Tuesday, February 23, 2021

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்:


தொடக்க நூல் 22:1-2,9-13,15-18
உரோமையர் 8:31ஆ-34
மாற்கு 9:2-10  

திருப்பலி முன்னுரை:


அன்பார்ந்த இறைமக்களே!
சென்ற ஞாயிறு சிந்தனையில் பாலை நிலத்தில் இயேசுவைச் சந்தித்த நாம், இன்று மலையுச்சியில் அவரைச் சந்திக்க வந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, இருவேறு மலைகளில் நிகழும் இரு வேறுபட்ட, முற்றிலும் மாறுபட்ட நிகழ்வுகள் இந்த ஞாயிறு, நமது சிந்தனைக்கு தரப்பட்டுள்ளன. இவ்விரு நிகழ்வுகளில் ஆபிரகாம் வாழ்வில் நிகழ்ந்த ஒரு கொடுமையான சோதனையை நமது சிந்தனைகளின் மையமாக்குவோம்.

மகனைப் பலி கேட்ட இறைவன், ஆபிரகாமுக்கு மலையுச்சியில் இறை அனுபவத்தை அளிக்கிறார். நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு மலையுச்சியில் சீடர்களும் இறை அனுபவம் பெறுகின்றனர். இயேசுவின் உருமாற்றம் என்ற அந்த இறை அனுபவம் பெற்ற சீடர்களிடம் இறைவன் பலியை எதிர்பார்க்கிறார். வேதனையை அனுபவித்தபின் இறை அனுபவத்தைப் பெறுவதும், இறை அனுபவத்தைப் பெற்றபின், வேதனைகளை அனுபவிக்க தயாராவதும் வாழ்வில் நாம் சந்திக்கும் ஓர் உண்மை.

மலையின் உச்சியில் இறை அனுபவம் பெற்ற அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் மலையைவிட்டு இறங்கிய சீடர்களைப்போல், நாமும் இந்த இறை அனுபவத்தை இத்திருப்பலியில் பெற்று சராசரி வாழ்வுக்குத் திரும்ப வேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாமல் தவிப்பவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம்.

உருமாறிய இறைமகனைக் கண்ணாரக் கண்ட சீடர்களை அழைத்துக் கொண்டு, இயேசு மலையிலிருந்து இறங்குகிறார். எதற்காக? மக்களை உருமாற்ற. மக்களை உருமாற்றும் பணியில் நாமும் இணைவோம் வாருங்கள்.


வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:

ஆபிரகாமை இறை நம்பிக்கையின் தந்தை என்கிறோம். நமது இறை நம்பிக்கை எத்தகையது? இன்னல், இடர்ப்பாடுகள் நேரும்போது கடவுளை முழுமையாக நம்புகிறோமா?  நமது இறை நம்பிக்கை எத்தகையது என்பதைச் சிந்திக்க இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் ஒரு கொடுமையான சோதனையை சந்திக்கிறார்.  இதனைக் கவனமுடன் கேட்டு நம்மைச் செம்மைப்படுத்த வேண்டிய காலம்  இத்தவக்காலம் என்பதை உணர்ந்துச் செயல்படுவோம்.


பதிலுரைப்பாடல்

திபா 116: 10,15. 16-17. 18-19

பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

`மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. -பல்லவி

ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். - பல்லவி

இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்; உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

 
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியானர் கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எதிராக யார் செயல்பட முடியும்? என்ற வினா எழுப்புகின்றார். அவரின் உடனிருப்பு நம்பும் பொழுது நம்மை யார் குற்றம் சொல்லமுடியும? சிலுவையில் தன் சாவை ஏற்று இறந்த பின் உயிருடன் கடவுளின் வலப்பக்கம் இருக்கும் இயேசுவின் உடனிருப்பை நம்பும்படி நம்மை அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.''


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. அருட்கொடைகளின் நாயகனே எம் இறைவா! எம் திருஅவையின் திரு ஆட்சியாளர்கள், தங்கள் வாழ்வில் உம் சொற்களால் ஊட்டம் பெற்று நம்பிக்கை வாழ்வில் தளர்ச்சியுற்ற வேளையில் சோர்ந்து விடாமல், உம் நம்பிக்கை உன்னை நலமாக்கியது என்றும் வார்த்தையை வாழ்வாக்கிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மில் என்றும் வாழும் இறைவா! மாந்தரின் சிறப்புக்கு அளவுகோலான பிற மாந்தருக்கும், பிற உயிரினங்களுக்கும் அவர் காட்டும் அன்பு, இரக்கம், மன்னிப்பு, சமாதானம், சமத்துவம் என்பவைகளை எம் வாழ்வில் கடைப்பிடித்து இயேசுவின் சாட்சிகளாய் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அனைத்திற்கும் ஊற்றான எம் இறைவா! இன்று எம் நாட்டில் நிலவும், சிறுபான்மை மத மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை, தீவிரவாதம் இவைகள் உம் அருள் இரக்கத்தினால் ஒழிந்திடவும், எல்லோரும் இந்தத் தேசத்தின் மன்னர்கள் என்ற தெளிந்தச் சிந்தனையை மதவாத சக்திகள் புரிந்து கொண்டு செயல்பட உம் தூயஆவியினால் அனைவரும் உண்மையான மனமாற்றத்தை உணரத் தேவையான அருளைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஏழைகளின் அருள் துணையே எம் இறைவா! ஏழைகளுக்கு உதவுகின்றவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான் என்ற வார்த்தைக்கு ஏற்ப எம் சொல்லாலும், செயலாலும் உண்மைக்குச் சான்றுப் பகர, ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசம் திருஅவையில் இன்னும் ஒரு கொடிய நோயாகவே இருக்கின்றது. இந்த நிலை மாற நீர் அனைத்து மாந்தரும் மனமாற்றம் பெற்றுத் தளரா மனதுடன் ஏழைமக்களுக்கு உதவி புரியத் தாராள மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுன்றோம்.


5. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எம் இளையோர், இயேசுவின் சிலுவை நண்பர்களாக வாழ்ந்து, துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், மலை அனுபவத்தில் 'இவருக்குச் செவி கொடுங்கள்!' என்ற உமது கட்டளையை மனதில் பதிவு செய்து, இத்தவக்காலத்தைப் பயன்படுத்தவும், அதன் மூலம் புதுவாழ்வு அடைய வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

Monday, February 15, 2021

தவக்காலம் முதல் ஞாயிறு

     தவக்காலம் முதல் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்:


தொடக்க நூல் 9:8-15 |   1பேதுரு 3: 18-22  |   மாற்கு 1: 12-15  

திருப்பலி முன்னுரை:


ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்கத் திருச்சபை நம்மை அழைக்கிறது. தவக்காலம் புத்துயிர் தரும் வசந்தகாலம். ஆம் பழைய வாழ்விலிருந்து புது வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும் ஒரு நல்லகாலம். சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கிய அம்சம், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற உண்மைகளை நாம் உணரலாம்.

சோதனைகளுக்கும், அவற்றின் மூல காரணமான தீய சக்திகளுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால் உள்ளத்தில் நம் உறுதி, நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் ஒரு சோதனை. சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ்மனதில் உள்ள தீய நாட்டங்கள், மிருக உணர்வுகள் இவைகளைத் தட்டி எழுப்பும் சோதனைகள் சக்தி மிகுந்தவைதான். உண்மை தான். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவைகளோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும், உறுதியான மனமும் உள்ளன. இதையும் நாம் நம்ப வேண்டும்.

“சோதிக்கப்படுவது வேறு, சோதனையில் விழுவது வேறு.” இயேசு சோதிக்கப்பட்டார். ஆனால், சோதனையில் விழவில்லை. நாமும் சோதனைகளைச் சந்திக்கும்போது, அந்த இறைமகன் சொல்லித்தந்த பாடங்களையும், அவர் சொல்லித்தந்த அந்த அற்புத செபத்தின் வரிகளையும் நினைவில் கொள்வோம். "எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தீமைகளிலிருந்து எங்களைக் காத்தருளும்." என இன்றைய திருப்பலியில் இயேசுவை போலச் சோதனைகளை வென்றிட இறையருள் வேண்டிடுவோம்.

முதல் வாசக முன்னுரை:


அழிவுகளிலும் அற்புதங்களை நிகழ்த்தும் இறைவனை நமக்கு நினைவுறுத்துகிறது இன்றைய முதல் வாசகம். நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் இறுதியில் இறைவன் புதியதொரு வாக்குறுதியை அளித்தார். அந்த வாக்குறுதியின் ஓர் அடையாளமாக வானவில்லை விண்ணில் பதித்தார். அழிவிலிருந்து அற்புதங்களை உருவாக்கும் இறைவனின் வார்த்தைகள் கவனமுடன் கேட்போம்.



பதிலுரைப்பாடல்


திபா 25: 4-5. 6-7. 8-9
பல்லவி: ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை.

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி

ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். -பல்லவி

ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி

 

இரண்டாம் வாசக முன்னுரை:


கடவுள் இரக்கமுள்ளவர். நேர்மையானவர். எளியோரை நேர்வழியில் நடத்தி அவர்களுக்குத் தம் புதிய வழித்தடங்களைக் கற்பிப்பவர் என்று எண்பித்தார். கிறிஸ்து நம் அனைவருக்காகவும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இவரின் இறப்பின் வழியாக நாம் அனைவரும் வாழ்வு பெற்றோம். அந்த வாழ்வில் இறுதிவரை நிலைத்திருக்கப் புனித பேதுரு இன்றைய இரண்டாம் வாசகத்தில் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். அந்த அழைப்பிற்கு செவிமெடுப்போம்



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. அழிவுகளிலும் அற்புதங்களை நிகழ்த்தும் இறைவா! தவக்காலத்தைத் தொடங்கியுள்ள உம் திருஅவையில் உள்ள அனைவரும் நீர் அளித்த அருட்சாதனங்களின் மேன்மைகளை உணர்ந்து, அதன் வழியாக உமது இறையரசை அடைய வேண்டிய மனமாற்றத்தையும், அதற்கான தவ வாழ்க்கையை மேற்கொள்ளத் திறந்த மனதையும் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைவருக்கும் தந்தையாகிய இறைவா! ஒரே குடும்பமாகக் கூடியுள்ள எம் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மைப் பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறை கொண்டு வாழவும், சோதனைகளைச் சுகமான சுமைகளாக மாற்ற உம் வார்த்தைகளின் படி வாழ்ந்திடும் மனத்திடனை அவர்களுக்கு நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3 நலமானதெல்லாம் நல்கிடும் இறைவா! எம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழ இத்தவக்காலம் உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எம் இளையோர், இயேசுவின் நண்பர்களாக வாழ்ந்து, துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், சோதனைகளை வென்றடுத்த இயேசுவை மனதில் பதிவு செய்து, இத்தவக்காலத்தைப் பயன்படுத்தவும், அதன் மூலம் புதுவாழ்வு அடைய வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. சோதனைகளிலிருந்து எங்களை விடுவிக்க வல்லவரே எம் இறைவா!இந்த பெரும் தொற்றுநோய் காலத்தில்  எல்லா சோதனைகளிலிருந்தும், வேதனைகளிலிருந்தும்  எங்களை விடுவித்து நலமும் வளமும் பெற்று, எமக்கடுத்திருப்பவர்களுக்கு உதவிடும் நல் மனம் தந்து, அனைவரையும் அன்புப் பாராட்ட தேவையான வரங்களை தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

  www.anbinmadal.org


Monday, February 8, 2021

பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு

  பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்:


லேவியர் 13:1-2, 44-46
1கொரிந்தியர் 10:31-11:1
மாற்கு 1: 40-45 

திருப்பலி முன்னுரை:

பொதுக்காலம் ஆறாம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இறைகுலமே, இறைஇயேசுவில் திருவடியில் அமர்ந்து நலம் பெற உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

மருத்துவருக்கெல்லாம் மருத்துவராம் இயேசு கிறிஸ்து தொழுநோயாளி ஒருவருக்கு நலமளிக்கும் நிகழ்வே இன்றைய வாசகத்தின் மையக்கருத்து. தொழுநோயாளர் இறைமகன் இயேசுவை அணுகுகிறார். அவரது குணப்படுத்தும் ஆற்றலை நம்புகிறார். பரிவு கொண்டு அவரை இயேசு தொட்டுக் குணமாக்கினார். இயேசுவிற்குச் சாட்சியாகிறார்.

குணமளிப்பவர் இறைவனாக இருப்பினும் நம் நம்பிக்கையே, அதுவும் அசையா ஆழ்ந்த நம்பிக்கையே குணமளிக்கும் என்பதைக் கடந்த வாரங்களில் நாம் வாசிக்கக் கேட்டோம். இன்று உலகம் முழுவதும் ஆட்கொள்ளப்பட்ட தொற்றுநோய் காலத்தில் நமது நம்பிக்கையைச் சோதித்துப் பார்ப்போம் அது எவ்வாறு உள்ளது என்று?

குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை ஒருவர் மனதில் உதிப்பதுதான் அவர் குணம் பெறுவதற்கான முதல் படி என்று சென்ற வாரம் சிந்தித்தோம். நோயுற்றவர்கள், மனிதப்பிறவிகளுக்குரிய மரியாதைப் பெறுவது அவர்கள் குணம் பெறுவதற்கான முதல் படி என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பயில்கிறோம். நாம் நம்பிக்கைப் பெறவும், சிறப்பாகக் கொரோனா நோயாளர்கள் அனைவரும் நலம் பெறவும் இன்றைய திருப்பலியில் இறைவனிடம் மனமுறுக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

ஒருவரின் வாழ்வில் நோய் அதுவும் தொழுநோய் வந்தால் அவர் படும் இன்னல்கள் எண்ணிலடங்கா. யூதச் சமுதாயத்தில் தொழுநோய் என்பது பாவத்தின் சம்பளமாகப் பார்க்கப்பட்டது. மோசேவின் கட்டளைப்படி அந்த நோயாளித் தனிமைப் படுத்தப்பட்டு நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவராய் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார் என்பதாகும். இவ்வாசகத்திற்குச் செவிமெடுக்கும் நாம் இறைவனில் நம்பிக்கைக் கொண்டு அனைவரும் நலமடைய வேண்டுவோம்.

பதிலுரைப்பாடல்


திபா 32: 1-2, 5, 11
பல்லவி: ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம்.
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். -பல்லவி

`என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். -பல்லவி

நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடிகளார் தாம் கிறிஸ்துவைப் பின்பற்றி நடப்பது போல நம்மையும் அவ்வாறு நடக்க அழைக்கிறார். எதைச் செய்தாலும் அதை இறைவனின் மாட்சிக்காகச் செய்யுங்கள் என்கிறார். அவரின் ஆழ்ந்த அர்த்தமுள்ள அறிவுரையைக் கவனத்துடன் கேட்டு நாமும் வேறுபாடுகளைக் களைந்து இறைமாட்சியில் மகிழ்ந்திடுவோம்.
 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. ஆண்டவர் உருவாக்கும் புதிய உலகில் நீதித் தழைத்தோங்கும் என்ற எங்களுக்கு வாக்களித்துள்ளீரே இறைவா! அத்தகைய நீதி நிறைந்த உலகை உருவாக்கும் பணியில் திருஅவையில் உள்ள அனைவரும் ஆர்வமுடன் இணைந்து உமக்கு உண்மையான கருவிகளாகச் செயல்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பரிவன்பமிக்க எம் தந்தையே, இறைவா! எம் பங்கிலுள்ள ஏழைகள், திக்கற்ற எளியோர்கள், வறியோர்கள், முதியோர்கள், அனாதைகள் ஆகிய அனைவருக்கும் இரக்கம் காட்டும். அவர்கள் நோய்நெடியின்றி வாழவும், குறிப்பாகத் தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படவும், நலம் வேண்டியும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3 அனைவருக்கும் தந்தையாகிய இறைவா! சிறார் முதல் இளைஞர்கள் வரை உமது பொற்பாதங்களில் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் ஏறெடுக்கும் கல்வி மற்றும் கலாச்சாரம், நமது பண்பாட்டிற்கும், வாழ்க்கைத் தரத்திற்கும் ஏற்றதாகவும், பயிலும் மாணாக்கர்கள் தங்கள் கல்வியைச் சிறந்த முறையில் கற்றிட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இளைஞனே எழு! எழுந்து ஒளிவீசு என்ற எம் இறைவா! கலாச்சார மாற்றங்கள், மின்னணுச் சாதனங்கள், நவீனத் தகவல் தொடர்புகள் மேலோங்கி இளைஞர்கள் நிலைத் தடுமாற வைக்கும் இந்நாட்களில் அவர்கள் பிறரன்புப் பணிச் செய்ய நல்ல மனநிலையும், சேவை மனப்பான்மையும் பெற்று நேரிய இறையரசுப் பாதையில் பயணித்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. உமது சிறகுகளில் அடைக்கலம் தந்த இறைவா! போராட்டமே வாழ்க்கையாகிப் போன இக்காலக்கட்டத்தில் மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்கள் நலம் காக்க அரசியல்வாதிகளுக்கு நல்மனம் தந்து, மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுத்திடத் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

 

Monday, February 1, 2021

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு 

இன்றைய வாசகங்கள்:

யோபு 7:1-4,6-7
1கொரிந்தியர் 9:16-19, 22-23;
மாற்கு 1:29-39

திருப்பலி முன்னுரை:


பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இறைகுலமே, இறைஇயேசுவில் நலம் பெற உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.
ஒருவர் குணம் அடைவது, அவர் உள்மனதில் எழும் நம்பிக்கையில் ஆரம்பமாகிறது என்ற உண்மை இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையே இன்றைய ஞாயிறு வாசகங்களும் நமக்குச் சொல்லித் தருகின்றன. துன்பத்தின் சுமைத் தாங்க முடியாமல் தனிமையில் புலம்பிய யோபு இறுதியில் இறைவனிடம் சரணடைந்தார். அவர் வேதனைகளும், சோதனைகளும் சுகமாய் மாறின.
கடந்த நான்கு வாரங்களாகக் குணமளித்த இயேசுவைப்பற்றி நற்செய்தியில் கேட்டு வந்த நாம் இன்றும் அவரைக் குணமளிக்கும் வல்லவராகக் காண்கிறோம். ஆம் இயேசு வெறும் வார்த்தைகளால் மட்டும் நற்செய்தியைப் பறைச்சாற்றவில்லை. மாறாகத் தம் செயல்களிலும், வாழ்க்கையிலும் அதை அறிவித்தார். அவரின் குணமளிக்கும் வல்லமையால் உடல் நோயிலிருந்து புறவிடுதலையோடு, பாவத்திலிருந்து அகவிடுதலையும் தந்தார்.
இவ்வாறு தனது இறையரசுப் பணியில் இம்மை வாழ்வையும், மறுமை வாழ்வையும் ஒன்றிணைத்து வாழ்வாலும் வார்த்தையாலும் போதித்துத் தானே நடமாடும் நற்செய்தியானார். நாமும் இயேசுவைப் பின்பற்றி நடமாடும் நற்செய்திகளாக மாற இன்றைய திருப்பலியில் மனதார வேண்டிடுவோம்.



முதல் வாசக முன்னுரை:


வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத துன்பத்தில் எல்லோருமே சிக்கித் தவிக்கிறோம். இவ்வாறே இன்றைய வாசகத்தில் துன்பத்தின் சுமைத் தாங்க முடியாமல் தனிமையில் புலம்பி அழும் யோபு, இறுதியில் இறைவன் என்னைக் கொன்றாலும், அவரிடத்திலே நம்பிக்கை வைப்பேன் என்று தஞ்சமடைகிறார். எல்லாம் மறைந்துச் சுகமான சுமைகளாகவே மாறின. இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம். இறைவனில் நாமும் நம்பிக்கைக் கொள்வோம்.


பதிலுரைப்பாடல்


திபா 147: 1-2, 3-4, 5-6
பல்லவி: உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்.

நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். -பல்லவி

உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார். விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். -பல்லவி

நம் தலைவர் மாண்பு மிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது. ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:


நற்செய்தி அறிவிப்பது இறைவன் எனக்களித்த பொறுப்பு. எத்தனை இடர்கள் வந்தாலும் அதிலிருந்து நான் பின்வாங்கமாட்டேன். அப்பணியில் என்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயல்பட்டு நான் எல்லாருக்கும் எல்லாமும் ஆனேன் என்று கூறும் புனித பவுலடியார், இறைச்செய்தியை வார்த்தைகளால் போதிக்காமல் தன் வாழ்வால் போதித்தது போல அவரின் ஆழ்ந்த அர்த்தமுள்ள அறிவுரையைக் கவனத்துடன் கேட்டு நாமும் நற்செய்தியாவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்.  அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. நலன்களுக்கெல்லாம் தொடக்கமும் நிறைவுமாகிய இறைவா! எம் திருஅவையில் உள்ள அனைவரும் எத்தகைய துன்பங்கள் சோதனைகள் வந்தாலும் இறை நம்பிக்கைக் குறையாமல் உமது அன்பின் சாட்சிகளாக நற்செய்திகளின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வாக மாற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியாக வாழ்ந்திடத் தேவையான வரங்களை அருள்மாரிப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உண்மையான பக்தியும் அமைதியும் அளிக்கும் இறைவா! எம் பங்கில் அன்பியங்கள் வழியாக உமது இறைநம்பிக்கை வளரத் தலைவர்களும், உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுப்பதிலும், மன்னிப்பதிலும், சமுக, பொருளாதர உதவிகள் செய்வதிலும், வேதனைகளிலும், சோதனைகளிலும் ஆறுதலாகவும் இருந்து எங்களுக்கு அடுத்திருப்போருக்கு இயேசுவின் நற்செய்திகளாய் வாழ்ந்திட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் பேரின்பமாகிய இறைவா! எமது நாட்டு அரசியல் அவலங்களால் பசி, பட்டினி, நோய்கள், குடிபோதை, வேலையின்மை என்று பாதிக்கப்பட்டு அவதியுறும் எம் ஏழைஏளிய மக்களைப் பாரும். அவர்கள் வாழ்க்கை நிலை மேலோங்கி எல்லாரும் நலம் வாழப் பகிர்ந்தளிக்கு நல்ல மனதினை எங்களுக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. என்றென்றும் இரக்கமுள்ள இறைவா! உமது பிள்ளைகள் இளையோராகிய நாங்கள், எமது தேவைகளில் முதன்மையான தேவை நீரே, என்று உணர்ந்து நாங்கள் முழுமையாக உம் கரம் பற்றிக் கொள்ளவும், நிலைவாழ்வுப் பெற்று உம்மை அடையவும், இறைநம்பிக்கையில் வளரவும்  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. இரக்கமே உருவான எம் இறைவா! இன்று உலகில் உம் திருஅவைக்கும், அதன் மக்களுக்கும் எதிராக இழைக்கப்படும் அநீதிகள், குற்றசாட்டுகள், இறையச்சம்யின்மையால் நேர்ந்திடும் ஆபத்துகள் போன்ற எல்லா இன்னல்களிலிருந்து எம்மைக் காத்து உலகமாந்தர்கள்  எங்களை இயேசுவின் சீடர்களாய் எம்மைக் கண்டு கொள்ளவும், உமது ஒளியில்  அனைவரையும் ஒன்று சேரும்படி இறையரசை அறிவிக்கத் தேவையான ஞானத்தையும் உள்ள உறுதியையும் மீது பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம். 


www.anbinmadal.org