Tuesday, November 28, 2023

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு - 10-12-2023


திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு - 10-12-2023

இன்றைய வாசகங்கள்:

எசாயா 40:1-5; 9-11
2 பேதுரு 3:8-14
மாற்கு  1:1-8

திருப்பலி முன்னுரை:

இறைஇயேசுவின் நாமத்தில் இனிய வாழ்த்துக்கள்.
இன்றைய திருப்பலியில் மனம்மாற்றம் பெற்று நற்செய்தியாக மாறி வாழ்ந்திட வந்துள்ள இறைமக்களே உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று, மாற்கு நற்செய்தியின் தொடக்கம், நமது வழிபாட்டின் மையக்கருத்தாகத் தரப்பட்டுள்ளது. “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்” (மாற்கு 1:1) என்று இந்த நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள அறிமுக வார்த்தைகள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன.

இயேசு வாழ்ந்தக் காலத்திலும், பாலஸ்தீனம் உரோமைய ஆக்கிரமிப்பில் நொறுங்கிவந்த காலம். ஒவ்வொரு நாளும் அங்கு நிகழ்ந்த அக்கிரமங்களைக் கண்ட இயேசு, அச்செய்திகளின் பாரத்தால் நசுங்கிப்போகாமல், அச்செய்திகளுக்கு மாற்றாக, நம்பிக்கைத் தரும் செய்திகளை, தன் சொல்லாலும், செயலாலும் உருவாக்கினார் இயேசு.

நல்ல செய்திகளே நிரந்தரமானவை, ஏனைய மோசமான செய்திகள் நிரந்தரமற்றவை என்பதை மக்கள் மனதில் ஆழப்பதிக்க, தன் உயிரையே பணயம் வைத்து உழைத்தார். இறுதியில், தன் உயிரைப் பலியாகத் தந்து, இறந்து, உயிர்த்ததால், நல்ல செய்தி என்றும் வாழும் என்ற நம்பிக்கையைத் தந்தார் இயேசு.

கிறிஸ்தவ மறையின் ஆணிவேராக விளங்கும் இயேசுவையும், அவர் வாழ்வையும் ஒரு 'நற்செய்தி'யாக நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துள்ளோமா? அந்த நற்செய்தியாக நாம் வாழ முற்படுகிறோமா? மனமாற்றம் அடைவோம். விடைகள் தேடுவோம்! .... பயன்கள் பெறுவோம்! அமைதியின் இளவரசர் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தத் திருவருகைக் காலத்தில், அமைதியின் தூதர்களாக நாம் ஆண்டவரின் வழியை ஆயத்தப்படுத்தி மனந்திரும்பி தூயவாழ்வு வாழ வரமருள இத்திருப்பலியில் மனமுறுக வேண்டுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

பாபிலோனிய அடிமைத்தளத்தில் இஸ்ரயேல் மக்கள் உட்பட்டிருந்தபோது இறைவாக்கினர் எசாயா அவர்களுக்குப் புதிய நம்பிக்கையூட்டிப் பேசுவதை முதல் வாசகம் காட்டுகிறது. “பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும். மலை குன்றுகள் தாழ்த்தப்படும்” என்ற கூறுகிறார். இங்கே பள்ளத்தாக்குகள் என்பது ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களையும், குன்றுகள் என்பது ஆணவம் மற்றும் மமதையின் மக்களையும் குறிக்கிறது. மக்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்களுக்கு ஆறுதலை வாக்களிக்கின்றார் இறைவன். தன்மக்களை எவ்வாறு பேரன்புடன் நடத்திச் செல்வார் என்பதை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனத்துடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பைக் காட்டி எங்களை மீட்டருளும்.
திருப்பாடல்: திபா. 85: 8ab-9. 10-11. 12-13

1. ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்: தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்: அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி: நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

2. பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்: நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்: விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

3. நல்லதையே ஆண்டவர் அருள்வார்: நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்: அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு “ஆண்டவர் நமக்காய்க் காத்துக்கொண்டிருக்கிறார். நம் மனமாற்றத்தை எதிர் நோக்கிப் பொறுமையோடிருக்கிறார். அவரின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொடிருக்கும் நாம், அந்த நாளுக்காக நம்மைத் தயாரிப்பதற்கு நாம் புனிதம் உடையவர்களாக வாழ வேண்டும். இறைவனின் நாள் தாமதமின்றி உதயமாகும்” என்று நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார். அவரது அழைப்பை ஏற்று மனமாற இந்த வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்." அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. மனமாற்றத்தை இன்று என்றுரைத்த எம் இறைவா! உறவுகளாலும் தவறுகளாலும் உடைந்துக் கிடக்கும் இத்திருஅவை உமது மறைநூல் தரும் அறிவுரைகளால் நம்பிக்கைப் பெற்று மனமாற்றம் பெற்று ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு, ஒன்றித்துச் சாட்சியவாழ்வு வாழ வேண்டிய அருளை உம் திருஅவைக்குப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கருணைக் கடலாகிய எம் இறைவா! எசாயா மூலம் எங்களுக்கு நீர் உரைத்தது போல் எங்கள் குடும்பங்களிலும் அகமகிழ்ந்து, லீலிமலர் போலப் பூத்துக்குலுங்க, உம்மைப் போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் போன்ற நற்செயல்களால் உறவுகள் மேன்படவும், பலப்படவும் அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வர வேண்டும் என்ற இறைவா! நாங்கள் நீர் கொடுத்த தூய்மை என்னும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி,  உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப் புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எதிர்பார்ப்பின் நம்பிக்கையான எம் இறைவா! இத்திருவருகைக்காலத்தில் எங்கள் இளைய சமுதாயம் உம்மைப் போல் தமக்கு அடுத்திருப்போரை ஏற்று அவர்கள் வாழ்வு மேன்படவும், அறிவுப்பூர்வமான உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து அதன் மூலம் தங்கள் கரடுமுரடான, கோணலான வாழ்க்கை முறையை மாற்றிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

5. எம்மை வழிநடத்தும் அன்பு தந்தையே எம்இறைவா! பெரும் மழையால் பாதிக்கட எம்மக்களை கண்ணோக்கும். விரைவில் எல்லாத் துன்பங்களிலிருந்து விடுதலைப் பெற்று தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பத் தேவையான அனைத்து வசதிகளைப் பெற்றிட அருள் புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Saturday, November 25, 2023

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு 03-12-2023

புதிய திருவழிப்பாட்டு ஆண்டின் முதல் ஞாயிறு
திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு 03-12-2023



இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 63: 16-17, 64: 1,3-8
1 கொரிந்தியர் 1: 3-9
மாற்கு 13: 33-37

திருப்பலி  முன்னுரை

அன்புடையீர்,
தாய் திருச்சபை புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பித்துள்ள இவ்வேளையில் இத்திருப்பலிப் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
இன்று தாய் திருச்சபை புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்கிறது. நமது இறைவனைக் குழந்தை வடிவில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று உலகின் முடிவில் இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது. விழிப்பாயிருங்கள், பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள் என்பவை இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பு.
நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. எப்போது இந்த முடிவு வரும் என்பது நிச்சயமற்ற ஒன்று. நம் முடிவு எப்போது வரும் என்பதில் நாம் நேரம், சக்தி இவைகளைச் செலவிடாமல், நம் முடிவு எப்படி இருக்கப்போகிறது, அல்லது எப்படி இருக்க வேண்டும்  என்று சிந்தித்தால் பயன் உண்டு. எதிர்பாராத நேரத்தில் வரும் இந்த முடிவைச் சந்திக்க, அந்த முடிவு நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க நாம் எப்படி நம்மையே தயாரித்து வருகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க இன்றைய நற்செய்தி நம்மைச் சிறப்பாக அழைக்கிறது.
உலகத்தின் முடிவு, நம் வாழ்வின் முடிவு, அந்த முடிவில் இறைவனைச் சந்திக்கும் வாய்ப்பு இவைகளை நாம் எவ்வகையில் பார்க்கிறோம் என்பதை ஆய்வு செய்வோம். தாயின், அல்லது, தந்தையின் அன்பு அணைப்பிற்குள் அமைதி காணும் குழந்தையைப் போல் வாழ்வின் இறுதியில் நாம் சந்திக்கும் நிரந்தர அமைதி அமைய வேண்டும் என்று இன்றைய திருப்பலியில் சிறப்பாக வேண்டிக் கொள்வோம்.

எதிர்நோக்கு

வாசகமுன்னுரை

 முதல் வாசக முன்னுரை

இன்றைய வாசகம் கடவுள் நமது தந்தையென நினைவுபடுத்துகிறது. ஏனெனில் இஸ்ரயேல் மக்கள் தங்களின் உயிருள்ள கடவுளை மறந்து வாழ்ந்தபோது அவர்கள் தீட்டுப்பட்டவரைப் போலவும், அவர்களின் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோலவும் இருந்தது. எனினும் கடவுளிடம் மன்னிப்பு வேண்டி “ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. “ என்று பாவம் புரிந்த மக்கள் மன்றாடுவதை எடுத்துரைக்கம் எசாயாவின் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.

 பதிலுரைப்பாடல்
திபா 80: 1,2. 14-15. 17-18
பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.

இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!  உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! -பல்லவி
படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!  உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! -பல்லவி
உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கைக்காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! இனி நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இரண்டாவது வாசகம், கடவுள் நமக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும், நன்றி கூறுகிறது. இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். எல்லா வகையிலும் நாம் செல்வந்தர்களாய் இருக்கிறோம். இறுதி நாளில் நாம் அனைவரும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் நம்மை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர் என்று உறுதிப்படுத்தும் திருத்தூதர் பவுல் அடியாரின் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

 


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1.வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா! திருச்சபை இன்று தொடங்கும் திருவழிபாட்டு ஆண்டில் எம்திருத்தந்தைத் தொடங்கிப் பொதுநிலையினர் வரை அனைவரும் வரும் நாட்களில் எதிர்நோக்கியிருக்கும் வருகையின்போது இறைவன் திருமுன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு எங்களை நாங்கள் தயாரித்துக் கொள்ள இந்தத் திருவருகைக் காலத்தைச் சரியாக முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டிய ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்...

2 அன்பு இறைவா! வரும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீகத் தயாரிப்புகளில் எங்களைப் புதுப்பித்துக் கொண்டு உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்...

3.காலத்தில் அறிகுறிகளை அறிந்த எம் இறைவா மனிதனை இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்தையும் நீ ஆண்டுக் கொள்வாயாக என்ற கூறி படைப்பின் மேன்மையை உணர்த்தினீர். ஆனால் இன்று நாங்கள் இயற்கைக்கு எதிராகச் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து இயற்கையை நாங்கள் நேசிக்கவும், பாதுகாக்கவும் இன்றைய தலைமுறையினருக்கு நல்ல தேசத்தைக் கொடுக்கவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்...

4. நல்லாயனே எம் இறைவா! இந்தத் திருவருகைக் காலம் , எமக்குச் சரியான சந்தர்ப்பம், அவரை ஒவ்வொரு நொடிப்பொழுதும் எதிர்கொண்டு, அவர் பிறந்த நாளைக் கொண்டாட எம்மைத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், நாங்கள் விழிப்புணர்வுடன் இருந்து எதிர் கொள்ள வேண்டிய அருளைப். பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்...

5. உன்னைப் படைத்தவரை உன் வாலிப நட்களில் நினை என்று சொன்ன எம் இறைவா!  இளைறோர் தங்கள் வாழ்வில் நல்ல சிந்தனைகளையும், நற்செயல்களிலும், விசுவாச வாழ்வில் நிலைத்து நின்று கிறிஸ்துவின் மதிப்பீடுகளைத் தங்கள் வாழ்வில் எந்நாளும் சான்றுபகர தேவையான அருளைப்  பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, November 20, 2023

பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு 26/11/2023

  பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு 26/11/2023

 திருவழிப்பாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு
கிறிஸ்து அரசர் பெருவிழா

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசேக்கியேல் 34: 11-12,15-17
1 தெசலோனிக்கர் 15: 20-26,28
மத்தேயு 25: 31-46

 திருப்பலி  முன்னுரை

அன்புடையீர்,
மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அதன் விளைவாக, அம்மக்களின் மனம் எனும் அரியணையில் அமரும் இயேசு என்ற மன்னரைக் கொண்டாடவே இந்தக் கிறிஸ்து அரசர் திருநாள். இத்திருப்பலிப் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறோம்.
இயேசுவும் ஓர் அரசர். அவர் நிறுவிய அரசுக்கு நிலபரப்புக் கிடையாது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, இதைப் பாதுகாக்கக் கோட்டை, கொத்தளங்கள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை, உயிர்பலி தேவையில்லை...எதுவுமே தேவையில்லை. ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு எதுவுமே தேவையில்லை.
இறைவன் ஒருவரே தேவை, வேறெதுவுமே தேவையில்லை, என்று சொல்லக்கூடிய மனங்கள் மட்டுமே இந்த அரசுக்குச் சொந்தமான நிலம். அத்தகைய மனங்களில் தந்தையை அரியணை ஏற்றுவதுதான் இயேசுவின் முக்கியப் பணி.
இந்த அரசருக்கு முன் நிற்க, முக்கியமாக அவரது வலது ப் பக்கம் நிற்க நாம் தகுதியுள்ளவர்களாய் இருக்கிறோமா? இந்த அரசனால் ஆசீர்பெறப் போகிறோமா? அல்லது விரட்டி அடிக்கப்படுவோமா?
தேவைகளுள்ள மக்களில் இந்த அரசனின் உருவைக் கண்டு, உதவிக்கரம் நீட்டியிருந்தால், வலது பக்கம் நிற்கும் வாய்ப்பு பெறுவோம். கிறிஸ்து அரசர் வழங்கும் ஆசீரைப் பெற்றுக்கொள்ள இப்பெருவிழாவில் இறைவனை மனதுருக மன்றாடுவோம். .

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய வாசகத்தில் இறைவன் தன்னே ஓர் ஆயனாக உருவகப்படுத்திக் கொண்டு, அந்த ஆயன் எவ்வாறு தன் மந்தையைப் பாதுகாத்துப் பேணிவளர்ப்பார்?, அவற்றை எவ்வாறு இளைப்பாறுவார்?ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக்கிடாய்க்கும், வெள்ளாட்டுக்கிடாய்களுக்கும் இடையேயும் எவ்வாறு நீதியை வழங்குவார்? என்பதை எசேக்கியேல் மூலம் எடுத்துரைக்கும் இன்றைய வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி : ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
திருப்பாடல் 23: 1-2. 3. 5. 6
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.  பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். பல்லவி
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். பல்லவி
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசு உயிருடன் எழுப்பப்பட்டது போல நாமும் எழுப்படுவோம் என்றும், ஆதாமினால் வந்த சாவு கிறிஸ்துவின் மூலம் அழிக்கப்பட்டது என்றும், இயேசு அனைத்துப் பகைவரையும் அடிபணிய வைத்து விட்டுக் கடவுளுக்கு அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார் என்பதை எடுத்துக்கூறும் பவுல் அடியாரின் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! . அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. உலகைப் படைத்தாளும் இறைவா! உம் திருஅவையில் உள்ள அனைவரும் இயேசு கிறிஸ்துவை தம் இதய அரசராக ஏற்று அவரின் இறையரசு இவ்வுலகின் எத்திசையிலும் பறைசாற்றவும், உலகமக்கள் அனைவரையும் அவரின் அரசில் இணைத்திட ஒரு மனதினராய் உழைக்கத் தேவையான வரங்களைப் பொழிந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2 அனைவருக்கும் வாழ்வளிக்கும் இறைவா! இன்று உலகில் நிகழும் சுயநலம், ஆணவம், அகந்தை, செருக்கு, வன்முறை இவைகள் ஒழிந்து, உம் இறையரசின் மதிப்பீடுகளை, தம் சொல்லாலும், செயல்களாலும், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் போதிப்பவர்களாக மட்டும் இருந்துவிடாமல் செயல்படுத்தும் கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று கிறிஸ்து அரசர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் இறைவா! புனிதர்கள் மற்றும் மரித்த ஆன்மாக்களை நினைவுகூறும் இந்நாள்களில் எம் இளைய தலைமுறையினர் இறையரசின் விழுமியங்களைத் தங்களுக்குள் பெற்று இச்சமுதாயத்திற்குப் புனிதர்களைப் போல் முன்மாதிரியான நல்வாழ்வு வாழ்ந்திடவும், தன்னலமற்ற சேவையால் உமது இரக்கத்தைக் காட்டும் நல் உள்ளங்கள் உடையவராக மாறிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நல்ஆயனே எம் இறைவா! எம்சிறுவர்கள்,  இளையோர் இவ்வுலக வாழ்வின் நவீன அறிவியல் வளர்ச்சியின் மாயைகளில் சிக்கி சிதறுண்டு தவிக்கும் இவ்வேளையில், உம் இறைவார்த்தை அவர்களுக்கு உறுதுணை என்பதை அறியும் வரத்தையும் இறைஅச்சத்தையும் அருள வேண்டுமென்று கிறிஸ்து அரசர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.                 

5. அன்பே உருவான எம் இறைவா! இயற்கைப் பேரிடராலும், பொருளாதார மாற்றங்களால் அவதிபடும் மக்களுக்கு நலமும் வளமும் நிறைவான வாழ்வும் கிடைத்திடவும், ஆள்வோரின் கரிசனையும், பாதுகாப்பும் பெற்றடவும், சிரம்மின்றிப் பொருளாதார ஏற்றம் பெற்றட, விவசாயிகள் தங்களின் உழைப்பின் பலன்களை முழுமையாகப் பெற்றிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF



Sunday, November 12, 2023

பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு 19/11/2023

 பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு 19/11/2023

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

நிதிமொழிகள் 31: 10-13,41-43,.45,54-57
1 தெசலோனிக்கர் 5: 1-6
மத்தேயு 25: 14-30

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பொதுக்காலத்தின் 33ஆம் ஞாயிறுத் திருப்பலிப் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறோம்.

குறைகள், நிறைகள் இரண்டும் ஒவ்வொரு மனிதருக்கும் தரப்பட்டுள்ள கொடைகள். குறைகள்...கொடைகளா? என்ற கேள்வி எழலாம். ஆம், குறைகளும் கொடைகள்தாம். குறைகளையும் நிறைகளாக மாற்றும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. நமக்குள்ள குறையைப் பெரிதுபடுத்தி, நம்மிடம் உள்ள மற்றக் கொடைகளையும் பயன்படுத்தாமல் புதைத்து விடுகிறோமா என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புகிறது இன்றைய நற்செய்தி. நமக்குத் தரப்பட்டுள்ள கொடைகள் அனைத்திற்கும் நாம் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று இன்றைய நற்செய்தி நமக்கு இடித்துரைக்கிறது.

ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் நாம் மேற்கொள்ளும் ஒரு முயற்சி கணக்கு வழக்குகளை முடித்து ஒப்படைப்பது. வழிபாட்டு ஆண்டின் இறுதியில் இருக்கும் நாம் கணக்கு வழக்குகளை முடித்து, கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை நினைவுறுத்த இன்றைய நற்செய்தியில் தாலந்து உவமை நமக்குத் தரப்பட்டுள்ளது. கணக்கு-வழக்கு என்பது நாம் பயன்படுத்தும் ஒரு பொதுவான சொற்றொடர். நமது வரவுச் செலவு கணக்குச் சரியாக இருந்தால், அங்கு வழக்குத் தேவையில்லை. எப்போது கணக்குச் சரிவர அமையாமல் இருக்கிறதோ, அங்குக் கணக்கைவிட வழக்கு அதிகமாகி விடும். இன்றைய நற்செய்தி கணக்கையும் சொல்கிறது, அதற்கு மேல் வழக்கையும் நடத்துகிறது.

நம் திறமைகள், கொடைகளில் நம் கவனத்தைத் திருப்பி, அவைகளைப் புதைத்து விடாமல், பலருக்கும் பல மடங்காகப் பயன்தரும் வகையில் நம் திறமைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே வழக்குகளில் சிக்காமல் கணக்கை நிறைவாக முடிக்கத் தேவையான வரங்களை வேண்டி இன்றைய திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய வாசகம் கடினமாக உழைக்கின்ற மனையாளைப் பற்றிப் பேசுகின்றது. கம்பிளி, சணல் ஆகியவற்றைத் தானே தேடிக் கொள்பவளாக, இராட்டினத்தைத் தானே தன் விரலால் திரிப்பவளாக இருப்பவரே மனத்திடமுள்ள மனையாள் என்று நீதிகொழிகள் புத்தகம் பறைச்சாற்றுகிறது. வெற்றி இனிப்பானது. அதன் இரகசியம் வியர்வையாகும் என வலியுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

 பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!
திபா 128: 1-2. 3. 4-5

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி

உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.பல்லவி

ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் நற்செய்திப் பணி புரிந்த நேரம் போக, கூடாரம் அடிக்கும் தொழில்மூலம் தன்னுடைய சுய தேவைகளைப் பூர்த்திச் செய்து கொண்டார். என்னுடைய தேவைகளுக்காகவும், என்னோடிருந்தவர்களின் தேவைக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள் என்கிறார். எனவே தான் உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது என்று அவரால் உறுதியாகக் கூறமுடிந்த இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். அல்லேலூயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1.வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் நிறைவாகப் பெற்றுள்ள கொடைகளைத் திறமையாகப் பயன்படுத்தி உம் இறையரசை அறிவிக்கத் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2 வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! எங்கள் குடும்பத்தினர்கள் தங்கள் குறைகளை எல்லாம் மறந்துத் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளத் தேவையான ஞானத்தையும் அறிவையும அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் மரிந்தவர்கள் அனைவரையும் நினைவுக் கூர்கின்றோம். அவர்கள் அனைவரும் புனிதர்களின் திருக்கூட்டத்தில் சேர்த்துக்கொண்டு உம்மைப் போற்றிப் புகழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! பாகுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த இந்த மனிதச் சமுதாயத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் தனித் திறமை உடையவர்கள். எமது குறைகளையும் திறமைகளாக மாற்றும் வழிகள் உண்டு. குறைகளைத் திறமைகளாக மாற்றித் எங்களையும், பிறரையும் வளர்ப்பவர்களாய் மாறிட உம் ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Sunday, November 5, 2023

பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு 12/11/23

 பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு 12/11/23

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சாலமோனின் ஞானம் 6: 12-16
1 தெசலோனிக்கர் 4: 13-18
மத்தேயு 25: 1-13

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பொதுக்காலத்தின் 32ஆம் ஞாயிறுத் திருப்பலி பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறோம்.
திருவழிபாட்டின் இறுதி வாரங்களில் இருக்கிறோம். திருவருகைக் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய உவமையில் சொல்லப்படும் பத்துத் தோழியரில் ஐந்து பேர் முன்மதி உடையவர்கள், மற்ற ஐந்து பேர் அறிவிலிகள். மணமகளின் தோழியாக இருப்பதற்கு அழைப்பு வந்ததும், இந்த ஐந்து அறிவிலிகள் எண்ணத்தில் ஓடியப் பட்டியலில் ஒரு முக்கியமான அம்சம் மறக்கப்பட்டது. எண்ணெய்... முன்மதியுடைய ஐந்து பெண்களும் திட்டமிட்டு, பட்டியல் ஒன்றை தயாரித்திருப்பார்கள். அவர்கள் பட்டியலில் “விளக்கு எறிவதற்குத் தேவையான எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்பது முதலாவதாகக் குறிக்கப்பட்டிருக்கும். அவசியங்களா? ஆடம்பரங்களா? எதற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதைச் சிந்திக்க இந்த உவமை உதவுகிறது.
அவசியமற்றவைகளில் அதிகக் கவனம் செலுத்திவிட்டு, அவசியமானவைகளை மறந்து விட்டால் வாழ்வில் முக்கியமானவைகளை இழக்க வேண்டியிருக்கும். இயேசு இன்றைய நற்செய்தியில் கூறும் இறுதி வரிகள் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்: “விழிப்பாயிருங்கள்; ஏனெனில் இறைவன் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”
அவசியமானவைகள், அவசியமற்றவைகள், அலங்காரங்கள், ஆடம்பரங்கள் என்று நம் வாழ்வை நிறைத்துவிடும் பல அம்சங்களில் தேவைகளை, அவசியமானவைகளைப் பிரித்துப் பார்க்கும் பக்குவம், கண்ணோட்டம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று ஒருவர் ஒருவருக்காக வேண்டி இன்றைய திருப்பலியில் உளமாற வேண்டிக் கொள்வோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

ஞானம் நிறைந்த, விழிப்போடு செயல்பட வேண்டும் என இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. ஞானம் ஒளிமிக்கது. மங்காதது… அதன் பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலைகளிலிருந்து விரைவில் விடுபடுபவர் என்று கூறுகிறது. மனிதவாழ்வை முழுமையாகவும், நிறைவாகவும் வாழ்வதற்கு ஞானம் அவசியம். இத்தகைய மேலான ஞானத்தை அடைவதே நமது வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் நமது வாழ்வின் முடிவைப் பற்றி, நமது சாவைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது என்று கூறுகிறார். ஏனெனில் நமக்கு எதிர்நோக்கு உண்டு. கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டுள்ள நாம் அனைவரும் கிறிஸ்துவை எதிர்கொண்டு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ள அழைக்கும் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்

பதிலுரைப்பாடல்

திபா 63: 1. 2-3. 4-5. 6-7
பல்லவி: என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

1.கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. -பல்லவி
2. உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.   ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -பல்லவி
3. என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். -பல்லவி
4.நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன். ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1.எங்கள் வாழ்வின் நிறைவாகிய இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு விழிப்புடன் காத்திருந்து அவருடன் நிலைவாழ்விற்குச் செல்ல முன்மதி உடையவர்களாகத் தங்கள் வார்த்தைகளிலும், வாழ்விலும் ஒன்றிணைந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாய் வாழத் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2 என்றென்றும் இரக்கமுள்ள அன்பு தெய்வமே இறைவா! இன்றைய காலகட்டத்தில் இச்சமுகத்தில் எங்கள் குடும்பத்தினர்கள் எதிர் கொள்ளும் சோதனைகளிலும், வேதனைகளிலும் சோர்ந்து போகாமல் விழிப்புடனிருந்து வெற்றிக் கொள்ளவும், தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவும் தேவையான ஞானத்தையும் முன்மதியும் அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள் வாழ்வின் நிறைவாகிய இறைவா! எங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து வெளியிடங்களிலும், வெளிநாட்டிலும் வாழும் எம்சகோதரச் சகோதரிகளை உம் திருமுன் நினைவுகூர்கிறோம். அங்கு அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் உமது உடனிருப்பை உணர்ந்து நல்வாழ்வு வாழ்ந்திடவும், பாச உணர்வுகளுடன் தங்கள் குடும்பங்களோடு ஒன்றிணைந்திருக்கத் தேவையான வரங்களை அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. என்றென்றும் இரக்கமுள்ள அன்பு தெய்வமே இறைவா எம்நாட்டில் நிலவும் மதவாத பிரச்சனைகள் குறிப்பாக அனைத்து மதத்தினரும் மனித மாண்புடன் வாழ, பிரிவினை சக்திகளின் பிடியிலிருந்து விடுவித்து, உண்மை அன்பும், பிறர்சினேகமும் கொண்டு ஏற்றத்தாழ்வுகள் களைந்து ஒற்றுமையுடன் வாழத் தேவையான எம் ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. பரிவுடன் எங்களை அரவணைக்கும் தந்தையே எம்இறைவா! இவ்வலகைவிட்டுப் பிரிந்துச் சென்ற உம் அடியார்கள் அனைவரையும் நினைவுகூர்கிறோம். அனைவரும் உமது பேரின்பவீட்டில் சேர்த்துக்கொள்ளும். குறிப்பாக யாரும் நினையாத குருக்கள், இருபால்துறவியர்கள் அனைவரையும் தாவீது கூறியதுபோல உம் தூயகத்தில் தங்கிட அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF

Wednesday, November 1, 2023

பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு 05/11/2023

 பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு 05/11/2023




இன்றைய நற்செய்தி வாசகங்கள்


மலாக்கி 1: 14 - 2: 1-2, 8-10
1 தெசலோனிக்கர் 2: 7-9
மத்தேயு 23: 1-12

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
பொதுக்காலத்தின் 31ஆம் ஞாயிறுத் திருப்பலி பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்போடு வாழ்த்துகிறோம்.

தற்பெருமையில் ஊறி, மயக்கத்தில், தூக்கத்தில் உள்ளவர்களை, அல்லது மற்ற உயரிய எண்ணங்களுக்கு மரத்துப் போய் உள்ள யூதக் குருக்களையும், மதத்தலைவர்களையும் இயேசு இன்றைய நற்செய்தியில் படம் பிடித்துக் காட்டுகிறார். அவர்கள் போதித்த போதனைகளுக்கும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. பரிசேயர்களின் போலித்தனத்தையும், அவர்களின் இரட்டை வேடத்தையும் உண்மைக்குப் புறம்பான வாழ்வையும் இயேசு சாடுகிறார் என்பது தெளிவாகிறது.

கிறிஸ்தவ வாழ்வு என்பது கற்பித்தலில் மட்டுமல்ல, மாறாக அதனைச் செயல்படுத்துவதில் தான் பொருள் பெறுகிறது. நம்மிலெத்தனை பேர் நம் வார்த்தைக்கும் வாழ்வுக்கும் வேறுபாடின்றி நாம் வாழ்கிறோம். சுய ஆத்ம சோதனைகளைச் செய்து பார்க்க அழைக்கப் படுகின்றோம். நம் வாழ்வில் காணப்படும் வெளிவேடங்களை அகற்றி இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ முன்வருவோம். அதற்குத் தேவையான அருளை வேண்டி இன்றைய திருப்பலியில் உளமாற மன்றாடுவோம். வாரீர்!

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களின் வரலாற்றில் போலித்தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர் என்பதை இன்றைய முதல் வாசகமாகிய மலாக்கி நூலில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இந்நூல் எழுதப்பட்ட காலகட்டத்தில் இஸ்ரயேல் மக்களிடையே குருகுலத்தோருக்கு பெரும் மதிப்பு இருந்தது. ஆனால் அவர்கள் கடமைகளை மறந்து, ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, அவரை அவமதித்த சூழ்நிலையைக் கண்ட இறைவாக்கினர் மலாக்கி அவர்களைக் கண்டித்து 'நெறிதவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறிவிழச் செய்தீர்கள்.' என்று கடவுளின் கோபத்தை எழுதியுள்ள இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பதிலுரைப்பாடல். திபா 131: 1. 2. 3
பல்லவி: என் நெஞ்சம் அமைதிபெற உம் திருமுன் வைத்துக் காத்தருளும்.
 

1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. பல்லவி

2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. பல்லவி

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு.  பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் இறைபணியாளர்களின் மேன்மையை எடுத்துக் கூறுகிறார். உங்கள்மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள் என்று மக்களோடு மக்களாய் இணைந்துவிட்டதை எடுத்துரைக்கும் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ‘உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.’  என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1.எங்களை வல்லமையோடு நடத்திவரும் அன்பு தந்தையாம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் தங்கள் வார்த்தைகளிலும், செயல்பாடுகளிலும் ஒன்றிணைந்துச் செயல்படவும், எங்கள் வாழ்வில் காணப்படும் வெளிவேடங்களைத் துறந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாய் வாழவும் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2 எங்களைக் காத்துப் பராமரித்து வரும் அன்பு தெய்வமே இறைவா! இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா! எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீகளை அறிந்துக் கடவுளின் பார்வையில் மாசற்றச் சமயவாழ்வு வாழவும், நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் நிலைக்கு ஏற்பச் செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து, உலகத்தால் கறைபடாதபடி எம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்…

4. 4.அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா! யாரும் நினையாத உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற ஆன்மாக்கள் அனைவரையும் உம் பாதத்தில் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் விரைவாக உம் இல்லத்தில் அழைத்து, பரிசுத்தர்கள் கூட்டத்தில் சேர்த்து, உம்மைப் போற்றி புகழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF