Friday, May 29, 2020

தூய ஆவியாரின் வருகை பெருவிழா

தூய ஆவியாரின் வருகை பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்


திருத்தூதர்பணிகள் 2: 1-11,
1 கொரிந்தியர் 12: 3-7, 12-13,
யோவான்  20:19-23

 திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
தூயஆவியின் ஞாயிறு, திருச்சபையின் பிறந்த நாளை, புதுப்பிக்கப்பட்ட நாளை குறிக்கிறது. அருட்சாதனங்களின் மூலம், திருச்சபையில் நம்மை ஒரு அங்கத்தினராகச் சேர்ந்துக் கொண்டதைக் குறிக்கிறது இந்நாள் பெருவிழா. நாம் எல்லோரும் சேர்ந்துக் கொண்டாடும்  இந்நாள், நாம் பெற்ற தூயஆவியை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவும், ஆவியின் உடனிருப்பை உறுதிபடுத்தும் இவ்விழாவில் பங்கேற்க  இறைகுலமே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

கிறிஸ்துவின் ஆவியின் சக்தியும், அதன் பிரசன்னமும் இவ்வுலகில் இல்லை என்றால், , கிறிஸ்தவன் இந்த உலகை மாற்ற முடியாது. ஆவியின் சக்தி இல்லை என்றால், இந்த இரண்டாயிரம் வருடங்களாக, பல்வேறு ஊழலிலும் , தடைகளையும் தாண்டிக் கிறிஸ்தவம்  வளர்ந்திருக்காது.

கடவுள் “எவ்வாறு இந்த உலகை மாற்றப் போகிறார் ? “நம் மூலம்! தந்தை கடவுள் அவரின் தூயஆவியை, அவரின் மகனுக்குக் கொடுத்து இந்த உலகின் இறைபணியாற்ற அனுப்பினார். இயேசு அதே ஆவியை நமக்குக் கொடுத்தார். அதன் மூலம் நாம் தூயவாழ்வில் வளர்ந்து, இந்த உலகின் மாற்றத்திற்கான ஆயத்தப் பணிகளில் நாம் ஈடுபடலாம். கடவுளின் ஆவி உங்களில் இருந்து குறைகளை நீக்கி நிறைகளாக்கும், தொடர்ந்து இந்த நம்பிக்கையோடு திருப்பலியில் பங்கேற்போம்.!.ஆவியின் கொடைகளைப் பெற்றுக் கொள்வோம். தொற்று நோயின் தாக்கத்திலிருந்து நம்மை விடுவிக்க மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை



முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் பெந்தகோஸ்தே நாளில் தூயஆவியால் நிரப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துரைக்கிறது. ஆவியானவர் இயேசுவின் வார்த்தையால் இவ்வுலகை ஒரு புதுப்படைப்பாக மாற்றுகிறார். இன்று சீனாய் மலையில் நெருப்புவடிவில் தோன்றிப் பத்துக்கட்டளைகளை மோயீசனுக்குக் கொடுத்தார் கடவுள் . இன்று தூயஆவி நெருப்பு நாக்கு வடிவில் புதிய உடன்படிக்கையை உருவாக்கினார். இன்று மொழியாலும், இனத்தாலும் பல்வேறு வேறுபாடுகளாலும் பிரித்திருந்த மனிதக் குலத்தைக் கடவுள் தூய ஆவியின் வழியாக இன்று சேர்க்கின்றார். சீடர்கள் பெற்ற மகிழ்ச்சியை நாம் பெற இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாரவது கிறிஸ்தவ விசுவாசத்திற்குச் சான்று பகரவில்லை என்றாலும், திருச்சபையின் பணிக்காகத் தங்களது கொடைகளைப் பகிரவில்லையென்றாலும் அவர்களிடம் தூய ஆவியின் கொடை இல்லை என்பதைத் தெளிவுப்படுத்திகின்றார். தூய ஆவியானவர் கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை வழி நடத்துவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறார். எனவே ஒவ்வொரு கிறிஸ்துவனும் தான் பெற்ற ஆவியானவரின் கொடைகள் வழியாக ஒன்றிணைந்த கிறிஸ்தவச் சமூகமாக மாற்ற வேண்டும் என்று அழைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்
திருப்பாடல் 104: 1,24. 29-30. 31,34

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம்  வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர் பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி
        

தூயஆவியின் தொடர் பாடல் : ஒலிவடிவில் (வாசக நூல் 1, பக்.524)



தூயஆவியின் தொடர் பாடல் : (வாசக நூல் 1, பக்.524)

தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "தூய ஆவியே எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும்.  அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1.இயேசுவின் துணையாளராம் தூய ஆவியை எமக்களித்த இறைவா! திருஅவையின் அங்கத்தினர் அனைவரும் நீ தந்தத் தூய  ஆவியால் தீமைகளை எரித்திடும் சுடராய், இருளகற்றி ஒளியுட்டு நன்மைப் பயக்கும் சுடராய், எம் பாதைக்கு வழிகாட்டும்  அகல்விளக்காய், அமைதியின் ஒளிச்சுடராம் இயேசுவின் இறையரசை அறிவிக்கும் தீபங்களாய் இவ்வுலகில் அவரின் விழுமியங்களை  வாழ்ந்துக் காட்டிடும் சீடர்களாய் நாங்கள் இருக்கத் தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை  மன்றாடுகின்றோம்.


2.வானகக் கொடைகளை வழங்கி வரும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூயஆவியை எழுந்தருள் செய்யும். எங்களை உருக்கித் துரு நீக்கி எங்களை உருமாற்றும். இயேசுவின் திருவுருவை எங்களின் உள்ளத்தில் உருவாக்கும். எம்மை ஆவியின் அக்னியால் நிரப்பும். அவரின் வரங்களாலும், கொடைகளாலும், கனிகளாலும் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அருட்பொழிவு செய்ய வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. அருட்கொடை வள்ளலே எம் இறைவா! எம்மை வழி நடத்தும் அரசியல் தலைவர்களின் எண்ணங்களைப் புனிதம் பெறச் செய்யும். அவர்களின் இதயத்தில் உம் அன்புத் தீயை மூட்டும். அனைவரையும் அன்புச் செய்யும் உள்ளத்தைக் கொடுத்தருளும். அவர்கள் செய்யும் பணிகளில் சமுக நீதியை நிலைநாட்டவும், மக்கள் பேணிக்காத்திட வேண்டிய நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.


4. அன்பு நிறைந்த  எம் இறைவா! தூய ஆவியின் ஒளியால் எங்கள் பங்கிலுள்ள இளையோரின் இதயங்களுக்கு அறிவூட்டும். அவர்கள்  சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ச்சியாய் இருக்கவும், ஞானக்கதிர்களை அவர்கள் மேல்  பொழியுமாறும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம் அன்பு தந்தையே! இறைவா! உலகமெங்கும் பரவிய இத்தொற்று நோயின் தாக்கத்திலிருந்து உம் அன்பு மக்களைக் காத்தருளும். அவர்கள் குடும்பங்களில் அன்பிலும் பாசப்பிணைப்பிலும் ஒன்றிணைந்து புதிய வாழ்வு தொடங்கிட நலமும், வளமும் அளித்து காத்தருளும். இப்போராட்டத்தில் தன்னலம் பாராமல் ஈடுபட்டுள்ள அனைவரையும் உமது வல்லமையான கரத்தால் காத்தருளும். இவற்றையெல்லாம் எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Thursday, May 21, 2020

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா

 ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்


திருத்தூதர்பணிகள் 1: 1-11
எபேசியர் 1:17-23
மத்தேயு 28:16-20

திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
உயிர்ப்புப் பெருவிழா முடிந்தப் பின், வந்த ஏழாம் ஞாயிறான இன்று இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட ஆலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வாழ்த்துகிறோம்
இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன. எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நடந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப் பார்க்கும் தூய ஆவியாரின் விழாவும் மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.இருபது நூற்றாண்டுகள் மேலாகியும், இந்த விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?... இவை முதல் முறைக்கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன.
இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்துத் தொடர்ந்து கனித் தந்துக் கொண்டிருக்கின்றன.அன்று வேரூன்றய மரங்கள் திக்கெங்கும் பல்கிப்பெருகி இறையரசைப் பறைச்சாற்றி வருகிறது. இன்று இயேசுவின் அழைப்பை ஏற்று நாம் அவரின் சீடர்களாய் அவர் பணிகள் செய்திட, வாழ்ந்திட, அன்பு பாரட்டத் தூயஆவியின் கனிகளைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் வேண்டிடுவோம்.

வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் லூக்கா இயேசுவின் விண்ணேற்றத்தை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். இயேசு திருத்தூதர்களுக்குத் தனக்குப்பின் அவர்களின் பணி என்ன என்பதை விளக்கிகூறியபின் விண்ணேற்றம் அடைந்தார். இயேசு விண்ணில் மறைந்தபின் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தவர்களிடம் வானதூதர்கள் “என்ன வானத்தையே பார்க்கிறீர்கள்! போதும்! கீழே பாருங்கள்!“ என்று உலகைக் காண்பித்து “அவர் பணித்த பணிகளைச் செய்ய உலகின் கடைகோடிவரைச் செல்லுங்கள்“ என்று அவர் இட்டப்பணியை உணர்ந்துச் செல்லப்படுவோம்.வாரீர்!

இரண்டாம் வாசக முன்னுரை


இன்றைய இரண்டாம் வாசகத்தில் தந்தையாம் கடவுளை முழுமையாக அறிந்து கொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! இறைமக்களுக்கு அவர் தரும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்று கட்டவுளின் ஆற்றலை விளக்கும் பவுலடியார் கிறிஸ்துவுக்கு அனைவரையும் அடிபணியச் செய்து அனைத்துக்கும் மேலாகத் திருச்சபையின் தலையாகவும் திருச்சபையை அவரது உடலாகவும் தந்துள்ளதைத் தெளிவாகக் கூறுவதை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
திருப்பாடல் 47: 1-2. 5-6. 7-8

1.மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி
2.ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி
3.ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே இறைவா! இயேசு விட்டுச் சென்ற இறையரசுப் பணியைக் காலத்தின் அறிகுறிகளுக்கேற்பவும் மக்களின் தேவைகளுக்கு ஏற்பவும் தொடர்ந்து ஆற்றிடத் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் தேவையான ஞானத்தையும், உறுதியான நம்பிக்கையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பும் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.விண்ணில் வாழ்பவராம் இறைவா, எங்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் சாட்சிகளாக வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்க்கை மூலமாகவும் வெளிப்படுத்தவும், இயேசுவின் சிந்தனைகள், பணிவாழ்வு, இறுதி இலக்கு இவற்றை எமதாக்கி இருக்குமிடத்தில் விண்ணகத்தை உருவாக்கத் தேவையான நல்வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அமைதித் தருபவரே இறைவா, உலகெங்கும் துன்புரும் உம் திருச்சபைக் கண்நோக்கியருளும். அவர்கள் தீவிரவாதம், அடக்குமுறை, தொற்றுநோய், பசி, வறுமைப் போன்றவற்றால் தங்கள் வாழவாதரங்களை இழந்து மனம் உடைந்து உம்மில் நம்பிக்கை இழக்காமல் இருக்க அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உன்னதரான தந்தையே! திருஅவையின் தூண்களாக வளர்ந்து வரும் எம் இளையோர்கள் உலகில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களின் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, அவை தரும் வாக்குறுதியால் தவறான பாதையில் போகாமல், உமது வாக்குறுதிகள் அவாகளின் வாழ்க்கைப் பாதைக்கு வழிக்காட்டி என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை அவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.நோய் நீக்கும் அருமருந்தே! எம் இறைவா! தொற்று நோயின் தாக்கத்தால் தங்கள் உடமைகளை, உறவுகளை, வாழ்வை இழந்துத் தவிக்கும் உலக மக்கள் அனைவரையும் கண்ணோகியருளும். விரைவில் இத்தாக்கத்திலிருந்து மீட்டு அனைவருக்கும் புதுவாழ்வு அளிக்க இறைவா உம்மை அன்றாடுகிறோம்.
                                               www.anbinmadal.org

Thursday, May 14, 2020

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்


திருத்தூதர்பணிகள் 8: 5-8, 14-17
1 பேதுரு 3:15-18
யோவான் 14:15-21

திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு. "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்." என்று கூறிப் பிரியாவிடை தரும் இயேசு, இன்று நமக்குத் தரும் பரிசு என்ன? என்பதை அறிய ஆவலுடன் இவ்வாலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

யோவான் நற்செய்தியில் இயேசு தன் பணிக்காலம் முடிந்து தந்தையாம் இறைவனிடம் செல்லும் முன் தம் அன்புச் சீடர்களுக்குப் பல வாக்குறிதிகளைத் தனது பிரியாவிடையின் பரிசாக வழங்கினார். சென்ற வாரம் தன் சீடர்களுடன் தான் நிரந்தரமாய்த் தங்கப்போகும் தந்தையின் இல்லத்தைப் பற்றிப் பேசிய இயேசு, இரவுணவின்போது தன்னை இன்னும் அழகிய, ஆழமான வகையில், அப்ப இரச வடிவில், சீடர்களிடம் பரிசாகப் பகிர்ந்தளித்தார்.

இந்த வாரம், தான் சென்றபின், அவர்கள் பெறப்போகும் துணையாளரைப் பற்றி இயேசு பேசுகிறார்: "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்." இங்கு இயேசு கிறிஸ்து ஒரு கனிவு மிகுந்த பெற்றோரைப் போல், நண்பரைப் போல் தன் சீடர்களுக்கு இது போன்ற வாக்குறுதிகளை அளிக்கிறார்.

"திக்கற்றவர்களாய் உங்களை விடமாட்டேன்" என்று கூறும் இயேசுவை நம்பி நாம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். திசைப் புரியாமல், வழித் தெரியாமல் கலங்கும் பலரை இந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். அத்துடன் தங்கள் வாழ்வின் முக்கியமான முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் இளையோரை இறைவனின் வழி நடத்துதலுக்கு ஒப்படைத்து உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.


வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


திருத்தூதர் பிலிப்பு கிறிஸ்துவை, சமாரிய மக்களுக்குப் போதித்தப்போது அம்மக்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொண்டனர். ஒருமனத்தோராய் கூடியிருந்தபோது அரும் அடையாளங்களைக் கண்டு சமாரிய நகரமே மகிழ்ந்திருந்தது. சமாரியநகர மக்களின் மனமாற்றத்தைக் கண்ட பேதுருவும் யோவானும் இணைந்துச் செபித்து அவர்களுக்குத் தூய ஆவியைப் பெற்றுத் தந்தார்கள் என்பதை விளக்கும் இம்முதல்வாசகத்திற்கு நாமும் ஒருமனதோராய் செவிமெடுப்போம் வல்லச்செயல்களை காண்போம்..


இரண்டாம் வாசக முன்னுரை


இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக் கொண்டு, கிறிஸ்துவப் பண்புகளைக் கொண்டு அவருக்குச் சாட்சிப் பகிர்ந்திட நம்மை அழைக்கிறது. இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பதற்கு ஏற்றவாறு கிறிஸ்துவைப்போல் மன்னித்து ஏற்றுக்கொள்வதன் மூலம் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்று வாழ அழைக்கும் திருத்தூதர் பேதுருவின் முதல் திருமுகத்திலிருந்து வரும் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப்பாடல்

திபா 66: 1-3a. 4-5. 6-7a. 16,20 

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அல்லது: அல்லேலூயா.

அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி, ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். - பல்லவி

‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. - பல்லவி

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! - பல்லவி

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திரு அவையை வழி நடத்தும் எம் திருதந்தை, அவர் வழியாய் மந்தைகளைச் செவ்வனே பராமரித்து வழி நடத்தும் ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர்கள், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக மீண்டும் தங்கள் பணிவாழ்வைக் கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப இறைசமூகத்தை ஆன்மீக வாழ்விற்கு அழைத்துச் செல்லத் தேவையான உம் அருளை நிறைவாய் வழங்கிட இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2.ஏழைகளின் துணையாளரே எம் இறைவா! இன்று தொற்றுநோயினால் ஏழைகளுக்கு ஏற்படும்  பொருளாதார நெருக்கடிகளிலிருந்து அவர்கள் விடுப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரங்கள் மேன்பட்டு, நற்சான்றோர்களாக வாழவும், தங்கள் சொந்தஊருக்குத் திரும்ப முடியாமல் தவிப்போர் மீண்டும் தங்கள் ஊர்களுக்குச் செல்லத் தேவையான வசதிகளில் பெற  அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.குழந்தைகள் விண்ணரசின் செல்வங்கள் என்று மொழிந்த எம் இறைவா! நீர் கொடுத்த செல்வங்களாகிய எங்கள் பிள்ளைகளை நாங்கள் பொறுப்புடன் வளர்க்கவும், அவர்களுக்கு இறை அச்சத்தையும் தூய வாழ்வுக்கான சிந்தனைகளை அறியச் செய்திடவும், தம் கடமைகளை உணர்ந்துத் தூயக் கிறிஸ்துவ வாழ்வு வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமக்குப் புதுப்பாதையை அமைத்துத் தரும் என் இறைவா! இந்த  கல்வி ஆண்டில் எம் இளையோர்களைக் கரம்பிடித்து வழிநடத்தும். தொற்றுநோயின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள குழப்பங்களிலிருந்து காத்து அவர்கள் சிறந்த கல்வியைப் பெற்றிடவும், நவீன உலகமாயையால் கவனம் சிதறிவிடாமல் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிடவும், உமது உன்னதச் சாட்சிகளாய் இவ்வுலகத்தில் வாழ வேண்டிய ஞானத்ததைப் பொழிந்தட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.மருத்துவருக்கெல்லாம் மருத்துவராம் எம் இறைவா! விரைவில் இந்த தொற்று நோய் முழுமையாக நீங்கிட வேண்டிய மருத்துவத்தை எமக்கு தந்து, அனைவரும்  விரைவில் குணமடையவும், மரணம் அடைந்தவர்களின் குடும்பங்கள் ஆறுதலடையவும், நோய்க்கு எதிராகப் போராடும் மருத்துவ உலகம் அதில் வெற்றிபெறவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

                                                          www.anbinmadal.org