Wednesday, March 29, 2017

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு 02.04.2017

*தவக்காலம்  ஐந்தாம் ஞாயிறு  02.04.2017*



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


எசேக்கியேல் 37:12-14

உரோமையர் 8:8-11
யோவான் 11:1-45


*முன்னுரை*


அன்புடையீர்,
தவக்காலம் ஐந்தாம் ஞாயிறான இன்று நம் சகோதரப் பாசம் நம்மில் எந்த நிலையில் இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க அழைப்பு விடுக்கும் இறைமகன் இயேசுவின் திருவடி நாடி வந்துள்ள அவரின் பாசத்திற்குரிய இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உயிர்ப்பித்த்து  இலாசரை மட்டுமல்ல, நம்பிக்கைகொள்ளாமல் இருந்த தன் சீடர்களையும் தான் என்பதை மறந்து விடக்கூடாது. தன்னோடு கூட இருந்தும் தன் மீது நம்பிக்கைக் கொள்ளாமல் இருந்த சீடர்களைக் குறித்து இயேசு வேதனை அடைந்திருக்க வேண்டும். அவர்களை எவ்வாறு நம்பிக்கைகொள்ள வைப்பது என்று சிந்தித்திருக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் இலாசரின் இறப்பு சிறந்த வாய்ப்பாக இருப்பதை இயேசு உணர்கின்றார். எனவே தான் “நான் அங்கு இல்லாமல் போனது பற்றி உங்கள் பொருட்டு மகிழ்கின்றேன். நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது” என்றார்.

கடவுளின் மீது நம்பிக்கை இழந்து வாழ்வோர், உயிரோடு வாழ்ந்தாலும் அவர்கள் செத்தவர்களே ஆவர். உணவு இல்லாமல்  இரண்டு நாட்கள் தாக்குப் பிடிக்கலாம். ஏன் காற்று இல்லாமல் கூட சில நிமிடங்கள் இருந்து விடலாம். ஆனால் நம்பிக்கையில்லாமல் வாழ்வு என்பதே சாத்தியமில்லை. மனிதனின் பலம் நம்பிக்கையே! எனவே, நம் வாழ்வில் எச்சூழலிலும் நம்பிக்கை இழக்காமல் இருக்கும் வரத்தைத் தரவேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்.

*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*


இஸ்ரயேல் மக்கள் இறைவனது கட்டளையை மீறியதன் காரணமாக அடிமைகளாக்கப்பட்டனர். பபிலோனியவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு ஒட்டுமொத்த இனமே மற்றொரு நாட்டில் அடிமையாகிக் கிடந்த்து. இது சாவுக்கு இணையானது என்பதை இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் எடுத்துரைக்கின்றார்.  அடிமைத்தனங்களில் வாழ்வோரின் நிலை செத்துப் போன மனிதர்களின் நிலையைவிட மேலானதல்ல. ஆனால் இத்தகைய மக்களுக்கும் வாழ்வதற்கு வழி உண்டு என்ற நம்பிக்கையை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


அடிமைத்தனத்தின் ஊற்றக இருப்பதுதான் பாவ வாழ்வு.  ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாக இருக்க முடியாது என்றும், பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாகும் என்றும் குறிப்பிடுகிறார். இதன் உச்சக்கட்டமே தான் பாவத்திற்குக் கிடைக்கும் கூலி சாவு. இத்தகைய பாவ அடிமைத்தனத்திலிருந்து, அதனால் வரும் சாவிலிருந்து நமக்கு விடுதலை கொடுக்கவே இயேசு வந்தார் என்ற செய்தியைத் திருத்தூதர் பவுலடியார் அழகுடன் எடுத்தெய்ம்பும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.

*பதிலுரைப்பாடல் *

பல்லவி : ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது.
திருப்பாடல்: 130: 1- 8.

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். என் விண்ணப்பக் குரலை உம் முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர். மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின் றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். பல்லவி

விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. பல்லவி

பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


உயிர்த்தெழுதலும் வாழ்வு நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் எவரும் என்றுமே சாகமாட்டார்" என்கிறார் ஆண்டவர்.

*மன்றாட்டுகள்*

1 அன்புத் தந்தையே எம் இறைவா! திருஅவையில் உள்ள அனைவரும் ஓப்புறவு அருட்சாதனத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கின்ற தவறான கண்ணோட்டங்களைக் களைந்து, நல்ல ஒப்புறவு அருட்சாதனத்தில் பங்குகொண்டு இத்தவக்கால பலன்களை முழுமையாக அனுபவிக்கவும், இயேசுவின் உயிர்ப்பில் இணைந்திட வேண்டிய உறுதியான மனநிலையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கருணைக் கடலே எம் இறைவா! நாட்டை ஆளும் தலைவர்கள் அவரவர் இடத்தை பற்றிக் கொள்ள சுயநலத்தை நிலை நாட்டிக் கொள்ளாமல் உம் மக்களின் தேவைகளை உணர்ந்து பணி செய்யும் உத்வேகத்தை எம் நாட்டு தலைவர்களுக்கு வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3 அன்புத் தந்தையே எம் இறைவா! மாந்தர்களின் பேராசையால் நாங்கள் இழந்த இயற்கைச் செல்வங்களை மீண்டும் பெற்று வளமுடன் வாழவும், ஏழ்மையை எதிர்நோக்கித் தள்ளப்படும் விவசாய மக்களின் வாழ்வாதாரங்கள் மேன்மைபடவும், நீர் ஆதாரங்கள் செழித்தோங்க வேண்டிய மழையைப் பெற்றிடவும் அருள்மாரிப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 4 வெற்றி வேந்தனே எம்இறைவா! தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களை கிடைக்கப் பெற்று அதில் சாதனைப் படைத்திட தூயஆவியாரின் துணை வேண்டியும், அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டியும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  

Wednesday, March 22, 2017

தவக்காலம் நான்காம் ஞாயிறு 26.03.2017

*தவக்காலம்  நான்காம் ஞாயிறு  26.03.2017*



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*
1 சாமுவேல் 16:1ஆ,6-7,10-13அ
1 எபேசியா 5:8-14
யோவான் 9:1-41


*முன்னுரை*

அன்புடையீர்,
தவக்காலம் நான்காம் ஞாயிறான இன்று உலகின் ஒளியாம் இயேசு கிறிஸ்துவின் அருளை நாடி ஆலயம் வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
பார்வையற்றவர் ஒருவர் இயேசுவால் தொடப்பட்டுகின்றார். பிறவியிலிருந்தே பார்வை இல்லாமல் போனது யார் குற்றம்? என்பதை அறிய சீடர்கள் ஆர்வம் கொள்கின்றனர். ஆனால் இயேசு இறைவனின் செயல்பாடுகள் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே அவருக்கு இப்படி நேர்ந்தது என்று கூறுகிறார். ஆம் பார்வை பெற்றவர் இறைமகன் இயேசுவிற்குச் சான்று பகர்கின்றார். ஆனால் அவரைச் சூழந்து கொண்டு கேள்விகள் கேட்டும் யூதர்களோ தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு இறைமகனுக்கு எதிராகக் குற்றம் காண விழைகின்றார்கள். பார்வையற்றவரோ யூதர்களுக்கு அஞ்சாமல் இயேசுவை மீட்பராக நம்பினார்.
கடந்த வாரம் வந்த சமாரியப்பெண்ணைப் போலவும், இந்த வாரம் வரும் பார்வையற்றவரைப் போலும் நாம் நேரடி அனுபவம் பெறவில்லை என்றாலும் இறைமகன் இயேசுவின் உடனிருப்பை எப்பொழுதும் உணரமுடியும். மேலே கூறப்பட்ட இருவரின் குறைகளிலிருந்து மீட்டு அவர்களுக்குப் புதிய வாழ்வை தந்தார். இதுபோல் அவர் தன் கரங்களை நீட்டி நம்மையும் மீட்கக் காத்துக்கொண்டிருக்கிறார். ஒளியின் மக்களாக வாழ அழைப்பு விடுக்கும் இன்றைய வாசங்களை உணர்ந்து புதுப் பார்வை பெற்று ஒளியின் மக்களாய் இன்றைய திருப்பலியில் கருத்துடன் பங்குகொண்டு நம்மில் புதுவாழ்வு மலரச் செபிப்போம். வாரீர்..

*வாசகமுன்னுரை*

*முதல் வாசக முன்னுரை*

இஸ்ரயேல் மக்களுக்கு அரசரை தேர்ந்தேடுக்கக் கடவுள் இறைவாக்கினர் சாமுவேலை அனுப்புகின்றார். மனிதன் பார்ப்பது, தீர்மானிப்பது ஒருவிதம். இறைவன் பார்ப்பது, தீர்மானிப்பது வேறுவிதம். மனிதன் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே பார்க்கின்றான். இறைவனோ இதயத்தைப் பார்க்கின்றார். எனவே தான் ஈசாயின் கடைசி மகன் தாவீதை அரசனாகத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. இவ்வாறு இஸ்ரயேல் மக்களின் அரசர் தெரிந்துக்கொள்ளப்பட்ட நிகழ்வுகளைப் பதிவுச் செய்தச் சாமுவேல் முதல் நூலிலிருந்து வரும் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் கூறுவது என்னவென்றால் யூதர்களைப் போல ஒளிதரும் மெசியாவை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டக்கூடாது. அவர்களைப் போல வெளித்தோற்றத்தை மட்டுமே பார்க்காமல், இதயத்தையும் பார்க்க வேண்டும். இதயம் இருண்டு போனால் ஒளி எங்கிருந்து வரும்? ஆண்டவருக்கு உகந்தது எதுவோ, நல்லது எதுவோ என்பதை ஆராய்ந்து பார்த்தது செயல்பட வேண்டும் என அழைப்பு விடுக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.


*பதிலுரைப் பாடல்*

பல்லவி : ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை!
திருப்பாடல்கள்: 23: 1-3, 3-4,5,6

ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார், அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார், மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன், உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.   பல்லவி


*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் ' என்கிறார் ஆண்டவர்!


*மன்றாட்டுகள்*

1 உலகில் தோன்றும்  ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கும் எம் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், பொது நிலையினர் ஆகிய அனைவரும் உலகின் ஒளியாம் இறைஇயேசுவின் வார்த்தையாலும் உணவாலும் ஊட்டம் பெற்று உமக்கு உகந்தவராகவும், பணிவாழ்வில் உமக்கு உகந்தவற்றையே நாடவும் பிறரை நேர்மையான உள்ளத்தோடு அன்பு செய்து வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2. உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கும் எம் இறைவா! இருளில் மூழ்கி இருக்கும் எம் குடும்பங்கள் இத்தவக்காலத்தில் உம்மோடு ஒப்புரவாகி, பார்வை பெற்று இறைஇயேசுவின் உடனிருப்பை உணர்ந்தவர்களாவும், செபித்திருந்து உம் வல்லமையைப் பெற்றவர்களாகவும், இயேசுவின் சீடர்களாய் எமக்கு அடுத்திருப்பவர்கள் உம்மை எம்மில் கண்டு விசுவாசம் கொள்ள வேண்டிய வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3 உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கும் எம் இறைவா! மாந்தர்களின் பேராசையால் நாங்கள் இழந்த இயற்கைச் செல்வங்களை மீண்டும் பெற்ற வளமுடன் வாழவும், ஏழ்மையை எதிர்நோக்கித் தள்ளப்படும் விவசாய மக்களின் வாழ்வாதாரங்கள் மேன்மைபடவும், நீர் ஆதாரங்கள் செழித்தோங்க வேண்டிய மழையைப் பெற்றிடவும் அருள்மாரிப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4 உலகில் தோன்றும்  ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கும் எம் இறைவா! “ என்னோடு இல்லாதவர், எனக்கு எதிரியே” என்கிறார் இயேசு. நாம் அவரின் மக்கள் எனில், அவர் வழியில் நடப்பவர் எனில், நம் வாய் திறப்போம். சமூக அவலங்களுக்குக் குரல் கொடுப்போம். மக்கள் உரிமைகள் மறுக்கப்படும்போது, குரல் கொடுப்போம். இன்றைய சமூகச் சூழலில், நீதிக்காகக் குரல் கொடுப்பதும், ஒரு சாட்சிய வாழ்வே. எனவே நாமும் வாய் திறந்து  நீதிக்காகக் குரல் கொடுக்கவும், இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்படவும் வேண்டிய வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்...

              www.anbinmadal.org

Tuesday, March 14, 2017

*தவக்காலம் மூன்றாம் ஞாயிறு 19.03.2017*


*தவக்காலம்  மூன்றாம் ஞாயிறு  19.03.2017*


 



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

*முன்னுரை*


அன்புடையீர்,
தவக்காலம் மூன்றாம் ஞாயிறான இன்று ஆலயம் வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இயேசுவுடன் உரையாடியச் சமாரியப் பெண் அவரை மீட்பராக, மெசியாவாகக் கண்டு கொண்டு வியந்துபோனவர், தான் பெற்ற அந்த இறையனுபவத்தைத் தன் இனத்தவருடன் பகிர்ந்து கொள்ள ஊருக்குள் ஒடிச் செல்கிறார். 

ஆம் அன்பர்களே ! இயேசுவின் முதல் இறையரசு நற்செய்தி அறிவிப்பாளராகச் செயல்பட்டார் என்றால் அது மிகையகாது. அப்பெண்ணின் பாவ வாழ்க்கையைப் பற்றி இயேசு கூறியபோது அதைக் கண்டு அஞ்சவில்லை. அதனை ஏற்றுக் கொணடதன் மூலமாக மீட்பைப் பெற்றார். இயேசுவின் பொங்கி எழும் ஜீவஊற்று அவரது பாலைவனமாக இருந்த வாழ்க்கை மகிழ்ச்சிப் பொங்கும் பூங்காவனமாக மாறியது. அவரின் ஊரார் அனைவரும் அவரால் மீட்பைக் கண்டனர்.
ஆம்! இயேசு சமாரியப்பெண்ணுக்காகக் கிணற்றின் அருகில் காத்திருந்தது போல் எந்நாளும் ஆலயத்தில் நற்கருணை வடிவில் நம் வருகைக்காகக் காத்திருக்கிறார். இறைவார்த்தை வழியாகவும், திருப்பலி வழியாகவும் தனிச் செபங்கள் வழியாகவும் இயேசுவோடு உரையாடும் போது தன்னை அப்பெண்ணுக்கு வெளிப்படுத்தியது போல, நமக்கும் வெளிப்படுத்துவார். நாமும் அவரின் இறையன்பைக் கண்டுணர்வோம். அவர் கூறியத் தாகத்தை, நிலைவாழ்வை நாமும் பெற்றிட இன்றைய திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்று வாழ்வுத் தரும் வற்றாத ஊற்றில் நீர் அருந்துவோம். வாரீர்.....

*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*


தொடக்கநூலில் இஸ்ரயேல் மக்களை வாக்களித்த நர்ட்டிற்குப் பாலைவனத்தின் வழியாக இறைவன் அழைத்துவந்தபோது சலிப்படைந்தார்கள். மோசேவிற்கு எதிராய் முணுமுணுத் தொடங்கினர். தேர்ந்கு கொண்ட இனம் அடிமைகளாய் எகிப்தில் துன்பட்டு அழிந்து விடாமல் இருக்க மோசேயின் தலைமையில் அறுபுதமாய்க் கடல் கடந்து தேனும் பாலும் ஒடும் கானான் நாட்டிற்கு அழைத்து வந்தார். ஆனாலும் மக்கள் ஆண்டவரைச் சோதிக்க அவரும் அவர்களிடம் பரிவோடு இருந்தார் என்பதைக் கூறும் இன்றைய முதல் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


கிறிஸ்துவ விசுவாசத்தைக் கொடையாகக் கொண்டு பாவத்திற்கும், வேதனைக்கும் மத்தியில் இறைவனுக்கு ஏற்புடையவராக வாழும்போது அளவிட முடியாத ஆண்டவரின் அன்பைக் கொடையாகப் பெறுகிறோம். ஏனென்றால் தன் ஓரே பேரான மகனை, பாவத்தில் வாழும் மனித இனத்தின் மத்தியில் இறைவன் அனுப்பினார். அவரது விலைமதிப்பற்றத் திருஇரத்தத்தின் வழியாக நம்மை மீட்டுத் தம் கொடைகளால் நம்மை நிரப்புகிறார். இந்த அளவுகடந்த இறைவனின் அன்பையும், இரக்கத்தையும் நமக்கு வெளிப்படுத்தும் நிகழ்வைச் சிந்திக்க இன்றைய இரண்டாம் வாசகம் தூண்டுகிறது

*பதிலுரைப் பாடல்*


பல்லவி : உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர் ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்
திருப்பாடல்கள்: 95: 1-2, 6-7,7-9

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.  நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். பல்லவி

இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.  அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.   பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :-*


ஆண்டவரே! நீர் உண்மையில் உலகின் மீட்பர். நான் தாகம் கொள்ளாதபடி வாழ்வு தரும் தண்ணீரை எனக்கு அளித்தருளும்.

*மன்றாட்டுகள்*


1 நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், பொது நிலையினர் ஆகிய அனைவரும் இறைஇயேசுவின் பணிவாழ்வைத் தங்கள் சொல்லாலும், செயலாலும் அனைத்து மாந்தருக்கும் வேறுபாடின்றி, நீதி உண்மை ஆகியவற்றை இவ்வுலக வாழ்வில் அனைவரும் மதிக்கத்தக்க வகையில் வழங்கிடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2. நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா! இன்றைய சமூக வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் உம்பாதம் வைக்கின்றோம். பாவ வாழ்வில் மூழ்கிப் போன எங்கள் அனைவரையும் உமது கருணையாம் வாழ்வு தரும் தண்ணீரால் மீட்டிட உம் பெலனை, ஆற்றலை, சக்தியை நாங்கள் நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3 நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா! வேதனை நிறைந்த எங்கள் மனங்களில் எதிர்கால வாழ்வை நினைத்து, கிடைத்த வாழ்வை, பெற்ற மகிழ்ச்சியை, உறவுகளை இழக்காமல் எம் குடும்பங்களில் ஒற்றுமையையும், மற்றவாகளை மன்னித்து எம் சகோதரச் சகோதரிகளாய் பாவித்துச் சாமாரியப் பெண்ணைப் போல எங்கள் தவறுகளை ஏற்று அனைவரையும் அன்புப் பாரட்ட வேண்டிய மனஉறுதியையும், அவற்றைச் செயலில் காட்டு விவேகத்தையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4 நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா! சமாரியப் பெண் உம்மை மீட்பர், நிலைவாழ்வுத் தரும் ஊற்று என்பதைக் கண்டு கொண்டு மற்றவர்களுக்கும் உம்மை அறிவித்தது போல நாங்களும் உமது இரக்கத்தையும், அன்பையும் இத்தவக்காலத்தில் உய்த்துணர்ந்து, உம் சீடர்கள் என்ற உணர்வைப் பெற்றுச் செபம், தவம், தர்மம் ஆகியவற்றின் மூலம் இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்பட வேண்டிய வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்...

                                    www.anbinmadal.org

Wednesday, March 8, 2017

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு 12.03.2017

*தவக்காலம்  இரண்டாம் ஞாயிறு  12.03.2017*


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


தொடக்கநூல் 12:1-4
திமோத்தேயு 1:8-10
மத்தேயு 17:1-9

*முன்னுரை*


அன்புடையீர்,
முதல் தவக்கால இரண்டாம் ஞாயிறைச் சிறப்பிக்க மனமாற்றங்களைத் தேடி தெய்வத்தின் திருவடி நோக்கி வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இன்றைய வாசகங்கள் நம்மை மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கின்றன. மாற்றம் இல்லையேல் நம் வாழ்வில் ஏற்றமும் இல்லை. ஆபிராகம் தன் நாடு, வீடு, உற்றார் உறவினர்கள் இவை அனைத்தையும் விட்டுவிட்டு அறியாத புதிய நாட்டிற்குச் செல்லும்போது பல துன்பங்களை அனுபவித்தார். இறுதியில் கிடைத்த பரிசு விசுவாசத்தின் தந்தை ஆனார். இறைவனின் மகிமையை இயேசுவின் உருமாற்றத்தின்போது திருத்தூதர்கள் மூவரும் நேரில் கண்டனர். ஆனால் தாபோர் மலை அனுபவம் அடையும் முன் இறைமகன் இயேசு ஒலிவமலை அனுபவமும், கல்வாரி மலை அனுபவமும் பெற வேண்டும் என்பதைச் சீடர்கள் அறியவில்லை. வரப்போகும் துன்பத்தை எதிர்கொள்ளும் துணிவுக்கு முன் அச்சாரமாக இந்த மகிமையான ஒளிமயமான உருமாற்றத்தைக் காட்டுகிறார் இயேசு.
மீட்பின் பாதை என்பது புதுமைகளின் பாதை அல்ல. மாறாகத் துன்பங்கள் மற்றும் மாடுகளின் பாதை என்பதை இயேசு நன்கு உணர்கின்றார். இயேசு சந்தித்த்தைப் போலநாமும் நம் வாழிவிலி இத்தகைய சூழல்களைச் சந்திக்கின்றோம். இப்படிப்ட்டச் சூழ்நிலையில் இயேசுவைப்போல் செபத்தின் வழியாக இறை உதவியை நாடும்போது நாம் செல்ல வேண்டிய வழியை இயேசு நமக்குச் சுட்டிக்காட்டி நம்மை வழிநடத்துவார்.

*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*


தொடக்கநூலில் இறைவன் ஆபிரகாமை அவர் அறியாத நாட்டிற்குச் செல்லுமாறு அழைக்கின்றார். ஆனால் ஆபிரகாம் செல்ல வேண்டிய பாதை அவருக்குத் தெளிவாக் கொடுக்கப்படவில்லை. வாக்களிக்கப்பட்டவை நிறைவேறவில்லை இருந்தாலும் அவர் மனம் தளராமல் இறுதிவரைக் கடவுளின் மேல் நம்பிக்கைக் கொண்டார். உயர்ந்த நிலையை அடையவதற்காக ஒன்றை இழப்பது மிகக் கடினமாக இருந்தாலும் அஃது ஒரு சுகமான சுமையே என்பதை இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் மூலம் எடுத்துக்காட்டுகிறது..

*இரண்டாம் வாசக முன்னுரை*


நற்செய்தியின் பொருட்டு உரோமைச் சிறையில் இருந்து திருத்தூதர் பவுல் தம் நண்பர் திமோத்தேயுவுக்கு எழுதிய மடலின் ஒரு பகுதியே இன்றைய வாசகம். துன்பத்தால் துவண்டுபோய் விடாதபடியும், மனவிரக்தியில் வெந்துப் போகாதபடி இருக்கும்படி அவரைக் கேட்டுக்கொள்கிறார். கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் பங்குகொள்ள அழைப்பு விடுக்கின்றார். துன்பத்தின் வழியாகத்தான் நமக்கு மீட்பு உண்டு. நாம் எவ்வாறு துன்பத்தை எதிர்கொள்கிறோம் என்பதைச் சிந்திக்க இன்றைய இரண்டாம் வாசகம் தூண்டுகிறது

*பதிலுரைப் பாடல்*

*பல்லவி : ஆண்டவரே! உமது பேரன்பு எங்கள் மீத இருப்பதாக!*

திருப்பாடல்கள்: 33: 4-5, 18-19, 20, 22



ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.  அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!  பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :-*


ஒளிரும் மேகத்தினின்று,தந்தையின் குரலொலி கேட்டது ;என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள்.

*மன்றாட்டுகள்*


1 நம்பிக்கைக் கொள்வோரைச் சூழந்து நிற்கும் பேரன்பு தெய்வமே! இத்தவக்காலத்தில் துன்புறும் உம் திருச்சபைக்காக வேண்டுகிறோம். உலகெங்கும் நற்செய்தியின் பொருட்டுத் துன்பங்களையும், தீவிரவாத்தையும் ஏதிர்கொள்ளும் திருச்சபையின் பணியாளர்கள் அனைவருக்கும் துன்பத்தால் துவண்டுபோய் விடாதபடியும், மனவிரக்தியில் வெந்துப் போகாதபடி இருக்கும்படியும் இருக்கவும், ஆபிரகாம் போல் தளராத நம்பிக்கையில் வாழவும் வேண்டிய அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2. நம்பிக்கைக் கொள்வோரைச் சூழந்து நிற்கும் பேரன்பு தெய்வமே! நீர் வாக்களித்த நாட்டையும் வாழ்வையும் அடைய ஆபிரகாம் கொண்ட பொறுமையும், நம்பிக்கையும் எங்கள் குடும்பத்தார் அனைவரும் உணர்ந்து, துன்பத்தின் முடிவில் வெற்றியையும், மகிழ்ச்சியையும் பெற இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்தி இறைமகன் இயேசுவைப்போல் பிறருக்காக உழைத்திடத் தேவையான நல்லமனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3 நம்பிக்கைக் கொள்வோரைச் சூழந்து நிற்கும் பேரன்பு தெய்வமே! எம் குடும்பங்களின் பிள்ளைச் செல்வங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். கல்வித் தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கும் அவர்கள் தங்கள் நிலை உணர்ந்துச் சிறப்பாகச் செயல்படவும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கருத்தாய் கவனித்துக் கொள்ளவும், அதற்கு வேண்டிய நல்ல நற்சுகமும், அரவணைக்கும் அன்பையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4 நம்பிக்கை கொள்வோரை சூழந்து நிற்கும் பேரன்பு தெய்வமே! பேராசையும் பொறாமையுமே சண்டை சச்சரவுக்குக் காரணம் என்பதை உணர்ந்து எம் நாட்டுத் தலைவர்கள் தீயசக்திகளின் வெளிபாடான பேராசையையும் பொறாமையையும் முற்றிலும் அவர்கள் உள்ளத்திலிருந்து நீக்கி எம் மக்கள் நலம் வாழ அவர்கள் உழைத்திட வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..
                                               


  www.anbinmadal.org

Wednesday, March 1, 2017

தவக்காலம் முதல் ஞாயிறு 05.03.2017

*தவக்காலம்  முதல் ஞாயிறு  05.03.2017*

Add caption


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


தொடக்கநூல் 2:7-9,3:1-7

உரோமையர் 5:12-19
மத்தேயு 4:1-11


*முன்னுரை*


அன்புடையீர்,
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவை தான் நம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையும், ஆணிவேரும் ஆகும். இவற்றைத் தான் நாம் நாள்தோறும் திருப்பலியில் நினைவுகூர்ந்து கொண்டாடினாலும் ஆண்டுக்கு ஒரு முறை சிந்தித்த சீர்தூக்கிப் பார்க்க நம்மைத் திருச்சபை அழைக்கிறது தவக்காலத்தின் வழியாக...

 இவ்வாண்டின் முதல் தவக்கால ஞாயிறைச் சிறப்பிக்க இத்திருப்பலியில் பங்கேற்க உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தவக்காலம் என்றவுடன் ஏதோ கவலையோடும், வருத்தத்தோடும் காட்சி கொடுப்பது என்பதல்ல. மாறான இதுவே நம்பிக்கையின் காலம். இறைவனின் இரக்கத்தைச் சுவைக்கும் மகிழ்ச்சியின் காலம். ஒப்புரவின் நல்ல காலம். நிலைவாழ்வுக்கு உரமிடும் காலம். மனித வாழ்வில் சோதனை என்பது ஒரு தொடர்கதை. மனிதன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது மானிடரின் உள்ளத்தை வருடிக்கொண்டேயிருக்கிறது. ஆனால் அந்தச் சோதனைகளையும் வென்று சாதனை படைத்த நிகழ்வுதான் இன்றைய நற்செய்தி. இயேசு செய்த அரும்பெரும் சாதனை. ஆதிப்பெற்றோரின் அடிமைத்தனத்தால் பாவ வாழ்வில் நாமும் பாவநிலைக்கு இட்டுச் செல்லப்படுகின்றோம். ஆனால் இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் வருகையில் பாவநிலையிலிருந்து வெற்றிப் பெற்ற புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றோம். இறைவார்த்தை இயேசுவுக்குச் சோதனைகளை வெல்ல உறுதுணையாக இருந்தது. எனவே நாமும் இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இல்லையேல் “உங்களுக்கு மறைநூலும் தெரியாது. கடவுளின் வல்லமையும் தெரியாது” என்ற பரிசேயர்களைப் பார்த்துச் சொன்ன இயேசு நம்மையும் பார்த்துச் சொல்லுமுன் விழிப்புடன் செயல்படுவோம்.

*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*


தொடக்கநூலில் இறைவன் உலகைப் படைத்து அவை அனைத்தும் நல்லது என்று கண்டு மானிடரைப் படைத்தார். தனது ஆவியை ஊதித் தன் சாயலாக உருவாக்கினார். ஆனால் சாத்தனின் சூழ்ச்சியில் சிக்குண்ட மானிடம் இறைவனின் கட்டளையை மீறியதால் தன் முதல் பாவத்தால் சாவை ஏற்றுக்கொண்டது. சாத்தனின் சோதனையில் தோல்வியடைந்தவன் தனக்குத் தானே கேடு விளைவித்தான்.இன்றைய முதல்வாசகத்தின் மூலம் நமக்கு எச்சரிக்கை விடுக்கும் இறைவனின் வார்த்தைகளைக் கவனமுடன் மனதில் பதிவு செய்வோம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


முதல் மனிதன் ஆதாம் செய்தப் பாவத்தால் சாவைக் கொணர்ந்தான். ஆயினும் கடவுளின் கட்டளைகளை மீறி பாவம் செய்யாதவரும் சாவுக்குள்ளானார்கள். ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல் ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலை தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்படியாமையால் பலர் பாவிகளானது போல் ஒருவரின் கீழ்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். இவ்வாறு நாமும் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகத்தின் மூலம் பவுலடியார் அழைக்கின்றார். கேட்போம் கவனமுடன்...

பதிலுரைப் பாடல்

பல்லவி : ஆண்டவரே! இரக்கமாயிரும்: ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
திருப்பாடல்கள்: 51: 1-4. 10-12,15


கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற் கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும். என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும். பல்லவி

ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன். உம் பார் வையில் தீயது செய்தேன். பல்லவி

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னி லையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும். உமது தூய ஆவியை என்னிடமிருந்து. எடுத்துவிடாதேயும். பல்லவி

உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும். அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


 மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

*மன்றாட்டுகள்*


1 பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! தவம், செபம் பிறரன்பு என்ற இம்மூன்றுச் செயல்களால் உம் திருஅவை கிறிஸ்துவின் பாடுகளின் வெற்றியை இவ்வுலகமக்களுக்கு அறிவிக்கவும், சொல்வதைச் செயலில் காட்டி எம் விசுவாசம் உயிருள்ளதாக இருக்கவும், எம் பிறரன்புச் சேவையால் உலகமாந்தர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு புதுவாழ்வு அடைந்திட வேண்டிய அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

2. பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்று அழைத்தீரே. நாங்கள் கிறிஸ்துவின் தூதர்களாய் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்திக் கடவுளோடு ஒப்புரவாகி, இயேசு கிறிஸ்துவிற்கு ஏற்படையவர்களாய் மாற நல்லமனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3 பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! இன்றைய நாளில் தங்களின் கல்வித் தேர்வுகளை ஏழுதிக் கொண்டிருக்கும் எங்கள் அன்புப் பிள்ளைகளை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். கருத்தாய் படித்த்தை நினைவில் வைக்க ஞாபக சக்தியை அளித்தருளும். அதைச் செவ்வனே எழுத வழிகாட்டும். தேர்வு நடக்கும் காலங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அன்பைப் பெருக்கிக் கரிசனையைக் காட்ட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4 பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! இக்காலச்சூழலில் இரக்கமும், தூய்மையான உள்ளம் படைத்தோர், நீதியினிமித்தம் துன்புறுத்த படுவோர், இவர்கள் அனைவரும் உம் பொருட்டுத் துன்புறுத்தப்படும் போது உமது இரக்கப்பார்வையால், அடிமைதனத்திலிருந்து அன்று எம் முன்னேரை மீட்டதுபோலக் காக்கவும், இன்று உம்மை மட்டுமே நம்பிச் சரணகதியாக வரும் எம் அனைத்து மக்களையும் உமது பேராற்றலினால், இடிந்துபோன எம் வாழ்வை வென்றெடுக்கத் தேவையான உமது இரக்கப் பார்வையை எம் மீது பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

www.anbinmadal.org