Saturday, December 30, 2017

*புத்தாண்டு ஞாயிறுத் திருப்பலி*

*புத்தாண்டு ஞாயிறுத் திருப்பலி*
*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*
*திருப்பலி முன்னுரை *
அன்பு இறைமக்களே!

புத்துணர்வும் புத்தாடை மகிழ்ச்சியும் உள்ளமெல்லாம் பூரிப்பில் புலர்ந்திடும் புதிய ஆண்டின் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள அன்பர்களுக்கு மூவொரு பெருவிழாகளைக் கொண்ட இன்று இத்திருஅவை அன்புடன் வரவேற்கின்றது.


பாலன் பிறந்து எட்டாம் நாள் இயேசு என்று பெயரிட்ட நன்னாள், அன்னை மரியாள் இறைவனின் தாய் என்ற சிறப்பான நன்னாள், புத்தாண்டின் முதல் நாள் என மூன்று பெருவிழாகள் இறைவனின் நன்மைத்தனத்தையும் அவருக்குள்ள பேரிரக்கத்தையும் நமக்கு மீண்டும் எடுத்துரைக்கிறது.


ஒரு புதிய ஆண்டையை நமக்காகக் கொடுத்த இறைவன் அதைச் சிறப்பிக்க இருபெரும் கொடைகளையும் தந்துள்ளார். எல்லாபெயர்களுக்கும் மேலான வல்லமையுள்ள இயேசுவின் திருநாமம். மற்றொன்றுக் கரிசனை அன்புடன் என்றும் நம்மை அரவணைத்துக்கொள்ளும் தாய் மரியாளின் உடனிருப்பு. இவ்விரு மாபெரும் சக்திகள் போதாத இந்த உலகை எதிர்கொள்ள


ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!

ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!

ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!

இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்:

நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.


இன்று முதல் வாசகத்திலிருந்து தொடங்கும் இறையாசீராக வரும் வார்த்தைகளின் மூலம் உலகின் ஒளியாம் இயேசுவின் திருஒளியில் ஒளிர்ந்த இடையர்களின் உள்ளத்தைப் போல நம் உள்ளங்களும் ஒளிர்வதாக! இறைஇயேசு தன் தாயாம் அன்னை மரியாளை நமக்குத் தாயாகத் தந்ததின் மூலம் எல்லா இறையாசீர்கள் ஒட்டுமொத்தமாகத் தரும் அமைதி நம் அனைவரின் உள்ளங்களில் நிறைவாய்ப் பொழிவதாக!


ஆண்டின் முதல் நாளில் அன்னை மரியாவைப் போல இயேசுவை அனைவருக்கும் வெளிப்படுத்தி இந்தப் புதிய ஆண்டில் நிறை அமைதியைப் பெறுக்கொள்ளத் திருப்பலிக் கொண்டாடங்களில் முழு உள்ளத்தோடு செபிப்போமாக! வாரீர்!


*வாசக முன்னுரை**முதல் வாசகம்* புலந்திருக்கும் புதிய ஆண்டின் முதல் வாசகம் எண்ணிக்கை நூலிலிருந்து வரும் பழைய ஏற்பாட்டுக் குருமரபினரின் வாழ்த்துடன் தொடங்க நம் திருச்சபை அழைக்கின்றது. இவ்வார்த்தைகளில் மூன்று வகை ஆசீர்களை உள்ளன. ஒன்று கடவுளை ஆண்டவர் என்று திரும்பத் திரும்ப அழைப்பதால் வரும் ஆசீர்! இரண்டு அவரது முகத்தின் திருவுருவின் காட்சி ஓர் ஆசீர்! மூன்று நிறைஒளி ஆசீர்! அருளும், அத்திருமுகத்தில் ஒளிரும் சமாதானமும் வெளிப்படும் அவரது திருப்பார்வை ஒளிரும் இடத்தில் அவரது திருமுகத்திலிருந்து வெளியாகும் ஒளியில் நிலைத்திருக்கவேண்டும் என்று எடுத்துரைக்கும் இனிதே கேட்டு இறையாசீர் பெறுவாம்.


*இரண்டாம் வாசகம்*


கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வரும் இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கடவுளின் பேரிரக்கத்தைப் புடமிட்டுக் காட்டுகின்றார். காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். தன் ஏற்றுக்கொண்ட மக்களின் மீட்புக்காகத் தன் ஒரே மகனை அனுப்புகின்றார். இவ்வாறு அன்பு செய்யும் கடவுளுக்கு நாம் திரும்பச் செய்யும் நன்றிக் கடன் என்ன? என்பதைச் சிந்திக்கத் தூண்டும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


பதிலுரைப்பாடல்


பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

திருப்பாடல் 67: 1-2, 4, 5,7கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். பல்லவி


 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி


கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி
*மன்றாட்டுகள்*1. மாட்சியையும் மேன்மையையும் எங்களுக்கு முடியாகச் சூட்டியுள்ள எம் தந்தையே இறைவா! புதிய ஆண்டில் நுழையும் திருஅவைக்கு நிறைவாக அன்பு, அமைதி, ஆசீர்களைப் பொழிந்து எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் உமது அமைதியின் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், அதனைக் காணும் அனைவரும் கிறிஸ்துவின் நித்திய ஒளியை இவ்வுலகிற்குச் சாட்சியாகப் பகர்வதற்கு வேண்டிய அருளைப் பொழியுமாறு இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.2 உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகிய எம் இறைவா! இவ்வாண்டு உலகில் நிலவும் வன்தமுறைகள், தீவிரவாதம், மொழிபோர், இனப்படுகொலைகள், ஆயுதப்போர்கள் இவைகள் மறைந்திடவும், மனித வாழ்வு தழைக்கத் தன்னிலை உணர்ந்து வலிமை மிகுந்த நாடுகள், ஏழைநாடுகளிடம் அகிம்சை வழியில் நீதியோடும், நேர்மையோடும் நடந்து கொள்ளவும், உதவிக்கரம் நீட்டிட் தேவையான மாற்றங்களை ஏற்படவேண்டுமென்று இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.3.எம்மைத் தேடிவந்த அன்பே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இப்புதிய ஆண்டில் உமது திருமுகத்தில் ஒளி என்றும் இருக்கச் செய்தருளும். எங்களின் வாழ்வாதரங்கள் சிறப்பாக அமையவும், எம் இல்லங்களில் நடைபெற வேண்டிய நல்ல காரியங்கள் எந்தக் குறைகளும் இன்றி நடைபெறவும், அதன் வழியாகக் குடும்ப உறவுகள் வலுவடைந்து, அன்பும், மகிழ்ச்சியும், அமைதியும் நிறைவாய், நிலையாகப் பெற்று உம் சாட்சிகளாக இச்சமுகத்தில் உலாவர உம் அருட்கொடைகளைப் பொழிய வேண்டுமென்று இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.4. உம் பாதைக்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்த எம் இறைவா! உம் நீதியின் ஒளி ஏழை எளியறோர், வறுமையில் வாடுவோர், தனிமையில் தவிப்போர், ஆதரவற்றோர், வாழ்வு இழந்தோர் ஆகிய அனைவருக்கும், உம் ஒளியின் நிழலில் இளைப்பாறுதல் அடைந்திட உம் அன்பின் ஒளியில், அகில உலகம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைஇயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
5. அற்புதங்கள் நிறைந்த இயற்கையை எமக்காய் படைத்த எம் இறைவா, உம் படைப்பின் மகிமையை உணராமல் புதிய முயற்சி, அறிவியல் வளர்ச்சிகள், சமூக முன்னேற்றம் என்ற போர்வையில் இயற்கைக்கு எதிராக நாங்கள் அறிந்தும், அறியாமல் செய்த அனைத்துத் தவறுகளையும் மன்னித்துப் படைப்பின் மேன்மை உணர்ந்து இயற்கையோடு நாங்கள் ஒன்றித்து வாழத் தேவையான ஞானத்தைப் பொழிந்து நல்வழி நடந்திட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.6. நெருக்கடியான வேளையில் நீர் எமக்கு அரணும் அடைக்கலமுமாயிருந்த எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் செய்த அனைத்து நன்மைகளுக்கும், எங்களால் ஏற்பட்ட அனைத்துத் தவறுகளையும் மன்னித்து எங்களுக்கு மீண்டும் ஒரு மறுவாழ்வுப் பெற்றிடப் புதிய ஆண்டை ஆசீராக் கொடுத்து அனைத்து மானுடம் அமைதி, மனமகிழ்வு, அன்பின் அடையாளமாகவும் எல்லோரும் எல்லாமும் பெற்றுச் சமத்துவம் தழைத்தோங்கிட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...

www.anbinmadal.org

Friday, December 29, 2017

திருக்குடும்ப விழா 31-12-2017


இன்றைய வாசகங்கள்


தொ.நூ. 15: 1-6, 21:1-3
எபிரேயர் 11:12,17-19
லூக்கா 2:22-40
 

முன்னுரை:


குடும்பம் ஒரு கோவில். அதில் கணவனும் மனைவியும் தீபங்கள். அந்தத் தீபத்தின் ஒளிதான் குழந்தைகள். இவ்வாறு அனைவரும் ஒன்றுபட்டு ஒளிமயமான  வாழ்வை உருவாக்க நமக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகத் திருக்குடும்பம் அமைந்திருக்கிறது. குழந்தை என்னும் பயிர் வளமாக வளர வேண்டுமென்றால் அதன் விளைநிலமான குடும்பம் உருப்படியாக இருக்க வேண்டும். எனவே நமது குடும்ப வாழ்வை இன்றைய இறைவார்த்தையின் ஒளியில் சிந்திப்போம்.

கணவன் மனைவி பிள்ளைகள் என்ற மூன்று சக்திகளும் அன்பில் சங்கமிக்கும் ஆலயம். அந்தச் சக்தியை உற்பத்தி செய்கிறவர் இயேசுகிறிஸ்துவே. வசதிகளையும் செல்வங்களையும் சோப்பது அல்ல. மாறாக பாசங்களையும், உறவுகளையும் சேர்ப்பதுதான் குடும்பம். இதற்கு அடிப்படை தேவை ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, இரங்கும் உள்ளம் இத்தகைய உயரிய பண்புகளை நம் உள்ளத்தில் கொண்டு நம் குடும்ப வாழ்வைத் தொடர இத் திருக்குடும்பப் பெருவிழா திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் மன்றாடுவோம்

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:


 இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் ஆபிராம் தன் மனைவி மூலம் தனக்கு வாரிசு இல்லையே! என் அடிமையின் மகன் அல்லவா என் வாரிசாக போகிறான் என்று வருத்தப்பட்டபோது கடவுள் ஆபிராமை அழைத்துச் சென்று விண்மீன்களைப் போல எண்ணிலடங்காத அளவிற்கு உன் சந்ததியினரைப் பெருகச்செய்வேன் என்று வாக்களித்தார். நம்பிக்கையின் தந்தையாம் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் மகனை அளித்து அவரின் சந்ததியினரைப் பெருக நிகழ்வை விவரிக்கும் இவ்வாசகத்தை நம்பிக்கையுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் நம்பிக்கை நாயகன் ஆபிரகாமின் ஆற்றலாக விளங்கிய நம்பிக்கையை எடுத்துரைக்கின்றார். அந்த நம்பிக்கையால் அவர் தன் ஒரே மகனை பலிக் கொடுக்கும் அளவிற்கு வாக்களித்த இறைவன் மீது நம்பிக்கைக் கொண்டிருந்தார். அதே நம்பிக்கையே அவரின் சந்ததியை பலுகிப்பெருகச் செய்தது. இவ்வாறு கடவுளிடம் நம்பிக்கையை வலியுறுத்தும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்


பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டுள்ளார்.
திருப்பாடல்: 105:1-6, 8-9

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர் தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர் தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி
அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர் தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! பல்லவி
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்கு தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா

 

மன்றாட்டுகள்:


1.உம் திருக்குடும்பம் வழியாக எமக்கு வழிகாட்டிய  இறைவா! திருபேரவையாம் இத்திருச்சசபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரின் உள்ளத்தில் உமது அன்பையும், பரிவிரக்கத்தையும் நிறைவாய் பொழிந்து ஒற்றுமையுடனும், அமைதியுடனும் இறையரசை அறிவிக்கும் கருவிகளாய் வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா!  எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து,  எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க ஏழைப்போல் பிறந்த இயேசுவே, உமது பிறப்பின் மகிழ்ச்சியை எங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களோடும் குழந்தைகளோடும் பகிர்ந்து கொள்ளவும்,துன்பங்களினால் அவதியுறும் மக்களுடன் பணிபுரியவும், அவர்களின் வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திட  உதவிடவும் வரமருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா! இந்த நல்ல நாளில் கணவன் மனைவி பிள்ளைகள் என்று மகிழ்வுடன் வாழ, இவ்வலகில் எதிர்நீச்சல் போட்டு அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த வரம் அருள் தரம் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, December 23, 2017

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா 25-12-2017

 

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா 25-12-2017இன்றைய நாளில் நடைபெறும் இரவு,காலை மற்றும் பகல் என மூன்று திருப்பலிகளுக்கான வாசகக்குறிப்புகள், முன்னுரைகள் மற்றும் மன்றாட்டுகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கவனமாக தேவையான திருப்பலிக்கானவற்றைத் தேர்வு செய்துக்கொள்ளவும்.


நள்ளிரவுத் திருப்பலி வாசகங்கள்


I. எசாயா 9:2-7
II. தீத்து 2:11-14
III. லூக்கா 2:1-14

திருப்பலி முன்னுரை:


நமக்காக ஒரு பாலன் பிறந்துள்ளார்,

இருள் சூழ்ந்த பனிப் பெய்யும் இரவு உள்ளத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் உவகையும் பொங்கிடும் இவ்வேளையில் கிறிஸ்து பிறப்புக் கொண்டாடங்களில் கலந்து கொள்ள வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

திருவருகைக்காலத்தில் நான்கு வாரங்களாக இயேசுவின் பிறப்பு விழாவிற்கு நம்மையே நாம் தயாரித்து வந்துள்ள இந்நேரத்தில் இப்பிறப்பு நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கும் கருத்து அன்பின் பகிர்தலே! எளிமையான இடத்தில் மீட்பராம் கிறிஸ்து ஏன் பிறந்தார்? இயேசு கிறிஸ்து, தான் மீட்க வந்த மக்களுடன் நிரந்தரமாகத் தங்க வந்தக் காரணத்தினால் அவர் விடுதியில் பிறக்கவில்லை, தொழுவத்தில் பிறந்தார். தீவனத்தொட்டி என்பது கால்நடைகள் தீனிப் பெற இருக்கும் சிறு தொட்டி. ஆனால் அஃது தரும் சிந்தனையாவது, இயேசுகிறிஸ்து உலகின் உணவாக வந்தார் என்றும், உலக மக்கள் அனைவரும் உணவுப் பெற, குறிப்பாக ஆன்மீக ஊட்டம் பெற உலகில் பிறந்தவர் தீனத்தொட்டியில் கிடத்தப்பட்டார் போன்ற பல சீரிய ஆழ்ந்தக் கருத்துகளை லூக்கா இன்றைய நற்செய்தியில் விளக்குகிறார். ஆகத் தன்னையே இவ்வுலகமக்களுக்குப் பகிர்ந்தளித்த இறைமகனுக்கு நம் பகிர்வு என்ன?


துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில் கிடத்தியிருக்கும் குழந்தையின் அரசத்துவத் தன்மையையும், உலகின் உணவாக விளங்கும் மீட்பர் தன்மையையும் உணர்ந்து இன்று நமக்கு அடுத்திருப்பவர்களுடன் அன்பைப் பகிர்ந்து அனைவருடன் நல்லுறவை வளர்த்து இறைசாட்சியாக வாழ்வதுதான் பாலன் இயேசுவுக்கு நமது நன்றியாக அமையும். இன்றைய கொண்டாடங்களில் இயேசுவை மையமாக இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு நம்பிக்கை, அன்பு, அமைதி, மகிழ்ச்சி இவற்றால் இயேசுவின் வருகையில் நிறைவாழ்வடைய இத்திருப்பலியில் கலந்திடுவோம்.நமக்கு ஒரு பாலன் பிறந்துள்ளார். வாரும் ஆராதிப்போம்!


வாசக முன்னுரை-

முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் காண இறைவன் தரும் எல்லா நலன்களையும் எடுத்துரைக்கின்றார். பேரொளியைக் காணச் செய்து மகிழ்ச்சியுறச் செய்தார். அவர்களின் சுமைகளை நீக்கினார். அவர்களை ஆட்சி செய்ய ”வியத்தகு ஆலோசகர், அமைதியின் அரசரைக் கொடுத்துத் தன் மக்களுக்கு நிலையான, நீதியோடும். நேர்மையோடும் கூடிய ஆட்சியை உறுதிப்படுத்தினார் என்று மகிழ்ந்து எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை


இன்றைய இரண்டாம் வாசகத்தில் நம்மை தேடிவந்த இயேசுவின் அருளால் நாம் இவ்வுலக வாழ்வின் நாட்டங்களிலிருந்து விடுபடவும், எல்லா நெறிகேடுகளிலிருந்து நம்மை தூய்மைப்படுத்தி நம் அனைவரையும் தமக்குறியவராய் மாற்ற தம்மையே ஒப்படைத்த்த் தியாகத்தை வியந்து கூறும் திருத்தூதா பவுலடியின் வார்த்தைகளை கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல் 96: 1-2,2-3,11-12,13

பதிலுரை: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா!


ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். -பல்லவி

அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.  பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி

விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -பல்லவி

ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி

மன்றாட்டுகள்.


1.எங்கள் வாழ்வின் மீட்பராக இயேசு கிறிஸதுவைக் கொடுத்த எம் இறைவா! விண்ணகம், மண்ணகத்தை நோக்கி அடியெடுத்து வைத்த 2017ஆம் ஆண்டில் உலகமாந்தர்கள் அனைவருக்கும் நலமும், அமைதியும், மகிழ்ச்சியையும் அளித்து ஒரே மந்தையாய் உம் திருஅவையின் வழிநடத்தும் அனைத்துத் தலைவர்களுக்கும் எமது அருட்பொழிவை நிறைவாய் பொழிந்துப் பாதுகாத்து வழி நடத்திச் செல்லத் தேவையான வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


2 ஏழ்மையில் இனிமைக் காணும் நாயகனே எம் இறைவா! இவ்வருடத்தின் இறுதிநாள்களில் இருக்கும் எங்களை பல்வேறு இயற்தைசீற்றங்களும், கடும் வெயில், வறட்சி, விவசாயச் சாகுபடிப் பற்றாக்குறை, மழையின்மை, புயல் பெரும்மழை போன்ற  இவை அனைத்திலிருந்து எங்கள் அனைவரையும் காத்து, பராமரித்து, உம் அன்பில் நிலைத்து நிற்க, உம் பணியைத் தொடர்ந்து ஆற்றிடத் தேவையான அருளைப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


3. குணப்படுத்தும் வள்ளலே எம் இறைவர்! இன்று உருவாகும் அநேக புதிய நோய்கள், அந்த நோய்களின் நிமித்தம் பாதிக்கப்பட்ட எம் முதியோர்கள் , சிறுவர் சிறுமிகள், அநாதைகள் , கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட எம் அன்பு சகோதரர் சகோதரிகள் இவர்கள் அனைவரும், உம் அன்பின் கரம் கொண்டு ஆசீர்வதித்துப் பாதுகாத்து வரும் புதிய ஆண்டில் உடல், உள்ள, ஆன்மீக நலம் பெற்று உம் சாட்சிகளாய் வாழ வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. விடுதலையும் வாழ்வுக் கொடுக்கும் இறங்கி வந்த எம் இறைவா இன்று எம் உலகில் உம் பிறப்பிற்காகவும், புதிய ஆண்டில் நல்வரவிற்காகவும் காத்திருக்கும் அனைத்து மாந்தருக்கும் பழமையைக் களைந்துப் புதிய சிந்தனைகள் நல்லெண்ணங்கள், ஒருவர், மற்றவருக்கு உதவக்கூடிய பிறன்புச் சிந்தனைகளைப் பொழிந்து நல்லுலகம் காணவும், உமது பிறப்பின் வழியாக ஏழை எளியவர்கள் வாழ்வ வளம் பெறத் தேவையாக அருள் வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5.திருக்குடும்ப நாயகனே என் இறைவா! இன்றைய உலகம் பல்வேறு அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்நாட்களில் குடும்பங்களில் ஏற்படும் உறவின் விரிசல்களிலிருந்து விடுபட்டு, மனிதர்கள், மனிதர்களோடு பேசக்கூடிய நிலைமாறிக் கைப்பேசி, தொலைதொடர்புச் சாதனங்கள் இவை தான் இன்று முக்கியமானவை என்ற சிந்னைகளோடு நில்லாமல் இவற்றைக் கடந்து இவையெல்லாம் நம் வாழ்வின் ஓர் அங்கம் தான் என்ற உண்மை நிலையை உய்துணர்ந்து வாழ உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.விடியற்காலத் திருப்பலிவிடியற்காலத் திருப்பலி வாசகங்கள்


I. எசாயா 62:11-12
II. தீத்து 3:4-7
III. லூக்கா 2:15-20

திருப்பலி முன்னுரை:விடியற்காலையில் பனிகொட்டும் இவ்வேளையில் ( (பகல் திருப்பலிக்காக) வாடைக்காற்று வீசும் இளம்காலை பொழுதில்) இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!

இன்று நமக்கோர் பாலன் பிறந்துள்ளார். கடவுளின் இரக்கப்பெருக்கின் கொடையாக நமக்கு மீட்பு என்றும் வெற்றி பரிசுக் கிடைத்துள்ளது. மனிதர்களின் மீட்புக்காக, நலனுக்காக, தன்னையே வழங்கவந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்தில், நம்மையே அடுத்தவருக்கு வழங்கும் வழிகளை நாம் இயேசுவே கற்றுத்தந்துள்ளார். அவரின் செயல்களின் என்றும் மிஞ்சி நிற்பது கடவுளின் பேரிரக்கமும், நன்மைத்தனமும், மனிதநேயமும் ஆகும். 

ஆம் இந்நாள்களில் மனிதநேயத்தின் மற்றோரு பரிமாணமான அன்பின் பகிர்வை. அடுத்திருக்கும் வறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரிடமும் உறவின் வாழ்த்துகள் மூலமும், உதவிகள் மூலமும் வெளிப்படுத்துவோம். உண்மையில் இன்று நம் உள்ளங்களில் வந்து பாலன் இயேசு பிறப்பதற்கு இந்நற்செய்ல்கள் வழிவகுக்கும்.!

இறைமகனின் அன்பின் பகிர்வாம் இத் திருப்பலிக் கொண்டாடத்தில் இடையர்கள் போல் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துப் பாடி உளமாறக் கலந்து கொண்டு இறைமகன் பாலன் இயேசுவின் அருளைப் பெற்றிடுவோம்.

முதல் வாசக முன்னுரை:-


இன்றைய முதல் வாசகத்தில் எசாயா கடவுளின் அளவற்ற அன்பைப் பற்றிப் பெருமையுடன் மகிழ்ந்து அறிக்கையிடும் செய்திகளைக் காணலாம். ஆண்டவரின் வெற்றிப் பரிசாக மீட்பு வருகின்றது. நீயோ, தேடிக் கண்டுபிக்கப்பட்டவள் என்றும் இனி கைவிடப்படாத நகர் என்றுரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:-


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசு கொணர்ந்த புதுபிறப்பாலும் தூயஆவியாலும் நிறைவாய் அளிக்கவிருக்கும் நிலைவாழ்வை உரிமை பேறாகப் பெற்றுக் கொள்ளப்போவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பகல் திருப்பலி


பகல் திருப்பலி வாசகங்கள்


I. எசாயா 52:7-10
II. எபிரேயர் 1:1-6
III.யோவான் 1:1-18திருப்பலி முன்னுரை

வாடைக்காற்று வீசும் இளம்காலை பொழுதில்) இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!

இன்று நமக்கோர் பாலன் பிறந்துள்ளார். கடவுளின் இரக்கப்பெருக்கின் கொடையாக நமக்கு மீட்பு என்றும் வெற்றி பரிசுக் கிடைத்துள்ளது. மனிதர்களின் மீட்புக்காக, நலனுக்காக, தன்னையே வழங்கவந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்தில், நம்மையே அடுத்தவருக்கு வழங்கும் வழிகளை நாம் இயேசுவே கற்றுத்தந்துள்ளார். அவரின் செயல்களின் என்றும் மிஞ்சி நிற்பது கடவுளின் பேரிரக்கமும், நன்மைத்தனமும், மனிதநேயமும் ஆகும். 
ஆம் இந்நாள்களில் மனிதநேயத்தின் மற்றோரு பரிமாணமான அன்பின் பகிர்வை. அடுத்திருக்கும் வறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரிடமும் உறவின் வாழ்த்துகள் மூலமும், உதவிகள் மூலமும் வெளிப்படுத்துவோம். உண்மையில் இன்று நம் உள்ளங்களில் வந்து பாலன் இயேசு பிறப்பதற்கு இந்நற்செய்ல்கள் வழிவகுக்கும்.!

இறைமகனின் அன்பின் பகிர்வாம் இத் திருப்பலிக் கொண்டாடத்தில் இடையர்கள் போல் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துப் பாடி உளமாறக் கலந்து கொண்டு இறைமகன் பாலன் இயேசுவின் அருளைப் பெற்றிடுவோம்.


பகல் திருப்பலி வாசகங்கள்:-


இன்றைய முதல் வாசகத்தில் எசாயா ஆண்டவரின் வாக்களித்த மீட்பு - மெசியா இவற்றைப் பற்றி பெரும் மகிழ்ச்சியுடன் செய்த பதிவுகளை காணலாம். ஆண்டவரின் செய்தியை அறிவிக்கவருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்தணை ஆழகாய் இருக்கின்றன என்று வருணிக்கும் எசாயா இடையர்களை எண்ணிதான் இப்படி சொல்லிருப்பரோ!  ”ஆண்டவர் வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். பிறஇனத்தரும் இதை காண்பர்.” எசாயாவின் மசிழ்ச்சியை நாமும் நாம் உள்ளத்தில் பகிர்ந்துகொள்வோம்.


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசுவின் பெருமை அருமைகளை எடுத்துரைக்கின்றார். இறைவாக்கினர்கள் மூலம் பேசி வந்த கடவள்  தன் மகன் மூலம் நம்மிடம் பேசியுள்ளதையும், அவர் தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். வானத்தூதர்களை விட மேன்மையானவர். என்று அவரின் மாட்சிமையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.மன்றாட்டுகள் மூன்று திருப்பலிகளுக்கும் பொதுவானது.

www.anbinmadal.org


மறவாமல் அன்பின் மடலின் கிறிஸ்மஸ் மலரை பார்வையிட அன்புடன் அழைக்கிறோம்.
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துகள்! 

Tuesday, December 19, 2017

திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு - 24-12-2017

திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு - 24-12-2017
இன்றைய வாசகங்கள்:

2 சாமு. 7:1-5,8-12,14,16 
உரோமையர் 16:25-27 
லூக்கா 1:26-38 


திருப்பலி முன்னுரை:


இறைஇயேசுவின் நாமத்தில் இனிய வாழ்த்துக்கள்.
தேடல்கள் நிறைந்த இவ்வுலகில் இறைவனின் அழைப்பை ஏற்று  திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலியில் விடைப் பெற்றிட வந்துள்ள இறைக்குலமே உங்களை அன்புடன் வரவேற்கிறோம்..
வாழ்வில் நாம் பல தேடல்களில் ஈடுபடுகிறோம். அத்தேடல்களுக்கு பல்வேறு வழிகளில் விடைகள், தீர்வுகள் வந்து சேருகின்றன. இந்தத் தீர்வுகள், பல வேளைகளில் நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வடிவத்தில் வந்து  சேருவதையும் நாம் உணர்ந்திருக்கிறோம்.
யூதேயா முழுவதும் உரோமைய அடக்குமுறை, அளவுக்கதிகமாக மக்களை வதைத்து வந்தது. அந்நாட்டில் வாழும் பெண்களுக்கு, எந்நேரத்திலும் படைவீரர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம். இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளம் கிராமத்துப் பெண் மரியா. சொந்த நாட்டிலேயே இரவும் பகலும் சிறையில் வதைக்கப்பட்டதைப்போல் உணர்ந்த மரியா தினமும் எழுப்பி வந்த வேண்டுதலுக்கு, இறைவன் விடை அளித்தார். மணமாகாத மரியாவை, இறைவனின் தாயாகும்படி அழைத்தார்.
தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, சமுதாய வாழ்வானாலும் சரி நமக்குத் தேவை, இறைவனிடம் சரணடையும் பணிவு; தகுந்த முடிவுகள் எடுக்கும் துணிவு. வானதூதர் மரியாவைச் சந்தித்த அந்நிகழ்வில் காணப்படும் பணிவையும், துணிவையும், இந்த கிறிஸ்மஸ் காலத்திலும், புலரும் புத்தாண்டிலும், நாம் அனைவரும் பெற, அன்னை மரியாவின் பரிந்துரையோடு இறைவனை மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

கடவுளுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்ற தாவீது மன்னனின் எண்ணம் நிறைவேறவில்லை. அது அவருக்கு மிகுந்த மனவேதனையளிக்கிறது. அப்போது கடவுள் தமது ஊழியன் நாத்தன் வழியாகப் பேசுகிறார். “நானே உன் வீட்டை கட்டுவேன். உன் வழித்தோன்றலின் அரசை நான் நிலை நாட்டுவேன். உனது அரசு என்றென்றும் நிலைத்திருக்கும்” என்ற கூறுவதை முதல் வாசகம் காட்டுகிறது. மன்னர் தாவீதின் வீட்டைத் தானே கட்டியெழுப்ப்ப் போவதாக இறைவனே வாக்களிக்கிறார்  என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனத்துடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தொன்று தொட்டு மறைந்திருந்த உண்மைகள் இறைவாக்கினர் வழியாக இப்பொழுது புறவினத்தாருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. என்றும் வாழும் கடவுளின்  கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. என்று கடவுளின் மாட்சியை எடுத்துரைக்கும் இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 89: 1-2. 3-4. 26,28
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.

ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.  உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. -பல்லவி
நீர் உரைத்தது: `நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. -பல்லவி
`நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். -பல்லவி

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "நான் ஆண்டவரின்

மன்றாட்டுகள்:


1.அன்பின் இறைவா திருவருகைக்காலத்தில் அன்பின் ஞாயிறாகிய இன்று திருஅவையில் இருக்கும் அன்பு திருஅவையில் மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் அனைத்து மாந்தருக்கும் கிறிஸ்துவின் அன்பின் நிறைவில் என்றும் நிலைத்து நிற்க வரவிருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அல்லனவற்றை அழித்து நல்லன செய்யும் இறைவா! எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும்  நேர்மையான வாழ்வு வாழவும்,  ஆணவபோக்கை விட்டு விட்டு குழந்தை உள்ளம் கொண்டவராய் வாழவும்,  அதனால் ஏற்படும் தற்காலிகமான தோல்வியை வென்று நிரந்திரமான வெற்றிப் பெற்றிட உழைப்பையும் உறுதியையும் தர வேண்டி வரவிருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

3.குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா, மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும் பெற்று வரும் விழாக்காலங்களில் இறைமகன் இயேசுவின் அன்பில் மகிழ்ந்திட உம் அருள் வேண்டுமென்று வரவிருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.உன்னைப் படைத்தவரை உன் இளமையில் நினைத்துக்கொள் என்று சொன்ன எம் இறைவா!  இளைஞர்கள்  இவ்விழாக் காலத்தில் நல்ல சிந்தனைகளையும், நற்செயல்களிலும், விசுவாச வாழ்வில் நிலைத்து நின்று கிறிஸ்துவின் பரிவன்பை தங்கள் வாழ்வில் எந்நாளும் சான்றுபகர தேவையான அருளைப்  பொழிய வேண்டுமென்று வரவிருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Friday, December 15, 2017

திருவருகைக் காலம் முன்றாம் ஞாயிறு - 17-12-2017

திருவருகைக் காலம் முன்றாம் ஞாயிறு - 17-12-2017


இன்றைய வாசகங்கள்:

திருப்பலி முன்னுரை:


இறைஇயேசுவின் நாமத்தில் இனிய வாழ்த்துக்கள்.
மனித சமுதாயம் என்ற குடும்பத்தில் இறைவன் ஒரு குழந்தையாய் பிறக்கப் போவதை மகிழ்வுடன் நாம் எதிர்பார்க்க, இன்றைய ஞாயிறு திருவழிபாடு நம்மை அழைக்கிறது. திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு இது. இந்த ஞாயிறை, மகிழும் ஞாயிறு என்று கொண்டாடுகிறோம்.
இன்றைய வருகைப் பல்லவியாக ஒலிக்கின்ற இறை வார்த்தைகள் ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார். மகிழுங்கள், மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள் என்று பவுல் அடியார் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறுவது நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. மகிழ்வு என்றால் என்ன என்பதை நாம் சிந்திக்க இது ஒரு நல்ல தருணம்.
குழந்தை வடிவில் இறைவன் வரும் இந்த கிறிஸ்மஸ் நேரத்திலும் அவரது பாதங்கள் நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பல அழகிய பாடங்களைப் பதி்த்துச்செல்ல வேண்டும். அந்தப் பாடங்களை நம் உள்ளங்களில் பதிக்க இந்த மகிழும் ஞாயிறு தரப்பட்டுள்ள வாசகங்கள் நமக்கு உதவியாக இருக்கும்.
இருள் சூழ்ந்த உலகில் தன் மீது ஒளியைத் திருப்பி இதோ நான் வருகிறேன் என்று இறைவன் சொன்னதே கிறிஸ்மஸ் பெருவிழா. அந்த ஒளியை இறைவன் மீது திருப்பிய டார்ச் விளக்கு திருமுழுக்கு யோவான். இந்தத் திருவருகைக் காலத்தில்,  மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார். என்பதனை உணர்ந்து இறையருள் வேண்டி மகிழ்ச்சியுடன் இத்திருப்பலியில் மனமுறுக வேண்டுவோம்.

வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் கடவுளை மறந்து வாழ்ந்ததால் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமை வாழ்விலே துன்பப்பட்டுத் துவண்டனர். ஆண்டவர் அவர்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு அவர்களுக்கு அருள் தரும் ஆண்டை அருளப் போவதாக இறைவாக்கினர் எசாயா ஆறுதல் கூறுகிறார். என் கடவுளால் என் உள்ளம் பூரிப்ப்பும் பெருமகிழ்ச்சியும் அடையும்  என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனத்துடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் எப்போதும் மகிழ்ந்திருத்தலும், செபித்தலும்,  இறைவனுக்கு நன்றி கூறுதலும், தீமையை விலக்குதலும் நமது பண்பாக விளங்கவேண்டுமென்று அழைக்கின்றார். இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது நமது உள்ளமும் ஆன்மாவும், உடலும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அவர் விடுக்கும் அழைப்பை ஏற்று மனமாற மகிழ்வுடன் இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.பதிலுரைப்பாடல்

பல்லவி: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்.

(லூக் 1: 47-48. 49-50. 53-54)


ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். பல்லவி
ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். பல்லவி
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். பல்லவிநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார் அல்லேலூயா


மன்றாட்டுகள்:


1.அன்பின் இறைவா திருவருகைக்காலத்தில் 3ஆம் ஞாயிறாகிய இன்று திருஅவையில் இருக்கும் மகிழ்ச்சி திருஅவையில் மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் அனைத்து மாந்தருக்கும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியின் நிறைவில் என்றும் நிலைத்து நிற்க பிறக்கும் பாலன் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2 எங்களை காத்து பராமரித்து வரும் அன்பு தெய்வமே இறைவா!  எங்கள் குடும்பங்களில்  இறைவாக்கினர் எசாயா, திருமுழுக்கு யோவான், திருத்தூதர் பேதுரு போல ஆண்டவரின் வருகையை நினைத்து அகமகிழவும், அவரது உடன் இருப்பை  எண்ணிக்களிகூறவும் அகமகிழ்ந்து, இத்திருவருகைக் காலத்தை நன்கு பயன்படுத்த அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா, மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்வது என் உள்மன வேலைதான் என்பதை உணர்ந்து எம் இளைய சமுதாயம் அந்த மகிழ்ச்சியைப் பெற்றிடத் தங்கள் பொறமை, கோபம், வெறுப்புகள், பொய்மை, சுயநலம் ஆகியவற்றை விடுத்துப் புதிய உருவெடுக்கவும், அவர்களின் உள்மனம்காயங்கள் மறைந்திடவும் வேண்டியாருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. தோழமையின் நாயகனே எம் இறைவா! வரப்போகும் கிறிஸ்து பெருவிழாவை நாங்கள் வெறும் வெளி அடையாளங்களைத் தவிர்த்து, ஆடம்பரங்களை குறைத்து, ஆன்மீகத் தயாரிப்பில் எங்கள் கவனத்தைச் செலுத்தி சாதி மத பேதமின்றி உமது பிறப்பின் செய்தியை நற்செய்தியாக சான்ற பகிரவும்,தேவையில் உள்ளோரை அணுகி அன்பு பாராட்டவும் நல்மனதைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


Thursday, December 7, 2017

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு - 10-12-2017

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு - 10-12-2017
இன்றைய வாசகங்கள்:

எசாயா 40:1-5; 9-11
2 பேதுரு 3:8-14
மாற்கு  1:1-8

திருப்பலி முன்னுரை:


இறைஇயேசுவின் நாமத்தில் இனிய வாழ்த்துக்கள்.
இன்றைய திருப்பலியில் மனம்மாற்றம் பெற்று நற்செய்தியாக மாறி வாழ்ந்திட வந்துள்ள இறைமக்களே உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று, மாற்கு நற்செய்தியின் தொடக்கம், நமது வழிபாட்டின் மையக்கருத்தாகத் தரப்பட்டுள்ளது. “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்” (மாற்கு 1:1) என்று இந்த நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள அறிமுக வார்த்தைகள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன.

இயேசு வாழ்ந்தக் காலத்திலும், பாலஸ்தீனம் உரோமைய ஆக்கிரமிப்பில் நொறுங்கிவந்த காலம். ஒவ்வொரு நாளும் அங்கு நிகழ்ந்த அக்கிரமங்களைக் கண்ட இயேசு, அச்செய்திகளின் பாரத்தால் நசுங்கிப்போகாமல், அச்செய்திகளுக்கு மாற்றாக, நம்பிக்கைத் தரும் செய்திகளை, தன் சொல்லாலும், செயலாலும் உருவாக்கினார் இயேசு.


நல்ல செய்திகளே நிரந்தரமானவை, ஏனைய மோசமான செய்திகள் நிரந்தரமற்றவை என்பதை மக்கள் மனதில் ஆழப்பதிக்க, தன் உயிரையே பணயம் வைத்து உழைத்தார். இறுதியில், தன் உயிரைப் பலியாகத் தந்து, இறந்து, உயிர்த்ததால், நல்ல செய்தி என்றும் வாழும் என்ற நம்பிக்கையைத் தந்தார் இயேசு.

கிறிஸ்தவ மறையின் ஆணிவேராக விளங்கும் இயேசுவையும், அவர் வாழ்வையும் ஒரு 'நற்செய்தி'யாக நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துள்ளோமா? அந்த நற்செய்தியாக நாம் வாழ முற்படுகிறோமா? மனமாற்றம் அடைவோம். விடைகள் தேடுவோம்! .... பயன்கள் பெறுவோம்! அமைதியின் இளவரசர் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தத் திருவருகைக் காலத்தில், அமைதியின் தூதர்களாக நாம் ஆண்டவரின் வழியை ஆயத்தப்படுத்தி மனந்திரும்பி தூயவாழ்வு வாழ வரமருள இத்திருப்பலியில் மனமுறுக வேண்டுவோம்.

வாசக முன்னுரை:முதல் வாசக முன்னுரை:

பாபிலோனிய அடிமைத்தளத்தில் இஸ்ரயேல் மக்கள் உட்பட்டிருந்தபோது இறைவாக்கினர் எசாயா அவர்களுக்குப் புதிய நம்பிக்கையூட்டிப் பேசுவதை முதல் வாசகம் காட்டுகிறது. “பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும். மலை குன்றுகள் தாழ்த்தப்படும்” என்ற கூறுகிறார். இங்கே பள்ளத்தாக்குகள் என்பது ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களையும், குன்றுகள் என்பத ஆணவம் மற்றும் மமதையின் மக்களையும் குறிக்கிறது. மக்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்களுக்கு ஆறுதலை வாக்களிக்கின்றார் இறைவன். தன்மக்களை எவ்வாறு பேரன்புடன் நடத்திச் செல்வார் என்பதை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனத்துடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு “ஆண்டவர் நமக்காய்க் காத்துக்கொண்டிருக்கிறார். நம் மனமாற்றத்தை எதிர் நோக்கிப் பொறுமையோடிருக்கிறார். அவரின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொடிருக்கும் நாம், அந்த நாளுக்காக நம்மைத் தயாரிப்பதற்கு நாம் புனிதம் உடையவர்களாக வாழ வேண்டும். இறைவனின் நாள் தாமதமின்றி உதயமாகும்” என்று நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார். அவரது அழைப்பை ஏற்று மனமாற இந்த வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்


பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல்: திபா: 85:8-13

நல்லதையே ஆண்டவர் அருள்வார்: நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்: அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.! பல்லவி

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்: தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்: அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி: நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்: நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்: விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :


அல்லேலூயா, அல்லேலூயா "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்." அல்லேலூயா

மன்றாட்டுகள்:


1. மனமாற்றத்தை இன்று என்றுரைத்த எம் இறைவா! உறவுகளாலும் தவறுகளாலும் உடைந்துக் கிடக்கும் இத்திருஅவை உமது மறைநூல் தரும் அறிவுரைகளால் நம்பிக்கைப் பெற்று மனமாற்றம் பெற்று ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு, ஒன்றித்துச் சாட்சியவாழ்வு வாழ வேண்டிய அருளைஉம் திருஅவைக்குப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கருணைக் கடலாகிய எம் இறைவா! எசாயா மூலம் எங்களுக்கு நீர் உரைத்தது போல் எங்கள் குடும்பங்களிலும் அகமகிழ்ந்து, லீலிமலர் போலப் பூத்துக்குலுங்க, உம்மைப் போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் போன்ற நற்செயல்களால் உறவுகள் மேன்படவும், பலப்படவும் அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா, கடந்த வாரத்தில் ஓக்கி புயலால் நிகழ்ந்த இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காவும், அவர்கள் விரைவில் தங்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடரவும், காணாமல் போன உறவினர்களைத் திரும்பப்பெற்ற புனர்வாழ்வுப் பெற்றிட உமது இரக்கத்தை அவர்களில் மேல் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எதிர்பார்ப்பின் நமபிக்கையான எம் இறைவா! இத்திருவருகைக்காலத்தில் எங்கள் இளைய சமுதாயம் உம்மைப் போல் தமக்கு அடுத்திருப்போரை ஏற்று அவர்கள் வாழ்வு மேன்படவும், அறிவுப்பூர்வமான உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து அதன் மூலம் தங்கள் கரடுமுரடான, கோணலான வாழ்க்கை முறையை மாற்றிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 


Wednesday, November 29, 2017

•திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு•

புதிய திருவழிப்பாட்டு ஆண்டின் முதல் ஞாயிறு

•திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு•*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


எசாயா 63: 16-17, 64: 1,3-8

1 கொரிந்தியர் 1: 3-9

 *முன்னுரை*


அன்புடையீர்,

தாய் திருச்சபை புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பித்துள்ள இவ்வேளையில் இத்திருப்பலிப் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
இன்று தாய் திருச்சபை புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்கிறது. நமது இறைவனைக் குழந்தை வடிவில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று உலகின் முடிவில் இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது. விழிப்பாயிருங்கள், பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள் என்பவை இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பு.
நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. எப்போது இந்த முடிவு வரும் என்பது நிச்சயமற்ற ஒன்று. நம் முடிவு எப்போது வரும் என்பதில் நாம் நேரம், சக்தி இவைகளைச் செலவிடாமல், நம் முடிவு எப்படி இருக்கப்போகிறது, அல்லது எப்படி இருக்க வேண்டும்  என்று சிந்தித்தால் பயனுண்டு. எதிர்பாராத நேரத்தில் வரும் இந்த முடிவைச் சந்திக்க, அந்த முடிவு நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க நாம் எப்படி நம்மையே தயாரித்து வருகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க இன்றைய நற்செய்தி நம்மைச் சிறப்பாக அழைக்கிறது.
உலகத்தின் முடிவு, நம் வாழ்வின் முடிவு, அந்த முடிவில் இறைவனைச் சந்திக்கும் வாய்ப்பு இவைகளை நாம் எவ்வகையில் பார்க்கிறோம் என்பதை ஆய்வு செய்வோம். தாயின், அல்லது, தந்தையின் அன்பு அணைப்பிற்குள் அமைதி காணும் குழந்தையைப் போல் வாழ்வின் இறுதியில் நாம் சந்திக்கும் நிரந்தர அமைதி அமையவேண்டும் என்று இன்றைய திருப்பலியில் சிறப்பாக வேண்டிக் கொள்வோம்.

வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*

இன்றைய வாசகம் கடவுள் நமது தந்தை என நினைவுபடுத்துகிறது. ஏனெனில் இஸ்ரயேல் மக்கள் தங்களின் உயிருள்ள கடவுளை மறந்து வாழ்ந்தபோது அவர்கள் தீட்டுப்பட்டவரைப் போலவும், அவர்களின் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோலவும் இருந்தது. எனினும் கடவுளிடம் மன்னிப்பு வேண்டி “ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. “ என்று பாவம் புரிந்த மக்கள் மன்றாடுவதை எடுத்துரைக்கம் எசாயாவின் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*

இரண்டாவது வாசகம், கடவுள் நமக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும், நன்றி கூறுகிறது. இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். எல்லா வகையிலும் நாம் செல்வந்தர்களாய் இருக்கிறோம். இறுதி நாளில் நாம் அனைவரும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் நம்மை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர் என்று உறுதிப்படுத்தும் திருத்தூதர் பவுல் அடியாரின் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்

*பதிலுரைப்பாடல்*


திபா 80: 1,2. 14-15. 17-18
பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.


இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!  உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! -பல்லவி
படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!  உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! -பல்லவி
உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! இனி நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். -பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1.வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா! திருச்சபை இன்று தொடங்கும் திருவழிபாட்டு ஆண்டில் எம் திருத்தந்தைத் தொடங்கிப் பொதுநிலையினர் வரை அனைவரும் வரும் நாட்களில் எதிர்நோக்கியிருக்கும் வருகையின் போது இறைவன் திருமுன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு எங்களை நாங்கள் தயாரித்துக் கொள்ள இந்தத் திருவருகைக் காலத்தைச் சரியாக முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டிய ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2 அன்பு இறைவா! வரும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீகத் தயாரிப்புகளில் எங்களைப் புதுப்பித்துக் கொண்டு உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.காலத்தில் அறிகுறிகளை அறிந்த எம் இறைவா மனிதனை இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்தையும் நீ ஆண்டுக் கொள்வாயாக என்ற கூறி படைப்பின் மேன்மையை உணர்த்தினீர். ஆனால் இன்று நாங்கள் இயற்கைக்கு எதிராகச் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து இயற்கையை நாங்கள் நேசிக்கவும், பாதுகாக்கவும் இன்றைய தலைமுறையினருக்கு நல்ல தேசத்தைக் கொடுக்கவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

4. நல்லாயனே எம் இறைவா! இந்தத் திருவருகைக் காலம் , எமக்குச் சரியான சந்தர்ப்பம், அவரை ஒவ்வொரு நொடிப்பொழுதும் எதிர்கொண்டு, அவர் பிறந்த நாளை கொண்டாட எம்மைத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், நாங்கள் விழிப்புணர்வுடன் இருந்து எதிர் கொள்ள வேண்டிய அருளைப். பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

  
www.anbinmadal.org

Wednesday, November 22, 2017

பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு 26/11/2017


 திருவழிப்பாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு
கிறிஸ்து அரசர் பெருவிழா

*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


எசேக்கியேல் 34: 11-12,15-17

1 தெசலோனிக்கர் 15: 20-26,28
மத்தேயு 25: 31-46

 *முன்னுரை*


அன்புடையீர்,
மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அதன் விளைவாக, அம்மக்களின் மனம் எனும் அரியணையில் அமரும் இயேசு என்ற மன்னரைக் கொண்டாடவே இந்தக் கிறிஸ்து அரசர் திருநாள். இத்திருப்பலிப் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
இயேசுவும் ஓர் அரசர். அவர் நிறுவிய அரசுக்கு நிலபரப்புக் கிடையாது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, இதைப் பாதுகாக்கக் கோட்டை, கொத்தளங்கள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை, உயிர்பலி தேவையில்லை...எதுவுமே தேவையில்லை. ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு எதுவுமே தேவையில்லை.
இறைவன் ஒருவரே தேவை, வேறெதுவுமே தேவையில்லை, என்று சொல்லக்கூடிய மனங்கள் மட்டுமே இந்த அரசுக்குச் சொந்தமான நிலம். அத்தகைய மனங்களில் தந்தையை அரியணை ஏற்றுவதுதான் இயேசுவின் முக்கியப் பணி..
இந்த அரசருக்கு முன் நிற்க, முக்கியமாக அவரது வலதுப் பக்கம் நிற்க நாம் தகுதியுள்ளவர்களாய் இருக்கிறோமா? இந்த அரசனால் ஆசீர்பெறப் போகிறோமா? அல்லது விரட்டி அடிக்கப்படுவோமா?
தேவைகள் உள்ள மக்களில் இந்த அரசனின் உருவைக் கண்டு,உதவிக்கரம் நீட்டியிருந்தால், வலது பக்கம் நிற்கும் வாய்ப்பு பெறுவோம். கிறிஸ்து அரசர் வழங்கும் ஆசீரைப் பெற்றுக்கொள்ள இப்பெருவிழாவில் இறைவனை மனதுருக மன்றாடுவோம். .

வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*


இன்றைய வாசகத்தில் இறைவன் தன்னே ஓர் ஆயனாக உருவகப்படுத்திக் கொண்டு, அந்த ஆயன் எவ்வாறு தன் மந்தையைப் பாதுகாத்துப் பேணிவளர்ப்பார்?, அவற்றை எவ்வாறு இளைப்பாறுவார்?ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக்கிடாய்க்கும், வெள்ளாட்டுக்கிடாய்களுக்கும் இடையேயும் எவ்வாறு நீதியை வழங்குவார்? என்பதை எசேக்கியேல் மூலம் எடுத்துரைக்கும் இன்றைய வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசு உயிருடன் எழுப்பப்பட்டது போல நாமும் எழுப்படுவோம் என்றும், ஆதாமினால் வந்த சாவு கிறிஸ்துவின் மூலம் அழிக்கப்பட்டது என்றும், இயேசு அனைத்துப் பகைவரையும் அடிபணிய வைத்து விட்டு கடவுளுக்கு அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார் என்பதை எடுத்துக்கூறும் பவுல் அடியாரின் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்
 

*பதிலுரைப்பாடல்*

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
திருப்பாடல் 23: 1-2. 3. 5. 6

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.  பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். பல்லவி
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். பல்லவி 

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! . அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1.அன்பு தந்தையே!  எம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் அவர் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அருள்கொடைகளை, செல்வங்களை, அனைத்து மாந்தர்க்கும் வேறுபாடுகள் இன்றி நிறைவாக வழங்கிட வேண்டுமென்று கிறிஸ்து அரசர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2 நற்செய்தியின் ஒளியே! எம் இறைவா! இன்று உலகில் நிகழும் சுயநலம், ஆணவம், அகந்தை, செருக்கு, வன்முறை இவைகள் ஒழிந்து, உம் இறையரசின் மதிப்பீடுகளை, தம் சொல்லாலும், செயல்களாலும், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் போதிப்பவர்களாக மட்டும் இருந்துவிடாமல் செயல்படுத்தும் கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று கிறிஸ்து அரசர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் இறைவா! உம் நற்செய்தியை வாழ்வாக்கிய எம் புனிதை தெரேசாவைப் போன்று நாங்களும் ஏழைகளை வெறும் வேடிக்கைப் பொருளாக பார்த்திடாமல் அவர்களும் எம் சக உடன்பிறப்புக்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட நல் மனம் வேண்டுமென்று கிறிஸ்து அரசா வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நல்ஆயனே எம் இறைவா! எம் சிறுவர்கள்,  இளையோர் இவ்வுலக வாழ்வின் நவீன அறிவியல் வளர்ச்சியின் மாயைகளில் சிக்கி சிதறுண்டு தவிக்கும் இவ்வேளையில், உம் இறைவார்த்தை அவர்களுக்கு உறுதுணை என்பதை அறியும் வரத்தையும் இறைஅச்சத்தையும்  அருள வேண்டுமென்று கிறிஸ்து அரசர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
                 
                                                          www.anbinmadal.org

Wednesday, November 15, 2017

பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு 19/11/2017*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


நிதிமொழிகள் 31: 10-13,41-43,.45,54-57
1 தெசலோனிக்கர் 5: 1-6
மத்தேயு 25: 14-30

 *முன்னுரை*


அன்புடையீர்,
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பொதுக்காலத்தின் 33ஆம் ஞாயிறுத் திருப்பலிப் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்
குறைகள், நிறைகள் இரண்டும் ஒவ்வொரு மனிதருக்கும் தரப்பட்டுள்ள கொடைகள். குறைகள்...கொடைகளா? என்ற கேள்வி எழலாம். ஆம், குறைகளும் கொடைகள்தாம். குறைகளையும் நிறைகளாக மாற்றும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. நமக்குள்ள குறையைப் பெரிதுபடுத்தி, நம்மிடம் உள்ள மற்றக் கொடைகளையும் பயன்படுத்தாமல் புதைத்து விடுகிறோமா என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புகிறது இன்றைய நற்செய்தி. நமக்குத் தரப்பட்டுள்ள கொடைகள் அனைத்திற்கும் நாம் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று இன்றைய நற்செய்தி நமக்கு இடித்துரைக்கிறது.
ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் நாம் மேற்கொள்ளும் ஒரு முயற்சி கணக்கு வழக்குகளை முடித்து ஒப்படைப்பது. வழிபாட்டு ஆண்டின் இறுதியில் இருக்கும் நாம் கணக்கு வழக்குகளை முடித்து, கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை நினைவுறுத்த இன்றைய நற்செய்தியில் தாலந்து உவமை நமக்குத் தரப்பட்டுள்ளது. கணக்கு-வழக்கு என்பது நாம் பயன்படுத்தும் ஒரு பொதுவான சொற்றொடர். நமது வரவுச் செலவு கணக்குச் சரியாக இருந்தால், அங்கு வழக்குத் தேவையில்லை. எப்போது கணக்குச் சரிவர அமையாமல் இருக்கிறதோ, அங்குக் கணக்கை விட வழக்கு அதிகமாகி விடும். இன்றைய நற்செய்தி கணக்கையும் சொல்கிறது, அதற்கு மேல் வழக்கையும் நடத்துகிறது.
நம் திறமைகள், கொடைகளில் நம் கவனத்தைத் திருப்பி, அவைகளைப் புதைத்து விடாமல், பலருக்கும் பல மடங்காகப் பயன்தரும் வகையில் நம் திறமைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே வழக்குகளில் சிக்காமல் கணக்கை நிறைவாக முடிக்கத் தேவையான வரங்களை வேண்டி இன்றைய திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை**முதல் வாசக முன்னுரை*

இன்றைய வாசகம் கடினமாக உழைக்கின்ற மனையாளைப் பற்றிப் பேசுகின்றது. கம்பிளி, சணல் ஆகியவற்றைத் தானே தேடிக் கொள்பவளாக, இராட்டினத்தைத் தானே தன் விரலால் திரிப்பவளாக இருப்பவரே மனத்திடமுள்ள மனையாள் என்று நீதிகொழிகள் புத்தகம் பறைச்சாற்றுகிறது. வெற்றி இனிப்பானது. அதன் இரகசியம் வியர்வையாகும் என வலியுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் நற்செய்திப் பணி புரிந்த நேரம் போக, கூடாரம் அடிக்கும் தொழில் மூலம் தன்னுடைய சுய தேவைகளைப் பூர்த்திச் செய்து கொண்டார். என்னுடைய தேவைகளுக்காகவும், என்னோடிருந்தவர்களின் தேவைக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள் என்கிறார். எனவே தான் உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது என்று அவரால் உறுதியாகக் கூறமுடிந்த இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்
 *பதிலுரைப்பாடல்*

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!
திபா 128: 1-2. 3. 4-5

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி

உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.பல்லவி

ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். அல்லேலூயா.
*மன்றாட்டுகள்*1.வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் நிறைவாகப் பெற்றுள்ள கொடைகளைத் திறமையாகப் பயன்படுத்தி உம் இறையரசை அறிவிக்கத் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2 வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! எங்கள் குடும்பத்தினர்கள் தங்கள் குறைகளை எல்லாம் மறந்துத் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளத் தேவையான ஞானத்தையும் அறிவையும அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் மரிந்தவர்கள் அனைவரையும் நினைவுக் கூர்கின்றோம். அவர்கள் அனைவரும் புனிதர்களின் திருக்கூட்டத்தில் சேர்த்துக்கொண்டு உம்மைப் போற்றிப் புகழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! பாகுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த இந்த மனிதச் சமுதாயத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் தனித் திறமை உடையவர்கள். எமது குறைகளையும் திறமைகளாக மாற்றும் வழிகள் உண்டு. குறைகளைத் திறமைகளாக மாற்றித் எங்களையும், பிறரையும் வளர்ப்பவர்களாய் மாறிட உம் ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, November 8, 2017

பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு 12/11/2017


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

சாலமோனின் ஞானம் 6: 12-16
1 தெசலோனிக்கர் 4: 13-18
மத்தேயு 25: 1-13

 *முன்னுரை*


அன்புடையீர்,
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பொதுக்காலத்தின் 32ஆம் ஞாயிறுத் திருப்பலி பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்
திருவழிபாட்டின் இறுதி வாரங்களில் இருக்கிறோம். திருவருகைக் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய உவமையில் சொல்லப்படும் பத்துத் தோழியரில் ஐந்து பேர் முன்மதி உடையவர்கள், மற்ற ஐந்து பேர் அறிவிலிகள். மணமகளின் தோழியாக இருப்பதற்கு அழைப்பு வந்ததும், இந்த ஐந்து அறிவிலிகள் எண்ணத்தில் ஓடியப் பட்டியலில் ஒரு முக்கியமான அம்சம் மறக்கப்பட்டது. எண்ணெய்... முன்மதியுடைய ஐந்து பெண்களும் திட்டமிட்டு, பட்டியல் ஒன்றை தயாரித்திருப்பார்கள். அவர்கள் பட்டியலில் 'விளக்கு எறிவதற்குத் தேவையான எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்பது முதலாவதாகக் குறிக்கப்பட்டிருக்கும். அவசியங்களா? ஆடம்பரங்களா? எதற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதைச் சிந்திக்க இந்த உவமை உதவுகிறது.
அவசியமற்றவைகளில் அதிகக் கவனம் செலுத்திவிட்டு, அவசியமானவைகளை மறந்து விட்டால் வாழ்வில் முக்கியமானவைகளை இழக்க வேண்டியிருக்கும். இயேசு இன்றைய நற்செய்தியில் கூறும் இறுதி வரிகள் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்: “விழிப்பாயிருங்கள்; ஏனெனில் இறைவன் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”
அவசியமானவைகள், அவசியமற்றவைகள், அலங்காரங்கள், ஆடம்பரங்கள் என்று நம் வாழ்வை நிறைத்துவிடும் பல அம்சங்களில் தேவைகளை, அவசியமானவைகளைப் பிரித்துப் பார்க்கும் பக்குவம், கண்ணோட்டம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று ஒருவர் ஒருவருக்காக வேண்டி இன்றைய திருப்பலியில் உளமாற வேண்டிக் கொள்வோம்.

வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*

ஞானம் நிறைந்த, விழிப்போடு செயல்பட வேண்டும் என இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. ஞானம் ஒளிமிக்கது. மங்காதது.. அதன் பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலைகளிலிருந்து விரைவில் விடுபடுபவர் என்று கூறுகிறது. மனிதவாழ்வை முழுமையாகவும், நிறைவாகவும் வாழ்வதற்கு ஞானம் அவசியம். இத்தகைய மேலான ஞானத்தை அடைவதே நமது வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் நமது வாழ்வின் முடிவைப் பற்றி, நமது சாவைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது என்று கூறுகிறார். ஏனெனில் நமக்கு எதிர்நோக்கு உண்டு. கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டுள்ள நாம் அனைவரும் கிறிஸ்துவை எதிர்கொண்டு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ள அழைக்கும் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்

 *பதிலுரைப்பாடல்*

திபா 63: 1. 2-3. 4-5. 6-7
பல்லவி: என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. -பல்லவி

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.   ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -பல்லவி

என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். -பல்லவி

நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன். ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். -பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1.எங்கள் வாழ்வின் நிறைவாகிய இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு விழிப்புடன் காத்திருந்து அவருடன் நிலைவாழ்விற்குச் செல்ல முன்மதி உடையவர்களாகத் தங்கள் வார்த்தைகளிலும், வாழ்விலும் ஒன்றிணைந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாய் வாழத் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2 என்றென்றும் இரக்கமுள்ள அன்பு தெய்வமே இறைவா! இன்றைய காலகட்டத்தில் இச்சமுகத்தில் எங்கள் குடும்பத்தினர்கள் எதிர் கொள்ளும் சோதனைகளிலும், வேதனைகளிலும் சோர்ந்து போகாமல் விழிப்புடனிருந்து வெற்றிக் கொள்ளவும், தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவும் தேவையான ஞானத்தையும் முன்மதியும் அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள் வாழ்வின் நிறைவாகிய இறைவா! எங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து வெளியிடங்களிலும், வெளிநாட்டிலும் வாழும் எம் சகோதரச் சகோதரிகளை உம் திருமுன் நினைவுகூர்கிறோம். அங்கு அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் உமது உடனிருப்பை உணர்ந்து நல்வாழ்வு வாழ்ந்திடவும், பாச உணர்வுகளுடன் தங்கள் குடும்பங்களோடு ஒன்றிணைந்திருக்கத் தேவையான வரங்களை அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. என்றென்றும் இரக்கமுள்ள அன்பு தெய்வமே இறைவா எம் நாட்டில் நிலவும் மதவாத பிரச்சனைகள் குறிப்பாக அனைத்து மதத்தினரும் மனித மாண்புடன் வாழ, பிரிவினை சக்திகளின் பிடியிலிருந்து விடுவித்து, உண்மை அன்பும், பிறர்சினேகமும் கொண்டு ஏற்றத்தாழ்வுகள் களைந்து ஒற்றுமையுடன் வாழத் தேவையான எம் ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


   


www.anbinmadal.org