Tuesday, September 25, 2018

ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எண்ணிக்கை 11:25-29
யாக்கோபு 5:1-6
மாற்கு 9:38-48

முன்னுரை:

 
இன்று ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறை வழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம். இன்றைய நற்செய்தி மனிதனின் பொறமையைப் பற்றி எடுத்துரைக்கிறது. மோசேயின் கூட்டத்தில் இல்லாமல் கூடாரத்தில் இருந்த இருவர் இறைவாக்கு உரைக்கின்றார்கள். மோசே தடுக்கவில்லை. அஃது அவரின் தாராளக் குணத்தைக் காட்டுகிறது. திருத்தூதர் யாக்கோபு செல்வத்தின் நிலையாமையைப் பற்றித் தன் மடலில் விவரிக்கிறார். நாம் நலிந்தவர்களுக்கு எதிராகச் செயல்படும்போது இறைவனுக்கு எதிராய் நாம் செயல்படுகிறோம். அநீதியாகச் செல்வம் சேர்க்கும் முயற்சியை எதிர்க்கிறார்.

இன்று இயேசு மூன்று செய்திகளை முன்வைக்கிறார். பொறமையால் எழுந்த குற்றச்சாட்டு, மக்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு, இடறலாயிருந்தால் கிடைக்கும் தண்டனை. நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தால்கூட அதற்குக் கைம்மாறு உண்டு. தீமை செய்யத் தூண்டுவதும் மாபெரும் தண்டனைக்குரியது. இவற்றை உணர்த்தும் இன்றைய திருப்பலியின் இறைவார்த்தைகளின் பொருள் உணர்ந்து இத்திருப்பலிக் கொண்டாடத்தில் பரந்த மனப்பான்மையுடன் பங்கேற்போம்..

வாசகமுன்னுரை:

முதல்வாசக முன்னுரை

முதல் வாசகத்தில் எண்ணிக்கை நூலில் ஆண்டவரின் ஆவி எழுபது மூப்பர்கள் மேல் இறங்கி வந்த நேரத்தில், இவர்களின் கூடாராங்களில் தங்கியிருந்த வேறு இருவர் மேலும் - எல்தாது, மேதாது - தூய ஆவி இறங்கி வருகின்றது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத யோசுவா, மோசேயிடம் அதைப்பற்றிப் புகார் தருகின்றார். ஆனால், மோசே பொறாமையினால் யோசுவா கூறியதற்கு அவரைக் கடிந்து கொள்கின்றார். அனைவரும் இறைவாக்கினராகும்படி ஆண்டவர் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு என்னும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

யாக்கோபின் திருச்சபையில் எளியோர்-பணக்காரர் பிளவு அல்லது ஏற்றத்தாழ்வு அதிகமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவரின் திருமடல் இந்தப் பிரச்சினையை அதிகமாகப் பிரதிபலிக்கின்றது. கூடிவரும் சபைகளில் பணக்காரார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனவும், எளியோர் ஒதுக்கித் தள்ளப்படுகின்றனர் என்றும் சொல்லும் யாக்கோபு இன்றைய இரண்டாம் வாசகத்தில் செல்வத்தின் நிலையாமை பற்றிப் பேசுகின்றார். இவ்வாசகத்தின் கவனமுடன் செவிமெடுப்போம்.




பதிலுரைப் பாடல்
திபா 19: 7,9. 11-12. 13
பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விக்கின்றன.

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;  எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;  அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி

அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன். அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு.  தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். -பல்லவி

ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். –பல்லவி


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


அருட்கொடைகளை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கும் இறைவா!  எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள்  அனைவரும் பரந்த மனப்பான்மையுடன் அடுத்தவர்கள் நம்மைச் சாராதவர் என்று பார்ப்பதை விடுத்து அவர் நம் சார்பாக இருக்கிறார் என்ற நிலையை உணர்ந்து  நல்லதைச் சொல்லவும், செய்யவும் வேண்டிய பரந்தமனப்பான்மை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


எங்கும் நீங்காமல் நிறைந்திருக்கும் இறைவா! இன்று நாங்கள் காணும் நிதி நெருக்கடி, பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணங்களைப் பார்த்தால், இன்று எமக்கு உடனடி தேவையாக இருப்பது எம் ஆற்றல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முன்வருவதுதான். அப்படிப் பகிர்ந்து கொள்வது எம் ஆற்றலை அதிகரிக்கின்றது என்பதை உணர்ந்து செயல்பட  தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..


ஆள் பார்த்துச் செயல்படாத அன்பு இறைவா!  இயேசுவைச் சார்ந்த சீடர்கள் ஒரு கிண்ணம் தண்ணீருக்குக் கூட மற்றவர்களைச் சார்ந்து நிற்க அழைக்கப்படுகின்றனர். தங்களின்  பசி மற்றும் தாகம் தீர்க்க மற்றவர்களின் உடனிருப்பு அவர்களுக்கு அதிகம் தேவை. இன்று நான் என்னை மட்டுமே சார்ந்து நிற்கும் முயற்சியில் இருக்கின்ற எம் தலைவர்கள் அடுத்திருப்பவரின்நலன்களில் கவனம் செலுத்த, அவர்கள் மனம் மாற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


நன்மைக்கு நாயகனே இறைவா! எம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருக்கும்போது, அந்தக் குறையைப் பெரிதாக்கி எம்மையே நாங்கள் தாழ்வாக மதிப்பிடும் பொறாமை என்னும் குணம் எம்மிடமிருந்து ஒழிந்து ஒரு நல்ல குணமாகிய சகிப்புத்தன்மை எம்மில் வளர, விட்டுக்கொடுப்பவர்கள் வீழ்ந்ததில்லை என்பதை உம் மூலம் அறிந்து வாழ  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Tuesday, September 18, 2018

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

 ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு




 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சாலமோனின் ஞானநூல் 2:12,17-20 


முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை இறைமகன் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.

இன்றைய நாளில் இறைமகன் இயேசு தனது பாடுகளைப்பற்றி இரண்டாம் முறையாக வெளிப்படையாகவே அறிவிக்கிறார். ஆனால் சீடர்களோ அவர் எண்ணங்களைப் புரிந்துக்கொள்ளாமல் தங்களில் யார் பெரியவர் என்று வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். முதன்மையான மேன்மையான இடத்தில் இருக்க விரும்புபவர் கடைசி இடத்தில் இருக்கவேண்டும் என்று அவர்களைக் கடிந்துக்கொண்டார். சிறுகுழந்தையின் உள்ளத்தைக் கொண்டிருக்கவும், அவர்களை ஏற்றுக் கொண்டால் என்னையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று அறிவுறுத்துகின்றார்.

என் கைகளோ சிறியது. ஆனால் அவர் கரங்களோ பெரியது. எனவே நாம் எடுத்தால் குறைவாக வரும். அவராகக் கொடுத்தால் நம் கைகளில் நிறைய விழும்! என்று எதிர்நோக்கோடு காத்திருப்பதில் குழந்தையுள்ளம் மட்டுமல்ல, நன்மைத் தேடும் உள்ளமும், சிற்றின்ப நாட்டங்களைத் தள்ளிப்போடும் உள்ளமும் இருக்கின்றது. இந்த உள்ளம் நம்மிலும் இருக்கிறது! இதை நாம் உணர்ந்து கொள்ள இறைவன் நம் அகக்கண்களுக்கு ஒளிதருவாராக! என்ற எதிர்பார்ப்புடன் இத்திருப்பலிக் கொண்டாடத்தில் திறந்த உள்ளத்துடன் பங்கேற்போம்..அன்பு மற்றும் மனத்தாழ்மையுடன் அவரைப் பின்தொடரும் வலிமையை இறைமகன் இயேசு நமக்கு தந்திடுவார்.


வாசகமுன்னுரை:



முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல்வாசகத்தில் பிறரை அடக்கி ஆள்பவர்கள் தற்காலிக வெற்றி அடைந்தாலும், இறுதியில் தோல்வியைத் தழுவுவார். மாறாகப் பணிந்து போகிறவர்கள் தற்காலிகமாகத் தோல்வியடைந்தாலும் இறுதியில் வெற்றி அடைவர். நல்லவர்களின் பொறுமையை நீதிமான்களின் பணியை உலகம் ஏளனம் செய்தாலும் கடவுள் நிச்சயம் அவர்களை உயர்த்துவார் என்று எடுத்துரைக்கின்ற இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு விண்ணக ஞானத்தையும் மண்ணக ஞானத்தையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.பொறாமை, மனக்கசப்பு, கட்சி மனப்பான்மை, வெறுப்பு ஆகியவை கொண்ட மண்ணக ஞானம். விண்ணக ஞானமோ அமைதி, பொறுமை, விட்டுகொடுத்தல் இணக்கம் ஆகிய தெய்வீக பண்புகளில் மிளிர்கிறது எடுத்துரைக்கிறார். இவ்வாசகத்தின் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 54: 1-2. 3. 4,6 (பல்லவி: 4b)
பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்.

கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்;  என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். -பல்லவி

ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்;  அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. -பல்லவி

இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;  தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. –பல்லவி
  

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
                               

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்



1. ஆசிகள் வழங்கும் ஆற்றலின் ஊற்றே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் பணிவிடைப் பெறுவதைவிடப் பணிப் புரிவதே மேல் என்பதனை உணர்ந்து தன்னலமற்றவர்களாய் உம் மக்களுக்காய் உழைத்திட , கடவுளின் பிள்ளைகளாக வாழ வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அல்லனவற்றை அழித்து நல்லனச் செய்யும் இறைவா! நேர்மையானவாழ்வு வாழவும், ஆணவபோக்கை விட்டு விட்டுக் குழந்தை உள்ளம் கொண்டவராய் வாழவும், அதனால் ஏற்படும் தற்காலிகமான தோல்வியை வென்று நிரந்திரமான வெற்றிப் பெற்றிட உழைப்பையும் உறுதியையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

3. முன்னேற்றப் பாதையில் வழிநடத்தும் மூவொரு இறைவா! பேராசையும் பொறாமையுமே சண்டைச் சச்சரவுக்கக் காரணம் என்பதை உணர்ந்து எம் நாட்டுத் தலைவர்கள் தீயசக்திகளின் வெளிபாடான பேராசையையும் பொறாமையையும் முற்றிலும் அவர்கள் உள்ளத்திலிருந்து நீக்கி எம் மக்கள் நலம் வாழ, அவர்கள் உழைத்திட வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

4. வாழ்வை வெற்றியாக்கும் விண்ணகத் தந்தையே! மனிதருடைய வழியோ சுயநலத்தின் வழி. ஆனால் கடவுளின் வழியோ பொறுமையின் வழி, தாழ்ச்சியின் வழி என்பதை அறிந்து அடுத்தவன் வாழ்ந்தால் தானும் வாழ முடியும் என்ற நல்லெண்ணத்தை எம் இளையோரின் உள்ளத்தில் பதிவுச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உமக்காகக் காத்திருப்போர்க்கு அமைதி அளிக்கும் இறைவா! உம் திருஅவை இன்று சந்திக்கும் சவால்களையும், கொடுமைகளையும், அதற்கு ஏற்படும் அவபெயர்களிலிருந்தும் காத்தருளும். பொறுமையும் அமைதியும் இறுதியில் வெற்றிப் பெறும் என்ற திடமான நம்பிக்கையை எங்கள் உள்ளங்களில் நிலைபெற, உமது ஞானத்தையும் ஆசீரையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..


www.anbinmadal.org

Wednesday, September 12, 2018

ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் வாரம்


ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் வாரம்



இன்றைய வாசகங்கள்:


ஏசாயா 50:5-9
யாக்கோபு 2:14-18
மாற்கு 8: 27-35




திருப்பலி முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு இயேசு கிறிஸ்துவின் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு ஆலயம் வந்துள்ள இறைமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள்!

இயேசு கேட்கும் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்பது, வெறும் கேள்வி அல்ல. இஃது ஓர் அழைப்பு. அவரது பணி வாழ்விலும், பாடுகளிலும் பங்கேற்க, அவர் தரும் அழைப்பு. கேள்விப் பதில் என்ற வாய்மொழி வித்தைகளைத் தாண்டி, செயலில் இறங்க இயேசு இந்த அழைப்பை விடுக்கிறார். "இயேசுவை இறைவன் என்று, தலைவர் என்று, மீட்பர் என்று நம்புகிறேன்" என்று சொல்வது எளிது. ஆனால், அந்த நம்பிக்கையை வாழ்வில் நடைமுறையாக்குவது எளிதல்ல. செயல் வடிவம் பெறாத நம்பிக்கை வீணாகிவிடும்.

இயேசுவை அனுபவப்பூர்வமாகச் சந்திக்க, அவரை நம்பி, அவரோடு நடக்க, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க, வாழ்வுப்பாதையை மாற்றியமைக்க, அவர் தரும் ஓர் அழைப்பு.
இந்த அழைப்பிற்கு நாம் தரும் பதில்கள், வார்த்தைகளாக அல்லாமல், செயல் வடிவம் பெறட்டும். குறிப்பாக, வாழ்வில் அனைத்தையும் பறிகொடுத்ததால், நம்பிக்கை இழந்திருப்போருக்கு நம்பிக்கைத் தரும் வகையில், நம் செயல்கள் அமையட்டும்.


செயலாற்றும் நம்பிக்கைப் பெற்றிட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.



வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


முதல் வாசக இறைவார்த்தைகள் கடவுளுடைய மீட்புத் திட்டம் என்ன என்பதை வெளிப்படுத்துகிறது. மெசியா துன்புறும் ஊழியனாக இருப்பார். அவர் நிந்தனை செய்யப்படுவார். காறி உழிழ்ப்படுவார். இப்படி அவர் பாடுகள் பலபடுவார் என்கிறார் இறைவாக்கினர் ஏசாயா. இதன் மூலம் பாடுகளே மீட்பின் வழி என்பதை வெளிப்படுத்தும் மீட்பின் திட்டத்தைக் கவனமுடன் கேட்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை:


இல்லை என்று வந்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் வாழ்வதே பிறர்நலம். நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும். இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் யாக்கோபு செயல் வடிவம் பெறாத நம்பிக்கை வீண் என்றுகூறுகிறார். இன்றைய நற்செய்திக் கேள்விக்குப் பதிலாக அமைய இவ்வாசகத்தை நம் உள்ளத்தில் பதிவுப் செய்வோம்.

பதிலுரைப் பாடல்

திபா 116: 1-2, 3-4, 5-6, 8-9

பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார். அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். -பல்லவி

சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன. பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன; துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன. நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; `ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன். -பல்லவி
ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர். எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். -பல்லவி
என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.  உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


உண்மை உணர்வைத் தூண்டியெழுப்பும் ஒப்பற்ற இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் துன்பங்கள் வருவதைக் கொண்டு துவண்டு விடாமல் துணிந்து நிற்கவும், துன்பத்திற்குப் பின் இன்பமும், உயிர்ப்பும் உண்டு என்ற நம்பிக்கையில் செயல் பட வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இடர்பாடுகள் நீக்கும் இணையற்றத் தலைவா! சிலுவை வழியாக உலகை வென்ற இயேசுவின் சீடர்களாகிய நாம் நம் அன்றாட வாழ்க்கைச் சிலுவைகளை மனமுவந்து சுமக்கவும், தன்னலம் மறந்துப் பிறர் நலம் பேணவும், எல்லோருக்கும் நன்மைச் செய்த இன்புற்று வாழவும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..


ஆள் பார்த்துச் செயல்படாத அன்பிறைவா! எல்லாருக்கும் எல்லாம் பெற எம் நாட்டுத் தலைவர்கள் எந்த ஒருபாகுபாடு பார்க்காமல் மனித நேயம் கொண்டு அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்திடவும், நாட்டில் அமைதி நிலவிடவும், மக்களிடையே சமத்துவம் காணவும் வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..


வளங்களை வாரி வழங்கி உள்ளங்களை நெறிப்படுத்தும் இறைவா! இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக இருக்கும் இளையோரை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் இத்திருச்சபையின் வருங்காலத்தூண்களாக மாறவும், அருள் வாழ்விலும், உலகவாழ்விலும் செயலாற்றும் நம்பிக்கைக் கொண்டவராய் வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.









 

Thursday, September 6, 2018

ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு

 

 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

 

 எசாயா 35:4-72.    


முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை அன்புநேசர் இயேசுநாதரின் பெயரால் வாழ்துகிறோம். “முழு மனித வாழ்வே இறைவனின் மகிமை” என்பதை இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. கடவுளின் கட்டளைகளை மீறி அருள்வாழ்வை இழந்தபோது அறிவுரையோடு இரக்கம் காட்டிய யாவே கடவுள்., தன் மக்களாகிய இஸ்ரயேலரை “அஞ்சாதே. நான் உன்னோடு” என்று திடப்படுத்துகின்றார் எசாயா இறைவாக்கினர் மூலமாக.


ஊனங்களே நம் வாழ்வுக்குத் தடையாக இருப்பதையும், அவற்றைத் தனிக் கவனத்துடன் குணப்படுத்து இறைமகன் இயேசுவை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். ஊனமுற்றோரை ஒன்றுமில்லாதவராக, ஒன்றுக்கும் உதவாதவராக இந்தச் சமுதாயத்தால் ஒதிக்கி வைக்கப்பட்ட அவருக்கு இயேசு முக்கியத்துவம் தருகிறார். அவரைத் தொட்டுக் குணமளிக்கின்றார். .
.
மாற்றுத்திறனாளிகள் மட்டில் நாம் கொண்டிருக்க வேண்டிய பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இயேசுவின் செயல்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. எனவே நம் இதயங்களை ஆண்டவருக்குத் திறந்து வைப்போம். இரக்கத்தோடு உண்மையைப் பேசி நன்மையைச் செய்யும் பண்பை நமதாக்கிட இத்திருப்பலிக் கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்..

வாசகமுன்னுரை:

 

முதல் வாசக முன்னுரை:

முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் “அஞ்சாதே! நான் உன்னோடு” என்று ஆறுதல் கூறித் திடப்படுத்துகிறார். பாலைநிலத்தில் நீரூற்றுகள் பெருகச் செய்தும், வாய்பேசாதோர் பேசுதையும், காதுகேளாதோரின் காதுகள் திறக்கப்படுவதும், ஊனமுற்றோர் குணமடைவதையும் குறிப்பிட்டு மெசியாவின் வருகையை அம்மக்களுக்கு எடுத்துரைப்பதை விளங்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.



இரண்டாம் வாசக முன்னுரை:


முழு மனித வாழ்வுக்குத் தடையாக விளங்கும் பண்பு என்னவென்றால் பிறரின் தோற்றத்தை வைத்து மதிப்பிடுவது, அவர்களிடமிருக்கும் பணத்தை வைத்துப் பிறரை நடத்துவது. இந்த அவலத்தைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கடிந்துக்கொள்வதை இவ்வாசகத்தின் மூலம் மனதில் பதிவு செய்வோம். மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கைக் கொண்டுள்ள நாம் எப்படிச் செயல்படவேண்டுமென்று கற்றுக்கொள்வோம்.


 

பதிலுரைப் பாடல்


திபா 146: 7. 8-9. 9-10
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்;  சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். –பல்லவி

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்;
தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.  ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.  சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. அன்புத்தந்தையே இறைவா, உம் இறைபணியில் தம்மையே இறைவாழ்வில் இணைத்துக் கொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் உம் விண்ணகக் கொடைகளை எல்லாச் சூழ்நிலைகளிலும் காத்து, ஒளியின் மக்களாக வாழத் தேவையான அருளை நிறைவாகப் பெற வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று தேவனே உம்மை மன்றாடுகிறோம்.


2. மண்ணுலகில் மனித நேயத்தை வளர்த்த எம் அன்புத் தந்தையே இறைவா, உம்மிடம் நல்லவற்றைப் பெற்றுக் கொண்டு வாழ விரும்பும் நாங்கள் மண்ணில் மனித நேயம் மலரவும், மனித மாண்புத் தழைத்தோங்க உமது தூய ஆவியின் கனிகளைப் பெற்ற மக்களாக வாழ வரம் அருள வேண்டுமென்ற இறைவா உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்..


3. காலத்தின் அறிகுறிகளை ஆய்ந்துணர வைக்கும் எம் இறைவா! எம் நாட்டில் அமைதி நிலவ, நிலையான நல்லாட்சித் தேசத்தில் மலர, தகுதியுள்ள நல்உள்ளம் படைத்த புதிய தலைவர்கள் உருவாகி, ஏழைகளின் வாழ்வு மலரவும், ஏழை விவசாயிகளின் நலனில் முழு அக்கறை செலுத்தும் நல் உள்ளம் படைத்த தலைவர்கள் தந்திட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..


4. எல்லாருக்கும் எல்லாம் ஆன எம் அன்பு இறைவா! இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக உள்ள எம் ஆசிரியர் பெருமக்களை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் அருள் வாழ்வில் சிறந்து விளங்கிடவும், சிறந்த நல்சான்றோர்களை இவ்வுலகிற்கு இன்னும் அதிகமாக வழங்கிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. உண்மையான சமயநெறி என்பது ஏழை எளியவர், அனாதைகள், புறக்கணிக்கப்பட்டோர், கைம்பெண்களை ஆதரிப்பது என்று உணர்த்திய இறைவா, இத்தகைய சின்னஞ்சிறிய மக்களுக்கு எங்களால் இயன்ற உதவி செய்யவும் உலகத்தால் எங்களைக் கறைபடாமல் காக்கவும் வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org