Thursday, July 30, 2020

பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு


 பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்


எசாயா 55:1-3
உரோமையர் 8: 35,37-39
மத்தேயு 14: 13-21

திருப்பலி முன்னுரை:


இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். இன்று நாம் ஆண்டின் 18ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம்.
பகிர்ந்து வாழும் பண்பை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இல்லாதவர்களோடு இருப்பவர் பகிர்ந்துகொண்டால் இருப்பவர், இல்லாதவர் என்ற நிலைமாறும். இதைத்தான் ஆதிகிறிஸ்தவர்கள் செய்து, இல்லாதவர் இருப்பவர் என்ற நிலையை மாற்றினார்கள். பகிர்ந்து வாழும் பண்பை மக்கள் மனத்தில் உருவாகி ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்திய சாதனை நம் ஆண்டவர் இயேசு ஒருவருக்கு மட்டும் தான் உண்டு.
அப்பம் பலுகுதல் நிகழ்வைத் திருப்பலியோடு ஒப்பிடுகின்றார்கள் மறைநூல் ஆராய்ச்சியாளர்கள். இயேசுவைப் போல நாமும் நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ வேண்டும் என்ற பண்பை ஒவ்வொரு திருப்பலியும் நமக்குத் தருகிறது. ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் பகிர்வு மனப்பான்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
எனவே இயேசுவின் திருவிருந்தில் பங்கு கொள்ளும் நாம் பகிர்வு வாழ அதற்குத் தடையானவற்றை நம்மிடமிருந்து அகற்றி நம்மைப் புனிதர்களாக மாற்ற வேண்டுமென்று இறைவனை வேண்டுவோம். இந்தப் பகிர்வில்புத்துணர்வுப் பெற்றவர்களாக மாறிடுவோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை:

இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தால் நசுக்கப்பட்டு வாடியபோது இறைவாக்கினார் எசாயா வழியாக இறைவன் கூறும் ஆறுதல் மொழியாக உள்ளது. இங்கு தானியங்கள், திராட்சை, பால் முதலியவை இறைவன் தருகின்ற அளவற்ற வாழ்வுக்கும் மகிழ்ச்சிக்கும் அடையாளமாக இருக்கின்றன. மகிழ்ச்சி அளிக்கும் இவ்வார்த்ததைகளை கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 145: 8-9. 15-16. 17-18 . (பல்லவி: 16)
பல்லவி: ஆண்டவரே எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி

எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். - பல்லவி

ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை


இறை இரக்கத்தின், அன்பின் வரலாற்று சாட்சியம்தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்று திருத்தூதர் பவுல் அடிகளார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கோடிட்டுக் காட்டுகிறார். அவரோ தம்முடைய ஆவியை நமக்குள் ஊற்றி நம்மோடு இரண்டறக் கலந்து, நம்மோடு இணைந்து வாழ்கின்றார்; நமக்கு உதவி செய்ய, நம் வாழ்வில் புதுமை செய்யக் காத்துக்கொண்டிருக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே! நாம் கொடுக்க முன்வர வேண்டும்! வாரீர் பகிந்துக்கொள்வோம் இறைமகனின் அன்பை...

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

திருச்சபைக்காக:
பகிர்ந்தளிக்க எம்மை அழைக்கும் இறைவா! திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் ஓரே உடல்: ஓரே தூயஆவியானவர்: ஓரே கடவுள்: ஓரே நம்பிக்கை என்ற உயரியப் பண்பில் தங்களின் அழைப்பை உணர்ந்து வாழ்ந்திடவும், பணியாற்றிடவும் வேண்டிய வரத்திற்காக இறைவா உமை மன்றாடுகிறோம்.

உலக மக்களுக்காக:
நலம் அளிக்கும் வல்லவரே! எம் இறைவா! உலகமெங்கும் தொற்று நோயால் அல்லல்படும் உம் மக்களைக்  கண்ணேக்கியருளும். இந்த நோயால் ஏற்பட்டுள்ள சகல இழப்புகளிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் மீண்டு வந்து தங்களின் இயல்பு வாழ்க்கைத் தொடரவும், நலமும், வளமும் பெற்று மகிழ்வுடம் வாழத் தேவையான அருள் வரம் தந்திட வேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.
 
நாட்டிற்காக:
உம் படைப்புகளைப் பலுகிப் பெருகச் செய்யும் எம் இறைவா! எமது நாட்டு அரசியல் அவலங்களால் பசி, பட்டினி, நோய்கள், குடிபோதை என்று பாதிக்கப்பட்டு அவதியுறும் எம் ஏழைஏளிய மக்களைப் பாரும். அவர்கள் வாழ்க்கை நிலை மேலோங்கி எல்லாரும் நலம் வாழப் பகிர்ந்தளிக்கு நல்ல மனதினைத் தரவேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.

மனித நேயம் மண்ணில் மலர்ந்திட:
பண்பாளரே எம் இறைவா! நான் மட்டும் பகிர்வதால் என்ன செய்ய முடியும் என்ற எதிர்மறை எண்ணங்களிலிருந்து எம்மை விடுவித்துப் பகிர்வு மனப்பான்மை வளரவும், உம் திருமகன் இயேசுவைப்போல் பகிர்ந்துண்டு வாழும் அவரின் சிறந்த சீடர்களாக எம் அயலாருடன் இணைந்து வாழ்ந்திட வரம் வேண்டி உமை மன்றாடுகிறோம்.

இளைய சமுதாயத்திற்காக :
எங்கள் அன்புத் தந்தையே இறைவா! உமது பிள்ளைகள் இளையோராகிய நாங்கள் எமது தேவைகளில் முதன்மையான தேவை நீரே என்று உணர்ந்து நாங்கள் முழுமையாக உம் கரம் பற்றிக் கொள்ளவும், நிலைவாழ்வுப் பெற்று உம்மை அடையவும் இறைவா உமை மன்றாடுகின்றோம்.மறையுரை சிந்தனைகள்

Thursday, July 23, 2020

பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்


1.அரசர்கள். 12:13, 16-19
உரோமையர் 8: 28 -30
மத்தேயு 13: 44-52

திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,

இன்று பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு. புதையலையும், நல்முத்தயையும் தேடிக் கண்டுபிடிக்க இறைஇயேசுவின் அழைப்பை ஏற்று நம் ஆலயம் வந்துள்ள இறைமக்களை இனிதே வரவேற்கிறோம்.

இன்றைய நற்செய்தியில் மூன்று உவமைகளைக் காண்கிறோம். புதையல், முத்து, மீன்கள் நிறைந்த வலை என்ற இம்மூன்று உவமைகளையும் இறையரசுக்கு ஒப்புமைப்படுத்துகிறார் இயேசு. புதையல், முத்து, வலை என்ற மூன்று உருவகங்களும் பல்வேறு சிந்தனைகளை மனதில் எழுப்புகின்றன. நன்னெறிகளுக்கு எதிராக, உத்தரவின்றி நுழையும் எதிர்மறை எண்ணங்களையும், கருத்துக்களையும், இறையரசு என்ற சிப்பி, அழகிய முத்தாக மாற்றும் வலிமை பெற்றது என்பதை, நாம் முத்து உவமையிலிருந்து கற்றுக் கொள்கிறோம்

உள்ளார்ந்த உண்மை மதிப்பை உணர்ந்தால், அதற்காக எதையும் இழக்க நாம் துணிவு கொள்வோம். பெரும்பாலான நேரங்களில் நம்மிடம் புதைந்துள்ள, நம் குடும்பங்களில் புதைந்துள்ள மதிப்புக்களை உணராமல், நாம் வாழ்ந்து வருகிறோம். நம் கண்முன்னே முத்துக்களும், புதையல்களும் அடிக்கடித் தோன்றினாலும், அவற்றைக் காணும் பக்குவம் இல்லாமல், நாம் குழம்பி நிற்கிறோம்.

இதன் மூலம் நாம் அறிவது என்ன என்றால், கடவுளின் ஞானம் இறையரசிற்காக இந்தச் செல்வத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று நமக்கு வழிகாட்டும். எது உண்மையான மதிப்புள்ள பொருள், செயல் என்று நம்மால் கண்டு பிடிக்க முடியும். அதன் மூலம் இறைவன் தரும் புதையலாம் இறையரசைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


தாவீதின் மகன் சாலமோன் கடவுளிடம் இஸ்ரயேல் மக்களுக்கு நல்லாட்சி செய்ய நல்ல ஞானத்தை மட்டுமே தனக்கு வரமாகக் கேட்டார். கடவுளும் அவர் கேட்டதை உடனே அருளியது, மட்டுமல்லாமல் இவ்வுலக்கைச் சார்ந்த எதையும் கேட்கவில்லை என்பதால் இனி அவரைப்போல எவரும் இருக்கவே முடியாது ஆசிகூறினார். உண்மையான ஞானம் இறைவனைப் புரியவும், அறிந்துக் கொள்ளவும் செய்கிறது. எது தேவை, எது தேவையில்லை என்று தெளிவாக்குகிறது. எதைத் தேட வேண்டும், எதை விலக்க வேண்டும் என்ற அறிவுறுத்துகின்ற இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை


மனிதன் எவ்வளவு தான் பொருள் கொண்டிருந்தாலும் விண்ணரசில் செல்வத்தைச் சேர்த்து வைக்க மறந்து விடக்கூடாது. கடவுளின் அன்புக்கு உரியவராகும் போது ஆவியானவரின் ஒத்துழைப்பும் நமக்குக் கிடைக்கின்றது. தான் அழைத்தவரைத் தனக்கு ஏற்புடையவராகித் தம் மாட்சிமையில் பங்கு கொள்ளச் செய்வார் என்பதைப் பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தின் மூலம் தெளிவுப்படுத்துகின்றார். இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
திபா 119: 57,72. 76-77. 127-128. 129-130

ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன். நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. பல்லவி

எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். பல்லவி

பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன்; பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். பல்லவி

உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன். உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. இறையரசு எனும் புதையலைத் தந்த எம் இறைவா! உம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும், நல்லாட்சி செய்யத் தேவையான ஞானத்தைக் கொடுத்து, எம்மை அரிய நல்முத்தாம் இறையரசில் கொண்டு சேர்க்கத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. அமைதியின் இறைவா! இவ்வுலகில் அமைதி ஆட்சிச் செய்யவேண்டுமெனில், ஆட்சியில் இருப்போர், அமைதிப் பெறவேண்டும். அமைதியின் சக்தியை உணரும் அறிவுத்திறன் பெறவேண்டும்.. மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மைத் தீமைப் பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தந்தருளும். எங்கள் தலைவர்கள் உண்மையான ஞானம் பெறவேண்டும் என்று மனமுருகி இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. வானாளாவிய இரக்கம் கொண்ட எம் இறைவா! எம் கிறிஸ்துவ வாழ்வு, மிகுதியான செல்வத்தைக் கொண்டுள்ளது, எம்மிடம் ஒன்றுக்கும் உதவாத பொருள்களை அகற்றி விட்டு, விலை மதிப்புள்ள பொருளளாகிய இறையரசிற்குத் தயார் படுத்தவும், குடும்பத்தினர் அனைவரும் உண்மையான மதிப்பை அறிந்திடவும் ஞானத்தையும், இறைப்பற்றையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. . விசுவசிப்போருக்கு வாழ்வாகிய எம் இறைவா! பூமியில் நிலவும் மிக உயர்ந்த அழுத்தம், மிக அதிகமான வெப்பநிலை ஆகியவற்றைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, வைரமாக மாறிடும் நிலக்கரிபோல் எம் இளையோர்கள் இவ்வுலகம் தரும் அழுத்ததாலும், வெப்பத்தாலும் திட்டப்பட்டு உம் மணிமுடியில் மின்னிடும் வைரமாய்த் திகழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எம் வாழ்க்கையின் கலங்கரைத் தீபமே இறைவா! புதிய விடியலை நோக்கிக் காத்திருக்கும் உலக மக்களை, தொற்றுநோயிலிருந்து காத்து, அவர்களின் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைந்து உம்மைத் தொழுதிட, உம் இறைவேண்டல் இல்லத்திற்கு மீண்டும் வரவும், உம் பணியாற்றிடும் திருஅவைப் பணியாளர்கள் நற்சுகத்துடன் பாதுகாத்து எம்மை வழிநடத்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்www.anbinmadal.org

Thursday, July 16, 2020

பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சாலமோனின் ஞானம். 12:13, 16-19
உரோமையர் 8: 26 -27
மத்தேயு 13: 24-43 திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு. நல்ல விதைகளாய்ப் பலன் தரும் சீடர்களாய் மானிட மகனின் அருளாசி வேண்டி இத்திருப்பலிக்கு வருகை வந்துள்ள உங்கள் அனைவரையும் நூற்றூக்கு நூறு பலம் தரும் அன்பர்களாய் மாறிட மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
 

மீண்டும் உவமைகளின் மூலம் பேசும் இறைமகன் தன் வயலில் நல்ல கோதுமைக் கதிர்கள் வளர வேண்டுமென்றால், தன்னைச் சுற்றியுள்ள வயல்களிலும் நல்ல கதிர்கள் வளர வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ்வுலகில் பலன் தரும் கதிர்களாய் வாழ்ந்திட நம்மை மீண்டுமாய் அழைக்கின்றார். அதற்கான செயல் திட்டங்களாக உள்ளவை (1) நம் விசுவாசத்தை இன்னும் உறுதியோடு வளர்த்தல் , (2) மற்றவர்களின் மன மாற்றத்திற்கு அழைத்தல். (3) உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்துச் சமூகத்தை மாற்றுதல். இன்றைய நற்செய்தியில், இயேசுவும் உவமைகள் மூலம் இதே மூன்று குறிக்கோளை நமக்குப் போதிக்கிறார்.
 

வெறுப்பு, வன்முறை என்ற களைகள் சூழ்ந்திருக்கும் இவ்வுலகில், நாம் நம்பிக்கையைத் தளரவிடாமல், அன்பு, அமைதி, ஒப்புரவு, மன்னிப்பு என்ற நற்கதிர்களை வளர்க்கும் வரத்தை இத்திருப்பலியில் அமைதியின் இளவரசனாம் இயேசுவிடம் வேண்டுவோம்.

வாசகமுன்னுரைமுதல் வாசக முன்னுரை


கடவுள் நீதியுள்ளவர் என்றும், எல்லார் மீதும் இரக்கம் உள்ளவராய் இருக்கிறார் என்றும், சரியான தீர்ப்பு வழங்குவார் என்றும் எடுத்துரைக்கிறது. எனவே நீதிமான்கள் மனிதநேயம் கொண்டு மக்களை நடத்த வேண்டும், என்றும் கடவுள் மன்னிப்புக் கேட்டும் எவருக்கும் தவறாமல் மன்னிப்பு வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ள சாலமோனின் ஞானநூலிருந்து எடுக்கப்பட இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை


தெளிவான கண்ணோட்டத்தை உரோமைக் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தூயஆவியின் செயலைப் பற்றித் தெளிவாக அவர்கள் புரிந்துக் கொள்ளவும் எழுதுகிறார் திருத்தூதர் பவுல். தூய ஆவியானவர் நமக்குப் புதுவாழ்வைத் தருகின்றார். எனவே நம்பிக்கைக் கொள்வோர், பாவம், சாவு இவற்றிலிருந்து விடுதலைப் பெறுகின்றனர். மேலும் நம் ஒவ்வொருவருக்காகவும் தூய ஆவியார் கடவுளிடம் பரிந்துப் பேசுகிறார். தூய ஆவியைப் பெறுவதன் மூலம்தான் நாம் கடவுளின் பிள்ளைகளாக மாற முடியும் என உரோமை மக்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 86: 5-6. 9-10. 15-16
பல்லவி: ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர்.
என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். -பல்லவி

என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! -பல்லவி

என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள்மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே,  உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. ஞானத்தின் தொடக்கமே எம் இறைவா! உம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும், தம் சொல்லாலும், செயலாலும் உண்மைக்குச் சான்று பகர,  திருப்பலியில் தன்னை மறைத்து இறைமக்களுக்கு மறுகிறிஸ்துவாகப் பிரதிபலிக்கவும், எடுத்துக்காட்டான வாழ்வு வாழவும் தேவையான ஞானத்தைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. படைப்பின் நாயகனே எம் இறைவா! இவ்வுலகம் உம் இறைவெளிப்பாடு என்பதனை நாங்கள் அனைவரும் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவிப் புரியவும், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழவும், அன்பு, மகிழ்ச்சி. பரிவு இவை இன்று மனிதசமுதாயத்தில் நலிவடையாமல் பிறருக்கு உதவிபுரியவும் எடுத்துக்காட்டான வாழ்வு இத்தொற்று நோய் காலத்தில் வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. குழந்தைகள் விண்ணரசின் சொந்தங்கள் என்று மொழிந்த எம் இறைவா, எம் குழந்தைகள், இளமையில் அதிகமாக உம்மைத் தேடவும்., உம் வர்த்தைகளை வாழ்வாக்கி, தம் சொல்லாலும் திருஅவைக்கும், மனிதகுலச் சமுதாயத்திற்கும். சான்றுப் பகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்..

4. . இளைஞனே எழுந்திரு, எழுந்து ஒளி வீசு என்றவரே! எம் இறைவா! இவ்வலகத் தலைவர்கள் தங்கள் வாழ்வால் எடுத்துக்காட்டான வாழ்வை, பெரும்பாலும் அவர்களால் கொடுக்க முடிவதில்லை. நீரோ, உம் சொல்லும், செயலும் விண்ணகத் தந்தையோடு இணைந்திருந்தது போல, எம் இளையோர் அனைவரும் உம் வார்த்தையை வாழ்வாக்கி, உப்பாக உலகிற்கு ஒளியாகத் திகழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. குடும்பங்களின் தலைவரே எம் இறைவா! இன்றைய நவீன வாழ்விலொன்றுக் கூடிச் செபிக்கவும், உரையாடவும், உறவுகளை மேம்படுத்தவும், மதிக்கவும் நாங்கள் மறந்திருக்கின்றோம். நீர் கொடுத்த இந்த உறவுகள் உண்மையான, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை வழங்கிடவும், குடும்பங்களில் கூடிச் செபிக்கவும், இறை அழைத்தலை அதிகமாக ஊக்குவிக்கவும், எம் குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாறிடவும், தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து அனைவரையும் காத்திடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்..

www.anbinmadal.org

Thursday, July 9, 2020

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 55:10-11
உரோமையர் 8: 18-23
மத்தேயு 13: 1-23

 திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு. நற்செய்தியாளர் மத்தேயு தொகுத்துள்ள உவமைகளிலேயே புகழ்பெற்ற "விதை விதைப்பவர்" உவமையை இன்று கேட்க அழைக்கப்பட்டுள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
கடவுளைப் புரிந்துகொள்வதற்குத் தலைசிறந்த வழி, கதைகள் என்பதை உலகின் எல்லா மதங்களும் உணர்ந்துள்ளன. கதைகளுக்கு உள்ள ஆற்றலை நன்கு உணர்ந்தவர் இயேசு. எனவே, அவர் கடவுளையும், அவரது அரசையும் அவர் கதைகள், மற்றும் உவமைகள் வழியே அறிமுகப்படுத்தினார்.
புகழ்பெற்ற உவமை என்று சொல்லும்போது, கூடவே ஓர் எச்சரிக்கை மணியும் ஒலிக்கிறது. உவமைகள் தானே, கதைகள் தானே என்று ஓர் அலட்சிய மனநிலை நமக்குள் தோன்றும் ஆபத்து உண்டு. நமது அலட்சியப் போக்கை உணர்ந்தவர்போல, "விதை விதைப்பவர் உவமை" யின் இறுதியில் இயேசு ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்: "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்ற வார்த்தைகளுடன் அவர் தன் உவமையை நிறைவுச் செய்கிறார்.
விதை விதைப்பவர் உவமையை இன்று இறைவார்த்தையாக ஏற்கும் நாம், தங்குத் தடையேதுமின்றி இறைவார்த்தையை விதைக்கும் நல்ல விதைப்பாளர்களாக மாறுவோம். இறைவார்த்தையை நம் வாய்மொழியாக விதைப்பதைவிட, நமது வாழ்வின் வழியே விதைப்பதில் ஆற்றலோடு செயலாற்றுவோம். உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம். இறைவன் இந்த நற்பணியில் நமக்கு இன்றைய திருப்பலி வழியாகத் துணைப் புரிவாராக!

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை


மழையும் பனியும் நிலத்தை நனத்து எல்லோருக்கும் பலன் தராமல் திரும்பப் போவதில்லை. அதைப் போலவே நாம் என்னதான் தடைகள் விதித்தாலும், இறைவார்த்தை, தன் செயல்களை ஆற்றியே தீரும் என்பதை இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் திட்டவட்டமாகக் கூறுகிறார். அதுவும், இவ்வார்த்தைகளை இறைவனே நேரடியாகச் சொல்வதுபோல் இன்றைய முதல் வாசகத்தில் ஒலிப்பதைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

பவுலடியார் இரண்டாம் வாசகத்தில், துன்புறுவதும் அழிவதும், உருவாக்கத்தின் ஒரு பாகம் என்று சொல்கிறார். விதைகள் மண்ணில் விழுந்து மடிந்துத் தான் புதிய செடியாக மாறுகிறது. மீட்பு, துன்பத்திலும், மரணத்திலும் இருந்து வருகிறது. கடவுள் நமக்குத் தூயஆவியின் வழியாக மீட்பைத் தருகின்றார். நாம் நம்மையே இந்தத் திட்டத்திற்கு உட்படுத்திக் கொண்டு, கடவுளிடம் வேண்டி, நம்மை வளர்த்துக் கொண்டால் தான், நாம் முழுமையாகப் பலன் தருவோம். இக்கருத்துகளை மனதில் இருத்திஇவ் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன.
திருப்பாடல்: 65:9அஆஇ.9ஈ-10,11-12,13

மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது. பல்லவி

நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிரு துவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். பல்லவி

ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. பல்லவி

புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங் களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.

நம்பிக்கையின் மன்றாட்டுகள்

1. அருள் வளங்களின் ஊற்றாகிய எம் இறைவா! விதைகளைத் தெளிப்பது, இறைவார்த்தையைச் சுமந்துச் செல்பவரின் கடமை என்பதைத் திருஅவையிலுள்ள அனைவரும் உணர்ந்து உம் வார்த்தைகளை வாழ்வாக்கிடவும் இதை அடுத்தவர்களுக்கு அறிவிக்கின்ற உம் மகன் இயேசுவின் சீடர்களாய் உழைத்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. மகத்துவமிக்க எம் இறைவா! இறைவார்த்தையை விதைப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல். அதன் வழியாக, சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் நிலைவாழ்வுக்கான விளைச்சல்! என்ற கருத்துகளை எங்கள் குடும்பங்களில் செயல்படுத்த உம் ஆவியின் அருள்வரங்களைப் பொழிந்திட இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. நலம் காண நல்வழி நடத்தும் எம் இறைவா, உள்ளங்களில் மாற்றங்கள் இல்லாமல் சட்டங்களைக் கடமைக்காகக் கடைப்பிடிப்பதால் பயனில்லை என்பதை எங்கள் நாட்டுத்தலைவர்கள் உணர்ந்துச் சுயநலமற்ற சேவைகளில் ஈடுபடவும், மக்களின் குறைத்தீர்த்த நல்லாட்சித் தந்திடவும், தொற்றுநோயின் தாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், மக்களுக்கு நலவாழ்வு அளித்திட வேண்டிய வரத்தைத் தர உம்மை மன்றாடுகிறோம்..

4. ஆற்றல் மிக்க எம் இறைவா! எம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களை நல்ல விளைநிலங்களாக மாற்றி நூறுமடங்கு பலன்களை அளிக்குமாறு செய்து தங்கள் குடும்பத்திற்கும், இச்சமுதாயத்திற்கு ஏற்றமிகு நல்வாழ்வையும், இறைமகன் இயேசுவின் வார்த்தைகளை விதைப்பவர்களாகவும் இவ்வுலகில் வலம் வரத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. நலம் அளிக்கும் வல்லவரே! எம் இறைவா! இந்தத் தொற்றுநோய்க்கு எதிராய் தன்னலம் கருதாமல் போராடுபவர்கள் அனைவரையும் காத்தருளும். அன்பும், பொறுமையும், கருசனையும் அளித்து உயிர்களைக் காத்திடும் பணியைச் செவ்வனே செய்திட அவர்களுக்குப் பக்கபலமாய் இருக்கவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org

Wednesday, July 1, 2020

பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு இன்றைய நற்செய்தி வாசகங்கள்


செக்கரியா 9:9-10
உரோமையர் 8:9,11-13
மத்தேயு 11: 25-30


  திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு. இயேசுவின் எளிய நுகத்தை ஏற்று அவரின் திருவடியில் இளைப்பாற வந்துள்ள இறைமக்களே சோர்வை நீக்கிப் புத்துயிர் பெற மகிழ்வுடன் இத்திருப்பலியில் பங்கேற்க வரவேற்கிறோம்.
பெருஞ்சுமைச் சுமந்துச் சோர்ந்திருபவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாற்றுதல் தருவேன் என்று நம்மை அழைக்கின்றார். ஆம் நம் வாழ்வில் எத்தனை சுமைகளைச் சுமக்கவேண்டியதாய் இருக்கின்றது. கடன்தொல்லைகள், தொற்றுநோய்கள், உடல்நலக்குறைவு, பிள்ளைகளின் படிப்பு, வேலைவாய்ப்புகள், திருமணங்கள், சமுதாய மாற்றங்கள், போராட்டங்கள், அரசியல் மாற்றங்கள் என எத்தனை கவலைகளும், அச்சங்களும் நம்மை ஆடிப்படைக்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகங்கள் உலகம் தேடுகின்ற நீதியையும், வெற்றியையும் அமைதியையும் இளைப்பாற்றியையும் ஆண்டவர் இயேசு எப்படித் தருகிறார் என்று எடுத்துக் கூறுகிறது. கிறிஸ்துவின் ஆவியின் வழியில் வாழ முன் வருகின்றவர்கள் இயேசு வாக்களித்த இளைப்பாற்றியை அடைவர் என்பதே இதற்குச் சான்று. என் நுகம் அழுத்தாது என் சுமை எளிதாயுள்ளது என வாஞ்சையோடு நம் ஒவ்வொருரையும் அழைக்கின்றார். ஏனென்றால் இயேசு ஒருவரால் மட்டுமே இதய அமைதியை, எளிய வாழ்வை, தூயஆவியின் நிறைவை எல்லாச் சூழல்களிலும் நமக்குத் தர முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இத்திருப்பலியில் இறைஇயேசுவின் அன்பில் இணைந்திடுவோம்.


 வாசகமுன்னுரை

 முதல் வாசக முன்னுரை

பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த இஸ்ரேயேல் மக்களோடு வந்தவர்களில் ஒருவர் தான் செக்கரியா. நாடு திரும்பிய மக்கள் முன்னால் காட்சி அளித்ததெல்லாம், எழுந்து நிற்க முடியாமல் விழுந்துக் கிடந்த அவர்களது நாகரிகமும், நகரங்களும். அவர்களது பெருமையின் சின்னமாக விளங்க வேண்டிய எருசலேம் ஆலயம், வறுமையின் சின்னமாகக் காட்சியளித்தது.  மக்களின் மனதை அவநம்பிக்கையும் அச்சமும் ஆட்கொண்டன. அந்த நேரத்தில் தான் இறைவாக்கினர் செக்கரியா இஸ்ரயேல் மக்களைப் பார்த்து ”மக்களே, உங்களுக்கு நீதியையும், வெற்றியையும், சமாதானத்தையும் அளிக்க அரசர் ஒருவர் வருவார்" என்றார். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

 இரண்டாம் வாசக முன்னுரை


ஊனியல்பு, தீய ஆவி நம்மிடம் இருக்கும்போது நமக்குத் துன்பம் துன்பமாகத் தோன்றுகிறது. தூயஆவி நம்மிடையே குடிகொள்ளும்போது துன்பம் நீங்கும். சுமை சுகமாகும். ஆதலால் ஒவ்வொருவரும் தூய ஆவியின் வரங்களைப் பெற்றுச் செயல்படவேண்டும் என இன்றைய இரண்டாவது வாசகத்தின் மூலம் உரோமை நகர மக்களைப் பார்த்து அனைவரும் கிறிஸ்துவுக்குள் இணைந்த வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார். நமது தனிப்பட்ட முயற்சியால் செய்ய முடியாத, அசாத்தியமான காரியங்களைக்கூடச் செய்வதற்கான ஆற்றலை இந்தத் தூய ஆவி தருகிறார் என நமக்கு முன்னுரைக்கும் திருத்தூதர் பவுலடியாரின் இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம்.

 பதிலுரைப்பாடல்

பல்லவி: என் கடவுளே, என் அரசே!. உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்

திருப்பாடல்: 145: 1-2, 8-9, 10-11, 13-14

என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.  நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். -பல்லவி

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.  ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். -பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.  அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி

உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.  தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். -பல்லவி


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்பின் ஊற்றாகிய இறைவா! திருஅவையிலுள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் யாவரும் சாந்தமும், மனத்தாழ்ச்சியும் கொண்டவர்களாகவும், தூயஆவியில் வழிநடத்தப்பட்டு உம் மகன் இயேசுவின் சீடர்களாய் இந்நானிலத்தில் அனைத்து மக்களையும் உம் அன்பால் அழைத்துவரும் மக்களாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. பேரின்பப் பரம்பொருளே! எம் இறைவா! நாள்தோரும் நாங்கள் சந்திக்கும் அவலங்களால் ஏற்படும் கவலைகள், மனசோர்வுகள், இயலாமையால் ஏற்படும் தோல்விகள், கோபங்கள், தொற்று நோயின் தாக்கங்கள் இவைகளால் எங்கள் குடும்பங்களில் உலாவும் பதட்டமான வாழ்வில் விடுதலைத் தரக்கூடியவர் நீர் ஒருவரே என்று உணர்ந்து எம் பாரத்தை உம்மில் இறக்கிவைக்கவும், அன்பின் நுகமாகிய எளிமையான சுகத்தை அடைந்திடத் தேவையான வரங்களைப் பொழிந்திட இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. அருள்வரங்களின் ஊற்றாகிய இறைவா! எம் சமுதாயத்தில் நாங்கள் இழந்த வரும் சகிப்புதன்மை, மனிதநேயம், அமைதி ஆகியவற்றை மீண்டும் நாங்கள் பெற்று மகிழ்ச்சியான, எளிமையான, தூய்மையான வாழ்க்கை வாழ்ந்திடவும் தொற்று நோயினால் வாடும் இல்லங்களுக்குத் தேவையான உம் ஆசீரை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

4. . பேரின்பப் பரம்பொருளே! எம் இறைவா! எம் இளைய தலைமுறையினர் இவ்வுலகக் கவர்ச்சியால் தங்களை இழந்து, தங்கள் வாழ்வையும், தமக்கு அடுத்திருப்பவர்களையும் ஒரு சுமையாகக் கருதி அல்லல் படும்போது அவர்களுக்குத் தூயஆவியின் வழிகாட்டுதலும், நேரியவழியையும் அமைத்துத் தந்துத் தங்கள் வாழ்வைச் சுகமான சுமையான வாழ்வாக வாழ்ந்திடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

Friday, June 26, 2020

பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்


2 அரசர் 4:8-11,14-16அ
உரோமையர் 6:3-4,8-11
மத்தேயு 10: 37-42

 திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறைக் கொண்டாட இறை அழைப்பை ஏற்று நம் ஆலயத்தில் ஒருமனதோராய் ஒன்றிணைந்து வந்துள்ள இயேசுவின் சீடர்களாகிய உங்களை அன்புடன் இத்திருப்பலிக்கு வரவேற்கிறோம்.
கடந்த சில வாரங்களாக இயேசுவின் சீடராக வாழ, மாற விரும்புவோருக்கு இயேசு அளித்த அறிவுரைகளையும் ஆறுதல்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் அதன் வெகுமதிளைப்பற்றியும் திருத்தூதர் மத்தேயு எடுத்துரைக்கின்றார். இயேசு கூறுவது கடுமையாயாக் தோன்றினாலும் அதற்கான பரிசின் சிறப்பைப் பதிவுச் செய்கிறார். தன் சீடர்களை ஏற்றுக்கொள்பவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்கிறார்கள். இயேசுவை ஏற்றுக்கொள்பவர்கள் தந்தையாம் கடவுளையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்கான கைம்மாறு பெறாமல் போகார் என்பதே ஆகும்.
இன்றைய நற்செய்தி கிறிஸ்தவ வாழ்க்கையில் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இயேசுவின் பெயரில் ஒருவரை வரவேற்பது என்பது இயேசுவையே நாம் வரவேற்பது போல் ஆகும். எனவே நம் அன்றாட வாழ்வில் செய்தியைக் கொண்டு வருகின்ற தூதரை ஏற்பதுவும் மற்றும் இறையன்பின் சாட்சிகளாக வாழ்வதும் நமது கடமையாகும். இந்த விருந்தோம்பல் அளவில் சிறிதாக இருந்தாலும் அதற்கும் கைம்மாறு நம் இறைவன் தருவார் என்று அவர் அளித்த நம்பிக்கையான வார்த்தைகளை உள்ளத்தில் பதிவு செய்து இத்திருப்பலியில் இறைஇயேசுவில் இணைந்திடுவோம்.

 வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகம், எலிசாவின் காலத்தில் நடைப்பெற்ற நிகழ்வுகளை எடுத்துரைக்கிறது. சூனேம் என்ற நகரின் வசதிபடைத்த பெண் இறைவாக்கினருக்குப் பொருளாதார வகையில் உறுதுணையாக இருக்கிறார். ஆனால், இவருக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை. அவரின் கைம்மாறுக் கருதாத உதவியைக் கண்டு அவருக்குக் குழந்தைப் பேற்றினை அளிக்கிறார். ஆனால் அக்குழந்தையைத்தான் சிறிதுக் காலத்தில் இறந்தபோது உயிருடன் எலிசா எழுப்புகிறார். இந்த நிகழ்வுகளை நாம் 2 அரச 4-ஆம் அதிகாரத்தில் வரும் இந்நிகழ்வைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாவது வாசகத்தின் மூலம் கிறிஸ்துவின் வழியாகவே நாம் நிறைவாழ்வை அடைய முடியும் என்பதைப் பவுலடியார் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார் மனிதகுலம் முழுவதும் பாவத்திற்கு அடிமைப்பட்டுள்ளது. எனவே, எல்லாருக்குமே மீட்புத் தேவை. புதிய வாழ்வு என்பது பழைய வாழ்வைப் போன்றதல்ல மாறாகத் தூய ஆவியின் கனிகளை, கொடைகளை அடிப்படையாகக் கொண்டது எனவே, உரோமை நகர மக்களைப் பார்த்து அனைவரும் கிறிஸ்துவுக்குள் இணைந்த வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார்.இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம்..

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
திருப்பாடல்: 89: 1-2, 15-16, 17-18

ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி

விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். பல்லவி

ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது. நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்”.  அல்லேலூயா

நம்பிக்கையாளின் மன்றாட்டுகள்

1. உலகைப் படைத்தாளும் இறைவா! திருஅவையிலுள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் இறைஊழியர்களையும் மதித்து நடக்கவும், அவர்களுக்கு எங்களால் ஆன உதவிகளைச் செய்யதோடு மட்டுமல்லாமல் அவர்களை அனுதினமும் எங்கள் செபத்திலும், பொருளாதாரத்திலும் தாங்கி அவர்கள் அனைவரோடும் இணைந்து வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம் பாதைக்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்த எம் இறைவா! இறைப்பணி என்பது சவால்கள் நிறைந்தது. தங்களின் பணிவாழ்வைச் சிறுவட்டத்திற்கு அடைக்கிவிடாமல் அனைவரையும் அன்பால் ஏற்று வாழவும். தமக்குக் கிடைக்கும் ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் கண்டு மலைத்துவிடாமல் தொடர்ந்து துணிந்துத் தம் பணிவாழ்க்கையில் வெற்றிவாகைப் பெற்றிட உம் இறைபணியாளர்களுக்குத் தேவையான வரங்களைப் பொழிந்திட இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. பொறுமையின் சிகரமே எம் இறைவா! உழைப்பின் பயனை அடையப் பொறுமையையும், துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தையும், கிறிஸ்துவ வாழ்வு என்பது சவால்களை உள்ளடக்கியது என்பதை எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உணர்ந்து வாழ்ந்திடவும், இறுதியில் நிலைவாழ்வு என்னும் மகிழ்ச்சியைப் பெற்றிடத் தேவையான உம் ஆசீரை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

4. பரிவன்புமிக்கத் தந்தையே எம் இறைவா! எம் இளைய தலைமுறையினர் இறையரசின் விழுமியங்களைத் தங்களுக்குள் பெற்று இச்சமுதாயத்திற்குப் புனிதர்களைப் போல் முன்மாதிரியான நல்வாழ்வு வாழ்ந்திடவும், தன்னலமற்ற சேவையால் உமது இரக்கத்தைக் காட்டும் நல் உள்ளங்கள் உடையவராக மாறிடவும், இத்தொற்று நோய் காலத்தில்  தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. நலமாக்கும் வல்லவரே எம் இறைவா! இந்நாட்களில் தொற்று நோயால் அவதியுறும் மக்களைக் கண்ணோக்கியருளும். அனைவரும் நோயின்று விடுதலை பெற நல்ல உடலுறுதியும், மனஉறுதியும் பெற்று நலமடைந்து தத்தம் பணிகளைச் சிறப்புடன் செய்திடவும், அவர்களின் மருத்துவப் பணியாளர்கள் நலமுடன் சேவை செய்திட தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org

Wednesday, June 17, 2020

பொதுக்காலம் ஆண்டின் 12ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 12ஆம் ஞாயிறு


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எரேமியா 20:10-13
உரோமையர் 5:12-15
மத்தேயு 10:26-33

  முன்னுரை

அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு. சிட்டுக் குருவிகளை விட மேலான விலையேறப் பெற்றவர்களாகிய இறைமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்
இன்றைய நற்செய்திகளில் ஆழமாக நம் இதயங்களில் பதிவு செய்யப்படும் செய்தி எதுவென்றால் அஞ்சாதீர்கள். இறைவனிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள். அவர் நமக்கு அடைக்கலமும், ஆற்றலுமாய் உள்ளார். இடுக்கண் வரும் நேரங்களில் அவர் நமக்கு உற்றத் துணையாக இருப்பார் என்பதே!. திருப்பாடல் 23யில் கூறியது போல அவர் நல்லாயன். பசும்புல் தரையில் சேர்ப்பார். காரிருல் சூழ்ந்தப் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் எனக்குப் பயதே இல்லை என்பதை உணர்ந்தோம் என்றால் நாம் தைரியம் பெறவோம். ஏனெனில் நம் ஆண்டவர் கண்ணுக்கு நாம் விலையேறப்பட்டவர்கள் மதிப்புக்குரியவர்கள். எனவே இறைவனின் மாறா அன்பில் சந்தேகமின்றி நம்பிக்கைக் கொள்வோம். அச்சம் மனிதனைக் கோழையாக்குகின்றது. அன்பு மனிதனை மனிதனாக்குகிறது. எனவே அச்சத்திலிருந்து விடுபட்டு இறைவனின் அன்புக் கலந்திட இத்திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம். தொற்று நோயின் தாக்கத்தை விரைவில் கட்டுப்படுத்தி உமது மக்களை காத்திட சிறப்பாக மன்றாடுவோம்.

 வாசகமுன்னுரை

 

 முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில், இறைவனின் செய்தியை எரேமியா, அரசனிடம் எடுத்துரைத்தபோது அரசனோ அச்செய்திக்குச் செவிமடுப்பதற்குப் பதிலாக எரேமியாவைத் தேசத்துரோகி என முத்திரைக் குத்தி, துன்புறுத்த ஆரம்பித்தான். ஆனால் இந்தக் கொடூரமான பிரச்சனைகள் மத்தியில் எரேமியா ஓடி ஒளிந்தாரா? இல்லை. உறுதியான மனநிலையோடு எதிர்க்கொண்டார். இதே நம்பிக்கையில் நாமும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

 இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் உரோமையருக்கு வலியுறுத்துவதாவது ஒரு மனிதன் வழியாகப் பாவம் இவ்வுலகிற்கு வந்தது. ஒருவர் செய்தக் குற்றத்தால் பலரும் இறந்தனர். கடவுளின் அருளாலும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாகக் கிடைத்தது என்பதே! இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம்..

 பதிலுரைப்பாடல்

பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.
திருப்பாடல்: 69: 7-9, 13, 16, 32-34

ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி

ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி

எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. வானமும் வையமும்; கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். பல்லவி

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்”.  அல்லேலூயா..


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. மகத்துவமிக்க இறைவன்! இன்றைய உலகில் உமது திருஅவை எதிர்க்கொள்ளும் எல்லா எதிர்ப்புகளையும் சவால்களையும் சந்திக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இயேசுவின் விழுமியங்களையும், இறைசார்பு தன்மைகளையும் பின்பற்றி வாழ்ந்திடத் தேவையான மனவலிமையும், துன்பங்களை வெல்லும் உறுதியும் பெற்று வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. மருத்துவருக்கெல்லாம் மருத்துவராம் எம் இறைவா! கொரோனா தொற்று நோய்க்கு எதிராய் போராடும் இன்றைய மருத்துவ உலகம் அதில் வெற்றிப் பெறவும், தன்னலம் பாராமல் பணிச் செய்யும் அனைவரையும் நலமுடன் பாதுகாத்திடவும், நோயாளிகள் விரைவில் நலமடைந்துத் தம் இல்லங்களில் இயல்பு வாழ்க்கைத் தொடங்கிடவும் தேவையான அருள் வளங்களைப் பொழ்ந்து உம் வல்லக்கரத்தால் காத்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா! திகிலான இவ்வுலகில் தினமும் அஞ்சாதீர்கள் என்று எங்களைத் திடப்படுத்தி, எங்கள் குடும்பங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் அருள்கொடைகளால் நிலைத்து நின்றுச் சவால்களை வென்று வெற்றிவீரர்களாய், இயேசுவின் அன்புச் சீடர்களாய் இவ்வுலகில் வலம் எமக்கு உம் ஆற்றலைத் தர வேண்டும்மென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

4. மகத்துவமிக்க இறைவன்! இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா! இளையோர் திருச்சபைக்காகத் திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின் அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

Wednesday, June 10, 2020

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா

 கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா

இன்றைய நற்செய்தி வாசகங்கள்


இணைச் சட்டம் 8:2-3, 14ஆ-16அ
1 கொரிந்தியர் 10:16-17
யோவான்  6:51-58


 முன்னுரை


அன்புடையீர்,
இன்று திருச்சபைக் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாட அன்புடன் அழைத்து வந்துள்ளது.  நமக்கு இயேசு கிறிஸ்து வழங்கியுள்ள அன்புக்கொடை தான் அவரது திருவுடலும், இரத்தமும் என்பதை உணர்ந்து இத்திருப்பலியில் பங்கேற்போம்.

அன்பைப் பல ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது, நாம் அன்புக் கொண்டவருடன் தங்கி இருப்பது. பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே அன்பு. இந்த முழுமையான பிரசன்னம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் உச்சம்.

எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது நம் உடலோடு கலந்து ஒன்றாகிவிடும். நம் இரத்தமாக, தசையாக, எலும்பாக,  நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படைக் குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை உணர்ந்திடுவோம். இந்த எளிய உணவில், நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவில் இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை.

உறவுகளின் உச்சக்கட்ட, இறுதிக்கட்ட வெளிப்பாடே இயேசு தனது உடலையும் , இரத்தத்தையும் நமக்கும் கொடுத்தது. வாழ்வின் உணவை, ஒன்றிப்பின் உணவை உண்டு  கிறிஸ்துவின் வாழ்வோடு ஒன்றித்திருப்போம். இதற்காக இன்றைய இப்பெருவிழாத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில், தந்தையாம் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கடினமான காலங்களில், பாலைவனத்தில், அவர் தண்ணீரும்,  உணவும் தந்தது போல, நமக்கும் கொடுப்பார். நமது நம்பிக்கையற்ற வாழ்விலும், சோதனைக் காலங்களிலும் கூட , இஸ்ரேயலருக்குச் செய்தது போல, கடவுள் நமக்கு எல்லாம் செய்வார். உண்மையான கிறிஸ்துவின் பிரசன்னம் மூலம், நமக்குத் தேவையானவற்றைத் தந்தை கடவுள் கொடுக்கிறார் என்பதை வலியுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

.இரண்டாம் வாசக முன்னுரை


நற்கருணையில் நாம் இயேசுவோடு இணைந்திருப்பதை இன்னும் கிறிஸ்துவின் உடலோடு, இவ்வுலகில் உள்ள எல்லா மக்களோடும் நமது இணைப்பை அதிகமாக்குகிறது என்று சொல்கிறது. அதன் மூலமாக நமக்குத் தேவையானதை இறைவன் கொடுக்கிறார். மேலும், இந்த இணைப்பில், இயேசு நமக்கு உறுதியளித்தது போல, நமக்கு விண்ணக வாழ்வு நமக்கு முழுமையாகக் கிடைக்கவிருக்கிறது. இக் கருத்துக்களை கவனமுடன் கேட்டு நம் உள்ளத்தில் பதிவுசெய்வோம்.

பதிலுரைப்பாடல்


பதிலுரை: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!.

திருப்பாடல்கள்  147: 12-13, 14-15, 19-20

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!  அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பதிலுரை

அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.  அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பதிலுரை

யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.  அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பதிலுரை

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர்.  அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1.அன்பின் ஊற்றான இறைவா!திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவருக்கும் உமது மகனின் திருவுடல், திருஇரத்தமும் எம் வாழ்வின் நிறைஉணவாகவும், உடலுக்குத் திருமருந்தாகவும், ஒன்றிப்பில் அனைவருக்கும் ஊக்கமருந்தாகவும் செயல்பட்டு இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. உறவுகளின் ஊற்றான இறைவா! தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருநாளன்று, எங்கள் குடும்பங்களின் உள்ள அனைவரும் மக்களின் நல்வாழ்வுக்கு ஏதோ ஒரு வகையில் தம்மையே வழங்கும் வழிகளையும் தன்னலமற்ற தொண்டுள்ளமும் எமக்குத் தரவும் தொற்று நோய் போராட்டத்தில் தம்மை இணைத்துள்ள அனைத்து தன்னலமற்ற சேவைபுரிவோருக்கு பாதுகாப்ப தரவும் வேண்டும்மென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கத்தின்  ஊற்றான இறைவா! உலகெங்கும் எழுந்துள்ள இயற்கைச் சீற்றங்களால் துயரத்திலுள்ள உம் மக்களைக் கண்நோக்கும். அவர்களின் துயரங்களைத் துடைத்து தொற்றுநோயிலும், விபத்துக்ளினாலும், சிதைந்துபோன குடும்பங்கள் மீண்டும் தழைத்தோங்கவும், இழப்புகளினால் வாடிவருந்துவோர்கள் அனைத்தையும் மீண்டும் நிறைவாய் பெற்றிட வேண்டிய வரங்களைத் தந்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கொடைகளின் ஊற்றான இறைவா!  சிறார் முதல் எம் இளையோர் வரையுள்ள அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்களுக்கு தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பையும், நல்ல ஞானத்தையும், ஞாபக சக்தியையும், இறையச்சத்தையும் அளித்து, சிறந்த படைப்பாக இவ்வுலகில் வலம் வர உம் அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, June 3, 2020

மூவொரு இறைவன் பெருவிழா

 மூவொரு இறைவன் பெருவிழாஇன்றைய நற்செய்தி வாசகங்கள்


விடுதலைப் பயணம் 34: 4ஆ-6, 8-9
2 கொரிந்தியர் 13:11-1 3
யோவான்  3:16-18

 முன்னுரை


அன்புடையீர்,
கடந்த ஆறு வாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நாம் விழாக்களைக் கொண்டாடி வந்தோம். இவ்விழாக்களின் சிகரமாக இன்று மூவொரு இறைவனின் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். "அன்பைக் காண முடிந்தால், மூவொரு இறைவனையும் காண முடியும்" என்று அந்த இறைவனைப்பற்றி, புனித அகுஸ்தின் அவர்களின் கூற்றுக்கேற்ப இறைஅன்பில் இணைந்து இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் கூறியது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. இயேசுவின் காலம்வரை இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை, தந்தை, மகன், தூய ஆவியார் என்ற ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்தப் பாடம்?
உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய இன்று நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித் தர வேண்டும் என்று இன்று இப்பெருவிழாத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் விடுதலைப்பயணத்தின் போது “என் மக்களே” என்று தாம் அழைத்த இஸ்ரயேல் மக்களை இறைவன் மோசேயின் தலைமையில் எகிப்து நாட்டு அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்து வாக்களிக்கப்பட்ட வளமான பூமியில் வழிநடத்துகையில் ஏற்பட்ட நிகழ்வுகளில் ஒன்றைப் பற்றிய செய்தியை நாம் இப்போது செவிமெடுக்க இருக்கிறோம். இறைவன் எத்தகைய மகத்துவம் மிக்கவர் என்பதையும் இறைவனால் தலைமைப் பொறுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்ட மோசேயின் குணநலன்கள் எத்துணைச் சிறப்பானவை என்பதையும் கவனமுடன் வாசிக்கக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

பிரிவு மனப்பான்மை கொண்டு சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டிருந்த கொரிந்து நகரமக்களை மூன்றாம் முறையாகச் சந்தித்து, நேரில் அவர்களுக்கு அறிவுரைக் கூறுமுன், திருத்தூதர் பவுல் எழுதும் இரண்டாம் திருமுகத்திலிருந்து வரும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கொரிந்து மக்களின் வாழ்க்கை நெறிப்படுத்தப்பட அறிவுரைகளைத் தாங்கிய திருத்தூதரின் வார்த்தைகளையும், அன்பு மேலோங்கி அவர் வழங்கும் வாழ்த்துரையையும் இப்போது வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.


பதிலுரைப்பாடல்


பல்லவி: என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்.
திருப்பாடல்கள் தானி (இ) 1: 29a,c. 30,31. 32,33 .

எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. பல்லவி

உமது தூய மாட்சிவிளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்பெறுவீராக. உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர். கெருபுகள்மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி

உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப்பெறுவீராக. உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1.அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது ஒன்றிப்பிலும், அன்பிலும் உம்மை உய்த்துணர்ந்தவர்களாய் அன்பிலும், ஒற்றுமையிலும் நிறைவாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.


2. உறவுகளின் ஊற்றான இறைவன்! எங்கள் குடும்பங்களின் உறவுகளிலேயே மிக அதிகமாகப் பழுதடைந்திருப்பது பெற்றோர்மீது, அதுவும், வயதானப் பெற்றோர்மீது நாம் கொண்டுள்ள உறவு. இந்த உறவை மீண்டும் அலசிப் பார்க்க, பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய, உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் எமக்குச் சொல்லித் தர வேண்டும்மென்று உம்மை மன்றாடுகின்றோம்.


3. அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா! தொற்று நோயின் தாக்கத்தினால் சிதைந்துபோன குடும்பங்கள் மீண்டும் இழந்துபோன உறவுகளில் பலப்படவும், அன்பில் மேன்படவும், இவ்வேளையில் தங்கள் தேர்வுகளை சந்திக்க உள்ள இளையோரை வரவிருக்கும் சவால்களை எளிதாய் வென்றிட நல்ல உறுதியான உள்ளங்களையும் ஞானத்தையும் புத்தியையும் அன்பையும் அவர்களுக்கு தந்தருளமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. உறவுகளின் ஊற்றான இறைவன்! இக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தாங்கள் தங்கியிருக்கும் நாடுகளில் எதிர்கொள்ளும் துயரங்களிலிருந்து, சந்திக்கும் இன்னல்களிலிருந்து மீண்டும்  மனிதநேயமிக்க புதிய வாழ்வு வாழ தேவையான நலமும், வளமும், சுயநலமற்ற அன்பையையும், சேவைகளயும் தரக்கூடிய அரசியல் தலைவர்களையும் அதிகாரிகளையும் எங்களுக்கு வழங்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal,org

Friday, May 29, 2020

தூய ஆவியாரின் வருகை பெருவிழா

தூய ஆவியாரின் வருகை பெருவிழாஇன்றைய நற்செய்தி வாசகங்கள்


திருத்தூதர்பணிகள் 2: 1-11,
1 கொரிந்தியர் 12: 3-7, 12-13,
யோவான்  20:19-23

 திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
தூயஆவியின் ஞாயிறு, திருச்சபையின் பிறந்த நாளை, புதுப்பிக்கப்பட்ட நாளை குறிக்கிறது. அருட்சாதனங்களின் மூலம், திருச்சபையில் நம்மை ஒரு அங்கத்தினராகச் சேர்ந்துக் கொண்டதைக் குறிக்கிறது இந்நாள் பெருவிழா. நாம் எல்லோரும் சேர்ந்துக் கொண்டாடும்  இந்நாள், நாம் பெற்ற தூயஆவியை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவும், ஆவியின் உடனிருப்பை உறுதிபடுத்தும் இவ்விழாவில் பங்கேற்க  இறைகுலமே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

கிறிஸ்துவின் ஆவியின் சக்தியும், அதன் பிரசன்னமும் இவ்வுலகில் இல்லை என்றால், , கிறிஸ்தவன் இந்த உலகை மாற்ற முடியாது. ஆவியின் சக்தி இல்லை என்றால், இந்த இரண்டாயிரம் வருடங்களாக, பல்வேறு ஊழலிலும் , தடைகளையும் தாண்டிக் கிறிஸ்தவம்  வளர்ந்திருக்காது.

கடவுள் “எவ்வாறு இந்த உலகை மாற்றப் போகிறார் ? “நம் மூலம்! தந்தை கடவுள் அவரின் தூயஆவியை, அவரின் மகனுக்குக் கொடுத்து இந்த உலகின் இறைபணியாற்ற அனுப்பினார். இயேசு அதே ஆவியை நமக்குக் கொடுத்தார். அதன் மூலம் நாம் தூயவாழ்வில் வளர்ந்து, இந்த உலகின் மாற்றத்திற்கான ஆயத்தப் பணிகளில் நாம் ஈடுபடலாம். கடவுளின் ஆவி உங்களில் இருந்து குறைகளை நீக்கி நிறைகளாக்கும், தொடர்ந்து இந்த நம்பிக்கையோடு திருப்பலியில் பங்கேற்போம்.!.ஆவியின் கொடைகளைப் பெற்றுக் கொள்வோம். தொற்று நோயின் தாக்கத்திலிருந்து நம்மை விடுவிக்க மன்றாடுவோம்.

வாசகமுன்னுரைமுதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் பெந்தகோஸ்தே நாளில் தூயஆவியால் நிரப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துரைக்கிறது. ஆவியானவர் இயேசுவின் வார்த்தையால் இவ்வுலகை ஒரு புதுப்படைப்பாக மாற்றுகிறார். இன்று சீனாய் மலையில் நெருப்புவடிவில் தோன்றிப் பத்துக்கட்டளைகளை மோயீசனுக்குக் கொடுத்தார் கடவுள் . இன்று தூயஆவி நெருப்பு நாக்கு வடிவில் புதிய உடன்படிக்கையை உருவாக்கினார். இன்று மொழியாலும், இனத்தாலும் பல்வேறு வேறுபாடுகளாலும் பிரித்திருந்த மனிதக் குலத்தைக் கடவுள் தூய ஆவியின் வழியாக இன்று சேர்க்கின்றார். சீடர்கள் பெற்ற மகிழ்ச்சியை நாம் பெற இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாரவது கிறிஸ்தவ விசுவாசத்திற்குச் சான்று பகரவில்லை என்றாலும், திருச்சபையின் பணிக்காகத் தங்களது கொடைகளைப் பகிரவில்லையென்றாலும் அவர்களிடம் தூய ஆவியின் கொடை இல்லை என்பதைத் தெளிவுப்படுத்திகின்றார். தூய ஆவியானவர் கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை வழி நடத்துவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறார். எனவே ஒவ்வொரு கிறிஸ்துவனும் தான் பெற்ற ஆவியானவரின் கொடைகள் வழியாக ஒன்றிணைந்த கிறிஸ்தவச் சமூகமாக மாற்ற வேண்டும் என்று அழைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்
திருப்பாடல் 104: 1,24. 29-30. 31,34

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம்  வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர் பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி
        

தூயஆவியின் தொடர் பாடல் : ஒலிவடிவில் (வாசக நூல் 1, பக்.524)தூயஆவியின் தொடர் பாடல் : (வாசக நூல் 1, பக்.524)

தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "தூய ஆவியே எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும்.  அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1.இயேசுவின் துணையாளராம் தூய ஆவியை எமக்களித்த இறைவா! திருஅவையின் அங்கத்தினர் அனைவரும் நீ தந்தத் தூய  ஆவியால் தீமைகளை எரித்திடும் சுடராய், இருளகற்றி ஒளியுட்டு நன்மைப் பயக்கும் சுடராய், எம் பாதைக்கு வழிகாட்டும்  அகல்விளக்காய், அமைதியின் ஒளிச்சுடராம் இயேசுவின் இறையரசை அறிவிக்கும் தீபங்களாய் இவ்வுலகில் அவரின் விழுமியங்களை  வாழ்ந்துக் காட்டிடும் சீடர்களாய் நாங்கள் இருக்கத் தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை  மன்றாடுகின்றோம்.


2.வானகக் கொடைகளை வழங்கி வரும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூயஆவியை எழுந்தருள் செய்யும். எங்களை உருக்கித் துரு நீக்கி எங்களை உருமாற்றும். இயேசுவின் திருவுருவை எங்களின் உள்ளத்தில் உருவாக்கும். எம்மை ஆவியின் அக்னியால் நிரப்பும். அவரின் வரங்களாலும், கொடைகளாலும், கனிகளாலும் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அருட்பொழிவு செய்ய வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. அருட்கொடை வள்ளலே எம் இறைவா! எம்மை வழி நடத்தும் அரசியல் தலைவர்களின் எண்ணங்களைப் புனிதம் பெறச் செய்யும். அவர்களின் இதயத்தில் உம் அன்புத் தீயை மூட்டும். அனைவரையும் அன்புச் செய்யும் உள்ளத்தைக் கொடுத்தருளும். அவர்கள் செய்யும் பணிகளில் சமுக நீதியை நிலைநாட்டவும், மக்கள் பேணிக்காத்திட வேண்டிய நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.


4. அன்பு நிறைந்த  எம் இறைவா! தூய ஆவியின் ஒளியால் எங்கள் பங்கிலுள்ள இளையோரின் இதயங்களுக்கு அறிவூட்டும். அவர்கள்  சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ச்சியாய் இருக்கவும், ஞானக்கதிர்களை அவர்கள் மேல்  பொழியுமாறும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம் அன்பு தந்தையே! இறைவா! உலகமெங்கும் பரவிய இத்தொற்று நோயின் தாக்கத்திலிருந்து உம் அன்பு மக்களைக் காத்தருளும். அவர்கள் குடும்பங்களில் அன்பிலும் பாசப்பிணைப்பிலும் ஒன்றிணைந்து புதிய வாழ்வு தொடங்கிட நலமும், வளமும் அளித்து காத்தருளும். இப்போராட்டத்தில் தன்னலம் பாராமல் ஈடுபட்டுள்ள அனைவரையும் உமது வல்லமையான கரத்தால் காத்தருளும். இவற்றையெல்லாம் எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Thursday, May 21, 2020

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா

 ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாஇன்றைய நற்செய்தி வாசகங்கள்


திருத்தூதர்பணிகள் 1: 1-11
எபேசியர் 1:17-23
மத்தேயு 28:16-20

திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
உயிர்ப்புப் பெருவிழா முடிந்தப் பின், வந்த ஏழாம் ஞாயிறான இன்று இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட ஆலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வாழ்த்துகிறோம்
இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன. எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நடந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப் பார்க்கும் தூய ஆவியாரின் விழாவும் மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.இருபது நூற்றாண்டுகள் மேலாகியும், இந்த விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?... இவை முதல் முறைக்கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன.
இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்துத் தொடர்ந்து கனித் தந்துக் கொண்டிருக்கின்றன.அன்று வேரூன்றய மரங்கள் திக்கெங்கும் பல்கிப்பெருகி இறையரசைப் பறைச்சாற்றி வருகிறது. இன்று இயேசுவின் அழைப்பை ஏற்று நாம் அவரின் சீடர்களாய் அவர் பணிகள் செய்திட, வாழ்ந்திட, அன்பு பாரட்டத் தூயஆவியின் கனிகளைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் வேண்டிடுவோம்.

வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் லூக்கா இயேசுவின் விண்ணேற்றத்தை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். இயேசு திருத்தூதர்களுக்குத் தனக்குப்பின் அவர்களின் பணி என்ன என்பதை விளக்கிகூறியபின் விண்ணேற்றம் அடைந்தார். இயேசு விண்ணில் மறைந்தபின் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தவர்களிடம் வானதூதர்கள் “என்ன வானத்தையே பார்க்கிறீர்கள்! போதும்! கீழே பாருங்கள்!“ என்று உலகைக் காண்பித்து “அவர் பணித்த பணிகளைச் செய்ய உலகின் கடைகோடிவரைச் செல்லுங்கள்“ என்று அவர் இட்டப்பணியை உணர்ந்துச் செல்லப்படுவோம்.வாரீர்!

இரண்டாம் வாசக முன்னுரை


இன்றைய இரண்டாம் வாசகத்தில் தந்தையாம் கடவுளை முழுமையாக அறிந்து கொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! இறைமக்களுக்கு அவர் தரும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்று கட்டவுளின் ஆற்றலை விளக்கும் பவுலடியார் கிறிஸ்துவுக்கு அனைவரையும் அடிபணியச் செய்து அனைத்துக்கும் மேலாகத் திருச்சபையின் தலையாகவும் திருச்சபையை அவரது உடலாகவும் தந்துள்ளதைத் தெளிவாகக் கூறுவதை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
திருப்பாடல் 47: 1-2. 5-6. 7-8

1.மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி
2.ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி
3.ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே இறைவா! இயேசு விட்டுச் சென்ற இறையரசுப் பணியைக் காலத்தின் அறிகுறிகளுக்கேற்பவும் மக்களின் தேவைகளுக்கு ஏற்பவும் தொடர்ந்து ஆற்றிடத் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் தேவையான ஞானத்தையும், உறுதியான நம்பிக்கையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பும் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.விண்ணில் வாழ்பவராம் இறைவா, எங்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் சாட்சிகளாக வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்க்கை மூலமாகவும் வெளிப்படுத்தவும், இயேசுவின் சிந்தனைகள், பணிவாழ்வு, இறுதி இலக்கு இவற்றை எமதாக்கி இருக்குமிடத்தில் விண்ணகத்தை உருவாக்கத் தேவையான நல்வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அமைதித் தருபவரே இறைவா, உலகெங்கும் துன்புரும் உம் திருச்சபைக் கண்நோக்கியருளும். அவர்கள் தீவிரவாதம், அடக்குமுறை, தொற்றுநோய், பசி, வறுமைப் போன்றவற்றால் தங்கள் வாழவாதரங்களை இழந்து மனம் உடைந்து உம்மில் நம்பிக்கை இழக்காமல் இருக்க அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உன்னதரான தந்தையே! திருஅவையின் தூண்களாக வளர்ந்து வரும் எம் இளையோர்கள் உலகில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களின் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, அவை தரும் வாக்குறுதியால் தவறான பாதையில் போகாமல், உமது வாக்குறுதிகள் அவாகளின் வாழ்க்கைப் பாதைக்கு வழிக்காட்டி என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை அவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.நோய் நீக்கும் அருமருந்தே! எம் இறைவா! தொற்று நோயின் தாக்கத்தால் தங்கள் உடமைகளை, உறவுகளை, வாழ்வை இழந்துத் தவிக்கும் உலக மக்கள் அனைவரையும் கண்ணோகியருளும். விரைவில் இத்தாக்கத்திலிருந்து மீட்டு அனைவருக்கும் புதுவாழ்வு அளிக்க இறைவா உம்மை அன்றாடுகிறோம்.
                                               www.anbinmadal.org

Thursday, May 14, 2020

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்


திருத்தூதர்பணிகள் 8: 5-8, 14-17
1 பேதுரு 3:15-18
யோவான் 14:15-21

திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு. "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்." என்று கூறிப் பிரியாவிடை தரும் இயேசு, இன்று நமக்குத் தரும் பரிசு என்ன? என்பதை அறிய ஆவலுடன் இவ்வாலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

யோவான் நற்செய்தியில் இயேசு தன் பணிக்காலம் முடிந்து தந்தையாம் இறைவனிடம் செல்லும் முன் தம் அன்புச் சீடர்களுக்குப் பல வாக்குறிதிகளைத் தனது பிரியாவிடையின் பரிசாக வழங்கினார். சென்ற வாரம் தன் சீடர்களுடன் தான் நிரந்தரமாய்த் தங்கப்போகும் தந்தையின் இல்லத்தைப் பற்றிப் பேசிய இயேசு, இரவுணவின்போது தன்னை இன்னும் அழகிய, ஆழமான வகையில், அப்ப இரச வடிவில், சீடர்களிடம் பரிசாகப் பகிர்ந்தளித்தார்.

இந்த வாரம், தான் சென்றபின், அவர்கள் பெறப்போகும் துணையாளரைப் பற்றி இயேசு பேசுகிறார்: "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்." இங்கு இயேசு கிறிஸ்து ஒரு கனிவு மிகுந்த பெற்றோரைப் போல், நண்பரைப் போல் தன் சீடர்களுக்கு இது போன்ற வாக்குறுதிகளை அளிக்கிறார்.

"திக்கற்றவர்களாய் உங்களை விடமாட்டேன்" என்று கூறும் இயேசுவை நம்பி நாம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். திசைப் புரியாமல், வழித் தெரியாமல் கலங்கும் பலரை இந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். அத்துடன் தங்கள் வாழ்வின் முக்கியமான முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் இளையோரை இறைவனின் வழி நடத்துதலுக்கு ஒப்படைத்து உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.


வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


திருத்தூதர் பிலிப்பு கிறிஸ்துவை, சமாரிய மக்களுக்குப் போதித்தப்போது அம்மக்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொண்டனர். ஒருமனத்தோராய் கூடியிருந்தபோது அரும் அடையாளங்களைக் கண்டு சமாரிய நகரமே மகிழ்ந்திருந்தது. சமாரியநகர மக்களின் மனமாற்றத்தைக் கண்ட பேதுருவும் யோவானும் இணைந்துச் செபித்து அவர்களுக்குத் தூய ஆவியைப் பெற்றுத் தந்தார்கள் என்பதை விளக்கும் இம்முதல்வாசகத்திற்கு நாமும் ஒருமனதோராய் செவிமெடுப்போம் வல்லச்செயல்களை காண்போம்..


இரண்டாம் வாசக முன்னுரை


இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக் கொண்டு, கிறிஸ்துவப் பண்புகளைக் கொண்டு அவருக்குச் சாட்சிப் பகிர்ந்திட நம்மை அழைக்கிறது. இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பதற்கு ஏற்றவாறு கிறிஸ்துவைப்போல் மன்னித்து ஏற்றுக்கொள்வதன் மூலம் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்று வாழ அழைக்கும் திருத்தூதர் பேதுருவின் முதல் திருமுகத்திலிருந்து வரும் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப்பாடல்

திபா 66: 1-3a. 4-5. 6-7a. 16,20 

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அல்லது: அல்லேலூயா.

அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி, ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். - பல்லவி

‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. - பல்லவி

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! - பல்லவி

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திரு அவையை வழி நடத்தும் எம் திருதந்தை, அவர் வழியாய் மந்தைகளைச் செவ்வனே பராமரித்து வழி நடத்தும் ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர்கள், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக மீண்டும் தங்கள் பணிவாழ்வைக் கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப இறைசமூகத்தை ஆன்மீக வாழ்விற்கு அழைத்துச் செல்லத் தேவையான உம் அருளை நிறைவாய் வழங்கிட இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2.ஏழைகளின் துணையாளரே எம் இறைவா! இன்று தொற்றுநோயினால் ஏழைகளுக்கு ஏற்படும்  பொருளாதார நெருக்கடிகளிலிருந்து அவர்கள் விடுப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரங்கள் மேன்பட்டு, நற்சான்றோர்களாக வாழவும், தங்கள் சொந்தஊருக்குத் திரும்ப முடியாமல் தவிப்போர் மீண்டும் தங்கள் ஊர்களுக்குச் செல்லத் தேவையான வசதிகளில் பெற  அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.குழந்தைகள் விண்ணரசின் செல்வங்கள் என்று மொழிந்த எம் இறைவா! நீர் கொடுத்த செல்வங்களாகிய எங்கள் பிள்ளைகளை நாங்கள் பொறுப்புடன் வளர்க்கவும், அவர்களுக்கு இறை அச்சத்தையும் தூய வாழ்வுக்கான சிந்தனைகளை அறியச் செய்திடவும், தம் கடமைகளை உணர்ந்துத் தூயக் கிறிஸ்துவ வாழ்வு வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமக்குப் புதுப்பாதையை அமைத்துத் தரும் என் இறைவா! இந்த  கல்வி ஆண்டில் எம் இளையோர்களைக் கரம்பிடித்து வழிநடத்தும். தொற்றுநோயின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள குழப்பங்களிலிருந்து காத்து அவர்கள் சிறந்த கல்வியைப் பெற்றிடவும், நவீன உலகமாயையால் கவனம் சிதறிவிடாமல் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிடவும், உமது உன்னதச் சாட்சிகளாய் இவ்வுலகத்தில் வாழ வேண்டிய ஞானத்ததைப் பொழிந்தட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.மருத்துவருக்கெல்லாம் மருத்துவராம் எம் இறைவா! விரைவில் இந்த தொற்று நோய் முழுமையாக நீங்கிட வேண்டிய மருத்துவத்தை எமக்கு தந்து, அனைவரும்  விரைவில் குணமடையவும், மரணம் அடைந்தவர்களின் குடும்பங்கள் ஆறுதலடையவும், நோய்க்கு எதிராகப் போராடும் மருத்துவ உலகம் அதில் வெற்றிபெறவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

                                                          www.anbinmadal.org

Wednesday, April 29, 2020

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்திருத்தூதர் பணிகள் 2:14அ  ,36-41
1 பேதுரு 2:20ஆ-25
யோவான்: 10:1-10

திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
உயிர்ப்பின் காலம் நான்காம் ஞாயிறான இன்று நல்லஆயன் ஞாயிறாகக் கொண்டாட இறைவனின் திருவடி நாடி வந்துள்ள இயேசுவின் அன்பார்ந்த இறைமக்களே உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இயேசு தன் ஆடுகளுக்கு முன்னே பாதுகாப்பாகச் செல்லும் நல்ல ஆயனாக இருக்கின்றார். இந்த நல்ல ஆயன் மானிடராகிய நம் வாழ்விற்காகத் தன்னையே தியாகம் செய்யும் தாயுள்ளம் படைத்தவராகத் தான் இருப்பதை இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தியில் பதிவு செய்கின்றார்.

இயேசுவின் அன்புக்கு உரிய நாம் அவருடைய குரலைக் கேட்கின்றோம். அவர் நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். அவரது அழைப்பை ஏற்று நாமும் இயேசுவைப் போல் தந்தையுடன் இறைவேணடலில் நிலைத்திருந்து அவரின் சீரியப் பார்வையில் நம்மிடம் காணப்படும் அனைத்து வேறுபாடுகளைக் களைந்து இணைந்துச் செயல்படுவோம் இறையரசை அறிவிக்க..

இறையழைத்தல் ஞாயிறான இன்று அவரவர் இருக்கும் நிலையில் இருந்து இறைவனின் அழைத்தலை உணர்ந்து எத்தனை தோல்விகள் வந்து வாட்டினாலும் அதனை வெற்றிக்கொள்ள இத்திருப்பலியின் வழியாக நம் ஆயனாம் இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம் ஒர் அணியாக... குறிப்பாக தன்னலமற்ற மருத்துவ பணியில் ஈடுபட்டு இறந்த அனைவரும் இளைபாற்றிப் பெற்றிட செபிப்போம்.வாசகமுன்னுரைமுதல் வாசக முன்னுரை

இறைமகன் இயேசுவைக் கொலைச் செய்த  இஸ்ரயேல் மக்களுக்குச் சீடர்கள் விடுக்கும் அழைப்பான ”மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும் பொருட்டுத் திருமுழுக்குப் பெறுங்கள். அப்போது தூயஆவியைப் பெற்றுக்கொள்ளவீர்கள் என்பதே ஆகும். இவ்வாறு மனம் மாற இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கின்றது. இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை


நன்மை செய்தும் துன்பத்திற்கு ஆளாகும் நாம் அதைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும் போது அவை கடவுளுக்கு ஏற்றதாக உள்ளது. இவ்வாறே இயேசுவும் துன்புற்று ஒரு மாதிரியை விட்டுக் சென்றுள்ளார். இதைப் பின்பற்றி நீதிக்காகவே வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் வந்துள்ளோம் என்பதை எடுத்துக்கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் மனத்தில் உள்வாங்கிச் சிந்திப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
திருப்பாடல் 23: 1-3a. 3b-4. 5. 6.

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.  பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.  அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்.  மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

 

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. நல்லஆயன் நானே என்ற இறைமகனின் திருப்பயணத்தில் இணைந்து இறைபணியாற்றிடத் திருப்பொழிவு செய்து தேர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், ஆயாகள், திருப்பணியாளர்கள் அருட் சகோதரர்கள், சகோதரிகள் பொதுநிலையினர் அனைவரும் நல்ல மேய்ப்பனாகத் தன் ஆடுகளுக்காகத் தன்னையே தருகின்ற ஆற்றல் கொண்டவர்களாகிட, தங்களின் அழைப்பை உணர்ந்து உழைத்திட, தொற்று நோயிலிருந்து காத்திட வேண்டிய அருள்வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மை ஆளும் எம் தலைவா! நாட்டில் செயல்படும் தலைமை பொறுப்பாளர்கள் சுயநலம் கருதாமல் பொதுநலம் காணவும் ஏற்றத் தாழ்வு இல்லாச் சமத்துவச் சமுதாயம் படைத்திட அவர்களுக்கு போதுமான ஞானத்தையும் அருள் வாழ்வையும் அவர்கள் மீது பொழிந்துத் தொற்று நோயிலிருந்து உம் மக்களைப் பேணிக் காக்கும் நல்ல ஆயனாகச் செயல்படவேண்டிய வரத்திற்காக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை என்று இயம்பிய இயேசுவே! உமது திருப்பணியாளர்கள் சமுதாயத்தல் ஏற்படும் பிரச்சனைகளை வெகுவாக ஏற்றுக் கொண்டு உம் திருப்பணியைத் திறம்பட ஆற்றிட உம் துணையாளரின் துணை அவர்களோடு இணைந்து இறைமக்களை இறைவனிடம் அழைத்துச் செல்லும் ஆற்றலை இவர்களுக்கு நிறைவாய் பொழிந்து அவர்கள் உம் சாட்சிகளாய் வாழ்ந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன் என்றுரைத்த இயேசுவே! இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை நாங்கள் உணர்ந்து உம்பாதம் அவர்களை அர்ப்பணிக்கின்றோம். இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறையழைத்தலை உணர்ந்து நல்ல கனித் தரும் உமது ஊழயர்களாக அவர்கள் வளர்ந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. ஆபத்துகளிலிருந்து எம்மைக் காத்து வழிநடத்திடும் எம் இறைவா! தொற்று நோயின் தாக்கத்திலிருந்து உலக மக்கள் அனைவரையும் காத்திடப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் அவர்களுடன் இணைந்துப் பணியாற்றும் அனைவரையும் காத்து வழிநடத்திவும், அவர்கள் உடலும் உள்ளமும் உறுதியுடன் இருக்கவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Friday, April 24, 2020

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு


பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு


www.freebibleimages.org


இன்றைய நற்செய்தி வாசகங்கள்


திருத்தூதர் பணிகள் 2:14,22-33
1 பேதுரு 1:17-21
லூக்கா 24:13-35

திருப்பலி  முன்னுரை


அன்புடையீர்,
உயிர்ப்பின் காலம் மூன்றாம் ஞாயிறான இன்று எம்மாவுச் சீடர்களைப் போல உயிர்த்த இயேசுவுடன் வழி நடந்து இத்திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இயேசுவின் அன்புச்சீடர்களாகிய இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுயில் நம்பிக்கைக் கொள்ளவும், அவரின் சாட்சியாக இவ்வுலகில் வலம் வரவும் நம்மை அழைக்கின்றது. எம்மாவுச் சீடர்கள் போல் வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்களாக வாழாமல், இறைநம்பிக்கையே நம் வாழ்வு என்பதை உணர்ந்திட வேண்டும். மனிதன் சுவாசிப்பதால் மட்டும் உயிர் வாழவதில்லை. மாறாக அவன் நம்பிக்கையைச் சுவாசிப்பதாலும் உயிர் வாழ்கிறான்.
எம்மாவுச் சீடர்களுடன் பந்தியமர்ந்தப் போது அங்கிருந்த அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்துப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் கண்டு கொண்டன. இயேசு எப்போதும் நம்மிடம் இருப்பதை ஆசீர்வதித்து நம்மைத் தன் நலன்களால் நிரப்பிக்கூடியவர். எனவே, குடும்பமாக இணைந்து இயேசுவிடம் “எங்களோடு தங்கும்” என அவரை மன்றாடி நம் வாழ்வில் எந்நிலையிலும் நம்பிக்கை இழக்காமல் இருக்கும் வரத்தை இத்திருப்பலியில் உயிர்த்த இயேசுவிடம் மன்றாடுவோம். வாரீர்.
வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இறைமகனால் திடப்பட்டுத்தப்பட்டுத் தூயஆவியால் அருட்பொழிவுசெய்யப்பட்ட சீடர்கள் உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாக எருசலேம் நகரத்தில் வாழும் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் இறைமகனின் உயிர்ப்பின் மகிமைக்கும் மகிழ்ச்சிக்கும் தாங்களே போதுமானச் சாட்சிகள் என்று ஆணித்தரமாகப் பதிவுச் செய்கின்றனர். பேதுருவின் வீறுக்கொண்ட இந்தச் சொற்பொழிவைக் கவனமுடன் கேட்டு உயிர்த்த இயேசுவின் மீது நமக்குள் விசுவாசத்தை உறுதிபடுத்திக்கொள்ள இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கின்றது. இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.இரண்டாம் வாசக முன்னுரை
வானகத்தந்தை ஆளைப் பார்த்துத் தீர்ப்பு வழங்குவதில்லை மாறாக அவரவர் செயல்களின்படி தீர்ப்பு வழங்குவார். இறையச்சத்தோடு வாழ அழைக்கிறார். மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற இயேசுவின் விலையில்லாத இரத்ததால் நமக்கு மீட்பு கிடைத்தது. இறந்த அவரை உயிர்ப்பிக்கச் செய்து பெருமைப்படுத்தினார். இதனால் நாம் இயேசுகிறிஸ்துவை எதிர்நோக்கி இருக்க அழைப்பு விடுக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்
திருப்பாடல் 16:1-2, 5,  7-8, 9-10, 11

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.  நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். பல்லவி

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு. உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவிநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா அல்லேலூயா
 


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1 உம் வார்த்தைகளால் எம் உள்ளத்தைத் திறந்த எம் இறைவா! திருஅவை உள்ளத் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரின் உள்ளங்கள்  இறைவார்த்தையால் பற்றி எரியவும், திருப்பலி எனும் அருட்சாதனத்தால் இறைவனைக் கண்டு கொள்ளவும், அவரின் சாட்சிகளாக வளர வேண்டிய அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உம்மைக் கண்டு கொள்ள எம் இதயத்தைத் திறந்த எம் இறைவா! எம் வாழ்வில் உம் வார்த்தைகளாலும், நீர் செய்யும் அற்புதங்களாலும் எங்கள் குடும்பத்திலுள்ள நாங்கள் அனைவரும் இறைநம்பிக்கை மேன்மேலும் வளரவும், எம்மாவு சீடர்களை வழி நடத்தி அவர்களுடன் தங்கியது போல எம் இல்லங்களில் தங்தி எங்களுக்கும் உம் ஆசீர் வழங்கிட வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3.நலங்களினால் எங்களை நிரப்பும் எம் இறைவா! தொற்று நோயின் சீற்றத்தால்  அழிந்து வரும் உலகமக்களைக் கண்ணோக்கியருளும் . மன்னிக்கும் தெய்வமே மீண்டும் எங்களுக்கு நலமான வாழ்வையும் நற்சுகத்தையும் தந்திடவும்,  வாழ்வின் எல்லைக்கோட்டிற்குத் தள்ளப்பட்ட எம் ஏழை எளியமாந்தர்களின் வாழ்வாதாரங்கள் மேன்மைபடவும்,  தொற்று நோயின்  தாக்கத்திலிருந்து அனைவரையும் காத்திடவும் அருள்மாரிப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4 அன்பின் தந்தையே! எம் இறைவா! உலகம் முழுவதும் மருத்துவபணிகளில் தம்மையே அர்ப்பணித்து தன்னலம் துறந்த பிறர்நலம் பேணும் அனைத்து நல்ந உள்ளங்களுக்காக மன்றாடுகிறோம். இப்பணியை திறம்பட செய்ய தேவையான நற்சுகமும், பாதுகாப்பும் உமது ஆற்றலால் வழிநடத்தவேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகின்றோம்.
                                 
www.anbinmadal.org