Tuesday, May 31, 2022

தூய ஆவியாரின் பெருவிழா

தூய ஆவியாரின் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 2: 1-11
உரோமையர் 8:8-17
யோவான் 14:15-16,23-26

திருப்பலி முன்னுரை:


அன்புச் சகோதரச் சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசுவின் துணையாளராம் தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாட அன்று மாடியில் கூடியிருந்தத் திருத்தூதர்கள் போல நம் ஆலயத்தில் ஒன்றிணைந்து ஆவலுடன் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள்!
மரியாளோடு ஒரு மனத்தோடுகூடிச் செபிக்கும்வேளையில் துணையாளராம் தூய ஆவியின் அருட்பொழிவைப் பெற்றுக்கொண்டனர் சீடர்கள். பல வல்லசெயல்கள் அரங்கேறியது. கூடியிருந்த மக்கள் தத்தம் மொழிகளில் சீடர்கள் பேசியதைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தனர். புதிய ஆற்றல் பெற்றுப் புதுபொலிவுடன் பயம் தெளிந்தச் சீடர்கள் இறையரசை அறிவிக்க உலகெங்கும் புறப்பட்டுச் சென்றார்கள்.
தூய ஆவியானவரின் வருகை நமக்குச் சொல்வது இதுதான். தூய ஆவியானவர் நம்மைத் தழுவிக்கொடுக்கும் தென்றல் அல்ல. மாறாக அவர் நம்மை வாரிச் சுருட்டும் சூறாவளி. தூய ஆவியார் நம்முள் செயல்படும்போது பழையனக் கழிகின்றன. புதியனப் புகுகின்றன. எனவே தாவீது அரசர் "கடவுளே புதுப்பிக்கும் ஆவியை என்னுள் உருவாக்கி அருளும்" என்று மன்றாடியது போல் நாமும் அவற்றைப் பெற இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

 வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய வாசகத்தில் திருத்தூதர்கள் தூய ஆவியானவரின் அருட்பொழிவுக்குப் பின் அவர்களின் நாக் கட்டவிழ்க்கப்படுகிறது. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. இதுவரை கோழையாக அறைக்குள் அடைந்து கிடந்த திருதூதர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பிப் பெற்று வீரர்களாக வீதிக்கு வருகின்றனர். துணிச்சலோடும், கொள்கைப்பிடிப்போடும் இயேசுவின் நற்செய்தியைப் போதித்தனர். இந்தத் துணிச்சலை  நாம் பெற அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

 பதிலுரைப் பாடல்

திபா 104: 1,24. 29-30. 31,34

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! -பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!
நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். -பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை:

  இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்றும் கிறிஸ்துவின் ஆவியில் உண்மையில் இயக்கப்படுபவர்களே கிறிஸ்தவர்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.ஆவியைப் பெற்றிருந்தால் மட்டுமே ஒருவர் கடவுளின் பிள்ளை என அழைக்கப்பட முடியும் . எனவே, கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற நமக்கு உறுதுணையாக இருப்பவர் தூய ஆவியார் என்று விளக்கமளிக்கும் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


****தொடர் பாடல்* பாடல் இசையுடன்****


தொடர் பாடல்

 
தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.


*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! *தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும்.* அல்லேலூயா. 

 

*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*:

  1.நாங்கள் செல்லும் இடமெல்லாம் எம்மோடு பயணிக்கும் எம் இறைவா! திருஅவையின் அங்கத்தினர் அனைவரும் நீ தந்தத் தூய ஆவியால் தீமைகளை எரித்திடும் சுடராய், இருள் அகற்றி ஒளியுட்டு நன்மைப் பயக்கும் சுடராய், எம் பாதைக்கு வழிகாட்டும் அகல்விளக்காய், அமைதியின் ஒளிச்சுடராம் இயேசுவின் இறையரசை அறிவிக்கும் தீபங்களாய் இவ்வுலகில் அவரின் விழுமியங்களை வாழ்ந்துக் காட்டிடும் சீடர்களாய் நாங்கள் இருக்கத் தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2.உம் பேரருளால் எம்மை வழிநடத்தும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூயஆவியை எழுந்தருள் செய்யும். எங்களை உருக்கித் துரு நீக்கி எங்களை உருமாற்றும். இயேசுவின் திருவுருவை எங்களின் உள்ளத்தில் உருவாக்கும். எம்மை ஆவியின் அக்னியால் நிரப்பும். அவரின் வரங்களாலும், கொடைகளாலும், கனிகளாலும் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அருட்பொழிவு செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

3. சாவின் இருள் சூழ்ப் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தால் எம்மைப் பாதுக்காக்கும் இறைவா! எம்மை வழி நடத்தும் அரசியல் தலைவர்களின் எண்ணங்களைப் புனிதம் பெறச் செய்யும். அவர்களின் இதயத்தில் உம் அன்புத் தீயை மூட்டும். அனைவரையும் அன்புச் செய்யும் உள்ளத்தைக் கொடுத்தருளும். அவர்கள் செய்யும் பணிகளில் சமுக நீதியை நிலைநாட்டவும், மக்கள் பேணிக்காத்திட வேண்டிய நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம் கால் கல்லில் மோதாதபடித் தூதர்களால் எம்மைத் தாங்கிக் கொள்ளும் எம் இறைவா! தூய ஆவியின் ஒளியால் எங்கள் பங்கிலுள்ள இளையோரின் இதயங்களுக்கு அறிவூட்டும். அவர்கள் சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ச்சியாய் இருக்கவும், ஞானக்கதிர்களை அவர்கள் மேல் பொழியுமாறும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 5. உமது ஆவியானவரால் எம்மைப் பலப்படுத்திய அன்பு இறைவா! எம்மை ஆளும்  தலைவர்கள் அனைவரையும் பிறர் அன்பிலும், சகோதரத்துவத்திலும், சுயநலமின்றி அனைத்து மக்களின் நலன்களுக்காக உழைப்பவர்களாகவும், தீவிரவாதத்திலிருந்து காக்கும் நல்ல உள்ளங்கள் கொண்டவர்களாக வாழ்ந்து மனிதம் மேன்பட உழைப்பவர்களாக மாறிட இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, May 23, 2022

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா

 ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருத்தூதர் பணிகள் 1: 1-11
எபிரேயர் 9: 24-28

லூக்கா 24 :46-53

திருப்பலி முன்னுரை:

 
அன்பு சகோதர சகோதரிகளே! ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட நம் ஆலயத்தில் ஒருமனப்பட்டுப் பெரும் மகிழ்ச்சியுடன் குழுமியிருக்கும் அனைவருக்கும் எல்லாப் பெயர்களிலும் மேலான இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள் உரித்தாகுக!

உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாற்பது நாட்களின் உடனிருப்பு முடிவுப்பெறும் வேளையில் தம் சீடர்களை அழைத்து, தனக்குப் பின் தந்தையின் இறையாட்சியை எப்படித் தூதுரைக்க வேண்டும்? அவர்களின் சாட்சியவாழ்வு எப்படி இருக்க வேண்டும்? என்றும், அதற்குத் துணையாகத் தூய ஆவியாரின் வல்லமை மிகுந்த ஆற்றலைப் பெற்றுக் கொண்டு உலகின் கடைசி எல்லை வரை அறிவித்ததை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

அண்ணாந்துப் பார்த்து நின்றச் சீடர்கள் வீறுக்கொண்டு எழுந்து, நிறைவாழ்வை இவ்வுலகில் முன் நிறுத்தி, உலக மாந்தர்கள் அனைவரையும் இயேசுவின் அன்புச் சீடர்களாய் மாற்றியது போல, நாமும் இயேசுவின் ஆற்றலால் இத்தகைய நற்செயல்களைச் செய்திட, அதனால் நாம் எதிர் நோக்கும் சவால்களை வெற்றிக் கொள்ள, இறைஇரக்கத்தின் திருமுகமாம் இயேசுவின் அருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இயேசு துன்புற்று இறந்தபின் நாற்பது நாட்களாகச் சீடர்களுக்குத் தோன்றி இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார். சான்றுகள் மூலம் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சியாக இருங்கள் என்று பணித்தார். அவர்கள் கண் முன்னே விண்ணகம் சென்றார். அண்ணாந்து வானத்தைப் பார்த்தவர்களைத் துணிந்து உலகத்தைப் பாருங்கள்! இறையாட்சியை அறிவியுங்கள் என்று அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 47: 1-2, 5-6, 7-8
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார். ஆண்டவர்.

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே! - பல்லவி
ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி
ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

கடவுள் வலிமை மிக்கத் தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். வேறு எப்பெயருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். இவைகளை உணர்ந்து கொள்ள ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வராக! என்ற இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
 

நம்பிக்கையாளரின்மன்றாட்டுகள்:

1.இறைஞ்சுவோருக்கு இரங்கிடும் எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் இருபால் துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் ஆண்டவர் இயேசுவின் ஆற்றலைப்பெறு இவ்வுலகில் அவரின் விழுமியங்களை உலகமெங்கும் சான்றுப் பகர, அவர் சொல்லிக் கொடுத்தபடி வாழ்ந்துக் காட்டிட எங்களுக்குத் தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2உறவை வளர்க்கும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். நீர் அனுப்பும் துணையாளரைக் கொண்டு எங்கள் குடும்பங்களில் அன்பும், நட்புறவும் தழைத்திடவும், எமக்கு அடுத்திருப்பவரைக் கண்டு கொள்ளவும், அதன் மூலம் உமது இரக்கத்தின் இறையாட்சிப் பறைச்சாற்ற எமக்கு ஆற்றலைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமையாளும் அன்பின் அரசே! இறைவா! உலகமெங்கும் துன்புறும் திருஅவையைக் கண்ணோக்கும். உமது பணியின் நிமித்தம் துன்பப்படும் உமது ஊழியர்களையும் மற்றும் உம்மை ஏற்றுக் கொண்ட மக்களையும் பாதுகாத்து, அவர்களை இறைநம்பிக்கையில் வேருன்றி வளர்ந்திடவும், அவர்களைத் துன்புறுத்துவர் மனமாறி நல்ல வழியில் நடத்திடவும் உமது அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம் வாழ்வின் ஒளியும் வழியுமாய் இருக்கும் எம் இறைவா! எங்கள் பங்கிலுள்ள இளையோர் அனைவரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களின் வாழ்வு ஒளிமயமானதாய் இருக்கவும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பிலும், ஒழுக்கத்திலும் தலைசிறந்து விளங்கவும், உமது உயிருள்ள சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வர இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. வாழவளிக்கும் வள்ளலே எம் இறைவா! எங்கள் ஒன்றிய அரசும் மற்றும் மாநில அரசும் உமது விழுமியங்களை ஏற்று அனைவருக்கும் வளமான நலமான வாழ்வை அளித்து அனைத்து மக்களும் ஏற்றம் பெற உழைத்திட நல்மனமும் ஞானத்தையும் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, May 16, 2022

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 15: 1-2,22-29
திருவெளிப்பாடு 21: 10-14,22,23

யோவான் 14 :23-29

திருப்பலி முன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு கொண்டாடங்களில் கலந்து இயேசுவின் அமைதியையும் அவரது துணையாளரையும் பெற்றுக் கொண்டு புது வாழ்வு பெற உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
வெறும் சட்டத்திட்டங்களை மட்டும் மையமாக கொண்டதல்ல நம் கிறிஸ்தவ வாழ்வு. மாறாக அன்பே அடித்தளமாக  இருக்க வேண்டும். மனிதருக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதன் மூலம் இறைவனின் மாட்சியையும் ஒளியையும் பெற்றுக்கொள்ள முதல் இரு வாசகங்களும் எடுத்துரைக்கின்றது.
நமது உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். இயேசுவின் அமைதியை பெற்றுக்கொள்வோம். அவர் அனுப்பும் அவரது துணையாளரை ஏற்றுக் கொண்டு இவ்வுலகில் அமைதியின் தூதுவராக, ஒருங்கிணைந்து சாட்சிய வாழ்வு வாழ இறையருளைப் பெற வேண்டி இன்றையத் திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

பவுல், பர்னபா இவர்கள் வழியாக தூய ஆவியார் உணர்த்துதலால் தாங்கள் பெற்ற கொண்ட அழைப்புக்கு ஏற்ப திருத்தூதர்களிடமும், மூப்பர்களிடமும் விருத்தசேதனம் பற்றிய சிக்கலைக் குறித்துக் கலந்து பேசிக் குழப்பமும், கலக்கமும் உள்ள மக்களுக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளால் உறுதிப்படுத்துகின்றார்கள். இதன் மூலம் மீட்படைய தேவையானது எது? என்பதை உணர்த்தும் இந்த முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 67: 1-2. 4. 5,7

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக! அல்லது: அல்லேலூயா.

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். -பல்லவி

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

எருசலேம் கடவுள் வாழும் உறைவிடம். எனவே அத்திருநகருக்கு தூயஆவியார் அழைத்துச் சென்று கடவுளின் மாட்சியையும், ஒளியையும் இஸ்ரயேல் மக்களின் 12 குலங்களின் பெயர்கள் அதன் வாயில்களில் பொறிக்கப்பட்டிருப்பதையும் திருத்தூதர் யோவானுக்கு காட்டினார். எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர் அதன் ஆட்டுக்குட்டியே என்று எடுத்துரைக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. அன்புத் தந்தையே எம் இறைவா, உம் இறைஇரக்கத்தின் உடனிருப்பு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உம் சீடர்களோடு இருந்ததுபோல இன்று எம் திருஅவையில் உமது ஆற்றலினால் உத்வேகத்தோடு தங்கள் வாழ்வால் திருத்தந்தை முதல் கடைநிலை பொதுநிலையினர் வரை அனைவரும் நற்செய்தியின் தூதுவர்களாக திருஅவையை வழி நடத்த வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. உம்மைக் கண்டு கொள்ள எம் இதயத்தைத் திறந்த எம் இறைவா! எம் வாழ்வில் உம் வார்த்தைகளாலும், நீர் செய்யும் அற்புதங்களாலும் எங்கள் குடும்பத்திலுள்ள நாங்கள் அனைவரும் இறைநம்பிக்கை மேன்மேலும் வளரவும், எம்மாவு சீடர்களை வழி நடத்தி அவர்களுடன் தங்கியது போல எம் இல்லங்களில் தங்தி எங்களுக்கும் உம் ஆசீர் வழங்கிட வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3.ஏழைகளின் துணையாளரே எம் இறைவா! இன்று ஏழைகள் மீது திணிக்கப்படும் பொருளாதார நெருக்கடிகள், வரிவிதிப்புகள் மூலம் சமூகத்தின் பல இடங்களில் ஏழைகள் நசுக்கப்பட்டு, அவர்களின் உழைப்புகள் சுரண்டப்படாமல், அவர்கள் வாழ்வாதாரங்கள் மேன்பட்டு, நற்சான்றோர்களாக வாழ அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.குழந்தைகள் விண்ணரசின் செல்வங்கள் என்று மொழிந்த எம் இறைவா! நீர் கொடுத்த செல்வங்களாகிய எங்கள் பிள்ளைகளை நாங்கள் பொறுப்புடன் வளர்க்கவும், அவர்களுக்கு இறை அச்சத்தையும் தூய வாழ்வுக்கான சிந்தனைகளை அறியச் செய்திடவும், தம் கடமைகளை உணர்ந்துத் தூயக் கிறிஸ்துவ வாழ்வு வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.உறவின் ஊற்றாகிய இறைவா! இன்றைய சூழலில் கிறிஸ்துவத்திற்கு எதிராக எழுப்பப்படும் அநீதிகள், வன்முறைகள், கொலைகள், தீவிரவாத செயல்கள் இவை அத்தனையும் உமது கருணைமிகு இரக்கத்தால் அனைவரும் உண்மையை உணர்ந்து அனைத்து மாந்தரும் ஒற்றுமையோடும், நீதி, நேர்மையோடும், ஒருவர் ஒருவரை புரிந்து கொண்டு மனித மாண்புகள் செழித்தோங்க வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Thursday, May 12, 2022

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 14:21ஆ-27
திருவெளிப்பாடு 21:1-5அ
யோவான் 13:31-33அ, 34-35


திருப்பலி முன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே! பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறுக் கொண்டாடங்களில் கலந்து இயேசுவின் புதிய கட்டளையை அறிந்து கொள்ள ஆவலுடன் வந்துள்ள உங்கள் அனைவருக்கும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!

நம் வாழ்க்கையே ஒரு பயணம் தான். இந்தப்பயணத்தில் நாம் மகிழ்வோடு பயணிக்க வேண்டுமென்றால் தியாக அன்பு நம் அனைவரிலும் இருக்க வேண்டும். “நான் உங்களை அன்புச் செய்தது போல நீங்களும் ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள்” என்ற இயேசுவின் அன்புக் கட்டளையை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கின்றது.

பர்னபா, பவுல் இவர்களின் வெற்றியின் காரணம், பர்னபா பவுலடியார் மீது கொண்டுள்ள தன்னலமற்ற அன்பையும், தியாக அன்பையும் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் அழைப்பை ஏற்ற அவரது அடிச்சுவட்டில் வாழ நம்மையே இறைவனுக்கு அர்ப்பணிப்போம். அதற்கான இறையருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசகமுன்னுரை:

பவுலும் பர்னபாவும் மனம் தளர்ந்தவர்களுக்குத் 'துன்பங்கள் வழியே தாம் இறையரசுக்குள் நுழைய முடியும்' எனக் கற்பிக்கின்றனர். 'செபித்து, நோன்பிருந்து, இறைவனுக்கு ஒப்புக்கொடுத்துத் தலைவர்களை நியமிக்கின்றனர். இதில் இவர்கள் தங்கள் மக்கள்மேல் கொண்டிருந்த அக்கறையும், பொறுப்புணர்வும் தெரிகிறது.  இப்படியாக, இயேசுவின் புதிய கட்டளையை வாழ்ந்துக் காட்டி, அன்பின் வழியாகத் தாங்கள் இயேசுவின் சீடர்கள் என்பதற்குச் சான்றுப் பகர்கின்றத்  திருத்தூதர் பணிகள் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
 

பதிலுரைப்பாடல்

பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்!
திருப்பாடல்: 145: 8-9,10-11,12-13அஆ.

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர். தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும். உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள். உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு. உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

இரண்டாம் வாசகமுன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில், 'புதிய வானகமும், புதிய வையகமும் இறங்கி வருவதைக்' காட்சியில் காண்கின்றார் யோவான். அவர் கூறும் ஐந்து கருத்துக்கள். 1. அன்பின் முதற்படித் தீமைக் களைவது. 2. 'இதோ நான் அனைத்தையும் புதியனவாக்குகிறேன்'. 3. 'இனி கடவுளின் கூடாரம் மனிதர்கள் நடுவே!' . 4. 'இறைவன் அவர்களோடு!'  5. . 'அவர்கள் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.' அன்பின் கரம் கண்ணீர் துடைக்க வேண்டும். இந்த வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! `ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளின் மன்றாட்டுகள்:


1.அன்பின் இறைவா! உம் அன்புக் குழந்தைகளாகிய திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக் கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்றுப் பிறரை அன்பு செய்து வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.எம்மோடு என்றும் பயணிக்கும் எம் இறைவா, எங்கள் வாழ்க்கையில் எல்லாநிலைகளிலும் கலப்படங்களையே பார்த்துப் பழகிய நாங்கள் களங்மில்லாத, கலப்படமற்ற அன்பை எங்கள் குடும்பங்களிலும், நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்தில் விதைத்துப் புதியதொரு விண்ணகத்தை இன்றே இவ்வையகத்தில் கண்டு மகிழத் தேவையான அருள் வரங்களை அன்புடன் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. 'அன்புத் தீவினையில் மகிழ்வுறாது' என்ற பவுலடியார் வார்த்தைகளுக்கு இணங்க உலகில் உள்ள தீவிரவாதிகள் இயேசுவின் அன்பான ஆழமும், அகலமும், நிபந்தனையும், எல்லையும் இல்லா அன்பை உய்த்து உணர்ந்துத் தீவிரவாதத்தைக் கைவிட்டு அனைவரும் அமைதியில் வாழத் தேவையான மனமாற்றத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்புத் தந்தையே எம் இறைவா! மாந்தர்களின் பேராசையால் நாங்கள் இழந்த இயற்கைச் செல்வங்களை மீண்டும் பெற்று வளமுடன் வாழவும், ஏழ்மையை எதிர்நோக்கித் தள்ளப்படும் விவசாய மக்களின் வாழ்வாதாரங்கள் மேன்மைபடவும், நீர் ஆதாரங்கள் செழித்தோங்க வேண்டிய மழையைப் பெற்றிடவும் அருள்மாரிப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. நம்பிக்கைக் கொள்வோரைச் சூழந்து நிற்கும் பேரன்பு தெய்வமே! எம் குடும்பங்களின் பிள்ளைச் செல்வங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். கல்வித் தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கும் அவர்கள் தங்கள் நிலை உணர்ந்துச் சிறப்பாகச் செயல்படவும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கருத்தாய் கவனித்துக் கொள்ளவும், அதற்கு வேண்டிய நல்ல நற்சுகமும், அரவணைக்கும் அன்பையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 


www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, May 3, 2022

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு

  பாஸ்கா காலத்தின்  நான்காம் ஞாயிறு




இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருத்தூதர் பணிகள் 13: 14,43-52
திருவெளிப்பாடு 7: 9,14b-17
யோவான் 10: 27-30

திருப்பலி முன்னுரை:


பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறுக் கொண்டாடங்களில் கலந்து வந்துள்ள உங்கள் அனைவருக்கும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! ரையும் அன்புடன் வரவேற்கிறோம். இயேசுவின் குரலுக்குச் செவிசாய்க்கும் அனைவரும் இயேசுவின் உண்மைச் சீடர்கள் என்ற கருத்தை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது. நல்லாயனாம் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதோடு மட்டுமல்ல, அதைச் செயலில் வாழ்ந்துக் காட்டுகின்ற மக்களாக இருக்க வேண்டும். வெறும் வாய்ச்சொல் வீரர்களாக மட்டும் இருந்தால் அஃது ஒன்றுக்கும் உதவாது என்ற கருத்தை இன்றைய இரண்டாம் வாசகம் நம் முன்வைக்கிறது.

நான் தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் உலகில் சென்று பலன் தரும்படியாக நான் தான் உங்களைத் தேர்ந்துக்கொண்டேன் என்ற இயேசுவின் வார்த்தையைச் சிந்தித்துப் பார்த்தால் இறையழைத்தலின் மகிமையை நன்கு உணரலாம். இயேசுவின் அழைப்பை ஏற்ற அவரது அடிச்சுவட்டில் வாழ நம்மையே இறைவனுக்கு அர்ப்பணிப்போம். அதற்கான இறையருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:


தாங்கள் அறிவித்த நற்செய்திக்கு யூதர்கள் 'செவிமடுக்காததால்', தங்கள் நற்செய்தியை புறவினத்தாரிடம் கொண்டு செல்கின்றனர் பவுலும் பர்னபாவும். புறவினத்தார் இந்தப் புதிய நற்செய்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். புறவினத்தாரின் மகிழ்ச்சி, யூதர்களின் பொறாமையாக உருவெடுக்கிறது. ஆண்டவரை அறிதல் மனிதர்கள் நடுவில் பிளவை ஏற்படுத்துகிறது  இதை கூறும் இன்றைய முதல் வாசகமான திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்க கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5

பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள்,
அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி

 இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் யோவான் தன் ஆடுகளை அறிந்த இயேசு தானே ஆட்டுக்குட்டியாகத் தன்னை பலியாக்குகின்றார். இவரின் குரலுக்குச் செவிமடுத்து இவரைப் பின்பற்றியவர்களின் ஆடைகளை இவர் தன் இரத்தத்தால் தூய்மையாக்குகின்றார். பலியான ஆட்டுக்குட்டியே அவர்களை மேய்க்கின்றார். அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுகிறார்' என்று நமக்கு தெளிவுப்படுத்தும் வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


 1. எம் நல்ல மேய்ப்பனாம் எம் இறைவா! திருஅவை இறையழைத்தல் ஞாயிறைக் கொண்டாடும் இவ்வேளையில் உம் திருஅவையின் பணியாளர்களாகிய திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் குரலுக்குச் செவிசாய்த்து அவர் காட்டிய பாதையில் இனிதே பயணிக்கத் தேவையான அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. என்றுமே மாறாத அன்பு கொண்ட எம் இறைவா, இன்றைய சூழலில் நாங்கள் எங்கள் குடும்பத்தில் நல்ல தலைவர்களாகவும், சமுதாயத்தில் நல்ல வழிகாட்டிகளாகவும், தடுமாறுகிறவர்களுக்குப் புதிய பாதையாகவும், வாழ்வை இழந்தவர்களுக்கு வாழ்வாகவும் எம் ஆயனாம் இயேசுவின் பாதையில் தடம் மாறாதுப் பயணம் செல்லத் தேவையான அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அறுவடையே அதிகம் ஆட்களோ குறைவு என்று உம் பணிக்கு எம்மை அழைத்த இறைவா! தேவ அழைத்தல் எந்த நிலையிலும் உண்டு என்பதை உணர்ந்து, உமது பணிச் செவ்வனே செய்யவும், எம் தாய்நாட்டிலிருந்து உம் சேவைக்காய் வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் ஆயனின் பணிகளைச் சிறப்புடன் செய்திட நல்ல மனதையும், உடல்நலத்தையும், உம்மேல் உறுதியான நம்பிக்கையுடன் அருட்பணிகள் செய்திட வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. 'அன்பு தீவினையில் மகிழ்வுறாது' என்ற பவுலடியார் வார்த்தைகளுக்கு இணங்க உலகில் உள்ள தீவிரவாதிகள் இயேசுவின் அன்பான ஆழமும், அகலமும், நிபந்தனையும், எல்லையும் இல்லா அன்பை உய்த்து உணர்ந்து தீவிரவாதத்தை கைவிட்டு அனைவரும் அமைதியில் வாழ தேவையான மனமாற்றத்தை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எம் முன்னோருக்கு வழிகாட்டி நடத்திய தெய்வமே! எம் இறைவா! கல்வியாண்டு இறுதிதேர்வை எழுதி வரும் எம் அன்பு பிள்ளைகளுக்காக உம்மிடம் வேண்டுகிறோம். படிப்பதற்கு நல்வழிகாட்டி, அவற்றை மறக்காமல் சரியான விடைகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, சமூகத்தில் உயர் நிலைக்கு வர தேவையான ஞானத்தையும், உம்மில் நம்பிக்கைப் பெற்றவும் உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

www.anbinmadal.org


Print Friendly and PDF