பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு 18.10.20263
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
எசாயா 45:1,4-6தெசலோனிக்கர் 1: 1-5அ
மத்தேயு 22:15-21
திருப்பலி முன்னுரை
பாசத்திற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 29-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் ஞானம் மிகுந்த ஒரு பதிலைக் கேட்கிறோம். "சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்ற வார்த்தை வழியாக, குடிமக்களாக நமது கடமையையும், விசுவாசிகளாக இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமையையும் இயேசு சமப்படுத்துகிறார். ஒரு நாணயத்தில் ஆட்சியாளரின் உருவம் இருப்பது போல, மனிதர்களாகிய நமக்குள் இறைவனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் முழுமையாக இறைவனுக்கே சொந்தமானவர்கள்.
முதல் வாசகத்தில், பிற இனத்து மன்னரான சைரசைக் கடவுள் தமது கருவியாகப் பயன்படுத்துவதை வாசிக்கிறோம். இரண்டாம் வாசகத்தில், தெசலோனிக்க விசுவாசிகளின் விசுவாசத்தையும் உழைப்பையும் புனித பவுல் பாராட்டுகிறார். இன்று உலக மறைப்பணி ஞாயிறு கொண்டாடப்படும் வேளையில், நற்செய்தி அறிவிக்கும் பணி நம் ஒவ்வொருவருக்கும் உரியது என்பதை உணர்வோம். நாம் இறைவனுக்குப் படைக்க வேண்டிய நற்செயல் என்னும் காணிக்கையை அவருக்குத் தர வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ரயேலரை மீட்க, பாரசீக மன்னர் சைரசைத் தேர்ந்தெடுக்கிறார். சைரசு இறைவனை அறியாதவராக இருந்தாலும், கடவுள் அவரைத் தமது கருவியாகப் பயன்படுத்துகிறார். "நானே ஆண்டவர்; என்னைத் தவிர வேறு எவரும் இல்லை" என்று உலகெங்கும் பறைசாற்றப்படும் இவ்வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி: மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.பதிலுரைப்பாடல். திபா. 96: 1, 3-5, 7-10
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள். அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி
ஏனெனில், ஆண்டவர் மாட்சி மிக்கவர். பெரிதும் போற்றத் தக்கவர். தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே. மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே. ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். பல்லவி
மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். பல்லவி
தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். வேற்றினத்தாரிடையே கூறுங்கள். ஆண்டவரே ஆட்சி செய்கின்றார். அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
புனித பவுல் அடியார் தெசலோனிக்க திருச்சபையினருக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார். அவர்களின் விசுவாசத்தினால் விளைந்த செயல், அன்பினால் மிகுந்த உழைப்பு மற்றும் எதிர்பார்ப்பினால் வந்த உறுதி ஆகியவற்றை அவர் பாராட்டும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள் அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. ஆண்டவரால் திருப்பொழிவு செய்ய்யப்பட்டு, தேர்ந்து கொள்ளப்பட்டவர்களாக விளங்குகிற எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், அருள் பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும் தங்களது மேய்ப்புப்பணியை சிறப்பாகச் செய்திடவும், ஒரே மந்தையின் மக்களாகிய இறைமக்கள் ஆகிய நாங்கள் அனைவரும், ஆயனின் பின்செல்லுகிற நல்ல ஆடுகளாய் விளங்கிடவும் அருள்தர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசைவரை நீரே மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் என அறிக்கையிடும் நாங்கள் உலக அமைதிக்காகவும், நாட்டு நலனுக்காகவும், எம்மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் மன்றாடுகிறோம். தலைவர்களும், குடிமக்களாகிய நாங்களும் பொறுப்புடன் செயல்பட்டு வளர்ச்சி காண வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. தூய பவுலடியாரால் போற்றப்பட்ட தெசலோனிக்கரிடமிருந்த செயலில் வெளிப்பட்ட நம்பிக்கை, அன்பினால் உந்தப்பட்ட உழைப்பு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் பெறுகிற மனவுறுதி ஆகியவற்றின் மூலம் இறைவனின் உயிருள்ள சாட்சிகளாகக் கிறிஸ்தவர்கள் யாவரும் திகழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுக்க வேண்டியதின் அவசியத்தை நற்செய்தியின் மூலம் அறிந்தவர்களாகிய நாங்கள் அனைவரும், எங்கள் குழந்தைகளையும், இளையோரையும், நாட்டுக்கேற்ற நல்ல மனிதர்களாகவும், இறைவனுக்குகந்த நல்ல பிள்ளைகளாகவும் வளர்த்தெடுக்கும் அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், அனைத்து நலன்களும் பெற்றிடவும், உடல் உள்ள ஆன்மீக நலத்துடன் வாழவும், வாழ்வின் எல்லாச் சூழலையும் எதிர்கொள்வதற்குத் தேவையான துணிவு பெறவும், குடும்பங்கள் அனைத்தும் அமைதியில் மகிழ வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.






