Tuesday, January 25, 2022

பொதுக்காலம் ஆண்டின் நான்காம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் நான்காம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எரேமியா: 1:4-5,17-191
1கொரி 12:31-13:13
லூக்கா 4:21-30

திருப்பலி முன்னுரை:

இறைமகன் இயேசுவில் பிரியமானவர்களே! ஆண்டின் நான்காம் ஞாயிறுத்  திருவழிபாட்டிற்கு அன்புடன் வாழ்த்துகிறோம்.. அன்பே கடவுள்! இன்றைய வழிபாட்டின் மையக்கருத்து அன்பு. நற்செய்தியும் இறைவாக்கினர் பணி எவ்வளவு துன்பங்கள்  நிறைந்தது என்றும், ஓரு உண்மையான இறைவாக்கினருக்கு அளவற்ற பிறரன்பு  தேவைப்படுகின்றது என்பதையும் இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கின்றது. பவுலடியார் அன்பின் பரிமணங்களை அடுக்கிக்கொண்டே செல்கிறார். அன்புத் தான் இந்த உலகிலேயே மிகச் சிறந்த பண்பு என்று விளக்குகிறார்.


எரேமியா இறைவாக்கினரும், இறைமகன் இயேசுவும் இக்கட்டான நேரங்களில் இறைவனின் துணையை இறுதிவரைக் தங்கள் வாழ்வில் உணர்ந்தக் காரணத்தால்தான் எல்லாச் சவால்களையும் எதிர்கொண்டு துணிச்சலோடு தங்கள் பணி வாழ்வில் முன்னேற முடிந்தது. அன்பே உருவான இறைவன் அன்புச் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இந்த அவனிக்கு வந்தார். அவர் இந்த அன்பே எடுத்துரைக்கும் பணியாளராக அன்று போல் இன்றும் திருமுழுக்கு மற்றும் மற்றத் திருவருட்சாதனங்கள் வழியாக நம்மையும் அழைக்கிறார். நம்மில் எத்தனைபேர் இந்த அழைப்பை ஏற்று வாழ முன் வருகிறோம்? சிந்தித்து நம் வாழ்வில் அன்பின் அழைப்பை ஏற்றுக் கொள்ள இறையருளை வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.

வாசகமுன்னுரை:

முதல்  வாசகமுன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் வழியாகக் கடவுள் நம்மை எப்பொழுது அறிந்திருந்தார்? எப்பொழுது நம்மைத் திருநிலைப்படுத்தினார்? அவர் நமக்குக் கொடுத்த பணிகள் என்ன? என்று எடுத்துக் கூறி, நம் அனைவருக்கும் விடுக்கும் செய்தி என்னவெனில் இறைவனின் தூதனாய் இறையரசை அறிவிப்பதுதான். இவ்வாசகத்திற்குச் செவிமெடுத்து ஆண்டவரின் அழைப்பையும், அவரின் உடனிருப்பை உணர்ந்து கொள்வோம்.

இரண்டாம் வாசகமுன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் அன்பின் பரிமாணங்களைப் பற்றிக் கூறும் போது அன்புத் தான் எல்லாவற்றிலும் மிகச் சிறந்தது. அனைத்தும் அன்பின் அடிப்படையில் அமையாமல், போட்டி, தற்புகழ்ச்சி, பெருமை இவற்றின் அடிப்படையில் அமைந்தால் அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதை மிகத் தெளிவாகச் சித்தரித்துள்ள இந்த அன்பின் கவிதையைக் கேட்டு மனதின் ஆழத்தில் பதிவு செய்து மகிழ்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 71: 1-2. 3-4. 5-6. 15,17

பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.

ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். -பல்லவி

 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.  என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். -பல்லவி

 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை.  பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். -பல்லவி

என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும்  எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது. கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும்  நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 


அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1.திருப்பொழிவுச் செய்யப்பட்டவர்களை, அனைத்துத் தீங்கிலிருந்தும் விடுவித்துக் காப்பவரே எம் இறைவா! திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை அனைவரையும் உமது இறைதூதுப்பணியாளராக நீர் விடுத்த அழைப்பை நன்கு உணர்ந்து உமது அன்பும், உடனிருப்பே எங்களுக்கு இவ்வுலகில் எல்லா வெற்றிகளையும் தேடித்தரும் என்பதை உணர்ந்துச் செயலாற்ற வேண்டிய நல்ல வரங்களை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.உயர்ந்த இடத்தில் எம்மை நிலையாய் நிற்கச் செய்யும் இறைவனே! எங்கள் குடும்பங்கள் உமது அன்பை நிறைவாய் பொழிந்து, நாங்கள் உம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக வாழவும், உமது அன்பின் சாட்சிகளாக இவ்வுலகில் வலம் வரவும், இறையரசை அறிவிப்பவர்களாகவும் வாழவேண்டிய அருள்வரங்களை நிறைவாய் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நீதியோடும், நேர்மையோடும் செயலாற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றவரே எம் தந்தையே இறைவா! அன்பே பிரதானம் என்பதை எம் நாட்டுத் தலைவர்களும் மக்களும் உணர்ந்திடவும்; பொறுமை, பரிவு போன்ற அன்பின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வில் பெற்றுச் சமத்துவச் சமுதாயத்தை அமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பே உருவான இயேசுவே, இன்றைய நாட்களில் உலகமெங்கும் நிலவும் போட்டிகளுக்கும், பயங்கரவாதத்திவிற்கும் முக்கியக் காரணமான அன்பில்லாமையைப் போக்கிடவும், அகதிகளாய் பிறநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த மக்களுக்கு வேண்டி அடைக்கலமும், அவர்களின் தனித்தன்மைகள் போற்றப்படவும், எல்லோரையும் தம் சகோதர சகோதரிகளாய் ஏற்றுக்கொள்ள நல் எண்ணங்களை அருளவேண்டி உம்மை மன்றாடுகிறோம்.

 www.anbinmadal.org

                                                                      Print Friendly and PDF

Monday, January 17, 2022

பொதுக்காலம் ஆண்டின் மூன்றாம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின்  மூன்றாம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


நெகேமியா 8:2-6,8-10 1
கொரிந்தியர் 12:12-30
லூக்கா 1:1-4, 4:14-21

திருப்பலி முன்னுரை:


இறைமகன் இயேசுவின் அன்பிற்கு இனியவர்களே! அன்பு வாழ்த்துக்கள். இன்று ஆண்டின் மூன்றாம் ஞாயிறு. இயேசுவின் முதல் அறிக்கை! அவரின் பொதுவாழ்வில் தனது பணி என்ன? அஃது எப்படிப்பட்டதாக இருக்கும்? தான் யாருக்காகத் தரணிக்கு வந்தார்? என்னவெல்லாம் நடக்கும் என்பதை இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு வழியாக வெளிப்படுத்துகிறார். அவர் திருமுழுக்குப் பெற்றுத் தூயஆவியாரின் வல்லமையால் அதிகாரத்தெனியுடன் இறையரசை அறிவிக்கும் பணியின் தொடக்க நிகழ்வுகளாக இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.


இன்றைய முதல் வாசகம் கூறும் இறைவார்த்தையின் வடிவில் விளங்கும் இறைவனின் மகிழ்ச்சியே இஸ்ரயேல் மக்களின் வலிமையாக இருக்கப் போகிறது. அந்த 'ஆண்டவரின் மகிழ்வு' இன்று நம்மிடையே இருக்கின்றதா? திருஅவையின் உறுப்பினர்கள் பலராக இருந்தாலும், அவர்களை ஒன்றிணைப்பது தூயஆவியாரும், அவரின் கொடைகளுமே என்று சொல்லும் பவுலடியார் வார்த்தைகளையும் நம் மனத்தில் பதிவுச்செய்து சிந்தித்து நம் வாழ்வில் மாற்றங்களைக் காண இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் முழு உள்ளத்தோடு கலந்து கொண்டு மன்றாடுவோம். வாரீர்.

வாசகமுன்னுரை:

 முதல்  வாசகமுன்னுரை:

 
இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோனிலிருந்து அடிமையாக இருந்த இஸ்ரயேல் மக்கள் விடுதலைப் பெற்று தங்கள் நாட்டிற்கு வருகிறார்கள். நெகேமியா மற்றும் எஸ்ரா தலைமையில் இறைவார்த்தைகளை முதல்முறையாகக் கேட்டார்கள்.  ஆண்டவர் நம் காதுகளில் விழும் வார்த்தையாக மாறிவிட்டார் என்று ஆண்டவர் உடனிருப்பை உணர்ந்ததால் அழுகின்றனர்! ஆண்டவரின் மகிழ்வு அவர்களிடையே இருந்ததை அவர்கள் உணர்ந்தது போல நாமும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுத்து ஆண்டவரின் உடனிருப்பை உணர்ந்து கொள்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை

 
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது தூய ஆவியாரும், அவரின் கொடைகளுமே என்று சொல்லும் பவுலடியார், உடலும், உறுப்புகளும் என்ற உருவகத்தை முன்வைத்து, திருஅவையில் துலங்க வேண்டிய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கொரிந்து நகர மக்களுக்கு அறிவுறுத்துகின்றார். நாம் கிறிஸ்துவின் உடல். அதாவது, நாம் அனைவரும் இணைந்து வந்தாலே அது கிறிஸ்துவின் உடலாக மாறிவிடுகிறது. உறுப்புகளின் ஒருங்கிணைப்பே உடல் எனக் கூறும் இவ்வாசகத்தைக் கவனமுடன் மனம் திறந்துக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 14

பல்லவி: ஆண்டவரே! உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. -பல்லவி

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. -பல்லவி

ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி

என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.என்றும் மாறாத மிகுந்த இரக்கமுள்ள இறைவனே! திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரும்  கடவுளால் அன்பு செய்யப்படுபவர்களாகவும், நாங்கள் அனைவரும் ஓன்றிணைந்து வாழ்ந்தலே, அது கிறிஸ்துவின் உடலாக மாறிவிடும் என்பதை உணர்ந்தவர்களாக வாழ வரங்கள் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எம்மைக் கைப் பிடித்து நடத்தும் தந்தையே! எம் இறைவா! எங்கள் குடும்பங்கள் இயேசுவின் மறைஉடலில் இணைந்திருக்கவும், ஒருவரை ஒருவர் அன்பிலும், செபத்திலும் தாங்கிக் கொள்ளவும், துன்பங்களில் ஆறுதலாக இருக்கவும், மகிழ்ச்சிப் பெருமையோடு பகிர்ந்துக் கொள்ளவும், குடும்பங்களில் உமதருள் நிறைந்திருக்கவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உம் வருங்காலம் வளமானதாயிருக்கும், உன் நம்பிக்கை வீண் போகாது என்று உறுதி அளித்த எம் இறைவா! எம் நாட்டுதலைவர்களின் சகிப்புத்தன்மை மேன்மேலும் வளர்ந்திடவும், மக்களின் நலத்திட்டங்கள் அனைத்துத்தரப்பு மக்களையும் குறிப்பாக வாழ்வாதரங்கள் இழந்துத் தவிக்கும் ஏழைஎளிய மக்களுக்குச் சென்று அடையவும், அனைவரும் நலமுடன் வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உமது பணித்திட்ட அறிக்கை, உமது இலக்கின்  தெளிவாகக் காட்டகிறது. இறைக்குலமாகிய நாங்களும் உம்மைப் போல, பணி இலக்குகளை உருவாக்கி, அவற்றைச் செயல்படுத்த அருள்தாரும். இன்று நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை, நாம் வைத்திருக்கும் இறைவார்த்தையில் இருக்கின்றது. அந்த இறைவார்த்தையை வாசிக்கவும், கேட்கவும் நாங்களும் முயற்சி செய்ய இறைவா அருள் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. நலமளிக்கும் இறைவா! புதிய தொற்று நோயின் தாக்கத்திலிருந்து  உம் மக்களை காப்பாற்றும். குழப்பமான இந்நேரத்தில் மருத்துவருகளுக்கு எமத ஞானத்தை கொடுத்து அவர்கள் மக்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவும், மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளிலிருந்து காத்திட வேண்டுமென்ற இறைவா அருள் லரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

                                                                     Print Friendly and PDF

Monday, January 10, 2022

பொதுக் காலம் ஆண்டின் 2ஆம் ஞாயிறு

  பொதுக் காலம் ஆண்டின் 2ஆம் ஞாயிறு



 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.



எசாயா 62:1-5
1கொரிந்தியர் 12:4-11
யோவான் 2:1-12

 திருப்பலி முன்னுரை


இறைமகன் இயேசுவின் அன்பிற்கு இனியவர்களே! அன்பு வாழ்த்துக்கள். இன்று ஆண்டின் இரண்டாம் ஞாயிறு. இயேசுவின் முதல் புதுமை! அவரின் பொதுவாழ்வில் அன்னை மரியாளின் கரிசனை அன்பால் ஓர் இனிய சுவையாகப் புதுமையுடன் வெளிப்படுகின்றார். அடுத்தவரின் துயரம் அறிந்த அன்னையாக "அவர் சொல்வதை எல்லாம் செய்யுங்கள்" என்று அழைக்கின்றார். ஆம் அன்னையின் அழைப்போடு இயேசுவும் தன் பொதுவாழ்வைத் தொடங்குவதாக இந்த நிகழ்வு அமைகின்றது. அதைப்போல் மரியாள்  பேசிய கடைசி வார்த்தைகளும் இதுவே

வெறும் தண்ணீரை, குணம் மணம் இல்லாத் தண்ணீரை இரசமாக மாற்றி மகிழ்ச்சி நிறைந்தோட செய்கிறார். இயேசுவின் வருகைச் சோகத்தை இன்பமாக மாற்றுகிறது. நம் உப்புச் சப்பற்ற வாழ்வை இயேசுவிடம் ஒப்படைத்தால் மட்டும் போதும் அதை இரசனையுள்ள வாழ்வாக, மகிழ்ச்சி நிறைந்த, குறிக்கோள் நிறைந்த வாழ்வாக மாற்றுவார். இயேசு வந்தால் நம் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் நிறைவாகக் கலந்து கொண்டு மன்றாடுவோம். மாற்றத்தைக் காண்போம். வாரீர்.
 

 வாசகமுன்னுரை :


 முதல் வாசகமுன்னுரை

சீயோன் கடவுள் வாழும் உறைவிடம். எனவே அதன் மீட்பும், வெற்றியும் மீட்பின் செயல்கள் அனைத்தும் வெளிப்படும் வரை கடவுளின் மௌனம் வெளிப்படுகின்றது. அந்த மீட்பினால் வரும் மகிழ்ச்சியைப் பிற இனத்தார் மன்னர் அனைவரும் காண்பது பற்றியும், கடவுளின் திருக்கரத்தில் மணிமகுடமாய் விளங்குவது பற்றி ஒரு நாளும் கைவிடப்பட்ட நிலையால் இருக்கப்போவதில்லை என நலம் நல்கும் நம்பிக்கையின் வாக்குறுதியைத் தரும் முதல் வாசகமான எசாயாவின் இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
 

இரண்டாம் வாசகமுன்னுரை

இறைவன் தூயஆவியின் கொடைகளால் நம்மை நிரப்புகிறார். அவைகள் வலுக்குறைந்த நமக்கு வலிமையூட்டுகின்றன. நம்பிக்கைத் தருகின்றன. பல்வேறு அருள்கொடைகளைத் தூய ஆவி வழங்குவது திருஅவையின் பொது நலனுக்காகவே, அதன் வளர்ச்சிக்காகவே. எனவே இவ்வரங்களைப் பெற்ற எவரும் இறுமாப்புக் கொள்ளவோ, தம்மைத்தாமே உயர்ந்தவராகக் கருதவோ கூடாது என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் வெளிப்படுத்தப்பட்டும் கருத்துகளைக் கவனமுடன் மனம் திறந்துக் கேட்போம்.

 பதிலுரைப் பாடல்
திபா 96: 1,2. 2-3. 7-8. 9-10

 பல்லவி: அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப்  போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். -பல்லவி

அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி

மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;  மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.  ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். -பல்லவி

தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். வேற்றினத்தாரிடையே  கூறுங்கள்; ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி

நற்செய்திகக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலுயா அல்லேலுயா நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலுயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1.அருளும் இரக்கமும் கொண்ட இறைவனே! திருச்சபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் விழுமிங்களையும், வார்த்தைகளையும் அவரவர் வாழ்க்கையில் கடைபிடித்து இயேசுவின் சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வரவும், இறையரசை அறிவிக்கும் பணியில் இணைந்து பயணம் செய்யவும், மாமன்ற செயல்பாடுகள் எந்தவிதத் தயக்கமின்றித் தொடர்ந்து செயல்படவும் வேண்டியவரங்களை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2.எங்களை உமது உரிமை சொத்தாகத் தேர்ந்து கொண்ட எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இறைமகனின் வருகையை உணர்ந்திடவும், தெளிவற்றுத் திகைத்து நிற்பவர் தெளிவுப் பெறவும், கொள்கைப் பிடிப்பின்றி வாழ்பவர் கொள்கைப் பிடிப்புடன் வாழவும், பிறரன்பில் தழைத்திடவும் உமது அருள்வரங்களை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டும் இறைவனே, எம் நாட்டுத் தலைவர்களை நல்வழிப்படுத்தி, மக்களின் நலன்களைப் பேணவும், நாட்டின் இயற்கைச் செல்வங்கள் பாதுகாத்திடவும், தீவிரவாதம் ஒழிந்துச் சகிப்புத்தன்மை நிறைந்திடவும், மக்கள் அனைவரும் ஓரே சமூகமாகச் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டிய வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. முன்னும் பின்னும் எங்களைச் சூழ்ந்திருக்கும் எம் அன்பு இறைவா! இந்த நல்ல நாட்களில் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்த எம் உழைக்கும் மக்களின் வாழ்வில் விவசாயம் பெருகவும், அதன் மூலம் ஏழை எளியோர்கள் பொருளாதரம் பல்கிப்பெறுகிடவும், அவர்தம் பிள்ளைகள் கல்விச்செல்வங்கள் நிறைவாகப் பெற்றிடவும், இயேசுவின் வருகையால் மாற்றங்கள் பெற்றிடவும் இறைவா அருள் வரம் தர வேண்டுமென்று

5. அன்பின் இறைவா, கொடைகள், தொண்டுகள், செயல்பாடுகள் பலவாயினும் இவையாவும் உமது மாட்சிமையை வெளிப்படுத்தவே செயல்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து அதற்கேற்ப எங்கள் பணிகளையும், கடமைகளையும் செய்யும் வரத்தையும் மனதையும் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 www.anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, January 5, 2022

ஆண்டவரின் திருமுழுக்கு விழா

  ஆண்டவரின் திருமுழுக்கு விழா




இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா 40:1-5,9-11
தீத்து. 2:11-14,3:4-7
லூக்கா 3: 15-16,21-22

திருப்பலி முன்னுரை:

ஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு. இறைமகனின் திருமுழுக்கு விழா. இறைமகன் இயேசு பிறந்து முப்பது ஆண்டுகள் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்துக் கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தவர். இப்பொழுதுப் பொதுவாழ்வில் நுழையும் முன் அவருக்குத் தேவைப்பட்டது தூய ஆவியாவனர் ஆற்றலும், துணிவுடன் தன் மூன்று ஆண்டுக் காலப் பொது வாழ்வில் மக்களைச் செம்மைப்படுத்த, தந்தையாம் கடவுளின் அருளும் தேவைப்பட்டபோது, அவர் திருமுழுக்கு யோவானிடம் சாதாரண மக்களைப் போல வந்து நின்றுத் திருமுழுக்குப் பெறும் வேளையில் ஆவியானவர் இறங்கி வர, தந்தை தன் ஓரே மகனிடம் புரிப்படைவதையும் வானத்திலிருந்து கேட்டக் குரலொலிச் சுட்டிக்காட்டுகின்றது.

திருமுழுக்கு பெற்ற நாம் இன்று அதை வெறும் சடங்காகப் பாராமல் திருமுழுக்கின் வெளிப்பாடுகளை உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயலுகிறோமா என்ற கேள்விகுறி நம் உள்ளத்தில் எதிரொலிக்கின்றது. திருமுழுக்கின் முலம் இறைவனின் பிள்ளைகளான நாம் அதை நம் பொதுவாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இப்பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் தூயஆவியின் ஆற்றலையும் பெற மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசகமுன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா மூலமாகக் கடவுளின் அன்புக் கட்டளைகளுக்கு வாழ மறுத்து அந்நியநாடுகளில் ஊதாரியாக அலைந்து திரிந்த மக்களுக்குக் கடவுள் புது வாழ்வை அறிவிக்கின்றார். மன்னிப்பும் வழங்குகிறார். அவர் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டார். உங்களை மீண்டும் கூட்டிச் சேர்ப்பார் என ஆறுதல் மொழிகளைத் தருகிறார். இறைவனின் இரக்கமும் அன்பும் நிறைந்த இந்த இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


இரண்டாம்  வாசகமுன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசு நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்த தம்மையே ஒப்படைத்தார். நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார் என்ற இறைஇயேசுவின் இரக்கத்தைப் பதிவுச் செய்யும் திருத்தூதரின் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

 பதிலுரைப் பாடல்:


திபா 104: 1-2. 3-4. 24-25. 27-28. 29-30
பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
1. என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். -பல்லவி
2. நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்!    காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்; தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். -பல்லவி
3. ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்; அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. -பல்லவி
4. தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன. நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. -பல்லவி
5. நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.  உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;  மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -பல்லவி
 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. நலம் தரும் புத்தாண்டை அளித்த இரக்கத்தின் தந்தையே இறைவா! திருமுழுக்கு வழியாக உமது பிள்ளைகளாக்கிய எம் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார், பொதுநிலையினர் அனைவரின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். தூய ஆவியால் நிறைவுப் பெற்ற இத்திருஅவை இறையச்சத்திலும், ஞானத்திலும், தன்னலமற்ற சேவையிலும் தலைச் சிறந்து விளங்க உமது அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அஞ்சாதே என்று வாழ்த்திப் புத்துயிர் தந்த எம் கனிவானத் தந்தையே இறைவா! எங்கள் குடும்பங்களில் திருமுழுக்கின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அருங்கொடைகளை உணர்ந்த உம் வார்த்தைகளின்படி வாழ்க்கை நடத்தவும், வரும் தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுதலைப் பெற்றிட வேண்டிய வரத்தை எமக்கு அளித்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. புதுயுகம் படைத்திட உம் துணையாளரை எமக்கு அளித்த தந்தையே இறைவா! எம் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் தன்னலமற்ற சேவையாலும், மதம், இனம், மொழி, என்ற பாகுபாடு இல்லாமல் தங்கள் பணிகளைச் செய்து நீர் விரும்பும் சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கவும் வேண்டிய வரத்தை அவர்களக்குத் தரவேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமக்கு மன்னிப்பு அளித்து எமக்குப் புதுவாழ்வை வாக்களித்த தந்தையே இறைவா! எம் இளைய சமுதாயம் தனது வாலிப நாட்களில் நீர் தரும் நலன்களைக் கண்டு கொண்டு அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளத் தூயஆவியானவரின் அருங்கொடைகளை அபரிமிதமாகப் பொழிந்தருளவேண்டும் என்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.கருணையே வடிவான எம் இறைவா! கிறிஸ்துவத்திற்கு
எதிராய் உலகெங்கும்  செயல்படும் மக்களைக் கண்ணோக்கும். அவர்கள் மனமாறி தங்கள் வன்முறையிலிருந்து விடுபட்டு, தனிமனித உரிமைகளை மதிக்க, அவர்களுக்கு நல்மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்
 

 
 WWW.ANBINMADAL.ORG

                                                                      Print Friendly and PDF