Monday, October 26, 2020

அனைத்துப் புனிதர்களின் பெருவிழா

அனைத்துப் புனிதர்களின் பெருவிழா


திருப்பலி முன்னுரை


    நமதாண்டவர் இயேசு நமக்கு அருட்பெருங்கொடைகளாக - பரிந்துரைக்கும் திருத்தாய் மரியாளையும், நம்மை ஞானத்தில்  பயிற்றுவிக்கும் ஒன்றாக, திருச்சபையையும் வழங்கியிருக்கின்றார். ‘புனிதர்களுடைய சமூக உறவை விசுவசிக்கின்றேன்” என்பது நம்மை வழிநடத்தும் திருச்சபையால் வரையறை செய்யப்பட்ட விசுவாச சத்தியங்களில் ஒன்று. இந்த விசுவாச சத்தியத்தை நாம் விழா எடுத்துச் சிறப்பிக்கும் நாளே இன்று. ஆராதனையும், வழிபாடுகளும் ஆண்டவராம் கடவுளுக்கு மட்டுமே உரியன என்பதை நாம் அறிந்தே இருக்கின்றோம். புனிதர்களின் இணக்கமான தோழமையை நாம் நாடுவதற்கும், வணக்கத்துடன் கூடிய புகழ்ந்தேற்றலை அவர்களுக்கு புரிவதற்கும் அவர்களின் முன்மாதிரிகை மற்றும் நன்னெறி விட்டு விலகாத தூய வாழ்க்கையுமே காரணங்கள். மறைசாட்சிகளையும், மற்றுமுள்ள அனைத்துப் புனிதர்களையும் நாம் நினைவு கூர்ந்து கொண்டாடும் செயல், மனுக்குமாரன் இயேசுவின் மகத்துவத்தை மண்ணுலகு எங்கும் இன்னும் அதிகமாய், நற்செய்தியை பரப்பும் பணிக்கு தூண்டுகோல் ஆகிறது; துணை நிற்கின்றது; வலுச்சேர்க்கின்றது.


திருச்சபை வழிபாட்டு அட்டவணையில்‌ இடம்பெறாத புனிதர்கள்‌ எத்தனையோ பேர்‌ உண்டு. அவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்த இன்று நாம்‌ அழைக்கப்படுகிறோம்‌. திருச்சபையால்‌ அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களை மட்டுமல்லாமல்‌ அங்கீகரிக்கப்படாத நல்வாழ்வு வாழ்ந்த எல்லோரையுமே புனிதர்களாக நினைவுகூர்ந்து விழா எடுக்கிறோம்‌. நாமும்‌ ஒரு நாள்‌ இவர்கள்‌ கூட்டத்திலே சேர்வோம்‌ என்ற நம்பிக்கையின்‌ விழா இது. 


இன்றைய புனிதர்கள்‌ விழா, நமக்குள்‌ இருக்கும்‌ கடவுள்‌ தன்மையை அதிகமாக உணரவும்‌ விலங்கின்‌ தன்மையை நம்மிடமிருந்து- அகற்றவும்‌ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இது எளிதான காரியம்‌ அல்ல. இருப்பினும்‌ நம்மைப்‌ படைத்தவர்‌, நல்வாழ்வுக்கு நம்மை அழைத்தவர்‌ இதற்கான ஆற்றலை நமக்குத்‌ தந்து நம்மை வழிநடத்துவார்‌ என்று நம்பிக்கையோடு புனித வாழ்வில்‌ நடை போடுவோம்‌. இறைவார்த்தைகளை சிந்தையில் இறுத்திச் செயலாற்றும் நல்ல பங்கினைத் தேர்ந்தவர்களாய் வாழ்ந்து சிறக்கும் வரம்வேண்டி, இத்திருப்பலியை ஒப்புக்கொடுத்து வேண்டுவோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை


கிறிஸ்தவ விசுவாசிகள் அச்சுறுத்தவும், துன்புறுத்தவும்பட்ட  வேதகலாப்பனை காலத்து நூலான திருவெளிப்பாட்டிலிருந்து நாம் முதல் வாசகம் கேட்கயிருக்கின்றோம்.  அன்றைய காலச்சூழல் கருத்தில் கொள்ளப்பட்டு அடையாளங்கள் மற்றும் காட்சிகள் மூலம் செய்திகள் தரப்பட்டுள்ளன. திருச்சபை ஒரு இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் என்ற எண் கொண்டும், கிறிஸ்து இயேசுவை ஆட்டுக்குட்டி என்றும், மறைசாட்சிகளை வெண்ணாடை அணிந்தவர்கள் என்றும் அடையாளப்படுத்தும் வாசகம் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 24: 1-2. 3-4ab. 5-6 .
பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

1மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

2. ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

3.இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை


இரண்டாம் வாசகமாக நாம் இப்போது கேட்க இருப்பது திருத்தூதர் புனித யோவானின் முதல் திருமுகத்திலிருந்து தரப்பட்டிருக்கிறது. இந்த திருமுகம் அன்புகூர்தலுக்கு முக்கியத்துவம் தருவதால் இதனை அன்புக் கடிதம் என்று அழைக்கின்ற சிறப்பினைப் பெற்றிருக்கிறது. தம் மக்கள் என்று நம்மை அன்பொழுக இறை தந்தை அழைப்பதோடு, நாம் தூயவர்களாய் திகழவும், ஆவலாய் அவரை எதிர்நோக்கவும் அழைப்பு விடுகிறது வாசகம். அதனை செவியேற்கும் ஆர்வம் மேலோங்கட்டும் நமக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளர்களின் மன்றாட்டு

1. இனிய இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா!
நீரோடைகளை வாஞ்சித்து தேடும் கலைமான்களிலும் மேலாக உம்மை நேசித்ததாலும் - வாழ்வளிக்கும் இறைவார்த்தைகளை ஆழ்ந்து தியானிப்பதில் அகமகிழ்வு கொண்டதாலும் எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர், இன்று விண்ணகப் புனிதர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.எங்கள் ஆண்டவரும், மீட்பருமான உமது அருளால் இறை ஞானத்திலும், இறையன்பிலும் நாங்கள் மென்மேலும் வளரும் வரம் வேண்டி திருச்சுதனே - உம்மை மன்றாடுகிறோம்.            

2. இனிய  இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா!
தங்களுக்கு தரப்பட்டிருந்த தாலந்துகளை தக்க விதமாய் பயன்படுத்தியதாலும் - சிறிய பொறுப்புகளில் சிந்தையோடு செயல்பட்டு, நம்பிக்கைக்கு உரிய நல்ல ஊழியர்களாய் சிறந்ததாலும், எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர், இன்று விண்ணகப் புனிதர்களாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஆண்டவரும், மீட்பருமான உமது அருளால் எங்கள் வலுவின்மையில் உமது வல்லமை பரிபூரணமாக நிறைந்து பயனுள்ள ஊழியர்களாக நாங்கள் சிறக்கும் வரம்வேண்டி திருச்சுதனே - உம்மை மன்றாடுகிறோம்.

3. இனிய  இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா!
இடுக்கமும், குறுகலுமான வாழ்வின் வழியை கண்டுபிடித்து, தொடர்ந்து அதில் நடக்கத் துணிந்ததாலும் -  எதிர்பட்ட இடையூறுகளை ஏற்க துணிந்ததோடு, வாட்டிய உடல் வருத்தங்களை சகித்து, தடைபடாது ஆற்றிய கடமையினாலும், எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர், இன்று விண்ணகப் புனிதர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எங்கள் ஆண்டவரும், மீட்பருமான உம் வழியாய் உள்ளே செல்லும், வெளியே வரும் மற்றும் மேய்ச்சல் நிலத்தை கண்டுபிடித்து நிறைவடையும் வரம்வேண்டி திருச்சுதனே - உம்மை மன்றாடுகிறோம்.

4. இனிய  இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா!
புரிந்த பல நற்செயல்களால் மக்களிடையே சுடராக ஒளிரிந்ததாலும் - அதனால் மக்கள் இறைதந்தையைப் போற்றி அவரின் மனதை குளிர்வித்ததாலும் எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர் இன்று விண்ணகப் புனிதர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். நற்செயல்கள் புரியும் அருங்குணத்தினை புனிதர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளவும், உலகின் ஒளியாகிய உம்மிடமிருந்து வாழ்விற்கு வழிகாட்டும் ஒளியை பெற்றுக் கொள்ளவும் வரம்வேண்டி திருச்சுதனே - உம்மை மன்றாடுகிறோம்.

5. இனிய  இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா!
காரியங்கள் பலவற்றைக் குறித்து கவலையும், உள்ளத்தில் கலக்கமும் கொள்ளாதிருக்க மார்த்தாவிற்கு கற்பித்தீரே.  இறைவார்த்தைகளை கருத்தாய்க் கேட்பதில் காலத்தை பயன்படுத்தவும், இறைவார்த்தைகளை சிந்தையில் இறுத்திச் செயலாற்றும் நல்ல பங்கினைத் தேர்ந்தவர்களாய் வாழ்ந்து சிறக்கும் வரம்வேண்டியும், இந்த தொற்றுநோய்காலத்தில் சுயநலமின்றி உழைத்து எம்மை விட்டு அனைவரையும் உம் புனிதர்கள் கூடத்தில் சேர்க்க வேண்டுமென்று திருச்சுதனே - உம்மை மன்றாடுகிறோம்.
 


 

www.anbinmadal.org




Thursday, October 22, 2020

பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு

  பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்


விடுதலைப் பயண நூல் 22: 21-27
1 தெசலோனிக்கர் 1:  5–10
மத்தேயு 22: 34-40

 திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
பொதுக்காலத்தின் 30ஆம் ஞாயிறுத் திருப்பலி பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்போடு வாழ்த்துகிறோம்.
நமக்குத் தெரியாததைத் தெரிந்து கொள்ள கேட்கப்படும் கேள்விகள் நம் அறிவை வளர்க்கும். இதற்கு மாறாக, பதில்களைத் தெரிந்துகொண்டு, அடுத்தவருக்கு நம்மைவிட குறைவாகத் தெரிகிறதென்பதை இடித்துச் சொல்வதற்காக கேள்விகள் கேட்கும்போது, நமது பெருமை கலந்த அறியாமை அங்கு பறைசாற்றப்படும். தனக்குத் தெரியும் என்ற இறுமாப்பில் இயேசுவை அணுகி கேள்வி கேட்ட ஓர் அறிஞரைப் பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்
தவறான, குதர்க்கமான எண்ணங்களுடன் திருச்சட்டநூல் அறிஞரிடமிருந்து கேள்வி கேட்கப்பட்டாலும், அந்தக் கேள்வி மிக அழகான, ஆழமான ஒரு கேள்வி என்பதை இயேசு உணர்ந்து, அதற்கு பதில் சொல்கிறார்.  இயேசு தந்த பதில், காலத்தால் அழியாத ஒரு பதில்.. திருச்சட்டங்களின் அடிப்படை நியதிகளைப் பற்றி கேள்விகள் கேட்டு, அறிவுப்பூர்வமான பதில்களை அறிந்து கொள்வது முக்கியமல்ல அவைகளில் சொல்லப்பட்டிருக்கும் இறையன்பு, பிறரன்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதே முக்கியம் என்பதை இயேசுவின் இந்தக் கூற்று தெளிவுபடுத்துகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் நமது கடமைகளைப் பற்றி, நாம் ஆற்றவேண்டிய பணிகளைப் பற்றி இறைவன் இதற்கு மேலும் தெளிவாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இரக்கம் நிறைந்த அந்த இறைவனின் வார்த்தைகள் நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்குமா? இயேசு சொன்னதுபோல், இறையன்பையும், பிறரன்பையும் நாம் வாழ்வில் செயல்படுத்த முடியுமா? முயன்றால் முடியும். அதற்கு தேவையான அருளை வேண்டி இன்றைய திருப்பலியில் உளமாற மன்றாடுவோம்.வாரீர்!

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை


அனைவரும் அன்னியராக மாறிவருவதால், ஒருவரை ஒருவர் வெல்வதும், கொல்வதும் நாளுக்கு நாள் கூடிவருகின்றன. . இச்சூழலில், அன்னியர், அநாதை, கைம்பெண் இவர்களைப் பற்றி சிந்திப்பதற்கு இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கிறது. அதுவும், இங்கு கூறப்பட்டுள்ள வார்த்தைகள் யாவும் இறைவனே நம்மிடம் கூறும் வார்த்தைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. கடவுள் தரும் அழைப்பு, ஓர் எச்சரிக்கையாக, கட்டளையாக ஒலிக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


 பதிலுரைப்பாடல்

பல்லவி: எனது ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்
பதிலுரைப்பாடல். திபா. 18: 1-2,2-3,46.50

என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர். பல்லவி

என் இறைவன்: நான் புகலிடம் தேடும் மலை அவரே: என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன. என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப் பட்டேன். பல்லவி

ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவராக! தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர், தாம் திருப் பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கர்களை தன் மனதார பாராட்டி வாழ்த்துகிறார். எனெனில் அவர்கள் திருத்தூதரை இனிதே வரவேற்று, மகிழ்வோடு இறைவார்த்தைகளை ஏற்று கொண்டு, புனித வாழ்க்கை வாழ்வதையும், மற்ற மக்களுக்கு முன்மாதிரியாக இருப்பதைப் பற்றியும், இயேசுவின் வருகைக்காய் காத்திருப்பதைப் பற்றியும் மகிழ்ந்து பாராட்டியதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர் மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்”  என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. என் ஆற்றலாகிய தந்தையே இறைவா! உமது திருச்சபையிலுள்ள திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரையுள்ள நாங்கள் அனைவரும், எம் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் எம் ஆண்டவராகிய உம்மையும், எம் அயலாரையும் அன்புச் செய்யவும், அன்பு, இரக்கம், நற்பண்புகள் ஆகியவற்றோடு வாழவும், வளரவும் வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2 போற்றுதலுகுரிய ஆண்டவரே எம் இறைவா! பல்வேறு கருவிகள் மூலம் தொடர்புகளை வலுப்படுத்தும் வர்த்தக உலகம், தொடர்புச் சாதன உலகம், எம்மைச் சுயநலச் சிறைகளுக்குள் தள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இவ்வேளையில் நாங்கள் எமக்கடுத்திருக்கும் ஏழை, எளியவர், கைவிடப்பட்டோர், அனாதைகள், விதவைகள் ஆகியோர் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு உதவிடும் நல்மனதினைத் தர வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. ஒரே கடவுளும் எங்கள் அன்புத் தந்தையுமாகிய எம் இறைவா! உமது அன்புக்கட்டளையைக் கடைப்பிடிப்பதே எங்கள் வாழ்வுக்கு வழி என்பதை உணர்ந்து உமது கட்டளைகளைக் கடைபிடித்து வாழும் தாராளமான மனத்தை எங்கள் இளையோர்களுக்குத் தந்து அதன் மூலம் அவர்கள் வாழ்வுச் சிறப்புற, உமது அன்பின் சாட்சிகளாய் திகழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வானகக் கொடைகளை வழங்கிவரும் எம் இறைவா! எம் நாட்டில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலில் எம்மை ஆளும் தலைவர்கள் உமது அன்பின் கட்டளைகளை ஏற்று, எங்களின் அடிப்படை உரிமைகள், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் நாட்டையும், எங்கள் மக்களையும் வழி நடத்த தூயஆவியின் வழியாக ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. நலமளிக்கும் வல்லவரே! எம் இறைவா! தொற்றுநோய்க்கு எதிரான எங்கள் போராட்டத்தில் எங்களோடு துணை நின்று போராடும் மருத்துவர்களுக்கு நல்ல ஞானத்தையும், நற்சுகத்தையும் அளித்து அவர்கள் விரைவில் நோய் அகற்றும் சிறந்த மருந்தை கண்டுபிடிக்க தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 


 www.anbinmadal.org

Tuesday, October 13, 2020

பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு

  பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு 



 இன்றைய நற்செய்தி வாசகங்கள்

 
எசாயா 45:1,4-6
தெசலோனிக்கர் 1: 1-5அ
மத்தேயு 22:15-21


 திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலத்தின் 29ஆம் ஞாயிறுத் திருப்பலி விருந்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. ஆனால், அவரவருக்கு உரியது அவரவருக்குக் கிடைக்காமல் இருப்பதால்தான் உலகம் சிறிது சிறிதாக நரகமாக மாறி வருகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

“சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்ற புகழ் பெற்ற வரிகளை இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார் இயேசு. விவிலியத்தைத் தாண்டி, கிறிஸ்தவ மறையைத் தாண்டி, பொருளாதாரம், அரசியல் என்ற பலச் சூழல்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வாக்கியம் இது. இயேசு கூறிய அந்தப் புகழ் மிக்கக் கூற்றையும், அவர் அப்படிச் சொன்ன சம்பவத்தின் பின்னணியையும், இன்றைய ஞாயிறு சிந்திக்க அழைக்கின்றது.

மதமும் அரசியலும் கலந்த அன்றைய வரலாறு இன்றும் தொடர்கிறது. இந்தச் சூழலில், நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன. சீசருக்குரியதை, இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித் தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை. சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார், அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் இன்று கேட்கிறார். நம் பதில் என்ன? அதற்கான பதிலை இன்றைய திருப்பலியில் தேடுவோம்.வாரீர்!


வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை


தன் ஊழியன் யாக்கோபை முன்னிட்டு  சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்.   பெயர் சொல்லி அமைத்துள்ளார். என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்குவேன். நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை என்று கடவுள் தம் இதயத்திற்கு இனிய இஸ்ரயேல் மக்களுக்கு தன் அன்பையும், அவரின் உடனிருப்பையும் அறிவித்ததை பற்றி இறைவாக்கினர் எசாயா விவரிக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


பதிலுரைப்பாடல்

பல்லவி: மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
பதிலுரைப்பாடல். திபா. 96: 1, 3-5, 7-10

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள். அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி
ஏனெனில், ஆண்டவர் மாட்சி மிக்கவர். பெரிதும் போற்றத் தக்கவர். தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே. மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே. ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். பல்லவி
மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். பல்லவி
தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். வேற்றினத்தாரிடையே கூறுங்கள். ஆண்டவரே ஆட்சி செய்கின்றார். அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளோடு மானிடன் கொண்டுள்ள உறவில் தான், நமது குறிக்கோளாகிய விண்ணரசில் நுழைய முடியும். இதைத் தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் தூயஆவியின் துணையிருந்தால் ஒளியின் மக்களாக வாழ முடியும். அதற்கு  இறைவனின் உடனிருப்பு தேவை என்கிறார். இறைஅன்பில் மலரும் செபவாழ்வு, பிறர் அன்புப் பணிக்கு உறுதி தருகின்றது. பிறரன்பு இல்லாமல் இறையன்பு வாழ்வில் நிறைவு இருக்காது என்று கூறும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. உமது பேரன்பால் உலகை நிறைத்துள்ள எம் இறைவா! எம் திருஅவையிலுள்ள அனைவரும் இறையச்சம், அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல் ஆகிய பண்புகளை தங்கள் பணிவாழ்வில் உள்ளடக்கி இறையன்பிலும், பிறரன்பிலும் சிறந்து விளங்கிட தூய ஆவியாரின் கொடைகளைப் பொழிந்திடவும், இயேசுவின் உடனிருப்பை மனதில் கொண்டு இறைபணிகளைச் செய்திட உமதருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் வாழ்நாளை எல்லாம் நலன்களால் நிறைவு செய்கின்ற எம் இறைவா! எம் குடும்பங்களில் இறையன்பும், பிறரன்பும் நிறைந்திடவும், அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுப்பதால் இல்லங்களிலும், மனங்களிலும் அன்பும் அமைதியையும் நிறைவாய் பெற்றிடவும், தொற்றுநோயிலிருந்து எம்மை காத்திடவும் உமதருள் வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. எங்கள் கற்பாறையும், மீட்பருமான ஆண்டவரே! எம் இறைவா! எம்மை ஆளும் தலைவர்கள் செலுத்தும் அன்பானது நீதி கலந்த அன்பாக , நீதியை நிலைநாட்டும் அன்பாக அமைந்திடவும், சமயம், சாதி, இனம் கடந்து அனைவருக்கும் அரசின் நீதியும், உதவியும் கிடைத்திடவும், பெண்மைக்கு எதிரான வன்கொடுமைகள் முற்றிலும் நீங்கி நிம்மதியான வாழ்வு கிடைக்கவும் நீர் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமாகிய எம் இறைவா! அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. இதனை உணர்ந்து எம் இளையோர்கள் இனிவரும் காலங்களில் தங்களின் வாழும் வாழ்க்கை முறையினைச் சிறப்புடன் மாறி அமைத்திட தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம் அன்பு தந்தையே! இறைவா! உலகமெங்கும் பரவிய இத்தொற்று நோயின் தாக்கத்திலிருந்து உம் அன்பு மக்களைக் காத்தருளும். அவர்கள் குடும்பங்களில் அன்பிலும் பாசப்பிணைப்பிலும் ஒன்றிணைந்து புதிய வாழ்வு தொடங்கிட நலமும், வளமும் அளித்து காத்தருளும். இப்போராட்டத்தில் தன்னலம் பாராமல் ஈடுபட்டுள்ள அனைவரையும் உமது வல்லமையான கரத்தால் காத்தருளும். இவற்றையெல்லாம் எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் உம்மை மன்றாடுகிறோம்.



www.anbinmadal.org

Wednesday, October 7, 2020

பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு


 இன்றைய வாசகங்கள்

எசாயா 25:6-10.
பிலிப்பியர் 4:12-14, 19-20;
மத்தேயு 22:1-14

 திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,

பொதுக்காலத்தின் 28ஆம் ஞாயிறுத் திருப்பலி விருந்தில் / பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவருக்கும் / இறைஇயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! /உங்கள் வரவு நல்வரவாகுக...

வாழ்வில் நமக்கு வந்துள்ள அழைப்புக்கள், /அந்த அழைப்புக்களுடன் நமக்குக் கிடைத்த வாய்ப்புக்கள் எத்தனை, எத்தனை... /இந்த அழைப்புக்களையும் வாய்ப்புக்களையும் ஏற்க மறுத்து, /நாம் கூறிய சாக்கு போக்குகள் எத்தனை, எத்தனை.../ இவைகளைச் சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. /இந்த அழைப்பை ஏற்போமா?/

விருந்துண்ண அழைக்கும் இறைவன்/ அழைப்பை ஏற்க மறுக்கும் நாம் / ஆகியவை இன்றைய வாசகங்கள் வழியே /நமக்குத் தரப்பட்டுள்ள மையக் கருத்துக்கள். வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசம்”/ என்று எசாயா குறிப்பிடும் இந்த ஒரு பானத்தை/ உருவாக்க நேரமும், கவனமும் தேவை./ நல்ல சுவையான திராட்சை இரசத்தை /விருந்து நேரத்தில் பரிமாறுவதே ஒரு பெருமை./ இந்தப் பெருமை பறிபோய்விடுமோ/ என்ற கவலையில் அன்னை மரியா/ கானாவூர் திருமணத்தின்போது/ இயேசுவை அணுகிய அந்த சம்பவம் /நமக்கு நினைவிற்கு வருகிறது அல்லவா!

இறைவன் தரும் இந்த அழைப்பைவிட/ நம் தனிப்பட்ட, தினசரி வாழ்வே பெரிது/ என்று எத்தனை முறை நாம் வாழ்ந்திருக்கிறோம்? /அந்த அழைப்பின் வழி வந்த நல்ல எண்ணங்களை/ எத்தனை முறை கொன்று குழிதோண்டி புதைத்திருக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு இன்றும், /இனி வரும் நாட்களிலும் பதில்கள் /தேடுவது நமக்கு மீட்பைத் தரும். அதற்காக சிறப்பாக இத் திருப்பலியில்/ இப்பங்கின் இளையோர் ஆகிய/ எங்களுக்காக இறைவனிடம் மன்றாடுட /பங்கு மக்களாகிய உங்களை /அன்புடன் வேண்டுகிறோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர் எசாயா இறைவன் தரும் இந்த விருந்தை விவரிக்கும்போது, முதலில் அங்கு பரிமாறப்படும் உணவு வகைகளைப் பட்டியலிடுகிறார். மேலோட்டமாகப் பார்த்தால், இவை வெறும் உணவுப் பொருட்களின் பட்டியலைப் போல் தெரிகிறது. ஆனால், இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்து வந்த அடிமை வாழ்வை நினைத்துப் பார்த்தால், இந்தப் பட்டியல் அவர்கள் ஏங்கித் தவித்த ஒரு விடுதலை வாழ்வின் அடையாளங்கள் என்பது புரியும். ஒவ்வொரு நாளும் ஒரு துண்டு ரொட்டிக்காக போராட வேண்டியிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு  இறைவன் தரும் ஒரு விருந்தைப் பற்றி இறைவாக்கினர் எசாயா விவரிக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 23: 1-3. 3b-4. 5. 6
பல்லவி: நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
  பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். –பல்லவி
 

2. தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
  மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி

3 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. –பல்லவி
 

4 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் பிலிப்பியர்க்கு எழுதிய கடைசி மடலை எழுதி முடிக்கும் முன் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரைக் கூறுகிறார்.  வறுமையிலும் வளமையிலும் வாழ பழகிக் கொள்ள அழைக்கின்றார். இறைஆசீர் கூறி அவர் முடிக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு நாம் வாழ்க்கை முறைகளை மாற்றிடுவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! . அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. எங்கள் திருஅவையின் நாயகனே! எம் இறைவா! எம் திருஅவையிலுள்ள அனைவரும் / நீர் தரும் விருந்திற்குத் தகுதியானவர்களாகத் / தங்களேயே தயாரித்துக் கொள்ளவும், / எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் நிலைமாறாது / உமது சாட்சிகளாய் வாழ / எங்களுக்கு நல்மனமும், ஆசீரும் தந்து / தூயஆவியின் கொடைகளைப் / பொழிந்திட வேண்டுமென்று / இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் குடும்பங்களின் நாயகனே! எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள அனைவரும் வறுமையிலும், வளமையிலும், / இன்பத்திலும், துன்பத்திலும் / நேரிய வழியில் நடந்திவும், / தன்னலம் துறந்துப் பிறர் நலம் காணும் / நல்மனம் படைத்தவராய் வாழவும், / என்றும் உமது உன்னதச் சீடர்களாய்  /உலகெங்கும் வலம் வரவும், எங்கள் பெற்றோருக்கு / உகந்த பிள்ளைகளாய் / வாழந்திட உமதருள் வேண்டுமென்று / இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் வளமையின் நாயகனே! எம் இறைவா! தமிழகம் எங்கும் / தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு / நற்சுகத்தையும், / போதிய மருத்துவ வசதிகள் பெறவும், / நாங்கள் அனைவரும் நல்ல சமுதாய உணர்வுடன் / சுற்றுசூழலைப் பேணிக்காக்கவும் / எங்கள் ஆண்டவரும், மருத்துவருமானக் / கிறிஸ்துவின் அருளால் நலமடைய / அருள்புரிய வேண்டுமென்று / இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பின் நாயகனே! எம் இறைவா! மன்னிப்பதால் மன்னிப்பைப் பெறுகிறோம், / அன்புச் செய்வதால் அன்பு செய்யப்படுகிறோம் / என்பதனை உணர்ந்து எம் அடுத்திருபவர்களை மன்னிப்பதிலும், / நட்புப் பாராட்டுவதிலும் அசிசியாரைப்போல் / அன்பின் சாட்சிகளாய் இவ்வுலகில் வாழ்ந்து / நிலைவாழ்வைப் பெற்று கொள்ள / வரமருள வேண்டுமென்று / இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. இறை இயேசுவினால் / நண்பர்களாய் தேர்ந்துகொள்ளப்பட்ட / இளையோராகிய நாங்கள் நற்பண்புகளாலும், / நன்னடத்தையாலும் / அனைவரின் உள்ளங்களில் இடம்பெற்று / உமக்கு சிறந்த சாட்சிகளாய் திகழ்ந்திடவும், / தன்னலமற்ற சேவையில் / சிறப்பாக பணியாற்ற / தேவையான அருள் வளங்களையும், / ஆற்றலாய் எம்மோடு இருந்து வழிநடத்திட / வேண்டுமென்று இறைவா / உம்மை மன்றாடுகிறோம்.