக்கும் அல்லல்களிலிருந்து விடுபடவும், அதற்கு எதுவாக உலகச்சூழல்கள் மாறவும், ஆட்சியாளர்கள் தன்னலமாற உழைப்பை நல்கவும், மருத்துவத்துறையினர் பாதுகாக்கப்படவும், சிறப்புடன் பணியாறிடவும் வேண்டிய வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.. www.anbinmadal.org