Thursday, December 24, 2015

திருக்குடும்பப் பெருவிழா வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். -27/12/2015

திருக்குடும்பப் பெருவிழாஇன்றைய நற்செய்தி வாசகங்கள்.1 சாமுவேல் 1:20-22,24-28
யோவான் 3:1-2,21-24
லூக்கா 2:41-52


முன்னுரை:

குடும்பம் ஒரு கோவில். அதில் கணவனும் மனைவியும் தீபங்கள். அந்தத் தீபத்தின் ஒளிதான் குழந்தைகள். இவ்வாறு அனைவரும் ஒன்றுபட்டு ஒளிமயமான  வாழ்வை உருவாக்க நமக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகத் திருக்குடும்பம் அமைந்திருக்கிறது. குழந்தை என்னும் பயிர் வளமாக வளர வேண்டுமென்றால் அதன் விளைநிலமான குடும்பம் உருப்படியாக இருக்க வேண்டும். எனவே நமது குடும்ப வாழ்வை இன்றைய இறைவார்த்தையின் ஒளியில் சிந்திப்போம்.

கணவன் மனைவி பிள்ளைகள் என்ற மூன்று சக்திகளும் அன்பில் சங்கமிக்கும் ஆலயம். அந்தச் சக்தியை உற்பத்தி செய்கிறவர் இயேசுகிறிஸ்துவே. வசதிகளையும் செல்வங்களையும் சோப்பது அல்ல. மாறாக பாசங்களையும், உறவுகளையும் சேர்ப்பதுதான் குடும்பம். இதற்கு அடிப்படை தேவை ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, இரங்கும் உள்ளம் இத்தகைய உயரிய பண்புகளை நம் உள்ளத்தில் கொண்டு நம் குடும்ப வாழ்வைத் தொடர இத் திருக்குடும்பப் பெருவிழா திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:இன்றைய முதல் வாசகம் ஒன்று சாமுவேல் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அன்னா ஆண்டவரிடம் கேட்டு பெற்றுக் கொண்ட தன்  மகன் சாமுவேலை இறைவனுக்கு மீண்டும் அவரிடமே ஒப்படைக்கின்றார்.  தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன் மகனுடன் காணிக்கைகளுடன் இறைசன்னதிக்கு வந்து நன்றியோடு சாமுவேலை ஆண்டவருக்கே அர்ப்பணித்தார் என்ற இந்த இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை எடுத்துரைக்கும் திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் இவ்வாசகத்தைக் கவனமுடன்  செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 128: 1-2,3,4-5

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்.

1.ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!  உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். -பல்லவி

2.உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். -பல்லவி

3.ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! –பல்லவி

மன்றாட்டுகள்:


1.உம் திருக்குடும்பம் வழியாக எமக்கு வழிகாட்டிய  இறைவா! திருபேரவையாம் இத்திருச்சசபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை,
ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரின் உள்ளத்தில் உமது அன்பையும், பரிவிரக்கத்தையும் நிறைவாய் பொழிந்து ஒற்றுமையுடனும், அமைதியுடனும் இறையரசை அறிவிக்கும் கருவிகளாய் வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 

2.கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா!  எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து,  எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3.ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க ஏழைப்போல் பிறந்த இயேசுவே, உமது பிறப்பின் மகிழ்ச்சியை எங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களோடும் குழந்தைகளோடும் பகிர்ந்து கொள்ளவும், மழையினாய் அவதியுறும் மக்களுடன் பணிபுரியவும், அவர்களின் வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திட  உதவிடவும் வரமருளு வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.


4. அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா! இந்த நல்ல நாளில் கணவன் மனைவி பிள்ளைகள் என்று மகிழ்வுடன் வாழ, இவ்வலகில் எதிர்நீச்சல் போட்டு அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த வரம் அருள் தரம் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Tuesday, December 22, 2015

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். -25/12/2015

                                         கிறிஸ்து பிறப்புப் பெருவிழாஇன்றைய நற்செய்தி வாசகங்கள்.
விடியற்காலைத் திருப்பலி

முன்னுரை:

கடவுள் மனிதனைத் தேடிவந்த திருநாள் தான் கிறிஸ்துமஸ் பெருவிழா. எனவே பாலன் இயேசுவின் வருகையால் பூவுலகம் களிகூர்கின்றது. பாவத் தளையில் சிக்குண்ட மனிதனை மீட்டு அவனுக்குப் புதுவாழ்வை வழங்க பாலன் இயேசு இப்பாரினில்  பிறந்த நாள்! நமது கிறிஸ்மஸ் விழாக் கொண்டாட்டத்தில் கிறிஸ்து மையமாக இருக்கிறாரா? கிறிஸ்து தான் கிறிஸ்மஸ் விழாவின் மையம். "கடவுள் நம்மோடு" இது தான் கிறிஸ்மஸ் விழாவின் மையக் கருத்து. ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்தக் கிறிஸதுவைக் கண்டுகொள்கிறோம் என்பது கேள்விக்குறியே?


அன்பர்களே! இன்று கிறிஸ்து பிறப்பின் விழாவை அகிலமே கொண்டாடி மகிழ்கின்றது. இந்த மகிழ்ச்சி யாருக்காக? ஏன்? எதற்காக? சற்று  சிந்திப்போம். நமக்கு வாழ்வைக் கொடுக்க வந்த தெய்வம் இயேசு. நம்மை வாழ வைக்கும் தெய்வம் இயேசு. எனவே அத்தகைய  இயேசுவிக்கு நம் வாழ்வில் முதலிடம் கொடுக்கின்றோமா? அல்லது அவரை நாம் வாழ்விலிருந்து ஒதுக்கி விடுகின்றோமா? என்பதை  சிந்தித்துப் பார்த்து  நம்மையே முழுமையாகத் தயாரிக்க இன்றைய அருள்வாக்குகள் நம்க்கு துணைபுரிகின்றன. இதனை மனதில் பதிவுச் செய்து கிறிஸ்து பிறப்புப் பெருவிழா திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டு மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் சீயோனிலிருந்து மீட்பு வருகிறது. அதன் மக்கள் ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று கூறும் இறைவாக்கினர் எசாயாவின் மீட்பைப் பற்றி நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளின் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூயஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். இதற்காகவே கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டன என்று திருத்தூதர் பவுல் நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வைப் பற்றி கூறும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல் 
திபா 97: 1,6,11-12
பல்லவி: பேரோளி இன்று நம்மேல் ஒளிரும் ஏனெனில் நமக்காக ஆண்டுவர் பிறந்துள்ளார்.

1.ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவுநாடுகள் களிகூர்வனவாக! வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. -பல்லவி

2.நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். -பல்லவி

மன்றாட்டுகள்:

1.மாபெரும் மகிழ்ச்சியை உம் மகனின் பிறப்பு வழியாக எமக்கு தந்த இறைவா! கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் மகிழ்ச்சி எம் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் என்று உலகமக்கள் அனைவரின் உள்ளத்தில் உண்மையான மகிழ்ச்சியையும், அமைதியையும் நிறைவாய் நிலைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.இடையர்களுக்கு உம் முதல் தரிசனத்தை காணும் பாக்கியத்தை கொடுத்த இறைவா!  நாங்களும் அவர்களைப் போல் எங்கள் வாழ்க்கையில் உமது வார்த்தைகளில் நம்பிக்கைக் கொண்டு அன்பு, இரக்கம், மனிதநேயம் கொண்டவர்களாக வாழவும்,  அவர்களைப்  போல் உமது அரசை பறைச்சாற்றவும் வேண்டிய  ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.மாட்டுதொழுவத்தில் பிறந்து உமது எளிமையை எமக்கு எடுத்துரைத்த இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ளவர்கள் இறைஅன்பும்,  இறைஅச்சமும் நிறைந்தவர்களாகவும், நேர்மையும், கட்டுப்பாட்டும் கொண்டவர்களாக உம் கரம் பற்றி வாழ வரந்தர வேண்டுமென்று  ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம். 

4. அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா! இந்த நல்ல நாளில் எமக்கு அடுத்திருப்போர்களின் தேவைகளை  உணர்ந்து அவர்களுக்கு தேவையான அன்பும், ஆதரவும், அடைக்கலமும், பொருளாதர வசதிகளை செய்து தர வேண்டிய நல்ல மனதை  தந்து இந்த கிறிஸ்மஸ் பெருவிழாவை அர்த்தமுள்ளதாய் கொண்டாட வேண்டிய வரம் அருள் தரம் வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.

அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்

Thursday, December 10, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். -13/12/2015

திருவருகைக் காலம் 3 ஆம் ஞாயிறுஇன்றைய நற்செய்தி வாசகங்கள்.

செப்பனியா 3:14-17
பிலிப்பியர். 4:4 -7
லூக்கா 3:10-18


முன்னுரை:


இன்று திருவழிபாட்டு ஆண்டின் மூன்றாம் ஞாயிறு.  இந்த ஞாயிறை மகிழ்ச்சியின் ஞாயிறு என்ற அழைக்கின்றோம். ஏனென்றால் இயேசுவின் பிறப்பு விழா நெருங்குவதால் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. அந்த மகிழ்ச்சியை நிபந்தளைகளோடு இறைவன் தருவதில்லை. மாறாக, அவருடைய வருகை நம்மிலே நிபந்தனைகளற்ற நிலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதைத்தான் இன்றைய அருள்வாக்குகளும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

பேரிடராய் வந்த பெரும் மழை ஒரே இரவில் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. மக்களின் மனதில் ஏற்பட்ட மாற்றம் திருமுழுக்கு யோவான் சொன்னது போல இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு பகிர்ந்ததையும், முடியாதவர்களுக்கு முடிந்தவர்கள் ஓடி வந்து உதவியதை பார்க்கும்போதும் சோகத்திலும் ஓர் உண்மையான மகிழ்ச்சியைக் காணமுடிகிறது.
பகிர்வின் மகிமை வெளிப்பட்டது. இந்த பகிர்வுகளின் மகிழ்ச்சியும், ஈடுபாடும்  நம் வாழ்வில் துன்பதுயர நேரங்களில் மட்டும் இல்லாமல் எப்போதும் தக்க வைத்துக் கொள்ள நம் சுயநலங்களை மறந்து திருப்பலிக் கொண்டாட்டங்களில் மன்றாடுவோம்.


வாசகமுன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் “மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி இஸ்ரயேலே! ஆரவாரம் செய் இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கன்றார். அவர்கள் எதற்கும் ஆஞ்சவேண்டாம்” என்று இறைவனின் உடனிருப்பை எடுத்துரைக்கும்  இறைவாக்கினர் செப்பனியாவின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் “ஆண்டவரோடு இணைந்த என்றும் மகிழ்ங்கள். மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள் நன்றியோடு கூடிய  இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள்  விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். ஆண்டவர் அண்மையில் உள்ளார். கிறிஸ்தவர்கள்  கவலைகளை விட்டுவிட்டு அகமகிழ வேண்டும். அறிவையெல்லாம் கடந்து அமைதி  நம்மை ஆட்கொள்ளும் என்பதனை பிலிப்பியருக்கு எழுதியதைக் கவனமுடன்
செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்


எசா 12: 2-3, 4, 5-6


பல்லவி: ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; ஆண்டவர் சிறந்து விளங்குகின்றார்.

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். -பல்லவி

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். -பல்லவி

ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர்  மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக. சீயோனில்  குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். –பல்லவி


மன்றாட்டுகள்:


1.அன்பின் இறைவா திருவருகைக்காலத்தில் 3ஆம் ஞாயிறாகிய இன்று திருஅவையில் இருக்கும் மகிழ்ச்சி திருஅவையில் மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் அனைத்து மாந்தருக்கும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியின் நிறைவில் என்றும் நிலைத்து நிற்க பிறக்கும் பாலன் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.தந்தையே எல்லோரும் ஓன்றாய் இருப்பர்களாக என்னும் இறைவார்த்தையின் அடிப்படையில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் உலகளவில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும், அவர்களின் வேலைகள் சந்திக்கவும் உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.காலத்தில் அறிகுறிகளை அறிந்த எம் இறைவா மனிதனை இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்தையும் நீ ஆண்டு கொள்வாயாக என்ற கூறி படைப்பின் மேன்மையை உணர்த்தினீர். ஆனால் இன்று நாங்கள் இயற்கைக்கு எதிராக செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து இயற்கையை நாங்கள் நேசிக்கவும், பாதுகாக்கவும் இன்றைய தலைமுறையினருக்கு நல்ல தேசத்தை கொடுக்கவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா, மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. தோழமையின் நாயகனே எம் இறைவா! வரப்போகும் கிறிஸ்து பெருவிழாவை நாங்கள் வெறும் வெளி அடையாளங்களைத் தவிர்த்து, ஆடம்பரங்களை குறைத்து, ஆன்மீகத் தயாரிப்பில் எங்கள் கவனத்தைச் செலுத்தி சாதி மத பேதமின்றி உமது பிறப்பின் செய்தியை நற்செய்தியாக சான்ற பகிர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

visit www.anbinmadal.org

Friday, November 27, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். -29/11/2015

திருவருகைக் காலம் 1 ஆம் ஞாயிறுஇன்றைய நற்செய்தி வாசகங்கள்.
எரேமியா 33:14-161
தெசலோ. 3:12 - 4:2
லூக்கா 21:25-36முன்னுரை:

இன்று திருவழிபாட்டு ஆண்டின் முதலாம் ஞாயிறு.  இந்த ஞாயிறிலிருந்து தான் திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்தை திருவருகைக் காலத்தோடு தொடங்குகிறோம். அன்று இஸ்ரயேல் மக்களைத் தளைகளிலிருந்து விடுவிக்க மெசியா பிறப்பார் என ஆவலோடு காத்திருந்தார்கள். இயேசுவின் வருகைக்குப் பின் தொடக்க காலத்திருச்சபை இயேசுவின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாக  இம்மண்ணிலே அவதரித்த இயேசு மீண்டும் மனிதனாக மண்ணிலே பிறக்கமாட்டார். மாறாக அவர் நம்மைத் தீர்ப்பிட வெற்றியின் அரசாராக மீண்டும் வர இருக்கிறார். தேர்வு எழுதிய பின்பு அதன் முடிவுக்காக காத்திருக்கவேண்டும். இவ்வாறு காத்திருத்தல் என்பது நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட  ஒன்றாகும். காத்திருத்தல் அனைத்தும் நமக்குச் சுகமாக அமைவதில்லை. ஆனால், காத்திருத்தலின்  சுகம் யாருக்காக எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது.
எனவே, இத்திருவருகைக் காலத்தில் தாய்த்திருச்சபை  நாம் நம் ஆண்டவர் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூர்ந்து கொண்டாடினாலும் அவரது இரண்டாம் வருகைக்காக நம்மைத் தயார்படுத்த நம்மைத் தூண்டுகிறது. இதனை மனதில் இருத்தி இத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டு மன்றாடுவோம்.வாசகமுன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் “யூதா விடுதலை பெறும், எருசலேம் விடுதலையோடும், பாதுகாப்போடும் வாழும்” என்ற வார்த்தைகள் இஸ்ரயேல் மக்களக்கு நம்பிக்கைத் தந்தன. புதிய வாழ்வைத் தந்தது. விடுதலை வாழ்வை அவர்களுக்கு வழங்கியது. இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்ப்பார்த்திருக்கும் நமக்கு புதிய வாழ்வைப் பற்றிய நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் “நம் ஆண்டவர் இயேசு, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!”  என்று நம்மை வாழ்த்துகின்றார்.  நம்பிக்கையோடும், விழிப்போடும் நிலைத்திருப்பவர்களுக்கு மீட்பு நெருங்கி வருகிறது. இதற்கு இயேசு கூறும் வழிமுறை "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். இந்த எச்சரிக்கையுடன் கூடிய இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 25: 4-5. 8-9. 10,14
பல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
1.ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்;  உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.  உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி
2.ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி
3.ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்;  அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். –பல்லவி

மன்றாட்டுகள்:


1.வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா! திருச்சபை இன்று தொடங்கும் திருவழிபாட்டு ஆண்டில் எம் திருத்தந்தைத் தொடங்கி பொதுநிலையினர் வரை அனைவரும் வரும் நாட்களில் எதிர்நோக்கியிருக்கும் வருகையின் போது இறைவன் திருமுன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு எங்களை நாங்கள் தயாரித்துக் கொள்ள இந்த திருவருகைக் காலத்தை சரியாக முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டிய ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.நீதியின் ஒளியே எம் இறைவா! இன்று உலகில் நிலவும் மனிதகுலத்திற்கு எதிராக மனிதனின் அணுஆயுதக் கண்டுபிடிப்புகள், பயங்கரவாதம் ஒழிந்து எங்கும் அமைதி நிலவ, பரிவினை நீக்கி ஒற்றுமையுடன் வாழ தேவையான ஞானத்தைப் பொழிய  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா!மழையினால் பாதிக்கப்பட்ட எலடலா கிராமங்களிலும் பொருள் சேதம், மனஉளச்சல், வேதனைகள், உயிர் சேதம் இவற்றின் விளைவாக வாழ்வையே இழந்து தவிக்கும் எம் சகோதர சகோதரிகளின் துயர்துடைக்க உம் கரம் பற்றிட தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.உன்னைப் படைத்தவரை உன் வாலிப நட்களில் நினை என்று சொன்ன எம் இறைவா!  இளைறோர் தங்கள் வாழ்வில் நல்ல சிந்தனைகளையும், நற்செயல்களிலும், விசுவாச வாழ்வில் நிலைத்து நின்று கிறிஸ்துவின் மதிப்பீடுகளை தங்கள் வாழ்வில் எந்நாளும் சான்றுபகர தேவையான அருளைப்  பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. அன்பு இறைவா வரும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீக தயாரிப்புகளில் எங்களை புதுப்பித்துக் கொண்டு உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

Thursday, November 19, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். -22/11/2015

ஆண்டின்  34ஆம் ஞாயிறு
கிகிறிஸ்து அரசர் பெருவிழா


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

தானியேல் 7:13-14 
திருவெளிப்பாடு 1:5-8
யோவான் 18:33-37


முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு.  இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை கிறிஸ்துஅரசரின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். உலகெங்கும் முடியாட்சி மாறி மக்களாட்சி மாறும் காலகட்டத்தில் நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடுகிறோம். பிலாத்து கிறிஸ்துவிடம் நீ யூதர்களின் அரசரா? என்று கேட்டப்போது அவர் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல என்று கூறினார்.  அவர்  உலக மக்களுக்காகத் தன்னையே கொடுத்து நிலையாட்சிக்கு அழைத்து செல்லவே வந்தார். அவர் நம் அரசர். ஆம்! ஏழ்மையின் அரசர். அன்பின் அரசர். பணிவின் அரசர். தாழ்ச்சியின் அரசர். எனவே தான் அவர் மாளிமையில் பிறக்கவில்லை. தன் சீடர்களின் கால்களைக் கழுவி பிறர்க்கு பணிச் செய்து தன் அன்பின் ஆட்சியை அறிவித்தார்.  அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்: அதற்கு முடிவே இராது: அவரது அரசு அழிந்து போகாது. மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்: இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே. தொடக்குமும் முடிவும் ஆன அவரின் வருகையை எதிர்கொள்ள நம்மையே நாம் தயாரிக்க அவரோடு மனம் ஓன்றித்து இன்றைய திருப்பலி வழிபாட்டுக் கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டு மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் தானியேல் தான் கண்ட காட்சி இங்கே விவரிக்கிறார். மானிட மகனின் வருகையையும், கடவுளின் அரசு எத்தகையது? யாருக்குரியது? அது எப்படி இருக்கும்? என்பதைப் பற்றி எடுத்துரைக்கிறார். மானிடமகன் முடிவற்ற அரசையும் மகிமையையும் பெறுகின்றார்.இறையரசைப் பற்றிய நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யோவான் தனது திருவெளிப்பாடு நூலில்  இயேசுவை மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர் என்று அறிவிக்கிறார். இயேசுவின்  தலைமை என்பது அன்பின் வழி விடுதலை பெற்றுத் தருவதாகும். கிறிஸ்து அரசர்  தன்னை முதன்மைப்படுத்தி மக்களை வாழ வழிவகுத்தார். மக்கள் அரசைரைத் தேடிச் செல்கின்றனர். ஆனால் கிறிஸ்து அரசரோ மக்களைத் தேடிச்சென்றார். இதனை தெளிவுப்படுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 93: 1. 1-2. 5


பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார் அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார். ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். -பல்லவி

பூவுலகை அவர் நிலைப்படுத்தினார் அது அசைவுறாது. உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். -பல்லவி

உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை ஆண்டவரே!  என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். -பல்லவிமன்றாட்டுகள்:


1.அன்பு தந்தையே எம் இறைவா! திருஅவையில் தலைமைஆயர் தொடங்கி கடைநிலை பொதுநிலையினர் வரை திருஅவைக்காக உழைத்தவர்கள், இன்றும் உழைக்கின்றவர்கள், உழைத்து மரித்தவர்கள் அகிய அனைவரையும் உமக்கு அர்ப்பணிக்கின்றோம். அவர்களின் ஆன்மீக கருத்துக்கள் ஈடேற்றம் அடைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை பின்பற்றி தங்களை வெறும் மக்ககை ஆளுகின்ற வர்க்கமாக இல்லாமல், மக்களின் பணிசெய்வதற்கே என்ற மனநிலையை தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.இப்பொழுது எம் தமிழகத்திலுள்ள எல்லாமாவட்டங்களிலும் மழையினால் பாதிப்புக்குள்ளாகிய அமைதியிழந்து, உறவுகளை இழந்து, வேதனையில் வாழும் எம் சகோதர, சகோதரிகளுக்கும் நீரே ஆறுதலாய் இருந்த அவர்களை தேற்றியம் மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கை திரும்ப வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் நுழைய முடியாது என்று கூறிய எம் இறைவா இந்த மழையினால் டெங்குகாய்ச்சல், காலரா போன்ற தொற்று நோயிகள் பரவாமல், குழந்தைகளை நிறைவாக ஆகீர்வதித்து அவர்களை உம் செட்டையின் கீழ் அரவணைத்த பாதுகாத்திட வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. கிறிஸ்து அரசர் பெருவிழா ஆன இன்று யாரும் நினையாத உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற ஆன்மாக்கள் அனைவரையும் உம் பாதத்தில் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் விரைவாக உம் இல்லத்தில் அழைத்து, பரிசுத்தர்கள் கூட்டத்தில் சேர்த்து, உம்மை போற்றி புகழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Friday, November 13, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 15/11/2015


ஆண்டின் 33ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்


1. தானியேல் 12:1-3.
2.எபிரேயர் 10:11-14
3.மாற்கு 13: 24-32

திருப்பலி முன்னுரை:


இயேசுகிறிஸ்துவின் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!  இன்று திருவழிப்பாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு. வரும் ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. எனவே இன்றைய வாசகங்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி இருக்கின்றது. இவ்வாசகங்கள் நமக்கு அச்சத்தைத் தருவதாக இருந்தாலும் உலகத்தின் முடிவு எப்படி இருக்கும்? என்ற கேள்வியை விடுத்து உலகத்தின் முடிவை  நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும்?என்று கேள்விக்கு விடையாகத் தான் இன்றைய இறைவாக்கு வழிபாடு அமைந்துள்ளது.

திரைப்படம், புதினம் இவற்றின் முடிவே நம் ஆர்வமாக இருக்கிறது என்றால், நாம் வாழும் இந்த உலகின் முடிவு எப்படி இருக்கும் பார்ப்பதிலும், நினைத்துப் பார்ப்பதிலும் நமக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கும்!உலகம் முடியுமா? முடியாதா? எப்போது முடியும்? எப்படி முடியும்? மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமா? அல்லது அண்ட சராசரத்தின் ஆக்கம், அழிவு போல பூமி தானாகவே அழிந்து விடுமா? கடவுள் வருவாரா? எப்படி வருவார்? எல்லாருக்கும் தீர்ப்பு வழங்குவாரா? நம் இந்தியப் பின்புலத்தில் கேள்விகள் இன்னும் அதிகமாகின்றன: எந்தக் கடவுள் வருவார்? கிறிஸ்தவரல்லாதவருக்கு என்ன நடக்கும்? ஒருவேளை எல்லாக் கடவுளர்களும் சேர்ந்து வருவார்களா?  இந்த நிலையில் தான் இன்றைய மாற்கு நற்செய்தி வாசகம்  மூன்று கருத்துகளை முன் நாம் முன் வைக்கிறது. 1 நிகழ்காலத்தில் வாழ வேண்டும். 2 கடின உழைப்பு. 3. சான்று வாழ்வு. நம் இன்றைய வாழ்வை நன்றாக வாழ்வோம்.  நாம் நல்லவர்களாயினும், கெட்டவர்களாயினும் நம்மை விரும்பி தேர்ந்துகொள்வது கடவுளின் உரிமையே. அப்படியென்றால், நம்மிடம் எதிர்பார்க்கப்படுவது பொறுப்புணர்வும், தாராள உள்ளமும். உலக முடிவைப் பற்றிய கலக்கம் கொள்ளாமல் இன்றைய வாழ்வு நன்றாக வாழ்ந்தால், நாளை நமக்குத் தேவையில்லை என்பதை உணர்ந்து அனைவரும் ஒருமனத்தவராய் திருப்பலியில் இணைந்திடுவோம்.

வாசக முன்னுரை:


முதல் வாசகம்:

பல்த்தசார் என்று அழைக்கப்பட்ட தானியேல், பாரசீக மன்னன் சைரசின் காலத்தில் காட்சி ஒன்று காண்கின்றார். அந்தக் காட்சியில் முடிவின் காலம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது. அந்த முடிவின் காலம் எப்படி இருக்கும் என்று தென்திசை மன்னனுக்கு தானியேல் அறிவிப்பதே இன்றைய முதல் வாசகம். பேரொளி, விண்மீன். வானில் தெரியும் விண்மீன்கள் நம் முன்னோர்கள் என்ற சிந்தனை தொடக்கக் காலம் தொட்டே மனித இனத்திற்கு இருந்தது. இந்த விண்மீன்கள் வெறும் ஒளி மற்றுமல்ல, விண்ணகத்திற்கும், மண்ணகத்திற்குமான வாசல் என்றும் அவர்கள் கருதினார்கள். இன்று நாம் காணும் விண்மீன்கள் நம் முன்னோர்கள் என்றால், நாமும் நாளை விண்மீன்களாக ஒளிவீச வேண்டும். அதற்கு நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?' பலரை நல்வழிக்குக் கொணர்வதாக இருக்க வேண்டும்.' என்று நம்மை அழைக்கும் வாசகத்தைக் கவனமுடன் வாசிக்க கேட்போம்.

இரண்டாம் வாசகம்:


இயேசு தன் உடலால் செலுத்திய ஒரே பலி, யூத தலைமைக்குருக்களின் தொடர் ஆண்டுப் பலிகளை விட மேலானது என்று சொன்ன எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், தொடர்ந்து இயேசு என்ன ஆனார் என்பதைப் பற்றி எழுதுகின்றார். பலி செலுத்திய இயேசு இறந்தபின் உயிர்க்கின்றார். உயிர்த்தவர் கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். வலப்பக்கம் என்பது ஆற்றலின் உருவகம். கடவுளின் ஆற்றலாக விளங்குகின்றார் இயேசு.'பலியான இயேசு கடவுளின் வலப்பக்கம் இருக்கிறார்.' அதாவது, வலுவின்மை எனக் கருதப்பட்டவர் வல்லமை பெறுகிறார். இதுதான் நம் வாழ்வின் இறுதியிலும் நடக்கும் என்பது நமக்கு ஆறுதல். இக்கருத்துக்களை புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தை வாசிக்க கேட்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 16: 5,8. 9-10. 11

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும் உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து அவரே என் கிண்ணம் எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே! ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன். அவர் என் வலப் பக்கம் உள்ளார் எனவே, நான் அசைவுறேன். -பல்லவி

என் இதயம் அக்களிக்கின்றது என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது. என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர் உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். -பல்லவி

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. -பல்லவி

விசுவாசிகள் மன்றாட்டு:திருச்சபைக்காக:

எங்களை வல்லமையோடு நடத்திவரும் அன்பு தந்தையாம் இறைவா!  எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் சான்றுவாழ்வுக்காக எங்களிடம் எதிர்பார்க்கப்படுவது பொறுப்புணர்வும், தாராள உள்ளமும், எம் திருஅவையில் நிறைவாய் இருந்திடவும், எதிர் கால கலக்கம் எதுவுமில்லாத நல்வாழ்வு நடத்தவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் குடும்பங்களுக்காக:

எங்களை நீதியுடன் வழிநடத்தும் வெற்றி வேந்தனே! இன்றைய சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகள் நீங்கி சோம்பித் திரியாமல் எங்கள் கடின உழைப்பின் மூலம் குடும்பங்களின் வாழ்வு மலரவும், எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நல்லவராய் வாழ்ந்து தண்டனைத் தீர்ப்பிலிருந்து விடுபட்ட உமக்குரியவர்களாக தேர்ந்துக் கொள்ளப்படவும், மற்றவர்களுக்கு உம் அன்பினை பறைச்சாற்றும் வாழ்வதின் மூலம் உம் பணியாளராக வாழ வேண்டிய வரங்களை தரும்படியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

மக்களுக்காக:

எங்களை காத்து பராமரித்து வரும் அன்பு தெய்வமே இறைவா!  இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடைய தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று  உம்மை மன்றாடுகிறோம்.

துன்பபடுவோருக்காக:

எங்களை உம் அன்பின் சிறகுகளில் காத்து வரும் அன்பு தந்தையே இறைவா!  தமிழகம் எங்கும் நல்ல மழையை கொடுத்த இதே வேளையில் இயற்கை அழிவுகளால், இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் தவறுகளால் உண்டான துன்பங்களாலும் பெரும் அவதிப்படும் முதியோர்களையும், குழந்தைகளையும், வீடு, பொருள் இழந்தோர் அனைவரையும் நோய்நொடியிலிருந்தும், பொருளாதர சரிவிலிருந்து காத்தருள வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப் பாடி கொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

Friday, November 6, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 08/11/2015


ஆண்டின் 32வது ஞாயிறு     
                     
           

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


1அரசர் 17:10-19 
எபிரேயர் 9:24-28
மாற்கு 12:38-44

முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு.  இந்த ஞாயிறு  இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் கிறிஸ்துவின்
பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். எப்பொழுதெல்லாம் நாம் நம்மை முழுமையாகக் கொடுக்கிறோமோ, அப்பொழுதெல்லாம் நாம் கொடுத்ததற்கு மேலாகவே பெறுகிறோம் என்பதை இன்றைய அருள்வாக்கு நமக்கு எடுத்துரைக்கிறது. சாரிபாத்து நகரில் எலியா இறைவாக்கினர் ஏழைக்கைம்பெண் ஒருவரால் பசியாறப்பெறுகின்றார். இதுதான் ஒற்றைவரியில் முதல் வாசகம். பலி செலுத்துதல் என்ற அடிப்படையில் யூதர்களின் தலைமைக்குருவைவிட இயேசு எப்படி மேம்பட்டு நிற்கிறார் என்று அவர் சொல்வதே இன்றைய :  இரண்டாம்  வாசகம் 'மற்ற தலைமைக்குருக்கள் விலங்குகளைப் பலியாக ஒப்புக்கொடுப்பர். ஆனால் இயேசு தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.'

என்னிடம் உள்ளதில் எஞ்சியதைக் கொடுத்தல் (நற்செய்தி வாசகம்), என்னிடம் உள்ளதனைத்தையும் கொடுத்தல் (முதல் வாசகம், நற்செய்தி வாசகம்), என்னையே கொடுத்தல் (இரண்டாம் வாசகம்). இதில் என் கொடுத்தல் எவ்வகை? முதல் ஏற்பாட்டு யோசேப்பு தான்  பெறுவதைவிட அதிகம் கொடுக்கிறார். மேன்மை பெறுகின்றார். ஆனால் சாலமோன் தான் பெறுவதைவிட குறைவாக கொடுக்கிறார்.  தாழ்வுற்று மடிகின்றார். ஒவ்வொரு நாளும் நான் கடவுளிடமிருந்து, மற்றவரிடமிருந்து பெறுபவை எண்ணற்றவை. ஆனால் நான் கொடுப்பது எவ்வளவு? இவற்றையெல்லாம் சிந்தித்து சீர்தூக்கி பார்க்க இன்றைய திருப்பலி வழிபாட்டில்  மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:முதல் வாசகம்

காகங்கள் வழியாக எலியாவுக்கு உணவளித்து வந்த இறைவன் இப்போது சாரிபாத்து நகர் ஏழைக்கைம்பெண்ணிடம் அனுப்புகின்றார். அப்படி சாரிபாத்துக்கு வந்த எலியா, ஏழைக்கைம்பெண்ணைச் சந்திக்கும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம்.  'மாவு தீரவில்லை. எண்ணெய்  குறையவில்லை.' கடைசிக் கை மாவும், கடைசித்துளி எண்ணெயும் குறையவேயில்லை.  என்னவொரு ஆச்சர்யம். 'என்னிடம் உள்ளது  இதுதான்' என்று இறைவனிடம் கொடுப்பவர்களுக்கு, அவர் இன்னும் அள்ளி அள்ளிக் கொடுக்கின்றார் என்பதே அவர் நிகழ்த்தும் அற்புதம். நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம்  வாசகம்

இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குரு என்று அறிக்கையிட்ட எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் தொடர்ந்து அவரின்  குருத்துவத்தின் மேன்மையை முன்வைக்கின்றார். பலி செலுத்துதல் என்ற அடிப்படையில் யூதர்களின் தலைமைக்குருவைவிட இயேசு எப்படி மேம்பட்டு நிற்கிறார் என்று அவர் சொல்வதே இன்றைய இரண்டாம் வாசகம்: 'மற்ற தலைமைக்குருக்கள் விலங்குகளைப் பலியாக ஒப்புக்கொடுப்பர். ஆனால் இயேசு தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.' உயிரியில் பகுப்பாய்வில் மனிதரின் உயிரைவிட மேலான உயிர் இயேசுவின் உயிர். இவ்வாறாக, 'பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே ஒருமுறை இயேசு தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்.' எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின்  இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 146: 7. 8-9. 9-10

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு .

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலை நாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி 

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி 

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

மன்றாட்டுகள்:


1.அன்பு இறைவா! திருஅவையில் மரித்த அனைத்து திருத்தந்தையர்கள், ஆயர்கள், துறவியர் பொதுநிலையினார் நற்செய்தியாளர்கள்,பிறசபை 
போதகர்கள், நாட்டு தலைவர்கள் திருச்சபையில் அவர்கள் ஆற்றிய பணிகள், நாட்டுக்காக அவர்களின் அர்ப்பண வாழ்வை உம் பாதம்  வைக்கிறோம். இறந்த இவர்கள் அனைவருடைய ஆன்மா நித்தய இளைப்பாற்றி அடைய  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.படைப்பின் நாயகனே! எம் இறைவா எம் நாட்டில் சிறப்பாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழையின்மையின் காரணமாக விவசாய வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, வெப்பமயமாதல் போன்ற காரணிகளை நீக்கி உம் இரக்கத்தினால் நல்ல மழையை பெய்வித்து நிலங்களையும், இயற்கை வளங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.இளமை வாழ்வதற்காக என்று மொழிந்த எம் இறைவா! இளையோர் திருச்சபைக்காக திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு
இணங்க இளைமையில் இறைமையைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாக பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின்  அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்ற இறைவா! நாங்கள் நீர் கொடுத்த  பரிசுத்தம் என்றும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப்  புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.


பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப் பாடி கொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

Friday, October 23, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 25-10-2015

ஆண்டின்  30ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எரேமியா 31:7-9 
எபிரேயர் 5:1-6
மாற்கு 10:46-52


முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு.  இந்த ஞாயிறு  இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை அருளாளர் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் இஸ்ரயேல் மக்களை இறைவன் எப்படி வழிநடத்திச் செல்வார் என்று எரேமியா இறைவாக்குரைக்கிறார். நீரோடை - வளமை. அழுகையோடு அவர்கள் வந்தாலும், ஆறுதலோடு அணைத்துக்கொள்வார் .இறைவன் என இறைவனின் புதிய வாக்குறுதியை முன்வைக்கின்றார் எரேமியா. இயேசுவைத் தலைமைக்குரு என்று முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் அவர் எப்படி தலைமைக்குருவானார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகப்பகுதியில் எழுதுகின்றார். இயேசுவுக்கு இந்த அழைப்பு கடவுளிடமிருந்துதான் வருகிறது. 'நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்' என்று கடவுள் அவரைத் தேர்ந்து கொள்கிறார். தான் தெரிந்து கொள்ளப்பட்ட பணியை இயேசுவும் இனிதே செய்து முடிக்கின்றார்.

'தாவீதின் மகன்' - இதுவரை இயேசுவுக்கு பயன்படுத்தாத ஒரு தலைப்பை இங்கு பயன்படுத்துகிறார் மாற்கு. . 'என்மேல் இரங்கும்' - நாம் திருப்பலியில் பயன்படுத்தும் 'ஆண்டவரே இரக்கமாயிரும்' என்ற மன்னிப்பு வழிபாடு உருவானது இன்றைய நற்செய்திப்பகுதியிலிருந்துதான். 'மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளிக் குதிக்கின்றார்' - பார்வை பெறுவதற்குமுன்னே தன் பிச்சையெடுக்கும் தொழிலுக்கு ஆதாரமான மேலுடையைத் தூக்கி எறிகின்றார். ஆக, மேலானதொன்று கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும்.இன்று கடவுள் என்னிடம் 'உனக்கு நான் என்ன  செய்யணும்?' என்று கேட்டால், பர்த்திமேயு போல என்னால் உடனடியாகப் பதில் சொல்ல முடியுமா? பர்த்திமேயுக்கு இருந்த இலக்கு தெளிவு என்னிடம் இருக்கிறதா? இவற்றையெல்லாம் சிந்தித்து சீர்தூக்கி பார்க்க இன்றைய திருப்பலி வழிபாட்டில் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் பாரவோன் அடிமைத்ததனத்தில் அல்லலுற்ற தன் மக்களை இறைவன், மோசேயின்  தலைமையில் ஒன்றிணைத்து பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்து வந்தார். அழைத்தவர் விடுத்த
கட்டளைகளை மறந்தார்கள். அவர்களுக்கு புது வாழ்வு தர இறைவாக்கினர் எரேமியாவை அழைத்தார். அழுகையோடு  அவர்கள் திரும்பி வருவார்கள். ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவோன் என்று கூறும் நம் கடவுள் நம்மை  ஆதரித்து வழிநடத்தும் உண்மைத் தந்தை இந்த நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இயேசுவைத் தலைமைக்குரு என்று முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் அவர் எப்படி தலைமைக்குருவானார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகப்பகுதியில் எழுதுகின்றார். நம் வலுவிக்மையைப் போக்க இயேசுவுக்கு அழைப்பு வந்ததைப் போன்று  நாமும் பிறருடைய துன்பங்களைப் போக்க இயேசு நமக்கும் அழைப்பு  விடுக்கின்றார். நம்மில் எத்தனைபேர் இந்த அழைப்பை ஏற்று வாழ முன் வருகிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற இரண்டாம் வாசகம் அழைக்கின்றது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின்  இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்திபா 126: 1-2. 2-3. 4-5. 6

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.
2 அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; -பல்லவி

2 "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்" என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.
-பல்லவி
6 விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது-வரும்போது-அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி

மன்றாட்டுகள்:திருச்சபைக்காக:

அனைத்தையும் படைத்தாளும் எம் இறைவா!  வத்திக்கானில் நடைபெற்றுவரும் குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள்  மாமன்ற நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தாரும், பொதுநிலையினர்க்கும்   நல்ல முடிவுகளை எடுக்கவும், குடும்பங்கள் திருஅவையோடு மறைப்பணியைப் பகிர்ந்து வேண்டி ஞானத்தையும்,  விவேகத்தையும் பெற்றிட  இவ்வுலகில் வாழ வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம் குடும்பங்களுக்காக:

எங்கள் நம்பிக்கையான எம் இறைவா!  நமக்கு எதிராக இருப்பவர்களை கடவுள் நம் சார்பாக மாற்றுவார். நம் குடும்பம்,  நண்பர்கள், ஏன் இந்த உலகமே நமக்கு எதிராக இருந்தாலும், நாம் கடவுளை இறுகப் பற்றிக்கொண்டால் அவர்
எல்லாவற்றையும் நம் சார்பாக மாற்றிப்போடுவார் என்ற மேலான நம்பிக்கையும், மேலானதொன்று கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும் என்ற உயரிய எண்ணங்களை பெற்றிட வேண்டிய வரங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எம் நாட்டு மக்களுக்காக:

ஏழைகளின் நண்பனே எம் இறைவா இன்று எம் பாரதநாட்டில் ஏழைகள் நசுக்கப்பட்டு அவர்களின் அடிப்படை  வாழ்வாதாரம் இல்லாமல் விவசாயம் நலிந்து அவர்கள் நேரிடையாக விற்பனை செய்யமுடியாத நிலை, அரசால்
கொடுக்கப்படும் மானியம் மறுக்கப்படுதல் மின்பற்றாக்குறை இவற்றால் அவதிப்படும் என் மக்களுக்கு நல்வாழ்வு ஏற்ப  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எம் இளம் சதமுதாயத்திற்காக:

இன்றைய நவீன காலத்தில் உலகில் ஏற்படும் நவீன மாற்றத்திற்கு தங்களையே சுயத்தை இழந்து கலாச்சார சீர்கேடுகள்,  சமூகத்திறிகு எதிரான தீய சிந்தனைகள் இளமையில் இறைபிரசன்னத்தை உணராமல் எதிர்கால வாழ்வை இழந்த எம்  இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளை பின்பற்றி வாழ  வரமருள வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப் பாடி கொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

Thursday, October 15, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 18-10-2015


ஆண்டின்  29ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எசாயா 53:10-11
எபிரேயர் 4:14-16
மாற்கு 10:35-45


முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு.  இந்த ஞாயிறு இறை வழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை நம் அன்பு நாயகன் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். இன்றைய நற்செய்தி பதவி மோகத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது. எசாயா ஆன்டவரின் துன்புறும் ஊழியரைப் பற்றி எடுத்துரைக்கிறது. எசாயாவின் வார்த்தைகளைக் கொண்டே இயேசு தன் சீடர்களின் தவறான எண்ணங்களை மாற்றினார். இத்தகைய சவால் நிறைந்த கடுமையான வாழ்வை யாரால் வாழமுடியும்? இது சாத்தியமா? என்ற கேள்விக்கு பதிலாக இரண்டாம் வாசகம் அமைந்திருப்பதை காண்கிறோம்.

 இயேசு தன் பாடுகளைப் பற்றி  மூன்று முறை மாற்கு நற்செய்தியில்  எடுத்துரைக்கின்றார். ஆனால் அவரின் சீடர்கள் அதை  தவறாக புரிந்துக் கொண்டு அவருக்கு அருகில் யார் இருப்பது  என்பதையே விவாதித்து வருகிறார்கள்.  ஆனால் மனுமகனோ பணிவிடை ஏற்பதற்கு அன்று பணிவிடைப் புரியவே வந்தேன் என்றார். தன்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னைப் போல் பாடுகள் படவேண்டுமென்றும், உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர்கள் உங்கள் தொண்டராய் இருக்கட்டும் என்று  தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். பணிவிடை புரிவது என்பது மற்றவர்களின் சுமைகளைப் பகிர்ந்துகொள்வதிலும், தாழ்ச்சிளோடு ஆறுதல் சொல்வதிலும் தான் அடங்கியுள்ளது என்பதை நன்கு உணர்வோம். இதைச் செயல்படுத்துவதில்  நாம் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளை நம் ஆண்டவரிடம் ஒப்படைப்போம் . அவரே நம்மை நல்வழிப்படுத்துவார். எனவே இவற்றை
உணர்த்தும் இன்றைய திருப்பலி வழிபாட்டில் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எசாயாவிடமிருந்து  எடுக்கப்பட்டது. எசாயா இறைவாக்கினர் துன்புறும் ஊழியனைப் பற்றி நான்கு இடங்களில் குறிப்பிடுகின்றார். அவர் சிறுமைப்படுத்தப்பட்டலும்  வாயைத் திறவாதிருந்தார்.அவர் தம் உயிரைக் குற்ற நீக்கப்பலியாகத் தந்தார். ஆண்டவர்திருவுளம் அவர் கையில் சிறப்புறும்  என்ற இயேசுவின் பாடுகளைப்பற்றி முன்னுரைக்கின்றார்.இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம் .

இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியில்  நமது தலைமைக்குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல. நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவுக் கூடிய அருளைக் கண்டையவும் அருள் நிறைந்த இறைஅரியணைத் துணிவுடன் அணுகிச் செல்வோம். இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின்  இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 33: 4-5. 18-19. 20,22

பல்லவி: உம்மையே நாங்கள் நம்புவதால், உம் பேரன்பு எம்மீது இருப்பதாக!

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;
அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்;
அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக்
காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்;
அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;
அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,
உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி

மன்றாட்டுகள்:


திருச்சபைக்காக:

உம் பேரன்பால் எமக்கு துணையும் கேடயமும் இருக்கின்ற எம் இறைவா!  எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள்,  அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள்  அனைவரும் பணிவிடை ஏற்பதற்கு அன்று பணிவிடைப் புரிவதில் தான் தலைமைப் பண்பு அடங்கியிருக்கின்றது என்ற இயேசுவின் அழைப்பை உணர்ந்தவர்களாய் கிறிஸ்துவின் சீடர்களாய்  இவ்வுலகில் வாழ வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம் குடும்பங்களுக்கா:

உம் பேரன்பால் பூவுலகை  நிறைந்துள்ள எம் இறைவா! சவால்கள் நிறைந்த எம் இல்லற வாழ்க்கையில்  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உம் மைந்தனைப்போல  பணிகளை செய்திடவும், சிலுவை இன்றி வெற்றி இல்லை என்ற இயேசுவின் மொழிகளை மனதில் பதிவு செய்து, அவரின் உடனிருப்பை உணர்ந்து வாழ  வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

நாட்டு தலைவர்களுக்காக:

உம் பேரன்பால் உறவுகளை பேணிக்காக்கும்  உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் உமது விழுமியங்களை உணர்ந்து பணி செய்யவே என்ற உன்னத நோக்கத்தை வாழ்வில் கடைபிடித்து  மக்களின் நல்வாழ்வில் சுயநலமின்றி கவனம் செலுத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

துன்புறும் திருஅவைக்காக:

உம் பேரன்பால் அனைவரையும் வழிநடத்தும் அன்புத்தந்தையே! இயேசுகிறிஸ்துவின் சீடர்கள் என்பதால் மத்தியகிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கொடுமைகளுக்கு ஆளாகி நாட்டையே விட்டு வெளியேறி  நாடற்றவர்களாக, எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தால் தவிக்கும் எம் திருஅவை கண்ணோக்கும். அவர்கள் எந்த பயம் இன்றி இவ்வுலகில் வாழவும் ஏற்றவேளையில் உதவுக் கூடிய அருளைக்கண்டையவும் அருள்புரியமாறு  இறைவா உம்மை மன்றாடுகிறோம்

Friday, October 9, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 11-10-2015

ஆண்டின் 28ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


1சாலமோன் ஞானம் 7:7-11
எபிரேயர் 4:12-13
மாற்கு 10:17-30

முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு.  இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். இன்றைய நற்செய்தி செல்வந்தரின் மனநிலைப் பற்றி  எடுத்துரைக்கிறது. சாலமோன் கடவுளிடம் தனக்கு ஞானத்தைக் கேட்டார். ஏனென்றால் ஞானம் கடவுள் தரும் கொடையாகும். ஞானம் கிடைத்துவிட்டால் அத்துடன் அனைத்து செல்வங்களும் சேர்ந்தே வந்துவிடும். இந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ள இறைவார்த்தையின் ஒளியில் நடப்பதே சாலச்சிறந்ததாகும்.
  
இன்று இயேசுவிடம் வந்த செல்வந்தன் கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய விரும்பினான். ஆனால் இயேசுவோ 'கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்துகின்றார். எனவே நிலைவாழ்வுக்கு செல்ல பற்றற்ற வாழ்வே தேவை என்பதை உணர்ந்து பரம்பொருளாம் இறைவனைப் பற்றிக் கொள்ளுவோம். பின்பு வந்து பாரும் என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து ஞானத்தைப் பெறுவோம். இலவசமாய் இறைவன் தரும்  நிறை வாழ்வைப் பரிசாகப் பெற்றுக்கொள்வோம். எனவே இவற்றை உணர்த்தும் இன்றைய திருப்பலியின் இறைவார்த்தைகளை மனதில் பதிவுச் செய்து இத்திருப்பலி கொண்டாடத்தில் பங்கேற்போம்..

வாசகமுன்னுரை:


பிறப்பிலும், வளர்ச்சியிலும் எல்லாரையும் போல ஒத்திருத்த சாலமோன், எல்லாரும் பெற்றிருக்கும் ஒன்றைவிட தான் சிறந்ததைப் பெற்றிருக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இறைவனிடம் ஞானத்தை வேண்டிப் பெறுகின்றார். தான் மன்றாடியதால் இறைவனின் ஞானத்தின் ஆவி தன்னிடம் பொழியப்பட்டது என்று சொல்லும் அவர் ஞானத்தின் மேன்மையை இன்றைய முதல்  வாசகப் பகுதியில் விவரிக்கின்றார். . அதிகாரத்தைவிட மேலானது செல்வத்தைவிட மேலானது உடல்நலத்தைவிட, அழகைவிட மேலானது ஞானம். அது வந்ததால் தன்னிடம் எல்லாம் வந்து சேர்ந்தன என ஞானத்திற்குப் புகழாரம் சூட்டுகின்றார் சாலமோன்.  இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியில்  இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு தந்த மீட்பை அந்த மீட்பிற்கு கொடுக்கும் பதிலும் எப்படி இருக்க வேண்டும் என எழுதுகிறார். இதன் பின்னணியில் கடவுளுடைய வார்த்தையின் இயல்பு என்ன என்பதைப் பதிவு செய்கின்றார். நல்லது எது, தீயது என முடிவு செய்பவர் நானோ, எனக்கு அடுத்திருப்பவரோ, நான் சார்ந்திருக்கும் மதம் அல்ல. மாறாக, என்னைப் படைத்தவரே. அவரின் முடிவை நான் எப்படி அறிந்துகொள்வது? அவரின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள் வழியாகவே என்ற இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 90: 12-13. 14-15. 16-17
பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்.

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;
அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13 ஆண்டவரே, திரும்பி வாரும்;
எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;
அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
15 எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச்செய்யும். -பல்லவி

16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.
17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!
நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!
ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி


மன்றாட்டுகள்:


திருச்சபைக்காக:

ஞானமென்னும் அருட்கொடைகளை சாலமோனுக்கு கொடுத்த எம் இறைவா!  எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள்  அனைவரும் கடவுளின் ஆசீர் பெற்றவர் என்பதை நாங்கள் உணர அல்லது பிறர்முன் துலங்க, நாங்கள் எங்கள் முழு ஆற்றலையும், திறன்களையும் பயன்படுத்த வேண்டிய வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம் குடும்பங்களுக்கா:

என்றும் எங்களை நிறைவாய் ஆசீர்வதிக்கும் எம் இறைவா! இன்று நாங்கள் ஞானம் என்ற உம் கொடையைப் பெற்று இயேசுகிறிஸ்துவை எம் நிலைவாழ்வாகப் பெற்றவும்,  நீ ஆசீர்வதிக்கப்படுவாய்! என்று தினமும் நம் கண்முன் கொண்டிருக்கும் இறைவார்த்தை, நாங்களும் மற்றவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று எங்களைத் தூண்டவும், இறைவார்த்தையால்
ஆசீர்பெற்ற வாழ்வை வாழவும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

நாட்டு தலைவர்களுக்காக:

உறவுடன் வாழ ஒவ்வொருவரையும் அழைக்கும் உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தங்களை அழைத்து தங்களுக்குப் பணி நியமனம் செய்த அரசின் நோக்கத்துக்க விசுவாசமாய் இருக்கும் விதத்தில் சிறந்த திட்டமிடுதலுடன் பாகுபாடின்றி பணியாற்றி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து நற்பெயர் ஈட்ட முயலவேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

சமுதாயத்திற்காக

அகமுவந்தழைக்கும் அன்புத்தந்தையே இறைவா! இயேசுகிறிஸ்துவிடம் புன்னகையோடு வந்தவர் அனைவரும் முகவாட்டத்தோடு செல்வதில்லை என்ற நிலையும், தன்னலமற்ற சேவையால் இம்மையிலும் மறுமையிலும் எல்லாச் செல்வங்களைப் பெற்றவர்களாய் வலம் வரும் வரம் வேண்டியும், இறையாட்சிப் பணிகளை ஏற்ற காலத்தில், ஏற்ற இடத்தில் ஏற்ற முறையில் ஆற்றவேண்டிய வரத்தையும் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்


Thursday, October 1, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 04-10-2015

ஆண்டின்27ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்திருப்பலி முன்னுரை:


இயேசுகிறிஸ்துவின் அருமையான சகோதர சகோதரிகளே! உங்கள்  அனைவரையும் ஆண்டின் 27ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ அன்புடன் அழைக்கின்றோம். திருமணம் என்னும் திருவருட்சாதனத்தைப்  பற்றி இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.  ஒரு ஆணும் பெண்ணும்  சேர்ந்த வாழ்வதைச் சமூகம் அங்கீகரிக்கும்போது திருமணம். அதே திருமணம்
திருச்சபை அங்கீகரிக்கும்போது அது திருவருட்சாதனம். குடும்பம் என்னும் குட்டித் திருச்சபை நலமாக இருந்தால் தான் உலகம் நன்றாக இருக்கும்.

கணவன் மனைவி இவர்களிடையே நிலவும் சமத்துவம் அன்பின் சின்னங்கள்.இறைமகன் இயேச அழகாக தெளிவாக வலியுறுத்துவதும் இதுவே. கடவுள் இணைத்தை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்ற வார்த்தை தான். எனவே நாம் திருமணத்தில்  நம் அழைப்பை ஏற்றுக்கொண்டு இறுதிவரை பிரமாணிக்கத்துடன்வாழவும், சம் குடும்பங்கள் 
திருக்குடும்பங்களாக திகழந்திட மாக அனைவரும் ஒருமனத்தவராய் திருப்பலியில் இணைந்திடுவோம்.

வாசக முன்னுரை:


முதல் வாசகத்தில்   கடவுள் முதல் படைப்பு நிகழ்வில் மனிதர்களை ஆணும், பெண்ணுமாக கடவுள் தன் சாயலில் படைக்கின்றார். இரண்டாம் நிகழ்வில் முதலில் ஆணும்(ஆதாமும்) இரண்டாவதாக பெண்ணும் (ஏவாளும்)
படைக்கப்படுகின்றனர். திருமண உறவு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடப்பது என்றும், இது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட உறவு என்றும், இந்த உறவில் இறைவனே சான்றாக இருக்கின்றார் என்றும், இந்த உறவினால் ஆண்-பெண்  உறவிலே பெரிய மாற்றம் இருக்கிறது என்றும் முன்வைக்கிறது தொடக்க நூல்.இதனை கவனமுடன் வாசிக்க கேட்போம்.

இரண்டாம் வாசகத்தில் 'கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார்.' ஆக, படைப்பு அனைத்தும் கடவுளுக்காக அவரின் திருவுளம் நிறைவேற்றுவதற்காகப் படைக்கப்பட்டது.  படைப்புப் பொருளான மனிதர் மற்றவர்கள்மேல் ஆட்சி செலுத்த அல்லது அடிமைப்படுத்த அவர்களுக்கு உரிமை இல்லை. 'துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார்.' துன்பம் என்பது மனித குலத்தின் குறை அல்லது பலவீனம் அல்ல.  இந்த உணர்வைத்தான் கடவுளின் மகனும் தன்மேல் சுமந்து கொண்டார். இந்த துன்பம் என்ற உணர்வைத்தான் இயேசு மீட்பு கொண்டுவரும் வழியாகப் பயன்படுத்திக் கொண்டார். இக்கருத்துக்களை புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தை வாசிக்க கேட்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 128: 1-2. 3. 4-5. 6

பல்லவி: உம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!

1.ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!  உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி
2.உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி
3.ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.  ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி
4.நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக! பல்லவி

விசுவாசிகள் மன்றாட்டு:


திருச்சபைக்காக:

எம் அன்பு தந்தையாம் இறைவா!  எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும்  அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப, திருஅவையை வழிநடத்தவும், திருச்சபை நிறுவன திருச்சபையாக அல்லாமல் பணி வாழ்வே திருச்சபையின் மையம் என்னும் மனநிலை திருச்சபையில் மலர இறைவா உமை மன்றாடுகிறோம்.

 எங்கள் சமூகத்திற்காக:

இன்றைய சமூகத்தில் காணப்படும் சாதி, மதம், இனம், மொழி வேறுப்பாடு, சுயநலம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் திருச்சபையில் மறைந்து,  பரந்த உண்மையான கிறிஸ்து இயேசுவின் மனநிலை எல்லோரிலும் மலர, ஏழைகளின் வாழ்வு மலர, திருச்சபையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி பல முன்னேற்ற பாதையில் மக்களை வழி நடத்த வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

 எங்கள் குடும்பங்களுக்காக:

அன்பு தந்தையே இறைவா!  இன்றைய நற்செய்தியின் மையமாய் அமைந்துள்ள குடும்ப வாழ்வும், வ்வாழ்விற்கு, மையமாய் விளங்கும் பெற்றோர்களை பேணி பாதுகாத்து,  மறந்தபோன இன்றைய மனிதவாழ்வு திருமணத்தின் புனிதத் தன்மையும் குடும்ப வாழ்வின் மையத்தையும் உணர்ந்தவர்களாக, தொடக்கக்கால கிறிஸ்தவர்களிடத்தில் இருந்த ஒன்றிப்பும் வார்த்தை வழிபாடும், இன்று நம் அனைவரிலும் புதுப்பிக்க தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று  உமை மன்றாடுகிறோம்.


துன்பபடுவோருக்காக:

எங்கள் அன்பு தந்தையே இறைவா! உலகில் நடைபெறும் பயங்கரவாதம் இனவாதம், பருவநிலைமாற்றங்கள், அதனால் ஏற்படும் இயற்கை அழிவுகள் இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் தவறுகள் இவை அனைத்தும் உமது  இறை இரக்கத்தினால் மாற்றம் பெற்று, படைப்பின் மேன்மையை மனிதன் உணர்ந்து மனித வாழ்வு மேம்பட  உமது அருளை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப் பாடி கொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

Thursday, September 24, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 27-09-2015

ஆண்டின் 26ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எண்ணிக்கை 11:25-29
யாக்கோபு 5:1-6
மாற்கு 9:38-48

முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு.  இந்த ஞாயிறு இறை வழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். இன்றைய நற்செய்தி மனிதனின் பொறமையை பற்றி  எடுத்துரைக்கிறது. மோசேயின் கூட்டத்தில் இல்லாமல் கூடாரத்தில் இருந்த இருவர் இறைவாக்கு உரைக்கின்றார்கள். மோசே
தடுக்கவில்லை. அது அவரின் தாராள குணத்தைக் காட்டுகிறது. திருத்தூதர் யாக்கோபு செல்வத்தின் நிலையாமையைப் பற்றி தன் மடலில் விவரிக்கிறார். நாம் நலிந்தவர்களுக்கு எதிராக செயல்படும்போது இறைவனுக்கு எதிராய் நாம் செயல்படுகிறோம். அநீதியாக செல்வம் சேர்க்கும் முயற்சியை எதிர்க்கிறார்.


இன்று இயேசு மூன்று செய்திகளை முன்வைக்கிறார். பொறமையால் எழுந்த குற்றச்சாட்டு, மக்களுக்குக்  கிடைக்கும் கைம்மாறு, இடறலாயிருந்தால் கிடைக்கும் தண்டனை. நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தால்கூட அதற்கு கைம்மாறு உண்டு. தீமை செய்யத் தூண்டுவதும் மாபெரும் தண்டனைக்குரியது. இவற்றை உணர்த்தும் இன்றைய திருப்பலியின் இறைவார்த்தைகளின் பொருள் உணர்ந்து இத்திருப்பலி கொண்டாடத்தில் பரந்த மனப்பான்மையுடன் பங்கேற்போம்..

வாசகமுன்னுரை:


முதல் வாசகத்தில் எண்ணிக்கை நூலில் ஆண்டவரின் ஆவி எழுபது மூப்பர்கள் மேல்  இறங்கி வந்த நேரத்தில், இவர்களின் கூடாராங்களில் தங்கியிருந்த வேறு இருவர் மேலும் - எல்தாது, மேதாது - தூய ஆவி இறங்கி வருகின்றது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத யோசுவா, மோசேயிடம் அதைப்பற்றி புகார் தருகின்றார். ஆனால், மோசே பொறாமையினால் யோசுவா கூறியதற்கு அவரை கடிந்து கொள்கின்றார். அனைவரும் இறைவாக்கினராகும்படி ஆண்டவர் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு என்னும் இவ்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.


 யாக்கோபின் திருச்சபையில் எளியோர்-பணக்காரர் பிளவு அல்லது ஏற்றத்தாழ்வு அதிகமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவரின் திருமடல் இந்த பிரச்சினையை அதிகமாகப் பிரதிபலிக்கின்றது. கூடிவரும் சபைகளில் பணக்காரார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனவும், எளியோர் ஒதுக்கி தள்ளப்படுகின்றனர் என்றும் சொல்லும் யாக்கோபு இன்றைய இரண்டாம் வாசகத்தில் செல்வத்தின் நிலையாமை பற்றிப் பேசுகின்றார்.  இவ்வாசகத்தின் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்

திபா 19: 7,9. 11-12. 13

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விக்கின்றன.

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;  எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;  அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி

அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன். அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு.  தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். -பல்லவி

ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். –பல்லவி

மன்றாட்டுகள்:


திருச்சபைக்காக:

அருட்கொடைகளை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கும் இறைவா!  எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள்  அனைவரும் பரந்த மனப்பான்மையுடன் அடுத்தவர்கள் நம்மைச் சாராதவர் என்று பார்ப்பதை விடுத்து அவர் நம் சார்பாக இருக்கிறார் என்ற நிலையை உணர்ந்து  நல்லதைச் சொல்லவும், செய்யவும் வேண்டிய பரந்தமனப்பான்மை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம் குடும்பங்களுக்கா:

எங்கும் நீங்காமல் நிறைந்திருக்கும் இறைவா! இன்று நாங்கள் காணும் நிதி நெருக்கடி, பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணங்களைப் பார்த்தால், இன்று எமக்கு உடனடி தேவையாக இருப்பது எம் ஆற்றல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முன்வருவதுதான். அப்படிப் பகிர்ந்து கொள்வது எம் ஆற்றலை அதிகரிக்கின்றது என்பதை உணர்ந்து செயல்பட  தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

நாட்டு தலைவர்களுக்காக:

ஆள் பார்த்துச் செயல்படாத அன்பிறைவா!  இயேசுவைச் சார்ந்த சீடர்கள் ஒரு கிண்ணம் தண்ணீருக்குக் கூட மற்றவர்களைச் சார்ந்து நிற்க அழைக்கப்  படுகின்றனர். தங்களின்  பசி மற்றும் தாகம் தீர்க்க மற்றவர்களின் உடனிருப்பு அவர்களுக்கு அதிகம் தேவை. இன்று நான் என்னை மட்டுமே சார்ந்து நிற்கும் முயற்சியில் இருக்கின்ற எம் தலைவர்கள் அடுத்திருப்பவரின்
நலன்களில் கவனம் செலுத்த, அவர்கள் மனம் மாற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
..

சமுதாயத்திற்காக

நன்மைக்கு நாயகனே இறைவா! நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருக்கும்போது, அந்தக் குறையைப் பெரிதாக்கி நம்மையே நாம் தாழ்வாக மதிப்பிடும் பொறாமை என்னும் குணம் மறைந்து பொருள், குணம், செயல், பண்பு, கொடை, நட்பு - இவை எமக்குக் கிடைக்காமல் மற்றவருக்குக் கிடைக்கும்போது, அல்லது எமக்குக் கிடைத்தாலும், மற்றவருக்கும் கிடைக்கும்போது எம்மில் எழுகின்ற பொறாமை எம்மிடமிருந்து ஒழிந்து ஒரு நல்ல குணமாகிய சகிப்புத்தன்மை எம்மில் வளர இறைவா எம்மை மன்றாடுகிறோம். பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப் பாடி கொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...
 

Wednesday, September 16, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 20-09-2015ஆண்டின் 25ஆம் ஞாயிறு

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை இறைமகன் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட நாம் அனைவரும் பிறப்பால் நல்லவர்கள்தாம். ஆனால், காலப்போக்கில் நம் செயல்களால் இந்த கடவுளின் பிள்ளை என்ற நிலையில் இருந்து, கடவுளை அறிந்து கொள்ளும் நிலையிலிருந்து, கடவுளிடமிருந்து உதவிபெறும் நிலையிலிருந்து நாம் தள்ளிச்செல்லும் அபாயம் ஒட்டிக்கொண்டே இருக்கின்றது. ஆக, நல்லவராக அல்லது நீதிமானாக இருப்பது என்பது ஒரு வாழ்க்கைப் பயணம். இன்று அல்லது இப்போது என நிகழும் ஒருபொழுது நிகழ்வு அன்று. இந்த நிலையைத் தக்க வைக்க நமக்கு நிறைய விடாமுயற்சியும், கடின உழைப்பும், சோர்வற்ற நிலையும் தேவை.என் கைகளோ சிறியது. ஆனால் அவர் கரங்களோ பெரியது. எனவே நாம் எடுத்தால் குறைவாக வரும். அவராகக் கொடுத்தால் நம் கைகளில் நிறைய விழும்! என்று எதிர்நோக்கோடு காத்திருப்பதில் குழந்தையுள்ளம் மட்டுமல்ல, நன்மை தேடும் உள்ளமும், சிற்றின்ப நாட்டங்களைத் தள்ளிப்போடும் உள்ளமும் இருக்கின்றது. இந்த உள்ளம் உங்களிலும் இருக்கிறது! என்னிலும் இருக்கிறது! இதை நாம் உணர்ந்து கொள்ள இறைவன் நம் அகக்கண்களுக்கு ஒளிதருவாராக! என்ற எதிர்பார்ப்புடன்  இத்திருப்பலி கொண்டாடத்தில் திறந்த உள்ளத்துடன் பங்கேற்போம்..

வாசகமுன்னுரை:


இன்றைய முதல்வாசகத்தில் நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடக்கும் போரட்டம் இயேசுவின் வாழ்வில் மட்டுமல்ல, நம் வாழ்விலும் நடக்கலாம். நாமும் மற்றவர்களின் கைகளில் ஒப்புவிக்கப்படலாம். நாமும் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். நாமும் நிராகரிக்கப்படலாம். நம்மையும் மானிடர்கள் வெறுத்து ஒதுக்கலாம். இந்த நேரங்களில் நம் மனநிலை என்னவாக இருக்க வேண்டும்?   கடலளவு கிடைத்தாலும் மகிழ்ந்துவிடாமல், அல்லது கையளவே கிடைத்தாலும் வாடிவிடாமல்  இருப்பதே மேன்மை. இந்த மனநிலை நமக்கும் இருந்தால் எத்துணை நலம்! இவற்றையே எடுத்துரைக்கின்ற இவ்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு  தங்கள் கொள்கையில் தெளிவாகவும், உறுதியாகவும் இருப்பவர்கள் மட்டுமே நாட்டங்களைத் தள்ளிப்போட முடியும். மற்றவர்கள் வெறும் காற்றில் அடித்துச் செல்லப்படும் காகிதம் போலத்தான். பறந்து கொண்டே இருப்பார்கள். ஆனால், எங்கே போகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால், நாட்டங்களைத் தள்ளிப்போடுபவர்கள் கற்பாறை போன்றவர்கள். அவர்கள் என்றும் உறுதியாக நிலைத்து நிற்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் அமைதியும், பாதுகாப்பும் இருக்கும் என்று உறுதியாக எடுத்துரைக்கிறார்.  இவ்வாசகத்தின்  கவனமுடன் செவிமெடுப்போம்.

 

பதிலுரைப் பாடல்

திபா 54: 1-2. 3. 4,6 (பல்லவி: 4b)
பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்.
 கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்;
உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்;  என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். -பல்லவி
ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்;  அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. -பல்லவி
இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;  தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. –பல்லவி

                                     

மன்றாட்டுகள்


திருச்சபைக்காக:


ஆசிகள் வழங்கும் ஆற்றலின் ஊற்றே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் பணிவிடை பெறுவதைவிட பணி புரிவதே மேல் என்பதனை உணர்ந்து தன்னலமற்றவர்களாய் உம் மக்களுக்காய் உழைத்திட , கடவுளின் பிள்ளைகளாக வாழ வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


நம் குடும்பங்களுக்கா:


அல்லனவற்றை அழித்து நல்லன செய்யும் இறைவா!

நேர்மையானவாழ்வு வாழவும்,  ஆணவபோக்கை விட்டு விட்டு குழந்தை உள்ளம் கொண்டவராய் வாழவும் அதனால் ஏற்படும் தற்காலிகமான தோல்வியை வென்று நிரந்திரமான வெற்றிப் பெற்றிட உழைப்பையும் உறுதியையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..நாட்டு தலைவர்களுக்காக:


முன்னேற்றப் பாதையில் வழிநடத்தும் மூவொரு இறைவா!

பேராசையும் பொறாமையுமே சண்டை சச்சரவுக்கக் காரணம் என்பதை உணர்ந்து எம் நாட்டுத் தலைவர்கள் தீயசக்திகளின் வெளிபாடான பேராசையையும் பொறாமையையும் முற்றிலும் அவர்கள் உள்ளத்திலிருந்து நீக்கி எம் மக்கள் நலம் வாழ அவர்கள் உழைத்திட வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..இளையோருக்காக :


வாழ்வை வெற்றியாக்கும் விண்ணகத் தந்தையே!

மனிதருடைய வழியோ சுயநலத்தின் வழி. ஆனால் கடவுளின் வழியோ பொறுமையின் வழி, தாழ்ச்சியின் வழி என்பதை அறிந்து அடுத்தவன் வாழ்ந்தால் தானும் வாழ முடியும் என்ற நல்லெண்ணத்தை எம் இளையோரின் உள்ளத்தில் பதிவு செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப் பாடி கொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...